கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்தியாவில் இயற்கையை வியாபார பொருளாக்கிய உலகமயமாக்கலின் புதிய பொருளாதார கோட்பாடுகள் ஊடுருவி ஒரு தலைமுறையை (25 ஆண்டுகள்) கடந்து, இன்று சந்தைப்பொருளாதாரத்தின் உச்சத்தில் நிற்கிறது. மனிதப் பேராசை, வாணிபம், நுகர்வுக் கலாச்சாரச் சீரழிவால் புவி வெப்பமயமாகி, அதனால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களால் இப்பூவுலகினில் அனைத்து உயிரினங்களும் மீள முடியா சிக்கலில் உள்ளன. இதற்கு நேர் எதிரே பூர்வகுடிகளான ஆதிவாசிகள் இன்னமும் பொதுசொத்து ஆதாரமான நிலம், நீர், வனங்களைத் தாயாக, தெய்வமாக, தங்கள் எல்லா தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆன்மாவாகப் பார்த்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். சந்தைக்காக எதையும் உற்பத்தி செய்யாமல் தனிநபர் நலனின்றி, பொதுநலனே குறிக்கோளாகக் கொண்டு வாழும் பழங்குடிகள் சமூகத்தின் ஆணிவேர். இயற்கையில் இருந்து குறைவாக எடுப்பவர்களே கௌரவத்திற்கு உரியவர்கள்; அத்தகைய இலக்கணத்திற்கு உதாரணமான பழங்குடிகளைப் பற்றிய சரியான புரிதலும், கற்பிதங்களும் இன்றைக்கும் அனைவருக்கும் அவசியமாகின்றது.

அதிசயமும், ஆச்சரியமும், உயர்வான பண்புகளும் கலந்த ஆதிவாசி பழங்குடிகளிடம் நாகரீக சமூகம் என தன்னைத் தானே நினைத்துக் கொள்ளும் நாம் அனைவரும் அறிந்து கொள்ள, கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்வியல் விழுமியங்கள் ஏராளம் உள்ளன.

யார் இந்த பழங்குடிகள் ?

இயற்கையோடு தங்களது வாழ்வினை இணைத்து நிலம், நீர், வனம், ஆகியனவற்றை பொதுசொத்தாக பார்ப்பது, இயற்கையை, பஞ்சபூதங்களை வணங்குவது. சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது ஆண், பெண், குழந்தைகள் என்று வேறுபாடின்றி சமத்துவத்தைக் கையாளுவது, சுயமாக அனைவரும் கூடி ஜனநாயக அடிப்படையில் முடிவெடுப்பது, மூலிகைகளைப் பயன்படுத்துவது இவற்றோடு தனித்துவ குலதெய்வ வழிபாடு, சொந்த மொழி, நடனம், இசை கலாச்சாரத்துடன் பொழுதுபோக்கு அம்சங்களையும், பழமையான பழக்க வழக்கங்களையும் உடையவர்கள் பழங்குடிகள்.

இவர்கள் பல்வேறு காலங்களில் துயரங்களையும், நெருக்கடியையும், அழிவையும் சந்தித்தாலும்; இத்தைகைய பெருமைக்குரிய இச்சமூகங்களின்‌ கதை, பாடல், வரலாறு, பண்பாடுகள், கலாச்சாரம், பாரம்பரிய அறிவுகள் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வருபவை. அந்த மரபான வரலாற்று சங்கிலித் தொடர் இன்று வாணிபம், அறிவியல், தொழில்நுட்பம் போன்றவற்றால் அறுபடும் ஆபத்தான சூழலில் உள்ளது.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையினில் பழனி மலையில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் வரை பரவியும், சிதறியும் கானகத்திற்குள் வாழ்பவர்கள் பளியர் பழங்குடிகள். இடம் விட்டு இடம் நகரும் கானக நாடோடிகள். வாழ்விற்காகவும், வாழ்வாதரத்திற்காகவும், காடுகளை மட்டுமே சார்ந்து வாழும் உணவு சேகரிக்கும் பழங்குடிகள், விவசாயம் கண்டறியப்படுவதற்கு முன்னர் ஒரு சமூகம் எப்படி வாழ்ந்திருக்குமோ அத்தகைய வாழ்நிலையை இன்றைய காலகட்டத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் பளியர் பழங்குடிகள். அரசு நிர்வாகம், வனத்துறை உருவாகும் முன்னரே இம்மலையினை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

