நம் ஊரில் வெள்ளை வேட்டி கட்டியவனை விட காவி  வேட்டி கட்டியவனுக்கு எப்போதுமே தனி மரியாதை உள்ளது. காவி வேட்டி கட்டியவனை எல்லாம்  ஏதோ தெய்வாம்சம் பொருந்திய மாமனிதர்களாக மக்கள் பார்க்கின்றனர். இந்த உண்மையை நன்றாக தெரிந்துகொண்ட முடிச்சவிக்கி, மொள்ளமாரிகள் எல்லாம் இப்போது வெள்ளை வேட்டியில் இருந்து காவி வேட்டிக்கு மாறிவிட்டனர். நேற்றுதான் வேட்டி கட்ட ஆரம்பித்த இளசுகள் கூட இப்போதெல்லாம் காவி வேட்டி கட்டிக் கொள்வது பேசனாகிவிட்டது. நாம் ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்து அறிவியல் ரீதியாகப் பேசினாலும் ‘போடா புண்ணாக்கு’ என்று நம்மை சொல்லும் புத்திஜீவிகள், எவனாவது காவிவேட்டி கட்டிவந்து மலத்தையே கொடுத்தாலும் மனமுவந்து வாங்கித் தின்பார்கள். அவ்வளவு பவர் உள்ளது அந்தக் காவி வேட்டிக்கு.

Ramdev Patanjali

  வெறும் காவி வேட்டி மட்டும் கட்டிக்கொண்டு சீன் போடாமல், அப்படியே யோகா செய்வது, சோதிடம் பார்ப்பது, கைரேகை பார்ப்பது, குறி சொல்வது என ஆரம்பித்தீர்கள் என்றால், ஜெயலலிதா காலில் சாஸ்டாங்கமாக விழும் அரசியல் அடிமைகளைப்போல உங்களுக்கும் ஆன்மீக அடிமைகள் கிடைப்பார்கள். அவர்களை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். ஏன் அவர்களை வைத்து அரசியல் கூட செய்யலாம். உங்களுக்கு இன்னும் திறமை இருந்தால், அவர்களை வைத்து வியாபாரம் கூட செய்யலாம். அப்படி பல காவி வேட்டி கட்டிய காலிப்பயல்கள் எல்லாம் இப்போது பெரும் வியாபாரிகளாக மாறிவிட்டார்கள். அவர்களின் தலைமை குருவாக விளங்குபவர்  பாபா ராம்தேவ்.

  ஏறக்குறைய 15000 பேருக்கு மேல் ஆட்களை வைத்துக்கொண்டு 5000 கோடிகளுக்கு மேல் ஆண்டுக்கு வருமானம் ஈட்டும் ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தையே இன்று நடத்திக் கொண்டு இருக்கின்றார் என்றால் இதற்கெல்லாம் அடிப்படையில் அவர் போட்ட மூலதனம் காவி வேட்டியும், யோகாவும்தான். உணவுப்பொருட்கள், அழகு சாதனப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் என நூற்றுக்கணக்கான பொருட்களை இவரது நிறுவனம் உற்பத்தி செய்கின்றது. அதை நாடு முழுக்க உள்ள தனது கடைகளின் மூலமும், மற்ற கடைகளின் மூலமும் விற்பனை செய்கின்றது. ஒரு பக்கம் மனிதனின் அபிலாசைகளைக் கட்டுப்படுத்துவதாக சொல்லி யோகாவும், இன்னொரு பக்கம் அவனது கட்டற்ற ஆசைகளைக் காசாக்க நுகர்வு பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

  கார்ப்ரேட் முதலாளிகளின் பொருட்களை விட இந்த காவி வேட்டி கட்டிய முதலாளிகளின் பொருட்களுக்குச் சந்தை மதிப்பு அதிகமாகவே உள்ளது. ஏனென்றால் காவி வேட்டி சாமியார்கள் மீது குத்தப்பட்டுள்ள ஆன்மீக முத்திரை அவன் சந்தைப்படுத்தும் பொருட்கள் மீதும் குத்தப்பட்டுள்ளது. மக்களின் உடல் நலத்தை காக்க யோகா சொல்லிக் கொடுக்கும் சாமியார்  கண்டிப்பாக நல்ல பொருளைத்தான் தயாரித்து மக்களுக்குத் தருவார் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. மேலும் பசுமைப் புரட்சி, உலகமயமாக்கல் போன்றவற்றல் நஞ்சாக்கப்பட்ட உணவுகளையே பெரிதும் சார்ந்திருந்த இந்திய மக்களுக்கு இப்பொழுது எவனாவது இயற்கையான முறையில், வேதிப்பொருட்கள் பயன்படுத்தாமல் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள் என்றால் கூடுதல் விலை கொடுத்தாவது அதை வாங்கும் போக்கு ஏற்பட்டிருக்கின்றது. நஞ்சாக்கப்பட்ட உணவு பொருட்களைச் சாப்பிட்டு மாதாமாதம் சில ஆயிரங்களை மருத்துவமனைகளுக்கு அழுவதை விட சில நூறு ரூபாய்களை அதிகம் கொடுத்து வேதியியல் கலப்பற்ற பொருட்களை வாங்கிக்கொள்ள நடுத்தர வர்க்கம் விரும்புகின்றது.

