...நமது தமிழகம் மற்றும் இந்தியா மோசமான சூழ்நிலையில் உள்ளது. இந்துத்துவாப் பயங்கரவாதம் மோடித் தலைமையில் ஆட்சியில் உள்ளது. நவீன பிராமணீயத்தின் மூன்று உள்ளடக்கக் கூறுகளை இந்தி, இந்து, இந்தியா என்பது எல்லாத்தளங்களிலும் மிகவும் வேகமாகப் பரவி விரவி வருகின்றது.

தமிழகத்தில் சாதியப் பயங்கரவாதம் முக்கியப் போக்காக மேலோங்கி உள்ளது. தலித் விரோதப் போக்குச் சமூகமயமாகி உள்ளது.

பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் பெருகிக்கொண் டிருக்கின்றன.

எல்லா அரசுப் பயங்கரவாதமும் இந்துத்துவாப் பயங்கர வாதத்தின் இணைப்பில் நடத்தப்படுகின்றன.

இந்த அபாயகரமான சூழலில் புரட்சிகரச் சக்திகள் மக்களை ஓரணியில் திட்டவட்டமாகத் திரட்ட வேண்டியுள்ளது. குறிப்பான திட்டத்தைப் பார்ப்போம்!

நமது பொதுத் திட்டம்

பொதுத் திட்டம் என்பது மக்கள் சனநாயகத் திட்டமாகும். இதுவே பொதுமையர்களின் (கம்யூனிஸ்டுகளின்) குறைந்தபட்ச திட்டமாகும். சமூகமயம் (சோலிசம்) என்பது அதிகபட்சத் திட்டமாகும்.

நமது பொதுத் திட்டம் முதலாளிய சனநாயகக் கூறுகளையும் சமூகவியக் (சோசலிச) கூறுகளையும் உள்ளடக்கி உள்ளது. இதுவே மக்கள் சனநாயகம் ஆகும்.

நமது பொதுத் திட்டம் சமூகத்தின் புறநிலைப் போக்குகளின் வளர்ச்சி, வீழ்ச்சி ஆகியவைப் பற்றிய மார்க்சியத் தத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் விவரங்களில் இருந்து, பாட்டாளிவர்க்க இயக்கத்தின் குறிக்கோள்களின் திட்டமாக வரையறுக்கிறது.

நமது பொதுத் திட்டமானது புரட்சியின் கட்டத்தைப் பொருத்தே தீர்மானிக்கப்பட வேண்டும். இக்கட்டம் மக்கள் சனநாயகப் புரட்சிக்கான கட்டமாகும். நமது பொதுத்திட்டமானது மக்கள் சனநாயக புரட்சி முடியும் வரை மாறாது. இதுவே தோழர் மாவோவால் பொதுத்திட்டம் என்று வரையறுக்கப்பட்டது.

திட்டத்தின் குறிக்கோள்களை வரையறுப்பதற்குச் சமூகத்தின் குறித்தத் தன்மையையும் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கிலுள்ள அடிப்படை முரண்பாட்டையும் அடையாளங்காணுவது மிகவும் முக்கியமானது.

ஒரு சமூகத்தின் குறித்த தன்மையை தீர்மானிப்பதில் தீர்மானகரமான பங்கு அச்சமூகத்தின் உற்பத்திமுறைதான் ஆகும். இந்திய நாட்டின் அரசெல்லைக்குள் உள்ள சமூகத்தை பொருத்தவரை அது ஒரே சமூகமானது இல்லை என்பதே ஆகும். ஒன்றுக்கு மேற்பட்ட உற்பத்தி முறைகளைக் கொண்டிருக்கிறது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்திய துணைக்கண்டப் பகுதியில் இயல்பாக உருவான பட்டறை முதலுடைமையை () அழித்துவிட்டு, தனது நலனுக்கான தனது மூலதன உற்பத்தியை இங்கு விட்டது. அதே சமயத்தில் இங்கு ஏற்கனவே நிலவிக்கொண்டிருந்த சாதிநிலவுடைமை, தொல்குடி சமூகங்களின் மீதும் தாக்குதலைத் தொடுத்தது மட்டுமல்லாமல், அவைகளை அரைத்தன்மையில் நீடிக்க வைத்தது. இது மட்டுமல்லாமல் தனது கட்டுப்பாட்டுக்குட்பட்டு பிராந்திய பெருமூலதனத்தையும் அனுமதித்தது. இச்செயல்போக்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட உற்பத்தி முறை களைக் கொண்ட சமூகங்களின் இருத்தலை உருவாக்கியது.

