உலகின் மிக வலிமையான இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்றால் அதன் எதிராளிகளுக்கு எவ்வளவு வல்லமை நிறைந்த படைகளும் ஆயுதங்களும் எல்லாவற்றிக்கும் மேலாக மனவலிமையும் வேண்டும். துப்பாக்கிகளும், கண்ணீர்ப்புகை குண்டுகளும் பெலட்குண்டுகளும் இடைவிடாமல் வெடித்து அச்சுறுத்திக்கொண்டே இருக்கும் ஒரு கலவரச்சூழலில் எதிராளி அவர்களைவிட வலிமையான ஆயுதத்துடன் போராடுவது ஒன்றுதான் அவர்களைத் தற்காத்துக்கொள்ள ஒரே வழி. ஆனால் வெறும் கற்களுடன் களத்தில் இறங்கி அதையே ஆயுதமாக மாற்றி வலிமையான இந்திய இராணுவத்தைத் தாக்குகின்றார்கள் என்றால் இந்திய இராணுவத்தின் மீதும் இந்திய அரசின் மீதும் காஷ்மீர் மக்கள் வைத்திருக்கும் வெறுப்பின் அளவை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுவரை ஏறக்குறைய 70000 மேற்பட்ட காஷ்மீர் மக்களை இந்திய ராணுவம் கொன்றுபோட்டிருக்கின்றது. 10000 மேற்பட்ட மக்கள் காணாமல் போய் உள்ளார்கள். இது இல்லாமல் நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல்வன்முறைக்கு உட்படுத்தியும் ஆயிரக்கணக்கான மக்களை மூடமாக்கியும் இந்திய ராணுவம் அங்கே தனக்கு வழங்கப்பட்ட ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தைப் பயன்படுத்தி நடத்தியிருக்கின்றது.

இப்படிப்பட்ட கொலைவெறிபிடித்த இராணுவத்திற்கு என்ன மரியாதையைக் கொடுக்க வேண்டுமோ அதைத்தான் காஷ்மீர் மக்கள் அங்கே கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். கல்லூரியில் படிக்கும் பெண்கள் எல்லாம் தெருவுக்குவந்து வலிமையான ராணுவம் என்று பீறிட்டுக்கொள்ளும் இந்திய இராணுவத்தைக் கற்களால் அடித்து விரட்டுகின்றார்கள். சிறுவர்கள் கூட ராணுவடாங்கிகள் மீது கற்களை வீசும் அளவுக்கு இந்திய ராணுவத்தின் மீதான வெறுப்பு உச்ச வடிவத்தை அங்கே அடைந்திருக்கின்றது. இந்திய அரசின் துரோகத்தை இனியும் சகித்துக்கொள்ள அந்த மக்கள் ஒருநொடி கூட தயாராக இல்லை. சுதந்திர காஷ்மீர் என்பதே அவர்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது. அதற்குக் குறைவான எதையும் அவர்கள் ஏற்பதற்குத் தயாராக இல்லை. இந்திய அரசு இனியும் காஷ்மீரை வன்முறையான வழிகளைப் பயன்படுத்தி அச்சுறுத்தி பிடித்துவைத்திருக்க முடியாது என்பதைத்தான் நடப்பு நிலைமைகள் நமக்குக் காட்டுகின்றன. எந்தவித மனிதவிழுமியங்களும் அற்ற ஒரு கொலைகார பாசிச கும்பலாகவே காஷ்மீர் மக்கள் இந்திய ராணுவத்தைப் பார்க்கின்றார்கள். அதை எப்பாடுபட்டாவது காஷ்மீரில் இருந்து அடித்துவிரட்டவேண்டும் என அவர்கள் போர்க்கோலம் பூண்டிருகின்றார்கள்.

