கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

america neo colonialism

(முந்தைய பகுதி - ரூ.500, 1000 செத்தது ஏன்? மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா! - 4)

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த இந்திய அரசின் நடவடிக்கை, உள்நாட்டுக் காரணிகளால் மட்டுமே எடுக்கப்பட்டது அல்ல. உலகலாவிய அரசியல், பொருளாதார மாற்றங்கள் மற்றும் விளைவுகளினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்பதை கடந்த நான்கு தொடர்களில் எழுதியிருந்தோம்.

                சோவியத் ஒன்றியம் உடைந்து சிதறிய 1990- களுக்குப் பிறகு, உலகின் ஒற்றைத் துருவ வல்லரசாக அமெரிக்கா உருவெடுத்தது. உலக வரலாற்றில் வேறு எப்போதும் இல்லாத அளவுக்கு தனது மேலாதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்ட, டாலர் என்ற அச்சடிக்கப்பட்ட காகிதத்தை ஏற்றுமதிப் பொருளாக்கி, உலக நாடுகளை மிரட்டி, அச்சுறுத்தி ஏற்க வைத்தது.

                அமெரிக்காவின் இந்தச் செயல் அடாவடித்தனம் என்றாலும், அதன் ராணுவ வலிமை உலக நாடுகளை வேறு வழியின்றி ஏற்க வைத்தது. அதிலும் உலக எண்ணெய், எரிவாயு வளங்களையும், அதன் வர்த்தகத்தையும் தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவர, அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள் அடாவடித்தனத்தின் உச்சத்தைத் தொட்டது.

                அமெரிக்காவின் அடாவடித்தனத்தால் மிரட்டப்பட்ட, பாதிக்கபட்ட நாடுகளான ரசியாவும், சீனாவும் அமெரிக்காவை எதிர் கொள்ளும் அளவுக்கு ராணுவ, பொருளாதார ரீதியாக வலிமை பெற்றன. அதிலும் ரசியாவின் ராணுவ வலிமையும், சீனாவின் பொருளாதார வலிமையும் கூட்டு சேர்ந்ததால் மேலும் வலுவடைந்தது.

                அமெரிக்காவை ராணுவ ரீதியாக ரசியாவும், பொருளாதார ரீதியாக சீனாவும், எதிர் கொண்டு வீழ்த்துவது என்ற செயல் திட்டத்துடன் களத்தில் இறங்கின. இவர்களோடு மற்றொரு எண்ணெய் வள நாடும், அமெரிக்காவின் தொடர் தாக்குதலுக்கு இலக்காகி வரும் நாடுமான ஈரானும் இணைந்து கொண்டது.

                உலக எண்ணெய் வளம் முழுவதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர அமெரிக்கா எடுத்த முயற்சிகள் அனைத்தையும், ரசியா வெற்றிகரமாக எதிர்கொண்டு முறியடித்தது. அமெரிக்காவின் அடாவடித்தனத்திற்குத் துணைபோன உக்ரைன், தனது நாட்டின் ஒரு பகுதியையே இழந்தது. எகிப்து, துருக்கி ஆட்சியாளர்களுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவப் புரட்சி முயற்சிகள் மண்ணைக் கவ்வின. அமெரிக்க சதியை முன்னமே உளவறிந்து துருக்கிக்குத் தெரிவித்து, அதைத் தனது அணியில் ரசியா சேர்த்துக் கொண்டது. சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா தூண்டி விட்ட போரில், சிரியாவுக்கு ஆதரவாக ரசியா தனது விமானப்படையை நேரடியாக இறக்கியது. ஈரான் களத்தில் சிரியாவுக்கு உதவுகிறது. இதனால் சிரியாப் போரில் அமெரிக்கா தோல்வி உறுதியாகிப் போனது.

                இனி தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட வேண்டுமானால் ரசியாவுடன் நேரிடையாக போரில் இறங்குவதைத் தவிர, அமெரிக்காவிற்கு வேறு வழியில்லை.

                இதனோடு அய்ரோப்பிய ஒன்றியமும், இனி அமெரிக்காவுக்கு தாளம் போடாது என்பதும் உறுதியாகிவிட்டது. அதோடு மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் சீன அணியோடு இணைந்து கொண்டுள்ளன. தென்கொரியா, சீனாவுடன் இணையத் தயாராகிவிட்டது போன்ற உலகளாவிய நிலைமைகள் அமெரிக்காவிற்கு சாதகமாக இல்லை. இதனோடு அதன் உள்நாட்டுப் பொருளாதாரமும் சாதகமாக இல்லாததால், வேறு வழியின்றி இப்போதைக்கு ரசிய, சீன அணியுடன் போரிடுவதைத் தவிர்த்துள்ளது.

