கல்வி என்பது வெறுமனே பட்டம் பெறுவதற்கும், பதவி பெறுவதற்குமான ஒரு துருப்புச்சீட்டு அல்ல. கல்வி என்பது விடுதலையின் திறவுகோல். ஆளுமையின் குறியீடு. விழுமியங்களின் அடையாளம். வளர்ச்சியின் திசைகாட்டி. அங்கன்வாடி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை கல்வியின் ஒவ்வொரு அடுக்கிலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இத்தகைய புரிதலின் அடிப்படையில் கல்வியை அணுகினால், சில காத்திரமான இலட்சியங்களை நாம் தொகுத்துக் கொள்ள முடியும். இந்தப் புரிதலின் அடிப்படையில் கீழ் கண்ட பரிந்துரைகள் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கும் குழுவிற்கு முன் வைக்கப்படுகின்றன. ஒரு பகுதி பள்ளிக் கல்வி குறித்தும், மற்றொரு பகுதி உயர்கல்வி குறித்தும் அமைந்துள்ளன.

பகுதி -1

பள்ளிக் கல்வி குறித்த பார்வையும்-பரிந்துரைகளும்

மழலையர் கல்வி :

  • குழந்தைகள் கற்பதற்காகப் பள்ளிக்குள் நுழையும் வயது, கல்விக் கொள்கையில் மாநிலம் முழுவதும் ஒரே சீராகத் தீர்மானிக்கப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயதிற்கு முன்பாக பள்ளியில் அனுமதிக்கப்படுவது குற்றம் எனத் தடை செய்யப்பட வேண்டும். இப்படிப்பட்ட அடிப்படைவயதைத் தீர்மானிக்கக் குழந்தைகள் நல மருத்துவர், குழந்தைகள் மனநல மருத்துவர், உளநல ஆலோசகர், முற்போக்குக் கல்விச் சிந்தனையாளர்கள், கல்விக்களச் செயல்பாட்டாளர்கள், பெற்றோர்கள், ஓய்வு பெற்ற மழலைக் கல்விஆசிரியர்கள் இணைந்த மாநிலக் குழு ஒன்றினை அமைத்து அவர்களின் ஒருமித்த கருத்து அடிப்படையில் இந்த வயது நிர்ணயம் அமைந்திடல் வேண்டும்.
  • தமிழ்நாட்டில் ஆங்கில வழியில் மழலையர் பள்ளிகள் இயங்குவது எக்காரணம் கொண்டும் ஏற்கத்தக்கதல்ல! தமிழ் வழியில் மட்டுமே மழலையர் பள்ளிகள் இருக்க வேண்டும் எனும் சட்டம் இயற்றப்பட வேண்டும். இது மிகவும் அடிப்படையானது. இதற்கு எதிர்ப்புகள் வரக்கூடும். ஆனால், அதை எதிர்கொண்டு அரசு உறுதியாக வெற்றிபெற முடியும்.
  • முன் பருவக் கல்வி, அனைத்துப் பள்ளிகளிலும் தொடங்கப்பட வேண்டும். அதன் ஆசிரியர்கள் அதற்கான பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். விளையாட்டு, தமிழ்ப்பாடல்கள் என்பதாக மட்டுமே பயிற்றுமுறை இருத்தல் வேண்டும்.

தொடக்கக்கல்வி :

  • ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வகுப்புகள் உறுதியாகத் தாய்மொழியில் இருக்க வேண்டும்.பிறகு படிப்படியாக மற்ற வகுப்புகளுக்கும் அது விரிவு படுத்தப்பட வேண்டும். இத்திட்டம் ஏற்கெனவே கலைஞர் கருணாநிதி அவர்கள் கொண்டு வந்த திட்டம்தான். ஆனால், தனியார் கல்வி முதலாளிகள் வழக்கு மன்றத்தின் மூலம் இதற்குத் தவிர்ப்பு வாங்கி, பிறகு இத்திட்டத்தைப் பொருளற்றதாக மாற்றி விட்டனர். எனவே அப்படிப்பட்ட அவலநிலை மீண்டும் வராதிருக்கும் வகையில் சட்டப் பாதுகாப்பு அதற்கு வழங்கப்பட வேண்டும்.
  • இங்கு தாய்மொழி என்பது மொழிச் சிறுபான்மையினரையும் உள்ளடக்கியதாகும். மொழிச்சிறுபான்மையினர் விரும்பும் பட்சத்தில் தமிழ் மொழியை ஒரு பாடவேளையாகப் படிக்கலாம்
  • குறிப்பாக அரசுத் தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. மாணவர் எண்ணிக்கை குறைந்து விடும், பெற்றோர்கள் விரும்புவதில்லை எனும் காரணங்கள் ஆங்கில வழிக் கல்விக்கு ஆதரவாகக் கூறப்படுகின்றன. ஆனால், இந்தப் போக்கினை அரசு நினைத்தால் மாற்ற முடியும்.
  • போதிய ஆசிரியர்கள் இன்றி பல அரசுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதே போல், வகுப்பறைகள், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் பல பள்ளிகளில் இல்லை.
  • தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் ஓராசிரியர் பள்ளிகளுக்கும் ஈராசிரியர் பள்ளிகளுக்கும் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் நியமிக்க வேண்டும் .

எல்லாவற்றைக் காட்டிலும், ஆங்கிலவழிக் கல்வி இல்லை என்றால், தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும், வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விடும் எனும் நியாமான அச்சம் பெற்றோர்களிடம் உள்ளது. அதைப் போக்குவதற்கான ஆக்க வழியிலான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

  • 10 - ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பில் 80% வழங்கப்படும் எனவும், மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு எனவும் சட்டங்களைத் தமிழக அரசு இயற்ற வேண்டும். ஒரே நாடு எனக் கூறிவரும் பாரதீய ஜனதாக் கட்சி ஆளும் மாநிலங்களில் எல்லாம் இச்சட்டம் நடைமுறையில் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, ஆங்கில மொழித்திறன் அரசுப்பள்ளிகளில் மேம்படுத்த வேண்டும்.

எனவே இப்படிப்பட்ட நம்பிக்கையை ஊட்டத்தக்க மாற்றுப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதன் வழியாக மட்டுமே பெற்றோர்களிடையே தமிழ் வழிக் கல்வி குறித்த நம்பிக்கையை உருவாக்க முடியும்.

  • தொடக்கக்கல்வியில் ஆசிரியர் - மாணவர் விகிதம் 1 : 20 என்பதாக இருக்க வேண்டும்.
  • தொடக்கக்கல்விப் பாடத்திட்டத்தில், விளையாட்டு / இசை / ஓவியம் / கைவினைப்பொருள் தயாரித்தல் / குடிமைப் பயிற்சி போன்றவை முக்கியத்துவம் பெற வேண்டும்.
  • வரலாறுப் பாடங்கள் வரலாற்றுத் தரவுகள் வாயிலாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.கட்டுக்கதைகளை வரலாறாக உருமாற்றக் கூடாது
  • இந்திய வரலாற்றைக் காட்டிலும், தமிழக வரலாறு முக்கியமாக இடம் பெற வேண்டும். வ.உ.சி., பெரியார், வேலுநாச்சியார், தீரன் சின்னமலை, மாவீரன் பொல்லான், அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், பாரதி, பாரதிதாசன், திரு.வி.க., அண்ணா போன்றோரது வாழ்வும் பணியும் குறித்துப் பாடபுத்தகத்தில் இடம் பெற வேண்டும்.
  • மூட நம்பிக்கையை வளர்க்கும் புராணக்கதைகள், பாகுபாட்டை வெளிப்படுத்தும் கருத்துக்கள் ஆகியன தவிர்க்கப்பட வேண்டும். அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் குறிக்கோளுடன் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
  • பாடத்திட்டம் குறித்து 2016 ஏப்ரல் 26 அன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முக்கியமானது. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் திருக்குறள் கட்டாயப் பாடமாக வைக்கப்பட வேண்டும். ஒன்றியப் பாடத்திட்டமாக இருந்தாலும், மாநிலப் பாடத்திட்டமாக இருந்தாலும், இந்த உத்தரவினை நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் எந்தப் பள்ளியாவது திருக்குறளைப் பாடத்திட்டத்தில் கொண்டிருக்கவில்லை என்றால், அப்பள்ளியின் அங்கீகாரம் நீக்கப்படும் எனும் உயர்நீதிமன்றத் தீர்ப்பை மனதிற்கொள்ள வேண்டும்.
  • தொடக்கப் பள்ளிகளில் இருந்தே கலைக்கல்வியைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்திடல் வேண்டும்.சிறுவயது முதலே குழந்தைகளிடம் கலை உணர்வை ஊட்டுவதன் மூலம் அவர்களின் படைப்பாற்றல், அழகுணர்வு, செய்நேர்த்தி ஆகிய பண்புகள் வளரும்.

வண்ணங்களின் கலவைகள் குழந்தைகளின் மனதில் மகிழ்வை ஊட்டுவதால், ஒன்றைப் படைக்க வேண்டும் என்ற உணர்வு இயல்பாகவே உந்தப்படும். குழந்தைகள் தங்கள் படைப்பை மகிழ்வோடு பிறருக்குக் காட்டுவதால், தனது உணர்வை மற்றவர்களோடு பகிர்தல் என்ற பண்பு வளரும். அது போன்று பிறரின் படைப்புகளைப் பார்த்துப் பாராட்டும் பண்பும் வளரும். இவை போன்ற பல பண்புகள் வளர்வதற்குக் காரணமாக இருப்பது கலைக்கல்வி. இதைத் தொடக்கப் பள்ளியில் இருந்து குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.

