2016 சட்டமன்றத்தேர்தலில் திருபெருமந்தூர் சட்ட மன்ற தனி தொகுதி இரண்டு கோடி மக்களுக்கு குடிநீர் பிரச்சனைக்கான, குடிநீர் வணிகமாவதை தீர்மானிக்கப்போகும் தொகுதியாகும்.  சென்னைக்கும், வட தமிழகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக உணவளித்த தொகுதி இது…. இனிமேல்  சென்னை பெருநகருக்கு குடிநீர் வழங்கி வரும், வழங்கப்போகும் தொகுதி.

இதுவரை நடந்த  அனைத்து சட்டமன்ற- பாராளுமன்ற தேர்தல்களிலும் இங்கு காங்கிரஸ், அதிமுக, திமுக கட்சிகளும், இவைகள் மாறி மாறி அமைத்த சந்தர்ப்பவாத, கொள்கையற்ற கூட்டணிகள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 1967 முதல் 2011 வரை நடைபெற்ற 11 சட்டப்பேரவை தேர்தல்களில் அய்ந்து முறைகள்  காங்கிரசும், மூன்று முறைகள் திமுகவும். அதிமுக  இரண்டுமுறைகளும் வென்று உள்ளன. கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்உறுப்பினர் டி.யசோதாதவும், கடைசியாக 2011-ல் நடந்த தேர்தலில் அதிமுக கட்சியின் பெருமாளும் வெற்றிபெற்றனர். இந்த அனைத்து எம்.எல்.ஏ-கள், எம்.பிகள் ஆசிகளுடனும், இவர்களின் பினாமிகள் கூட்டு சதி திட்டங்களால் வளமான விவசாய பூமியான திருபெருமந்தூர் தொகுதி இன்று காங்கீர்ட் வனமாக, பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டு இருகின்றது. முப்போகமும் விளைந்த 500 த்திற்கும் மேலான ஏரிகள் வலை பின்னாலால் இலட்சகணக்கான ஏக்கர்கள் நீர்பாசனம் பெற்ற இந்த தொகுதி  பன்னாட்டு கம்பெனிகளின் நச்சு கழிவு மண்டலமாக மாற்றப்பட்டு விட்டது.  சென்னை பெருநகருக்கும் இந்த திருபெருமந்தூர் சட்ட மன்ற தொகுதிக்கும் உள்ள உறவு, பிணைப்பு, வரலாறு இவைகளைப்  பின்னோக்கி பார்ப்போம்! இன்றைய சிக்கல்களையும் சேர்த்து…

சென்னை நகர குடிநீரின் வரலாறு:

ஆங்கிலேயர்கள் தங்கள் வணிக நோக்கங்களுக்காகவும், நாடு பிடிக்கும் பேராசைக்காகவும்  பிரெச்சு வணிகர்களுடன் போரில் ஈடுபடவும்  கோட்டை கட்டுவதுடன்  சென்னை நகரின் வரலாறு தொடங்குவதாகப் பல வரலாற்று ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் எழுதுகின்றனர். இது பகுதி உண்மை மட்டுமாகும்.  கூவம், கொற்றலை, பாலாறு-இதனுடன் இணைக்கப்பட்ட அடையாறு என்ற மூன்று ஆறுகளில் முகத்தூவாரப்பகுதிகளின் நிலவியல் தொகுப்புகள் தான் இன்றைய சென்னை மாநகரம் ஆகும். பல ஆயிரங்கள், சில இலட்சங்கள் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்ததற்க்கான தொல்லியல், இலக்கிய சான்றுகள் பல உள்ளன. பழைய, புதிய கற்கால தொல்லியல் சான்றுகள் பல்லாவாரம், குத்தம்பாக்கம், மற்றும் கொற்றலை, பாலாற்று படுகை பகுதிகளில் உள்ள ஊர்களில் ஏராளமாக கிடைத்துள்ளன. ஏன்..அய்ந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆதிமனிதர்கள் வாழ்ந்த குடியம் குகைகள் கொற்றலை ஆற்றில் கரையில் இன்றும் இருக்கின்றன. இவை, பூண்டியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றன. இங்கு மொத்தம் 16 குகைகள் உள்ளன. இந்த ஆற்றங்கரைகளில் உழவு தொழிலும்,  ஆறுகளில் முகத்தூவாரப்பகுதிகளில் மீன்பிடி தொழிலும் செழித்து வளர்ந்தற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. வளமான கிராமங்களில் பழந்தமிழர்கள் தொடர்ந்து வாழ்ந்த பகுதிகள் இது. அதற்க்கான சான்றுகள் பல இருப்பதை நாம் வேறு சமயத்தில் விரிவாக காண்போம்.  இந்த தொன்மையான வரலாற்றுடன் இணைத்து ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரான நவீன சென்னை நகரின் வரலாற்றை புரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாததாகும். ஆங்கிலேயர்களால் மட்டுமே இங்கு நகர நாகரிகம் வளர்ந்தது என்பது நமது கடந்தகால வரலாற்றை குறுக்கி பார்க்கும் கண்ணோட்டதிற்கு அழைத்துச் சென்று விடும் அபாயம் உள்ளது.. 

பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயர்  கடற்கரை ஓரப்பகுதியை சந்திரகிரியின் அரசருக்கு சொந்தமான இடத்தை அந்த அரசரின் பிரதிநிதிகளான தாமர்லா சகோதரர்களிடம் இருந்து  வாங்கினர். அந்த தாமர்லா சகோதரர்கள்  தங்கள் தந்தையார் பெயரான சென்னப்ப நாயக்கர் பெயரை இங்கு உருவாக்கப்படும் ஊருக்கு சூட்ட வேண்டும் என்ற சரத்துடன் ஆவணத்தின் ஒரு கூறாகவே எழுதி பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனிக்கு விற்றனர்.  இந்த பகுதியில் ஆங்கிலேயர் 1641-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டை என்ற கோட்டையை  கட்டினர்.  வணிகத்தில் ஈடுபட்ட ஆங்கிலேயர்கள் தங்கள் குடும்பங்களுடன் ஒர் ஊராகவே இதை பாதுகாப்பு அகழியுடன் வடிவமைத்ததை இன்றும் காணலாம். ஏழூ கிணறு என்ற இடத்தில் பத்து பெரிய கிணறுகள் தோண்டி நீரேற்று கருவிகளை பொருத்தி குழாய்கள் மூலம் இந்த புனித ஜார்ஜ் கோட்டைக்கு நன்னீர் கொண்டுவரப்பட்டது.  அதில் மூன்று கிணறுகள் ஊற்று சரியாக சுரக்காததால் ஏழு கிணறுகள் மட்டும் பயன்படுத்தப்பட்டன்ன. பிரட்டிஷ்காரர்களுடன் வணிகங்கள் செய்தவர்கள், அதற்க்கான துணிகளை  நெய்தவர்கள், பிரட்டிஷ்காரர்களிடம் வேலையாட்களாக இருந்தவர்கள் இராயபுரம், தண்டையார் பேட்டை, கொருக்குப்பேட்டை இடங்களில் குடியேறினார்கள்.

இத்துடன் திருவல்லிக்கேணி, மைலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம் போன்ற சிற்றூர்கள் இணைந்து சென்னை நகரப்பகுதிகளாக உருவெடுத்தன. சென்னை நகர மக்கள்தொகை கூடிக் கொண்டேஇருந்தன.  பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப நன்னீர் தேவைகள் அதிகமாகின. 1866 ஆம் ஆண்டில்   சென்னை மக்கள்தொகை 4.7 இலட்சங்களாகும்.  இதற்க்கான முதல் திட்டம் பொதுப் பணித்துறை செயற்பொறியாளராக இருந்த பிரேசர் அவர்களால், 1866-யில் தொடங்கப்பட்டு 1872 ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. 

சென்னைக்கு வடக்கே பாயும் கொற்றலை ஆற்றில் தாமரைப்பாக்கம் ஊரின் அருகில் ஒரு அணையைக் கட்டி, அதிலிருந்து கால்வாய் வெட்டி சோழவரம் ஏரி, புழல் ஏரியுடன் இணைத்தனர். புழல் ஏரியில் நீரேற்று நிலையம் அமைத்து அங்கிருந்து கீழ்ப்பாக்கம் நீர்வழங்கல் இடத்திற்கு நீரை  திறந்த கால்வாய், பின்பு மூடிய குழாய் வழியே  கொண்டு வரப்பட்டது. அங்கு சுத்தம் செய்யப்பட்டு சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.

1901யில் சென்னை மக்கள் தொகை 5.10 இலட்சமாக பெருகிற்று. 1904- 1909 ஆம் ஆண்டுகளில்  பொறியாளர்கள் ஜோன்ஸ்யும்,   ஹர்முன்ஷி நவுரோஜியும்   சென்னை மக்களுக்கும்  அனைத்துக்குமான் நீர் என்ற திட்டத்தை நடைமுறை படுத்தினர். குடிக்க, சமைக்க, குளிக்க, துவைக்கமான என்று அனைத்துக்குமான நீரை  கீழ்ப்பாக்கம் நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வழங்கினர். சாதிரீதியாக பிரிக்கப்பட்டிருந்த நீர்பகிர்வு முறைக்கு முடிவுக்கு கொண்டுவர ஆங்கிலேயர்கள் முயன்றனர்.  

1909- 32ஆம் ஆண்டுகளில் மெட்ராஸின் புதிய குடிநீர் வழங்கல் திட்டத்தை கும்பினியர்கள் நடைமுறை படுத்தினர்.   இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில்  நீர் தொற்று நோய்களான காலரா , வாந்தி பேதி மெட்ராஸில் கொள்ளை நோயாக பரவி மனிதர்களை காவு வாங்கி பலி ஆவதை தீர்க்கவும்,  பெருகி கொண்டிருந்த மெட்ராஸின் மக்கள் வாழ்வாதார தேவை கருதியும் 1911 ஆம் ஆண்டு செப்டம்பர் மாம் " மெட்ராஸ் நகர குடிநீர் வழங்கல் திட்டம் " கும்பினி பொறியாளர் ஜே.டபுள்யு.மேன்டிலி என்பவரால் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டது. அன்றைய மெட்ராஸ் நகராண்மை கழகத்தினரால் (Corporation Of Madras ) 17.12.1914 யில் சென்னை மக்களின்  தேவைக்கு இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது..