                உலக மேலாதிக்கத்திற்காகப் போராடும் அமெரிக்க, சீன அணியினர் இருவருமே உலக நாடுகளை தமது பக்கம் கொண்டு வரும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

                இந்த அணி சேர்க்கையில் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையைவிட, அதிக வாங்கும் சக்தியுடைய 30 கோடி பேரையும், இதனால் உலகின் மிகப்பெரிய சந்தையை மட்டுமல்லாமல், உலகின் மிக மலிவான மனித உழைப்பு சந்தையையும் பெற்றிருக்கிற இந்தியாவிற்கான கிராக்கி அதிகரித்துள்ளது. இதனால் இரு அணியினருமே இந்தியாவிடம் அண்மை ஆண்டுகளாக பேரம் பேசி வருகின்றனர்.

                ஆனால் இந்தியாவோ, தனது பாரம்பரிய தேசியப் பண்பாட்டின்படி அமெரிக்காவை அதிகமாக நம்பினாலும், சீன அணியோடும் பல்வேறு ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது.

                அதாவது, அமெரிக்கா இந்தியாவிற்கு தற்போது வழங்கியுள்ள சந்தை வாய்ப்போடு, சீனாவிற்கு வழங்கியுள்ள சந்தை வாய்ப்பையும், அதனிடம் இருந்து பறித்து தனக்கு வழங்கும் என்று காத்திருக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவையே இந்தியா அதிகமாக நம்புகிறது.

                ஒரு வேளை இந்திய ஆட்சியாளர்களின், இந்த எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், அதனால் ஏற்படும் இழப்புகளில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும், சீன அணியுடன் பலமான பேரம் பேசவும், தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைதான் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பாகும்.

இதன் மூலம் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு மக்களிடமிருந்த சேமிப்புப் பணத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் இந்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதனோடு முறைப்படுத்தப்படாத தொழில்களையும் மக்களிடமிருந்து பறித்து முதலாளிகளுக்கு ஏற்படப்போகும் சந்தை இழப்பை ஈடுகட்டப் பார்க்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்க எசமானின் அருளைப் பெற, இந்தியாவின் மலிவான மனித உழைப்பு சக்தியையும், இயற்கை வளங்களையும் முன்னிலும் அதிகமாக திறந்து காட்டுகிறது.

 இப்படி தனது வளங்களைக் காட்டுவதன் மூலம், அமெரிக்காவை மயக்கப் பார்க்கிறது. அப்படியும் அமெரிக்கா மயங்கா விட்டால், இதே வளங்களை எதிர் அணியினருக்கு திறந்து விடத் தயங்க மாட்டேன் என்ற செய்தியையும் அமெரிக்காவிற்கு உணர்த்துகிறது.

  நவீன, இந்திய ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, ஏடறிந்த காலம் முதல் இப்படி காரியவாதக் கண்ணோட்டத்தில் செயல்படுவதுதான், இந்திய ஆட்சியாளர்களின் பாரம்பரியப் பண்படாகும். இன்று இந்தியா என்று அழைக்கப்படும் இந்த நாட்டில், அன்று பல்லாயிரம் ஆட்சியாளர்கள் ஆண்டபோதும், இவர்களில் நாடு, நாட்டுப்பற்று ஆகிய பண்புகளின் அடிப்படையில் ஆண்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இது ஆட்சியாளர்களின் இழிவான பண்பு மட்டுமல்ல, இதுவே ஆட்சியாளர்களுக்கான அடிப்பையான தகுதியாகவும் விளங்கியது.

இப்படித்தான் அலெக்சாண்டரும், மங்கோலியர்களும் இந்திய ஆள்காட்டிகளால் இந்தியாவிற்குள் அழைத்து வரப்பட்டனர்.

இப்படித்தான் ஆட்சியாளர்கள் கோயில்களில் குவித்து வைத்திருந்த தங்கத்தை அரேபியர்களுக்கு காட்டிக்கொடுத்து, கொள்ளையடிக்கக் கூட்டியும் வந்தனர்.

