இந்துத்துவா வழக்கு என்று அறியப்பட்ட மிக முக்கிய வழக்கில் உச்சநீதி மன்றம் தனது இறுதித் தீர்ப்பை 20 வருடங்களுக்குப் பிறகு வழங்கியிருக்கின்றது. இந்துத்துவா கருத்துக்களை முன்வைத்து பிரச்சாரம் செய்து மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற மனோகர் சோஷி என்பவர்க்கு எதிராக இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. மத அடிப்படையில் பிரச்சாரம் செய்து வெற்றிபெற்றதால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட இவ்வழக்கில் 1995 ஆம் ஆண்டே தீர்ப்பு வழங்கப்பட்டது. “இந்துத்துவா என்பது மக்களின் வாழ்க்கைமுறை; அதன் அடிப்படையில் வாக்கு சேகரித்தால் அது வேட்பாளரை பாதிக்காது” என அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும் அன்றில் இருந்து இன்றுவரை காவிபயங்கரவாதிகளுக்கு இந்துத்துவா என்ற சாதிய வர்ணாசிரம பார்ப்பன தத்துவத்தை நியாயப்படுத்த இது களம் அமைத்துக் கொடுத்தது. நீங்கள் பல்வேறு ஊடக விவாதங்களில் கூட பார்த்திருக்கலாம். பெரியாரிய, மார்க்சிய இயக்கத் தோழர்கள் இந்துத்துவாவை அம்பலப்படுத்தி பேசும் போதெல்லாம் நம்மை வாயடைக்க அவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது இதைத்தான். “இந்துத்துவா என்பதை ஒரு வாழ்க்கை நெறி என்று உச்சநீதிமன்றமே சொல்லியிருக்கின்றது. உங்களது பேச்சு உச்சநீதி மன்ற தீர்ப்பை அவமதிப்பது போல உள்ளது” என்று.
எனவே இந்தப் பின்னணியில் இருந்து நாம் இந்தத் தீர்ப்பை பார்க்கும் போது நிச்சயமாக இந்திய வரலாற்றில் ஒரு மிக முக்கிய தீர்ப்புதான். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லதித், ஏ.கே. கோயல், டி.ஒய்.சந்திரசூட்,எஸ்.ஏ. பாப்தே, எம்.பி.லோகுர், எல்.என்.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு 02/01/2017 அன்று தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. இதில் டி.எஸ்.தாக்குர்,எல்.என். ராவ், எம்.பி.லோகுர், எஸ்.ஏ. பாப்தே ஆகிய 4 பேரும் சாதி, மதம், இனம் ,மொழியின் அடிப்படையில் தேர்தலில் வாக்கு சேகரிப்பது சட்டவிரோதமானது மற்றும் முறையற்ற செயல் என்றும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123(3) பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ‘அவரது மதம்’ என்பது சட்டவிரோத நடவடிக்கைகளைப் பற்றியது. இங்கு மதம் என்பது வாக்காளர்கள், வேட்பாளர்கள் ஆகியோர்களுடைய ஏஜெண்ட்கள் என அனைவரையும் குறிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இது போன்ற பிரச்சினைகளைக் கையாளும் போது மதச்சார்பின்மையையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே தேர்தலில் சட்டவிதிகளின் படி சாதி, மதம், இனம் மொழியின் அடிப்படையில் வாக்கு சேகரிக்கக் கூடாது . தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் மதச்சார்பற்றவை. மக்களுக்கும் அவர்கள் வழிபடும் நபர்களுக்கும் உள்ள உறவு என்பது தனிப்பட்ட விருப்பத்தைப் பொருத்தது. எனவே ஜாதி, மதம், இனம், மொழியின் அடிப்படையில் வாக்கு சேகரிக்க முடியாது என தீர்ப்பு அளித்துள்ளனர். மற்ற மூன்று நீதிபதிகளும் இதற்கு மாறுபட்ட வகையில் தீர்ப்பு வழங்கினாலும் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பு ஏற்கப்பட்டிருக்கின்றது.( நன்றி: தமிழ் இந்து)
