நக்சல்பாரிக்குப் பின்பு 50 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்டிதல் நேப்பாளத்தின் எல்லைக்கு அருகே உள்ள அறியப்படாத அந்தக் கிராமம் இந்தியா அரசியலுக்குள் புயலாக நுழைந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.
அது ஒரு மாறுபட்ட விவசாயிகள் எழுச்சி. அரசு அதிகாரத்தில் உள்ள வர்க்கக் கட்டமைப்புக்கு ஏற்ற வகையில் நில உறவுகளும் மாற்றப்பட வேண்டும் என்ற கேள்வியை அது எழுப்பியது.
கம்யூனிஸ்டுகளால் தலைமை தாங்கி நடத்தப்பட்ட அந்த இயக்கம் துவங்கிய உடனேயே அதனை நொறுக்கி விட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் அரசு செய்தது. காவல் கொலைகள், போலி என்கவுண்டர்கள், இளம் செயல் வீரர்களையும் அவர்களின் குடுமபத்தினர்களையும் கூட்டமாகக் கொல்வது, கொடூரமான சித்திரவதை, விசாரணையே இல்லாமல் கண்மூடித்தனமாக காலவரையறையற்று சிறையில் அடைப்பது- இன்று வழக்கமாகிப் போன இந்த அரசப் பயங்கரவாத நடைமுறை, யதார்த்தத்தில் பார்த்தால் நக்சல்பாரியில்தான் துவங்கியது.
கெடூரமான ஒடுக்குமுறைகளுக்கு அக்கம் பக்கமாக நக்சல்பாரி இயக்கத்தைத் தீய ஒன்றாக காட்டுவதற்கு திட்மிட்ட வகையில் முயன்றது. நக்சலிசம் என்றால் பயங்கரவாதம் என்றது. தேசப் பாதுகாப்புக்கான உள்நாட்டு ஆபத்து என்றது.
இருந்தபோதும், நக்சல்பாரி எழுச்சியின் 50 ஆண்டின் போது, பாதீய ஜனதா கட்சியின் தலைவர் அமீத் ஷா பெருத்த ஆரவாரத்துடன் நக்சல்பாரிக்கு வருகை தருவதைப் பார்க்கிறோம். வங்க (செயல் திட்டத்)திற்குள் அவர் நுழைவதற்கான துவக்கப் புள்ளியாக நக்சல்பாரியை ஆக்கிக் கொள்கிறார். இதில், சுவையான விஷயம் என்னவென்றால், அமித் ஷாவின் வங்கப் பயணம் முடிந்த உடனேயே, நக்சல்பாரி கிராமத்தில் அவருக்கு விருந்தளித்த தம்பதியினர் திருணாமுல் காங்கிரசுக்கு கட்சி மாறிவிட்டன!
மத்தியில்- மாநிலத்தில் ஆளும் கட்சிகளுக்கு இடையில் நக்சல்பாரி குறித்து நடக்கும் குடுமிப்பிடி சண்டை ஒரு விஷயத்தைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது: அதீத ஒடுக்கு முறை- பயங்கரவாதிகள் என்ற பிரச்சாரத்திற்குப் பின்னும், 'நக்சல்பாரியின் கதை முடிந்துவிட்டது' என்று ஆட்சியில் இருந்தவர்கள் மாறி மாறிச் சொல்லிச் சென்ற போதும், நக்சல்பாரி ஆற்றல் மிகு ஓர் எழுச்சியின் அடையாளமாக இன்றும் வாழ்கிறது என்பதைத்தான் இவையெல்லாம் காட்டுகின்றன.
நக்சல்பாரியின் உள்ளுயிர்ப்பு எது?
நாம் குறியீடுகளைத் தாண்டி, நக்சல்பாரியின் வரலாற்றுச் சாரத்துக்குச் செல்வோம். அது நிகழ் காலத்திலும் ஏற்படுத்தும் அதிர்வலைகளைக் காண்போம். தற்போது தொழில் நிறுவனங்கள் நிலப்பறி செய்வதை எதிர்த்து ஆதிவாசிகளும் விவசாயிகளும் தன்னெழுச்சியாகப் போராடுவது போன்ற, விவசாயிகளின் தன்னெழுச்சியான, திடீரென்று எழுந்த போராட்டடம் அல்ல நக்சல்பாரி.
