எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்களின் ‘மாதொருபாகன்’ நாவல் கவுண்டர் சாதி பெண்களை இழிவுபடுத்தியதாக கூறி அவருக்கு எதிராக கவுண்டர் சாதி வெறியர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கங்கணம் கட்டிக்கொண்டு திருச்செங்கோடு முழுவதும் நாவலின் சில பக்கங்களை நகல் எடுத்து விநியோகம் செய்தார்கள். அதன் முலம் அது கவுண்டர் சாதிப் பெண்களை மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த தமிழ்ப் பெண்களையும் பெருமாள்முருகன் இழிவுபடுத்திவிட்டதாக ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டது. திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளியைச் சேர்ந்த பெருமாள்முருகன் நாமக்கலில் உள்ள அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

 perumal muruganநாவல் தொடர்பான பிரச்சினை எழுந்தபொழுது பெருமாள்முருகன் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளின் பெருமளவிலான பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் சாதியான கொங்கு வேளாள கவுண்டர்கள் அனைவரும் இந்தப் பிரச்சினையில் தங்களுக்குள் இருந்த வேறுபாடுகளை மறந்து ஒன்றாக சேர்ந்தார்கள். மிகப்பெரிய பொருளாதார பலம் கொண்ட அவர்கள் அரசியலில் காலுன்ற துடித்துக் கொண்டிருந்த காலமது. இதனால் இதை ஒரு வாய்ப்பாக அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இதற்கு ஆளும் கட்சியும் தனது முழு ஒத்துழைப்பை வழங்கியது. அதிமுகவின் அமைச்சரவையில் பெரும்பான்மையாக இருந்த கவுண்டார் சாதி அமைச்சர்களின் ஆதரவோடு பெருமாள்முருகனுக்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டது.

 அவரை மாவட்ட நிர்வாகம் அலைக்கழித்தது. கவுண்டர் சாதிவெறியர்களின் மத்தியில் 2015 ஜனவரி 10 அம் தேதி அவரை பகிரங்க மன்னிப்பு கேட்க வைத்தது. அத்தோடு நிற்காமல் தன்னுடைய நாவலையும் திரும்பப் பெருமாறு அவரை அச்சுறுத்தி பணிய வைத்தது. நாமக்கல்லிலோ இல்லை அவரது சொந்த ஊரான கூட்டப்பள்ளியிலோ இனி வாழவே முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கினார்கள். இதனால் பெருமாள் முருகனும் அவரது மனைவியும் சென்னைக்கு மாற்றலாகிப் போனார்கள்.

 ‘மாதொருபாகன்’ நாவல் பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது அவருக்கு ஆதரவாகவும் கவுண்டர் சாதிவெறியர்களுக்கு எதிராகவும் களத்தில் இறங்கி போராட யாரும் முன்வரவில்லை என்பதுதான் வேதனையான விசயம். நமக்குத் தெரிந்து CPM மட்டுமே போராட்டம் நடத்தியது. கட்சி சாராத மற்ற எழுத்தாளர்கள் தங்களுடைய பங்களிப்பாக எதிர்ப்புகளை பதிவு செய்தனர். சிலர் சென்னை போன்ற இடங்களில் சிறு அளவில் ஆர்ப்பாட்டங்கள் செய்தார்கள். சாதி ஒழிப்பு பேசிய பலர் திருச்செங்கோடு பகுதியிலோ, இல்லை நாமக்கல் பகுதியிலோ சிறு ஆர்ப்பாட்டம் கூட நடத்த துப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

 பெருமாள்முருகனை கவுண்டர்சாதி வெறியர்கள் கடித்துக் குதறுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் அவரும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதுதான். மேலும் தனது சாதி எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த பெருமாள்முருகன் ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அகமணத் திருமணத்தை தீவிரமாக வலியுறுத்தும் கவுண்டர் சாதி இயக்கங்கள் பெருமாள்முருகனை வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம்.

 இந்தச்சூழ்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் அவர்கள் பெருமாள் முருகன் அவர்களை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வைத்து அதை எழுத்துமூலமாக எழுதி வாங்கியதை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் பெருமாள் முருகனும் ஒரு மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்தார். மேலும் மாதொருபாகன் நாவலுக்குத் தடை விதிக்கக் கோரியும் பெருமாள்முருகனின் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்றும் கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே. கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு ஒரளவு சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பில் குறிப்பாக “இப்போது காலங்கள் மாறுகிறது. முன்பு எது ஏற்கப்படவில்லையோ அதுதான் பின்னாளில் ஏற்கப்படுகிறது. ஒரு நாவலை படிக்க வேண்டுமா வேண்டாமா என்பது அதைப் படிக்கும் வாசிப்பாளரின் விருப்பம். பிடித்தால் படிக்கட்டும் இல்லையெனில் அதை தூக்கி எறியட்டும். அதற்காக ஒரு படைப்பாளி என்ன எழுத வேண்டும், என்ன எழுதக்கூடாது என்பதை சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் தீர்மானிக்க முடியாது.” “…… நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது; யாரையும் கட்டுப்படுத்தாது. மேலும் பெருமாள் முருகன் மீதான குற்றவியல் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன. இந்த நாவல் விற்பனைக்கும் தடை விதிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” எனவும் தனது தீர்ப்பில் கூறியுள்ளனர். மேலும் படைப்பாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளைக் களைய கலை இலக்கியம் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் குழுவை தமிழக அரசு 3 மாதத்தில் அமைக்க வேண்டும் என்றும் உத்திரவிட்டு உள்ளனர்.