இவர்கள் ஆசைகளற்றவர்கள். பெரும்பாலும் வயது, நாள், கிழமை, மாதம், குறித்த விவரம் அறியாதவர்கள். வாழ்க்கை குறித்து கவலை, பயம், ஏக்கம் இல்லாதவர்கள். ஆனால் முழு வனத்தையும், அங்குள்ள வழிப்பாதைகள், உண்ணத்தக்க, உண்ணக்கூடாத பொருள்கள், மூலிகைகள், வனவிலங்குகளின் நடமாட்டம், மரம், செடி, கொடி, மூலிகை, பல்லலுயிர்களின் சூழல் குறித்த அபாரமான ஞானத்தைக் கொண்டவர்கள்.

குழந்தைகளையே தங்கள் வாழ்வினில் செல்வமாக, சொத்தாகக் கருதுகிறார்கள். குடும்பக் கட்டுப்பாட்டை வெறுக்கும் இவர்களில் மனைவிக்குப் பிரசவம் பார்த்த கணவனும், ஏன் தனக்கு தானே பிரசவம் பார்த்த உசிலம்பட்டி குறிஞ்சி நகர் கருப்பாயி போன்று பலரும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு காட்டில் கிடைக்கும் நார்த்தாம்பட்டை மூலிகை பிரசவத்தை எளிதாக்குகிறது. குழந்தைகளைத் தொட்டிலில் போடும் பழக்கம் இல்லாததாலே முதுகினில் துணியால் கட்டி, சுமந்து செல்கிறார்கள். தங்கள் வேலைகளுக்காக குழந்தைகளை பிரிய விடுவதில்லை. பேதமின்றி பிற குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களும் இவர்களில் உண்டு. குழந்தை முதல் முதியோர் வரை பிறர் வீடுகளில் உண்ணும் பழக்கம் உள்ளது. கிடைப்பதைப் பகிர்ந்து உண்ணும் பேரானந்தம் உடையவர்கள். முதியோர், யாரும் இல்லாத குழந்தைகள், உடல் நலக்குறைவு உள்ளவர்களை கிராமத்தில் உள்ளவர்களே உணவு அளித்து பராமரிக்கின்றனர்.

இன்றளவும் இவர்களிடம் சங்க இலக்கியம் சுட்டும் “உடன் போக்கு” முறைப்படி தங்கள் வாழ்க்கைத் துணையைத் தாங்களே தேர்வு செய்து கொள்ளும் சுதந்திரம் இங்கு உள்ளது. “எங்க காலத்துல நல்ல தேன் எடுத்து உழைத்து காப்பாற்றக் கூடியவனுக்கே பெரியவங்களா பார்த்து சேர்த்து ( கல்யாணம் ) வைப்பாங்க. எப்பவும் ரொம்ப சந்தோசமா, பாசமா ரெண்டு பேரும் இருப்பாங்க… ஒருத்தர விட்டு ஒருத்தர் பிரிய மாட்டாங்க. காட்டுக்குள்ள போனாலும் கூட பொண்டாட்டியோட சேர்ந்தே போவாங்க. ஒண்ணும், மண்ணாவும் இருப்பாங்க. - முருகாயி, கடுகுதடி கிராமம்.. விதவைகள் மறுமணம் அதுவும் திருமணம் ஆகாத இளைஞர்களே மனைவியாக (குழந்தைகளுடன்) ஏற்றுக் கொள்கிறார்கள்.

