தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் நியமனத்தில் முழுமையாக அரசியல் சார்புடைய நபர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதாக சில நாட்களாக இந்நிகழ்வானது பெரும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் நியமனங்கள், செயல்பாடு போன்றவற்றையெல்லாம் சற்றே தள்ளிவைத்துவிட்டு, இத்தகைய தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித்தேர்வுகளையும், அதனால் சமுகத்தில் கட்டமைக்கப்படும் சில பிம்பங்களையும் உற்று நோக்கவேண்டிய கட்டயத்தில் நாம் இருக்கிறோம்.
பொதுவாக, போட்டித்தேர்வுகள் என்று எடுத்துக்கொண்டால், தமிழக அளவில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், ஆசிரியர் நியமன ஆணையம் நடத்தும் தேர்வுகள், தமிழ்நாடு சீறுடை பணியாளர்கள் தேர்வானையம் நடத்தும் தேர்வுகள், மற்றும் மாநில மற்றும் தேசிய அளவில் நடைப்பெறும் தகுதித்தேர்வுகள், ரயில்வே தேர்வுகள், வங்கிகள் நடத்தும் தேர்வுகள், முக்கியமாக, இந்திய குடிமையியல் பணியாளர்கள் தேர்வு ஆணையம் நடத்தும் குடிமையியல் பணிகளுக்கான தேர்வுகள் உள்ளிட்ட போன்றவற்றில் எல்லாம் சில புதிர்களும் பல மூட நம்பிக்கைகளும் இருக்கின்றன. இத்தகைய தேர்வுகள் எல்லாம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சமீபக்காலங்களில் மிக பரவலாக நடைப்பெறுகிறது.
தமிழகத்தை பொருத்தளவில், சமீபக்காலங்களில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் எண்ணிக்கையானது மிக அதிகளவில் உயர்ந்து வருகிறது. சில காலங்களுக்கு முன்பெல்லாம், சில காலியிடங்களுக்கு போட்டியிடும் தேர்வர்களின் விகிதமானது மிக குறைவாகவே இருந்து வந்தது.
ஆனால், கடந்த சில வருடங்களாக நடக்கும் போட்டித்தேர்வுகளில் காலியிடங்கள் மற்றும் தேர்வர்களின் விகதமானது பன்மடங்கு உயர்ந்து விட்டது. கடைசியாக நடந்த குருப் 2 தேர்வுகளில் கூட 1947 காலி பணியிடங்களுக்கு சுமார் எட்டு இலட்சம் தேர்வர்கள் தேர்வெழுதினார்கள், அடுத்த மாதம் வரவிருக்கும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு இந்த எண்ணிக்கையானது இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும், இந்த தேர்வு மட்டுமல்ல, இதுபோன்ற அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் இத்தகைய எண்ணிக்கையில் தேர்வர்கள் போட்டியிடுவதென்பது சமீப காலத்தில் மிக இயல்பாகிவிட்டது. இங்கு நமக்கு மிக இயல்பாய் எழக்கூடிய கேள்வி, இத்தனை தேர்வர்களும் உண்மையில் அவர்கள் போட்டியிடும் தேர்வுகளை தனது இலட்சியமாக கொண்டு எழுதுகின்றனரா? அல்லது எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்களா? இத்தகைய கேள்விகளுக்கு விடைக்கான வேண்டுமெனில், ஒரு மாணவரானவர் எத்தகைய அக மற்றும் புற சூழ்நிலைகளால் உந்தப்பட்டு தேர்வெழுத தன்னை நிர்பந்தித்து கொள்கிறார் என்பதை பார்க்கவேண்டும்.
பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு அடுத்து இருக்கும் வாய்ப்புகள் உயர்கல்வியாகும், அப்படிப்பட்ட உயர்கல்வியானது அனைத்து மாணவர்களுக்கும் முழுமையாக கிடைக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும், பள்ளிப்படிப்பிலும், சில மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரையும், பத்தாம் வகுப்பு வரையும் மற்றும் பனிரெண்டாம் வகுப்புடனும், பல மாணவர்கள் கல்விவாய்ப்பு, கிடைக்காமல், சமுக, பொருளாதார அல்லது நமது வடிக்கட்டும் கல்வியமைப்பின் பிரதிபலனாக உயர்கல்வி கிடைக்காமல் நிறுத்தப்படுகின்றனர். அடுத்து, கல்வியானது வியாபாரமாகாத கடந்த காலங்களில் அரசு கல்லூரிகள் மட்டும்தான் இயங்கிகொண்டிருந்தது, அப்போதெல்லாம், மிக அதிக மதிப்பெண் பெற்றவர்களால் மட்டுமே கல்லூரிகளில் இடம்பெறமுடியும், எனவே, அப்படிப்படித்து முடித்துவிட்டு வருபவர்களுக்கும் போதிய வேலைவாய்ப்பு இருந்தது, அல்லது பல போட்டித்தேர்வுகள் கடுமையான போட்டிகள் இல்லாமல் இருந்தது. ஆனால், கல்வி என்று வியாபரமானதோ, அன்றுமுதல், அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் கூட தனியார் கல்லூரிகளில் மிக சுலபமாக இடம் கிடைக்கப்பெற்றதால், பட்டதாரிகளின் எண்ணிக்கையானது பன்மடங்கு உயர்ந்துவிட்டது, ஒருவகையில் இந்த நிலையானது, பல மாணவர்களுக்கு பரவலாக கல்விவாய்ப்பை பெற்றுத்தந்திருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. எனினும், மாணவர்களுக்கு பரவலாக வழங்கப்பட்ட கல்வியானது, எண்ணிக்கையைவைத்து வேண்டுமானால், மிகப்பெரிய சாதனையாக இருக்கலாம். ஆனால், கல்வியின் தரத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறோம். கல்வி மிகபெரிய லாபம் கொழிக்கும் தொழிலாக மாறிபோனதன் விளைவுதான் புற்றீசல் போன்ற கல்லூரிகளின் தோற்றம். இருப்பினும், கல்வியின் தரத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது அரசு கல்லூரிகளுக்கும், தனியார் கல்லூரிகளுக்கும் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை.
பட்ட மேற்படிப்பை முடித்து வரும் ஒரு மாணவரின் அடுத்தக்கட்ட தேவை நல்ல வேலை. ஒரு பட்டதாரி பனிரெண்டு வருட படிப்பை முடித்துவிட்டு அடுத்து மூன்று அல்லது நான்கு வருட பட்டபடிப்பை முடிக்கிறார். இவர்களில், அடுத்தக்கட்ட முதுநிலை கல்வி படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறாமல், இருப்பவர்கள் தனது பட்டப்படிப்பை மட்டும்வைத்து வேலையை தேடிக்கொள்ளவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். முதுநிலை பட்டம் படித்தவரும் கிட்டத்தட்ட இதே நிலைக்குதான் தள்ளப்படுகிறார்கள். இத்தகைய நிலையில், நமது பரந்த தரமில்லாத கல்வியானது, பட்டதாரி மாணவனுக்கு, சுயதொழில் செய்யும் அளவிற்கு போதிய கல்வியை கொடுக்கவில்லை என்பதால், சுய தொழில் செய்வதில்லை, அதனால், பட்டதாரி தனியார் கம்பெனிகளில் வேலையை நோக்கி போகவேண்டிய கட்டாய நிலை உருவாகிறது. தனியார் கம்பெனிகளிலும், நாம் பரந்தளவில் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளதால், சாதாரண வேலைக்குகூட மிக கடுமையான போட்டியை எதிர்கொள்ளவேண்டியிருப்பதால், பட்டதாரியானவர்கள் மிக குறைந்த சம்பளத்திற்கு தற்காலிகமாக பணிபுரிய வேண்டிய ஓர் புற சூழ்நிலையையை உருவாக்கிவிடுகிறது, நமது கல்வியின் தரம். இத்தகைய சூழ்நிலையில் பட்டதாரியானவர்களின் முன் இருக்கும் வரமாக இருக்கும் வாய்ப்புதான் அரசு வேலை வாய்ப்புகள். அரசு வேலை வாய்ப்புகளுக்கு தேர்வாகவேண்டும் என்றால், போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளவேண்டிய நிலை உண்டாகிறது. ஏற்கனவே மூன்று அல்லது நான்கு வருட பட்டப்படிப்பை முடித்த பட்டதாரி அரசு நடத்தும் போட்டித்தேர்வுக்காக தன்னை தயார்படுத்திக்கொள்ள மேலும் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் செலவிடவேண்டியிருக்கிறது.
