இந்திய மிகப்பெரிய ஜனநாயக நாடு எனப் புகழப்படுகிறது. பல இன, மொழி, சாதிகளைக் கொண்ட மக்கள், ஒற்றுமையோடு வாழ்ந்து வருவதாகவும், இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை தான் என ஆண்டுதோறும் குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று கொண்டு பிரதமராக தேர்வு செய்யப்படுபவர் சுதந்திர தின உரையாற்றி வருகின்றனர். இப்படி சிலாகிப்பதன் மூலம் வேற்றுமையில் ஒற்றுமை வளர்ந்து விடுகிறதா?

சாட்சியாய் மேலவளவு

உள்ளாட்சியில் நல்லாட்சி என சொல்லிக் கொள்ளும் திமுக ஆட்சியில் தலித் உள்ளாட்சி பிரதிநிதிகள் படும்பாடு சொல்லிமாளாது. ஒட்டுமொத்தமாக உள்ளாட்சிக்கு போதிய நிதி ஒதுக்காத தமிழக அரசு, அப்படி குறைந்த அளவு ஒதுக்கும் நிதியிலும் தலித் பஞ்சாயத்துகளில் வேலை நடைபெறவிடாது தடுக்கும் ஆதிக்கசாதியினர் மீது சுட்டுவிரலைக் கூட அசைப்பதில்லை.

குடியரசு தலைவராக ஒரு தலித் வரலாம். ஆனால், ஊராட்சிமன்றத்தலைவராக வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஒருசாட்சியாகத் திகழ்கிறது மதுரை மேலவளவு ஊராட்சி.

தலித் குடிசைகளுக்கு தீ

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தினை அமுல்படுத்த முயன்றதற்காக ஆறு தலித்துகள் தங்களுடைய இன்னுயிரை ஈந்த வரலாறு பின்னுக்குத்தள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள மேலவளவு ஊராட்சி மன்றத்திற்கு கடந்த 1996-ஆம் ஆண்டுக்கு முன் வரை தலைவராக ஆதிக்கசாதி சமுகத்தைச் சேர்ந்தவர்களே தலைவர்களாக இருந்துள்ளனர். 1992-ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் கொண்டு வந்த 73-வது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் படி, அரசு நிர்வாகம் அடித்தட்டு மக்களைச் சென்றடைய பஞ்சாயத்துகள் அமைக்கப்பட்டு, அவற்றிற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதன்படி தமிழக அரசு 1996-ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தை இயற்றியது. அப்போது பொதுத்தொகுதியாக இருந்த மேலவளவு ஊராட்சித்தலைவர் பதவி, 1996-ஆம் ஆண்டு முதல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தனித் தொகுதியாக மாற்றப்பட்டது.

ஆண்டைகளிடம் அடிமைகளாகக் கிடந்தது போல இருந்த தலித் மக்கள் அரசியல் சட்டம் வழங்கிய பதவிக்காக திமுகவைச் சேர்ந்த முருகேசன் உள்ளிட்ட சிலர் 10.9.1996-ஆம் ஆண்டு வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதனால் ஆத்திரமுற்ற ஆதிக்கசாதியினர் மூன்று தலித் மக்களின் குடிசைக்கு தீவைத்தனர். இதனாலும், ஆதிக்க சாதியினரின் மிரட்டலுக்கும் பயந்து வேட்புமனுக்களைத் தலித்துகள் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

