மலேசிய நாட்டில் உள்ள பினாங்கு மாநிலத்தில் கடந்த 1970 ஆம் ஆண்டிலிருந்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிவருகிறது ‘பினாங்கு பயனீட்டாளர் சங்கம்’ (CONSUMERS ASSOCIATION OF PENANG) மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றின் தரம், விலை அவற்றை வாங்கும் - நுகரும் மக்களுக்குரிய உரிமை. போக்குவரத்துக் கட்டணங்கள், திரைப்படங்கள், திரையரங்கக் கட்டணங்கள், விவசாய விளை பொருட்கள், இயற்கை விவசாயம், மருத்துவம், மருந்துகள் என பல துறைகளிலும் நுகர்வோருக்கு உள்ள உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறது.

சுற்றுச்சூழலுக்கு எதிரான பெரும்தொழில்நிறுவனங்கள், சூழலுக்கு எதிரான சில அரசின் பெருந்திட்டங்கள், பன்னாட்டு நிறுவனங்களில் சூழல் விரோதத் திட்டங்கள் என அனைத்தையும் எதிர்த்து மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்காகப் போராடி வரும் ‘பினாங்கு பயனீட்டாளர் சங்கம்’ கடந்த 27 ஆண்டுகளாக ‘பயனீட்டாளர் குரல்' என்ற இதழையும், 20 க்கும் மேற்பட்ட சிறு வெளியீடுகளையும் வெளியிட்டு, மக்களிடையே நுகர்பொருட்கள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி வருகிறது.

90 வயதிலும் ஒரு இளம்போராளிக்குரிய போர்க்குணத்தோடு இயங்கி வருகிறார் அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இட்ரிஸ். அந்த அமைப்பைப் பற்றி அடுத்தடுத்த இதழ்களில் விரிவான கட்டுரையும், நேர்காணலும் வெளிவரும்.

இந்த அமைப்பு கடந்த ஏப்ரல் 6 ஆம் நாள் ஒரு வேண்டு கோளை விடுத்துள்ளது. நம் வாழ்க்கையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும்  அழகு சாதனப்பொருட்களில் கலக்கப்படும் மிகவும் ஆபத்தான ‘மைக்ரோ ப்ளாஸ்டிக்ஸ்’ பற்றிய அந்த அறிவிப்பை அப்படியே தமிழில் தருகிறோம்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அறிவிப்பு:

மலேசிய நாட்டின் பெனாங்கில் உள்ள நுகர்வோர் கூட்டமைப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சுகாதாரத்தினைக் கருத்தில் கொண்டு, அழகு சாதனப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களில் கலக்கப்படும் மைக்ரோ ப்ளாஸ்டிக் (Microplastics) துகள்களைத் தடைசெய்ய வேண்டுகோள் விடுத்துள்ளது.

இயற்கை மூலக்கூறுகளுக்கு மாறாக மைக்ரோ ப்ளாஸ்டிக் துகள்களை, அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுவது என்பது கடந்த 50 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

மைக்ரோ ப்ளாஸ்டிக் என்பது ஒரு மீட்டரில் பத்து இலட்சத்தில் ஒரு பங்கு ஆகும். deodorant, shampoo, conditioner, shower gel, lipstick, hair colouring, shaving cream, sunscreen, insect repellent, anti-wrinkle creams, moisturizers, hair spray, facial masks, baby care products, eye shadow and mascara ஆகியவற்றில் மைக்ரோ ப்ளாஸ்டிக்ஸ் பயன்படுத்தப்படுகிறது, அவற்றின் கூழ்மைத் தன்மை, உரியும் தன்மை மற்றும் அடுக்குகளை உருவாக்கக் கரைபொருளாகப் பயன்படுகின்றன.

இதில் பயன்படுத்தப்படும் மைக்ரோ ப்ளாஸ்டிக்ஸ் அளவானது, அந்தப் பொருட்களின் பயன் பாட்டைப் பொறுத்து, 1 முதல் 50 மைக்ரோமீட்டர் அளவில் பயன்படுத்தப்படுகிறது. மொத்த மூலப்பொருட்களின் சதவீதத்தில் 1% முதல் 90% வரை கலக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இறந்த தோல் மூலக்கூறுகளை அப்புறப்படுத்தப் பயன்படுத்தப்படும் களிம்புகளின் உரியும் தன்மையை அதிகப்படுத்த, அதிக அளவில் இவை சேர்க்கப்படுகிறது.

இந்தத் துகள்கள் அளவில் மிகச்சிறியதாக இருப்பதால் நீரில் நேரடியாக ஊடுருவி நீர் மாசுபாட்டிற்கான முதன்மைக் காரணியாக அமைகிறது.