புர்கான்வாணியை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்ற போது ஏற்பட்ட கிளர்ச்சியைவிட இப்போது இன்னும் பலமடங்கு அங்கே போராட்டத்தின் வீச்சு பரவியுள்ளது. கடந்த மாதம் 9 ஆம் தேதி ஃபரூக் அகமது தார் என்ற எம்பிராய்டரி வேலை செய்யும் இளைஞரை ராணுவஜீப்பின் முன்னால் கல்வீச்சுக்கு எதிராக மனித கேடயமாக உட்கார வைத்து 28 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளார்கள். அப்படி அழைத்துச்செல்லும் அளவுக்கு அவர் என்ன தவறுசெய்தார்? அவர் செய்த தவறெல்லாம் பிரிவினைவாதிகள் புறக்கணிக்கச்சொன்ன இடைத்தேர்தலில் வாக்களிக்ததுதான். அப்படி என்றால் அவரை தீவிரவாதிகளும், பிரிவினைவாதிகளும் தானே நியாயப்படி தண்டித்து இருக்க வேண்டும். ஆனால் இந்திய ராணுவம் ஏன் தண்டிக்கின்றது என்றால் காஷ்மீரில் இருக்கும் உண்மையான தீவிரவாதியும் பிரிவினைவாதியும்  தாங்கள்தான் என நிரூபித்துக்கொள்வதற்காக தான்.

உண்மையில் இந்திய அரசின் மீது அந்த மக்கள் கடுமையான அதிர்ப்தியை அடைவதற்கு இந்திய இராணுவத்தின் மனிதத்தன்மையற்ற செயல்பாடுகளே காரணம். அப்பாவி இளைஞர்களைப் பிடித்துச்சென்று தீவிரவாதிகள் என்று சுட்டுக்கொன்றுவிட்டு அதைவைத்து ராணுவத்தில் பதவிஉயர்வு பெற முயற்சிப்பது போன்ற செயல்பாடுகள் அங்கு தொடர்கதையாக நடந்துவருகின்றன. பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் இந்திய ராணுவம் சிறுவர்களை கூட விட்டுவைக்காமல் பாலியல் வன்முறையில் ஈடுபடுகின்றது.2009 ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி 11 சிறுவர்கள் அமர்வு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆசனவாய் வழியே புணரப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டதை மருத்துவ விசாரணையில் உண்மையென்று நிரூபிக்கப்பட்டது. ஆனால் அப்படி நடந்துகொண்ட கீழ்த்தரமான இராணுவவீரர்களுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

என்ன மாதிரியான கீழ்த்தரமான செயல்களையும் அங்கு செய்ய இந்திய இராணுவவீரர்களுக்கு வரம்பற்ற அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த வரம்பற்ற அதிகாரம் தான் பெண்களையும், சிறுவர்களையும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்க அவர்களைத் தூண்டுகின்றது. இந்திய இராணுவவீரர்களின் அத்துமீறல்கள் பற்றி விசாரணை செய்து தண்டனைவாங்கித் தருவதைப் பற்றியெல்லாம் அந்த மக்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. இந்திய அரசு அப்படி நடந்துகொள்ளும் இராணுவவீரர்களுக்குப் பரிசும் பதவிஉயர்வும் கொடுத்து அழகு பார்த்ததுதான் வரலாறு. இப்போதுகூட ஃபரூக் அகமது தாரை வண்டியில் உட்காரவைத்து 28 கிலோமீட்டர்கள் இழுத்துசென்ற மேஜர் லீத்துல் கோகய்க்கு  கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் பிரிவின் தலைமைப்பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இதுதான் இந்திய அரசு காஷ்மீரில் கடைபிடித்துவரும் நல்லெண்ண நடவடிக்கைகள். எண்ணிக்கையில் 400 பேர் கூட இல்லாத தீவிரவாதிகளைப் பிடிக்க 600000 துருப்புகளை அங்கே இந்திய அரசு நிறுத்தி வைத்திருக்கின்றது என்றால் அதன் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அந்த மக்களை நிரந்தமான மரண பீதியிலேயே வைத்திருந்து உளவியல் நெருக்கடியை ஏற்படுத்தி பணியவைப்பதுதான் இந்திய அரசின் ஒரே நோக்கம்.