1939-44 ஆம் ஆண்டுகளில் சென்னை மேயர் சத்திய மூர்த்தி அவர்களின் முன்முயற்சியில்  பூண்டி நீர்தேக்கம் கட்டப்பட்டது. அப்பொழுதைய கடும் வறட்சியும், நீர்பற்றாக்குறையும், வளர்ந்து கொண்டிருக்கும் மக்கள்தொகை பிரச்சனையை தீர்க்க இந்த திட்டம் பயன்பட்டது. இதன்பின்பு எந்த பெரிய குடிநீர் திட்டங்களும் இங்குள்ள நீர்வளத்தை பயன்படுத்தி இன்றுவரை ஆட்சியாளர்களால் செய்யப்பட வில்லை.

1964யில் சோழவரம், புழல் ஏரிகளில் இருந்து விவசாயத்திற்கு பாசனம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டு அந்த ஏரிகளின் நீர் முழுவதும் சென்னை குடிநீர்க்கானதாக செய்யப்பட்டது. அந்த நன்செய் நிலங்களுக்கான  ஆயக்கட்டுக்கான பணம் அளிக்கப்பட்டு புன்செய்நிலங்களாக ஆக்கப்பட்டது என்பதை இங்கு குறிப்பட வேண்டியது. இந்த ஏரிகளின் கரைகள் உயர்த்தப்பட்டு  நீர்மட்டம் உயர்த்தப்பட்டது. 1975 சென்னைக் குடிநீர் தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 111.95 மில்லியன் கன மீட்டர் அதாவது 3.95 டி.எம்.சி ஆகும். இதன்பின் நிலத்தடி நீர்தான் பெருகிவரும் மக்கள்தேவைக்காக பயன்படுத்தப்பட்டது.

சென்னையிலும், அதை சுற்றிலும் உள்ள  காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களில் உள்ள நீராதாரங்கள் முற்றிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக நினைத்து கொண்டு  அன்றைய தமிழக குடிநீர் பொறியாளர்கள், ஆட்சியாளர்கள் கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு நீரை கொண்டு வரும் திட்டத்தினை முன் மொழிந்தனர்.. நான்கு மாநிலங்கள் இந்த கிருஷ்ணா நதி நீர் பிரச்சனையில் இருந்தது.  பல்வேறு விவாதங்கள், சிக்கல்களை கடந்து 1983, ஏப்ரல் , 8ஆம் தேதி எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் இந்த தெலுங்கு கங்கா திட்டம் தொடங்க பட்டது.  1996 செப்டம்பர், 29 ஆம் தேதி கருணாநிதி ஆட்சி காலத்தில்  கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீர்   பூண்டி நீர்தேக்கத்திற்கு வந்து சேர்ந்தது. ஓப்பந்தத்தின் படி 15 டி.எம்.சி  ஒவ்வொரு ஆண்டும் தரப்பட வேண்டும். இன்றுவரை  அதிகப்பட்சமாக 7 டி.எம்.சி க்க்கு குறைவாகவே  கிருஷ்ணா நதிநீர்  சென்னைக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆட்சியாளர்களின் , அதிகாரிகளின் குறுகியசுயநலன்கள், குறுக்கீடுகள் இதற்கு பிரதான காரணங்களாகும்.. இந்த ஒரளவிற்கு தான் பயன் தந்தது.

திருபெருமந்தூர் சட்ட மன்ற தொகுதியும்  நன்னீர் நிலைகளும்:

இதற்கிடையில் திருபெருமந்தூர் சட்ட மன்ற தொகுதியில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி நீர்  உழவர்களின் எதிர்ப்புக்களுக்க்கு இடையில் ஹீண்டாய் கார் தொழிற்சாலைக்காகவும், இருங்காட்டு கோட்டை சிப்காட்டிற்க்காவும் 90களில் கொண்டு செல்லப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியால் பாசனம் பெறும் திருபெருமந்தூர் சட்ட மன்ற தொகுதி கிராமங்களில் உழவுதொழிலும், கைத்தறி நெசவுத்தொழிலும் பிரதானமாக இருந்தன. இந்த கிராமங்களை அருகில் இருந்த  திருமழிசை, பூந்தமல்லி, அனகாபுத்தூர் பகுதிகளிலும் கைத்தறி நெசவுத்தொழில் செழித்திருந்தது.  திருபெருமந்தூர் சட்ட மன்ற தொகுதியில் விளை நிலங்கள் வெள்ளாள முதலியார் சாதியினரிடமும், கைத்தறி நெசவுத்தொழில் செங்குந்தர் முதலியார் சாதியினரிடமும் கடந்த நூற்றாண்டுவரை பெருமளவில் இருந்தன. இந்த இரண்டு தொழில்களுக்கும் குறைந்த கூலிக்கு ஆட்கள் தேவைப்பட்டதால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை முதலியார் சாதி லாபியினால் சென்னை நகரின் விரிவாக்கமோ. தொழிற்சாலைகளோ இந்த பகுதிகளில் நடைபெறவில்லை. தவிர்க்க இயலாத முதலாளிய வளர்ர்ச்சியும், நகர விரிவாக்கமும் இணைந்து இந்த இரண்டு தொழில்களையும் நசுக்கி இல்லாமல் செய்து விட்டன. நிலம் வன்னியர் சாதியிடமும், தலித்த்துக்களிடம், பல்வேறு ரியல் எஸ்டேட் முதலாளிகளிடமும், பெரு முதலாளிகளிடம் படிப்படியாக கடந்த நூற்றாண்டின் இறுதியில் கைமாறியது. இன்று செம்பரம்பாக்கம் ஏரி நீர் முழுவதும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் சென்னைக் குடிநீராகானதாக, இருங்காட்டு கோட்டை சிப்காட்டிற்க்கான நீராக மாற்றப்பட்டு விட்டது.