பெனாங்கில் உள்ள நுகர்வோர் கூட்டமைப்பு மேற்கொண்ட களப்பணியின் முடிவில், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் அழகுசாதனப் பொருட்களின் மேலுறைகளில், அவற்றில் மைக்ரோ ப்ளாஸ்டிக்ஸ் கலக்கப்பட்டுள்ளதற்கான குறிப்புகள் கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் உள்ளூரிலும், உள்நாட்டிலும் தயாரிக்கப்படும் பொருட்களின் மேலுறைகளில் அத்தகைய குறிப்புகள் எதுவுமில்லை. இதனால் நுகர்வோர்களால் அவற்றைப் பிரித்தறிய இயலாத நிலை உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச் சூழல்  ஆய்வின்படி, மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் கலக்கப்பட்ட நீரினை மறுசுழற்சி செய்யவோ, அல்லது கழிவு நீர் சுத்திகரிக்கும் முறைகளைக் கொண்டு முற்றிலும் அழிக்கவோ முடியாது.

இறுதியில் கடலில் கலந்து அங்கேயே தங்கிவிடுகின்றன. இந்த மைக்ரோ ப்ளாஸ்டிக்ஸ் மக்குவதற்குப் பல நூறாண்டுகள் ஆகும். மேலும் ஆய்வு முடிவுகளின் படி, இவை நச்சுத்தன்மை வாய்ந்த டைகுளோரோ டைபீனைல் ட்ரைகுளோரோ ஈத்தேன்(DDT) மற்றும் பாலி குளோரினேட்டட் டைபீனைல்களை(ஞஊB) வெளியிடுகிறது. நச்சுத்தன்மை வாய்ந்த இவை நீர்வாழ் உயிரினங்களின் உணவாகி, அதன் மூலம் மனிதனுக்கும், இந்த சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறது.

கடல்நீரில் கலந்துள்ள மைக்ரோ ப்ளாஸ்டிக் துகள்கள் உண்ணும் மீன்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இயல்பாக நடக்கவேண்டிய முதிர்ச்சி அடைதல் தடை செய்யப்படுகிறது. சில மீன்கள், இயற்கையான உணவுகளை விட அத்துகள்களை விரும்பி உண்பதால், இனப்பெருக்கம் குறைந்து அவற்றின் அழிவிற்குக் காரணமாக அமைகிறது. நுண்துகள்கள் கழிவு நீர் மற்றும் திடக் கழிவுகளின் வழியாக நீரில் பரவும் போது உணவுச் சங்கிலியைப் பாதித்து வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கிறது. மேலும் கடல்நீரில் மிதந்து புலம்பெயர்ந்து கரைகளில் படிமங்களாகப் படிகிறது.

இயற்கை மற்றும் தூண்டப்பட்ட முறைகளிலும் இவை மக்கும் தன்மையற்று இருப்பதால், நூறாண்டுகளில்  பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இந்த மாசுபாட்டால் பாதிப்படையும் நிலை உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் எதிர்வினைகள்

அமெரிக்க அரசு 2017 ம் ஆண்டின் இறுதியில் மைக்ரோ ப்ளாஸ்டிக்ஸைப் பயன்படுத்தப்பட்ட அழகு சாதனப் பொருட்களை தடை செய்யத் திட்டமிட்டுள்ளது.

இதற்கு முன்னோடியாக அங்குள்ள  இல்லினாய்ஸ் மாகாணம் இதன் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடைசெய்யச் சட்டம் இயற்றி 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் இரண்டு கட்டமாக செயல்படுத்த உள்ளது.

நெதர்லாந்து,  ஆஸ்திரியா, லக்ஸம்பெர்க், பெல்ஜியம் மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் ஒன்றிணைந்து மைக்ரோ ப்ளாஸ்டிக்ஸ் கலந்துள்ள அழகு சாதனப் பொருட்களைத் தடை செய்யத் திட்டமிட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் கீழுள்ள அரசு சாரா நிறுவனங்கள் மைக்ரோ ப்ளாஸ்டிக்ஸ் கலக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களைத் தடை செய்ய இணையத்தின் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு பினாங்கில் உள்ள நுகர்வோர் கூட்டமைப்பு மைக்ரோ ப்ளாஸ்டிக்ஸ் கலந்துள்ள அழகு சாதனப் பொருட்களின் உற்பத்தி, ஏற்றுமதி, பகிர்மானம் மற்றும் விற்பனையை முற்றிலும் தடைசெய்யுமாறு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழில்: பிரியங்கா,

அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி

Pin It