1967ம் ஆண்டு வாக்கில் மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்தில் இந்திய வரைபடத்தில் கூட காணாத சின்னஞ்சிறு கிராமமாக இருந்த பகுதியே நக்சல்பாரி. கரிபாரி, பன்சிதேவா ஆகியவை அக்கம்பக்க கிராமங்கள். வடக்கே நேபாளம்; கிழக்கே சிக்கிம், பூடான்; தெற்கே வங்கதேசம் (அன்றைய கிழக்கு பாகிஸ்தான்)... இவற்றுக்கு இடையே வடகிழக்கு இந்தியாவை இணைக்கும் மெல்லிய கழுத்துப் பகுதியில் ஓடும் ‘மெச்சி’ ஆற்றின் கரையில் அமைந்திருந்த நிலப்பரப்பே நக்சல்பாரி.
இங்கிருந்த விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் சந்தால், ராஜபான்ஷி, ஒரேயன் ஆகிய பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். விதை, ஏர், மாடு ஆகிய அனைத்தையும் கொடுத்து, விளைச்சலில் பெரும் பங்கை குத்தகையாக விழுங்கிக் கொண்டிருந்தவர்கள் ஜோத்திதார் எனப்படும் நிலப்பிரபுக்கள். இந்த ஜோத்திதார்களின் ஆதிக்கத்துக்கு எதிராக ஆரம்பம் முதலே நக்சல்பாரி விவசாயிகள் போராடி வந்திருக்கிறார்கள்.
1951 - 54 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு சிறு சிறு போராட்டங்கள் நடந்துள்ளன. சங்கமாகவும் கம்யூனிச இயக்கத்தின் கீழும் நக்சல்பாரி மக்கள் அமைப்பாக அணி திரண்டுள்ளனர். 1955 - 57 ஆண்டுகளில் நடந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தில் தங்களையும் இவர்கள் இணைத்துக் கொண்டனர்.
தொழிலாளர்கள் தலைமையில் விவசாயிகள் திரளவும், தொழிலாளர் - விவசாயிகள் கூட்டணி உருவாகவும் புறச்சூழலும் நிலப்பரப்புமே காரணமாக அமைந்தன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தேயிலைத் தோட்டங்களை வைத்திருந்த முதலாளிகள், தோட்டத் தொழிலாளர்களையே தங்களது விவசாய விளைநிலங்களில் குத்தகைதாரர்களாகப் பயன்படுத்தினர். நில உச்சவரம்புச் சட்டம் வந்தபோது விவசாய நிலங்களையும் தேயிலைத் தோட்டம் என்று கணக்குக் காட்டி ஏமாற்றினர்.
இது தவிர நினைத்த போதெல்லாம் தோட்டத் தொழிலாளர்களை முதலாளிகள் வேலை நீக்கம் செய்தனர். மறுபுறம் ஜோத்திதார்கள் பெருமளவு விவசாயிகளைத் தமது குத்தகை நிலத்திலிருந்து வெளியேற்றினர். இவற்றை எல்லாம் எதிர்த்து போராடி வந்த நக்சல்பாரி விவசாயிகளின் போர்க்குணம் 1967ல் உச்சத்தைத் தொட்டது.
இந்திய வரலாற்றில் 1967ம் ஆண்டுக்கு இருக்கும் முக்கியத்துவம் வேறு எந்த ஆண்டுக்கும் இல்லை. ஏனெனில் 1947க்கு பிறகு இந்தியாவை ஏகபோகமாக ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி, எட்டு மாநிலங்களில் வீழ்த்தப்பட்டது அப்போதுதான். அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் 14 கட்சிகள் அடங்கிய ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. வங்காள காங்கிரசின் தலைவர் அஜய் முகர்ஜி முதலமைச்சராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜோதிபாசு, போலீஸ் அமைச்சராகவும் பதவி ஏற்றார்கள்.
‘நில உச்சவரம்புச் சட்டம் தீவிரமாக அமுலாக்கப்பட்டு உபரி நிலங்களைக் கைப்பற்றி உடனடியாக கூலி, ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்’ என தேர்தலுக்கு முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. நிலம் மற்றும் வருவாய்த்துறை அமைச்சராகப் பதவியேற்ற அரே கிருஷ்ண கோனார், அதையே உறுதிசெய்ததோடு, ‘நில விநியோகம் வெற்றியடைய வேண்டுமானால் அமைப்பாகத் திரண்ட விவசாயிகள் கீழிருந்து ‘முன் முயற்சி’ எடுக்க வேண்டும்’ என முழங்கினார்.