அய்ரோப்பியர்கள் இந்தியாவிற்கு வந்தபோது, தமது பண்பட்டின்படி காட்டிக் கொடுத்து ஆதாயம் அடைந்தனர்.

                தமது இந்த மூதாதையர்களின் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கும் தீவிரவாதக் கும்பல்தான், தற்போது இந்தியாவில் ஆட்சி செய்கிறது. தமது பாரம்பரியப் பண்பாட்டைப் பாதுகாக்கும் வகையில்தான், இப்போது இந்திய வளங்களைக் கொள்ளையடித்து கொண்டு போக திறந்துகாட்டி பேரம் பேசுகிறது.

                மையம், மாநிலம், மாவட்டம், வட்டம், நகரம், கிராமம் இவற்றில், எந்த மட்டத்தில் எவன் அதிகாரத்தில் இருந்தாலும், அவரவர் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளின் இயற்கை வளங்களையும், மனித ஆற்றலையும் காட்டிக் கொடுப்பதும், அவற்றை பேரம் பேசி விற்பதும்தான், அப்பொறுப்புகளில் அவர்கள் இருப்பதற்கான அடிப்படைத் தகுதியாகும். இதுவே அவர்களின் வாழ்வுக்கான ஆதாரமும் ஆகும்.

                பரம்பரையாக அதிகாரத்தில் இருக்க ’பகவானால்’ படைக்கப்பட்டவர்கள், புதிதாக அதிகாரத்திற்கு வருகிறவர்கள், இவர்கள் இருவருக்கும் இடையில் இதில் எந்த வேறுபாடும் இருப்பதில்லை. இதில் எந்த அளவிற்கு அதிக ஆற்றல் உடையவனாக ஒருவன் இருக்கிறானோ, அவனே இந்தியாவின் கதாநாயகன். இப்போது அப்படிப்பட்ட கதாநாயனாக விளங்குபவர்தான் திருவாளர் மோடி அவர்கள்.

                அதிகாரத்தில் இருக்கும் எஜமான் யாராய் இருந்தாலும், அனைவரிடமும் வாழுவது எப்படி, காரியம் சாதித்துக் கொள்வது எப்படி என்பதை வாழ்வியலாகக் கொண்டிருப்பதுதான் மக்களாகிய நம்முடைய பண்புமாகும்.

                ஆளுவோர், ஆளப்படுவோர் இருவரின் நடைமுறை வடிவம் வேறுபட்டதாக இருந்தாலும், இரண்டும் சாராம்சத்திலும், உள்ளடக்கத்திலும் ஒரே தன்மையைக் கொண்டதாகும். அதுதான் காரியவாதம்!        

                இதில் வர்ணம், குலம், மேல்சாதி, கீழ்சாதி, மதம், இனம், மொழி, வர்க்கம் என்ற எந்த வேறுபாடும் இருப்பதில்லை.

                அனைவரும், தனக்கு மேலே இருப்பதாக யார், யாரைக் கருதுகிறோமோ, அவர்களுக்கு முன்னால் கைகட்டி நிற்பதற்கு சிறிதும் தயங்குவதில்லை. தனக்குக் கீழே இருப்பதாகக் கருதினால், அவர்களை இழிவுபடுத்தத் தயங்குவதுமில்லை. அப்படிச் செய்வது நமது பிறப்புரிமையாகவே கருதிக்கொள்கிறோம். வேறு எதற்கும் ஒன்று சேர வக்கற்ற நாம், அவர்களை ஒடுக்குவதற்கு மட்டும் வீராவேசமாக ஒன்று சேர்ந்து கிளம்பி விடுகிறோம்.

                ஒரே சாதியானாலும், நமக்கு மேலே இருப்பவனுக்கு இடைவிடாது காட்டிக் கொடுத்துக் கொள்கிறோம். நம்மில் யாரும், யாரையும் நம்புவதில்லை.

                சாதி, இனம், நாடு, பண்பாடு, நாகரீகம், அரசியல் இவற்றில் எதையும் நாம், நமக்காக உருவாக்கிக் கொண்டது இல்லை. இவைகள் அனைத்தையும் நமக்காக, நமக்கு மேலே இருந்தவர்கள் அளித்தவைகள்-திணித்தவைகள்.

bank queue in india

                சரி, தவறு, நேர்மை, நேர்மை இன்மை, வேண்டப்பட்டது, வேண்டப்படாதது என்று எதுவும் இவ்வுலகில் இல்லை. எது, எப்போது, கிடைக்கிறதோ, எப்படிக் கிடைக்கிறதோ, அதை அப்படியே பயன்படுத்திக் கொள்ள தெரிந்திருக்க வேண்டும். இதுதான் புத்திசாலித்தனம். இதை ஏற்காதவன் பிழைக்கத் தெரியாத முட்டாள். இதுதான் இந்திய தேசியப் பண்பாடு. இதுதான் நமது வாழ்வியல் தத்துவம். இதுதான் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை. . . . . . !

                ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும், நமக்குக் கவலை இல்லை. வெள்ளையன் ஆண்டாலும், வேறு எவன் ஆண்டாலும் நமக்கு எந்தக் கவலையும் இல்லை.

                சாய்ந்தால், சாய்ந்த பக்கம் சாயும் செம்மறி ஆடுகளும், மனிதர்களாகிய நாமும் ஒன்றில்லைதான். இருவருக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது.

                கூட்டமாய் இருந்தாலும், மிருக மந்தைகள் எதிரிக்கு, எதிராய் ஒன்று சேருவதில் ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவுகளையும், தன்மைகளையும் கொண்டிருக்கின்றன. மந்தைகளில் சில விதி விலக்காகவும், சில அளவிற்கு உட்ப்பட்ட வகையிலும் ஒன்று திரளும் தன்மைகளைப் பெற்றிருக்கின்றன. ஆனால், இவைகள் எதுவுமே மனிதர்களின் தன்மைகளோடு ஒப்பிட முடியாதவைகளாகும். ஏனென்றால் எதிரிக்கு, எதிராய் ஒன்று திரளும் மனித ஆற்றல் வரம்புகளுக்கு உட்பட்டவைகள் அல்ல என்பதாலும், தேவைகளுக்கு ஏற்ப வளர்த்தெடுக்கப்படும் திறனைக் கொண்டிருப்பதாலும் அது, கூட்டுத்துவம் என்கிற புதிய பரிமாணத்தை எட்டுகிறது. இந்த கூட்டுத்துவப் பண்பில் நிலவும் பலவீனங்களும், போதாமையுமே தனக்கே உரிய வகையில் வினையாற்றுகின்றன. இந்த வினையாற்றல்கள்தான் காட்டிக் கொடுப்பது, புலம்பவது ஆகியவைகளாக வெளிப்படுகின்றன. ஆனால் எதிரியை எதிர் கொள்ள மிருகங்களுக்கு உள்ள வரம்பிற்குட்பட்ட ஆற்றல் அவைகளின் பலவீனமாயினும், அதுவே அவைகளை எதிர்மறையில் வினையாற்றத் தூண்டுவதில்லை. காலம், காலமாக ஒரே சுற்றுப்பாதையில், அவைகளை சுற்றி வரச் செய்கிறது. இதனாலேயே அவைகள் எதிரிக்கு காட்டிக் கொடுப்பதும் இல்லை. புலம்புவதும் இல்லை.

                காட்டிக் கொடுப்பதும், புலம்புவதும் மந்தைகளில் இருந்து, மனிதர்களாகிய நம்மை வேறுபடுத்தும் பண்புகள்தான்...! ஆனால் இவைகள் உயர்நிலை மனிதப் பண்புகளா? நிச்சயம் இல்லை! இவைகள் எதிரியை, எதிர் கொள்ள முடியாத பலவீனத்தின்- கூட்டுத்துவ குறைபாட்டின் – விளைவுகளாகும்.

                மனிதக் குரங்கிலிருந்து, மனிதன் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்ததாக விஞ்ஞானம் கூறுகிறது. எந்த அளவுக்கு மனிதன் தமக்கிடையே கூட்டுத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்கிறானோ, அந்த அளவுக்கு மந்தைகளின் இயல்புகளில் இருந்து விடுபடத் துவங்குகிறான். கும்பலாய் வாழ்வது மட்டுமல்ல சிந்தனையாலும், செயலாலும் மென்மேலும் நெருங்குவதன் மூலம் இந்த விடுபடல் வளர்த்தெடுக்கப்படுகிறது. இந்த விடுபடுதல் மனிதர்களிடையே எஞ்சியுள்ள மந்தைகளின் இயல்புகளைக் குறைத்து சமூகத் தரத்தை உயர்த்துகிறது. மனிதர்களுக்கிடையே கூட்டுத்துவம் எந்த அளவுக்கு முதிர்ச்சி அடைகிறதோ, அந்த அளவுக்கு மந்தைகளின் இயல்புகளில் இருந்து விலகி, நாம் முழு மனிதர்களாக வளர்வதை நோக்கியப் பயணத்தில் முன்னேறுகிறோம்.

