உத்தப்புரம் இன்று உலகறிந்த தீண்டாமையின் அடையாளமாக மாறியிருக்கிறது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பணிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீடுகளும் சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பாளர்களால் பாராட்டப்படுகிறது. தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி தகர்க்கப்பட்டு பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இது முதற்கட்ட முன்னேற்றம் தான். தலித் மக்களின் இன்ன பிற உரிமைகள் நிலை நாட்டப்பட வேண்டியுள்ளது.
இந்நிலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன் அவர்களின் திருச்சி பேட்டி (தினமணி - 20.05.2008) நமக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.
குழந்தையையும் கிள்ளி விடுவது, தொட்டிலையும் ஆட்டுவது போல தீண்டாமைச் சுவர் பற்றிய தனது கருத்தைக் கூறியுள்ளார். சிலர் அதை தீண்டாமைச் சுவர் என்கிறார்களாம். சிலர் பாதுகாப்பு சுவர் என்கிறார்களாம். எனவே தோழர் தா.பா. அதற்கு சர்ச்சைக்குரிய சுவர் என்று பெயர் வைத்துவிட்டார். மே 5 அன்று மாவட்ட ஆட்சியர் நேரடியாக அக்கிராமத்திற்குச் சென்று ஆய்வு செய்து தலித் மக்களின் பாதை அடைபட்டுள்ளதைக் கண்டறிந்து மே 6 அதிகாலையில் அதை இடித்துத் தள்ளி பாதை உருவாக்கிய பிறகும் தோழர் தா.பா.வின் ஐயம் மே 19 வரை தீரவில்லையெனில் என்ன செய்வது?
அது பாதுகாப்பு சுவர் என்று சொல்கிறார்களெனில் என்ன அர்த்தம்? தலித் மக்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டியிருக்கிறது என்று தானே சொல்கிறார்கள். இதை தோழர் தா.பா. நம்புகிறாரா? அவ்வளவு பலவீனமானவர்களாக மற்ற தரப்பினர் இருந்தால் தாங்கள் பயன்படுத்தி வந்த மூன்று பொது வழிகளை அடைத்து சுவர் எழுப்ப தலித் மக்கள் எப்படி அனுமதித்து இருப்பார்கள்! தோழர் தா.பா. அந்த சுவரை முழுவதும் சுற்றி பார்த்தாரா எனத் தெரியவில்லை. தொடர்ச்சியான சுவரில் ஒரு பகுதி இடி விழுந்ததால் சற்று சிதைவடைந்து இரண்டு, மூன்று அடி உயரங்களுக்கு மட்டுமே இருக்கும். அதைத் தாண்டுவது சிரமமமா? இந்த 18 ஆண்டுகளில் இப்படி எந்த தலித்தாவது அத்துமீறியதாக ஆதாரம் உண்டா? எல்லாம் சரி! ஒரு சுவர் மட்டும் எப்படி பாதுகாப்பை தரமுடியும்? தோழர் தா.பா. இக்கேள்விகளையெல்லாம் மே 15 அன்று அங்குள்ள இன்னொரு தரப்பினரிடம் எழுப்பினாரா?
1989ல் மாவட்ட ஆட்சியர், காவல் துறை அலுவலர்கள், ஊர்ப்பெரியவர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில் இச்சுவர் எழுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ள தோழர் தா.பா. அதற்கான அனைத்து ஆவணங்களும் அரசிடம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழக அரசே சொல்லாததை தா.பா. சொல்வது வியப்பாகத்தான் உள்ளது. 1989 ஆவணம் என்று சொல்லப்படுகிற கட்டப்பஞ்சாயத்து பத்திரம் ஒன்றும் இரகசியமானது அல்ல. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அதனை மே 17 அன்று மதுரை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுவிட்டது.
தோழர் தா.பா. அவர்களுக்கு நகல் வேண்டுமானால் கூட கூரியரில் அனுப்பி வைக்கலாம். அதில் அரசு அதிகாரிகள் எவரும் சம்பந்தப்படவில்லை. அச்சட்ட விரோத நடவடிக்கைக்கு பின்புலத்தில் இருந்து உதவினார்களா என்பது நமக்கு தெரியாது. அப்பத்திரத்தில் பஞ்சாயத்தார்கள் எனக் கையெழுத்திட்டுள்ள 24 பேர்களில் ஒருவர் மட்டுமே தலித். அந்த உடன்பாட்டின் உள்ளடக்கமாக இருந்த அனைத்து அம்சங்களுமே தலித்துகளுக்கு எதிரானவை. தீக்கதிர் நாளிதழின் 19.05.2008 ல் அதன் முழு விவரங்கள் தரப்பட்டுள்ளன. தலித்துகள் மீது நிர்ப்பந்தங்கள் செலுத்தப்பட்டு வாங்கப்பட்ட கையெழுத்துக்கள் என்பதை அதைப் படித்தாலேயே புரிந்து கொள்ள முடியும்.
இதைத் தான் ஏதோ அரசியல் சாசனம் போல கையில வைத்துக் கொண்டு அந்த ஊர்க்காரர் ஒருவர் கட்டிலில் அமர்ந்து கொண்டு “எல்லோரும் ரிக்கார்டுபடி தான் நடக்கனும்” என்று தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார். தோழர் தா.பா. அவர்களும் அதே கருத்தை வழிமொழியலாமா? கிராமப்புற ஆதிக்க சக்திகள் தலித்துகளின் மீது தொடுக்கிற ஆயுதங்களில் ஒன்று இத்தகைய கட்டப்பஞ்சாயத்துக்கள் என்பது அவருக்குத் தெரியாதா?
