சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய துணை கண்டத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் கிட்டதட்ட 42% குழந்தைகள் உள்ளனர். ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் குழந்தைகள் தான். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க தவறிவிட்டோம் என்பதே கசப்பான உண்மை.
குழந்தைகள் தங்கள் வீட்டில், பள்ளியில், சுற்றுப்பகுதியில் என பெற்றோர்கள், உறவினர்கள், சில ஆசிரியர்கள், முகம் தெரிந்த மற்றும் தெரியாத நபர்கள் என்று பலதரப்பட்ட மக்களால் பல வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்பது வேதனைக்குரிய விடயம்.
இத்தகைய பாலியல் வன்கொடுமையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமே போக்சோ (POCSO) 2012. ஆனால் இச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளில் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது என்பது இச்சட்டத்தை பெயரளவில் செயல்படுத்தி வழக்குகளை நீர்த்துப் போக வழிவகை செய்யும் என்றே உணர்த்துகிறது.
போக்சோ (POCSO) சட்டம் - 2012 ஓர் அறிமுகம்
போக்சோ சட்டம் 2012 (POCSO - The Protection of Children from Sexual Offence) இயற்றுவதற்கு முன் இந்திய தண்டனை சட்டம் (IPC) 354 (A)-இன் படி, ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் போது இச்சட்டத்தின் கீழ் பாலியல் குற்றவாளிக்கு ஒன்று முதல் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனையாக வழங்கப்படும்.
பாலியல் தாக்குதலுக்கு உட்படும் ஆண் குழந்தைகளுக்கு இச்சட்டம் பொருந்தாது. ஆனால் பாலின பாகுபாடின்றி 18 வயதுக்குட்பட்ட அனைத்து சிறார்களுக்கும் எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் தாக்குதல், துன்புறுத்தல், வன்கொடுமை, வன்புணர்வு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டம் போக்சோ சட்டம் (POCSO) 2012.
இச்சட்டமானது மே மாதம் 2012-இல் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு இதற்கான விதிமுறைகளை அரசிதழில் (Gazette of India) ஜூன் 20, 2012-இல் வெளியிடப்பட்டு நவம்பர் 14, 2012 முதல் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
போக்சோ சட்டத்தின் சாரம்சம் "சொற்கள்" மற்றும் "விரிவாக்கம்"
போக்சோ சட்டத்தில் 9 பகுதிகள் மற்றும் 46 சட்டப்பிரிவுகள் உள்ளன. குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் தாக்குதல் மற்றும் குற்றச் செயல்களை வரையறுத்தல், குற்றத்தில் ஈடுபடும் நபருக்கு வழங்கப்படும் தண்டனை விவரங்கள், புகார் தெரிவித்தல், வாக்குமூலம் பெறுதல், விசாரணை மேற்கொள்ளுதல், தனி நீதிமன்றம் உருவாக்குதல் ஆகிய விவரங்கள் அடங்கிய நெறிமுறைகளை உள்ளடக்கியது தான் போக்சோ சட்டம்.
இந்திய தண்டனைச் சட்டம் (IPC), இந்திய குற்றவியல் சட்டம் (1973), சிறுவர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் (2000), தகவல் தொழில் நுட்பம் சட்டம் (2000) ஆகியவற்றில் பயன்படுத்தியுள்ள அதே ”சொற்கள்” மற்றும் ”விரிவாக்கங்கள்” ("Words" and "Expressions") தான் போக்சோ சட்டத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. போக்சோ சட்டத்தின் பிற்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்களுக்கான பொருள் முதல் பகுதியின் பிரிவு 1 & 2-இல் விவரிக்கப்பட்டுள்ளன.
குற்றச்செயல்கள் மற்றும் தண்டனை பிரிவுகள்:
பகுதி 2 முதல் 4 வரை உள்ள விதிமுறைகளில் எந்த செயல்களெல்லாம் எந்தப் பிரிவுகளின் கீழ் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் குற்றச் செயல்கள் என்றும் அதற்குரிய தண்டனை விவரங்களும் பிரிவு 3 முதல் 18 வரை குறிப்பிடப்பட்டுள்ளன.