அரசியல் சுதந்திரம் பெற்ற இந்திய பிராந்திய பெரு முதலாளி வர்க்கம் தனது நலனிலிருந்து கடந்த கட்டத்தின் நிலையை நீடிக்க வைத்தது. அதனால் இன்றைய இந்தியாவின் சமூகங்களின் தன்மை என்பது மூலதன (capital), சாதி-அரைநிலவுடைமை, அரைத்தொல்குடி உற்பத்தி முறைகளைக் கொண்டதாக இருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட உற்பத்தி முறைகளின் நீடித்த இந்த நிகழ்வுப் போக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படை முரண்பாடுகளைக் கொண்டதாக தொடக்கம் முதலே நீடிக்கிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை மூலதன (capital), சாதி-அரைநிலவுடைமை உற்பத்திமுறைகள் நிலவுகின்றன. பழங்குடிகளின் எண்ணிக்கை மிகக்குறைவானதால் தொல்குடி உற்பத்திமுறை என்பது தமிழகத்தைப் பொருத்தவரை மிக முக்கிய உற்பத்திமுறையாக இல்லை.

எனவே, தமிழ்நாடானது இந்திய பிராந்திய பெருமுதலாளிகள் மூலதன சாதி நிலக்கிழார்கள், ஏகாதிபத்தியங்கள் மற்றும் அதிகார வர்க்க மூலதனத்தின் சுரண்டல் காடாக உள்ளது.

மேற்கண்ட நிலையால் தமிழகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படை முரண்பாடுகளை கொண்டதாக தொடக்கம் முதலே நீடிக்கிறது. இன்றைய தமிழகத்தை பொருத்தவரை கீழ்க்கண்ட அடிப்படை முரண்பாடுகள் நிலவுகின்றன.

(1) மூலதனத்திற்கும்     - உழைப்பு சக்திகளுக்கும்

(2) ஏகாதிபத்தியங்கள்    - தமிழ்த்தேசிய மக்கள்

(3) சாதி-அரைநிலவுடைமை - தமிழ்த்தேசிய மக்கள்

(4) இந்திய ஒன்றிய அரசமைப்பு - தமிழ்த்தேசிய மக்கள்

(5) மூலதனங்கள்             - இயற்கை

மேற்கண்ட முரண்பாடுகளில் முதல் முரண்பாடான மூலதனத்திற்கும்-உழைப்பிற்கான முரண்பாட்டில் (1) பெரு முதலாளித்துவ மூலதனம் (2) அரசு மூலதனம் (3) மூலதன-சாதி நிலக்கிழார்களின் மூலதனம் அடிப்படையாக உள்ளடங்கும்.

நமது பொதுத்திட்டம் கோருகின்ற பாட்டாளி வர்க்க அரசியல் தலைமை என்பது, பாட்டாளி வர்க்கத்தலைமையில் பொருளாதாரத்தில் பொதுத்துறை, கூட்டுறவுத்துறைகள் என்பன சமூகவியக் கூறுகளே, இருந்தாலும் இத்திட்டத்தை நிறைவேற்றுவது தமிழகத்தை சமூகவிய (சோசலிச) சமூகமாக மாற்றாது.

மக்கள் சனநாயகத்தில் பொதுத்துறை இருக்கும் பொழுதே தனியார் துறை அனுமதிக்கப்படும். கூட்டுறவுகளும் மக்கள் சனநாயகக் கட்டத்தில் தனியார் பங்குகளாகவே இருக்கும். சமூகமாக உடைமையாக்கப்படமாட்டாது.