soudri canel

செம்பரம்பாக்கம் ஏரியுடன் திருபெருந்தூர் ஏரி, பிள்ளைபாக்கம் ஏரியை இணைக்கும் சவுத்திரி கால்வாய்

செம்பரம்பாக்கம் ஏரி நீரை ( அதில் சேர்க்கப்படும் கிருஷ்ணா நீரையும் சேர்த்து..) சுத்திகரித்து சென்னைக்கு வழங்க 2007 யில் 530MLD கொள்ளளவு நீரை சுத்தகரிக்கும் மிகப் பெரிய சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்டது. 180 MLD  குடிநீர்  வீராணம் ஏரியில் இருந்து 230 கி.மீ குழாய் மூலம் செலுத்தப்பட்டு சென்னைக்கு கொண்டு வரும் வீராணம் திட்டம் 2004 யில் நடைமுறை படுத்தப்பட்டது. மேலும், கடல்நீரை குடிநீராக்கும் இரண்டு திட்டங்கள் ஆயிரக்கணக்கான கோடிகள் செலவில் காட்டுப்பள்ளியிலும், நெமிலியிலும்  2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன.

திருபெருமந்தூர் ஏரி, பிள்ளைபாக்கம் ஏரி, சோம்ங்கலம் ஏரி. என்று பல ஏரிகளின் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பன்னாட்டு கம்பெனிகளுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் சிப்காட்டிற்க்காக திமுக, அதிமுக ஆட்சிகளில் கையகப்படுத்துப்பட்டு விட்டன.

சென்னை மக்கள் தொகை இன்று ஒரு கோடியை நெருக்கி கொண்டிருக்கிறது. திருபெருமந்தூர் தொகுதி மக்கள்தொகையும்  பலமடங்கு பெருகி விட்டது.  தமிழகம் முழுவதும் பரவலாக தொழிற்சாலை மூலதனங்களை செய்வதற்கு மாற்றாக பெருமுதலாளிகளின் மிகை இலாப வெறிக்காக  சந்தை படுத்துதல்,, போக்குவரத்து, துறைமுக வசதிகளுக்காக சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் மட்டுமே மூலதனங்கள் குவிக்கப்பட்டன. எனவே, தாறுமாறாக சென்னையிலும், அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம் (திருபெருமந்தூர் தொகுதி, காஞ்சிபுரம் தொகுதிகள்….), திருவள்ளுர் மாவட்டங்களில் மக்கள்தொகை அதிகரித்தன. காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் செழித்திருந்த ஏரிபாசன விவசாயம் படிப்படியாக அழிக்கப்பட்டன. சூறாயாடும் முதலாளிய கொள்கை 90 களில் அறிமுகமாகி கடந்த 15 ஆண்டுகளில் தாறுமாறாக காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களில் , குறிப்பாக திருபெருமந்தூர் தொகுதியில் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டன.  இதனால் ஏரிகள் அதன் இணைப்பு கால்வாய்கள், நன்செய் நிலங்கள் அழிக்கப்பட்டன. இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் முற்றிலுமாகவும் விவசாயம் அழிக்கப்பட்டும், திருவள்ளுர் மாவட்டத்தில் குற்றுயிருமாக விவசாய தொழில் உள்ளது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி நீர்  குடிநீருக்காக மாற்றப்பட்டது. ஆனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் அனைத்து ஏரிகளின் நீர்வளம் பயன்படுத்தப்படாமல் வீணாகி வருகின்றன. இதன் பின்னணியில் திருபெருமந்தூர் சட்ட மன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த காங்கிரஸ், அதிமுக, திமுக கட்சியினர், அவர்களின் பினாமி அடியாட்களும் இருக்கின்றனர். இவர்கள் அதிகார ஆணவ பலத்தில் அலட்சியத்தில்தான் திருபெருந்தூர் சட்டமன்ற தொகுதி இன்று பன்னாட்டு கம்பெனிகள் வேட்டைகாடாக உள்ளது.  பன்னாட்டு கம்பெனிகளின் தரும் கையூட்டுகளால் பல நூறு கோடிகளில் இந்த தொகுதி எம்.எல்.ஏகள், அமைச்சர்கள் சொத்துக்களை வாங்கி பினாமி பெயர்களில் குவித்து விட்டனர். மக்களிடம் ஓட்டு பிச்சைகளில் வந்த இவர்கள் மக்களை குடிநீருக்கு அலைய விட்டு ஊழல் பணத்தில் குளித்து கொண்டிருக்கின்றனர்.

சிங்கார சென்னைக்கு நன்னீர் எங்கிருந்து வருகின்றது?                          

அத்துடன், நகரமயமாதல், அதிவேக வளர்ச்சி, சிங்கார சென்னை, ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மேலும் மேலும் நன்னீர் ஏரிகளை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இணைந்து அழித்து வருகின்றனர்.  காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களில்  விவசாயத்திற்காக ஏரிகள் இருந்தது என்பது உண்மை.. ஆனால் இன்று காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில்  விவசாயம் இல்லை அல்லது வெறும் பத்து சதவீதம் மட்டும்தான் நடைபெறுகின்றது. இருப்பினும் விவசாயத்தை விட அதிக தேவை நகரமயமாதல், வளர்ச்சிக்காக மக்கள்தொகை அதிகமாகும் பொழுது அவர்களுக்கு குடிநீர் மற்ற இதர தேவைகளுக்கு நன்னீர் தேவை அதிகம் இருக்கிறது.. இயற்கையை முற்றிலுமாக அழித்து விட்டு கான்கீரிட் காட்டிற்குள் சிங்கார சென்னை  இருக்க  போகின்றதா என்ன?