பகுதி |
போக்சோ சட்டம் பிரிவின்படி குற்றச் செயல்கள் என்று வரையறுக்கப்பட்டவை |
போக்சோ சட்டம் பிரிவின்படி தண்டனை விவரம் |
2 |
பிரிவு 3-இன் படி, பலவந்தமான வன்புணர்வு (Penetrative Sexual Assault) என்பது குற்றம் |
பிரிவு 4-இன் படி, குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கப்படும் அபராதமும் விதிக்கப்படும் |
பிரிவு 5-இன் படி, மீறிய பலவந்தமான பாலியல் வன்புணர்வு (Aggravated Penetrative Sexual Assault) என்பது குற்றம் |
பிரிவு 6-இன் படி, குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியது பெற்றோர், பாதுகாவலர், காவல் துறைச் சார்ந்தவர்கள், அரசுத் துறையில் பணிபுரிந்தவர்கள் உட்பட்ட யாராக இருந்தாலும் 10 ஆண்டுகள் குறையாமல் அல்லது அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கப்படும் அபராதமும் உண்டு. |
|
பிரிவு 7-இன் படி, பாலியல் தாக்குதல் (SexualAssault) - குழந்தைகளின் அந்தரங்கள் பகுதிகளை தொடுவது மற்றும் இச்செயலில் ஈடுபடுவோரின் அந்தரங்க பகுதிகளை குழந்தைகளை தொடச் செய்வது இச்சட்டப்பிரிவின் படி குற்றம். |
பிரிவு 8-இன் படி, இக்குற்றத்தில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அபராதமும் உண்டு. |
|
பிரிவு 9-இன் படி, பலவந்தமான பாலியல் தாக்குதல் (Aggravatted Sexual Assault) - பாலியல் குற்றத்தில் ஈடுபடும் காவல்துறையை சேர்ந்தவர்கள், இராணுவத்தை சேர்ந்தவர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் யாராக இருந்தாலும் குற்றம். |
பிரிவு 10-இன் படி 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அபராதமும் உண்டு. |
|
பிரிவு 11-இன் படி, குழந்தைகளை பாலியல் தாக்குதலுக்கு (Sexual Harassment) உட்படுத்துவது குற்றம். குழந்தைகளிடம் இச்சையுடன் ஆபாச வார்த்தைகள், செய்கைகள் காட்டுவது ஆகியன இப்பிரிவின் படி குற்றம். |
பிரிவு 12-இன் படி, ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். உண்மைத் தன்மையை ஆய்ந்து தண்டனை வழங்க வேண்டும். |
|
3 |
பிரிவு 13-இன் படி, ஆபாசமான முறையில் படமெடுப்பது, படத்தை பார்ப்பது, விற்பது, ஏதேனும் ஒரு பொருளில் சேமித்து வைப்பது ஆகியன (Using Child for Pornographic Purpose) இணையதளம் சார்ந்த நடவடிக்கை என்றாலும் குற்றச் செயலாகும். |
பிரிவு 14-இன் படி, குழந்தைகளை ஆபாச படம் எடுப்பவர்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். பிரிவு 15-இன் படி, குழந்தைகள் ஆபாச படங்களை வணிக காரணங்களுக்காக சேமித்து வைத்தது குற்றம் என்பதால் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் உண்டு |
4 |
பிரிவு 16-இன் படி, குழந்தைகளை பாலியல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது குற்றம். மேலும் பிரிவு 18-இன் படி, குற்றச்செயல் செய்வதற்கு தூண்டுவது அல்லது உடந்தையாக இருப்பது குற்றம் (Abetment of an offence) |
பிரிவு 17, 18-இன் படி, 1 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதற்கு, குற்றமிழைத்தவர்களுக்கு வழங்கப்படும் பிரிவுகளிலேயே தண்டனை வழங்கப்படும். |
பாதிக்கப்பட்ட குழந்தைகள் புகார் அளிப்பதற்கான நெறிமுறைகள்
போக்சோ சட்டத்தின் பகுதி 5-இல் சட்டப்பிரிவு 19 முதல் 23 வரை பாதிக்கப்பட்ட குழந்தைகள் புகார் அளிக்கும் நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குழந்தையோ அல்லது அந்த சம்பவத்தின் உண்மை விவரத்தை அறிந்தவரோ சிறப்பு குழந்தை பிரிவு காவல் துறை அல்லது உள்ளூர் காவல்துறையில் புகார் அளித்தல் வேண்டும்.
