கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சுதந்திரம் பெற்றதாகச் சொல்லப்படும் 1947 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு முற்பகுதி வரை, காங்கிரஸ் தமிழகத்தை ஆட்சி செய்தது. திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்து 1949 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்கும் வரை காங்கிரசின் அடக்குமுறையை எதிர்த்து எதிர் நீச்சல் போட்டு வந்தது. பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் என்று தி.மு.க.வினரைப் பார்த்து எல்லோரும் சொல்வார்கள். அப்படி வந்தவர்கள் ஆட்சியில் பேசுவதற்குத் தடை, அதை மீறிப் பேசினால் கைது, அதுவும் சாதாரண பிரிவில் கைது செய்வதல்ல, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வது. போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் நடத்தினால் முதலில் அனுமதி, கடைசி நேரத்தில் அனுமதி, மறுப்பு மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டால் கைது செய்து சிறையில் தள்ளும் கொடூரம், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில்தான் அதிகமாக நடைபெற்று வருகிறது. 

திராவிட இயக்கத்தில் மேடைகள், என் தம்பிமார்களால் மாலை நேரத்து கல்லூரி வகுப்புகளாக மாறி வருகிறது என்று குதூகலமாக சொன்னவர், நூற்றாண்டு விழா நாயகர் அண்ணா. ஆனால், அதற்கான ஒரு வாய்ப்பினை சமீபகாலமாக தி.மு.க. அரசு மறுத்து வருவதும், காவல்துறை அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி கழகம் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பதும், ஈழம், தமிழின உரிமை மற்றும் கருத்துரிமை ஆகியவற்றின் பெயரால் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதியை ரத்து செய்தது போக தற்போது “சாதித் தீண்டாமைக்கெதிரான பெரியார் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்” நடத்தக்கூட காவல்துறை சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி சில பகுதிகளில் கூட்டம் நடத்துவதற்கு மறுக்கிறது. கழகம் நடத்த உள்ள அக்டோபர் 2 ஆம் தேதி போராட்டத்திற்கான விளக்க அறிவிப்பு பற்றி சுவர்களில் விளம்பரம் செய்தால் காவல்துறைக்கு கசக் கிறது; சுவரொட்டிகள் ஒட்டி மறைக்கப்படுகின்றன. இந்த எதேச்சாதிகார செயலினை கருத்துரிமையை மறுக்கும் செயலாகத்தான் நடுநிலையாளர்கள் பார்க்கிறார்கள். 

1942 இல் காங்கிரசார் நடத்திய ஆகஸ்டு புரட்சி அல்லது வெள்ளையனே வெளியேறு என்று கூறி கலவரத்தில் ஈடுபட்டபோது, அந்தப் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பாக மேற்படி போராட்டத்தினை விளக்கி காந்தியார் பேவதற்காக, வெள்ளை அரசு ஒரு ரயிலினை தந்து, ஊர் ஊராக பிரச்சாரம் செய்ய அனுமதித்தது. ஆனால், சுதந்திரம் வந்ததாகச் சொன்ன பிறகு, காங்கிரஸ் அரசு பேசுவதற்கும், எழுதுவதற்கும், ஏன் நாடகம் போடுவதற்குகூட தடை போட்டது. (உதாரணம் - நடிகவேள் எம்.ஆர். இராதா நாடகங்களை தடுக்க போடப்பட்ட சட்டம்) தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற ஒரு அடக்குமுறைச் சட்டத்தினை இயற்றி, இதில் அந்நாள் சட்டமன்ற  எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கலைஞர் கருணாநிதியை 1965இல் பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு கைது செய்து பாளையங் கோட்டை சிறையிலடைத்தது. அதன் தாக்கம், அடுத்த தேர்த லில் எதிரொலித்தது.

