பெரும் மழை. பெருங்காற்று.

இன்றும் அந்தக் காட்சியின் வண்ணம் என்னுள் மினுங்குகிறது.

சரிவான புல்வெளி....வழக்கமாக பள்ளி விட்டதும்..... பைக்கட்டை வீட்டில் இட்டு.. சீருடையை மாற்றி விட்டு வந்து அந்த புல்வெளியில் கீழ் நோக்கி அதிவேகமாக ஓடி வருவதை கீழிழிந்து மேல் நோக்கி பார்க்கும் யாவருக்கும் நானும் என் நண்பர்களும் டக்கென்று எகிறி பறந்து வருவது போல தான் தெரியும். காட்சியின் மாயம் கற்பனைக்கும் ஒரு படி மேல்.....என்று இன்று யோசிக்கிறேன். அதுவும் மழைக் காலம் என்றால்.... வழுக்கிக் கொண்டு வருவதை இன்று பார்க்கும் மனக்கண்ணில்... திக் திக்... திக்.. என்று கீழே ஒரு பள்ளத்தாக்கு முளைக்கிறது. அற்புத வனத்தின் நடுவே... ஒரு சிறு வாழ்வு. பறவைகளும்... சிறகுகளும் கொண்ட வெளி. தொடுவானம்.... உங்கள் கற்பனை. எங்கள் நடைபாதை. நடக்க கிடக்க படுக்க பறக்க... திறக்க புது வெளி என திறந்தும் புது விழியென மறந்தும் தரிசனம் ஆகாய சுயம். ஆழ உழும் அர்த்தங்கள் பூலோக உருளல்.....

மழை வரும் போதெல்லாம் உலகமே மழை என்று நம்பும் கண்களில்... துளிகளின் தாலாட்டு.. துளிர்ப்புகளின் தவம். பனி வரும்போதெல்லாம் பதுங்கிய போர்வையென வீடு காடு மலை அருவி மேடு பள்ளம் எல்லாம் அச்சடித்த ஓவியம் என எட்டிப் பார்க்கும் சதுர முக்கோண செவ்வக வட்ட பரிமாணம்.

சிவப்பு நிற கைகள்.. நீல நிற கால்கள்.. பச்சை நிற மேனி.. கருப்பு நிற கண்கள்... மஞ்சள் நிற பாதை... ஊதா நிற தூக்கம்... ஆரஞ்சு நிற நண்பர்கள்... றோஸ் நிற தோழிகள்....வெள்ளை நிற சனிகள்... மாநிற விளையாட்டுகள்... என்று நிறம் கூடி களிப்பெய்திய நாட்கள்...எங்கெங்கு தேடி நான் எனும் பொருட்டு தொலைதல் நியதியென, மூடிக் கொண்டே வரும் ஏழாம் எட்டாம் ஒன்பதாம் கதவுகளின் வழியினை அடைத்து நிற்கிறது... இளமை தாண்டிய பருவம். படக்கென்று வந்து பாய்மர தோகை விரிக்கும்.. தோழியின் பாவாடை "ஓ" வென கத்திக் கொண்டு பஞ்சாரமாகும் காட்சிக்குள் மழை செய்யும் தவத்தை நானே கலைத்திருக்கிறேன். வரம் வேண்டிய விழிகள்.. இன்றும் புன்னகை பூக்கின்றன. சித்திர நகர்தல் காணும்.. இரு பெரும் யாக்கை தகுமென ஊரும் யாவும்.. உப்பிய மறதிக்குள்.... ஊழ் சரியும்... தாக ஓடை தாவி விரிக்கும். சிலுசிலுவென தலை தூக்கி இசையாட்டும்... திசையெங்கும்.. பிசுபிசுக்கும் எவர் பொருட்டும் ஞாபகக் கண்ணீர்.

நகரும் சாலைகளில்... நத்தைக்கும் எனக்கும் போட்டி உண்டு. தாவும் அருவிக்கும் எனக்கும் சரிய சரிய தாகம் உண்டு. நிறம் தூவிப் பறக்கும் பட்டாம் பூச்சிக்கு பெயர் வைக்கும் விளையாட்டில் நானொரு மரக்கிளை. யார் அசைக்க நான் இசைக்க. பூ வாசிக்க... நிழல் யோசிக்கும். பிசாசு தேடி அலைந்த ராத்திரிகள் நதியாகி விட்டிருக்கிறது. கில்லி தாண்டல் விளையாட்டு காதுக்குள் இரைகிறது. ஜன்னல் அடைத்து ஒட்டி அணைந்து... குளிர் தாங்கும் நட்புகளில்.... ஆணும் பெண்ணும் ஒருபோதும் புடைத்ததில்லை. கோபம் அற்ற கொய்யாப்பழங்கள் கைக்கெட்டும். எதிர் வீட்டு ரசச் சோறு வயிறு முட்டும். கிளை பிடித்து தலை ஆட்டும்....காற்று திரியும் பின்மதியம். பள்ளி தாண்டும்.... பின் ஜன்னல்... பிசிறு தட்டும்... பேருவகை.