இங்கு வரதட்சணை இல்லை. வீட்டு வேலைகளை அனைவரும் பகிர்ந்து கொள்கின்றனர். குடும்ப வன்முறை இல்லை. வன்கொடுமை, மாமியார் மருமகள் சண்டை சச்சரவுகள் இல்லை. குழந்தைகள் சர்வ சுதந்திரமாகத் தங்கள் குழந்தைப் பருவத்தைக் கட்டுப்பாடின்றி அனுபவிக்கின்றனர். குழு விளையாட்டுகளுக்குத் தரும் முக்கியத்துவம் தனிநபர் விளையாட்டுக்கு இல்லை.

இயற்கை வழிபாடு

“இயற்கை தங்களுக்குக் கட்டுப்படும், நாங்கள் அழுது இயற்கையை வணங்கினால் மழை வரும்” என்று இன்றும் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்கள். வருசநாடு - கரட்டுப்பட்டி (சமீபத்திய வனத்துறை பிரச்சனையான கிராமம்) பளியர்கள் கானகத்திற்குள் மழை வேண்டி “மழைப் பொங்கல்” கொண்டாடுகின்றனர். சித்திரை மாதத்துக் கடும் கோடையில் புது மண்பானையில் கேழ்வரகால் கூழ் செய்து பொங்கலாகப் படைத்து குலதெய்வமான பளிச்சி அம்மனுக்குப் பச்சைப் பட்டுத்துணி உடுத்தி வழிபடுகின்றனர். “அம்மனுக்கு மஞ்சள் தண்ணி ஊத்தி கும்பிடுவோம்… ஒரு முறை கூட பளிச்சி அம்மன் எங்களை ஏமாற்றியது இல்லை. காட்டுக்குள்ள எங்கேயாவது கண்டிப்பாக மழை வந்துரும். நாங்க இல்லைனா காடு அழிஞ்சு போயிரும்” என்கிறார் இவ்வூரைச் சேர்ந்த கரடிப்பாண்டி

வனத்திற்குள் எந்த வேலையைச் செய்ய நினைத்தாலும் குறிப்பாக பாறைகளிலோ, மரங்களிலோ ஏறும் போது தொட்டு வணங்கிவிட்டு விரும்பி(ய) அந்த வேலைகளைச் செய்கின்றனர்.

“எங்க தேவைக்கு அதிகமாக காட்டுல எந்தப் பொருளையும் நாங்க எடுக்க மாட்டோம். அப்படி எடுத்தா சாமி எங்கள தண்டிக்கும். எங்களுக்கோ பிள்ளைங்களுக்கோ உடம்பு சரியில்லாமப் போயிரும்.” – தேவேந்திரன், குறிஞ்சி நகர் - உசிலம்பட்டி

திருவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பளியர்களுக்கு அப்பகுதி வனத்தில் கிடைக்கும் காட்டுவள்ளிக் கிழங்கு முக்கிய உணவாகும். அந்த கிழங்கினை தை மாதத்தில் அனைவரும் ஒன்று கூடி, தோண்டி எடுத்து அந்த வள்ளிகிழங்கையே தெய்வமாக்கி, கிழங்கு சாமி திருவிழாவாக கொண்டாடுகின்றனர். அந்த கிழங்குக் கொடியினை சிறு துண்டுகளாக வெட்டி, காட்டினுள் பல இடங்களில் நட்டு வைப்பார்கள். இக்கானக அறுவடைத் திருவிழா இதுவரை எங்கும் பதிவு செய்யப்படாத ஒன்று.

“நாங்க எந்தப் பச்சை மரத்தையும் வெட்டமாட்டோம், இறந்தவர்களைக்கூட மரங்களின் வேர்களுக்குக் கீழேயே புதைப்போம். அந்த மரங்களில் எங்க பளியன் உயிர் இருக்கும். அந்த நிழல்ல கொஞ்ச நேரம் உக்கார்ந்து அழுதா, எங்க மனசுல இருக்கிற பாரம் எல்லாம் குறைஞ்சி போகும். கொஞ்சம் தெம்பு கிடைக்கும்” -முத்தையா செண்பகத்தோப்பு.