தெபாக மற்றும் தெலுங்கானாவின் விவசாயிகளின் போராட்டங்களை மறு அவதாரம் எடுக்க வைப்பதற்காக கம்யூனிடுகள் மேற்கொண்ட, உணர்வுபூர்வதான, அமைப்பு ரீதியான, தொடர்ச்சியான, அர்ப்பணிப்பு மிக்க முயற்சி அது. 1940களில், பிளவுபடாத வங்கத்தில் நிகழ்ந்த விவசாயிகளின் புரட்சிகர போராட்டமே தெபகா இயக்கம். மதங்களின் அடிப்படையில் சமூகம் பிளக்கப்பட்ட சூழலில் அப்போராட்டம் காட்டிய வர்க்க உணர்வும், போர்க்குணமும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. நக்சல்பாரியைக் கட்டியமைத்த சாரு மஜூம்தாரும், அவரின் சக அமைப்பாளர்களும், தெபாக போராட்டத்தின் செயல் வீரர்களாக இருந்தவர்கள். நக்சல்பாரியும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் அந்த புகழ்மிகக் விவசாயப் போராட்டத்தின் அங்கங்களாக விளங்கிய பகுதிகள்.
இந்த உணர்வு பூர்வமான முயற்சிகளுக்கு மத்தியில் கம்யூனிச இயக்கத்துக்குள் கூர்மையான கருத்தியல் போராட்டம் நடந்துகொண்டிருந்தது. விவசாயிகள் பிரச்சனையும், இந்தியாவில் விவசாயப் புரட்சிக்கான உள்ளாற்றலும் ஒட்டுமொத்தமாக கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டன என்ற சீரிய பார்வையும் கம்யூனிச இயக்கத்துக்குள் இருந்து வந்தது.
தெலுங்கானா போராட்டத்தை கம்யூனிஸ்ட் தலைமை அதிகாரபூர்மாகத் திரும்பப் பெற்ற பின்னர், இயக்கத்தின் நாடாளுமன்றம் சாராத வடிவத்தை பிரதானமாக, நாடாளுமன்ற நோக்குநிலைக்குள் கீழ்படுத்திய பின்னர் இந்த விவாதம் மேலும் கூர்மையடைந்தது.
இந்த கருத்தியல்- அரசியல் விவாதம் பற்றிய தெளிவான அகப்பார்வையை சாரு மஜூமதாரின் 'எட்டு ஆவணங்கள்' அளிக்கின்றன.
நக்சல்பாரியின் வேர்கள்
பல சமயங்களில் நக்சல்பாரி என்பது சீனாவின் கலாச்சாரப் புரட்சி அனுபவத்தின் நகல் என்று சொல்லப்படுவதால், இந்திய கம்யூனிச இயக்கத்தின் பின்னணியிலும், அதற்குள் வேர் கொண்டதாகவும் நக்சல்பாரி இருப்பதை வலியுறுத்துவது அவசியமானதாக இருக்கிறது.
நக்சல்பாரிக்கான உந்தூக்கம் சீனாவிடமிருந்து கிடைத்தது என்பது உண்மைதான். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நக்சல்பாரியை இந்திய வசந்தத்தின் இடி முழக்கம் என்று குறிப்பிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் சீனத்தின் தலைவர் எம் தலைவர் என்று சொல்லும் அளவுக்குச் சென்றார்கள்.
ஆனால், நக்சல்பாரியின் சாரம் என்னவென்று நாம் கண்டுகொள்ள அதனை நாம், 1960களின் கொந்தளிப்பான நிலைமைகளில் - இந்திய ஆளும் வர்க்கத்தின், அரசின் நெருக்கடி அதிகரித்தது, இந்திய மக்களுக்கான புரட்சிகர வாய்ப்பாக அதனை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கம்யூனிச இயக்கத்திற்குள் இருந்த பெரு விருப்பத்தில்- பொருத்திப் பார்க்க வேண்டும்.
அடுத்தடுத்து வந்த இரண்டு யுத்தங்கள் மக்களின் மீது கடும் பொருளாதார சுமையைச் சுமத்தியிருந்தன. மிகப் பெரும் அளவிலான உணவுப் பற்றாக்குறை, அதிகரிக்கும் விலைவாசி, தேங்கிப்போன விவசாயம், அதிகரிக்கும் வேலையின்மை ஆகியவற்றின் மத்தியில் எழுந்த வெகுஜன அதிருப்தியில், சுதந்திரப் போராட்ட காலத்திய கனவுகள் கரைந்துபோயிருந்தன.