  • பாலியல் சமத்துவம், வீட்டு வேலைகளில் இருபாலரும் பங்கேற்கும் முறை, பெண்கள் கண்ணியமாக நடத்தப்படவேண்டியதன் தேவை ஆகியவற்றுக்கான பாடங்கள் உருவாக்கப்பட்டு, தொடக்கக்கல்வி முதற்கொண்டே பயிற்றுவிக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் ஆகியோரை மதிக்கும் பண்பு கற்பிக்கப்படவேண்டும்

உயர்நிலைப்பள்ளிக்கல்வி :

  • பள்ளிக்கல்வியில் இரு மொழிக் கொள்கையை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • உயர்நிலைப்பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில், மொழிப் போராட்டம், சமூகநீதி, சமயச்சார்பின்மை, இடஒதுக்கீடு வரலாறு போன்றவை இடம்பெற வேண்டும்.
  • இந்திய அரசியல் சாசனத்தின் வாயிலாக தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது.தீண்டாமையை ஒருவர் செயல்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதை மாணவர் மனதில் பதியும் படியான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை இணைக்க வேண்டும்
  • அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்திலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை ஓவியம் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் கட்டாயம் பணியமர்த்தப்பட வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறையேனும் பள்ளி அளவில் "ஓவியக் கண்காட்சி" நடத்தப்பட வேண்டும். பிறகு, வட்டார,மாவட்ட அளவிலான ஓவியக் கண்காட்சி நடத்தப்பட்டு மாணவர்களின் படைப்புகள் பெற்றோர், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.
  • மாணவர்களுக்கான கலையார்வத்தை வளர்க்கும் வகையில் பல்வேறு கலைக்குழுக்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்குச் சென்று கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும்.
  • அரசு,தனியார் பள்ளிகளில் மாதந்தோறும் "இலக்கிய மன்றம்" நடத்தப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். அவற்றில் ஒன்றிரண்டு நிகழ்வுகளேனும் முற்றிலும் மாணவர்களைக் கொண்டே நடத்தப்படுதல் வேண்டும்.
  • அந்தந்தப் பகுதிகளில் வாழும் புகழ்பெற்ற படைப்பாளர்களை அழைத்து வந்து மாணவர்களோடு கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும்.
  • தொடக்கப்பள்ளி முடித்து வரும் மாணவர்கள் தடையின்றி வாசிக்கவும் பிழையின்றி எழுதவுமான கற்றல் திறன் பெற்றிருக்க வேண்டும் . அத்திறன் வளர்ப்புக்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டும். அந்த இலக்கை நோக்கியே கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் அமைதல் வேண்டும்.
  • தன் தூய்மை பேணுதல் போன்ற நலக்கல்வி அளிக்கப்பட வேண்டும்.
  • தங்கள் பள்ளி உள்ள ஊரின் வரலாறு, நில அமைப்பு போன்றவற்றையும் சான்றோர், எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்ற சிறப்புக்குரியவர்களையும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும்.
  • நூலகம் மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். எல்லாத் துறை சார்ந்த நூல்களும் இடம்பெறுதல் வேண்டும்.
  • வாரம் அல்லது மாதத்திற்கு ஒரு முறையேனும் ஏதாவது ஒரு நூல் ஒன்றை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தல் வேண்டும். அந்நூல் குறித்த கலந்துரையாடல், விவாதம் நடத்தப்படல் வேண்டும்.
  • மாணவர் மன்றங்கள் அமைக்கப்பட்டுப் பள்ளிச் செயல்பாடுகளில் மாணவப் பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும்.
  • பள்ளி வளர்ச்சிக் குழுக்களில் மாணவர்கள் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும். இத்தகைய செயல்கள் மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்க்க உதவும்.
  • பத்தாம் வகுப்பு மதிப்பெண் மட்டும் பதிவு செய்யப்படும் நிலை மாற வேண்டும். குறைந்தது ஒன்பதாம் வகுப்பிலிருந்தாவது ஒவ்வொரு மாணவனின் பல்துறைச் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டுச் சான்றிதழில் பதிவிடப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஒரு மாணவனின் தகுதி- திறமையைத் துல்லியமாக மதிப்பிட முடியும்.
  • உயர்நிலைப் பள்ளி வகுப்பிலேயே அறிவியல் ஆய்வகங்களை முழுமையாகப் பயன்படுத்தும் நிலை உருவாக வேண்டும். அதற்கேற்ப அறிவியல் கருவிகள் பள்ளி அறிவியல் கூடத்தில் நிறைந்திருக்க வேண்டும்.
  • பள்ளிச் சுற்றுலா, கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான வசதிகளை அரசே செய்து தர வேண்டும். அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்திச் சுற்றுலா செல்லும் முறையைப் பின்பற்றலாம்.
  • மாணாக்கர்களின் தன்னம்பிக்கை, தற்சார்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் வகுப்புச்சூழல் அமைய வேண்டும். அவ்வப்பொழுது மனவளர்ச்சியின் முன்னேற்றம் குறித்த மதிபீட்டை உரிய உளநல மருத்துவர்களைக் கொண்டு அளவிடுதலும், அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளுதலும் தேவை.
  • ஆங்கில இலக்கணத்தின் அடிப்படைக் கூறுகள் குறித்து மாணவர்களுக்குத் தெளிவு ஏற்படும் வண்ணம் கற்பிக்கப்பட வேண்டும். ஆங்கிலப் பாடங்களைக் குறைத்து, ஆங்கில இலக்கணப் பயிற்சிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

மேனிலைப் பள்ளிக்கல்வி :

  • மேனிலைப் பள்ளித் தமிழ்ப் பாடத் திட்டத்தின் கீழ் தொல்லியல் பாடம் இடம்பெற வேண்டும். அருக்காட்சியகங்கள், அகழாய்வுத் தலங்கள் ஆகியவற்றிற்குச் சுற்றுலாச் செல்ல மாணாக்கர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
  • ஆங்கிலப் பாடத்தைப் பொறுத்தவரை பேச்சு மொழி ஆங்கிலத்திற்கு ( Spoken language ) அதிக முக்கியத்துவம் தர வேண்டும். ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி, முதலில் ஆங்கில ஆசிரியர்களுக்கு British Council மூலம் சுழற்சி முறையில் தரப்பட வேண்டும். அதே போல், குறுகிய காலத்தில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியை வழங்கும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ( M.O.U.) செய்துகொண்டு, அவர்களது பயிற்று முறையையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • மேனிலை வகுப்புகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை பல பள்ளிகளில் உள்ளது. அதன் காரணமாகப் பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் மூலம் குறைந்த ஊதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப் படுகின்றனர். இந்நிலை, மேனிலைக்கல்வியின் தரத்தைக் குறைக்கிறது. எனவே இத்தகைய ஏற்பாடு கைவிடப்பட்டு, காலியாகவுள்ள ஆசிரியப் பணியிடங்கள் உடனடியாக நிரவப்பட வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் முறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
  • பன்னிரெண்டாம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால்தான் கல்லூரிக்குச் செல்ல முடியும் என்ற நிலை தற்பொழுது உள்ளது. ஆனால், ஒரு மாணவர் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தொடர்ந்து தேர்ச்சி பெறவில்லை என்றால், அந்தப் பாடங்களுக்கு மாற்றாக ( Substitute ) வேறு பாடங்களில் அவர் தேர்வு எழுதிப் படிப்பை நிறைவு செய்யலாம். இந்த மாற்றுப் பாடங்கள் குறித்த விவரத்தைச் சான்றிதழில் பதிவிடலாம். ஏனெனில் ஒரு பாடத்தில் குறைந்த திறனுள்ள மாணவர், மற்றொரு பாடத்தில் அதிகத்திறன் உடையவராக இருக்கலாம். அவ்வகையில் அனைவருக்கும் கல்லூரி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
  • மேல்நிலைப் பள்ளிகளில் , உயர்நிலைப் பள்ளிகளில் பொதுத் தேர்வு வகுப்பான 10 ஆம் வகுப்புக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் 6 , 7 ,8 வகுப்பு மாணவர்களுக்குத் தரப்படாததால் தரமான கல்வி எப்போதும் கிடைப்பதில்லை ... ஆகவே இந்த நிலை மாற வழிவகை செய்ய வேண்டும்.
  • மேல்நிலைப் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை 2000 / 3000 என இல்லாமல் 750 /800 என்ற அளவிற்குக் குறைக்க வேண்டும். தற்காலச் சூழலுக்கு அதிக எண்ணிக்கையுள்ள மாணவர்களை கவனிப்பது இயலவில்லை
  • விவசாய அறிவு குறித்தான பாடத்திட்டங்கள் தேவை
  • தொழில்துறை× சுற்றுச்சூழல் குறித்தான இணைவு,எதிர் முரண்பாடுகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்
  • தத்துவப் பார்வைகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப் படவேண்டும்.ஐரோப்பியத் தத்துவங்கள்,இந்தியத் தத்துவங்கள்,தமிழர் தத்துவங்கள் முதலானவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.தத்துவ அறிமுகத்தில் பொருள் முதல்வாதப் பகுதிகள் அவசியம் இடம்பெற வேண்டும்
  • மனித உரிமைக் கல்வி,பாலியல் கல்வி,பெண் கல்வி,தலித் கல்வி முதலான சிறப்பு பாடப்பிரிவுகள் துணைப்பாடமாக இணைக்கப்பட வேண்டும்

கல்லூரிக் கல்வி சேர்க்கை :