                உருவத்தில் மனிதர்களாக இருந்தாலும், - கூட்டுத்துவ குறைபாட்டின் விளைவாக – சிந்தனை ரீதியாக மனித மந்தைகளாக, நாம் இருப்பதன் அடையாளங்கள்தான் காட்டிக்கொடுப்பதும், புலம்புவதும். . . . . . . !

                எதிரிக்கு எதிராய்ப் போராட முடியாத பலவீனத்தின், போதாமையின் இயல்பான பண்புகள்தான் இவைகள். மனித மந்தைத் தனத்தை கடக்காத மனித சமூகம் இவ்வுலகில் இல்லை. இந்தப் பண்பை உலகம் முழுக்க உள்ள சமூகங்கள், ஒரே தருணத்தில் கடந்து விடுவதுமில்லை. அதனதன் தனித்தன்மைகளுக்கு ஏற்ப கடக்கும் காலம் வேறுபடுகிறது. இந்தியச் சமூகமும் இதற்கு விலக்கில்லை.

                இன்னமும் மனித மந்தைகளின் ஆரம்ப நிலை பண்புகளைக் கொண்டிருக்கும், மனித சமூகங்களை இவ்வுலகில் விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படி விரல்விட்டு எண்ணக் கூடிய சமூகங்கள் ஒவ்வொன்றும், தமக்கே உரிய தனித் தன்மைகளை கொண்டிருக்கும்.

                 காட்டிக் கொடுப்பது என்பது சக மனிதர்களின் உழைப்பில் வசதியாய் இருப்போரின், இருக்க விரும்புவோரின் பண்பாடாகும்.

                புலம்புவதுதான் பெரும்பான்மை மனிதர்களின் இயல்பு. புலம்புவது என்ற செயல்பாடே, அநீதி தனக்கு ஏற்புடையது அல்ல என்பதன் வெளிப்பாடாகும். புலம்பும் ஒவ்வொருவரும், மற்றவர்களை புலம்ப வைக்கும் கதாபாத்திரம் தனக்கும் கிடைக்காதா என ஏங்குபவர்களாகவும் வாழுகிறோம். இதற்காக நாம் சிறிதும் வெட்கப்படுவதில்லை. இந்த வெட்கமின்மையே நம்மை புலம்ப வைக்கும் வில்லன்களோடு நம்மை மிக இயல்பாக சமரசம் செய்து கொள்ளவும், அவர்களை கதாநாயகர்களாக ஏற்கவும் தூண்டுகிறது.

                பெரும்பான்மை மக்களின் புலம்பலைத்தான் சமூக ஆர்வலர்கள் மாற்றத்திற்கான அடிப்படையாகப் பார்க்கின்றனர். புலம்பலை போராட்டமாக மாற்ற முடியாமல், காலம், காலமாக பின்னடைவையும், இழப்பையும் சந்திக்கிறார்கள். தமது சொந்த வாழ்வை இழப்பவர்கள் சமூகத்தின் எதிர்மறை அடையாளமாக மாறிப் போகிறார்கள். இந்த அடையாளங்கள் மனித மந்தைத் தனத்தை மேலும் கூர்மை அடையச் செய்கிறது. அதாவது உடலாலும், உள்ளத்தாலும் ஒற்றுமை இன்மையை, சுயநலத்தை மேலோங்க வைக்கிறது.

                அப்படியானால் இந்தியாவில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒற்றுமை இன்மையைத்தான் மனப்பூர்வமாக விரும்புகின்றனரா? மாற்றத்தை திட்டமிட்டே புறக்கணிக்கின்றனரா? எதனால் இந்தியச் சமூகம் இப்படி இருக்கிறது?

                இவைகள் தான் இந்தியச் சமூக ஆர்வலர்களுக்கு காலம், காலமாக புரியாத, புதிராக நீடிக்கிறது! புதிருக்கான விடை கிடைத்துவிட்டால், தீர்வுக்கான பாதையும் தெரிய ஆரம்பித்துவிடும். அது வரை புலம்புவோம் வாரீர்!

தொடரும்…

- சூறாவளி