கரிசனமா? கண்துடைப்பா?

       chandrababu jayalalithaஆந்திராவில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 516 தமிழர்களை விடுவிக்க வேண்டுமென, மிகத் தாமதமாக, கடந்த அக்டோபர் 15ந் தேதியன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதம் வெளியிடப்பட்டது. "கடந்த ஆகஸ்ட் 13 நிலவரப்படி தமிழகத்தைச் சார்ந்த 516 பேர் (கடப்பாவில்-107, சித்தூரில்-109, திருப்பதியில்-300) வனம் சார்ந்த குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் ஒப்பந்ததாரர்களால் அழைத்து வரப்பட்ட கல்வியறிவில்லாத ஏழை பழங்குடியினர் மற்றும் தொழிலாளர்கள் ஆவர்... ஜாமீனில் வரமுடியாத பிரிவுகளில் பெரும்பாலானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்படி 90 நாட்களில் இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால், ஜாமீன் பெறும் தகுதி பெறுகின்றனர். ஆனால், துரதிருஷ்டவசமாக அவர்கள் தற்போது வரை சிறையில் உள்ளனர். வறுமை மற்றும் தேவையான சட்ட உதவி கிடைக்காததால் அவர்களால் ஜாமீன் பெற விண்ணப்பிக்க முடியவில்லை. எனவே, அந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு ஆந்திர மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் தேவையான சட்ட உதவியை ஏற்பாடு செய்ய வேண்டும். சட்டப்படி தகுதியானவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்.''

       இதன் தொடர்ச்சியாக நவம்பர் 3ல் மீண்டும் ஒரு அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். ‘முதல்வர் ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடுவிற்கு எழுதிய கடிதத்தால், ஆந்திரச் சிறைகளில் இருந்து 172 தமிழர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மீதியுள்ள 344 பேர்களை மீட்பதற்கான செலவுகளுக்காக ரூ. 8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறையில் உள்ளவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து இலவச சட்ட உதவி கோரும் 312 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 2 வழக்கறிஞர்கள் குழு ஆந்திராவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்து திமுக தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அக்டோபர் 28ந்தேதி ‘நமக்கு நாமே’ பிரச்சார இயக்கத்திற்கு, சங்கராபுரம் (விழுப்புரம் மாவட்டத்திற்கு) வருகை தந்த திமுக’வின் பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் (டிசம்பர் 2012லிருந்து சிறைகளில் வாடும் 73 பழங்குடியினரின் சார்பாக அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும், அதன் தொடர்ச்சியாக விவரங்களைச் சேகரித்துள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. பழங்குடியினர் மீது அஇஅதிமுக அரசாங்கமும், எதிரக்கட்சி திமுகவும் கரிசனத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்களா? அல்லது தேர்தல் கால நாடகங்களா? என்ற அய்யம் இருப்பினும், தமிழகப் பழங்குடியினர் பிரச்சினையை தமிழகம் அறிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

திருப்பதி சேஷாசலம் காடுகளில் தொலைந்து போன பழங்குடிகள்

       தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளைச் சார்ந்த ‘மலையாளி’ பழங்குடிகள் தங்களின் பாரம்பரியமான நிலங்களை அந்நியர்கள், முதலாளிகள், அரசியல்வாதிகள் போன்றோரிடம் தொடர்ந்து இழந்து வருகிறார்கள். மலைகளில் மாற்று வேலை வாய்ப்புகள் இல்லாததால், கேரளா மற்றும் கர்நாடகாவின் தோட்டத் தொழில் மற்றும் மரம் வெட்டும் வேலைகளுக்கு சென்று திரும்புவது பிழைத்திருப்பதற்கான வாழ்க்கை விதியாகி போனது. 2010 க்கு பிறகு ஆந்திராவிலுள்ள திருப்பதி காடுகளில் செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்துகிற மரம் கடத்தும் மாஃபியாக்களின் முகவர்களான ஒப்பந்ததாரர்கள், தமிழகப் பழங்குடியினரை கூலி வேலைக்கு அழைத்துச் சென்று மரம் வெட்டும் வேலைக்கு ஈடுபடுத்தினர். பிழைப்புக்கு தமிழகத்தில் வழியில்லாத இவர்கள், மரம் வெட்டும் வேலைக்குச் சென்று துப்பாக்கிச் சூடுகளில் உயிரையும் விட்டனர். 2015, ஏப்.7ல், 20 தொழிலாளர்கள் ஆந்திராவில் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் கடந்த சில ஆண்டுகளாக, மரம் வெட்டிய/கடத்திய குற்றங்கள் வகையில் ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 2000 ற்கும் மேற்பட்டவர்கள் பிரச்சனை, தமிழக அரசாங்கத்தின், அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்க்கவில்லை. அகில இந்திய மக்கள் மேடை இப்பிரச்சனைகள் மீது தொடர் போராட்டங்களை கட்டமைத்தது. தமிழக அரசாங்கத்திடம் நேரடியாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாகவும் முறையிட்டது. இடதுசாரிக் கட்சிகள் பழங்குடியினர் அமைப்புகளின் ஆதரவையும் திரட்டியது. இந்தப் பின்னணியில் இந்த அறிக்கைககள் வெளிவந்துள்ளன.