ஆதிவாசிகள் பார்வையினில் உலகம்

பளியர்களும், ஆதிவாசிகளும் தாங்கள் இந்த உலகைப் பார்க்கும் பார்வை பிரமிக்கத்தக்கது. இவர்களைப் பொருத்தவரை வீடு என்பது இரவினில் தங்கி ஓய்வு எடுக்கவே. அதுவும் மழை குளிருக்கு சற்று ஒதுங்கி, வன விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளவே. இவர்கள் குடியிருப்புகளில் அவர்களுடன் வீட்டுப் பிராணிகளான ஆடு, கோழி, நாய், பூனையும் பேதமின்றி ஒன்றாகத் தூங்கும், ஒன்றாக வாழும். பெரும்பாலும் வீடுகளில் கதவு இல்லை. இங்கே களவு, திருட்டு இல்லை. வனத்தில் கூட யாரும் கண்டு அடையாளப்படுத்திய தேனையோ, காடுபடு பொருளையோ பிறர் எடுப்பதில்லை. தாங்கள் வேட்டையாடும் காலத்தில் கூட ( 1980 க்கு முன்னர் ) கர்ப்பமான மற்றும் சிறிய விலங்குகளை வேட்டையாடுவதில்லை. இச்சமூகங்களுக்குள் பாலியல் குற்றங்கள், பிற வன்முறைகள் இல்லை. காவல்நிலையம், நீதிமன்றங்கள் மீது நம்பிக்கையற்றவர்கள். வனம் (காடு) தங்கள் முழுத்தேவையையும் பூர்த்தி செய்யும் என நம்பும் இவர்களிடம் இன்றைக்கும் சேமிக்கும் பழக்கம் இல்லை.

“நகர வாழ்க்கை நரக வாழ்க்கை. காசு இருந்தால்தான் அங்க வாழ முடியும். எங்களுக்கு காசு சம்பாதிக்கத் தெரியாது. ஏன் காசை எண்ணிப் பார்க்கக்கூட தெரியாது. ஆனா காட்டுக்குள்ள வாழ காசு தேவை இல்லை. நான் வெளியூர் சுத்தாத இடம் கிடையாது. செல்போனுக்கு எப்படி கரண்ட்ல சார்ஜ் ஏத்துறமோ, அதே மாதிரி காட்டுக்குள்ள வந்து இந்த காத்தையும், தண்ணீரையும் குடிச்சாத்தான் போன உயிர் திரும்ப வரும். காடு இல்லாத வாழ்க்கையை எங்களால நினைச்சிக்கூட பார்க்கமுடியாது ” - வடகரை பாறை மணி பாரம்பரிய மூலிகை வைத்தியர்.

சமரசத் தீர்வுக்கு வழிகாட்டுதல்

வன விலங்குகள் மனித மோதல் பலி நம்மை கலங்கச் செய்கிறது. ஆனால் பேசப்படாத உண்மைத் தீர்வுகள் இவர்களிடம் அரிய பொக்கிசமாகப் பொதிந்து உள்ளது. ஆனைமலை காடர்கள் இன்றைக்கும் ஊருக்குள் வரும் யானைக் கூட்டத்திடம் தங்கள் காடர் மொழியினில் பேசுகின்றனர்.

“நீயும் நானும் ஒரு சாதி, நீயும் வாழனும், நாங்களும் ஒத்துமையா வாழனும், அங்க போ இங்க வராதே. உன் உருவத்தைப் பார்த்து குழந்தைகளும் பெண்களும் பயப்படுகிறார்கள். உனக்கே இது நியாயமா இருக்கா?” என காட்டு யானைகளை பார்த்து சத்திமிட்டு பேசுகின்றனர் வால்பாறை நெடுங்குன்றம் கணேசன், மணி.

“எங்க மூதாதையரை வணங்கி யானைகிட்ட சொன்னா அது (யானை) எங்க வார்த்தைக்கு கட்டுப்படும்” என்கிறார்கள். அதனால் தான் 50 க்கும் மேற்பட்ட காடர் இளைஞர்கள் தமிழகம் மற்றும் கேரளாவில் யானை தொடர்பான ஆய்வுப் பணியில் உள்ளனர்.