  இந்த இடத்தில் தான் பல இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட  பொருட்களை விற்பனை செய்வதாக சொல்லிக் கொள்ளும் கடைகள் புற்றீசல் போல நாடு முழுவதும் பரவிவருகின்றன. மிக அதிக அளவிலும் விரைவாகவும் விற்கும் இந்த FMGC (fast moving consumer goods)  இந்திய சந்தை மதிப்பு 2 லட்சம் கோடிகளுக்கு மேல் என்று சொல்லப்படுகின்றது. எனவே வளர்ந்துவரும் இதன் சந்தை மதிப்பை நன்றாக தெரிந்துகொண்ட ராம்தேவ் ஏற்கெனவே தனக்கு உள்ள ஆன்மீக முத்திரையைப் பயன்படுத்தி கடையை விரித்துவிட்டார். நாடு முழுவதும் 15000 மேற்பட்ட பதஞ்சலி நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இதை இன்னும் விரிவுபடுத்தப் போவதாகவும் ராம் தேவ் சொல்லி இருக்கின்றார்.

  கருப்புப் பணத்தை ஒழிக்காமல் விடமாட்டேன் என்று  தேர்தல் சமயத்தில் பா.ஜ.கவிற்கு காவடி தூக்கிய ராம்தேவ், ஊழலை ஒழிக்க பாரத் சுவாபிமான் ஆந்தோலன் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். மேலும் இந்தியாவில் இந்தி மொழியை முதன்மை மொழியாக்க வேண்டும் என்றும், இந்திய ஆயுர்வேத மருத்துவ முறையை முதன்மை சிகிச்சை முறையாக கொண்டுவரப் படவேண்டும் என்றும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றார். இதன் மூலம் காவி பயங்கரவாதிகளுடன் எப்போதுமே நெருக்கமான உறவை பேணி வருகின்றார். இதற்குக் கைமாறாக இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் தயாரித்த பொருட்களைப் பதஞ்சலி நிறுவனத்தின் மூலம் விற்கும் வாய்ப்பை ராம்தேவுக்கு பா.ஜ.க வழங்கியுள்ளது.

 ராம்தேவின் பதஞ்சலி நிறுவனக் கடைகளில் பால் பொருட்கள், துரித உணவு வகைகள், அழகு சாதனப்பொருட்கள், மருந்துப்பொருட்கள் மட்டும் அல்லாமல் புத்திஜீவக் பீஜ் (மகனுக்கு உயிரளிக்கும் விதை) என்ற லேகியமும் விற்கப்படுகின்றது. இதற்காக பாராளுமன்றத்தில் சில எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்தும், மாநில சுகாதாரதுறை மற்றும் சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் இந்த பெயர் தவறானது என சொல்லியும் இந்த ரவுடி பாபா பெயரை மாற்ற முடியாது என சொல்லிவிட்டார். காவி வேட்டி கட்டியவனை இந்த நாட்டில் எவனும் ஒன்றும் செய்ய முடியாது என்பதற்கு  ராம்தேவும் ஒரு கூடுதல் உதாரணம்.

 அனைவரும் நல்லவன் என்று நம்பிக் கொண்டிருக்கும் இந்த  காவி சாமியாரின் உண்மையான சுயரூபத்தை தெரிந்துகொள்ள  இதை படியுங்கள் “ஞானிகள், ஆன்மீகவாதிகள் பெண்களிடம் தனிமையில் இருப்பதை தவிர்க்க வேண்டி எச்சரிக்கிறேன். இந்து சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி குறிப்பாக அவர்களுடைய அம்மாக்கள், மகள்கள், மாமியர்கள் ஆகியோரிடம் இருப்பதைக்கூட தவிர்க்க வேண்டும்”. இப்படி சொன்ன ஒரு வக்கிரம் பிடித்த அயோக்கிய பயலுக்கு கோடிக்கணக்கான பக்கதர்கள் இருக்கின்றார்கள் என்றால் அவர்களின் அறிவு வளர்ச்சியை என்னவென்று சொல்வது.

  போதாத குறைக்குத்  தனக்கு நோபல் பரிசு வேறு வழங்கவில்லை என்று மனக்குறை  இவனுக்கு இருக்கின்றது. கருப்பாக இருப்பதால்தான் தனக்கு நோபல் பரிசு வழங்கவில்லையாம். அண்ணன் சிவப்பாக இருந்தால் இந்நேரம் ஜந்தாறு நோபல் பரிசுகளை வாங்கியிருப்பார். தன்னுடைய நிறுவனம் தயாரிக்கும் அழகுசாதனப் பொருட்கள் எல்லாம் அடுத்தவனுக்குத்தான் வேலை செய்யும் போல. என்ன செய்வது இனி நீங்கள் காலையில் இருந்து இரவு தூங்கப்போகும் வரை அவருடைய பொருட்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். காலையில் எந்த நாளிதழைத் திறந்தாலும் ஏதாவது ஒரு புதிய பொருளை ராம்தேவ் அறிமுகப்படுத்துகின்றார். காவி வேட்டி கட்டியவன் பொய்  சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கை உள்ளவரை ராம்தேவ்களின் வளர்ச்சியை  யாரும் தடுக்க முடியாது.

- செ.கார்கி

Pin It