பெறப்பட்ட புகாரை காவல்துறையினர் குழந்தைகளுக்கு புரியும் மொழியில் பதிவு செய்து புகாரை வாசித்து காட்ட வேண்டும். புகார் பெற்ற 24 மணி நேரத்திற்குள் அந்த குழந்தைக்கு மருத்துவ உதவியோ அல்லது பாதுகாப்பு தேவைப்படும்பட்சத்தில் குழந்தைகள் நல குழுவிடம் (Child Welfare Committee) மற்றும் இதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் (Special Court) தெரிவிக்க வேண்டும்.
இக்குற்றச் சம்பவம் சார்ந்து வீடியோ அல்லது ஏதேனும் ஆதாரம் இருந்தாலும் காவல்துறை பெற்றுக் கொள்ள வேண்டும். போக்சோ சட்டப் பிரிவின் கீழ் பெற்ற புகாரை பத்திரிகைகள் செய்தியாக வெளியிடும் போது பாதிக்கப்பட்ட குழந்தையின் முகவரி, புகைப்படம் மற்றும் தனிப்பட்ட விவரங்களை தெரிவிக்கக் கூடாது. விதிகளை மீறி செய்தி வெளியிட்டால் சட்டப்பிரிவு 23 உட்பிரிவு 4-இன் படி 6 மாதத்திலிருந்து ஒரு ஆண்டு வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் அபராதமும் உண்டு.
பாதிக்கப்பட்ட குழந்தையிடம் வாக்குமூலம் / விசாரணை சார்ந்த விதிமுறைகள்
போக்சோ சட்டப் பகுதி 6-இல் பிரிவு 24 முதல் 27 வரை பாதிக்கப்பட்ட குழந்தையிடம் வாக்குமூலம் பெறுவதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. விசாரிக்க வரும் காவல்துறையினர் குறைந்தபட்சம் ஒரு பெண் துணை ஆய்வாளருடன் தான் வர வேண்டும்.
காவல்துறை குழந்தையின் வீட்டில் அல்லது குழந்தைக்கு பாதுகாப்பிற்கு ஏதுவான இடத்தில் வைத்து வாக்குமூலம் பெறலாம். வாக்குமூலம் பெறும் போது காவல்துறை சீருடையில் வாக்குமூலம் பெறக்கூடாது. இரவில் எக்காரணம் கொண்டும் குழந்தையை காவல் நிலையத்தில் வைத்து வாக்குமூலம் பெறக்கூடாது.
பகுதி 7 மற்றும் 8-இல் பிரிவுகள் 28 – 38 வரை போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவ்வழக்கின் மொத்த விசாரணையும் கேமராவில் பதிவு செய்தல் வேண்டும். விசாரணை வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஓராண்டிற்குள் விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்க வேண்டும்.
போக்சோ சட்டத்தின் கடைசி பகுதியான 9-வது பகுதியில் மேற்படி விவரிக்கப்பட்டுள்ள உரிய சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் அந்தந்த மாநில அரசுகள் பின்பற்றி, தங்கள் மாநிலத்தில் இயங்கும் குழந்தைகள் உடல்நலம், மன நலம் சார்ந்த வல்லுநர்கள், மனோதத்துவ நிபுணர்கள், சமூக பணி மேற்கொள்பவர்கள், அரசு சாரா அமைப்பு (NGO) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும் வகையில் இச்சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
போக்சோ சட்டத்திருத்தம் (POCSO Amendment Bill) - 2019
குழந்தைகள் மீது நாளுக்கு நாள் பாலியல் வன்முறை நிகழ்வது அதிகரித்து வந்த நிலையில் போக்சோ (2012) சட்டத்தில் திருத்தங்கள் செய்து ஜூலை 18, 2019-இல் போக்சோ திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட்து. இச்சட்டத்தில் குறைந்தபட்ச தண்டனை 3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாகவும், 7 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாகவும், 10 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகள் வரை நீட்டித்து திருத்தம் செய்யப்பட்டது. மேலும் தேவைப்பட்டால் மரண தண்டனை வரை வழங்கவும் வழி செய்கிறது இத்திருத்தச் சட்டம்.