குடகு மலைக் குறும்பர் பழங்குடியைச் சேர்ந்த டோபி, இந்தியா அளவில் மிகப் பிரபலமானவர். அடம் பிடித்த யானையை வழிக்கு கொண்டு வருவதில் கில்லாடி. கோபம் வந்தா யானை காது எப்படி இருக்கும் உள்ளிட்ட யானையின் ஒவ்வொரு அசைவும், உடல் மொழியும் இவருக்கு அத்துபடி. குறிப்பிட்ட மாலை நேரத்தில் விலங்குகள் நீர் அருந்த வரும் இடத்தை பழங்குடிகள் புழங்க (பயன்படுத்த) மாட்டார்கள். ஆனால் வனம் மற்றும் யானை வழித்தட ஆக்கிரமிப்பாளர்களும், யானை வழித்தடத்தினில் இரயில் வழித்தடம் அமைத்தவர்களும், இந்த பழங்குடிகளிடம் இருந்து தீர்வு தேடாததும் தான் பெரும் சோகம். இன்றும் யானை குறித்த, விலங்கு குறித்த பல ஆராய்ச்சிகளும் பழங்குடி மக்களின் அறிவேயாகும். புதிதாக அங்கே கண்டு பிடிக்கப்படவில்லை. பழங்குடிகளின் பாரம்பரிய அறிவு, ஆற்றலும் பலருக்கு பட்டங்களைப் பெற்றுத் தரவே பயன்படுகிறது. இதனால் பழங்குடிக்கு பெரிய அளவில் பயனையும் அங்கீகாரத்தையும் தரவில்லை. மாறாக இவர்களின் அறிவுசார் சொத்துரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.

கல்வியும், அதிகாரமும், செல்வமுமே அனைத்து வசதியை தரும் என நம்பும் இன்றைய மானுட சமூகம் தன்னையும், தன் தலைமுறைகளையும் அதற்கேற்ப தயார்ப்படுத்துகிறது. ஆனால் வாழ்வில் பாரம்பரியத்திலும், கலாச்சாரத்திலும் நம்மை விட வசதியான உயர்வானவர்கள் பழங்குடிகளே. அதையே தங்கள் தலைமுறைமீது முதலீடு செய்கிறார்கள். கலாச்சாரமே சமூகத்தை உயிரோடு, உயிர்ப்போடு வைத்திருப்பது. கலாச்சாரத்தைப் பிரிதல் பழங்குடிகளைப் பொருத்தமட்டில் உயிரைப் பிரிவதுக்கு ஒப்பானது.

பழங்குடிகளைப்போல பூவுலகு காப்போம்.

திண்டுக்கல் சிறுமலை வனத்தில் வாழும் சஞ்சீவி பலியர் பழங்குடி. சிறுமலை பலியர்கள் அநேகம் பேர் தங்களது விவசாய நிலங்களை பிற சமூக மக்களிடம் இழந்தவர்கள். இதில் சஞ்சீவி மட்டும் போராடி தன் காட்டை தக்க வைத்துக்கொண்டவர். இவரது தோட்டத்தில் உள்ள எலுமிச்சை பழங்கள் எப்போதும் அளவு சற்று பெரியதாகவும் அதிக மஞ்சள் நிறமுடையதாகவும் இருக்கும். “இங்க இருக்க மற்ற சம்சாரிங்க எல்லாம் எலுமிச்சை பழம் ரேட் ஜாஸ்தியா இருந்தா பழம் காய், பிஞ்சு ஒன்னுவிடாம எல்லாத்தையும் பறிச்சி எடுத்து சிறுமலை செட்டுக்கு (மார்க்கெட்டுக்கு) அனுப்பிருவாங்க. ஆனா நான் அப்படி எல்லாம் பறிக்கிறது இல்ல. பழம் பழுத்தாதான் அத பறிப்போம். கைய பழத்துல வைச்ச உடனேயே அது தானா கையில விழுற மாதிரி வரணும். அப்போதான் பறிக்கணும். நாம அத பிச்சி எடுக்க கூடாது. ஒவ்வொரு காயும் இந்த செடிக்கு பிள்ளைங்க தான். செடியில இருக்கிற ஒவ்வொரு காயும் தாய்ப்பால் குடிக்கிற மாதிரி தண்ணியையும் சத்தையும் சாப்பிடுது. அந்த எலுமிச்சையை காய் பக்குவத்துல பறிச்சி எடுத்தா அது “தாய்ப்பால் குடிக்கிற தாய்க்கிட்ட இருந்து குழந்தையை பிரிச்சி எடுக்கிற மாதிரி.. நான் அதைச் செய்ய மாட்டேன்” என்றார்.