நீள் வாக்கில் ஓர் ஒற்றையடி. கிளை பிரியும் சில கால்தடங்கள். உடைபட்டு தடை தாண்டும் கூழாங்கற்களின் குளு குளு கவிதைகள். சிறு நதியென ஓடம் படிக்கும். ஓட்டம் பிடித்த கரையெங்கும்.. சில தாவணிகள்.... சரித்திரம் செதுக்கும். ஆலாபனை இரவுகளில்... அந்தி மாலை சரிவுகளில்.. சருகுகள் தாளமிட்டு... மரத்தின் உச்சி எட்டிப் பார்க்கும். பின் நவீன யதார்த்தங்கள் முன் நவீன காலத்தின் தத்துவமென இருந்திருக்கலாம். புரியாத நர்த்தனங்கள் நானென உருண்டு புரண்டு ஆராதித்திருப்பேன். அன்று ஒரு நிலா.. அதுவாகி இரவு உருட்டி செல்லும் எவர் வீட்டு வாசலிலும் ஒரு கிழவி கதை சொல்லிக் கொண்டிருப்பாள். எல்லாம் சாயை எல்லாம் மாயை என்று எவர் போல கூக்குரலிட நான். எனைப் போல குயில் இடும் குரல் எது. குழி தோண்டி மிக்ஸர் புதைத்து வளரும் என்று நம்பிய மானுடம் அங்கு தான் மரமாகி இருக்கிறது. கூட மனமாகியும் இருக்கிறது. தொட்டுணர்ந்த எதுவோ.. தொடுவானம் பட்டுணரும்... கடம் இசைக்கும் புல்லாங்குழல் ஊதும்....காற்றுக்கு வெளி அசையும். யானைக்கும் பிளிறல் அதன் மொழி என்றே பாடுதல் நிம்மதி.

நதி ஒட்டி போகும் இரவும் பகலும். என்னை கூட்டி போகும்.. மரமும் மலையும். ஏழுகடல் தாண்டிய கருவேப்பிலை மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ள சித்திரக் கதைகள் சிலதுண்டு. சீக்கிரம் வரையும் பிஞ்சு விரல்களின் பதின் நிலாக்கள் பாதி உலாக்கள். எல்லா மாதமும்.. மழை பெய்யும்.... மாற்றி வாய்த்த கால பொத்தான். பதிய பதிய பருவம் பூக்கும் சில காய்கறிகள். சிலீர் என்று கிறுகிறுக்கும்.. சில ஊற்றுகள். யார் வந்து கட்டமைத்த ஊர் அதுவோ. பேர் எல்லாம் தூர் வாரிட்ட பேரன்போ. வளைவுகள் நிறைந்த வாழ்வு. வாடைக்காற்றுடன் தலை பறக்கும் கூல். எட்டிப் பார்க்கும்... இயற்கை. எழில் மிகும் இளைப்பாறல். கூடி பேசும்... மொத்தக் கைகளில்... யுத்தம் ஒன்றில்லை.. சத்தம் எல்லாம் சந்தமாகும் யுக்தி அதுவாகி தனை சேரும். கொய்யா தோப்பு... உடல் விரிக்கும்.. உயிர் நிறைந்த வயிற்றுக்கு குச்சி மிட்டாய் தொட்டுக் கொள்ள. பச்சக் குதிரை பத்துமணிக்கு. நடுமதியம் கூட்டாஞ்சோறு. நாலுமணிக்கு பஞ்சுமிட்டாய். 7மணிக்கு ஆத்தா தேடும். 8 மணிக்கெல்லாம் ராத்திரி வந்து விடும். சாத்திரமற்ற சாதியற்ற மதம் கூட பிடிக்காத யானையின் நிறம் பற்றி விவாதிக்கும் யார் கொண்ட நெருப்பும்... ஜோதியே. பசித்து புசிக்கும் கூட்டு வாழ்வின் பொருட்டு யார் வீட்டு பருப்பும் சரி பாதியே.

உலகம் பிடி மாறும் வழியெங்கும் சிலை அல்ல பெருவாழ்வு... சித்திரமற்ற நிழல் அல்ல....அதன் தீர்வு. யாதும் ஊரே யாவரும் கேளீர் என ஜன்னல் தட்டு கதவு தட்டு இரவுக்கும் பகல் பிடி. பகலெல்லாம் காடு வடி என்று தத்துவத்தில் நிலைப்பது... அங்கொரு யாக்கையின் இன்னொரு விதி செய்யும் அன்றொரு காலத்தின் கிராமம். எங்கள் வாழ்வும் எங்கள் சாவும்......... அங்கே ஒரு மணிப்புறாவின் மிளிர் தரு பசும் பச்சையின் காடாகி இன்னும் விரிந்து கொண்டுதானிருக்கிறது.

- கவிஜி

Pin It