அதிகரிக்கும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.
போக்சோ சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்ட 2012 முதல் இது நாள் வரை, இச்சட்டத்தின் கீழ் இந்தியாவில் இரண்டு லட்சங்களுக்கு மேல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. துரிதமாக வழக்குகளை முடிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரன்ஜன் கோகாய் தலைமையில் மூன்று நீதிபதிகள் உள்ளடக்கிய பெஞ்ச் கூடியது.
இந்தியா முழுவதும் நூறு வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ள மாவட்டங்களில் Fast Track Special Court (FTSC) அமைக்க வேண்டும் என்றும் அதற்கு நிர்பயா நிதியின் கீழ் ஒன்றிய அரசிடம் ரூ.767.25 கோடி ஒதுக்குமாறு கோரிக்கை வைத்து ஆலோசனை வழங்கியது. தமிழகத்தில் FTSC அமைக்க சென்னை, காஞ்சிபுரம், தூத்துக்குடி ஆகிய மாவடங்களை தெரிவு செய்து பரிந்துரை செய்யப்பட்டது.
சனவரி 2020-இல் முதற்கட்டமாக தமிழ்நாடு உட்பட 27 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பகுதிகளில் FTSC அமைக்க ரூ.767.25 கோடியில் ஒரே ஒரு ஆண்டுக்கு மட்டும் ரூ.474 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவித்தது ஒன்றிய அரசு. ஆனால் 2019-20-இல் ரூ.99.43 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்ன வென்றால் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் வழக்குகள் அதிகமுள்ள உத்திரபிரதேசம், மராட்டியம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அந்தப் பட்டியலில் இல்லை.
தேசிய குற்றவியல் ஆவணங்களின் படி (NCRB - National Crime Report Bueareu) இந்தியாவில் 2018-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2019-ஆம் ஆண்டில் 18% குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. அதாவது 2018-இல் 40,810-ஆக இருந்த குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றம் 2019-இல் 48,043-ஆக அதிகரித்துள்ளதுள்ளன.
2019-ஆம் ஆண்டு கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் மேற்கு மாவட்டங்களில் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் 39%-ஆக அதிகரித்துள்ளன என்று தரவுகள் அடிப்படையில் தெரியவருகிறது. நீலகிரி மாவட்டத்தில் மார்ச் 2019 முதல் மார்ச் 2020 வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட குழந்தைகளை விட மார்ச் 2020 முதல் மார்ச் 2021 வரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 52% அதிகரித்துள்ளன.
இந்த மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் 13 போக்சோ வழக்குகள் இருந்த நிலையில் கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் நூறு சதவீதத்திற்கும் மேல் பன்மடங்கு அதிகரித்துள்ளன என்பது வேதனைக்குறிய நிலை. மாநில குற்றவியல் ஆவணங்கள் (State Crime Bureau) அடிப்படையில் 2019-இல் மொத்தம் 2,358 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன என்று தெரியவருகிறது.
நீர்த்துப் போகும் நிலையில் போக்சோ சட்டம்
தமிழ்நாட்டில் போக்சா வழக்குகள் மகளிர் (Mahila) நீதிமன்றத்தில் விராசிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 2012 முதல் மே 2019 வரை போக்சோ சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள 8,556 வழக்குகளில் 689 வழக்குகளில் மட்டுமே பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்கும் வகையில் பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளன. 3911 வழக்குகள் தீர்ப்பு வழங்கப்படாமல் நீதிமன்றத்திலேயே நிலுவையில் உள்ளன. அதைவிடக் கொடுமை, இன்னும் முதற்கட்ட விசாரணை நிலையிலேயே 1,054 வழக்குகள் உள்ளன. இதில் வேதனையான விடயம் என்னவென்றால் 2902 வழக்குகளில் பாலியல் வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அட்டவணை: தமிழ்நாட்டில் மே 2019 வரையிலான போக்சோ வழக்குகளின் நிலை
யாரை பாதுகாக்கின்றது போக்சோ சட்டம்?
