பல்லிகளும் சிலந்திகளும்
எப்படியோ வந்து சேர்ந்து விட்டன
புதிதாக கட்டிய வீட்டிற்கு...
வீட்டிற்குப் பின்னால்
இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு
கல்நார் தாள்களால் வேயப்பட்ட கூரையில்
சிட்டுக் குருவிகள் கூடு கட்டி விட்டன
வீட்டு மாடியில் குழந்தைக்கு உணவூட்டுகையில்
சில காகங்கள் தினமும் வந்து சேர்கின்றன
வீட்டுத் தோட்டத்தில் வைத்த
நான்கு தென்னம் பிள்ளைகளும்
சில வருடங்களில் காய்க்கத் தொடங்கின
அணில்கள் இல்லாத தென்னைகளை
நினைத்துப் பார்க்க முடியுமா?
பத்திருபது அணில்களால்
வீட்டுத் தோட்டம் வெகு அழகாகி விட்டது
கிரிச் கிரிச் சத்தத்துடன்
பனிச் சறுக்கு வீரனைப் போல
தென்னைகளிலும் ஓலைகளிலும்
சர் சர்ரென்று பாயும் அணில்கள்
அவ்வீட்டுக் குழந்தைகளின் நண்பர்களாகி விட்டன
நட்டு வைத்த முருங்கைக் கொப்பு
மரமாகி பூத்த போது
தேனீக்கள் படையெடுத்து வந்து தேன் எடுத்தன
தோட்டத்தில் வளரும்
ஒரேயொரு கொடுக்காப்புளி மர இலைகளைத் தின்பதற்கு
பொன் வண்டுகள் பறந்து வருகின்றன
அதில் ஒன்றிரண்டைப் பிடித்து
கேம்பஸ் டப்பாவில் வளர்த்து வருகிறான்
வீட்டின் கடைக்குட்டிப் பிள்ளை
மழைக்காலத்தில் வீட்டு தோட்டத்திற்குள் வரும்
தவளைகளும் மண் புழுக்களும்
ரயில் பூச்சிகளும் பட்டுப் பூச்சிகளும்
தோட்டத்தை சிறு வனமாக்குகின்றன
பெண் பிள்ளைகள் இல்லாத
கவலையில் இருந்த வீட்டுத் தலைவன்
சாக்குப் பையில் வைத்து ஓடையில் வீசப்பட்ட
பெண் நாய்க் குட்டிகளில் ஒன்றை வீட்டிற்கு எடுத்து வந்து
வளர்க்கத் தொடங்கினான்
மிகச் சமீபத்தில் பதின்ம வயதை அடைந்த
அவ்வீட்டு பள்ளிச் சிறுவன்
நண்பனின் வீட்டில் இருந்து
காதல் பறவைகளை வாங்கி வந்து
வளர்க்கத் தொடங்குகிறான்
ஒரு வீடு என்பது மனிதர்கள் மட்டும் வாழ்வதற்கு அல்ல

- அன்பழகன் செந்தில்வேல்

Pin It