ஆனால், அதே தேசிய பாதுகாப்புச் சட்டம், ஈழத் தமிழர்களுக்காகவும், இங்குள்ள மீனவத் தமிழர்களுக்காகவும் ஆதரவாக பேசினால் அதே அடக்கு முறைச் சட்டத்தின் மூலம் கைது செய்து, கலைஞர் அரசு மகிழ்ச்சி அடைகிறது. தன் காங்கிரஸ் விசு வாசத்தைக் காட்டிக் கொள்ள ஒரு கேடயமாக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தினை பயன்படுத்துகிறது. அரசியலமைப்பு சட்டத்தில் 19(1)(ய) ஆம் பிரிவில் அடிப்படை உரிமைகளாக முதலாவதாக பேச்சு சுதந்திரத்தின் மூலம் கருத்துகளை வெளிப்படுத்த வகை செய்கிறது. அந்த கருத்துகள் அரசாங்கத்தின் சில கட்டுப்பாடுகளின் மூலம் 19(2) இல் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கடடுப்பாடுகள் கருத்துரிமையை பாதிப்பதாக இருக்கக் கூடாது என்று பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்கள் திரும்பத் திரும்ப கூறி வந்துள்ளன. 

1999 ஆம் ஆண்டில் பழ. நெடுமாறன், சென்னை உயர்நீதிமன்றத்தில், புலிகளுக்கான தடையினை இரத்து செய்ய வலியுறுத்தி பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து போடப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். ஜெயசிம்மபாபு, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பினை அளித்தார். (1999(1) LW (CRI) பக்கம் 73) மேற்படி தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்புகளான ரங்கராஜன் - எதிரி - பி. ஜெகஜீவன்ராம் (1989 (2) SCC 5741) என்ற வழக்கினையும் Himmatlal K. Shah- எதிர் காவல் ஆணையர் அகமதாபாத் (air 1973 sc 87) என்ற வழக்கையும் சுட்டிக்காட்டி போலீசாருக்கு இருக்கக்கூடிய அதிகாரம் ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான அதிகாரம் தான் என்றும் காலனி ஆதிக்க ஆங்கில அரசு இயற்றிய போலீஸ் சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பது என்பது அரசியல் சட்டம் உறுப்பு 19(1) இல் அளித்துள்ள உரிமை யினை மீறும் செயல்.

மேலும் ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரத்தினை வெளிப்படுத்துவதற்கு உரிமையினை அனுமதிப்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கடமை என்றும், வேண்டுமானால், அடிப்படை உரிமையான கருத்துரிமையினை மனுதாரர் வெளிப்படுத்துவதற்கு நிபந்தனைகளை விதிப்பதற்கு தடையேதும் இல்லை என்றும் கூறினார். அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்  பொதுக் கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. ஆட்சி 2001 இல் மாறியதே தவிர, அதன் காட்சிகள் மாறவில்லை என்பதற்கு உதாரணமாக பல இடங்களில் கழகத் தோழர்கள் நடத்த இருந்த பொதுக் கூட்டங்களுக்கு தீமிதி, மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஒவ்வொரு முறையும் நமது கழக மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, அனுமதி பெற்றுத் தருவதும், அதன் அடிப்படை யில் கூட்டங்கள் நடைபெறுவதும் வாடிக்கையானது. சென்னை மாவட்ட கழகத் தலைவர் தபசி குமரன், சென்னை தியாகராய நகரில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வல மும், அதைத் தொடர்ந்து தீ மிதியும் நடத்த அனுமதி கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. தினகரன், நமது கழகம் எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டி, விஞ்ஞான பூர்வமான நிகழ்ச்சிகளை போலீசார் ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர தடை செய்யக்கூடாது என்று கூறி கழகம் நடத்த இருந்த மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் மற்றும் தீ மிதி நிகழ்ச்சிகளை நடத்த காவல்துறைக்கு அனுமதி வழங்க ஆணையிட்டார். 

2004 ஆம் வருடத்தில் ஜெயலலிதா ஆட்சியில், மன்னார்குடி கழகத்தின் சார்பாக ராம. முத்துராமலிங்கம், காஞ்சி சங்கராச்சாரி கைது பற்றி விளக்கப் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டபோது காவல்துறை சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை காரணம் காட்டி அனுமதி மறுத்தது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது, சென்னை உயர்நீதிமன்றம், கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கிய அதே நேரத்தில் சங்கராச்சாரி கைது பற்றி பேசக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்தது. அதை எதிர்த்து இராம. முத்துராமலிங்கம் தொடர்ந்த அப்பீல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் என்.வி. பால சுப்ரமணியம் அடங்கிய அமர்வு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருந்தால் காவல்துறையினர், தாராளமாக பொதுக் கூட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்யலாம் என்று தீர்ப்பளித்தது 2004 (5) CTC 554) இந்த தீர்ப்பு வந்தவுடன் போலீசாருக்கு மிகுந்த கொண்டாட்டமாகி விட்டது. 

சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற காரணத்தைக் காட்டி பல கூட்டங்களுக்கான அனுமதியினை அன்றைய ஜெயலலிதா அரசு மறுத்தது. அதிரை எம்.எம்.இப்ராகிம் என்பவரும் அப்போதைய ராணிப்பேட்டை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், தாங்கள் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை காரணம் காட்டியும், கூட்டம் நடத்த அனுமதித்தால் காங்கிரசாருக்கும், அண்ணா தி.மு.க. தொண்டர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் கூறி, அனுமதி மறுத்ததை எதிர்த்து வழக்கு தொடுத்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.பி. சிவசுப்ரமணியன், தன்னுடைய தீர்ப்பில் (2005 (3) ஊகூஊ பக்கம் 260) சட்ட ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டியும் மோதல் ஏற்படும் சூழ்நிலையை காரணம் காட்டியும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையினை மறுதலிக்கக் கூடாது என்றும், இராம. முத்துராமலிங்கம் வழக்கில் அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உணர்வுபூர்வமான பிரச்சினையான சங்கராச்சாரியார் கைது சம்பந்தமாக வழங்கப்பட்டது என்றும், அந்தத் தீர்ப்பில்கூட டிவிஷன் பென்ச் அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையினை மறுக்கவில்லையென்றும், தனி நீதிபதி (நீதிபதி பி.டி. தினகரன்) அளித்த தீர்ப்பில்கூட அடிப்படை உரிமையை மறுக்கவில்லை என்றும் காவல்துறையினர் விதிக்கும் கட்டுப்பாடுகள் அரசியல் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமையின மறுக்கப்படக் கூடாது என்று கூறி, பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கியதோடு, கூட்டம் நடத்தத் தகுந்த பாதுகாப்பினையும் அளிக்க உத்தரவிட்டார். 

மீண்டும் தி.மு.க. ஆட்சி 2006 இல் வந்தது. ஆனாலும் இதே நிலைமை தொடரத்தான் செய்தது.  வேலூரில் கழக சார்பில் திலீபன், வழக்கு தொடர்ந்துதான் கூட்டம் நடத்த அனுமதி பெற்றார். மேட்டூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, சென்னை ஆகிய இடங்களில் நடத்தவிருந்த கூட்டங் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பின்பு நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்று நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் மட்டும் தான் இப்படியா என்றால், பக்கத்தில் இருக்கும் யூனியன் பிரதேசமான புதுவையிலும், புதுவை மாநில கழகத் தலைவர் லோகு. அய்யப்பன், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தவிருந்த பொதுக் கூட்டத்திற்கு அரியாங்குப்பம் காவல்துறை சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து லோகு. அய்யப்பன் தொடர்ந்த வழக்கினை (று.ஞ.சூடி. 36916.2007) விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. ஜோதி மணி பல்வேறு தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி, அரியாங்குப்பம் காவல் ஆய்வாளர் கூட்டம் நடத்த விதித்த தடையினை ரத்து செய்து கழகம் எந்த தேதியில் கூட்டம் நடத்த தீர்மானித்திருக்கிறதோ அந்த தேதிக்கு பொதுக் கூட்டம் நடத்த அனுமதித்ததும் 10 நாட்களுக்குள் உத்தரவு பிறப்பிக்கும்படியும் உத்தரவிட்டார். மேற்படி தீர்ப்பினை எதிர்த்து புதுவை அரசு மேல் முறையீடு செய்தது. மேல் முறையீட்டிலும் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, தன்னுடைய தீர்ப்பில் (2008(7) ஆடுது பக்கம் 245) பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும், புதிய மனுவினை அளித்து அனுமதி பெற வேண்டும் என்றும், பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் நடததும் எந்தவிதமான பொதுக் கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்காமல் இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளது. அதன் அடிப்படையில் புதுவை மாநிலக் கழகம் பொதுக் கூட்டத்தை நடத்தியது.