நேருவும், அவருக்கு அடுத்து பதவியேற்ற லால் பகதூர் சாஸ்திரியும் இறந்த பின்னர், தலைமை மாற்றம் என்ற குழப்பமான காலத்துக்குள் காங்கிரஸ் சிக்கிக்கொண்டது. அதன் தேர்தல் சரிவு துவங்கிவிட்டதை, 1967ல் ஒன்பது மாநிலங்களில் பதிவியிழந்தது காட்டியது. மேற்கு வங்கத்திலும், கம்யூனிஸ்டுகள் பெரும் பகுதியாக இருந்த கூட்டணியால் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில்தான் நக்சல்பாரி நிகழ்ந்தது. அந்த விவசாயக் கலகத்தை நொறுக்கிவிட அரசு முயன்றபோது, நக்சல்பாரி அலையை நாடெங்கும் பரப்பவும், 1970களை இந்திய மக்கள் விடுதலையின் பத்தாண்டுகளாக மாற்றவும் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் அழைப்பு விடுத்து அரசின் முயற்சியை எதிர்கொண்டனர்.
நக்சல்பாரி துவங்கிய இரண்டு ஆண்டுகளில், நக்சல்பாரியின் பிதாமகர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ஐ ஸ்தாபித்தார்கள். அந்தப் புதிய கட்சிக்கு புரட்சிகர கம்யூனிஸ்டுகள்- அணிகள் மத்தியிலிருந்து அளப்பரிய ஆதரவும் வரவேற்பும் கிடைத்தது. மிக வேகமாக இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. தனக்கு முந்தைய கம்யூனிஸ்ட் கட்சிகளான CPI - CPI (M)க்கு நேர் எதிராக வளர்ந்து நின்றது.
சிபிஐ கட்சி, மாபெரும் கிளர்ச்சியான தெலுங்கானாவை நடைமுறையில் கைவிட்டிருக்க நக்சல்பாரித் தீயைப் போற்றிப் பாதுகாத்து பரப்புவது என்ற அறிவிக்கப்பட்ட இலக்குடன் சிபிஐ எம்எல் உருவாக்கப்பட்டது. சிபிஐ கட்சி மேலிருந்து கீழ் வரை பிளந்ததால் சிபிஐ எம் கட்சி உருவானது. சிபிஐ எம்மை உருவாக்கியவர்கள் பிளவுபடாத சிபிஐ கட்சியின் மூத்தத் தலைவர்களாக இருந்தவர்கள். சிபிஐ எம்எல் கட்சியை உருவாக்கியத் தலைவர்கள் அனைவரும் அனேகமாக, சிபிஐ எம் கட்சியின் மாவட்டத் தலைவர்களாக இருந்தவர்கள்.
மிகவும் குறிப்பிடத்தக் விஷயம் பின்வருமாறு: சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதற்கான திறவு கோள் விவசாயப் புரட்சிஎன்றும், நிலமற்ற ஏழைகள்தான் விவசாயப் புரட்சியின் தலைமை சக்தி என்றும் சிபிஐஎம்எல் கொண்டிருந்த புரிதலின் காரணமாக, ஒடுக்கப்பட்ட கிராமப்புர ஏழைகள்- அவர்களின் மிகப் பெரும்பகுதி தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள்- பழங்குடிகள் மத்தியில் புதிய கட்சி கூடுதல் ஆதரவு கிடைத்தது.
ஒடுக்கப்பட்ட ஏழைகள் மத்தியில் ஆழமான வேர்கொண்டிருந்தது சிபிஐ எம்எல் கட்சியின் வலுவுக்கும், தாங்கும் திறனுக்குமான ஆதாரமாக இருந்துகொண்டிருக்கிறது. அரசு ஒடுக்குமுறை, அரசின் ஆதரவு பெற்ற பிரபுத்துவ படைகளின் நிலப்பிரபுத்துவ தாக்குதலை எதிர்கொள்வதற்கான ஆற்றலை அது அளிக்கிறது. இதுபோன்ற கொடூரமான ஒடுக்குமுறையைத் தாங்கி நின்று மீண்டுவரும் ஆற்றலை எந்தக் கட்சியும் கொண்டிருக்கவில்லை.