அதேபோல், மக்கள் சனநாயகத்தில் தலைமைத் தொழிலாளி வர்க்கம் என்றால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவது அல்ல. மக்கள் சனநாயகப் புரட்சியின் இலக்குகளை (எதிரிகள்) இந்திய பிராந்திய பெருமுதலாளி வர்க்கம், மூலதன- சாதிநிலக் கிழார்கள், ஏகாதிபத்தியம், அதிகாரவர்க்க முதலாளித்துவம் ஆகிய நால்வரையும் அதிகாரத்திலிருந்து தூக்கியெறிந்து, மக்கள் சனநாயகப் புரட்சியின் இயக்குச் சக்திகளான தொழிலாளர்கள் தலைமையில் விவசாயிகள், குட்டிமுதலாளிகள், தேசியமுதலாளிகள் ஆகிய மூன்று வர்க்கமும் பெண்கள், தலித்துகள், மதச் சிறுபான்மையினர், பழங்குடிகள், மீனவர்கள் ஆகிய சிறப்புப் பிரிவினரின் மக்கள் சனநாயக கூட்டுச் சர்வாதிகாரத்தை நிறுவுவதே மக்கள் சனநாயகத்தின் அரசியல் மூலஉத்தி ஆகும்.

இடைக்கட்டம், முதன்மை முரண்பாடு, குறிப்பான திட்டம்

நமது பொதுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டம், புரட்சியின் கட்டம், அடிப்படை முரண்பாடுகள், மூலஉத்தி இவைகள் இந்த புரட்சியின் கட்டம் முடியும்வரை மாறாது. இவைகளுக்குள் இயங்கியல் ரீதியாக உறவு உண்டு.

அதேசமயத்தில் முரண்பாடுகளின் வளர்ச்சிப் போக்கில் ஏற்படும் பகுதியளவு பண்பு மாற்றங்களுக்கேற்ப மேற்கண்டவைகளில் பகுதியளவு மாற்றம் இருக்கும். இம்மாற்றங்களே இடைக்கட்டங்களாகவும் முதன்மை முரண்பாடாகவும், குறிப்பானத் திட்டங்களாகவும் அய்க்கிய முன்னணிகளாகவும் வளர்ச்சிப்போக்கில் உருவாகின்றன. பகுதியளவு பண்பு மாற்றத்தைப் பற்றி இன்னும் மாவோவின் கூற்றில் பார்ப் போமானால்,

“...கூட்டுப் பண்ணைமுறை முழுவதும் வலுவாக்கப்பட்டது” என்று இதன் 407ஆவது பக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. “முழுமையான வலுவாக்கம்”- ஒருவரை அமைதி உற்றவராக்கும். அது எப்படி “முழுமையாக” இருக்க முடியும்? மனிதக் குலத்தின் தொடக்கத்திலிருந்து ஒருவரும் இறந்து போகாமல் எல்லோரும் முழுமையாக வலுப்படுத்தப்பட்டிருந்தால் என்னவாகும்? அது எந்தவகையான உலகமாக இருந்திருக்கும்! இந்தப் பிரபஞ்சத்தில், நமது உலகில், எல்லாப் பொருள்களும் இடைவிடாமல் பிறக்கின்றன, வளர்கின்றன அழிந்து போகின்றன. பட்டுப்பூச்சியின் வாழ்க்கையை எடுத்துக் கொள்வோம், கடைசியில் இது இறந்து போக வேண்டும் என்பது மட்டுமல்ல, இது வாழ்கின்ற காலத்தில் நான்கு கட்ட வளர்ச்சியைக் கடந்தாக வேண்டும். முட்டை, பட்டுப்புழு, கூட்டுப் புழு மற்றும் பட்டுப்பூச்சி, ஒரு கட்டத்திலும் இது முழுமையாக வலுவாக்கப்பட முடியாது. கடைசியில் பட்டுப்பூச்சி இறந்து போகிறது. அதன் பழைய சாராம்சம் புதிய சாராம்சமாகிறது. (இதுபல முட்டைகளை இட்டுச்செல்வது போல) இது ஒரு குணாம்ச மாற்றம். உண்மையில் முட்டையிலிருந்து புழுநிலைக்கு, புழுநிலையிலிருந்து கூட்டுப்புழு நிலைக்கு, கூட்டுப்புழுவிலிருந்து பூச்சிநிலைக்குச் செல்வது அளவு நிலைக்கு, மாற்றத்தை காட்டிலும் கூடுதலான ஒன்று என்பது தெளிவு. குணமாற்றமும்கூட இதில் இருக்கிறது. ஆனால் இது பகுதி அளவிலான குணமாற்றமாக இருக்கிறது. ஒரு மனிதனும்கூட, இறப்பை நோக்கிய வாழ்க்கையின் ஊடாக மாறுபட்ட நிலைமைகளில் அனுபவங்களைப் பெறுகிறான். குழந்தைப் பருவம், பதின்பருவம், இளமைப் பருவம், முதிர் இளமைப்பருவம் மற்றும் முதுமைப்பருவம் மனிதர்கள் வாழ்க்கையிலிருந்து மரணத்திற்குச் செல்வது அளவுமாற்றம் நடைமுறையாக இருக்கிறது.