சிறுமலை எலுமிச்சை பழமானது பல வாரங்களுக்கு கூட எளிதில் கெட்டு போகாது. சஞ்சீவீ சொன்ன வாழ்க்கை நெறி நமக்கும், நமது ஆட்சியாளருக்கும் எவ்வளவு தேவைப்படுகிறது? இந்த பூவிலிருந்து தேனை சேதாரமில்லாமல் எடுக்கும் தேனீயைப் போல வாழவே நமக்கு இயற்கையைப் பயன்படுத்த உரிமையுள்ளது. அடுத்த தலைமுறைகளுக்கும் பூமித்தாயை பத்திரமாக கையளிக்க வேண்டாமா? அதைவிடுத்து இந்த பூவுலகை சூறையாட நாம் யார்? அத்தகைய செயலும் தான் தகுமோ? பூமி என் அன்னை. அத்தாய் உடலில் ஒருபோதும் இரும்புக் கலப்பையை பயன்படுத்த மாட்டேன் என இன்றளவும் வாழும் பைகா பழங்குடிகளுக்கு பூவுலகின் புனிதம் தெரிகிறது. இயற்கையை வழிபட்டு அது தனக்கு கட்டுப்படும் எனும் பழங்குடி நம்பிக்கை எங்கே? இயற்கையை பாழாக்கி, சீரழித்து விட்டு இயற்கையை பழித்தும், அவநம்பிக்கையோடு திரியும் நாம் எங்கே? தொழிற்புரட்சியும், உலகமயமாக்கலும் ‘வளர்ச்சி!!!?’ எனும் பெயரில் அதைத்தானே இன்றுவரை செய்து வருகிறது.

இந்த இயற்கை ஒவ்வொரு மனிதனின் தேவையையும் பூர்த்தி செய்யும், ஆனால் ஒருபோதும் அவனின் பேராசையினை திருப்தி செய்ய முடியாது. மானுடன் ஒட்டுமொத்தமாக நெறிபிறழ்ந்து வாழ்கிறான். அது (பேராசை) கொடிய நோய். அதன் அறிகுறிகளே போர், பஞ்சம், தீவீரவாதம், ஏழ்மை. இயற்கையுடன் இணைந்து வாழ்வதன் மூலமே அவன் அந்த நோயிலிருந்து விடுபட முடியும் என்ற மகாத்மா காந்தியின் தீர்க்கத் தரிசனக் கூற்றாகும். அத்தகைய சிறப்புக்குரிய, பெருமையுடைய வாழும் உதாரணமாகத் திகழுபவர்கள் பழங்குடியின மக்கள். இவ்பூர்வகுடி மக்களை மாண்புடனும், கௌரவத்துடனும் வாழ வைக்க வேண்டியது அரசு, நிர்வாகம், மற்றும் பொதுமக்கள் ஒவ்வொருவருடைய கடமையாகும். வேர்களின் மரணம் மரமான நமக்கு என்பதை நாம் ஒவ்வொரும் உணர வேண்டும். ஆம் ஏட்டுக்கல்வி ஏதுமற்ற எளிமையான, ஆசைகளற்ற ஆதிவாசி மனிதர்களால் மகிழ்ச்சியால் ஆடியும் பாடியும் ஆகாயத்துப் பறவைகள் போல இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையினை பழங்குடிகளிடமிருந்து என்று கற்றுக் கொள்ளப் போகிறோமா, அன்றுதான் அனைவருக்குமான புதிய உலகம் அமையும்.

       - ச.தனராஜ், ஆதிவாசி உரிமைக்கான செயல்பாட்டாளர்