rajasthan village nfsa

வாழ்நிலைதான் ஒருவனின் சிந்தனையைத் தீர்மானிக்கின்றது என்பார் மார்க்ஸ். ஆனால் இந்தியா போன்ற பார்ப்பனியத்திடம் அடிமைப்பட்ட நாடுகளில் சாதியும் சிந்தனையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக விளங்குகின்றது. சோத்துக்கே இல்லை என்றாலும் மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டு அறுவாளை எடுத்து, தலித்துகள் மீது பாய்வதற்கு சாதி ஒருவனுக்கு உத்வேகத்தைக் கொடுக்கின்றது. சாதியையும் அது கட்டமைத்து இருக்கும் சனாதன சிந்தனையையும் விட்டொழித்தல் என்பது ஒரு சாதி இந்துவுக்கு உயிரை விடுவதற்குச் சமமானது. அதுவும் ஆர்.எஸ்.எஸ் பிஜேபியைச் சேர்ந்த நபர்களாக இருந்தால் அவ்வளவுதான். சாதியப் பெருமிதமும் சுயசாதிப் பற்றும் உழைத்துச் சோறு தின்னுவதை இழிவாகப் பார்க்கும் உழைப்புறிஞ்சி குணமும் சேர்ந்து அவனை ஆதிக்க சாதிகளை நக்கிப் பிழைப்பவனாகவும், பணக்கார பெருமுதலாளிகளின் எச்சிலையில் மேயும் பெருச்சாளிகளாகவும் மாற்றிவிடுகின்றது. சாதி ஆதிக்க மனோபாவமும் அதனுடன் இயல்பாகவே இரண்டறக் கலந்திருக்கும் மேட்டிமைத்தனமும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் அது தன்னையும் தனது சிந்தனையை ஒத்தவர்களைத் தவிர அனைவரையும் ஒழிக்கப் பார்க்கும்.

அப்படி எண்ணத்தாலும் செயலாலும் பார்ப்பனியத்தையும் முதலாளித்துவத்தையும் தனது இரு கண்களாகக் கருதும் ஆர்.எஸ்.எஸ். பிஜேபி கும்பல் ஆட்சி செய்யும் மாநிலங்கள் சாமானிய மக்களை அதுவும் ஒரு வேளை சோற்றுக்கே வக்கற்று வாழ நிர்பந்திக்கப்பட்ட மக்களை எவ்வளவு கீழ்த்தரமாக நடத்தும் என்பதற்கு ராஜஸ்தான் மாநில அரசே ஒரு நல்ல முன்னுதராணம் ஆகும். ராஜஸ்தானை ஆளும் பிஜேபி அரசு மானிய விலையில் அரசிடம் இருந்து உணவு பொருட்களை வாங்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர் வீடுகளில் ‘நான் ஏழை. நான் மிகவும் ஏழை உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசிடம் இருந்து ரேஷன் பொருட்களை பெறுகின்றேன்’ என்று வீடுகளின் வாசலில் எழுதி வைத்திருக்கின்றது. குறிப்பாக அந்த மாநிலத்தில் உள்ள தவுசா மாவட்டத்தில் மட்டும் 1.5 லட்சம் வீடுகளில் இது போன்ற வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கேவலமான செயலுக்கு அது கொடுத்த விளக்கம் மானியங்கள் ஏழைகளுக்கு விடுபட்டுப் போய்விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் அப்படி எழுதி வைத்தார்களாம்.

ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பலின் இந்த நல்லெண்ணம் எல்லா மட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டிருந்தால் எப்படி இருக்கும். மோடியின் வீட்டு வாயிலில் ‘கட்டின பொண்டாட்டியை ஏமாற்றிவிட்டு ஓடி வந்தவர்' என்றும், 'நாட்டை விமானத்தில் பறந்து பறந்து பன்னாட்டு முதலாளிகளுக்குக் கூட்டிக்கொடுக்கும் மாமா' என்றும், 'முஸ்லிம்களின் கருவறுத்த ரத்தக்காட்டேரி’ என்றும் எழுதிப் போடலாம். மோடியின் வீட்டில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு பிஜேபி ஆர்.எஸ்.எஸ் காரன் வீட்டிலும் ‘பார்ப்பன பயங்கரவாதிகள்' என்றும், 'நாட்டை பெருமுதலாளிக்குக் கூட்டிக்கொடுக்கும் புரோக்கர்கள்’ என்றும் எழுதிப் போடலாம். இதை எல்லாம் செய்தால் மக்கள் எளிமையாக பாசிஸ்ட்டுகளையும், மாமா பயல்களையும் அடையாளம் கண்டுகொள்வார்கள். ஏழைகள் மீதான ஆர்.எஸ்.எஸ் பிஜேபியின் அக்கறையை நாடே பார்த்து மகிழ்ந்து பாராட்டியது போல இதையும் பார்த்து மக்கள் பாராட்டுவார்கள். அதனால் மோடி அரசு ராஜஸ்தான் அரசின் இந்த முயற்சியை நாடுமுழுவதும் கொண்டுசெல்ல வேண்டும்.

ஏனென்றால் மோடி மிக நல்லவர். அவருக்கு ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு பார்த்தெல்லாம் திட்டங்களை அறிவிக்கத் தெரியாது. பத்து லட்ச ரூபாய்க்கு கோட்டு போட்டாலும் உள்ளே கோவணத்தைத்தான் கட்டியிருப்பார். கோட்டு அவரின் பணக்கார சார்பையும், கோவணம் அவரின் ஏழைகளின் மீதான பற்றையும் குறிக்கும் குறியீடுகள் ஆகும். பலபேர் மோடியின் கோட்டை மட்டுமே பார்த்து அவரை மேனாமினிக்கி என்றும், பெருமுதலாளிகளின் கைக்கூலி என்றும் சொல்லிவிடுகின்றார்கள். ஆனால் அவரின் கோவணத்தைப் பார்த்தால் அப்படி சொல்ல மாட்டார்கள். அவர் ஆட்சிக்கு வந்த இந்த மூன்று ஆண்டுகளில் அந்தக் கோவணத்தை துவைக்காமல் தான் ஒரு ஏழை, அதிலும் டீக்கடையில் டீ விற்ற பரம ஏழை என்பதை இந்தியாவே நாறும் அளவிற்கு அவர் சொல்லிக் கொண்டிருக்கின்றார். அவரின் இந்த எளிமைதான் ராஜஸ்தான் மாநில அரசு தன் மக்களின் வீடுகளில் அவர்களை மிக ஏழைகள் என்று எழுதி தனியாக அடையாளப்படுத்த ஆதர்சமாக இருக்கின்றது.

ஏழைகளுக்கு இவ்வளவு பெரிய அடையாளத்தைக் கொடுத்து அவர்களை கெளரவமான வாழ்க்கையை உத்திரவாதப் படுத்தியிருக்கும் பிஜேபி அரசு இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் 7 லட்சம் கோடிகள் கடன் வாங்கிவிட்டு அதைக் கட்டாமல் நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கும் தன்னுடய நண்பர்களின் பெயர்களை நிச்சயமாக அறிவிக்கும் என்று அந்த அரசு மானியத்தில் உயிர்வாழும் மிகவும் ஏழைகள் எதிர்பார்க்கின்றார்கள். அத்தோடு நில்லாமல் அவர்களின் வீடுகளிலும் கடனைக் கட்டாத பணக்கார ஏழைகள் என்று பெயரை எழுதி வைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றார்கள். ஏனென்றால் மக்களின் பணத்தைத் திருடித் தின்னவர்களின் பெயர்களை எழுதி வைப்பதன் மூலம் மீண்டும் வங்கிகள் அவர்களுக்குக் கடன் கொடுக்காமல் தடுக்கலாம்; மக்களும் தங்களின் பணத்தை ஏமாற்றிய திருடர்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?