போட்டித்தேர்வுக்காக தயார்படுத்திக்கொள்ளும் காலம்தான் உண்மையில் பட்டதாரி தனது வாழ்வில் எதிர்க்கொள்ளும் மிக கடுமையான தருணங்களாகும். வீட்டின் பொருளாதார நிலை, பியர் குருப் அழுத்தம் போன்றவையோடு சில மாதங்கள் படிக்கும்போதுதான் தெரியும், தனியாக படிக்கமுடியாது என்று, இதன் காரணமாக, பயிற்சிமையங்களுக்கு பட்டதாரிகள் படையெடுக்க ஆரம்பிக்கின்றனர். இப்படி பயிற்சிமையங்களில் சில வருடங்கள் பயிற்சிபெற்றும் மிக கடுமையான போட்டியால் அனைவராலும் வேலைக்கு போக முடியாதல்லவா? எனவே, பட்டதாரியானவர் வருடந்தோரும், போட்டித்தேர்வுகளுக்கு தன்னை தயார்படுத்திகொள்வதே இலட்சியமாகக் கொண்டு இயங்கிவருவார்கள். இந்த முயற்சியின் விளைவால் பட்டதாரிகள் மிகபெரிய தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாக்கப்படுகிறார். அதாவது, போட்டிதேர்வுகளில் தன்னால் சரியாக தயார்படுத்திகொள்ள முடியவில்லை, தான் போட்டிபோடுவதற்கே தகுதி இல்லாதவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையானது பட்டதாரிகளுக்கு உருவாக்கபட்டுவிடுகிறது. இதனால், ஒரு பட்டதாரியானவர், தான் போட்டி தேர்வுக்கு ஒழுங்காக தயார்படுத்திகொள்ளமுடியவில்லை தன்னால் இயலவில்லை.
இத்தகைய நிலைக்கு காரணம் தனது இயலாமையே என்ற எண்ணமானது உருவாகிறது.
குறிப்பிட்ட இந்த சூழ்நிலையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் பல பிம்பங்கள் என்னவெனில், போட்டி தேர்வுகளுக்கு அடிப்படை கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்படுவது, குறிப்பிட்ட தேர்வைபொருத்து, எட்டாம் வகுப்பு முதல் அதிகப்பட்சமாக ஏதாவது ஒரு பட்டபடிப்பாகவே இருக்கும். இப்போது, கிராம நிர்வாக அதிகாரி தேர்வுக்கு அடிப்படை கல்வி தகுதி என்னவெனில், பத்தாம் வகுப்பு, இதன் காரணமாக பத்தாம் வகுப்பு படித்திருக்கும் அனைவரும், கிராம நிர்வாக அதிகாரி போட்டிக்கு விண்ணப்பித்து போட்டியிடுவார்கள், முடிவில், சில நூறு காலி பணியிடங்களுக்கு, பல இலட்சம் தேர்வர்கள் போட்டியிடுவார்கள், கடைசியாக தேர்வாகிறவர்கள் சில நூறு நபர்களாகவே இருப்பார்கள், இங்கு, அரசு தேர்வுகள் ஊழலற்று சிறப்பாக நடைப்பெறுகிறது அல்லது ஊழல் நிறைந்து காணப்படுகிறது, கட்சி சார்பு/சார்பற்றவர்கள் உறுப்பினர்களாக நியமனம் நடைப்பெறுகிறது என்பதை தாண்டி நாம் பார்க்கதவறுவது என்னவெனில், பத்தாம் வகுப்பு என்பதை கல்விதகுதியாக கொண்ட ஒரு கிராம நிர்வாக அதிகாரிக்கு எப்படி பல இலட்சம் பேர் போட்டிபோடமுடியும்.