ஆனால் காலம் எல்லா சமயங்களிலும் அப்படி இயல்பான ஒன்றாக அடக்குமுறையை ஏற்றுக்கொள்ள அந்த மக்களை விட்டுவிடுவதில்லை. 600000 துருப்புகள் இருந்தும் அந்த மக்களை இன்று இந்திய அரசால் பயமுறுத்த முடியவில்லை என்றால் அந்த மக்கள் தங்கள் உயிரைக்கொடுத்தாவது காஷ்மீரின் விடுதலையை வென்றெடுக்க முடிவுசெய்துவிட்டார்கள் என்பதைத்தான் காட்டுகின்றது. போராட்டக்களம் எல்லாவற்றையும் துச்சமாக மதிக்கவைக்கின்றது. எதிரி எவ்வளவு பெரிய வலிமை நிறைந்தவனாக இருந்தாலும் ஆண்டாண்டு காலமாக கனன்று கொண்டிருக்கும் அவர்களின் மனது  எதிரியின் துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும் பார்த்து எள்ளி நகையாட வைக்கின்றது.

இனி  இந்திய அரசு என்ன செய்தாலும் இந்தப் போராட்ட தீயை அணைப்பது என்பது சிரமம். காஷ்மீரில் இந்திய அரசு நடத்திக்கொண்டிருக்கும் போர் காஷ்மீர் மக்களுக்கு மட்டுமே துன்பத்தைக் கொடுக்காமல் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொருவருடமும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் இந்திய மக்களின் வரிப்பணம் அங்கே ராணுவவீரர்களுக்கும் ஆயுதக் கொள்முதலுக்கும் செலவுசெய்யப்படுகின்றது. கோடிக்கணக்கான இந்திய மக்கள் வறுமையில் ஒருவேளை சோற்றுக்கே வழியற்றுவாழும் போது மக்களின் வரிப்பணம் அப்பாவி காஷ்மீர் மக்களை கொல்வதற்கும் வடகிழக்கு மாநில மக்களை ஒடுக்குவதற்கும் மாவோயிஸ்ட் வேட்டை என்ற பெயரில் பழங்குடியின மக்களை காடுகளில் இருந்துவிரட்டிவிட்டு வளங்களை பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரைவார்க்கவுமோ பயன்படுத்தப்படுகின்றது.

இந்திய அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கும் இந்த இராணுவ அடக்குமுறையால் எல்லா வகையிலும் பயனடைந்துகொண்டு இருப்பது, இந்தியாவின் வளங்களை பெருமளவு கட்டுப்படுத்தும் பார்ப்பன பனியா கும்பலும் பன்னாட்டு முதலாளிகளும் தான். சாமானிய மக்களுக்கு அதனால் எந்தவித பயனும் கிடையாது. இந்திய கூட்டமைப்பிற்குள் இருக்க வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அனைத்து உரிமையும் அந்தந்த மாநில மக்களுக்கு இருக்கின்றது. அதை மறுக்க எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது.

வரலாற்று ரீதியாக எப்போதும் இந்தியாவுடன் இருந்திராத வடகிழக்கு மாநிலங்களையும், காஷ்மீரையும் இந்திய அரசு தனது  ராணுவத்தின் வலிமையைப் பயன்படுத்தியே இந்தியாவுடன் கட்டிப்போடுவிடலாம் என நினைக்கின்றது. ஆனால் அந்த மாநில மக்கள் அதற்குக் கொஞ்சம் கூட தயாராக இல்லை என்பதைத்தான் ஓயாமல் நடந்துகொண்டிருக்கும் போராட்டங்கள் நமக்குக் காட்டுகின்றன. காஷ்மீரில் நடக்கும் ஒவ்வொரு போராட்டத்தின் பின்னணியிலும் ராணுவத்தின் கொடூர அடக்குமுறையே காரணமாக இருந்துள்ளது. ஐநாவிலே ஒத்துக்கொண்டது போல இந்திய அரசு காஷ்மீரிலே பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்பதுதான் இந்தியாவில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளின் விருப்பமாகவும் உள்ளது. அதுவே காஷ்மீர் மக்களின் உறுதியான நிலைபாடாகவும் உள்ளது. நிச்சயம் ஒரு விடுதலை பெற்ற காஷ்மீரை அடையும்வரை அவர்களின் போராட்டம் இனி ஓயப்போவதில்லை. 

Pin It