 ஒரு பக்கம் தீர்ப்பு மகிழ்ச்சியைத் தந்தாலும் இன்னொரு பக்கம் வருத்தத்தைத் தருகின்றது. காரணம் பெருமாள்முருகனுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கிய கவுண்டர் சாதி வெறியர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கச் செல்லி இந்தத் தீர்ப்பு கூறவில்லை. பெருமாள்முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த கவுண்டர் சாதி வெறியர்கள், அவர்களுக்குத் துணைபோன மாவட்ட நிர்வாகம் என பல பேர் இதில் தண்டிக்கப்பட வேண்டி இருக்கின்றார்கள். ஆனால் தீர்ப்போ எந்த மாநில அரசு இத்தனை அயோக்கியத்தனங்களையும் வெட்கம் கெட்டுப்போய் வேடிக்கை பார்த்துக் கொண்டு ஓட்டு வங்கிக்கு ஆசைப்பட்டு, கவுண்டர் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதோ அதே அரசிடம் எழுத்தாளர்களைப் பாதுகாக்க குழு அமைக்கச் சொல்வது வேடிக்கையாக உள்ளது. எழுத்தாளர் புலியூர் முருகேசன், ‘மீண்டெழும் பாண்டியர் வரலாறு’ என்ற நூலை எழுதிய செந்தில் மள்ளர் போன்றவர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் தான் என்பதை நாம் மறந்துவிட முடியாது. குறிப்பாக செந்தில் மள்ளர் மீது தேசத்துரோக வழக்கு கூட பதிவுசெய்யப்பட்டது.

 இப்படிப்பட்ட ஒரு அரசிடம் எழுத்தாளர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைப்பது புலியிடம் ஆடுகளைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைப்பதற்கு சமமானது. இதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. படைப்பாளிகளுக்குக் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறுகின்றார்கள். ஆனால் எழுத்தாளர்களை மிகவும் கீழ்த்தரமாக தரையில் உட்கார வைத்து விசாரிக்கும் அளவுக்குத்தான் காவல்துறையின் நாகரிகம் உள்ளதை நாம் சமீபகாலமாக பார்த்து வருகின்றோம். சட்ட அளவில் கருத்துச் சுதந்திரம் நிலை நாட்டப்பட்டதை வேண்டும் என்றால் நாம் கொண்டாடிக் கொள்ளலாம். ஆனால் அந்த கொண்டாட்டம் பொருளற்றது என்பதுதான் உண்மை.

 இந்தத் தீர்ப்பு எந்த வகையிலும் கவுண்டர் சாதி வெறியர்களைக் கட்டுப்படுத்தப் போவது கிடையாது. பெருமாள்முருகன் மீண்டும் தனது சொந்த ஊருக்குத் திரும்பும் வாய்ப்பைக்கூட இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை. கோகுல்ராஜை கொலை செய்தவர்கள், காவல்துறையின் உதவியுடன் டிஎஸ்பி விஷ்ணுபிரியாவை கொலை செய்தவர்கள் இன்றும் ஆட்சியாளர்களின் ஆசியுடன் சுதந்திரமாக இந்தப் பகுதியில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தத் தீர்ப்பை சாதிவெறியர்களுக்கு எதிரான சாட்டையடியாக நம்மால் பார்க்க முடியவில்லை.

 ‘மாதொருபாகன்’ திரும்ப விற்பனைக்கு வரவிருப்பது ஒருவகையில் மகிழ்ச்சிதான். காளியும், பொன்னாவும் திரும்பவும் நம்மோடு பேசப் போகின்றார்கள். பொன்னா தன்னை மலடி என்று முத்திரை குத்தி அசிங்கப்படுத்திய தன் சொந்த சாதி மக்களுக்கு எதிராக கிளந்தெழப் போகின்றாள். தன் கணவன் காளிக்கு இருக்கும் குறையைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை படுக்கக் கூப்பிட்ட தன் சொந்த சாதி ஆணாதிக்க வக்கிரம் பிடித்த அயோக்கியர்களுக்கு எதிராக பொன்னா திரும்ப வரப் போகின்றாள். திருச்செங்கோடு தேர்த்திருவிழாவின் பதினான்காம் நாளன்று நடக்கும் நிகழ்சியில் அவளுக்கான சாமியைத் தேடி அவள் புறப்பட தயாராக இருக்கின்றாள். அந்த சாமி ஒரு தலித்தாகக் கூட இருக்கலாம். அதுபற்றியெல்லாம் பொன்னாவுக்கு கவலை இல்லை. ஏனென்றால் பொன்னா ஏற்கனவே தலித்தான சக்தியைக் காதலித்தவள். ஆனால் வெளியே சொல்லத் திராணியற்றவள். இப்போது அந்தப் பிரச்சினை எல்லாம் இல்லை. அவளுடைய சொந்த சமூகம் அவள் மீது குத்திய மலடி என்ற பட்டத்தை அவளுக்கான சாமி மூலம் அவள் தீர்த்துக் கொள்ளப் போகின்றாள். சாமிக்கு ‘சாதி’ இல்லை என்று பொன்னா உளமாற நம்புகின்றாள். பொன்னாவின் மலடி பட்டம் நீங்கும் என்றால், நாம் ஏன் பொன்னாவின் நம்பிக்கையை பொய்யாக்க வேண்டும்!.

 பெருமாள்முருகன் இனி எழுத மாட்டேன் என்று சொன்ன போது நாம் கூட மிகவும் கோபப்பட்டோம். ஆனால் அவர் திரும்ப எழுதப் போவதாக சொல்லியிருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. வீரன் ஒரே நாளில் சாகின்றான்; கோழையோ ஒவ்வொரு நாளும் சாகின்றான் என்பதை பெருமாள் முருகன் தெரிந்து கொண்டால் போதும். அவரது எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள்!

- செ.கார்கி

Pin It