குறிப்பிட்ட தகுதியான பத்தாம் வகுப்பு கல்வி தகுதி என்பது, பத்தாம் வகுப்புடன் கல்வியை முடித்து நின்றவர்கள் மட்டும்தானே அப்பணிக்கு முழு தகுதியாக இருக்கமுடியும், பத்தாம் வகுப்புதான் கிராம நிர்வாக அதிகாரிக்கு கல்வி தகுதி என்பதன் பொருள் என்னவெனில், பத்தாம் வகுப்பு முடித்த ஒருவரால் செய்யக்கூடிய அளவுக்கான பணிதான் கிராம நிர்வாக அதிகாரி பணி என்பது. அப்படி எனில், பத்தாம் வகுப்பு படித்த ஒருவருக்கு கிராமத்தை நிர்வகிக்கும் அளவிலான திறமை மற்றும் அறிவு இருக்கும் இருக்கவேண்டும் என்பதே கல்விதகுதிக்கான பொருள். இங்கு, பத்தாம் வகுப்பு மட்டுமே முடித்தவர்கள் அது எத்தகைய கடுமையான போட்டியாக இருந்தாலும் போட்டியிட்டு தேர்வாகுவது சிறந்ததாக இருக்கும். ஆனால், நடைமுறையில் கிராம நிர்வாக அதிகாரி தேர்வுக்கு பட்ட படிப்பை படித்தவர்களும் போட்டியிடுகின்றனர். ஆனால், இதில் நகைமுரண் என்னவெனில், அப்படி போட்டியிடும் பட்டதாரிகளும் குறிப்பிட்ட அப்பணிக்கு தேர்வாவதில்லை என்பது, பட்ட படிப்பு படித்தவர்கள்கூட சாதாரண கிராம நிர்வாக அதிகாரி பணிக்கான திறமைக்கூட இல்லையென்பதையே உணர்த்துகிறது. இதேபோலதான், பட்டப்படிப்பை தகுதியாக கொண்ட தேர்வை எழுதும் பட்டதாரிகளுக்கும் போதிய திறமை இல்லை என்பதை காட்டுகிறது. ஆனால், பட்டபடிப்பை தகுதியாக கொண்ட பணிக்கு இருக்கும் கடுமையான போட்டியைக்கொண்டு நாம், மிக சிறந்தவர்களை நமது தேர்வாணையங்கள் தேர்ந்தெடுப்பதாக நினைக்ககூடாது.
சாதாரணமாக, ஏதாவதுதொரு பட்டபடிப்பை தகுதியாக கொண்டு தேர்வை எழுதும் ஒரு பட்டதாரிக்கு, உதாரணரத்துக்கு சப்-கலெக்டர் தேர்வை எழுதும் ஒரு பட்டதாரி, பட்ட படிப்பு படித்துமுடித்து 21 வயதை தொடும்போது தேர்வை எழுதலாம். இந்த நடைமுறைதானே இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது என நினைக்கலாம். ஆனால், பட்டதாரியானவர் எந்தவித பயிற்சியும் முன் தயாரிப்புகளும் இல்லாமல் தேர்வை எழுதி வெற்றியடைந்தால் அது நமது கல்வியின் தரம். இதன்பொருள் என்னவெனில், படிக்கும் சராசரி காலத்திலேயே, எந்தவித பயிற்சியும் இல்லாமல், நமது கல்வியை மட்டும்கொண்டு மிக இயல்பாக, அதாவது, சப்-கலெக்டர் பணிக்கான திறமையை கற்றுக்கொள்வதுதான் ஒரு திறமையான பட்டதாரியின் அடையாளம் அதுதான் கல்வியின் நோக்கம். அதாவது, படித்துமுடித்து வரும் ஒரு பட்டதாரிக்கு இத்தகைய பணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை விசயங்களும் தெரிந்து இருக்கவேண்டும். ஆனால், நடைமுறையில், நடப்பது என்னவெனில், ஒரு பட்டதாரியானவர் உண்மையாக, ஒரு பட்டதாரிக்கான மிக சாதாரண திறமைகளைக்கூட பெறுவதில்லை. மாறாக, படித்து முடித்தபின், போட்டித்தேர்விற்கு என்று சில ஆண்டுகள் பயிற்சியை மேற்கொள்ளவேண்டிய நிலைமை உள்ளது. இந்நிலையானது எதனை குறிக்கிறது எனில், பட்டதாரியின் திறமையின்மையைத்தான் காட்டுக்கிறது. இதன் ஆதாரம்தான், பத்தாம் வகுப்பு கல்வி தகுதியைக்கொண்ட கிராம நிர்வாக அதிகாரி பணிக்கு ஒரு பட்டதாரி போட்டியிட்டு தோல்வியடைவது. இதுதான் நமது கல்வியின் தரம்.