இதற்கிடையே நீதிபதி  பி.கே. மிஸ்ரா மற்றும் கே. சந்துரு ஆகியோர் அடங்கிய அமர்வு, சி.ஜே. ராஜன் என்ற வழக்கிலும் (2008 (3) ஆடுது பக்கம் 926) மற்றும் கழகத்தினர் தொடர்ந்த வேறு சில வழக்குகளிலும் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி அளித்திருந்தது. கே.டி. பச்சைமால் என்ற அ.தி.மு.க.வின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர், அந்த மாவட்ட அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்க, நாகர்கோவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டியும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்தால் பொது மக்களின் மத்தியில் விரோதத்தை வளர்க்கக் கூடியதாக அமையும் என்றும் எடுத்துக் கூறப்பட்டது. ஆர்ப்பாட்ட அனுமதியினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் (று.ஞ. சூடி.7361/2008)  அரசின் மேற்கண்ட வாதத்தினை ஏற்க மறுத்த நீதிபதி கே. சந்துரு, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்தார். பெரியார் திராவிடர் கழகம் தவிர மக்கள் கலை இலக்கியக் கழகம், முத்துக்குமார் நினைவு அனுசரிப்பதற்கு கூட்டம் நடத்த அனுமதி கேட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளும், திரைப்பட இயக்குனர் புகழேந்தி, திரைப்பட இயக்குனர் மனோஜ் ஆகியோரும் பொதுக் கூட்டம் மற்றும் அரங்கக் கூட்டம் நடத்துவதற்கும் அனுமதி யினை சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்றுதான் நடத்தினர். 

சமீபத்தில் சென்னை மாநகரமே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்ததற்குக் காரணம் தி.மு.க. நடத்திய ஒரு போராட்டமாகும். அது கர்நாடகாவில் இருக்கக்கூடிய சொத்துக் குவிப்பு வழக்கினை ஜெயலலிதா தாமதப் படுத்துவதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஆகும். பனகல் மாளிகைக்கு முன்பும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தினால் பொது மக்கள் எந்த அளவிற்கு அல்லல்பட்டனர் என்று சென்னைவாசிகளுக்குத்தான் தெரியும். நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கு சம்பந்தமாக தி.மு.க.வினர் ஒரு போராட்டம் நடத்தினர். அதற்கான அனுமதியினை அவர்களே கொடுத்துக் கொண்டனர். ஆனால், ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறை தடை விதித்தது. அ ந்த தடையும் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுத் தான் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீதிபதி வி. தனபாலன் அதற்கான அனுமதியினை அளித்து உத்தரவிட்டிருந்தார். இறுதி நேரத்தில் பொதுக் கூட்டத்திற்கான அனுமதியினை ரத்து செய்வதை காவல்துறை தவிர்க்க வேண்டும் என்றும் நீதிபதி என்.பால் வசந்த குமார் ஒரு தீர்ப்பில் (2010(4) உகூஊ) தெரிவித்துள்ளார். 

கருத்துரிமையை, கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இல்லாவிட்டால் ஒரு பார்வையுடனும் ஆட்சியில் இருந்தால் ஒரு பார்வையுடனும் செயல்பட்டு வருகிறார். கருத்துரிமை என்று சொன்னால் கலைஞரை பாராட்டுவதும், அவரை கவிதை மழையால் நனைய வைப்பதும்தான் என்ற நிலை வந்து விட்டது. மாறாக ஈழம், தமிழினம், தமிழின உரிமைகள், பகுத்தறிவு என்று பேசினால் தடை, கடைசி நேரத்தில் அனுமதி ரத்து, அதையும் மீறி பேசினால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது, ஆர்ப்பாட்டம் நடத்தினால் அதற்கும் கைது என்ற நடவடிக்கை தொடர்ந்தால் அரசியல் சட்டம் 19(1)(ய) இல் வழங்கியுள்ள கருத்துரிமையினை கருவறுக்கும் செயலாகவே வரலாறு பதிவு செய்யும்.