தண்ணீரை உற்பத்தி செய்ய முடியாது..அதனால் இயற்கை அளிக்கும் கொடையான நீரை  சேமிக்கும் ஏரிகளை அதன் இணைப்பு கால்வாய்களை கட்டாயம் பாதுகாக்க வேண்டும்..  இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்கும் கதையாகி விடக்கூடாது..  நன்னீர் நிலைகள் பாதுக்காக்கப்பட வேண்டும்.

ஆனால், உலகமயமாக்கல், சூறாயாடும் பெருமுதலாளியம் கொள்கைகளை நடைமுறை படுத்தும் ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு பறப்பதை பிடிப்பதாக மக்களிடம் சொன்னால்தான் மிகஅதிக இலாபம் என்று தெரியும். அதனால்தான் திமுக ஆட்சியில் வீராணம் திட்டம், அதிமுக ஆட்சியில் மீண்டும் புதிய வீராண திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் என்று  பல ஆயிரம் கோடிகள் செலவுகளை செய்து மந்திரத்தில் நீரை தயார் செய்து சென்னை மக்களுக்கு வழங்குகின்றனர். கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலைக்கு ஒவ்வொன்றுக்கும் 1000 கோடிகள் மூலதனம் செலவழிக்கப் படுகிறது. ஆண்டுதோறும் பல கோடிகள் இதனை நடைமுறை படுத்த செலவழிக்கப்பட வேண்டும்.

1923 ஆம் ஆண்டில் வீராணம் ஏரியின் கொள்ளளவு 41 மில்லியன கன மீட்டராகும். 1991 யில் இதைக் கணக்கிட்ட பொழுது 29 மில்லியன் கன மீட்டராக குறைந்திருந்தது.  சோழர் காலத்தில் வெட்டப்பட்ட இந்த ஏரியின் கொள்ளளவு பல நூற்றாண்டுகளாக, பல மன்னர்கள் ஆட்சிகளில் குறைய வில்லை. ஆனால், நம்முடைய ஒரு தலைமுறைக்குள் மூன்றில் ஒரு பகுதி மண் மேடிட்டு விட்டது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் என்பது போல தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ்-திமுக-அதிமுக கட்சிகள் ஏரிகளை, குளங்களை பராமரிக்கும் விதம் இதுதான்! இதுதான் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம்  ஏரிகள் முதல் ஆயிரக்கணக்கான  காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களில்,  திருபெருமந்தூர் தொகுதியில்  உள்ள ஏரிகளின் யதார்த்த நிலைமையாகும்.

ஏரிகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட பாசனப்பரப்பு 1.01 மில்லியன் ஹெக்டேர் நிலங்களாகும். இன்று அது பாதியாக 0.625 மில்லியன் ஹெக்டேராக சுருங்கி விட்டது.  டாக்டர், இஞ்சினியர், வக்கீல்கள், வணிகர்கள் இல்லாமல் இருக்க முடியும். ஆனால் விவசாயி இல்லாமல் இருக்க முடியாது.. விவசாயம் இல்லாத தமிழ்நாட்டை ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர்.

மனிதன் மட்டுமல்ல சமூகமும் இரண்டு கால்களில் நடக்க வேண்டும்..ஒரு காலில் நடத்ததன் விளைவு பேரிடரில் கடந்த ஆண்டு சென்னை சமூகம் மூழ்கி போனது… உலகமயமாக்கலுக்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் நீரை சேமிக்க பல தொழில்நுட்பங்களை தங்கள் கூட்டுஅனுபவம், கூட்டு சிந்தனை-அறிவு, கூட்டு உழைப்பால் உருவாக்கினர். ஆனால் 21 நூற்றாண்டில் அணு உலைகள், அணுகுண்டுகள், ராக்க்கெட்டுகள், ஏவுகணைகள் …புல்லட் ரயில் என்று புல்லட வேகத்தில் பறக்கும் ஆட்சியாளர்கல் இந்த ம்ழையில் வீணாக (..?) கடலில் கலந்த 370 டி.எம்.சி நன்னீரில் ஏன் சில டி.எம்.சிக்களை கூட சேமிக்க முடியவில்லை..   ஏன்..? இவர்களின் அதிவேகஅறிவியல், பிரமாண்டமான தொழில்நுட்பம் ஏன் தோற்றது..?

