"திருட்டைப் பற்றி நீங்கள் விமர்சனம் செய்யலாம்; ஆனால் திருட்டில் ஈடுபட்ட திருடனின் செயலுக்கு உள்நோக்கம் கற்பிப்பது தவறு. கொலையைப் பற்றி நீங்கள் விமர்சனம் செய்யலாம்; ஆனால் கொலையாளி செய்த கொலைக்கு உள்நோக்கம் கற்பிப்பது தவறு. பாலியல் பலாத்காரத்தைப் பற்றி விமர்சிக்கலாம்; ஆனால் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் செயலுக்கு உள்நோக்கம் கற்பிப்பது தவறு" - இப்படி யாராவது உங்களிடம் சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? அவனை “போடா மெண்டல்” என்று சொல்வீர்கள். ஆனால் இதே கருத்தை நாட்டின் உயர்ந்த நீதி அமைப்பை வழி நடத்தும் மேன்மைமிகு நீதிபதிகள் சொன்னால்...? நாம் நிச்சயம் மதிப்புமிகு நீதிபதிகளை அப்படி சொல்ல மாட்டோம். காரணம் நீதிபதி பதவி என்பது ஒரு திருடனுடனோ கொலைகாரனுடனோ, பாலியல் குற்றவாளியுடனோ ஒப்பிடும் அளவுக்குக் கீழ்த்தரமான பதவி அல்ல. நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி அறத்தைக் காப்பாற்றும் பெரும்பணியை அவர்கள் செய்கின்றார்கள். அதனால் தனது தகுதிக்கும் தனக்கிருக்கும் பொறுப்புக்கும் ஏற்றார்போல அவர்கள் செயல்பட வேண்டும் என்பதுதான் நம்மைப் போன்ற சாமானிய மனிதர்களின் விருப்பமாகும்.
ஆனால் நீதிபதிகளோ தங்களை வானில் இருந்து வந்த தேவதூதுவன்களாகக் கருதுகின்றார்கள். தங்களை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதர்களாக அனைவரும் நினைக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றார்கள். நமக்கும் கூட நீதிபதிகள் அவ்வாறாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் அவர்கள் அப்படித்தான் இருக்கின்றார்களா?
“நீதிமன்றங்களின் தீர்ப்பை விமர்சிக்கலாம். ஆனால், நீதிபதிகளின் நோக்கத்தை விமர்சிப்பது சட்டப்படி நீதிமன்ற அவமதிப்பு” என்று சொல்வது எந்த வகையில் நேர்மையான செயல்?. நோக்கமில்லாமல்தான் நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளை வழங்குகின்றார்களா? எந்த ஆதாரங்களும் இல்லாத போதும் பொதுச் சமூகத்தின் மனசாட்சியை திருப்திபடுத்த அப்சல் குருவை தூக்கில் இட்டீர்களே... அது என்ன நோக்கமற்ற தீர்ப்பா? இல்லை காவி பயங்கரவாதிகளை திருப்தி செய்ய கொடுக்கப்பட்ட தீர்ப்பா? தன்முன்னால் சமர்பிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு கொடுத்திருந்தால் நீதிபதிகளின் தனிப்பட்ட நோக்கத்தை நாம் விமர்சனம் செய்யத் தேவையில்லை ஆனால் பொதுச் சமூகத்தின் மனசாட்சியை திருப்தி செய்ய தீர்ப்பு கொடுத்தால் நாம் எப்படி நீதிபதிகளின் தீர்ப்புக்கு நோக்கம் கற்பிக்காமல் இருக்க முடியும்?
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம், துளசிராம் பிரஜாபதி கொல்லப்பட்ட வழக்கில் இருந்து அமித்ஷாவை விடுவித்து, இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றத்திலிருந்து தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து ஓய்வு பெற்ற பிறகு மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றது நீதிபதிகளின் தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது என்ற மேன்மை மிகு நீதிபதிகளின் புனித கட்டளைக்குப் பொருந்திப் போவதாக இருக்கின்றதா?