ஆந்திராவின் சிறைகளில் உள்ள மரம் வெட்டும் தொழிலாளர்கள் 516 பேர் மட்டும் தானா? என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஆந்திராவின் காவற்துறை அதிகாரிகள் தொடர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கைகளின்படி, 2000ற்கும் மேற்பட்டவர்கள் சிறைகளில் உள்ளனர். 2013 சி.ஆர்.பி.என். 179 என்கிற, இரு வன அதிகாரிகள் கொலை வழக்கில் மட்டும் குற்றம் சாட்டப்பட்ட 434 பேர்களில், த.நா.வைச் சார்ந்த 376 பழங்குடியினர் 22 மாதங்களாக பிணையில் வரமுடியவில்லை. தமிழக அரசாங்கமானது பழங்குடியினர் மலைப் பகுதிகள்/கிராமங்களிலிருந்து முழுமையானத் தகவல்களை திரட்டி, முழுமனதுடன் அனைவரின் விடுதலைக்காகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை; 516 பேர் பிணையில் விடுதலை என கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றுகிறது.

பழங்குடியினர் வாழ்க்கை தமிழகத்திலா? ஆந்திராவிலா?

       பழங்குடியினர் நிலம் அந்நியப்பட்டது. நிலம் இல்லாமல் ஆக்கப்பட்டதுதான் ஒட்டு மொத்தப் பிரச்சனையின் சாரமாகும். தமிழகத்தின் பழங்குடியினர் திரட்சியானப் பகுதிகளை (கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, ஜவ்வாது மலை போன்ற பகுதிகளை) அரசியலமைப்புச் சட்டத்தின் 5 வது அட்டவணையின் கீழ் கொண்டுவர உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு செட்யூல்டு டிரைப் பேரவை என்ற அமைப்பானது, 47,446 ஏக்கர் பழங்குடி நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ள விபரங்களை தாக்கல் செய்துள்ளது.

       தமிழகப் பழங்குடியினரின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் ஜெயா அரசாங்கம் உண்மையான அக்கறையைக் கொண்டிருக்கிறதா? 2015 துவக்கத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது; ‘சேலம், விழுப்புரம் மாவட்டங்களைச் சார்ந்த கல்வராயன் மலையில் பழங்குடியினருக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை எனவும், மலைக் கிராமங்களின் போக்குவரத்து, சாலை, குடிநீர், பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள், வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு, மாநில அரசாங்கமானது சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்’ எனவும் அம்மனு கோரியிருந்தது. உயர் நீதிமன்ற முதன்மை அமர்வானது, உண்மை நிலவரத்தை ஆய்வு செய்ய டாக்டர்.வி.சுரேஷ் தலைமையில் வழக்குரைஞர்கள் குழு ஒன்றை அமைத்தது. அக்குழுவும் ஆய்வு செய்து, பரிந்துரைகளையும் வழங்கியது. இந்த அறிக்கை மீது உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை 2015, ஏப்ரலில் பிறப்பித்தது. வனத்துறை முதன்மைச் செயலாளர் அடங்கிய உயர்நிலைக்குழு, கல்வராயன் மலைப்பகுதியை மேம்படுத்த முறையான ஒரு குழு, மூன்று மாதங்களுக்குள், அதற்கான வழிமுறைகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வகுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆசிரியர் காலிப் பணியிடங்கள், கழிப்பறைகள், குடிநீர் போன்ற உடனடிப் பிரச்சனைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 6 மாத காலம் ஆகிவிட்டது. தமிழக அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள வில்லை. தமிழகப் பழங்குடியினர் மீதான ஜெயா அரசாங்கத்தின் அக்கறைக்கு இது எடுத்துக் காட்டாகும்.