  • பாலிடெக்னிக் கல்லூரிப் படிப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சேர்ந்து ( Lateral entry ) பொறியியல் பட்டப்படிப்பை முடிக்க முடியும். அதே போல் பாலிடெக்னிக் கல்லூரிப் படிப்பு முடித்த மாணவர்கள்,
  • கலைக்கல்லூரிப் பட்ட வகுப்பில் ( B.A.,B.Sc.) இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படித்துப் பட்டம் பெறும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
  • மருத்துவக் கல்வி ( MBBS ) இடங்களில் ஒன்றிய அரசுக்கான அகில இந்திய ஒதுக்கீடு, பட்டப்படிப்பில் 15%, முதுகலைப் பட்டப் படிப்பில் 50% உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் ( Super Speciality ) 100% என வழங்கப்படுகிறது. இது சிறிதும் நியாயமற்ற ஒதுக்கீடாகும். எனவே தமிழ்நாட்டிலுள்ள மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 100 விழுக்காடும் தமிழக மாணவர்களுக்கு மட்டுமே உரிமையானது. தமிழகம் அகில இந்திய ஒதுக்கீட்டில் தங்களுக்கு இடம் வேண்டாம் என அறிவிக்க வேண்டும். தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்காகப் பிற மாநிலங்களுக்குச் சென்று அல்லல்படவும் வேண்டாம். பிற மாநில மாணவர்கள் இங்கு வந்து நமது மாணவர்களின் இடங்களை ஆக்கிரமிக்கவும் வேண்டாம் எனும் முடிவைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்.
  • தமிழ் வழியில் படித்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில்5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைத் தமிழக அரசு நடைமுறைப் படுத்துவது போற்றத்தக்கது. அதே சமயம், தமிழ்வழியில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதத்தில் மருத்துவக் கல்வியில் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அதிகரித்து வழங்கப்பட வேண்டும்.
  • மேலும் மருத்துவக் கல்வி ஒன்றுதான் கல்வியின் இலட்சியம் எனும் மாயை போக்கப்பட வேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்புகளைத் தவிர்த்துப் பிற கலை - அறிவியல் படிப்பிற்கான வாய்ப்புகள் குறித்துப் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  • எக்காரணம் கொண்டும் "நீட்" தேர்வைத் தமிழகம் ஏற்கக்கூடாது. சட்ட நுணுக்கம் மிக்க வழக்கறிஞர்கள் குழுவை உருவாக்கி உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் நிலைபாட்டை வென்றெடுக்க வேண்டும்.
  • அதேசமயம், நீட் தேர்வை நீக்கும்வரை, நீட் தேர்வுக்கான தரமான பயிற்சிகளை மாணவர்களுக்கு இலவசமாகத் தமிழக அரசு வழங்க வேண்டும். குறிப்பாக இப்பயிற்சி மையங்களை நகர்ப்புற அளவில் மட்டுமே நிறுவாமல், வட்ட அளவிலான பயிற்சி மையங்களை அரசு தொடங்கி நடத்த வேண்டும். ( Decentralise )

தேர்வுகள் குறித்த அணுகுமுறை :

  • மதிப்பீட்டு முறைகளும், தேர்வுகளும் அனைத்து மாணவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெறுவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டுமே அல்லாமல், வடிகட்டுவதை நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது. குறிப்பாக மனப்பாடக் கல்வியின் மறுபதிப்பாகத் தேர்வுகள் இருக்கக் கூடாது.
  • அவ்வகையில், ஐந்தாம் வகுப்பு வரை தேர்வுகளே கூடாது. ஆறு முதல் ஒன்பது வகுப்பு வரையிலும் பள்ளி அளவிலான தேர்வுகள் வைக்கலாம். 10,11, 12 வகுப்புகளுக்கு மாநில அளவிலான தேர்வுகள் நடத்தப்படல் வேண்டும். இந்தத் தேர்வுகளையும் இரண்டாகப் பிரித்து இரண்டு பருவத்தேர்வுகளாக ( Semester pattern ) நடத்தலாம். நிர்வாகச் சிரமங்கள் இருந்தாலும், மாணவர்களின் மன அழுத்தம், பாடச்சுமை ஆகியன இம்முறையால் குறையும்.

பள்ளிக் கல்வி நிர்வாகம் குறித்த அணுகுமுறை :

பள்ளிக் கல்வியை நிர்வகிக்க இப்பொழுதுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஒரு மாவட்டத்திற்கு ஒரேயொரு முதன்மைக் கல்வி அதிகாரி என்பது போதுமானதல்ல. குறைந்த அளவு இரண்டு முதன்மைக் கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அதேபோல் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்டக் கல்வி அதிகாரிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப் பட வேண்டும். கோத்தாரி கல்விக்குழுவும் கண்காணிப்புப் பணியில் கூடுதல் அலுவலர்களை நியமிக்கப் பரிந்துரை செய்துள்ளது இங்கு கருதத் தக்கது.

  • கல்வித்துறை உயர்பதவிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கக் கூடாது. பள்ளிக் கல்வித் துறையில் அனுபவம் மிக்க, தகுதிவாய்ந்தவர்களையே அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். அவர்களுக்குத்தான் களநிலவரம் தெரியும். கல்வித் துறையில் அனுபவம் இல்லாதவர்களை மேலிருந்து திணிப்பதால், நிறைய இடையூறுகள் ஏற்படுகின்றன என்பதை அனுபவம் நமக்கு உணர்த்துகிறது.
  • பள்ளிகளைப் பொறுத்தவரை, அரசே அவற்றை நடத்த வேண்டும். இல்லை எனில், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளாக அனைத்தும் மாற்றப்பட வேண்டும். கல்வியைப் பணம் காய்க்கும் மரமாகக் கருதாமல் சேவையாகக்கருதி, நிர்வகிக்கும் பொறுப்புகளை மட்டும் ஏற்றுச்செயல்படும் தன்னார்வலர்களின் பொறுப்பில் உதவிபெறும் பள்ளிகளைச் செயல்பட அனுமதிக்கலாம்.
  • சுயநிதிக் கல்வி நிறுவனங்களை கல்வியின் எந்த மட்டத்திலும் புதிதாக அனுமதிக்கக் கூடாது. ஏற்கெனவே உள்ளவற்றைப் படிப்படியாக அரசு உதவி பெறும் நிறுவனங்களாக மாற்றி அமைக்க வேண்டும்.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் தவறாமல் தாய்த்தமிழ்ப் பள்ளிகளை, அரசு உதவி பெறும் பள்ளிகளாக நிறுவ வேண்டும்.
  • கல்வி நிறுவனங்களில் தமிழை முதல் மொழியாகவும், ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகவும் மாற்றி அமைக்க உடனடியாக ஆணையிட வேண்டும்.
  • ஆசிரியர்கள் கல்விப்பணி தவிர, பிற பணிகளைச் செய்யுமாறு ஏவிவிடக் கூடாது. இதனால் கல்வியின் தரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும்.
  • அடுத்து சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் ஆண்டுதோறும் அரசுத் தணிக்கை நடைபெறவேண்டும். அதே போல், சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் பல்வேறு மட்டங்களில் தவறாமல் இடஒதுக்கீடு பின்பற்றப் படுகிறதா என அரசு கண்காணிக்க வேண்டும்.
  • பள்ளிப் பேருந்து ஐந்து கிலோமீட்டருக்குள் மட்டுமே சென்று வருமாறு அரசாணை பிறப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் குறிப்பாக நம்மை ஆண்ட இங்கிலாந்தில் கூட பள்ளிப் பேருந்து என்ற நடைமுறையே கிடையாது. அண்மைப் பள்ளிகள் ( Neighbourhood school ) எனும் இலட்சிய நிலையை அடைய மிகப்பெரும் தடையாக இருப்பது பள்ளிப் பேருந்துகள். 10 / 15 கிலோமீட்டர் எனச் சுற்றி, ஊரிலுள்ள மாணாக்கர்களை எல்லாம் வழித்துக் கொண்டுவரும் நிலை தடுக்கப்பட வேண்டும். எனவே அரசு இதில் உறுதியாக இருக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் சமூகநீதி :

  • சாதி அமைப்புகள், தனி நபர்கள் ஆகியோரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள், குறிப்பிட்ட சாதியின் பெயரால் நடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். சாதியின் பெயரைத் தாங்கியுள்ள நிறுவனங்கள், பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
  • பள்ளி / கல்லூரிகளில் சாதியை அடையாளப் படுத்தும் மணிக்கட்டுக்கயிறு, வாகனங்களில் சாதி குறீயீட்டு ஸ்டிக்கர் ஒட்டுதல்,உடை போன்றவற்றை அணிவது தடைசெய்யப்பட வேண்டும்.
  • பாடநூல் தயாரிப்பது, தேர்வு செய்வது குறித்து அரசு உரிய முறையில் கவனம் செலுத்த வேண்டும் பாடநூல் தேர்வுக் குழு கல்வித் துறை சார்ந்த தேர்ச்சி உடையதாக இருந்தால்மட்டும் போதாது. அக்குழு சாதி, மதச் சார்பற்ற நடுநிலைக்குப் பெயர் பெற்றதாக இருக்க வேண்டும்.
  • கல்வியைத் தொழிலாகக் கருதிக் கட்டணக் கொள்ளைகளில் ஈடுபடும் கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் மர்மமான முறையில் இறக்கும் கல்வி நிலையங்கள் ஆகியன உடனடியாக அரசுடைமை ஆக்கப்பட வேண்டும்.
  • அலுவலகங்களில் பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களைக் கண்காணிக்க ‘விசாகா'க் குழு அமைக்கப்பட்டிருப்பது போன்று, விளிம்பு நிலை மற்றும் சிறுபான்மை இனத்தைச் சார்ந்த மாணவர்களையும்/ மாணவிகளையும் பாதுகாக்கும் விதத்தில் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். தலித், சிறுபான்மை மக்களிடம் பணி செய்யும் இயக்கத்தவர், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் ஆகியோர் குழுவில் இடம் பெற வேண்டும். சாதி மதரீதியில் இழைக்கப்படும் அத்துமீறல்களையும் கொடுமைகளையும் இக்குழு கண்காணித்து, அவற்றின் மீதான தொடர் நடவடிக்கைக்குப் பரிந்துரை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றி அமைக்க வேண்டும் . கல்வியைப் பயிற்றுவிக்கும் உரிமை, மழலையர் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்து வகைக் கல்விக்கான பாடத் திட்டங்களையும் உருவாக்கும் உரிமை, அனைத்து வகைக் கல்விக் கூடங்களையும் ஆளுமை செய்கிற உரிமை, தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்தையும் ஒழுங்கமைக்கும் உரிமை, மழலையர் பள்ளிகள் / தொடக்கப் பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் / மேல்நிலைப் பள்ளிகள் / கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் என அனைத்தையும் ஆளுமை செய்கிற உரிமையைத் தமிழ்நாட்டரசு கொண்டிருக்க வேண்டும்.

