"ஆட்சிக் குழு உறுப்பினர் நிர்வாகப் பதவியில் பொறுப்பு வகிப்பதா? துணை வேந்தரின் செயலுக்குக் கண்டனம். ஆட்சிக் குழு பதவிக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார் உளவியல் துறை பேராசிரியர் கதிரவன்"

ஆட்சிக் குழு உறுப்பினர் என்பது நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் கொடுக்கும் ஒரு அமைப்பாகும். அவ்வாறான ஆட்சிக்குழுவில் உள்ளவரே கையெழுத்திட்டு பணி இடை நீக்க ஆணையைப் பேராசிரியர் வைத்தியனாதனுக்கு வழங்கி விட்டு இவரே எப்படி ஆட்சிக் குழுவில் ஒப்புதல் தர முடியும்? இந்த முறைகேட்டால் பேராசிரியர் கதிரவன் ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற தகுதியை இழந்து விட்டார். இவரை உடனடியாக ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

மேலும் சேலம் பெரியார் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் வைத்தியநாதன் தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவாலின் அரசாணையை மேற்கோளாகக் காட்டி "பதிவாளர் தேர்வினை நடத்த அரசு தடை விதிக்க வேண்டும்" என்று கடந்த பிப்ரவரியில் அரசுக்கு கடிதம் எழுதியதை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன.பேராசிரியர் வைத்தியநாதன் அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியோ செய்தியோ கொடுக்காத நிலையில் அரசுக்குக் கடிதம் அனுப்பியதை வைத்து எப்படி பணியிடை நீக்கம் செய்ய முடியும்? துணை வேந்தரின் அனைத்து ஊழல்களையும் வெளிக்கொண்டு வந்த ஒரே காரணத்தை வைத்து பணி இடை நீக்கம் செய்ததை ஏற்க முடியாது. உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிச்சாமி விசாரணையில் முக்கிய சாட்சியாக இருந்தவர் வைத்தியநாதன். மேலும் ஊழலுக்கு எதிராக சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் விசாரணையிலும் இவர் ஒரு சாட்சியாக இருந்துள்ளார். உயர்நீதி மன்ற நீதியரசர் வேல்முருகன் தனது உத்திரவில் ஜெகன்னாதன் சாட்சிகளைக் கலைக்கவோ மிரட்டவோ கூடாது என்ற உத்திரவிற்கு எதிராக துணை வேந்தர் சாட்சிகளை மிரட்டி உள்ளார்.

தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு மே19ஆம் நாள் பணி நிறைவு ஆக உள்ள துணை வேந்தரின் ஆணையின் அடிப்படையில் -செய்யப்பட்டுள்ள பேரா.வைத்தியநாதன் அவர்களின் இடை நீக்கத்தை -உடனடியாக ரத்து செய்ய வேண்டுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

- கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்,