மக்களுக்கு சேவை செய்கின்ற உன்னதமான பணிக்காக சமூகத்தின் அரசியல் பொருளாதார முடிவுகளை எடுப்பதாக மத்திய-மாநில ஆட்சியாளர்கள், அரசு இயந்திரமானது தன்னை காட்டிக்கொள்கிறனர். ஆனாலும் அவை ஆளும் வர்க்கங்களான கார்ப்பரேட்கள், தரகு முதலாளிகள், உள்நாட்டு பெருமுதலாளிகள் மற்றும் உள்ளூர் ஆதிக்க சாதிகளின் மேல்மட்டத்தினரின்   பொருளாதார நலன்களுக்காகவே எப்போதும் சேவை செய்து செயல்பட்டு வருகிறது. அவ்வகையில் வேகமான தொழில் மயமாக்க பொருளாதாரத்தை நோக்கிய பெருமுதலாளிய வர்க்கங்களின் ஆர்வமும் அவர்களின் வளர்ச்சியுமே இன்று அரசின் வளர்ச்சி மாதிரியாக காட்டப்படுகிறது. இதன் காரணமாக தொழில்துறை உற்பத்தி மற்றும் சேவைத் துறைக்கு வழங்குகிற முன்னுரிமையை வேளாண்மைக்கு அரசு வழங்குவதில்லை. அதற்க்காக எந்த தார்மீக பொறுப்பும் இன்றி இயற்கை அழித்து சூறையாடுகின்றனர்.

 விளைவு,சென்னை,கோவை போன்ற நகரங்களில் மேலும் மேலும் மூலதனக் குவிப்பு, கிராமங்களிருந்து நகரங்களுக்கு விவசாயிகள் கூலித் தொழிலாளிகளாக இடப்பெயர்வு,வேகமான நகர்மயமாக்கல் என சங்கிலித்தொடர் நிகழ்வுகள் நடக்கின்றன. இச்சூழலில் வேளாண்மைக்கு பிராதனமாக உள்ள நிலப் பயன்பாடும், நீர் மேலாண்மையும், தொழில் மயமாக்க பொருளாதாரத்தால் கேள்விக்குட்படுத்தப்பட்டன. ஆக்கிரமிக்கப்பட்டன. அனைத்து நன்னீர் ஏரிகளும் ஆக்கிரமிக்கப்பட்டன. இராசயன கழிவுகளாக்கப்பட்டன. தொழிற் பேட்டைகள்,சிறப்பு தொழிற் பூங்காகளின் எழுச்சி, அதையொட்டிய மக்களின் இடப்பெயர்வுகள் தமிழகத்தின் நிலப்பயன்பாட்டின் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.  தமிழகத்தில் 42% விழுக்காடு நகரமயமாகியுள்ளது என 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு இவ்வுண்மையை உறுதி செய்கிறது. இப்பெரும் நிலப்பயன்பாடு மாற்றங்கள் , அதிவேக வளர்ச்சி பொருளாதாரம். நீர்வழிகளை திட்டமிடாத சென்னை பெருநகர திட்டவரைவு – I & II… ஏற்படுத்துகிற விளைவுகள்தான் சென்னை-கடலூர் பேரிடர் –பேரழிவாகும்.

சென்னை பெருநகர குடிநீர் தாகத்திற்க்கான தீர்வும் திருபெருமந்தூர் சட்டமன்ற தொகுதியும்…...

மக்கள் நல பொதுபணித்துறை பொறியாளரான ஜெய்சங்கர் அவர்கள் எந்த நீர்தேக்க திட்டங்களும் அந்தந்த பகுதியில், அருகாமையில் உள்ள மூலவளங்களை பயன்படுத்துவதாகவும், மையப்படுத்தப்பட்டதாக இல்லாமல் பல்வேறு பகுதிகள் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறார். மத்திய, மாநில அரசுகள் உதவியில் நடைபெறும் நீரியல், சூழலியல் பல கருத்தரங்களில் பல ஆண்டுகளாக இதைதான் வழிமொழிந்து விரிவாக விளக்குகின்றனர். 

pillaipakkam lake

சிதலமடைந்துள்ள பிள்ளைபாக்கம் ஏரி

தெற்காசிய நீர்வள ஆதராங்கள் கல்விநிறுவனத்தின் தலைவரான ஜனகராஜன் அவர்கள் “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் – மாவட்டங்கள்ல 1300மி.மீட்டர் மழை பெய்யற இடம். வடிகால் அமைப்பை நாம ஏற்கனவே பாழ்படுத்திட்டோம். 1971 topography படி திருவள்ளுர், காஞ்சிபுரம் வடிகால் திட்டத்தை நான் பார்த்தேன். அவ்வளவு நெருக்கமான, துல்லியமான ஒன்றுக்கொன்று பின்னி பிணைஞ்சி சிக்கலான் அமைப்பு. அவ்வளவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் நகரம் உருவாக்கப்படும்போது முதலில் நீர் மட்டம், வடிகால் தன்மை, சுற்றுச்சூழல் ஆகியவை முதலில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அங்கு நீர்நிலைகளுக்குத்தான் முதலில் முக்கியத்துவம் கொடுப்பர்.