சாருமஜூம்தாரின் கோட்பாடு
சிபிஐ எம்எல் கட்சி தனது துவக்க காலத்தின் பின்பற்றி போராட்ட வடிவங்களின் அடிப்படையில்தான், ஊடக ஆய்வாளர்கள், சிபிஐ எம்எல்-ஐ- அல்லது நக்சலிசம் என்று பிரபலமாக அறியப்படுவதை - இனம் காண்கிறார்கள். 1960ல் நிலவிய நிலமையை புரட்சிக்குச் சாதகமான நிலை என்று சிபிஐஎம்எல் இனம் கண்டது. அந்த அடிப்படையில் புரட்சிதான் நேரடி மற்றும் உடனடி வேலைத் திட்டமாக இருந்தது.
பகுதியளவிலான கோரிக்கைகள், அன்றட வெகஜன வேலைக்கான அமைப்புகள், தேர்தல் தலையீடு என்ற அனைத்தும் பின்னுக்குப் போய்விட்டன. ஆயுதப் போராட்டம் ஒன்றே மையமான விஷயம் என்று ஆனது.
ஆனால், சிபிஐ எம்எல் பரிணாம வளர்ச்சி கண்ட சற்றே நீண்ட காலத்தை உற்று நோக்கினால், எந்தவொரு குறிப்பிட்ட போராட்ட வடிவத்தின் பேரிலும் சிபிஐ எம்எல் மூட நம்பிக்கை வைக்கவில்லை என்பது தெரியவரும். குறிப்பிட்ட ஒரு போராட்ட வடிவத்தின் திறனும் பொருத்தப்பாடும், குறிப்பிட்ட சூழல் மற்றும் புறநிலையைச் சார்ந்தது என்று சிபிஐ எம்எல் கருதுகிறது என்பது தெரியவரும்.
நக்சல்பாரியின் கருத்தியல்- அரசியல் அடித்தளத்தை ஏற்படுத்திய சாருமஜூம்தாரின் எட்டு ஆவணங்கள் எந்த ஒரு போராட்ட வடிவமும் தேவையற்றது என்று புறந்தள்ளவில்லை. ஆயுதப் போராட்டம்தான் அணி திரட்டுவதற்கும் செயல்பாட்டுக்குமான மையமான வடிவம் என்று கைக்கொண்ட போதும், சாரு மஜூம்தான் இராணுவவாதத்தின் ஆபத்து பற்றி எப்போதும் எச்சரித்து வந்தார். அரசியலை ஆணையில் வைக்க வேண்டும் என்றும், மக்களின் முன்முயற்சியைக் கட்டவிழ்த்து விட வேண்டும் என்றும் எப்போதும் வலியுறுத்தி வந்தார்.
1971 தேர்தல் வெற்றி, அதனைத் தொடர்ந்த வங்க தேச போரில் வெற்றி, அதற்குப் பின்பு இந்திரா காந்தி தன்னை வலுப்படுத்திக்கொண்ட சூழலில், மிகக் கடுமையான ராணுவத் தாக்குதலுக்குக் கட்சி ஆளான நிலைமையில், தனது கடைசி கட்டுரையை எழுதிய சாரு மஜூம்தார் ‘சுயேட்சியதிகாரத்துக்கு எதிரான பரந்துபட்ட இடது- ஜனநாயக சக்திகளின் கூட்டமைப்பு‘ பற்றி பேசினார். “மக்களின் நலனே கட்சியின் நலன்“ என்று தன் தோழர்களுக்கு நினைவுபடுத்தினார்.
1970களில் ஏற்பட்ட மிகப் பெரும் பின்னடைவிலிருந்து மீண்டு வருவது கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களுக்கு மாபெரும் சவாலாக இருந்தது. ஒவ்வொரு பின்னடைவின் போதும் நிகழ்வது போல, சில பிரிவினர் முழு இயக்கத்தையும் கைவிட்டு ஒதுங்கினர். நடந்த அனைத்துமே பெரும் தவறு என்று கையை உதறினர். மற்றொரு முனையில் ஆயுதப் போராட்டத்தைக் கண்ணை மூடிக்கொண்டு தொடர்ந்தவர்கள் இருந்தனர். அதுதான் ஒரே வடிவம் என்று வாதிட்டனர். அதன் விளைவாக, சிபிஐ எம்எல் நீரோட்டத்திலிருந்து விலகி, தங்கள் அமைப்பின் பெயரை சிபிஐ (மாவோயிஸ்ட்) என்று மாற்றிக்கொண்டனர்.