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து அவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து பெங்களூரில் 50 கோடிக்கு வீடு கட்டியுள்ளார் என உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள் புகார் கொடுத்தாரே..!
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ரங்கநாத் மிஸ்ரா, கே.என்.சிங், A.M.அகமதி, M.M.புன்சி, A.S.ஆனந்த், Y.K.சபர்வால் உள்ளிட்ட எட்டு பேர் ஊழல் பேர்வழிகள் என முன்னாள் சட்ட அமைச்சர் சாந்திபூசனும், பிரசாந்த் பூசனும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தனரே..!
மேலூர் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதி மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்கள் அனுமதி இன்றி முறைகேடான வகையில் பட்டா நிலத்தில் அடுக்கி வைக்கப்பட்டது தொடர்பாக பி.ஆர். பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கில் ஆரம்பம் முதலே பி.ஆர்.பி க்கு ஆதரவாகவே செயல்பட்டு வருவதாகவும், பி.ஆர்.பி.யின் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட ஒரு பிரிவில் கீழ் மட்டுமே விசாரணை செய்கின்றார் எனவும், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மகேந்திர பூபதி மீது வழக்கு தொடரப்பட்டிருந்தாலும் அந்த வழக்கில் இருந்து பி.ஆர்.பியை வெளியே விட்டதோடு வழக்கைத் தொடர்ந்த முன்னாள் ஆட்சியாளர் அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு வழக்கறிஞர்கள் மீதும் குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 197(1பி) பிரிவின் படி வழக்கு பதிவு செய்யவும் உத்திரவிட்டாரே...!
இழப்பீடு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஒருவர், தமிழ்நாட்டில் தேசியமயமாக்கப்பட்ட பேருந்துகளை தனியார்மயப்படுத்த வேண்டும் எனக் கருத்து சொல்கின்றார். அதே போல சென்னை தாம்பரத்தில் இயங்கி வந்த கிறிஸ்தவக் கல்லூரி மாணவிகளுக்கு 2 பேராசிரியர்கள் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்கள் என்று வந்த புகாரின் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் சம்மந்தப்பட்ட பேராசிரியரை பணி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸைக் கொடுத்தது. இதை எதிர்த்து அந்தப் பேராசிரியர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் "ஆண், பெண் என இருபாலர் பயிலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் படிப்பது பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது அல்ல என்ற கருத்து பெற்றோர்கள் மத்தியில் நிலவுகிறது. அதே போல கட்டாய மதமாற்றத்திலும் சில நிறுவனங்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தரமான கல்வியை வழங்கினாலும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் நன்நெறியைப் போதிக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகி உள்ளது” என மதவெறியைக் கக்கினாரே..!
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டதாகவும், இதுகுறித்து விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி கபாடியா தன்னிடம் கூறியதாகவும் அதன் பேரில் விசாரணை நடத்தியதில் அவர் குற்றவாளி என உறுதியானதாகவும் ஆனால் அவரை டெல்லிக்கு நேரில் அழைத்து பதவி விலகும்படி நீதிபதி கபாடியா வலியுறுத்தத் தவறி விட்டார் எனவும், அதேபோல், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தான் இருந்தபோது, அங்கு பணியாற்றிய 5 நீதிபதிகள் மீதான புகார்கள் அடங்கிய பட்டியலை டெல்லியில் இருந்த அப்போதைய தலைமை நீதிபதி லஹோதியிடம் வழங்கியதாகவும், லஹோதி அனுமதி அளித்திருந்தால், அப்போதே அந்த 5 நீதிபதிகளையும் நீதிமன்றத்திற்கு வரவிடாமல் தன்னால் செய்திருக்க முடியும் என்றும், ஆனால் அதுபோன்றதொரு உறுதியான நிலைப்பாட்டை லஹோதி எடுக்க முன்வரவில்லை" என்றும் மார்க்கண்டேய கட்ஜூ குற்றம்சாட்டினாரே..!