வன உரிமைச் சட்டமும், தமிழக அரசின் அலட்சியமும்.

       "இந்திய வரலாறு நெடுக பழங்குடியினருக்கும், காடுவாழ் மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளை சரி செய்வதற்காக'' கொண்டுவரப்படுவதாக, தனது முகப்புரையில் கூறுகிற "வன உரிமைச் சட்டம்-2006' ஆனது நமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு பத்தாண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. இச் சட்டத்தின் அடிப்படையில், சன. 2015 வரையில் நாடு முழுவதும் 29,29,853 ஹெக்டேர் நிலங்கள் பழங்குடியினருக்கு சொந்தமானது என அங்கீகரிக்கப்பட்டு, 15,57,424 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இது மிகவும் குறைவானதுதான் என்றாலும், அரசாங்கம் தான் உருவாக்கிய சட்டத்திற்கு உட்பட்டு நியாயமாக நடந்து கொள்ளும் என பழங்குடி சமூகம் ஒருபுறம் எதிர்பார்ப்புடன் இருக்கிறது. ஆனால், மறுபுறம் தமிழகத்தில் ஓரே ஒரு பட்டாகூட பழங்குடியினருக்கு இதுவரையிலும் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும், மலைகளில் / வனங்களில் உள்ள தங்களது நிலங்களுக்கு பட்டா கோரி விண்ணப்பித்த 21,781 மனுக்களில் (18,420 தனி நபர்கள், 3361 சமூக நிலம் சார்ந்த கோரிக்கைகளில்) நடைமுறை பரிசீலனை முடிந்து விட்டது. 3723 பட்டாக்கள் தயாராக இருப்பதாகவும், 28.02.2015ல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில், ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்த வழக்கு (வி.சாம்பசிவம் எதிர் இந்திய அரசாங்கம் மற்றும் பிறர்) காரணமாக இதுவரையிலும் பட்டாக்கள் வழங்கப்படவில்லை என்கிறது. மாறாக, கார்ப்பரேட்களின் நலனுக்காக, நான்கு புலிகள் வனச் சரணாலயத்திற்கு வேண்டும் என்றுச் சொல்லி, தமிழகத்தில் 2968 ச.கி.மீ. பரப்பு காடுகளில், மலைகளில் உள்ள பழங்குடிகள் தொடர்ந்து வெளியேற்றப்படுகின்றனர். மேலும் கூடுதலாக, யானைகள் வாழ்விடத்திற்காக 7,935 ச.கி.மீ. தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதான் தமிழகப் பழங்குடியினர் வாழ்வாதாரத்தின் சிக்கலான சித்திரம் ஆகும்

உண்மையான தீர்வு என்ன?

       தமிழகப் பழங்குடியினரின், பாரம்பரியமான நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன; வன உரிமைச் சட்டத்தின் படி "பட்டா' உரிமைகள் / வனங்கள் மீதான சமூக உரிமைகள் வழங்கப்படவில்லை; மலைக் கிராமங்களில் பழங்குடியினருக்கு வேலைகள் உருவாக்கித் தரப்படவில்லை; விவசாயத்தை மேம்படுத்த உள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவில்லை; தமிழக அரசின் பல்வேறு துறைகளிலுள்ள பழங்குடி காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் இல்லை, பல்லாயிரம் போலிப் பழங்குடியினர் வேலைவாய்ப்பை அபகரித்திருப்பதை மீட்டெடுக்க நடவடிக்கைகள் இல்லை எனப் பிரச்சனைகள் ஏராளம், ஏராளம்.

ஆந்திராவில் சிறைபட்டுள்ள 2000ற்கும் மேற்பட்டவர்களை பிணையில் எடுப்பதற்கான முழு மனதுடனான நடவடிக்கையில் தமிழக அரசாங்கம் இறங்க வேண்டும் எனவும், தமிழக பழங்குடியினர் வாழ்வாதாரமான நிலங்களை மீட்டெடுக்கும் பாதுகாக்கும், போராட்ட களத்திலும் முற்போக்கு சக்திகள், பழங்குடியினர் அமைப்புகள் ஒன்றுபட்டு போராட வேண்டும். பழங்குடியினர் விடுதலை கருணையினால் கிடைப்பதில்லை. போராட்டங்கள் மூலமாக மட்டுமே அடையப்பட முடியும்.

- சந்திரமோகன்

Pin It