மாறாக, பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியை கொண்ட ஒருவருக்கு பொதுவாக அடிப்படையான நடைமுறை அறிவுக்கூட இல்லை என்பதுதான் கள யதார்த்தம், அதைவிட, ஒரு பட்டதாரி, பத்தாம் வகுப்பை கல்விதகுதியாக கொண்ட கிராம நிர்வாக அதிகாரிக்குன்டான நடைமுறைத் தகுதிகூட இல்லை என்பதுதான் நமது கல்வியின் அவலத்தின் உச்சம். ஒரு மாணவருக்கு, அடிப்படை சட்ட அறிவு, பொருளாதார அறிவு, சமுக அறிவு, அறிவியல் அறிவு, பொது அறிவு போன்றவை அனைத்தும் படிக்கும் காலத்திலேயே தெரிந்திருக்கவேண்டியது அவசியம்தனே, இப்படி எந்த அடிப்படை அறிவையும் கற்றுக்கொள்ளாமல், படித்துமுடித்தவுடன் போட்டித்தேர்வுக்கு தகுதி என்றால் எப்படி சாத்தியம், அடுத்து, இவையனைத்தையும் கூடுதலாக சில வருட பயிற்சியின் மூலம் பெறமுடியும் என்றால், எதற்காக, பள்ளிக்கல்வியும், பட்டபடிப்பும், மாறாக, இந்த சில வருட பயிற்சியே போதுமானதாக இருக்குமே. மூன்று வருடமோ அல்லது நான்கு வருடமோ படிக்கும் கல்வியின் பயன்தான் என்ன? மாறாக, பட்டபடிப்பில் இருக்கும் பல துறைகளில் மேலும் ஒரு துறையாக, போட்டி தேர்வுக்கு தயாராகுவதையே ஒரு பாடப்பிரிவாக வைக்கலாம். இதன்மூலம், படிக்கும் மாணவருக்காவது மூன்று வருடங்கள் மிச்சமாவதுடன், தனியாக பயிற்சிமையங்களை நோக்கி ஓடத்தேவையில்லை, அதேப்போல, இளநிலை பட்டமும் கிடைத்துவிடும், அதன்மூலம், போட்டித்தேர்வுக்கு தேவையான கல்விதகுதியும் கிடைத்துவிடும்.
இந்திய குடிமையியல் பணிக்கு கல்வி தகுதி ஏதாவது ஒரு துறையில் குறைந்தபட்சம் ஒரு இளநிலை பட்டபடிப்பு, அப்படியெனில், பட்டப்படிப்பு படித்த அனைவருக்கும் மிக அடிப்படையாக இந்திய குடிமைப்பணிக்கான திறைமையும் அடிப்படை அறிவும் இருக்கவேண்டும். ஆனால், நடைமுறையில், இந்திய குடிமை பணி தேர்வுக்கு தயாராகும் பட்டதாரிகள் எப்படி தாயாராகிறார்கள், அடிப்படையாக தெரிந்து இருக்கவேண்டிய விசயங்களை எல்லாம் தெரிந்துகொள்ளாமல், மாறாக, பயிற்சிமையங்களை நாட தொடங்கிவிடுகின்றனர், இதன்படி சில ஆண்டுகள், தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு பின்பு தேர்வை எழுதுகின்றனர். எந்த பட்ட படிப்பாக இருந்தாலும், அதனுடைய நோக்கம் என்பது, இதுபோன்ற, இந்திய குடிமை பணியை நிர்வகிக்கும் திறைமையை உருவாக்குவதே ஆகும். ஆனால், நமது நாடு அப்படிப்பட்ட நிலையை பட்டப்படிப்பின்மூலம் உருவாக்கமல், மாறாக, சில ஆண்டுகள் பயிற்சிமையத்தின் பயிற்சியின் மூலம் அதை கொண்டு வருகிறது. சமுகத்துடன் கல்வியை பயிலாமல், பயிற்சிமையத்தின் மூலம் உருவாகும் நிர்வாகிகளுக்கு எப்படி சாதாரண மனிதனுன் நிலை தெரியும்.
இத்தகைய நடைமுறைகளை வைத்துக்கொண்டுதான் நாம் அரசாங்கத்தின் நிர்வாகிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.