பள்ளிக் கல்வி குறித்த பிற கோரிக்கைகள்

  • மாதிரிப் பள்ளிகள் என்று உருவாக்கி அதில் குறைந்த எண்ணிக்கை கொண்ட மாணவர்களே சிறப்பான கல்வி பெறும் வகை உள்ளதை மாற்றி அனைத்து மாணவர்களுக்கும் பாகுபாடின்றி தரமான கல்வி கற்கும் வகை செய்யப்படவேண்டும்.
  • பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும்.
  • மாதிரிப் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை அரசுப் பள்ளிகளில் இருந்து மாற்றுப் பணியில் அனுப்பி வருகின்றது கல்வித்துறை .அதை நிறுத்த வேண்டும்.
  • பள்ளி ஆசிரியர்களை அலுவலக மாற்றுப் பணியில் இல்லம் தேடிக் கல்வி பணியில் ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்ததை திரும்பப் பெற்றுக் கொண்டு பள்ளிகளுக்கே அனுப்பி வைக்க வேண்டும்.
  • பாடப் புத்தகச் சுமையைக் குறைக்க வேண்டும் . பள்ளிகளில் கள ஆய்வு செய்து பாடங்களைக் குறைக்க வேண்டும் .
  • உயர்தொழில்நுட்ப ஆய்வகம் நடத்தும் ஆன்லைன் வினாடி வினாத் தேர்வுகளை நிறுத்தி பாடம் நடத்த நேரம் தர வேண்டும். இது மாணவர்களை சிந்திக்க விடாமல் போட்டித் தேர்வுகளுக்கு ஆறாம் வகுப்பிலிருந்தே தயார் செய்யத் தூண்டுகிறது. தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு கூறு .
  • வளரிளம் பருவக் குழந்தைகளைக் கையாள்வதற்கு சவாலாக இருப்பதால் ஒவ்வொரு பள்ளிக்கும் உளநல ஆலோசகர் கண்டிப்பாக நியமிக்க வேண்டும்.
  • உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் EMIS பணிக்கு தனியாக ஒருவரைக் கட்டாயமாக நியமிக்க வேண்டும்.
  • தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் பணியை கண்காணிப்பு செய்வதற்கு Online வழியாக வழிகாட்டி அன்றாடம் அழுத்தம் தருவதை கல்வித்துறை நிறுத்த வேண்டும்.
  • மருத்துவ விடுப்பில் , பிள்ளைப் பேறு விடுப்பில் செல்லும் ஆசிரியர்களுக்கு மாற்றாக ஒருவரை நியமித்து கற்றல் - கற்பித்தல் பணியில் ஈடுபடுத்துதல் அவசியம் .
  • கல்விக்கான அனைத்துத் திட்டங்களும் எல்லாப் பள்ளிகளுக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும்.
  • தொடக்கப் பள்ளி , நடுநிலை , உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி என அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விளையாட்டுத் திடல் கட்டாயம் தேவை. அதே போல முதல் வகுப்பு முதலே
  • விளையாட்டு ஆசிரியர்களும் நியமனம் தேவை.
  • மழலையர் வகுப்புகள் தொடக்கப் பள்ளி , நடுநிலைப் பள்ளிகளில் அவசியம் வேண்டும் . ஆசிரியர்கள் தனியாக நியமிக்கப்பட வேண்டும்.
  • கற்றல் - கற்பித்தல் முறையில் மாற்றம் வேண்டும் உரையாடுதல் , பகிர்தல் வகுப்பறைகளாக கட்டாயம் மாற்றம் பெற வேண்டும் .
  • CCE தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டில் புத்தக வாசிப்பு _ பகிர்வுக்கு மதிப்பெண் வழங்கி கிரேடு போடும் முறை வர வேண்டும்.
  • 20 ஆண்டுகால பணி அனுபவம் மிக்க ஆசிரியர் தலைமை ஆசிரியர்களை விருப்பத்தின் அடிப்படையில் ஒன்றிய , மாவட்ட , மாநில அளவில் ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினர்களாக்கி அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்.
  • வருடத்தில் இரு முறை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் கருத்தரங்கங்களை நடத்தி ஆசிரியர்களின்புதிய சிந்தனைகளைத் தொகுக்க வேண்டும்.
  • அதிகாரிகள் கீழே உள்ளவர்களை வெறுமனே அச்சுறுத்தக் கூடாது. கற்றல் - கற்பித்தலை குறித்த பகிர்வுகள் , பிரச்சனை சார்ந்த கள எதார்த்தங்களை உண்மை அறியும் நபர்களாக இருக்க வேண்டும்.
  • மாற்றுத் திறனாளி , CWSN கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தனியாக குறைக்கப்பட்ட பாடத்திட்டம் உள்ள புத்தகங்கள் வழங்கப் பட வேண்டும் .
  • பள்ளிகளில் கழிப்பிட வசதிகள் மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு நிர்மானிக்கப்பட்டவேண்டும்.ஆரம்பள்ளிக்கு இரண்டு தூய்மைப் பணியாளர்,உயர்நிலைப்பள்ளிக்கு 4 தூய்மைப் பணியாளர்,மேல்நிலைப் பள்ளிக்கு 6 தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.தூய்மைப் பணியாளர்களைக் கொண்டுதான் வகுப்பறை,வராண்டா,தலைமை ஆசிரியர் அறை ஆசிரியர்களின் ஓய்வறைகள்,அலுவலகம்,தூய்மைப்பணியாளர் அறை,கழிப்பறை முதலானவற்றை தூய்மைப் படுத்த வேண்டும்.கழிப்பிடம் காலை,மாலை ஆகிய இரு வேளைகளில் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  • தூய்மைப் பணியாளர்களை நியமிக்கவும் , அவர்களுக்கான ஊதியத்தை வழங்கவும் அரசே உடனடியாகப் பொறுப்பேற்க வேண்டும் .
  • பெண் பிள்ளைகளுக்கு தற்போது வழங்கப்படும் நாப்கின் தரமற்று இருக்கிறது.அதற்குப்பதிலாக தரமான நாப்கின் களை அரசு வழங்க வேண்டும்.கழிவு நாப்கின்களை மாற்றுவதற்காக தண்ணீர் வச்தியுள்ள தனி குழியலறை ஒவ்வொரு பள்ளியிலும் அமைக்கப்பட வேண்டும்
  • மாதவிடாய் காலம் சிறப்பு விடுப்பாக கணக்கில் எடுக்கப்பட்டு அவர்களுக்கு விடுப்பை பள்ளிகள் வழங்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்

கற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்கு ...