தோழர் தா.பா. அவர்களே! எல்லோரும் நினைப்பது போல 1989 கட்டப்பஞ்சாயத்து பத்திரத்திலும் கூட இப்போது உடைக்கப்பட்ட சுவர் இடம்பெறவில்லை. அதில் குறிப்பிடப்பட்டுள்ள குட்டிச் சுவர் அரச மரத்தடியில் உள்ள வேறு ஒரு சுவர். எனவே, முழுமையான தகவல்கள் உங்களிடம் தரப்படவில்லை என்பதையும் தோழமையுடன் சுட்டிக்காட்ட விழைகிறோம்.
இப்பிரச்சினையில் முழுமையாக ஆய்வு செய்த பின்னர் தான் கருத்துத் தெரிவிப்பது சரியாக இருக்கும் என்று கருதியே நேரடியாகச் சென்றதாக கூறியுள்ளார். அதற்கு 10 நாட்களுக்கு முன்பே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் “உண்மை அறியும் குழு” உத்தபுரத்திற்கு சென்றதே! அது உண்மையை அறிந்து கூறியிருக்கும் அல்லவா! அதற்கு பின்னர் தானே மே 6 அன்று சட்டசபையில் சுவர் இடிப்பிற்கு தங்கள் கட்சி சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகும் மே 15 வரை ஆய்வு என்றால் நீங்கள் எப்போது தான் முடிவிற்கு வருவீர்கள்?
“வெளியே உள்ள சுவர்களை இடிப்பதால் மட்டும் தீண்டாமை ஒழித்துவிட முடியாது; மனிதர்களின் மனதில் உள்ள சுவர்களை அகற்ற வேண்டும்” என்று கூறியுள்ளீர்கள். மனச் சுவர்கள் அகல வேண்டும் என்பதில் கருத்து மாறுபாடு இருக்க முடியாது. ஆனால், அதுவரை கோட்டைச் சுவர்கள் நிமிர்ந்து திமிரோடு இருக்கும் என்று தலித் மக்களுக்கு சமாதானம் கூற முடியுமா? இரட்டை கிளாஸ், பொதுப் பாதை மறுப்பு, சுடுகாட்டில் அனுமதியின்மை, ஆலய நுழைவுக்குத் தடை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தோழர் தா.பா.வின் பதில் இது தானா?
“சுவரை இடிக்கும் முன்பு இரு தரப்பினரையும் அழைத்துப்பேசி அவர்களை ஒப்புக் கொள்ள வைத்திருக்க வேண்டும்” என்று தமிழக அரசிற்கு அறிவுரை கூறியிருக்கிறீர்கள். நீங்கள் செய்த முழுமையான ஆய்வில் மே 2, மே 4 தேதிகளில் பேரையூரிலும், மதுரையிலும் மாவட்ட வருவாய் அதிகாரி முன்னிலையில் நடந்தேறிய பேச்சுவார்த்தைகள் வெளிவரவில்லையா? ஓப்புக் கொள்ளவில்லை என்றால் அதுவரை சுவர் நீடிக்கட்டும் என்கிறாரா தோழர் தா.பா.? இது நீதி அல்லவே. பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் பிரச்சினை அல்ல. தலித்துகளின் உரிமை அது. பேசுவது மற்றொரு தரப்பிற்கு தரப்பட்ட வாய்ப்பு தான். மற்றபடி அந்த வாய்ப்பை நிராகரித்த பின்பும் இரு தரப்பும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கூறுவது தலித்துகளுக்கு இழைக்கப்படும் பாராபட்சம் அல்லவா!
அரசியல் கட்சியனரும் இப்பிரச்சினையை கவனமாக கையாண்டிருக்க வேண்டும் என்று தோழர் தா.பா. கூறுகிற ஆலோசனை யாருக்கு? இப்பிரச்சினையில் தலித்துகளுக்கு எதிராக மோதல்களை உருவாக்க சிலர் முனைந்தார்களே! அவர்களைக் கூறுகிறாரா? அப்படியெனில் வெளிப்படையாக கண்டிக்கலாமே! ஆகவே, இப்பிரச்சினையை கையில் எடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றிய கருத்தாகவே அது தோன்றுகிறது. அவருக்கு ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் நேரடியாக மார்க்சிஸ்ட் தலைவர்களோடு பேசலாமே! பாலன் இல்லத்தில் இருந்து பி.ஆர். நினைவகத்திற்கு ஒரு நடை போய்விட்டு வர 5 நிமிடம் கூட ஆகாதே!
இந்தியா முழுமையும் எழுச்சியை உருவாக்கியிருக்கிற ஒரு சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு போராட்டம் குறித்து தோழர் தா.பா. அவர்களின் பேட்டி வருந்தத்தக்கது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களுக்குப் பொருத்தமாக தமிழக அரசு அம்பேத்கர் விருதை அளித்த போது எல்லோரும் மகிழ்ச்சியடைந்தோம். தோழர் தா.பா.வின் பேட்டியோ ஆறாத காயத்தை உருவாக்குவதாய் உள்ளது.
தோழர் தா.பா. அவர்களே! சமூக நீதிக்கு போடலாமா தாழ்ப்பாள்?
- பாலசுப்ரமணியன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
சமூக நீதிக்கு தாழ்ப்பாள் போடலாமா தோழர் தா.பா.?
- விவரங்கள்
- அருண்பாரதி
- பிரிவு: கட்டுரைகள்