மத்திய இந்தியாவின் வன பிரதேசங்களில் மாவோயிஸ்ட்டுகள் தங்கள் இடத்தைக் கண்டுகொண்டனர். ஆனால், புத்தியிர் பெய்ய சிபிஐஎம்எல், பீகாரிலும், ஜார்கண்டிலும் உள்ள ஒடுக்கப்பட்ட கிராமப்புர ஏழைகள் மத்தியில் ஆழமாக வேர்விட்டு அவர்களின் ஆற்றல் மிகு போராட்டங்களின் மூலமும், முற்போக்கான இளைஞர் பெண்களின் அறுதியிடலின் மூலமும் தன்னைத் தக்க வைத்துக்கொண்டது. வெகு மக்கள் ஆதரவின் காரணமாக, பீகார் மற்றும் ஜார்கண்டில் தொடர்ச்சியான தேர்தல் வெற்றிகளைப் பெறவும், நீடித்த அரசியல் தலையீடுகளை செய்யவும் முடிந்தது.
அரசுடன் மோதல் நடந்த துவக்க கட்டத்தில், அப்போதுதான் சிறகு விரிக்கத் துவங்கியிருந்த கட்சிக்கு தனது அனுபவத்தை மதிப்பிடவும், பொருத்தமான பாடங்களைக் கற்றுக்கொள்ளவும் நேரமின்றி இருந்தது. பழைய தவறுகளைத் திருத்திக்கொள்ள ஆரம்பித்தன் காரணமாக, புதிய போராட்ட வடிவங்களை இனம் காண உதவியதுடன், ஒடுக்கப்பட்ட- சுரண்டப்பட்ட மக்கள் தங்களின் ஒட்டு மொத்த உரிமைகளையும் பெறப் போராடி அறுதியிட்டுக்கொள்ள வழி வகுத்தது.
நக்சல்பாரியின் உயிர்
வரலாற்றுச் சிறப்பு மிக்க எழுச்சியின் 50வது ஆண்டை நாம் அனுசரிக்கும் இச்சமயத்தில், அந்த இயக்கம் அளித்த கொடைகளையும் அவற்றின் நிகழ்கால பொருத்தப்பாட்டையும் காண்போம். சில குறிப்பிட்ட அம்சங்கள் நமது கவனத்தைக் கோருகின்றன.
ஒடுக்கப்பட்ட நிலமற்றவர்களின் வேதனையையும் கோபத்தையும் ஆற்றல் மிகு விவசாயக் கலகமாக மாற்றியதுதான் நக்சல்பாரி. இப்போது தீவிரமாகியிருக்கும் விவசாய நெருக்கடி நிலைமையில், நக்சல்பாரியின் செய்தி வலுவாகவும், உரக்கவும் அதிர்வலைகளை உருவாக்குவதைத் தவிர பிறிதொன்று நடக்காது. விவசாயிகளின் வலி உயிர்களைப் பலிகொள்கிறது. நூறாயிரக் கணக்கான விவசாயிகள், கடன்களால் பாதிக்கப்பட்டு தங்களின் உயிரை மட்டும் பலியிடவில்லை, மாறாக, நிலக் கொள்ளைக்கு எதிரான போரில், அல்லது, விவசாயிகளுக்கு எதிரான அநீதியின்போது, போராட்டத் தீயையும் மூட்டியெழுப்புகிறார்கள்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் தீவிரத்துடனும், எண்ணிக்கையோடும், தியாக உணர்வோடும் ஒப்பிடும் அளவுக்கான முற்போக்கு இளைஞர்களின் எழுச்சிதான் நக்சல்பாரி. ஆயிரக் கணக்கான நகர்புர இளைஞர்கள் புரட்சிகர அரசியலில் குதித்தனர். கிராமப்புரங்களுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். ஒடுக்கப்பட்ட கிராமப்புர மக்களோடு ஒன்று கலந்தார்கள். ‘மக்களே முதன்மை’ என்ற தேசபக்த மந்திரத்தை உச்சரித்தனர். நக்சல்பாரியின் இந்த உயிர் இப்போது பல்கலைக்கழக வளாகங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. உலக வர்த்தக நிறுவனத்தின் கட்டளையின்படியான கல்வி வணிகமயமாக்கலும், காவி அடவாடி என்ற இரட்டைத் தாக்குதலால் தொடுக்கப்படும் யுத்தத்தின் விளைவாக ஒவ்வொரு பல்கலைக்கழக வளாகமும் போர்க்களமாக மாறுகிறது.