  • கற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் , பாடநூல் , இதர வேலைகள் பின்பற்றப்படுகின்றன. அவர்களது திறனுக்கு ஏற்ப பாட நூலை வடிவமைக்க , அதற்கான சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வைத்து பாடத்திட்பம் - பாடநூல் தயாரிப்பு செய்ய வேண்டும். ஏனெனில் அவர்களது திறன்களை பொருட்படுத்தாமலேயே வருடா வருடம் அவர்களுக்கு தேர்ச்சி என்ற நிலையைக் கொடுத்து, அவர்களுக்கான பொதுத் தேர்வு சமயங்களில் தேர்வு எழுத Scribe ஆக ஆசிரியர்களைக் கட்டாயமாக பணியமர்த்தும் சூழல் நிலவுகிறது. இந்த நிலை மாற வேண்டும் எனில் , CWSN குழந்தைகளுக்காக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு எளிமைையாக்கப்பட வேண்டும். அவர்களது கற்றல் குறைபாடுகளுக்கேற்பவே வினாத்தாள்கள் வடிவமைைப்பு , தேர்வுகள் அமைய வேண்டும்.
  • CWSN குழந்தைகளுக்காக நமக்கான கல்வித் திட்டத்தில் நிதி ஒதுக்குகின்றனர். அதை அடிப்படையான பாடத்திட்ட வடிவமைப்பிலிருந்தே எடுத்து வர வேண்டும் .அதற்கான முயற்சிகள் முழு வீச்சில் நடந்தால் தான் உண்மையான சமத்துவக் கல்வி அனைத்து தரப்பினருக்கும் சென்றடையும்.
  • பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் நிர்வாகத்துக்குட்பட்ட ஆசிரியர்களின் விபரங்கள் , தனித்திறன்கள் , சாதனைகள் குறித்து Profile பள்ளியில் பராமரிக்க வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலர் , முதன்மைக் கல்வி அலுவலர் , இணை இயக்குநர் , இயக்குநர் , ஆணையர் , கல்விச் செயலர் என அனைவருக்கும் தங்கள் நிர்வாகத்திற்குட்பட்ட பணியாளர்களின் Profile பராமரிக்க வேண்டும் .
  • மேற்சொன்ன profile வழியே தான் ஆய்ந்து ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட வேண்டும் .ஆசிரியர்கள் விண்ணப்பித்து விருது பெறும் நடைமுறை மாற வேண்டும்.
  • தாய்மொழி வழிக் கல்வியை முதல் 5 வகுப்புக்கு கட்டாயமாக்க வேண்டும்.
  • ஆங்கில வழிக் கற்பித்தலுக்கு தனியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
  • அரசு + அரசு உதவி பெறும் பள்ளிகளை இணைத்து அரகப் பள்ளிகளாகவே நடத்த வேண்டும்
  • வாடகை கட்டிடங்களாக இயங்கும் அரசுப் பள்ளிகளை அரசு மீட்க வேண்டும்
  • கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டு பின் 25% மாணவர் தனியார் பள்ளிக்கு அனுப்பும் முறை நீக்கப்பட வேண்டும். அதற்கு சட்டப் பேரவையில் தீர்மானம் போட்டு மத்திய அரசிடம் ஒப்படைத்து மாற்ற வேண்டும்
  • BRT என்ற பணியிடமே அவசிபமில்லை , அவர்கள் தகவல் சேகரிக்கும் எந்திரங்களாக மட்டுமே செயல்படுவதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு அவர்களை பணியமர்த்த வேண்டும்.
  • பணியிடைப் பயிற்சி ஆசிரியர்களுக்கானது சரியாகத் திட்டமிடப்பட வேண்டும் .
  • தற்போதைய ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சிகள் என்பவை வெறும் சடங்காக இருக்கின்றன. SSA , RMSA, தற்போது சமக் க்ஷர சிக்ஷா அபியான் திட்டம் இவை அனைத்தும் வெறும் ஆவணத்திற்காக மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன.
  • பாடப்பொருள்களை மட்டும் மையப்படுத்தி சில பயிற்சிகள் திட்டமிடுகின்றனர். பாடப்புத்தகத்தில் உள்ளவற்றை மட்டும் மனதில் வைத்து கடமைக்காக அவற்றைப் பற்றி உரையாடுதல் 10% மட்டும் நடக்கிறது. காரணம் பயிற்சி தருபவர் என்பவர் ஆசிரியர்களுக்குள் ஒருவராகவே இருப்பார். மீதி 90% பயிற்சி வெற்று அமர்வுகளாகவே கழிகின்றன.
  • மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி நடத்தும் போது , வகுப்புக்கேற்ற பாடப் பொருள் அறிவு சார்ந்த பயிற்சி தருவது ஒரு வகையாக இருக்க வேண்டும் . மற்றொரு வகையில் கற்பித்தல் திறன்களை வளர்த்துக் கொள்வது , வகுப்பறைப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறன்கள் , இன்றைய குழந்தைகளைக் கையாள்வதில் உள்ள சவால்களை சந்திப்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் திட்டமிடவேண்டும் . பாடப் பொருள் சுமை குறித்தும் விவாதம் அவசியம்.
  • ஒவ்வொரு மாவட்ட DIET நிறுவனமும் அந்த மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வகையான பள்ளிகளையும் கள ஆய்வு செய்திருக்க வேண்டும் . அதற்கேற்ப பெரும்பான்மை சிக்கல்களைத் தீர்க்கும் வழிவகைகளைப் பயிற்சியில் நடைமுறைப்படுத்த வேண்டும் .அப்போது தான் ஆசிரியர்களுக்கு பயிற்சியில் நம்பிக்கையும் ஆர்வமும் பிறக்கும்.
  • இவை மட்டுமன்றி , ஒவ்வொரு பள்ளியின் வெற்றிகள் செயல்பாடுகள், குறித்தும் தொடர்ந்து ஆவணம் செய்ய வைத்து தொகுத்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதும் பயிற்சி நடத்தும் விரிவுரையாளர்கள் பின்பற்ற வேண்டும். இவற்றின் தொடர் செயல்பாடாகவே ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் செயல்களும் இருக்க வேண்டும் .
  • எப்போதும் பள்ளி - DIET உடனான நெருக்‍‍‍கமான உறவு இருக்க வேண்டும் .இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்ட DTET விரிவுரையாளருக்கும் மாவட்டத்தின ஆசிரியர்களது பன்முக செயல்பாடு மற்றும் திறன்கள் குறித்தான விபரங்கள் தங்கள் நிறுவன அமைப்புகளில் பாதுகாக்க வேண்டும்.
  • தற்போது இணைய வழிப் பயிற்சியை முன்னெடுக்கின்றனர். அவை தவிர்க்கப் பட வேண்டும். ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மைசூர் உள்ளிட்ட RIE மையங்களில் தரப்படும் பயிற்சிகள் மிக முக்கியமானவை , சிறப்பானவை.
  • அவர்கள் வழங்கும் பயிற்சிக்களை சில ஆயிரம் ஆசிரியர்கள் கூட பெற்றிருக்கவில்லை. அதைப் போன்ற பொருண்மைகளுடன் தமிழக ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் பயிற்சிகள் வழங்க வேண்டும்.
  • பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அவசியமான செயல்களை செய்ய வேண்டும்.
  • ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் வாக்குச் சாவடி அலுவலர் பணி முதலானவை ஆண்டு முழுவதும் தருகின்றனர்.
  • கல்வித்துறை அல்லாத பிற துறைகளின் பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்கக் கூடாது.தரமான கல்விக்கு இது போன்ற பணிகள் தடையாக உள்ளன.
  • தனியார் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்புவரை அடிப்படைக் கல்வியைப் பெறும் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு வரும் பொழுது தமிழ் வாசிப்புப் பயிற்சி அற்றவர்களாக வருகின்றனர்.அரசுப்பள்ளிகளைக் கண்காணிப்பது போலவே தனியார் பள்ளிகளில் அடிப்படை வாசிப்புப் பழக்கம் எண்ணறிவு எழுத்தறிவு ஆகியவை கண்காணிக்கப் பட வேண்டும்.இதற்காக அடிப்படை எழுத்துகள் அறியாத குழந்தைகள் எந்தப் பள்ளியில் படிக்கின்றனர் என்ற ஆய்வு அரசால் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது தான் தனியார் பள்ளிகளிலும் தரமான கல்விக்கு உறுதி செய்ய இயலும்.
  • தற்போது அரசு பள்ளிகளில் கொண்டு வந்துள்ள திட்டங்கள் பலவும் வெறும் ஆவணங்களாக இருக்கின்றன. உண்மையாக செயல்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். போக்ஸோ குழு , வாசிப்பு இயக்கம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
  • பள்ளி மேலாண்மைக் குழு வழியாக பள்ளிக் குழந்தைகளது கல்வியை முழுமையாக கவனிக்க அரசு முயற்சி செய்து வருகிறது.ஆனால் இது முற்றிலும் ஆபத்து.ஏனெனில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பல பள்ளிகளில் அரசியல் சார்பு உடையதாக பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான விழிப்புணர்வு இல்லாத நிலை நீடிக்கிறது. EMIS தளத்தில் இந்த குழுவின் செயல்பாடுகள் குறித்தும் பதிவேற்றம் செய்வதாக கல்வித்துறை செயல்பாடுகள் திட்டமிடப்படுகின்றன.
  • ஆனால் அனைத்தும் களத்தில் வெறும் ஆவணங்களாக இருக்கின்றன.
  • ஆகவே கற்றல் கற்பித்தல் பணிகளுக்கு தரமான கல்வியை வழங்கும் கல்விக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

இன்று கல்வி, பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கானதாக மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. அதே போல், தேசிய இனங்களின் கல்வி இறையாண்மை முற்றிலும் ஒன்றிய அரசால் பறிக்கப்பட்டு விட்டது. 1964 - 66 ஆம் ஆண்டுகளில் இந்திய அரசால் அமைக்கப்பட்ட கோத்தாரிக் கல்விக்குழு, மாநிலங்கள் அளவில்தான் கல்வி இருக்க வேண்டும் என்பதை மாற்ற வேண்டாம் என வலியுறுத்திய பின்னரும், 1976 நெருக்கடி நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, கல்வி, மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

விளைவாக, கல்வி மையப்படுத்தப் பட்டதாக மாறிவிட்டது. இதனால் ஆங்கில மருத்துவக் கல்விக்கு மட்டுமின்றி, தமிழ்ச் சித்த மருத்துவம் படிப்பதற்குக் கூட இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலுக்குக் காத்துக் கிடக்க வேண்டிய அவலநிலை உருவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து தனியார்மயமாகவும், மதமயமாகவும் கல்வி மாறிவிட்டது.