அதேசமயம், பகுதியளவான குணமாற்ற நடைமுறையையும் அவர்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள். இளமைக்காலத்திலிருந்து முதுமைக்குச் செல்லும்போது குணமாற்றம் இல்லாமல் அளவுமாற்றம் மட்டுமே அதிகரிக்கிறது என்று எண்ணுவது நகைப்புக்குரியதாக இருக்கும். மனித உறுப்பின் செல்கள் இடைவிடாமல் பிரிந்து கொண்டேயிருக்கின்றன. பழையவை இறந்து அழிகின்றன. புதியவை பிறந்து வளர்கின்றன. மரணத்தின்போது முழுமையான குணமாற்றம் இருக்கிறது. இதற்கு முந்தைய அளவு மாற்றங்களின் மூலமாகவும் அதே போல் அளவு மாற்றங்களின் போதே ஏற்படும் பகுதியளவிலான குணமாற்றங்களின் மூலமாகவும் ஒருவர் இந்த நிலைக்கு வருகிறார். அளவு மாற்றமும் குணமாற்றமும் எதிர்மறைகளின் ஒற்றுமையாகும். அளவு மாற்றங்களுக்குள்ளேயே பகுதியளவு குணமாற்றங்களும் இருக்கின்றன. குணமாற்றங்களுக்குள்ளே அளவு மாற்றங்கள் இல்லை என்று ஒருவர் சொல்ல முடியாது. குணமாற்றங்களுக்குள்ளும் அளவு மாற்றங்கள் இருக்கின்றன.

மாற்றத்தின் நீண்ட நடைமுறையில், இறுதியான அளவு மாற்றத்துக்கு செல்வதற்கு முன்னால், அந்த பொருள் இடைவிடாத அளவு மாற்றங்கள் மற்றும் பகுதியளவான நல்ல பல குண மாற்றங்களை கடந்து சென்றாக வேண்டும். ஆனால், இறுதியான குணமாற்றம் என்பது, பகுதி குணமாற்றங்களும் கணிசமான அளவு மாற்றங்களும் இல்லாமல் ஏற்பட முடியாது”, -மாவோ

மாவோவின் இந்த பகுதியளவு பண்பு மாற்றத்தை பற்றிய பங்களிப்பு மார்க்சிய தத்துவத்திற்கு மாபெரும் பங்களிப்பு ஆகும். இது ஒரு பொருளின் வளர்ச்சிப்போக்கை துல்லியமாகவும் ஆழமாகவும் விளங்கிக்கொள்ள உதவுகிறது. இது சமூக வளர்ச்சியில் இடைக்கட்டங்களை அடையாளங்காண உதவுகிறது.

இடைக்கட்டம்

சீனப்புரட்சியை பற்றிக் குறிப்பிடும்பொழுது மாவோ, “நமது புதிய ஜனநாயக பொதுத்திட்டம் முதலாளிய ஜனநாயகப் புரட்சிக்கட்டம் முழுவதும் அதாவது பல பத்தாண்டுகளாக மாறாமல் இருக்கும். ஆனால் இக்கட்டத்தின்போது ஒவ்வொரு வளர்ச்சிப்படியிலும் (phase) நிலைமைகள் மாறியுள்ளன. அல்லது மாறிக் கொண்டிருக்கின்றன” என்கிறார்.

அதாவது இக்கட்டத்தின்போது ஒவ்வொரு வளர்ச்சிப் படியிலும் மாற்றம் இருக்கும் என்கிறார். இதையே இடைக் கட்டம் (phase) என்கிறோம்.