ஒரு பேச்சுக்காக அவர் இப்படிச் சொன்னதே வினையாக மாறியது. கட்சி தங்களைக் காப்பாற்றும் என நம்பி அப்பகுதி விவசாயிகள் நிலங்களைக் கைப்பற்றத் தொடங்கினார்கள். மாநில அரசு இதை எதிர்த்தது. அதைக் குறித்து கவலைப்படாமல் ஏப்ரல் மாதத்திற்குள் அந்த வட்டாரத்திலிருந்த எல்லா கிராமங்களிலும் விவசாயிகள் கமிட்டி அமைக்கப்பட்டன.
பட்டாக்கள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றுடன் நிலப்பிரபுக்களின் பத்திரங்களும் எரிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் ஆயுதங்களும், துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. வில்லும் அம்பும், கோடரியும், துப்பாக்கிகளும் ஏந்திய விவசாயிகள் நிர்வாகத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். மே 23, 1967 அன்று நக்சல்பாரி விவசாயிகளுக்கு எதிரான அரசின் போர் தொடங்கியது.
தங்களது தலைவர்களைக் கைது செய்ய முயன்ற போலீஸ் படையை ஆயுதம் தாங்கிய விவசாயிகள் திருப்பித் தாக்கினர். ஒரு காவலர் கொல்லப்பட்டவுடன் பின்வாங்கிய போலீஸ் 25ம் தேதி பெரும்படையுடன் வந்து மீண்டும் தாக்கியது. ஆறு பெண்கள், இரு குழந்தைகள் உள்ளிட்ட 10 பேரைக் கொன்றது.
விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கட்சியும் இந்தியா முழுக்க பிளவுபட்டது. மாநிலத் தலைமையில் இருந்தவர்கள் கட்சியின் நிலையை ஆதரித்தனர். ஆனால், அடிமட்டத் தொண்டர்கள் நக்சல்பாரி உழவர் எழுச்சியை ஆதரித்தார்கள். அணி திரண்டார்கள்.
இதன் விளைவுதான் அடுத்த இரு ஆண்டுகளில் சாரு மஜும்தார், கனு சன்யால் தலைமையில் தொடங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்).
எனது மதிப்பீடு:
இன்னும் சரியாக ஒன்றை நக்சல்பாரி இயக்கம் சரியாவேபறை சாற்றியது.இ.பொ.க மனமறிந்தே புரட்சிக்குத் துரோகம் இழைத்துவிட்டது.இபொக( மா.லெ) யின் பெரும் பங்கு இரண்டு1) அது பாராளுமன்றப் பாதையை முற்றாக நிராகரித்து புரட்சிப்பாதையை உயர்த்திப் பிடித்தது2) இந்தியாவை தேசிய இனங்களின் சிறைக் கூடம் என வரையறுத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடித்தது.
இந்த இரண்டு அடிப் படைகளில் ஊன்றி நின்று பல்வேறு தத்துவார்த்த விவாதங்களை நடத்தி இந்தியாவின் சமூக அமைவைதரகுபார்ப்பனிய ஏகாதிபத்தியம் என்றும் இங்கு தேசிய இன விடுதலைப் புரட்சியோடு இணைந்தே ஜனநாயகப் புரட்சிநிறைவேறும் என்று இபொக( மா.லெ) த.நா.அ.கு என்ற குழு வரையறுத்து தேசிய இனங்களுக்கு ஒரு கட்சிதான்கட்டவேண்டும் என நிறுவியது. பார்ப்பனியத்தின் இரண்டுஒடுக்குமுறை முகங்களான தேசிய இன ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை இரண்டையும் அடையாளம் கண்டது. பெரியார், அம்பேத்கர் போன்றபார்ப்பனிய எதிர்ப்புப் போராளிகளின் வரலாற்றுப் பாத்திரத்தை சுய விமர்சனத்தோடு மதிப்பீடு செய்து முன்வைத்தது. தன்னை தமிழ்நாடு மார்க்சிய லெனியக் கட்சி என்று அமைத்துக் கொண்டது.
நக்சல்பாரி இயக்கக் காலகட்டத்தில் தன்னை கட்சியோடு இணைத்துக் கொண்டதோழர் கார்முகில் அவர்கள் இந்த வரலாற்றை முன்னெடுத்து வருகிறார். இவ்வாறு நக்சல்பாரி எழுச்சியின் 50 ஆண்டுகால வளர்ச்சி இந்தியாவில் புரட்சிகரக் கோட்பாட்டை வகுத்தததில் பெரும் பாய்ச்சலைஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோட்பாடுகளை பற்றி நின்று செயல்படும் ஒரு கட்சி அமைப்பைக் கட்டமைப்பதேஇன்று புரட்சி இயக்கத்தின் அடுத்த தேவையாக உள்ளது.
தோழர் தியாகு வரலாறை மறைக்கலாமா?