நாமக்கல் மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருந்த மான்விழி, கிருஷ்ணகிரியில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய கே.விஜயகுமார், ராமநாதபுரத்தில் மாவட்ட முதன்மை நீதிபதியாகப் பதவி வகித்த பொன்பிரகாஷ் ஆகியோரை ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பணி நீக்கம் செய்தும், சென்னையில் மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றிய என்.ராஜலட்சுமி, டி.ஜெயஸ்ரீ போன்றோரின் ஊக்க ஊதியத்தை நிறுத்தி வைத்தும் நடந்ததே...! கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றிய நீதிபதி சாவித்ரி மீதான குற்றச்சாட்டுக்கு அவரின் ஊக்க ஊதியமும் நிறுத்தப்பட்டதே..!
எல்லாவற்றுக்கும் மேலாக ராஜஸ்தான் முதல்வராக வசுந்தரா இருக்கும் போது ராஜஸ்தான் கிரிமினல் சட்டத் திருத்த அவசரச் சட்டம் - 2017 என்ற அவசரச் சட்ட வரைவைக் கொண்டுவந்து பணியில் இருக்கும் நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடர்பாக அரசிடம் முன் அனுமதி பெறாமல் விசாரணை நடத்த தடை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதே...!
இப்போது சொல்லுங்கள் மேன்மை மிகு நீதிபதி அவர்களே! நீதிபதிகள் எந்த நோக்கமும் இல்லாமல்தான் தீர்ப்பு வழங்குகின்றார்களா என்று? நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை இன்னும் பொய்த்துப் போகாமல் உயிர்ப்போடு இருப்பதாக இன்னும் நீதிபதிகள் நம்பிக் கொண்டிருப்பதுதான் பெரும் வேடிக்கையாக இருக்கின்றது. அப்படியான நம்பிக்கைதான் இன்று பிரசாந்த் பூஷண் அவர்களிடம் “தயவு செய்து மன்னிப்பு கேட்டு விடுங்கள்... உங்களை நாங்கள் மன்னித்து விடுகின்றோம்” என்ற அளவிற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளை இறங்கிப் போக வைத்துள்ளது.
கடந்த ஜூன் 29-ஆம் தேதி அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரூ. 50 லட்சம் மதிப்பிலான பாஜக தலைவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளுடன் நாக்பூரில் உள்ள ராஜ் பவன் வளாகத்தில் ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுகிறார். அதுவும் உச்ச நீதிமன்றத்தை முடக்கி விட்டு குடிமக்கள் நீதி பெறும் அடிப்படை உரிமையை மறுக்கும் நிலையில்...” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு முன்பாக ஜூன் 27-ஆம் தேதி "எதிர்கால வரலாற்று ஆய்வாளர்கள் கடந்த 6 ஆண்டுகளில் ஒரு முறையான அவசரநிலை இல்லாமல் கூட இந்தியாவில் ஜனநாயகம் எவ்வாறு அழிக்கப்பட்டு விட்டது என்பதைப் பார்க்கும்போது, அவர்கள் குறிப்பாக இந்த அழிவில் உச்ச நீதிமன்றத்தின் பங்கை, மேலும் குறிப்பாக தலைமை நீதிபதிகளாக இருந்த நால்வரின் பங்கைப் பார்ப்பார்கள்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அப்பட்டமான உண்மையை அவர் கூறியதை சகித்துக் கொள்ள முடியாமல்தான் இன்று பிரசாந்த் பூஷணுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துவிட்டு அவரிடம் உச்சநீதி மன்றம் “தயவு மன்னிப்பு கேளுங்கள்... விட்டுவிடுகின்றோம்” என்று கதறிக் கொண்டு இருக்கின்றது.