6 பேர் படுகொலை

இதையொட்டி நடத்தப்பட்ட சமாதானக் கூட்டத்தில் தலித் மக்கள் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக 9.10.1996 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்தல் நடைபெறவில்லை. மீண்டும் 28.12.1996 அன்று நடைபெற்ற தேர்தலில் முருகேசன் உள்ளிட்ட சிலர் போட்டியிட்டனர். இதனால் ஆத்திரமுற்ற ஆதிக்கசாதியினர் வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்களிக்க வந்த மக்களைத் தாக்கி விட்டு வாக்குப்பெட்டிகளைத் தூக்கிச் சென்று தேர்தலை மீண்டும் தடுத்தனர். இந்த நிலையில் காவல்துறையின் பலத்த பாதுகாப்புக்கிடையே 31.12.1996 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. ஆதிக்கசாதியினர் இத்தேர்தலைப் புறக்கணித்தனர். தலித் மக்கள் மட்டும் வாக்களித்தனர். இதில் மேலவளவு ஊராட்சித்தலைவராக முருகேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏற்கனவே, ஆதிக்கசாதியினரால் தீவைக்கப்பட்ட தலித் மக்களின் குடிசைகளுக்கு நிவாரணம் பெறுவதற்காக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக முருகேசன் 30.6.1997 மதுரைக்கு வந்தார். ஆட்சியர் இல்லாததால் அவரது உதவியாளரிடம் மனு கொடுத்தார். அதன் பின் முருகேசன் உள்ளிட்டோர் மேலவளவிற்கு ஒரு பேருந்தில் வந்து கொண்டிருந்தனர். மேலூர் வரும் போது சிலர் பேருந்தில் ஏறினர். அக்ரஹாரம் பழையக்கள்ளுக்கடை அருகே பேருந்து வரும்போது பேருந்தில் இருந்த 30-க்கும் மேற்பட்ட ஆதிக்கசாதியினர் பயங்கர ஆயுதங்களால் முருகேசன் உள்ளிட்டோர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தினர். இதில் முருகேசன், ஊராட்சி மன்றத்துணைத்தலைவர் மூக்கன், ராஜா, செல்லத்துரை, சேவுகமூர்த்தி, பூபதி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். முருகேசனின் தலையை அறுத்து எடுத்துச் சென்று ஒரு கிணற்றில் வீசிவிட்டுச் சென்றனர். இந்தியாவையே உலுக்கிய இப்படுகொலைக்குப் பின் இருந்தது சாதிவெறி. தலித் ஒருவன் தலைவராகலாமா என்ற திமிர்த்தனம் ஆறு பேரின் உயிரைக் குடித்தது.

தொடரும் சாதிவெறி

அதற்குப் பின்னும் அடங்காமல் அந்தவெறி பல தலித் ஊராட்சி மன்றத்தலைவர்களின் ரத்தத்தத்தைக் குடித்துக் கொண்டிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் செல்லப்பிராட்டி கிராமத்தின் ஊராட்சித்தலைவர் நாகலிங்கம் 22.4.2008 அன்று சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். பள்ளிக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பதைத் தடுத்த புதுக்கோட்டை மாவட்டம் குமாரமங்கலம்ஊராட்சிமன்றத்தைச் சேர்ந்த தலித் தலைவர் அஞ்சலையின் கணவர் துரைராஜ் சாதிவெறியர்களால் அரிவாளால் வெட்டப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் வேம்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் குடும்பத்தார் மீது ஆதிக்கசாதியினர் நடத்திய கொலைவெறித்தாக்குதலில் அவரது தம்பி முத்துகிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலையில் உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது போல தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் தலைவர்களை செயல்படவிடாமல் தடுப்பதும், அதை எதிர்த்து தட்டிக் கேட்டால் தாக்குவதும் தொடர்கதையாக உள்ளது. அப்படி ஒரு சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று நடந்துள்ளது.

பெண் தலைவருக்கு நிகழ்ந்த கொடூரம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள டி.ஆலங்குளத்தைச் சேர்ந்த தலித் ஊராட்சிமன்றத் தலைவராக ம.மனோன்மணி என்பவர் உள்ளார். எம்.பில். பட்டதாரியான இவரின் கணவர் மதிவாணன் பாரத ஸ்டேட் வங்கியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ராகவி, மதுமிதா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. தனக்கு நடந்த சாதியக்கொடுமை குறித்து அவர் சொல்ல, சொல்ல நமக்கு பெரும் அதிர்ச்சியும், ஆவேசமும் ஒன்று சேரவந்தது.

மனோன்மணி அளித்த வாக்குமூலம். தான் இது. நான் டி. ஆலங்குளம் ஊராட்சிமன்றத்தலைவராக 2006-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறேன். அப்போது டி.ஆலங்குளம் ஊராட்சிமன்ற எழுத்தராக சேர்வை இனத்தைச் சேர்ந்த பால்ச்சாமி என்பவரது மகன் பாலகுரு பணி செய்து வந்தார். மேற்படி எழுத்தர் பாலகுரு, நான் தலித் வகுப்பைச் சேர்ந்தவள் என்பதால் என்னை மரியாதை இல்லாமல் பேசுவதும், சாதியைச் சொல்லி இழிவாக பேசுவதும், மக்கள் பணி செய்யவிடாமல் தொந்தரவு செய்து வந்தார். மேலும், 31.3.2008 அன்று சாதியைச் சொல்லி இழிவாகப் பேசி என்னை மானபங்கம் செய்ய முயற்சித்தார். மேற்படி சம்பவம் தொடர்பாக திருப்புவனம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

பள்ளச்சி கொடியேற்றலாமா?