தேசியம் என்றால் தீவிரமான இந்து பெரும்பான்மை வாதம் என்று மறு விளக்கம் அளிக்கப்படும் இந்த நாட்களில், பன்மைப் பண்பாடு கொண்ட இந்தியாவில், ஒரே தன்மைகொண்ட இந்தியா என்று இந்தியாவை மொழுக்கென்றாக்கும் பாசிச திட்டத்திற்கு எதிரான ஆயுதமாக ‘மக்களே முதன்மையானவர்கள்‘ என்ற நக்சல்பாரியின் முழக்கமே பலன் தருவதாக இருக்கும்.
நக்சலிபாரியின் ஆற்றல் மீண்டும் தேவைப்படுகிறது
இந்திய வரலாறு குறித்த ஒரு புதிய அணுகுமுறையை நக்சல்பாரி உருவாக்கியது. ஆட்சியாளர்களின் கண்களைக் கொண்டு வரலாற்றைப் பார்ப்பது என்ற செல்வாக்கு செலுத்திய சிந்தனை முறையோடு மோதல் நிகழ்த்தி ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றை நோக்கிப் பார்வையைத் திருப்பியது. வியந்தேற்றப்படாத ஆதிவாசிக் கிளர்ச்சிகளும் , விவசாயப் பேரெழுச்சிகளும் வரலாற்றுப் பக்கங்களில் குடியேற ஆரம்பித்தன. ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறு தன் வருகையைப் பிரகடனம் செய்தது.
நாம் இன்று இந்தியாவின் வரலாற்றின் மீது மற்றொரு முனையிலிருந்து போர் தொடுக்கப்படுவதைப் பார்க்கிறோம். பண்டைய வரலாற்றை அகற்றிவிட்டு புராணக் கதைகள் அரங்கேறுகின்றன. மத்திய கால வரலாற காலனிய- மதவெறி வகையினங்கள் ஆக்கப்படுகின்றன. நவீன வரலாலேறோ.. அடித்து நொறுக்கு - கொள்ளையடி என்பதாக ஆகிக்கொண்டிருக்கிறது.
காந்தி முதல் சுபாஸ் சந்திரபோஸ் வரை, பகத்சிங்- அம்பேத்கர் ஈடாக, நவீன இந்தியாவின் பிம்பங்கள் கூட கொள்ளையடிக்கப்படுகின்றன. காவி ஆட்சியாளர்கள் தங்களின் வரலாற்றுப் பற்றாக்குறையை ஈடுகட்டிக்கொள்ளத் துடிக்கிறார்கள்!
மிகவும் முக்கியமானது என்னவென்றால், இந்தியக் கம்யூனிச இயக்கத்தை புரட்சிகரமானதாக்கிய கணம்தான் நக்சல்பாரி. பொருளாதாரத் தளத்தில் அல்லது நாடாளுமன்ற அரசியலுக்குள் சுருக்கப்படாத, ஆனால், சமூகத்தின் ஒவ்வொரு கணுவில் இருக்கும் ஒடுக்குமுறையையும்- அநீதியையும் போரிட்டு ஒழிக்கின்ற, புதிய போராட்ட எழுச்சிக்கு நக்சல்பாரி வடிவம் தந்தது. வர்க்கப் போராட்டத்தின் புதிய நடைமுறைத் தத்துவத்தில் (praxis) சாதி- வர்க்கம், பாலினம், இனம், தேசிய இனம், மொழி, பண்பாடு என்ற ஒவ்வொன்றும் அவற்றுக்கே உரிய சரியான இடத்தைக் கண்டடைந்தன.
இன்று ஆர்எஸ்எஸ் படை ஆட்சியில் இருக்கிறது. இந்தி- இந்து- இந்துஸ்தான் என்ற வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. தொழில் நிறுவனக் கொள்ளை- மதவெறி துருவச் சேர்க்கை என்ற இரட்டை தேர்ச்சக்கரத்தின் கீழ் இந்தியாவைத் துவைத்துப்போட முயற்சிக்கிறது. இந்த சூழ்நிலையில், நக்சல்பாரியின் புரட்சிகர ஆற்றலும் தாக்கப் பிடிக்கும் திறனும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தேவைப்படுபவை ஆகின்றன.
(தமிழ் வடிவம் சி.மதிவாணன்)
ஆங்கிலத்தில் படிக்க:
http://www.catchnews.com/politics-news/50-years-of-naxalbari-with-sangh-in-power-a-new-political-energy-needed-now-60954.html