தமிழ்நாட்டு அரசின் ஆளுகையின் கீழ் அரசுப் பள்ளிக்கூடங்களும், மெட்ரிக் பள்ளிக்கூடங்களும்.. J இயங்குகின்றன. சிபிஎஸ்சி, கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்கள் இந்திய அரசின் நேரடித் தொடர்பில் இயங்குகின்றன. இவை தவிர பல நூற்றுக்கணக்கான பன்னாட்டுப் பள்ளிக்கூடங்களும் தமிழ்நாட்டில் இயங்குகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டு அரசு இயற்றிடும் கல்வி தொடர்பான ஆணை, அது எதுவாக இருந்தாலும், அரசு மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடங்களில் மட்டுமே அது செல்லுபடியாகுமே அல்லாமல், இந்திய அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனம் தொடர்பான பள்ளிக்கூடங்கள் எவற்றிலும் செல்லுபடியாகாது. அக்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டு அரசை மதிப்பதே இல்லை. தமிழ்நாட்டு அரசின் கல்விக்கூடங்களை இந்திய அரசுக் கல்விக்கூடங்களும் ஏற்பதில்லை. இந்நிலையில் தமிழ்நாடு அரசுக்கு மட்டுமே கல்வியில் முழு அதிகாரம் என்கிற வகையில் கல்வித்துறையை மாற்றாமல், நாம் முன் வைக்கிற எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்ற முடியாது. தமிழ்நாட்டின் கல்வியைப் பிற அரசுகள் தீர்மானிக்க முடியாது. தமிழ்நாடு அரசுதான் அதைத் தீர்மானிக்க முடியும். அந்த வகையில் மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை என்பது அடிப்படைத் தேவைக்குரியதாகிறது. எனவே அதை முதன்மையான கோரிக்கையாகத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.

பகுதி - 2

உயர்கல்வி சார்ந்த கொள்கைக்கான பரிந்துரைகள்

பாடத்திட்டம்

  • தமிழ் சமூகத்தின் பன்முகத்தன்மை மற்றும் வேறுபாடுகளுக்கு ஏற்ற வகையில் சமூகத்தின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு வகைப் பாடப் திட்டங்கள் மற்றும் கற்பித்தல் முறைகள் இன்று தேவையாகின்றது. மாணவர்களின் படைப்பாற்றல், பங்கேற்பு மற்றும் அதன் மூலம் அவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையில் பாடதிட்டங்கள் அமைக்கப்படவேண்டும். இதற்கு பொது பாடத்திட்ட முறை அகற்றப்பட்டு, பாடத்திட்டங்கள் வகுப்பதற்கு பல்கலைக் கழகங்களுக்கும், தன்னாட்சி கல்லூரிகளும் முழு சுதந்திரம் வழங்கப்படவேண்டும்
  • அனைத்துப் பாடத்திட்டங்களுக்கான பாடத்திட்டங்களும், அந்தந்த படிப்புக்குரிய முக்கிய பாடங்களைக் கற்பிப்பதைத் தவிர, பொதுவான நோக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும். அந்த நோக்கங்களுக்கு ஏற்ப பாட திட்டங்கள் கட்டமைக்கப்பட வேண்டும். அவற்றில் முக்கியமானவையாக இடம்பெறவேண்டிய நோக்கங்கள்:
  • அறிவியல் மனப்பான்மையின் வளர்ச்சி
  • ஆக்கப்பூர்வமான சிந்தனையின் வளர்ச்சி
  • உலகளாவிய விழிப்புணர்வு மேம்பாடு
  • மக்களுடன் சரியான உறவு கொள்ளும் மனப் பாங்கு வளர்த்தல்
  • சாதிய மேலாத்திக்க சிந்தனையை ஒழித்தல்
  • மனித நேய சிந்தனை வளர்த்தல்
  • ஜனநாயக விழுமியங்களை உணர்தல்
  • சுற்றுச்சூழல் மற்றும் பாலின நீதி குறித்து உணர்தல்
  • மனித உரிமைகள் பற்றிய சட்ட விழிப்பு
  • பின்தங்கிய மற்றும் சமூக ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அக்கறையை உருவாக்குதல்
  • குழந்தைகள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் மீது அக்கறையை உருவாக்குதல்
  • பாலினப் பாகுபாடு களைவது குறித்த புரிதல் உருவாக்குதல்

 - பொதுவான குறிக்கோள் பட்டியலில் இன்னும் சிலவற்றைச் சேர்க்கலாம்.

இந்த நோக்கங்களை நிறைவேற்ற புதுமையான மற்றும் உயிரோட்டமான கற்றல் சூழ்நிலைகள் தேவைப்படலாம். மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்ட நடைமுறைகள் வழக்கமான பாடத்திட்டத்தில் வடிவமைக்கப்பட்டு இடமளிக்கப்பட வேண்டும்.

  • பொதுவாக, அடையாளம் காணப்பட்ட பிற பொது நோக்கங்களுக்கு இடமளிக்கும் வகையில் தற்போதுள்ள கல்விப் பாடத்திட்டம் கணிசமாகக் குறைக்கப்பட வேண்டும்.
  • இந்த பொதுவான நோக்கங்கள் தவிர, வழக்கமான பாடத்திட்டத்திற்கான நோக்கங்கள் பாட நிபுணர்களால் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும்.

பாடத்திட்ட வடிவமைப்பு:

  • பாடங்கள் ஒரு சுவாரஸ்யமான மொழி நடையில் எழுதப்பட வேண்டும். இதற்காக பாட வல்லுனர்களுடன்,தகுதி வாய்ந்த படைப்பாளிகளைக் சேர்த்துக் கொண்டு நூல்களை உருவாக்கலாம். கற்பவர்களுக்கு மிகவும் ஈர்ப்புள்ளவகையிலும், நம்பகத் தன்மையுடனும் இருக்கும் வகையில் பாடங்களை புதுமையான முறையில் வழங்க திரைக்கதை எழுத்தாளர்கள், ஓவியர்கள், புகைப்படக் கலைஞர்கள் ஆகியோரின் ஆதரவைப் பெறலாம்.
  • பாடத்திட்டமானது பிராந்திய வரலாறு மற்றும் உள்ளூர் சமூகத்தின் தேவைகளுக்கு இடமளிக்க வேண்டும் மற்றும் அவை களப் பயிற்சியுடன் இணைக்கப்பட வேண்டும்.
  • பாடத்திட்டத்தில் சாதி மற்றும் மத சார்பு உள்ளடக்கங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • மனிதாபிமான மதச்சார்பற்ற விழுமியங்களைப் பரப்பிய சிறந்த சிந்தனையாளர்கள் மற்றும் உன்னத ஆளுமைகளின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்.
  • விழுமியக் கல்வி நடைமுறை சார்ந்ததாக இருக்க வேண்டும். மாணவர்களை மனித விழுமியங்களுக்கு உணர்த்தும் வகையில் பொருத்தமான பாடப் பகுதிகள் வடிவமைக்கப்பட வேண்டும். இந்தப் பகுதிகளை பரிந்துரைக்க நிபுணர் குழு அமைக்கப்படலாம்.
  • தமிழகத்தின் பண்பாடு, அறிவியல் சிந்தனை, சமூக நீதிக்கான வரலாறு, பகுத்தறிவு இயக்கங்களின் தோற்றம் மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்த பாட திட்டங்கள் உயர்கல்வியின் எல்லா துறை படிப்புக்களிலும் கட்டாயப் பாடமாக ஆக்கப்படவேண்டுகின்றோம்.
  • பல்வேறு களங்களில் சமீப காலக் கண்டுபிடிப்புகள் மற்றும் விவாதங்கள் பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும்.
  • பாடத்திட்டங்களை மறுபரிசீலனை செய்யவும், புதிய பட்டப் படிப்புகளை உருவாக்கவும் பலகலைக் கழகங்களில் கல்வி குழு ஒவ்வொரு ஆண்டும் செயல் பட வேண்டும்.
  • கள ஆய்வு மறும் களப் பணி செயல்பாடுகள் கற்றல் செயல்பாட்டில் இடம் பெற வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளுக்கான வழிகாடுதல்கள் அதற்கேற்ப வடிவமைக்கப்பட வேண்டும். இந்த திட்டங்களுக்கு போதுமான நிதியுதவி வழங்கப்பட வேண்டும்.
  • சமூக--புவி-அரசியல் பிரச்சினைகள் மற்றும் தத்துவக் கண்ணோட்டங்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசிரியர்-மாணவர்களுக்கான முறைசாரா ஊடாடும் திட்டங்களுக்கான போதுமான இடம் பாடத்திட்டங்களில் உருவாக்கப்பட வேண்டும்.
  • திருக்குறள் உள்ளிட்ட தமிழ்ச் செம்மொழி நூல்களிலிருந்து நெறிமுறை விழுமியங்கள் மற்றும் கண்ணோட்டங்களைக் கற்க அனைத்து பட்டப்படிப்புகளிலும் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
  • பாலின உணர்திறன் திட்டங்கள் அனைத்து நிறுவனங்களிலும் திறம்பட வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.
  • கற்பித்தல் நடைமுறையில், ஆசிரியர்கள் அவர்களின் புதுமையான கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட வேண்டும். இதுபோன்ற முயற்சிகளுக்கு தேவையற்ற கட்டுப்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
  • வழக்கமான வகுப்பறைகளுக்கு இணையான புதிய வெளிகள் கண்டறியப்பட வேண்டும். இது போன்ற வெளித் துறைகளில் பங்கேற்க மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய பங்கேற்பு சமூக பொறுப்புணர்வு மற்றும் தலைமைத்துவ திறன்களை வளர்க்க உதவும்.
  • அறிஞர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கல்வி நிலையங்களில் மாணவர்களுடன் உரையாட அழைக்கப்ப படவேண்டும், மேலும் அவர்கள் குறைந்தபட்சம் ஒரு வாரமாவது தங்கி மாணவர்களுடன் உரையாடுவது பலனளிக்கும்.
  • மாணவர்கள் தங்கள் எழுத்து, கருத்தாக்கம் மற்றும் பகுப்பாய்வு திறன்களை மேம்படுத்த பல்வேறு தலைப்புகளில் தங்கள் சொந்த யோசனைகள் மற்றும் முன்னோக்குகளை எழுத ஊக்குவிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு கல்வி நிறுவனமும் குறைந்தபட்சம் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் தங்கள் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதைச் சாத்தியமாக்குவதற்கும், மாணவர்கள் சமூகத்தின் அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொள்வதற்கும், இந்தப் பகுதிகளின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கும், மேலும் விரிவாக்க நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.
  • அசல் படைப்பாற்றல் மற்றும் விமர்சன சிந்தனை திறன்களை வளர்ப்பதற்கு வலை உலகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைச் சார்ந்திருப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்.
  • புதுமையான கற்பித்தல்-கற்றல் நடைமுறைகளைச் சேர்க்க கல்லூரி ஆசிரியர்களுக்கான பணிச்சுமை தாராளமயமான முறையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
  • பணி விடுப்பு நடைமுறைகள் ஆராய்ச்சி சார்ந்த ஆசிரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