மேலும், நான் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் எழுத்தர் பாலகுருவை பாட்டம் ஊராட்சிமன்றத்திற்கு இடமாறுதல் செய்தனர். ஆனாலும், இரவு நேரங்களில் தெருவிளக்குகளை அடித்து உடைப்பது மற்றும் நலத்திட்ட வேலைகளைச் செய்ய விடாமல், பாலகுருவும் அவரது அடியாட்களும் என்னை நேரடியாகவும், மறைமுகமாகவும் மிரட்டி வந்தனர். இவை தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்குப் பலமுறை மனு அளித்துள்ளேன்.

இந்நிலையில், கடந்த 26.1.2010 காலை சுமார் 10.30 மணிக்கு நான், எனது கணவர் மதிவாணன், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இராமலிங்கம், எனது மகள் மதுமிதா ஆகியோருடன் வீட்டில் இருந்து காரில் ஏறிப்புறப்பட்டேன். வீட்டிற்கு அருகில் உள்ள ஒர்க்ஷாப் முகப்பில் இருந்து பாலகுரு நடந்து வந்து கார் அருகில் நின்று கொண்டு என்னைப் பார்த்து கீழே இறங்குடி ஈனசாதிப் பள்ள முண்டை என அசிங்கமாகத் திட்டினார். என் கணவர், குடியரசு தினக்கொடியை ஏற்றிவிட்டு, கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டியிருக்கு, அதனால் மாலை வந்து எதுவானாலும் பேசலாம் என்று கூறினார். நானும் அவரிடம் மாலை வந்து பேசலாம் எனக் கூறினேன். அதற்கு பாலகுரு, நீ போய் கொடி ஏத்தக்கூடாது என்று தானே உன்னைக் கொலை செய்ய வந்தேன்டி பள்ளச்சிறுக்கி எனச்சாதியைச் சொல்லி இழிவாகத் திட்டினார்.

கொலைவெறித்தாக்குதல்

அப்போது சற்றும் எதிர்பாராத நிலையில் பாலகுரு தன் முதுகுப்பக்கம் மறைத்து வைத்திருந்த சுமார் இரண்டரை அடி நீளமுள்ள பெரியவாளை(கத்தி) எடுத்து என் இடது கையின் மணிக்கட்டு உள்பகுதியில் குத்தினார். இதில் ஆழமான காயம் ஏற்பட்டு இரத்தம் எனது அருகில் இருந்த என் மகள் மீது பட்டது. என்னைக் குத்தியவுடன் டிரைவர் சீட்டில் இருந்து உட்கார்ந்திருந்த என் கணவர் தடுக்க முயன்றார். அப்போது பாலகுரு, என் கணவரை கத்தியால் வலது மணிக்கட்டு வெளிப்புறத்தில் நான்கு இடத்தில் குத்தினார். மேலும், தடுக்க முயன்ற என் கணவரை நெஞ்சில் குத்த முயன்றார். அவருக்கு கையில் இடது உள்ளங்கை மற்றும் விரல்கள் கத்தியால் வெட்டப்பட்டு தொங்கின. மேலும், இடது கை மணிக்கட்டு உள் மற்றும் வெளிப்பகுதியில் கொடுங்காயம் ஏற்பட்டன.

அப்போது காரின் முன்சீட்டில் உட்கார்திருந்த திருப்புவனம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமலிங்கமும், நானும் காப்பாற்றுங்கள் என அலறிச்சத்தம் போட்டதால் கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்ட பாலகுரு அங்கிருந்து ஓடிவிட்டார். உடனே ரத்தக்காயங்களுடன் மிகவும் பதட்டத்துடனும், பயத்துடனும் திருப்புவனம் காவல்நிலையத்திற்குச் சென்று எங்களது காயங்களைக் காட்டி காப்பாற்றுங்கள் எனக்கதறி அழுதோம். அங்கிருந்த காவலர்கள் உடனே திருப்புவனம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கூட்டிச் சென்று முதலுதவி செய்து, மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். எங்கள் இருவரையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சை அளித்த மருத்துவர் எனக்கும், என் கணவருக்கும் கை நரம்பு கட்டாயிருப்பதாகக் கூறினார் என்று மனோன்மணி கூறினார்.