• நம் சென்னை நகரத்தை எடுத்துக்கொண்டால் விரிவாக்கம் நடந்து கொண்டே இருக்கிறது. 171 சதுரகி.மீ, 471ச.கி.மீட்டர், 1171 பின்பு 8ஆயிரம் ச.கிமீ எனுமளவிற்கு காஞ்சிபுரம், திருவள்ளுர், அரக்கோணம் தாலுகா அனைத்தையும் உள்ளடக்கிய சிஎம்டிஏ திட்டம் உள்ளது. அப்படியென்றால் இங்கு கண்மூடித்தனமான விரிவாக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

• அப்படி நடக்கும்போது அத்திட்டத்தில் இயற்கை வளங்களை காப்பதற்கு, நீர்நிலைகளை காப்பதற்கு ஏதேனும் திட்டங்கள் உள்ளதா என்பதை பார்த்தால் எதுவுமில்லை. சிஎம்டிஏ மாஸ்டர் ப்ளான் 2- ஐ எடுத்துப் பார்த்தால், அதில் நீர்நிலைகளை பாதுகாக்கக்கூடிய திட்டங்கள் எதுவும் இல்லை. நிலப்பயன்பாடு பற்றி மட்டுமே பேசுகிறார்கள். கமர்ஷியல் கட்டுமானங்கள், இன்டஸ்ட்ரியல் ஏரியான்னு டீ மார்க்கெட் பண்றாங்களே தவிர, நீர்நிலைகளை காப்பதற்கான எந்த ஆலோசனைகளும் கிடையாது. ஒரு நாள் 35செ.மீட்டர், 40செ.மீட்டர் பெய்யுதுன்னா குறை சொல்லாதீங்க. இது வடகிழக்கு பருவமழை அப்படிதான் இருக்கும். நமக்கு தெரிந்ததுதான். நாம இயற்கையை சூறையாடிட்டு, தவறா பயன்படுத்திட்டு மழையை குறை சொல்லக்கூடாது. இதற்கெல்லாம் விலை கொடுப்பது மக்கள்தான் அவதிப்படுறாங்க.

இனிமேல் இருக்கின்ற நீர்நிலைகளையாவது பாதுகாத்தால், அடையாறை இனியும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் தடுத்தால், கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் அனைத்தையும் பாதுகாத்தால் மட்டுமே வெள்ள அபாயத்திலிருந்து நாம் தப்பிக்கமுடியும். சென்னை நீர்த்தாகம் அதிகமுள்ள நகரம்னு சொல்றாங்க. இவ்வளவு மழை பெய்யிற இடம் நீர்த்தாகம் உள்ள நகரம இருக்கமுடியாது. அது தவறு. இது மனிதர்களால் உருவான சிக்கல்.

சுருக்கமாகச் சொல்லப் போனால்...... Keep your bottom clean

ஸ்மார்ட் சிட்டி, சேட்டிலைட் சிட்டி உருவாக்கம் என்றால் ஒரு பெரிய மேம்பாலமோ, கட்டுமானமோ ஸ்மார்ட் சிட்டியாகிவிடாது. தலையை சுத்தமாக வைத்துக்கொண்டு, கீழ்ப்பகுதியை அசுத்தமாக வைத்துக்கொள்வது போல் செய்யக்கூடாது. முதலில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். சுத்தமான குடிநீர் கொடுக்கமுடியுமா…? மழை நீர் வடிகால், வெள்ளம் வராத ஒரு நல்ல அமைப்பு, சரியான குப்பை அகற்றும் முறை, திடக்கழிவு மேலாண்மை, E-waste management இதெல்லாமும் தான் ஒரு நகரத்தின் அடிப்படையான தேவைகளாக இருக்கமுடியும்….” என்கிறார்.

திருபெருமந்தூர் சட்டமன்ற தொகுதி இன்று முழுவதும் நகரமயமாகி .. இல்லை  நரகமாகி..விட்டது.. எந்த அடிப்படையான நீண்டகால திட்டங்களும், நிலைத்த வளர்ச்சிக்கான கட்டமைப்புகளும் , கொள்கைகளும் இல்லாமல்  கார்ப்பரேட் கம்பெனிகள், பெருமுதலாளிகளின் நலன்களில் இருந்து  எந்த வரையறை இல்லாமல் இங்குள்ள பல நூற்றாண்டுகள் பயன்பாட்டில் இருந்து செழிப்பான நீர்நிலை ஆதர அமைப்புகள் சூறையாடப்பட்டு வருகின்றன. இதற்கு மத்திய- மாநில ஆட்சியாளர்களும் இந்த ஆட்சி அதிகாரத்தில் இருந்த அதிமுக, திமுக, காங்கிரஸ், பி.ஜே.பி கட்சிகள் தான் முதன்மையான காரணமாகும்.

சென்னை பெருநகர, திருபெருமந்தூர் தொகுதி குடிநீர்தேவைக்கான மாற்று தீர்வு..                    

தண்ணீர் வணிக பொருள் அல்ல. ஆனால் அதிமுக, திமுக, காங்கிரஸ், பி.ஜே.பி கட்சிகள் நீரை வணிகமயமாக்கும் உலகமயமாக்கல் கொள்கைக்கு ஆதரவும் ஆதாயம் அடைகின்ற கட்சிகளாகும். திருபெருமந்தூர் தொகுதி நீர்நிலைகள் நிறைந்த பகுதி. இதில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியுடன் ஒவ்வொன்றும் 1500 ஏக்கர்கள் மேல்பரப்புள்ள திருபெருமந்தூர்  ஏரி, பிள்ளைபாக்கம் ஏரி, நேமம் ஏரி  நேரிடையாக இணைப்பு கால்வாய்களால் இணைக்கப்பட்டு உள்ளன.  பேரம்பாக்கம், கூடைப்பாக்கம், கொண்டஞ்சேரி, வெள்ளேரிதாங்கல், பாப்பரம்பாக்கம், புட்லூர், பாக்குப்பேட்டை, , சத்திரை, மப்பேடு போன்ற திருவள்ளுர் மாவட்டத்தின் மேடான ஊர்களிலுள்ள ஏரிகள் அனைத்தும் நேமம் ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