இடைக்கட்டம் என்பது முரண்பாட்டின் வளர்ச்சியால் உருவாகிறது. குறிப்பாக முதன்மை முரண்பாட்டின் வளர்ச்சியால் உருவாகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படை முரண்பாடுகள் நிலவும்பொழுது முதன்மை முரண்பாடு ஒன்று ஆதிக்கம் செய்கிறது. இம்முரண்பாடு தீர்க்கப்படும்பொழுதோ, பகுதிகளை தீர்க்கப்படும்பொழுதோ, வேறு முரண்பாடுகள் கூர்மையடையும்பொழுதோ இடைக்கட்டங்கள் மாறுகின்றன. குறிப்பான திட்டம் மாறுகின்றது.

இன்றைய கட்டத்தை பொருத்தவரை இந்திய ஆளும் வர்க்கங்களையும் இந்திய பிராந்திய பெருமுதலாளி வர்க்கத்தால் கடந்த 25 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் உலகமயம், தாராளமயம், தனியார்மயக் கொள்கைகள் சமூகத்தில் பல்வேறு முரண்பாடுகளை கூர்மையடையச் செய்துள்ளன. இதுவே இன்றையக் கட்டத்தில் அடிப்படையாக உள்ளது. எனவே, இன்றைய இடைக்கட்டம் உலகமய, தாராளமய, தனியார்மய எதிர்ப்பு கட்டம் ஆகும்.

துணைக்கட்டம்

 இன்றைய இடைக்கட்டம் உலகமய தாராளமய, தனியார்மய எதிர்ப்பாகவே இருக்கிறது. இருந்த போதிலும், இன்றைய வளர்ச்சிப் போக்கில் ஆளும் வர்க்கங்களுக்குள்ளான முரண்பாடுகள் மேலும் மேலும் கூர்மையடைந்து ஒரு கூறுக்கெதிராக நிற்கின்றன.

அதாவது, நவீன பார்ப்பனீய-இந்துத்துவா பாசிசமே முதன்மைக் கூறாக உள்ளது. இப்போக்குத் துணைக்கட்டத்தை தோற்றுவிக்கிறது. எனவே, இன்றைய துணைக்கட்டம் நவீன பார்ப்பனீய- இந்துத்துவா பாசிச எதிர்ப்புக் கட்டமாகும்.

முதன்மை முரண்பாடு

“சிக்கலான ஒரு பொருளின் வளர்ச்சிப் போக்கில் பல முரண்பாடுகள் இருக்கின்றன. அவற்றில் இன்றியமையாத ஒன்று முதன்மை முரண்பாடாகும். இதன் இருத்தலும் வளர்ச்சியும் பிறமுரண்பாடுகளின் இருத்தலையும் வளர்ச்சியையும் தீர்மானிக்கவோ செல்வாக்கு செலுத்தவோ செய்கின்றன” -மாவோ

“ஆகவே எந்த ஒரு வளர்ச்சிப் போக்கிலும் ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடுகள் இருக்குமானால், அவற்றில் ஒன்று முதன்மை முரண்பாடாக இருக்கும். அது தலைமை பங்கை வகிப்பதோடு நிர்ணயம் செய்யும் பங்கையும் வகிக்கும். மற்றவை, இரண்டாம் நிலையில், கீழ்ப்பட்ட நிலையில் இருக்கும். எனவே, இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட முரண்பாடுகள் உடைய எந்த ஒரு சிக்கலான வளர்ச்சிப் போக் கையும் நாம் ஆராயும்பொழுது, அதன் முதன்மை முரண்பாட்டைக் காண நாம் அனைத்து வழிகளிலும் முயல வேண்டும். ஒருமுறை இம்முதன்மை முரண்பாட்டை இறுகப் பற்றியதும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எளிதில் தீர்வு காணலாம். இந்த முறைதான் முதலாளிய சமுதாயம் பற்றிய தமது ஆய்வில் மார்க்சு நமக்குக் கற்றுத்தந்துள்ள முறையாகும். ஏகாதிபத்தியத்தையும், முதலாளியத்தின் பொது நெருக்கடியை பற்றி ஆராய்ந்த போதும் சோவியத் பொருளாதாரம் பற்றிய ஆய்வை மேற்கொண்ட போதும் லெனினும் ஸ்டாலினும் நமக்குக் கற்றுத் தந்துள்ள முறையும் இதுதான். இதை புரிந்துக்கொள்ளாத அறிவாளிகளும் செயல் வீரர்களும் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இதன் விளைவாக அவர்கள் குழப்பத்திற்குள்ளாகின்றனர். எனவே, அவர்களால் அப்பிரச்சினையின் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான வழியைக் காணமுடியாமல் போவது இயல்பே.” -மாவோ