நமது கல்வியானது வியாபாரமானதன் விளைவுதான் இத்தகை நிலைமை.தனியார்மயமாக்களில், கம்பெனிகளின், தேவைக்காக, தரமற்ற கல்வியை கொடுத்து, திறமையான பட்டதாரிகளை உருவாக்காமல், அதன்மூலம், கடுமையான போட்டியை திட்டமிட்டு உருவாக்கி, குறைந்த சம்பளத்தில் பட்டதாரிகளை உறிஞ்சுவதோடு மிக கடுமையான வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கிவைத்துள்ளது இன்றைய கல்வி வியாபாரம். அதனைவிடக்கொடுமையானது, இத்தகைய நிலையை பட்டதாரிகள் உணராதவாறு, நாம் இன்று பரவலாக விவாதித்துக்கொண்டிருக்கும் தேர்வு ஆணையங்களில் அரசியல் என்ற விவாதம்கூட தேவையற்றதே.
உலகமயமாதலின் இத்தகைய கோர விளைவை செயல்படுத்தும் உத்திதான் மிக பயங்கரமானது. அதாவது, ஒரு பட்டதாரியை ஒழுங்காக திறைமையாக உருவாக்காமல், அந்த பட்டதாரியை போட்டிதேர்வுகளுக்கு தயார் படுத்துவதன்மூலம், தான் முயற்சி செய்தால் வேலைக்குபோகலாம் என்ற எண்ணத்தை உருவாக்கி கடைசியில், தான் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியாததை தனது இயலாமையாக ஒரு பட்டதாரி தானே தனது தோல்விக்கு பொருப்பாக்கும் ஒரு உத்தியைதான் அரசாங்கங்கள் செய்துக்கொண்டிருக்கின்றன. அத்தகைய உத்திகளில் ஒரு கருவிதான், தேர்வாணையங்கள், இந்த தேர்வாணையங்கள்தான், ஒரு பட்டதாரியை உனது தோல்விக்கு காரணம் முழுக்கமுழுக்க நியே என்ற கருத்தை லாவகமாக திணிக்கிறது. இதன்மூலம், தரமான கல்வியை அரசு ஏன் கொடுக்கவில்லை, ஏன் நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை, மற்றும் இதர அரசியல் பிரச்சனைகள் எதையும் எதிர்த்து கேள்வி கேட்காதவாறு ஒரு பட்டதாரியின் உளவியலை மாற்றி அவனை அவனுக்கே தெரியாமல் அடிமைப்படுத்துகிறது.
பட்டதாரிகளின் சமுக, பொருளாதார மற்றும் அரசியல் சூல்நிலையைவைத்து, அவர்களின் சிந்தனையை மழுங்கடிப்பதன்மூலம் நாட்டின் ஊழலையும், இதர வாழ்வாதர பிரச்சனைகளில்கூட தலையிடமுடியாதவாறு இன்றைய கல்வி நிறுவனங்கள் ஒரு மாணவனை வடிவமைக்கிறது. இத்தகைய வடிவமைப்பின்மூலம், நமது நாட்டின் ஏராளமான வளங்கள் வீணடிக்கப்படுகிறது என்பதை விட சுரண்டப்படுகிறது, அதாவது கல்வியையும் கடைச்சரக்காக்கி மாணவர்களையெல்லாம் கல்வி நுகர்வோர்களாக்கி அதன்மூலம், என்றென்றும் மாணவர்களிடம் பொருளாதாரத்தை சுரண்டுவதோடு, அறிவை மழுங்கடிக்கவைத்து என்றென்றும் ஒடுக்கியே வைத்துள்ளது, உலகில் மிக விலைமதிப்பற்றது மனிதனின் நேரம், அத்தகைய நேரத்தை குழந்தை பருவத்திலிருந்து படிக்கும் காலம் முழுவதும் சுரண்டியே கொண்டிருக்கிறாது முதலாளித்துவமும் பொருப்பற்ற ஆட்சியும். எனவே நாம், விவாதிப்பது டிஎன்பிஎஸ்சி நியமனங்கள் பற்றியும்தான் ஏனெனில், கண்ணுக்கு தெரிந்த அரசியல் அது, ஆனால், பட்டதாரிகளின் பிரச்சனையானது கண்ணுக்கு புலப்படாத அரசியலாகும். எனவே முதலில் கண்ணுக்கு புலப்படாத அரசியலைப்பற்றி விவாதிக்க தொடங்குவோம். ஏனெனில் இளைஞர்கள்தான் இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கக்கூடிய வளம்.
- அ.தங்க அரசன்