மிக முக்கியமான தீர்ப்பாக இதை நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது. சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றைப் பயன்படுத்தி வாக்கு சேகரிக்க முடியாது என்பது மேலோட்டமாக பார்க்கும் போது முற்போக்காகவே தெரிகின்றது. ஆனால் இது எப்படி சாத்தியமாகும்? சாதியக் கட்சிகளுக்கும், மதவாதக் கட்சிகளுக்கும், இன்னும் மொழியையும், இனத்தையும் முன்னிறுத்தி அரசியல் செய்துகொண்டிருக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்யாமல் இது போன்ற தீர்ப்புகள் கொடுப்பதால் பெரிதாக என்ன நடந்துவிடப் போகின்றது? இந்தியத் தேர்தலில் வெற்றி என்பதே சுதந்திரம் அடைந்து இன்று வரை சாதியையும், மதத்தையும், பணத்தையும் சார்ந்தே இயங்கி வந்துள்ளது. இனம், மொழி போன்றவை எல்லாம் தேர்தலில் அவ்வளவாக தொழிற்படாத காரணிகள். நீதிபதிகள் அனைத்தையும் சார்ந்தே தீர்ப்பு வழங்கி இருந்தாலும் முக்கியமாக நாம் சாதி, மதம், பணம் போன்றவற்றை மட்டுமே தேர்தலில் வாக்கு சேகரிக்க அரசியல் கட்சிகள் துருப்புச் சீட்டாக பயன்படுத்துகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
வெளிப்படையாக சாதியின் பெயரால் இயங்கும் கட்சிகளை வேண்டும் என்றால், இந்தத் தீர்ப்பு ஒரளவு கட்டுப்படுத்தலாம். ஆனால் பொதுவான பெயர்களில் கட்சியை பதிவு செய்து வைத்துக் கொண்டு சாதிய அரசியல் செய்யும் கட்சிகளை இந்தத் தீர்ப்பு நிச்சயமாக கட்டுப்படுத்தாது. உதாரணமாக நாம் தமிழ்நாட்டில் உள்ள சாதியின் பெயரை பிரநிதித்துவம் செய்யாத கட்சிகளை எடுத்துக் கொள்வோம். திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்றவை நேரடியாக தங்களை சாதிக்கட்சிகளாக அறிவித்துக் கொள்ளாதவை. ஆனால் அவை தேர்தலில் வேட்பாளர்களை எப்படி நிறுத்துகின்றன. எந்தத் தொகுதியில் எந்தச் சாதிக்காரன் அதிகம் இருக்கின்றானோ அவனுக்கே தேர்தலில் நிற்க சீட்டு வழங்கப்படுகின்றது. உதாரணத்திற்கு கொங்கு மண்டலத்தில் மேலே குறிப்பிட்ட அனைத்துக் கட்சிகளும் கவுண்டர் சாதி வேட்பாளர்களை மட்டுமே நிறுத்துபவை. ஆனால் இதே கொங்குமண்டலப் பகுதியில் செயல்படும் பல கவுண்டர் சாதி அமைப்புகள் உள்ளன. இப்போது உச்சநீதி மன்றத் தீர்ப்பின் படி இவர்கள் வெளிப்படையாக கவுண்டர் சாதியின் பெயரால் வாக்கு சேகரிக்க முடியாது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் திமுக, அதிமுக, தேமுதிக, மதிமுக போன்றவை நிச்சயம் கவுண்டர் வேட்பாளர்களைத் தான் நிறுத்தும். ஆனால் கவுண்டர் சாதியின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்காது. இது நுண் சாதிய அரசியல். இவர்களை எந்த வகையிலும் இந்தத் தீர்ப்பு கட்டுப்படுத்தாது.
இந்தியா முழுவதும் இதுதான் நிலைமை. வெளிப்படையான சாதியக் கட்சிகள் மற்றும் மதவாத கட்சிகளின் செல்வாக்கைவிட இப்படி சாதியின் பெயரையோ, மதத்தின் பெயரையோ பயன்படுத்தாமல் ஆனால் சாதிய , மதவாத அமைப்புகளைவிட அதைத் தீவிரமாக கடைபிடிக்கும் அமைப்புகளின் செல்வாக்குதான் அதிகம். மக்கள் பெரும்பாலும் அதுபோன்ற அமைப்புகளுக்குத்தான் வாக்களிக்கின்றார்கள். இப்போது இவர்களை இந்தத் தீர்ப்பு எந்த வகையில் கட்டுப்படுத்தும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? மேலும் பொத்தாம் பொதுவாக சாதியின் பெயரைப் பயன்படுத்தி வாக்கு சேகரிக்க கூடாது என்பது இந்திய சமூகத்தைப் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே படுகின்றது. மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் 131 தொகுதிகள் தனித்தொகுதிகள் ஆகும். இந்தத் தனித்தொகுதிகள் என்பது தலித்துகளுக்கு என்று வழங்கப்படுவது. மற்ற பொதுத்தொகுதிகளில் ஒரு பேச்சுக்கு யாரை வேண்டும் என்றாலும் நிறுத்தலாம். ஆனால் தனித்தொகுதிகளில் நிச்சயமாக தலித்துகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் என்பது விதி. தேர்தலில் சாதியைப் பயன்படுத்தி வாக்கு சேகரிப்பது குற்றம் என்றால் சாதியின் பொருட்டு வேட்பாளர் நிறுத்துவது மட்டும் எப்படி நியமான ஒன்றாக இருக்கும்? சட்டம் சாதியை ஏற்றுக்கொண்டதால்தான் தனித்தொகுதிகளை வழங்கியுள்ளது. அப்படி இருக்கும் போது சாதியைப் பயன்படுத்தி ஓட்டு கேட்கக்கூடாது என்று சொல்வது கேலிக்கூத்தாக உள்ளது.