நிதி குறித்த கொள்கைகள்

  • உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு அரசு பட் ஜெட்டில் பத்து சதவிகிதம் ஒதுக்கப்படவேண்டும்..
  • மாநில அரசின் பல்கலைக் கழகங்களில் நிதிப் பற்றாகுறை அதிகம் காணப்படுகின்றது. பற்றாக்குறையின் பளு மாணவர்களின் மீதே சுமத்தப்படுகின்றது. எனவே பல்கலைக்கழகங்களுக்கான நிதி உதவியை அரசு கணிசமாக ஒதுக்குவதை கொள்கை முடிவாக கொள்ளவேண்டும்.
  • விளிம்பு நிலை மாணவர்களுக்கான நிதி உதவி எல்லா நிலையிலும் உறுதி செய்யப்படவேண்டும்.
  • உயர்கல்வித்துறையை தனியாருக்கு விட்டுவிடாமல் அரசு நிதியுதவியுடன் காக்கவேண்டும்..
  • சுயநிதிப் படிப்புகள் மற்றும் கல்லூரிகள் காளான்போல் வளர்ந்து வருவதால், சுயநிதித் திட்டத்தின் கீழ் புதிய கல்லூரிகள் மற்றும் படிப்புகளைத் தொடங்குவதற்கு மேலும் அனுமதி அளிப்பதை அரசு நிறுத்தலாம். அதற்குப் பதிலாக அரசு ஏற்கனவே உள்ள கல்வி நிறுவனங்களில் புதிய படிப்புகளைத் தொடங்கலாம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைத் தொடங்கலாம்.
  • அனைத்துக் கல்லூரிகளையும் ஒன்றிய அரசு தன்னாட்சி நிறுவனங்களாக மாற்றும் வாய்ப்பு இருப்பதால், மாநில அரசு கட்டணக் விகிதங்கள் மற்றும் அந்த நிறுவனங்களின் நிதியைக் கையாள்வதில் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்.. இது தொடர்பாக தனி வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட வேண்டும். மாநில அரசு தன்னாட்சி, மற்றும் சுயநிதி நிறுவனங்களின் நிதி மேலாண்மையைக் கட்டுப்படுத்த பல சிறப்பு விதிகளை உருவாக்க வேண்டும். இதற்கான சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் அமைக்கப்படவேண்டும்.
  • தேசீயத் தர மதிப்பீட்டு நிர்ணய குழுவின் பரீசிலனைக்கு தனியார் கல்லூரிகளின் வசதிகளுக்கும் அரசு கல்லூரியின் கட்டமைப்பு வசதிகளுக்க்கும் பெரும் வேறுபாடுகள் இருப்பதால் அரசு கல்லூரிகள் பாதிக்கப் படுகின்றன. தனியார் கல்லூரிகள் அதிக மதிப் பெண்கள் பெறுகின்றனர். இந்த வேறு பாட்டை நீக்காவிடில் எப்போதும் அரசு கல்லூரிகள் பின் தங்கியே இருக்க நேரிடும்.

ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகள்

ஒட்டுமொத்த கல்வி முறையின் முதுகெலும்பாக ஆசிரியர்கள் இருப்பதால், ஆசிரியர்களின் திறன்கள் மற்றும் முன்னோக்குகளை வலுப்படுத்துவதில் மாநில அரசு மிகுந்த கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். வழக்கமான புத்துணர்ச்சி மற்றும் நோக்குநிலை படிப்புகளை நடத்துவதைத் தவிர, அனைத்து நிறுவனங்களிலும் சில நடைமுறைகள் மேற்கொள்ளப்படலாம். அவற்றில் சில:

  • வழக்கமான வாராந்திர கருத்து பரிமாற்ற அமர்வுகள் நடத்தப்பட வேண்டும் அவற்றின் இறுதி முடிவுகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்பட வேண்டும். அந்த முடிவுகள் குறித்தப் பின்தொடர்தல் நடவடிக்கைகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவராலும் உண்மையாக எடுக்கப்பட வேண்டும் மேலும் அது மதிப்பாய்வுக்காக அடுத்த கூட்டத்தில் தெரிவிக்கப்படலாம். இந்த விவாதங்கள் மிகவும் ஜனநாயக முறையில் நடத்தப்பட வேண்டும், அதற்கான கையேடு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படலாம்.
  • நன்கு வடிவமைக்கப்பட்ட இணை பாடத்திட்ட செயல்பாடுகள் மூலம் வாழ்க்கையில் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஆசிரியர்கள் மாணவர்களிடையே நம்பிக்கையை உருவாக்க முடியும். இந்தச் செயல்பாடு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படலாம், ஏனெனில் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் நெருக்கடியான தருணங்களை எதிர்கொள்ளும்போது, விபரீதமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க இது உதவும்.
  • ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் வாழ்க்கை உலகத்தைப் பற்றி அவதானிக்கலாம், இது ஒவ்வொரு மாணவரையும் சிறப்புக் கவனத்துடன் கையாள ஆசிரியர்களுக்கு உதவும்.
  • கலந்துரையாடல் மற்றும் பல்வேறு முறைகள் மூலம் ஆசிரியர்கள் பாலினப் பிரச்சனைகள் குறித்து மாணவர்களை உணர்த்தலாம்.
  • ஆசிரியர்கள் வகுப்பறைச் சூழலை ஜனநாயகமானதாக மாற்ற வேண்டும். கற்பித்தலில் சர்வாதிகார அணுகுமுறை தவிர்க்கப்பட வேண்டும்.

பணி நியமன மற்ற விதி முறைகள் குறித்த பரிந்துரைகள்

  • சுயநிதிக் கல்லூரிகளிலும் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு பின் பற்ற கட்டளையிட வேண்டுகின்றோம்.
  • சில பல்கலைகள் இது காறும் தமிழகத்தில் நடத்தியுள்ள ஸ்லெட் தேர்வில் சிலர் பணம் கொடுத்து தேர்ச்சி அடைந்துள்ளதாக குற்ற சாட்டுகளும். மனக் குமுறல்களும் உள்ளன. இந்தக் குறையை நீக்கும் வண்ணம் ஸ்லெட் (SLET) நுழைவுத் தேர்வு நடத்துவதற்கென தனி அமைப்பை (BOARD) உருவாக்குவது அவசியம்.
  • TRB போன்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெளிப்படைத் தன்மை தேவை. மேலும் பல்கலைக் கழகங்களுக்கான ஆசிரியர் நியமனகளையும் ஆசிரியர் தகுத் தேர்வின் அடிப்படையிலேயே செய்ய பரிந்துரைக்கப்படுகின்றது.
  • தற்போது பல்கலைகளில் பின் பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையில் . சமூக நீதியை மறுக்கும் நிலை உள்ளது. துறை வாரியாக ரோஸ்டர் பின்பற்றப்படுகின்றது. இதனால் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவரின் வாய்ப்புகள் வெகுவாக குறைகின்றன. எனவே தற்போது பின் பற்றப்பட்டு வரும் துறை வாரியான இட ஒதுக்கீட்டு முறையை கைவிட்டு, பல்கலைக் கழகத்திற்கு முழுவதுமான ரோஸ்டர் (SINGLE UNIT) முறை பின் பற்ற கோருகின்றோம்.
  • சுயநிதிக் கல்லூரிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பணி வரன் முறை செய்யும் ஆணையிட வேண்டுகின்றோம்.
  • சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்கள் பணிச் சூழல் மேம்பட சுயநிதிக் கல்லூரிகள் ஒழுங்காற்று சட்டம் ஒன்றை நிறைவேற்றக் கோருகின்றோம்.
  • தற்காலிகப் பணியில் அமர்த்தப் படும் பல்லாயிரக் கணக்கான கெளரவ விரிவுரையாளர்கள் மிகவும் குறைந்த ஊதியத்தையேப் பெறும் அவல நிலை உள்ளது. பல்கலைக் கழக மான்யக் குழு பரிந்துரைகளின் படி அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 50,000 ரூபாய் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மேலும் கெளரவ விரிவுரையாளர் எனும் வகையில் ஆசிரியர்கள் நியமனம் செய்வது தடை செய்யப்படவேண்டும். பதிலாக நிரந்தர பணியில் ஆசிரியர்கள் நியமிக்கப் படவேண்டும்.
  • பல்கலைக் கழக மற்றும் கல்லூரி பேராசிரியர் நியமனத்திற்கு தகுதி பெற விண்ணப்பதாரரின் பல் வேறு பங்களிப்புகளுக்கு மதிப்பெண்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. அவற்றை கட்டாயமாக பின்பற்றுவதுடன் விண்ணப்பதாரர் பெறும் மதிப்பெண்களையும் வெளிப்படையாக வெளியிடவேண்டும் மேலும் நேர்முகத் தேர்வில் அவர்களுக்கு மதிப்பெண் அளிப்பதற்கான வரையறைகளும், அவற்றிற்கு அவர்கள் பெற்ற மதிப்பெண்களும் உடனடியாக அறிவிக்கப்படவேண்டும். வெளிப்படைத் தன்மையே நேர்மையான நியமனத்திற்கு வழி வகுக்கும். 