பிள்ளைப்பாக்கம் ஏரியுடன் பூந்தூர் ஏரி, மாம்பாக்கம் ஏரி, கடுவஞ்சேரி ஏரி, பெரிய சத்திரம் ஏரி, காரணை ஏரிகள்…என்று பல ஏரிகள் இணைந்துள்ளன. இதே போல் திருபெருமந்தூர் ஏரியுடன் பல ஏரிகளும் பாலாற்றுடன் கம்ப கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. சோமங்கலம் ஏரி, நந்தம்பாக்கம் ஏரி, நெல்லூர் ஏரி, அமரம்பேடு ஏரி, வெங்காடு ஏரி போன்ற ஏரிகள் சவுத்திரி கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியுடன் நேரிடையாக இணைந்துள்ளன. இந்த ஏரிகளில் பாசனப்பகுதிகள் சிப்காட்களாக மாற்றப்பட்டதால் இவைகளின் நீர்வளம் எந்த பயனும் இல்லாமல் ஆவியாகி வீணாகின்றன. இந்த ஏரிகளில் 10 டி.எம்.சி அளவிற்கு மேல் நன்னீரை சேமிக்கும் கொள்ளளவு உடையன.  இந்த ஏரிகளை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தினால் சென்னைக்கு பெருவெள்ளம் வராமல் தடுக்கப்படுவதுடன் , சென்னைக்கும், திருபெருமந்தூர் தொகுதி மக்களுக்கும் போதுமான நன்னீர் கிடைத்துவிடும். இதற்கு உலக வங்கியிடம் கடன் வாங்க தேவையில்லை. சில கோடிகள் செலவு செய்தால் போதும். மேலும் தூர்வாரும் பொழுது கிடைக்கும் மண் ஒரு லாரி 1000ரூபாய் (இரண்டு யூனிட்கள்) விலை போகும்..இதன் மூலம் பல கோடிகள் பணம் திரட்ட முடியும். இதன் மூலமே இத்திட்டத்தை நடைமுறை படுத்த முடியும்.

மேலும், இந்த ஏரிகளின் நீரை இயற்கையான புவி ஈர்ப்பு விசையின் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கோ, சென்னைக்கோ எந்தவிதமான செயற்கை எந்திர விசை இல்லாமல் கொண்டுவர முடியும். அதற்க்கான எந்த தனியான செலவும் தேவை இருக்காது. இந்த ஏரிகள் பாதுகாப்பதன் மூலம் பல்லூயிர்கள் பெருக்கமடைந்து சுற்றுபுர சூழல் செழிப்படையும். இப்பகுதிகளில் கோடை வெப்பத்தின் தாக்கம் குறைத்து, சுத்தமான காற்று மேம்படுத்தப்படும்.

இதுதான் நீண்டகால தேவைக்கான திட்டமாக இருக்க முடியும். மற்ற அனைத்தும்  நீரை வணிகமாக்க பயன்படும் திட்டங்களாகவே சென்று முடியும்.

திருபெருமந்தூர் சட்டமன்ற தொகுதியில் யார் தோற்கடிக்கப்பட வேண்டும்..? 

save porur lake

தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும்…. சிலர் தோற்பது மட்டும் சமூக நலனுக்கு அவசியம் என்பார் மனித உரிமை போராளி டாக்டர் பாலகோபால். இதன்படி திருபெருமந்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக, திமுக-காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள்  தோற்கடிக்கப்பட வேண்டும். அதிவேக வளர்ச்சி என்ற பெயரில் உலகமயமாக்கல் திட்டங்களை இந்த தொகுதியில் நடைமுறை படுத்த காரணமாக இருந்தவர்கள்.  நூற்றாண்டுகளாக தமிழ்மக்கள் பேணி காப்பாற்றிய நீர்நிலைகளை அழித்து பாதகர்கள் இந்த அதிமுக, திமுக-காங்கிரஸ் கட்சிகளின் முன்னாள் எம்.எல்.ஏகளும், எம்.பிகளும், இன்றைய வேட்பாளர்களும், இவர்களின் பினாமிகளான உள்ளூர் தலைவர்களும் ஆவார்கள். இவர்கள் திருபெருமந்தூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறுவது நம் தலையில் நாமே கொள்ளிகட்டை வைத்து சொறிந்து கொள்வது போன்றது. இந்த அதிமுக, திமுக-காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள் குற்றுயிராக உள்ள இந்த ஏரிகளை முற்றிலுமாக அழித்து தொழிற்சாலைகளின் கழிவு குட்டைகளாக்கி, பட்டா போட்டு விற்று ஏப்பம் விட்டு விடுவார்கள்.  ஒவ்வொரு ஓட்டு

க்கும் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்கள் மக்களுக்கு கையூட்டு வழங்குவது இந்த நன்னீர் நிலைகளை கபளீகரம் செய்ய நம்மிடம் இசைவு பெற வழங்கப்படும் அச்சாரமாகும்.

திருபெருமந்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக, திமுக-காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள் தோல்வியை தழுவ யாரை வெற்றி பெற செய்ய வேண்டும் …???

பதிலை தேடுங்கள்.. ! தேடாமல், விவாதிக்காமல், வரலாற்றை மீளாய்வு செய்யாமல், இயற்கையை நேசிக்காமல் விடை கிடைக்காது..!!

- கி.நடராசன்

Pin It