ஆதிக்க சாதிகாரன் சாதியைப் பயன்படுத்தி ஓட்டு கேட்பதற்கும், இந்திய சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட தலித் மக்கள் சாதியைப் பயன்படுத்தி ஓட்டு கேட்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. முன்னது அதிபயங்கரமானது. பின்னது அந்தப் பயங்கரத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கானது. அதை நீதிபதிகள் புரிந்து கொள்ளாமல் இப்படி பொத்தாம் பொதுவாக தீர்ப்பு வழங்கியுள்ளது சரியான முறையில்லை. உண்மையிலேயே நீதிபதிகளுக்கு சமூக அக்கறை இருந்திருந்தால் குறைந்த பட்சம் ஆதிக்க சாதி அமைப்புகளையும், பெரும்பான்மை பேசும் மதவாத அமைப்புகளையும் தடை செய்திருக்கலாம். இந்தியாவில் 5000க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான சாதிகள், சாதிச் சங்கங்களை வைத்திருக்கின்றன. ஒவ்வொரு சாதியும் பல சாதிச் சங்கங்களைக் கூட வைத்திருக்கின்றன. இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பகுப்பாய்வு செய்து உண்மையில் இதில் சாதிய மனோபாவத்தை வளர்க்கும் கட்சிகள் எவை, தலித் மக்களின் நலனுக்கு உண்மையில் உழைக்கும் கட்சிகள் எவை என்று பார்த்திருக்க வேண்டும். ஒட்டுமொத்த சமூகமும் தலித்துகளைப் புறக்கணிக்கும் போது, அவர்களை தங்களில் ஒருவராய் ஏற்றுக்கொள்ளாத போது, அவர்கள் பொது நீர்நிலைகளைப் பயன்படுத்துவதையும், கோயில்களில் நுழைவதைத் தடுக்கும் போதும், அவர்களின் பொருளாதாரத்தைத் திட்டமிட்டு அழிக்கும் போதும் அவர்கள் ஒரு பெரும் அரசியல் சக்தியாய் ஒன்றுதிரள்வதற்குச் சாதியை சொல்லி ஓட்டுகேட்காமல் வேறு எதைச் சொல்லி ஓட்டுகேட்க முடியும்?
தலித்துக்கள் சாதியின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்பதையும், ஆதிக்க சாதிக்காரர்கள் சாதியின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்பதையும் நாம் ஒன்றுபோலக் கருத முடியாது. இந்தியாவில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை ஒட்டுமொத்த இந்திய சமூகமும் இன்னமும் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கிக் கொண்டுதான் உள்ளது. எனவே அவர்கள் தங்களுக்குள் உள்ள தாழ்த்தப்பட்டவன் என்ற குடையின் கீழ் ஒன்று திரண்டு தனக்கான உரிமைகளை வென்றெடுக்க போராடுவதை, ஓர் அரசியல் சக்தியாகத் திரள்வதை இது போன்ற தீர்ப்புகள் நிச்சயம் தடுக்கும். அந்த வகையில் நிச்சயம் இந்தத் தீர்ப்பு பிற்போக்குத்தனமானதே. சாதியையும் மதத்தையும் வெளிப்படையாக சொல்லித்தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. உ.பி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி, சாதி அடிப்படையில் வாக்களிக்காதீர்கள் என்றும், வளர்ச்சி வேண்டும் என்ற நோக்கத்திற்காக வாக்களியுங்கள் என்றும் பேசியிருக்கின்றார். இதுதான் மதவாதிகள் செயல்படும் முறை. 2013 ஆம் ஆண்டு இதே கூட்டம் தான் ஜாட்சாதி வெறியர்களுடன் கூட்டு போட்டு முசாபர் நகரில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தி 62 பேரைக் கொன்றுபோட்டது. இப்போது அதே வாய்தான் சாதியைப் பார்க்காதீர்கள் என்று சொல்கின்றது. எனவே இந்த அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தீர்ப்பு எந்த வகையிலும் பலன் அளிக்கப் போவதில்லை.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் சமச்சீரற்ற வளர்ச்சியில் மேடு பள்ளமாக இருக்கும் போது இந்திய அரசால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட குறிப்பிட்ட சாதி, மதம், இனம், மொழி சார்ந்த மக்கள் அதைத் தடுப்பதற்காக குறிப்பிட்ட அடையாளம் சார்ந்து ஓட்டு கேட்பதை நிச்சயம் தடுப்பது மோசமான பின்விளைவுகளையே ஏற்படுத்தும். அனைவரும் பொருளாதார மற்றும் சமூக நிலையில் சமம் என்ற நிலையை எட்டும்வரை அது போன்ற ஒன்றை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. ஆனால் நீதிபதிகளால் பார்க்க முடிகின்றது என்றால் அதை நாம் பார்ப்பனியத்துக்கு மறைமுகமாக உதவும் சதித்திட்டம் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டி இருக்கின்றது.
- செ.கார்கி