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாக்குமூலம் பதிவு செய்த ஒரு ஆண்டுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும் என்றும், FTSC அமைத்து மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டாலும், இலட்சகணக்கில் நிலுவையில் உள்ள வழக்குகள் இறுதியில் குற்றவாளிக்கு சாதகமான சூழலையே உருவாக்குகின்றன. இதைத்தான் போக்சோ வழக்குகள் சார்ந்த தரவுகளும் எடுத்துக்காட்டுகின்றன.
சமீபத்தில் நாக்பூரில் உள்ள மும்பை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி புஷ்பா விரேந்திர கணேடிவாலா அளித்த தீர்ப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆடைகளை களையாமல் கைகளால் அந்தரங்க உறுப்புகளை தொடுவது போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் குற்றத்தின் வரம்பிற்குள் வராது என்ற மனசாட்சியற்ற தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
தேசிய பெண்கள் ஆணையம் இந்த தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த தீர்ப்பானது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்பதால் உயர்நீதிமன்ற தீர்ப்பினை நிறுத்தி வைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்க உத்திரவிட்டுள்ளது.
மற்றொரு போக்சோ வழக்கில் இதே நீதிபதி புஷ்பா விரேந்திரா கணேடிவாலா, பாதிக்கப்பட்ட சிறுமியே குற்றம்சாட்டப்பட்டவர் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என்று வாக்குமூலம் அளித்தும், சிறுமியின் தாய் தனது குழந்தையிடம் குற்றவாளி தவறாக நடக்க முயற்சித்ததாக வாக்குமூலம் அளித்தும் மீண்டும் அதிர்ச்சிகரமான தீர்ப்பை வழங்கினார்.
விசாரணை அடிப்படையில் இது பாலியல் வன்கொடுமை ஆகாது என்றும் ஆனால் இது பாலியல் துன்புறுத்தல் பிரிவின் கீழ் தான் வரும் என்று குற்றவாளிக்கு தண்டனையை குறைக்கும் விதத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. இது எதை காட்டுகிறது என்றால் எவ்வளவு கடுமையான சட்டங்கள் இயற்றினாலும் தீர்ப்பளிப்பவர் நேர்மையை பொருத்தே தான் நீதியை நிலை நிறுத்த முடியும்.
தமிழ்நாடு அரசு போக்சோ சட்டத்தின் கீழ் தொடரப்பட்டு நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் காலதாமதமின்றி பாதிக்கப்பட்ட குழைந்தைகளுக்கு நீதியை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அது போல் போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்படும் புதிய வழக்குகளையும் விரைவில் விசாரணை மேற்கொண்டு நீதியை நிலை நிறுத்த வேண்டும்.
National Institute Of Public Cooperation and Child Development (NIPCCD) தயார் செய்த பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் அடங்கிய கையேடு (Hand Book) அனைத்து வகைப் பள்ளியிலும் பின்பற்றப்படுகிறதா என்பதையும், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள இணைய (Online) வகுப்புகளுக்கான நெறிமுறைகளையும் கண்காணிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிராக பாலியல் புகார் வரும் பட்சத்தில் குற்றவாளியோ அல்லது குற்றவாளிக்கு துணை நிற்கும் வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பணபலம் , அரசியல் பலம் படைத்தவர்கள் மதம் , சாதி என மடைமாற்றும் வேலையில் ஈடுபடும் அனைவரையுமே யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருந்து இல்லை.
சட்டத்தை கடுமையாக்கினால் மட்டும் குற்றங்கள் குறையாது! சட்டத்தை சமரசமின்றி பாரபட்சமின்றி நேர்மையாக நடைமுறை படுத்தினால் மட்டுமே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையும். இல்லையேல் தொடர்ந்து இதுபோன்ற செய்திகளை நாம் அன்றாடம் கடந்து செல்ல வேண்டிய அபாயகரமான சூழல் உருவாக்கும்.
எவ்வித பாகுபாடின்றி எந்த குழந்தைகயாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறையை எதிர்த்து குரல் கொடுப்பதே உண்மையான நாட்டுப்பற்று. குழந்தைகள் தான் ஒரு நாட்டின் எதிர்காலம். ஆனால் அதை விடுத்து, மதத்திற்காகவும் சாதிக்காகவும் மட்டும் வெற்றுக் குரல் கொடுப்பது நாட்டு பற்று ஆகாது. அவர்கள் போலி தேச பக்தர்களே!!!
- மே பதினேழு இயக்கம்