அதற்காக பிரசாந்த் பூஷணை பெரிய போராளி போன்று சித்தரிப்பதும் பெரும் அபத்தமாகும். இன்று மோடி ஆட்சியில் அமரக் காரணமான அன்னா ஹசாரேவின் போலி ஊழல் எதிர்ப்பு நாடகத்தில் முக்கிய பங்காற்றியவர்தான் இவர். அதுமட்டுமல்ல உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 2017 ஆம் ஆண்டு, ஈவ் டீசிங்கை தடுக்கும் பொருட்டு சிறப்பு போலீஸ் படையை உருவாக்கி அதற்கு ரோமியோ எதிர்ப்புப் படை எனப் பெயரிட்டார். இதுபற்றி கருத்து தெரிவித்த பிரசாந்த் பூஷன், "ரோமியோ ஒரு பெண்ணைத்தான் காதலித்தான். ஆனால் பகவான் கிருஷ்ணன்தான் புகழ்பெற்ற ஈவ்டீசர். யோகி ஆதித்யநாத்துக்கு தையரியமிருந்தால், 'கிருஷ்ணா எதிர்ப்பு படை' என பெயர் சூட்டி அழைக்க முடியுமா?" என்று டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இதனையடுத்து, அவருக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த போது தனது டுவிட்டர் பதிவை நீக்கியதுடன், மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் என்பதுதான் இவரின் வரலாறு.
ஆனால் தற்போதையே அரசியல் சூழ்நிலையில் பிரசாந்த் பூஷணின் கருத்து முக்கியத்துவம் கொண்டது என்பதோடு நாட்டில் கருத்துச் சுதந்திரம் எப்படி உச்ச நீதிமன்றத்தாலேயே காலில் போட்டு நசுக்கப்படுகின்றது என்பதற்கும், அரசியல் ரீதியாக பார்ப்பன பாசிஸ்ட்கள் கட்டியமைத்து வைத்திருக்கும் எதிர் ஜனநாயகப் போக்கு நீதிமன்றங்கள் வரை எப்படி ஆட்கொள்ளப் பட்டிருக்கின்றது என்பதையும் அம்பலப்படுத்துவதாக உள்ளது.
“ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்திருக்கின்றது” என்பார் மார்க்ஸ். அது நீதிபதிகளின் வார்த்தைக்கும் பொருந்தும். அசமத்துவமான ஒரு சமூக அமைப்பில் அனைவருக்கும் ஒரே நீதி என்பதே பெரும் மோசடியான ஏமாற்று ஆகும். இந்தச் சமூக அமைப்பை தக்க வைக்க குறைந்த பட்சமாகவாவது நீதித்துறையின் பாலான மக்களின் நம்பிக்கையை நீதிமன்றங்களும் நீதிபதிகளும் பெறுவது கட்டாயமாகும். ஆனால் ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பே ஊழலிலும், அதிகார முறைகேட்டிலும் ஈடுபட்டு சீரழிந்து கிடக்கும் போது நீதிபதிகள் தங்களை மட்டும் ஏன் உத்தமர்களாக காட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிலைபாட்டிற்கு வந்து விட்டதன் விளைவே தனக்கு எதிராக பொதுச் சமூகத்தில் யார் கேள்வி எழுப்பினாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என மிரட்டும் பாசிசப் போக்கை நோக்கி நீதிபதிகளை நகர்த்தியுள்ளது.
இது வருங்காலங்களில் இன்னும் மோசமான நிலையை நோக்கி சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச் செல்லும் வழித்தடத்தில் பயணிக்கவே வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும் நீதித்துறையின் மிரட்டலுக்கு எதிராக ஒன்றுபட்டு குரல் கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றங்கள் என்பது நீதியைத் தரும் மன்றங்களாக இல்லாமல் வெறும் கருப்பு அங்கி அணிந்த ஜனநாயக விரோதிகளின் கூடாரமாகவே இருக்கும்.
- செ.கார்கி