மாபெரும் நக்சல்பாரி இயக்கத்தின் அரை நூற்றாண்டு நிறைவுறும் வேலையில் அதன் சரியான, தவறான நிலைகளை ஆய்வு செய்து முன்னேற வேண்டிய பொறுப்பு புரட்சியை நேசிக்கும் அனைவருக்கும் உள்ளது.
இந்த நேரத்தில் தோழர் தியாகு அவர்கள் ஒரு மதிப்பீட்டை முன் வைக்கின்றார். 1967 நக்சல்பாரியில் நடந்தது புரட்சியல்ல, கலகம் என்கிறார்.
இது ஒரு புதிய கண்டு பிடிப்பு. பாராளுமன்ற புதைசேற்றிலிருந்து விடுபட்ட இயக்கம் குறிப்பாக சாரு தலைமை இடது தீவிர வியத்திற்கு பலியானது. இடது தீவிரயத்தால் கட்சி மக்களிடமிருந்து தனிமைப்பட்டதுடன் பல குழுக்களாகவும் உடைந்து சிதறியது.
சிதறிய பல்வேறு குழுக்களும் இடது தீவிரவிய அழித்தொழிப்பைக் கைவிட்டது. அதில் ஒரு முக்கியமான குழுவாக இருந்த வினோத்மிஸ்ரா குழு ஓரளவு மக்கள் தளத்தைப் பெற்றவுடன் 1992களில் நாடாளுமன்றப் பாதையை ஏற்று சி.பி.எம் கட்சியின் கூட்டாளியாக மாறியது.
மக்கள் யுத்தக்குழு தன்னை மாவோயிஸ்ட் கட்சியாக மாற்றிக் கொண்டு சத்திஸ்கர், ஜார்ஜண்ட் மலைப்பகுதி மக்களை மையப்படுத்தி ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகிறது.
தமிழ் நாட்டில் மக்கள் திரள்பாதையை முன் வைத்து உருவான த.நா.அ.கு இபொக (மா.லெ)1992களில் இந்திய சமூகத்தைப்பற்றிய வரையறுப்பிலும் பல்தேசிய இன நாட்டில் கட்சி கட்டுவதில் இருந்த கோட்பாட்டுச் சிக்கலைத் தீர்த்துள்ளது. ஒடுக்கும் தேசிய இனத்திற்கும், ஒடுக்கப்படும் தேசிய இனத்திற்கும் உள்ள வேறுபட்ட கடமைகளை ருசிய அனுபவத்திலிருந்து தொகுத்து முன்வைத்துள்ளது. இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனம் இல்லை. இங்குள்ள அனைத்து ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் தனக்கான தனித்தனி கட்சிகளைக் கட்டி புரட்சியை முன்னெடுக்க வேண்டும்.
இந்தியா முழுமைக்கும் ஒரே கட்சி, ஒட்டுமொத்தப் புரட்சி என்பது பொருளாதாரவாதமேயாகும். இந்திய சமூகம் என்பது தேசிய சமூகம் அல்ல, அரசு சமூகமேயாகும்.இந்தியா முழுவதையும் இணைப்பது ஒரு பொது மொழியல்ல,பார்ப்பனிய சாதியக் கட்டமைப்பே ஆகும்.
இந்தியாவை தேசம் அல்ல, மாறாக தரகு பார்ப்பனிய ஏகாதிபத்தியம் என வரையறுத்தது. பரந்து விரிந்த இந்தியச் சந்தையை ஆளுமை செய்யவே டாடா, பிர்லா, அம்பானி போன்ற. முதலாளிகளுக்கு இந்திய ஒருமைப்பாடு தேவைப் படுகிறது.
பார்ப்பனியத்தின் சாதிய ஒடுக்குமுறை, தேசிய ஒடுக்குமுறை இரண்டையும் அடையாளப்படுத்தியது.தேசிய விடுதலை,உழவர்புரட்சித திட்டத்துடன் சாதிஒழிப்புப் பற்றிய கோட்பாட்டை முன்வைத்தது என தோழர் கார்முகில் அவர்கள் செய்த கோட்பட்டு பங்களிப்பை தோழர் தியாகு மறந்து விட்டாரா? அல்லது மறைக்கிறாரா?
ஒரு நக்சல்பாரி இயக்கத்தோடு இருந்தவர் என்ற முறையில் அதன் புரட்சிகர சாரத்தைக் காப்பாற்றுவதே நக்சல்பாரி ஈகியர்க்கு தியாகு போன்றவர்கள் செய்யும் நன்றிக் கடனாகும்.
சிந்திய ரத்தம் வீண்போகாது, அறிவியல் உண்மையை மறைக்க என்றும் முடியாது!
- கி.வே.பொன்னையன்