கடந்த ஒன்பது வருடங்களாக லண்டன்வாழ் நாவலாசிரியை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தாலும், கோவை ஞானி என்றழைக்கப்படும் முற்போக்குத் தமிழ் எழுத்தாளர் திரு பழனிசாமி அவர்களாலும் பெண்களுக்கான சிறுகதைப்போட்டி இந்தியாவிற்கு தொடர்ந்து நடைபெறுகிறது.

ஆண்களின் சொத்தாக விருந்துகொண்டு, ஆண்களுக்குப்பிடித்த பெண் எழுத்தாளர்களை மட்டும் பிரபலப்படுத்தும் தமிழ் இலக்கியத்துறைக்குள் ஆரம்பகால எழுத்தாளர்களாகவிருக்கும் பெண்களின் படைப்புக்களுக்கு இடம் கொடுத்து அவர்களை முன்னேற்ற இந்தப் போட்டி தொடங்கப்பட்டது.

இதுவரை கிட்டத்தட்ட 500 பெண்கள் இந்தப் போட்டிக்கு எழுதியிருக்கிறார்கள் இந்தப் போட்டிக்கு வந்து பரிசு பெற்ற சிறந்த கதைகள் புத்தக உருவில் வந்திருக்கின்றன. இந்தியச் சர்வகலாசாலையிலும் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டது. இந்தியாவின் பல பாகங்களிலுமிருந்து, ''இந்த ஆரம்பகாலப் பெண் எழுத்தாளர்களின் படைப்புகள்'' பற்றிய ஆராய்ச்சிகளைச் (Women's writings--an anthropoligal view) சில பெண்ணியவாதிகள் மேற்கொண்டிருக்கிறார்கள்.

ஆடம்பர விளம்பரமில்லாமற் தொடரும் இந்தப்பணியின் பின்னணியில் தமிழகத்தைச் சேர்ந்த பல ஆண், பெண் இலக்கிய ஆர்வலர்கள் இருக்கிறார்கள். போட்டிக்கு வரும் சிறுகதைகளைப் படிப்பதும் தேர்ந்தெடுப்பது, புத்தகமாக வெளிவரப்பண்ணுவது போன்ற பல வேலைகள், ஞானி அய்யாவாலும் அவருடைய இலக்கிய நண்பர்களாலும் முன்னெடுக்கப்படுகிறது.

பெண்களின் முன்னேற்றம் அவர்களின் கல்வி வளர்ச்சியிற் தங்கியிருக்கிறது. பத்திரிகைகளைப்படிப்பது கல்வித்தரத்தை, பொது அறிவை, உலக ஞானத்தை விரிவுபடுத்த உதவுகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகிற் பல இடங்களில், பத்திரிகையுடனான பெண்களின் தொடர்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. ஆண்களுக்குப் பிடிக்காத, ஆண்களின் தத்துவங்களை முன்னெடுக்காத பெண்கள் படைப்புக்கள் குப்பையிற் போடப்படுகின்றன.

பெண்களுக்காகப் பெண்ணியம் பேசுவதாகச் சொல்லும் மத்திய வர்க்கத்துப் பெண்களிற் சிலரும் சமுதாயத்தின் அடிமட்டத்திலிருக்கும் பெண்களில் முதுகில் ஏறிப் பெண்ணிய கோஷங்கள் போட்டுப் பெயரும் புகழும் அடைகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் எந்தச் சந்தர்ப்பத்தையும் தங்களின் முன்னேற்றத்திற்குப் பாவித்து, 'ஓசியில்' மேடையேறித் தங்களைப் பெரிதுபடுத்த பெரியதொரு கூட்டம் காத்திருக்கிறது, ஆண்களும் 'பெண்ணியியம்' பேசும் சில போலிகளும் இதில் அடங்குவர். சமுதாயத்தின் பட்டினிக்கோட்டில் பசியால்வாடிச் சாப்பாட்டுக்குக் கையேந்தும் ஏழைப்பெண்களைச் சினிமாவிலும் சிறுகதைகளிலும் இவர்கள் பார்த்திருப்பார்கள்.

தொடரும் அரசியற் கொடுமைகளால், இலங்கையிலிருந்து தப்பியோடி இந்தியாவின் பலபாகங்களிலும் இலங்கையின் மூலை முடுக்குகளிலும் அகதியாய் வாழும் பெண்களை இவர்களுக்குத் தெரியாது.

சுனாமியின்போது நேர்ந்த பட்டினியாற் துடித்த பெண்களின் துயர் விம்மல் இவர்களின் காதுகளுக்கு ஏறாது.

தங்களின் அருமையான நேரத்தை அடிமட்டப் பெண்களுக்குச் செலவு செய்ய இவர்களின் கவுரவும் வசதியான வாழ்க்கை முறைகளும் தடையாக இருக்கின்றன. அடுத்தது, இன்னொரு பெண்ணின், சமூகப்பார்வை விரிவுபடுவதையும் பலர் விரும்புவதில்லை. தங்களின் பணத்தில். கீழ்மட்டத்தில் வாழும் பெண்களுக்கு எதுவுமே செய்யாமல், பெண்களுக்காக நடத்தப்படுவதாகச் சொல்லப்படும் அல்லது விளிம்பு நிலை மக்களுக்காக நடத்தப்படும் சமூக விடயங்களில், ஒரு செலவும் செய்யாமற் தாங்களும் ஏறித் தங்கள் சொந்தங்கள், சினேகிதங்களையும் ஏற்றிப் பெண்ணியம் பேசுவார்கள்.

எழுத்துக்கள் என்பது மனித எண்ணங்களின் வடிவங்களில் ஒன்று. அடிமட்டத்தில் வாழும் பெண்களின் எண்ணங்களுக்கு இடம் கொடுத்து அவர்களை ஊக்குவிக்க, முன்னேற்ற, பிரபலப்படுத்த, இராஜேஸ்வரி சிறுகதைப் போட்டிமூலம் பல தமிழ்நாட்டுப் பெண்ணியவாதிகள் பாடுபடுகிறார்கள். 2006ம் ஆண்டுக்கான சிறுகதை போட்டிகளுக்கு உலகம் பரந்து வாழும் தமிழ்ப்பெண் எழுத்தாளர்களிடமிருந்து படைப்புக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. பெண் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை 8-10 பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதவும். நவம்பெர் 15ம் திகதிக்கு (15.11.06) முன் உங்கள் படைப்புக்களை அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

2006 பெண்கள் சிறுகதைப்போட்டி,
K Palanisami
24, VRV Nagar, Gnambgai Mill Post,
Coimbatore 641029
Tamil Nadu, South India,
INDIA

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

Pin It