ராஜஸ்தான் அரசின் இந்தப் பச்சை அயோக்கியத்தனமான செயலுக்கு அடிப்படையான காரணம் அதன் பார்ப்பனிய சித்தாந்தம் தான். அதுதான் பிஜேபி ஆளும் அனைத்து மாநிலங்களிலும் அதைச் சாமானிய எளிய மக்களுக்கு எதிராக செயல்பட வைக்கின்றது. பிஜேபி ஆளும் மாநிலங்களில் பசுவதை தடுப்புச்சட்டம் இயற்றி ஏழை முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளின் வாழ்வாதாரத்தைப் பறித்ததும், மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகளை சுட்டுக்கொன்றதும், மகாராஷ்டிராவில் லட்சக்கணக்கான விவசாயிகளை தற்கொலை செய்துகொள்ள காரணமாக இருந்ததும் அதன் பார்ப்பனிய சித்தாந்தம் தான். உழைத்து சோறுதின்னும் மக்களை நாய்களை விட கேவலமாகப் பார்க்க அந்தச் சித்தாந்தம் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றது. அதுதான் அவர்களை இயல்பாகவே பெருமுதலாளிகளின் ஏவல் நாய்களாக நடந்துகொள்ள அவர்களை மகிழ்ச்சியோடு இசைய வைக்கின்றது. இதற்கு எதிராக குரல்கொடுக்கும் சக்திகளை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்த வைக்கின்றது.

தென்மாநிலங்களைக் காட்டிலும் வடமாநிலங்களில் தீவிரமாக பரப்பப் பட்டுள்ள இந்து பார்ப்பனிய சிந்தனை அந்த மக்களை ஜனநாயக சக்திகளை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் தடுக்கின்றது. அதற்கு அவர்களின் மொழியும் ஒரு காரணமாக இருக்கின்றது. வடமாநிலங்களில் பெரும்பான்மையாக பேசப்படும் இந்தி மொழி அந்த மக்களை மிக எளிதாக பார்ப்பனிய பயங்கரவாதிகளிடம் சிக்க வைத்து விடுகின்றது. எங்கெல்லாம் இந்தி ஆட்சி மொழியாக இருக்கின்றதோ அங்கெல்லாம் வாழும் இந்து மக்கள் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பலால் மதவெறி பிடித்தவர்களாக மாற்றப்படுகின்றார்கள். அதனால் தான் எந்தவித அரசியல் கண்ணோட்டமும் இன்றி பிஜேபியை அந்த மக்கள் தேர்ந்தெடுக்கின்றார்கள். அப்படி தேர்ந்தெடுத்ததற்கான விலையை இப்போது அந்த மக்கள் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

எனவே ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் தன்னுடைய பார்ப்பனியத்தையும், முதலாளித்துவ அடிவருடித்தனத்தையும் பரப்ப இந்தியையே பெரும்பாலும் நம்பியிருக்கின்றது. அதனால் தான் அது இந்தியை இந்தி பேசாத மாநிலங்கள் மீது திணிப்பதற்குக் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றது. இந்தியைத் திணிப்பதன் மூலம் அது தமிழ்நாட்டை ராஜஸ்தானாக, குஜராத்தாக, மத்தியப் பிரதேசமாக , உத்திரப் பிரதேசமாக மாற்றப் பார்க்கின்றது. அப்படி மாற்றிவிட்டால் நாளை தமிழ்நாட்டில் உள்ள ரேஷனில் மானிய விலையில் கிடைக்கும் பொருளை மட்டுமே நம்பி உயிர்வாழும் கோடிக்கணக்கான மக்களின் வீடுகளிலும் பிச்சைக்காரர்கள் என்று எழுதிப் போட்டு விடுவார்கள் இந்தப் பார்ப்பனக் கைக்கூலிகள்.

உழைத்துச் சோறு தின்னும் ஏழை எளிய மக்களை பிச்சைக்காரர்களைவிட மோசமாக நடத்தும் இந்த பிஜேபி அரசு தமிழ்நாட்டுக்கு வந்தால் என்ன ஆகும் என்பதை தமிழ்மக்கள் அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் யோக்கியதையைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். வீடுகளில் நம்மை பிச்சைக்காரன் என்று எழுதிப் போடுவதையே தன்மானம் உள்ள எந்த மனிதனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால் இவர்கள் அத்தோடு கூட நிற்க மாட்டார்கள். உங்கள் வீட்டு பெண்கள் மலம் கழிப்பதைக் கூட புகைப்படம் எடுத்து நடு ரோட்டில் கட்அவுட் வைத்துவிடுவார்கள் இந்த மானங்கெட்ட அயோக்கியர்கள். இதுதான் ராம ராஜ்ஜியத்தின் யோக்கியதை. ரவுடி ராஜ்ஜியத்தின் யோக்கியதை.

- செ.கார்கி