நீதிமன்றங்கள் நாட்டிலும் மக்களிடமும் சமநிலையையும் ஒற்றுமையையும் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது..ஆனால் சமீபமாக வந்து கொண்டிருக்கும் நீதிமன்ற தீர்ப்புக்கள் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் மக்களிடம் பிரிவினையை தூண்டும் வகையிலும் உள்ளது.. நீதிமன்றங்கள் ஆளும் கட்சிகளின் மதம்சார்ந்த கொள்கைகளை உறுதிசெய்யும் அமைப்புகளாக மாறிவிட்டனவா? என்ற ஐயமும் ஏற்படுகிறது..
ஒரு நீதிபதி மயில் தேசிய பறவையாக இருப்பதற்கு விளக்கம் சொல்லிவிட்டு பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டுமென்று கூறுகிறார், இன்னொரு நீதிபதி திரையரங்குகளில் தேசியகீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்பது கட்டாயம் என்கிறார்.. அந்தவரிசையில் இப்போது கல்விநிலையங்களிலும், அரசு அலுவலகங்களிலும் தேசியப்பாடல் கட்டாயமாக படவேண்டுமென்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்..
இந்தியா என்பது பன்மை கலாச்சாரம் கொண்ட நாடு என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் எப்படி இவர்கள் நீதிபதிகளாக இருக்கிறார்கள் என்பதுதான் நமக்கெழும் முதல் அச்சம்.. 1937-ம் ஆண்டு வந்தே மாதரம் பாடலை தேசிய பாடலாக அறிவித்தபோது இந்தியா முஸ்லீம் லீக் மற்றும் ஜின்னாவிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தன.. ஆனால் காந்தி மற்றும் நேருவின் ஆதரவால் தேசிய பாடலாக அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.. வரலாற்று நெடுக்க வந்தே மாதரம் பாடலுக்கு இருந்த ஆதரவை போலவே எதிர்ப்பும் இருந்திருக்கிறது.. எதிர்ப்புக்கு முதன்மை காரணம் வந்தே மாதரம் பாடலில் இந்துக்களின் தெய்வமான துர்க்கையை புகழ்வது போல இருக்கிறது இதனால் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதென தனது நியாயமான ஆதங்கத்தை பிற மதத்தினர் வெளிப்படுத்தினர்..
சுதந்திரத்திற்கு பிறகான அரசுகள் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு முதல் இரண்டு பகுதிகளை மட்டும் பாடினால் போதுமே அறிவித்தன.. ஆனால் இப்போது இப்படி ஒரு தீர்ப்பின்முலம் மீண்டும் இந்தியாவில் மதரீதியிலான ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.. மேலும் பாடவிரும்பாதவர்கள் எழுத்துப்பூர்வமாக அதற்கான விளக்கத்தை தெரிவிக்க வேண்டுமென நீதிமன்றம் இந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.. விளக்கமளிக்க விரும்பத்தவர்களின் நிலை என்னவாகும் என்பது அடுத்த நமக்கெழும் கேள்வி..
இப்போது இப்படி ஒரு தீர்ப்பை அறிவிக்க வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது? இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தான் தேசபக்தன் என்பதை நிரூபித்தே ஆக வேண்டுமா?.. நீதிமன்றங்கள் இந்தியாவில் தேசபக்தி குறைந்து விட்டதென கருதுகின்றனவா??.. நீதிமன்றங்கள் அப்படி ஒரு முடிவிற்கு வந்திருக்குமானால் எதை அளவுகோலாக வைத்து இந்த முடிவிற்கு வந்தன?.. என்ற ஏராளமான கேள்விகள் முன்னெழுகின்றன..
ஆயுதபூஜை, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் அலுவலகங்களிலோ, கல்வி நிலையங்களிலோ கொண்டாடப்படும்போது பிற மதத்தினர் பங்கேற்கவில்லை என்றால் அது மதம்சார்ந்த விஷயமாக மட்டுமே பிறரால் புரிந்து கொள்ளப்படும்.. ஆனால் வந்தே மாதரம் பாடலை பிற மதத்தினர் பாடாமல் விலகி இருக்கும்போது அவர்களின் தேசபக்தியின் மீது கேள்வி எழுப்பப்படும்.. தேசிய பாடலை பாடாதவர்கள் இந்தியர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்படும்.. இந்தியர்களா இருக்க விரும்பாதவர்கள் ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும்? பாகிஸ்தான் போகலாம் என்று மதவாதிகள் பிரச்சாரம் செய்ய தொடங்குவார்கள்..பிறகு தேசத்தின் ஒற்றுமை கேள்வி குறியாகும்..
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போதும், குஜராத் கலவரத்தின்போதும் ஆண்களின் ஆடைகள் உருவப்பட்டு இந்துவா? முஸ்லிமா? என்று மதவாதிகள் சோதனை செய்து அதன்முலம் படுகொலைகளை அரங்கேற்றினார்கள்..இப்போது இந்த தீர்ப்பு இந்துக்களிலிருந்து பிறமதத்தினரை வேற்றுமைப்படுத்தி காண்பிக்க ஒரு கருவியாக பயன்படபோகிறது.. அதன்முலம் அவர்களை தேசத் துரோகிகளாக சித்தரிக்க போகிறார்கள்..
ஓர் மொழி, ஓர் உணவு, ஒற்றை வரி, ஒற்றை தேர்வு, ஒற்றைப் பாடலாக நீண்டு கடைசியில் ஒற்றை மதமாகவும், ஒற்றை கலாச்சாரமாகவும் இந்த நாட்டை மாற்றுவதற்கான முன்னோட்டமாகவே இவையெல்லாம் பார்க்கப்படும் இந்த சூழலில், இவைகளுக்கெல்லாம் நீதிமன்றங்களும் துணைபோகின்றனவா? என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது..
- மணிகண்டன் ராஜேந்திரன்