விசாரிக்கவில்லை

ஒரு ஊராட்சிமன்றத் தலைவரை அதுவும் ஒரு அரசு ஊழியர் முன்பே கொலை செய்ய முயன்றவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்திருக்கும் எனப்பார்த்தால் வெட்கக்கேடு. அதுகுறித்து மனோன்மணி கூறியதைக் கேளுங்கள்... அன்று மதியம் சுமார் 2 மணிக்கு திருப்புவனம் காவல்நிலையத் தலைமைக் காவலர் காசி, மருத்துவமனைக்கு வந்து என்னிடம் நடந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வாங்கிச் சென்றார். நானும், என் கணவரும் இன்று (10.2.2010) வரை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருகிறோம். முதல்தகவல் அறிக்கையைப் பார்த்த பின்பு தான் எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் உரிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யவில்லை என்பதைக் கண்டு வேதனையடைந்தோம்.

மேலும் எங்களிடம் விசாரணை செய்ய வேண்டிய மானாமதுரை டிஎஸ்பி இதுவரை எந்தவிசாரணையும் செய்யவில்லை. மேலும், ஊராட்சிமன்றத் தலைவராகிய என்னை கிராமசபைக் கூட்டம் நடத்தச் சென்றபோது வழிமறித்துச் சாதியைச் சொல்லி, இழிவாகப் பேசி அரசு அதிகாரியின் முன்பே கொலை செய்ய முயன்ற பாலகுருவை கைது செய்யாமல் இன்று வரை தனது கடமையைப் புறக்கணித்து வருகின்றனர்.

எனவே பாலகுரு மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். உரிய வழக்குப்பதிவு செய்யாமல், பாதிப்பு ஏற்படுத்தியவரைக் கைது செய்யாமல் தனது கடமையை வேண்டுமென்றே புறக்கணித்த மானாமதுரை டிஎஸ்பி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி எனக்கும், எனது கணவருக்கும் முழு மருத்துவச்செலவு வழங்கியும், எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்என்று மனோன்மணி கூறினார்.

நாணலாய் தீண்டாமை!

தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக உள்ளிட்ட எத்தனையோ கட்சிகளின் ஆட்சிகளிலே கூட காற்றில் வளைந்து பின்னர் நிமிர்ந்து நிற்கும் ஆற்றோரத்து நாணல் போல சாதிக்கொடுமைகள், தீண்டாமைத் தீமைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னமும் தலைநிமிர்ந்து தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றன என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

நொறுக்கப்படாத நிறுவனமாக சாதியின் கட்டமைப்பு மேலும், மேலும் கெட்டிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தீண்டாமையை நாணலோடு முதல்வர் ஒப்பிடுவது அவரது எழுத்துக்கு வேண்டுமானால் சிறப்பு சேர்க்கும். தலித் மக்களுக்கு எந்த வகையிலும் அது சிறப்பு சேர்த்து விடாது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலித் ஊராட்சி பிரதிநிதிகள், தங்களை செயல்படவிடாமல் தடுக்கும் சாதிவெறியர்கள் குறித்து மாவட்ட நிர்வாகங்களிடம் பலமுறை மனு போட்டும் அது கிணற்றில் போட்ட கல்லாகவே கிடக்கிறது. அதன் வெளிப்பாடுதான் மனோன்மணி மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல். டாக்டர் அம்பேத்கர் மனித உரிமை இயக்கத்தின் இயக்குநர் சுப்பு என்பவர் மூலம் இப்பிரச்சனை வெளிஉலகிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் இப்பிரச்சனையை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல உள்ளதாகக் கூறினார்.

சிபிஎம் கண்டனம்

மனோன்மணி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டக்குழு கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது. இதே சிவகங்கையில்தான் தலித் ஊராட்சித்தலைவரின் தம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது போன்ற பல்வேறு மக்கள் பிரச்சனைகளில் அக்கறை செலுத்தாத மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள தலித் ஊராட்சி மன்றங்கள் மீது தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்துவதுடன், அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிய சிறப்புக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். அத்துடன் தலித் ஊராட்சி பிரதிநிதிகள் மீது நடத்தப்படும் தாக்குதல் வழக்குகள் மீது கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். அதற்கு மாவட்டம் தோறும் சாதி மனநிலையோடு செயல்படும் காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளை இடமாறுதல் மட்டுமின்றி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பிரயாணம் மேற்கொண்டு வரும் உள்ளாட்சியில் நல்லஆட்சி கண்டதாக திமுகவினரால் கொண்டாடப்படுகிற துணைமுதல்வரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மீது காட்டும் கரிசனத்தை தலித் ஊராட்சிகள் மீதும் காட்டாத வரை ஒதுக்கி வைக்கப்பட்ட சேரி மக்களின் வாக்குகள் மீது ஆட்சியாளர்கள் கட்டியுள்ள கோட்டைகள் கனவுக்கோட்டைகளாகவே காட்சி தரும்.

- ப.கவிதா குமார்

 

Pin It