கல்விக் கட்டணம்

  • உதவி பெறும் கல்லூரிகள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட பல மடங்கு வசூல் செய்து வருகின்றனர். இதை உடனடியாக தடுத்து நிறுத்தி மாணவர்களுக்கு உரிய கட்டணத்தை மட்டும் செலுத்தும் வகை செய்யவேண்டும்.
  • "தனியார் உதவி பெறும் மற்றும் சுயநிதிக் கல்வி நிறுவனங்களின் சேர்க்கை மற்றும் கட்டணம்" குறித்த ஒரு சிறப்பு மசோதாவை அரசாங்கம் கொண்டு வரலாம்.
  • இந்த மசோதா பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியிருக்கலாம்:
    1. தற்போதுள்ள தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தை உதவி பெறும் கல்லூரிகள் முறையாகப் பின்பற்றுவதை உறுதிசெய்ய கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்துதல்.
    2. அதிகப்படியான கட்டண வசூல் மற்றும் அரசு உத்தரவை மீறுவதைத் தவிர்க்க அனைத்துப் படிப்புகளுக்கும் அரசு நிர்ணயித்த கட்டண விகிதங்களை அந்தந்த இணையதளங்கள் மற்றும் ப்ராஸ்பெக்டஸ்களில் வெளிப்படையாக அறிவித்தல்.
    3. நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மற்றும் சேர்க்கை நடைமுறைகளை மீறுவதைத் தவிர்க்க ஒவ்வொரு மாவட்டத்திலும், பொதுப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்க வேண்டும்.
    4. இத்தகைய மீறல்களுக்காக கல்வி நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
    5. இந்த நடைமுறையைத் தவிர்க்க, ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் ஒரே மாதிரியான கட்டணக் கட்டமைப்பை அரசு முடிவு செய்து, மாணவர்களிடமிருந்து கூடுதல் பணம் வசூலிக்காமல் இருப்பதைப் பார்க்க வேண்டும். இந்த வகையில், அதிகப்படியான கட்டண வசூல் தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்ய பயனுள்ள தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
    6. SC/ST மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால் பல நிறுவனங்களில் விதிமீறல்கள் காணப்படுகின்றன. எஸ்சி, எஸ்டி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர் நலன்

  • ஒவ்வொரு கல்லூரியிலும் பட்டியிலின மற்றும் பழங்குடி மாணவர்களின் குறை தீர்க்கும் வகையில் தனியாக ஒரு SC &ST Cell உருவாக்கப்படவேண்டும்.
  • உயர்கல்வி மாணவர்கள் சீரிய முறையில் தமிழ்நாட்டின் பண்பாடு, கலை, இலக்கிய மேம்பாட்டிற்கான ஆய்வுகளை மேற்க்கொள்ளும் வகையில் சிறப்பு நிதி உதவி வழங்கவும் கோருகின்றோம்.
  • மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறைகளை தீர்க்க தனியாக குறை தீர்க்கும் அதிகாரம் கொண்ட ட்ரிப்யூனல் போன்ற உயர்மட்ட அமைப்பு உருவாக்கப்படவேண்டும்.
  • மாணவர் பேரவைத் தேர்தல்களை முறையாக ஒவ்வொரு கல்லூரியிலும் நடத்த ஆணையிடவேண்டும். கல்லூரிகளில், நியமனங்களுக்குப் பதிலாக தேர்தல் நடத்துவதன் மூலம் மாணவர் மன்றங்கள் ஜனநாயக முறையில் உருவாக்கப்பட வேண்டும்.
  • அனைத்து நிறுவனங்களிலும் நல்ல எண்ணிக்கையிலான வாசகர் மன்றங்கள் செயல்பட வேண்டும்.
  • கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் தொடர் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும்.
  • சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும்.
  • சமூக நீதிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் எந்தக் கட்டணமும் வசூலிக்காமல் நிபுணர்களைக் கொண்டு நடத்தப்பட வேண்டும்.
  • ஜனநாயக வளாக சூழ்நிலையை உறுதிப்படுத்த, மாணவர் பேரவை மற்றும் பிற மன்றங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
  • நுண்கலை சங்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
  • அகடெமிக் கவுன்சில் மற்றும் செனட்களில் மாணவர்களின் பங்கேற்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
  • நிறுவனங்களில் ஷிப்ட் முறை விளையாட்டு மற்றும் பிற பாடநெறி நடவடிக்கைகளில் மாணவர்களின் பங்கேற்பைப் பாதிக்கிறது. தேவையான தீர்வுகள் காணப்பட வேண்டும்.
  • கவுன்சிலிங் கற்றல் திட்டத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டும்.
  • பயிற்சி பெற்ற கல்வித் தகுதி பெற்ற ஆலோசகர்கள் மாவட்டங்கள் தோறும் கணிசமான அளவில் நியமிக்கப்பட வேண்டும் மற்றும் ஆலோசனை மையங்கள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • சமூகத்தில் மிகவும் பின் தங்கிய பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில் மேம்பட்டு விளங்க பொருளாதர ரீதியான சலுகைகளுடன், தரமான சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும்.
  • மருத்துவத்திற்கான5 உள் இட ஒதுக்கீட்டில் SC/ST;M.BC;BC க்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும்
  • அதிக மதிப்பெண் எடுத்த SC/ST மாணவர்களுக்கு பொதுப்பிரிவின் கீழ் இடங்களை ஒதுக்க வேண்டும்.பொதுப் பிரிவு என்பது அனைவரும் போட்டியிடும் இடம் என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்

கல்வியில் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் பிறர் நலன் காத்தல்

  • இலங்கைத் தமிழர்களின் கல்விச் செயல்பாட்டில் தீவிர கவனம் குவிக்க வேண்டும்
  • முகாம்கள் தோறும் அங்கன் வாடிகளை உருவாக்க வேண்டும்.முகாம்கள் தோறும் ஆரம்பப் பள்ளி தனியாகவும் மேல்நிலைப்பள்ளி தனியாகவும் நிறுவுதல் வேண்டும்.
  • முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் மாணவர்களுக்காக கல்லூரிகளில் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும்.
  • அவர்களுக்கு ஆரம்ப பள்ளியிலிருந்து ஆராய்ச்சி படிப்புவரை இவர்களுக்கு இலவச கல்வியை வழங்க வேண்டும்
  • பிறமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பெறுவாரியாகப் புலம்பெயர்ந்து வேலை செய்கின்றனர்.புலப்பெயர்வால் அவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.புலம் பெயர் மாநிலத்தவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படா வண்ணம் சிறப்பு பள்ளிகளை அரசு உருவாக்க வேண்டும். 

ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு

கற்பித்தலின் தரத்தை மதிப்பிடுவதற்கு ஒரே மாதிரியான கட்டமைக்கப்பட்ட அளவுகோல் இருக்க முடியாது.

  • ஆசிரியர்கள் திறன் மதிப்பீடு செய்ய ஒரு திட்டமிடப்பட்ட அளவுகோல் உருவாக்கப்படவேண்டும். பாடங்கள் பயிற்றுவித்தல் தவிர, ஆசிரியர்களின் இணை பாடத்திட்ட நடவடிக்கைகளில் ஈடுபாடு, புதுமையாக கற்பித்தல் நுட்பங்களை உருவாக்குவதில் அவர்களின் ஈடுபாடு, கற்பித்தல் முறைகள், விரிவாக்க நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் செய்த பங்களிப்புகள், வகுப்பிற்கு வெளியே மாணவர்களின் மேம்பாட்டிற்காக எடுக்கும் முன்முயற்சிகள் ஆகியவை அந்த அளவீட்டில் இடம் பெறலாம்.
  • கல்லூரி ஆசிரியர்கள் தங்கள் கேரியர் முன்னேற்றத்திற்காக ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் மன அழுத்தத்திலிருந்து விடுபடவேண்டும், அதற்குப் பதிலாக அவர்களின் தரமான கற்பித்தல் முயற்சிகளை பொருத்தமான அளவீட்டுக் கருவிகளை உருவாக்குவதன் மூலம் மதிப்பிடப்படலாம். ஆயினும்கூட, ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவதில் ஆசிரியர்களின் ஈடுபாடு பாராட்டப்பட்டு ஊக்குவிக்கப்படலாம்.
  • பல்கலைக்கழக ஆசிரியர்கள் அவர்களின் ஆராய்ச்சியின் தரம் மற்றும் சமூகத்திற்குப் பொருந்தக்கூடிய பங்களிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படலாம். வெளியீடுகள் நிபுணர் குழுவால் கவனமாக ஆய்வு செய்யப்பட்டு மதிப்பிடப்படவேண்டும்.

______________________________________________________________________________ _______________________

ஒருங்கிணைப்பாளர்கள்:

பேரா.இரா.முரளி

பேரா.வீ. அரசு

பேரா.பா.சிவக்குமார்

கல்வியாளர் கண குறிஞ்சி

ஆசிரியை உமா மகேஸ்வரி

Pin It