மேற்கண்ட மாவோவின் கூற்றுப்படி, ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடுகள் நிலவும் சமூகத்தில் முதன்மை முரண்பாடே அனைத்து முரண்பாடுகளையும் ஆதிக்கம் செய்யும் போக்கை கொண்டிருக்கிறது என்பது விளங்குகிறது. இம்முதன்மை முரண்பாட்டை அடையாளங்காணுவதும், இதை தீர்ப்பதற்கான குறிப்பான திட்டத்தையும் செயல் உத்திகளையும் வகுத்து செயல்படுவதில்தான் பாட்டாளி வர்க்க கட்சியின் மக்கள் இயக்கத்தின் வளர்ச்சியும் வெற்றியும் உள்ளது.

இம்முதன்மை முரண்பாடு அடிப்படை முரண்பாடுகளில் இருந்தே எழுகிறது. இதன் பொருள் இம்முரண்பாடுகளில் ஒன்றுதான் முதன்மை முரண்பாடாக வரும் என்பதல்ல. முதன்மை முரண்பாடு கீழ்க்கண்ட முறைகளில் வெளிப்படுகிறது.

(1) அடிப்படை முரண்பாட்டின் முழுமை வடிவத்திலேயே வரும். எடுத்துக்காட்டாக, நிலவுடமைக்கெதிரான முரண்பாடு, ஏகாதிபத்தியத்திற்கெதிரான முரண்பாடு என்பதை முதன்மை முரண்பாடாக வரையறுப்பதாகும்.

(2) ஒரே அடிப்படை முரண்பாட்டின் முதன்மைக் கூறில் ஒருபிரிவுக்கு எதிராக முதன்மை முரண்பாடு வெளிப்படும்.

எ.கா. அதிகாரவர்க்க முதலாளித்துவம் என்ற முதன்மைக் கூறில் ஒருபிரிவாகிய இந்திராகாந்தியின் பாசிசத்திற்கெதிராக முதன்மை முரண்பாடாக அவசரநிலை காலத்தில் எழுந்தது.

(3) ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படை முரண்பாடுகள் இணைந்து ஒரே முதன்மை முரண்பாடாக வெளிப்படும்.

எ.கா இந்திய பெருமுதலாளி வர்க்கமும் மூலதன-நிலவுடைமையும் இணைந்து ஒரே முதன்மை முரண்பாடாக வரும் அல்லது ஏகாதிபத்தியமும் இணைந்து வரலாம்.

மேற்கண்ட வடிவங்களிலேயே அடிப்படை முரண்பாட்டில் இருந்து முதன்மை முரண்பாடு எழுகிறது.

இன்றைய துணைக்கட்டத்தை பொருத்தவரை அனைத்து அடிப்படை முரண்பாடுகளும் கூர்மையடைந்துள்ளன. இருந்த போதிலும் ஆளும்வர்க்க ஏஜென்டான அதிகாரவர்க்க முதலாளித்துவத்தின் ஒருகூறான நவீன பார்ப்பனீய-இந்துத்துவா பாசிசம் முதன்மை முரண்பாட்டின் ஆதிக்க கூறாக உருவாகியுள்ளது. எதிர்க்கூறாக, இந்தியாவின் அனைத்து மொழிவழித் தேசிய இனங்கள் சேர்ந்த உழைக்கும் மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் மற்றும் பழங்குடி மக்கள் மற்றொரு கூறாகவும் உள்ளனர்.

அதாவது, நவீன பார்ப்பனீய-இந்துத்துவா பாசிசத்திற்கும் மொழிவழி தேசிய இனங்கள் (உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள்) மற்றும் பழங்குடிகளுக்கான முரண்பாடே முதன்மை முரண்பாடாக இன்றைய துணைக்கட்டத்தில் உள்ளது. இதுவே, தமிழகத்தில் நவீன பார்ப்பனீய-இந்துத்துவா பாசிசத்திற்கும் தமிழ்த் தேசிய மக்களுக்குமான (உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள்) முரண்பாடே முதன்மை முரண்பாடாகும்.

இம்முரண்பாட்டையும் இதர முரண்பாடுகளையும் தீர்ப்பதற்கான திட்டமே குறிப்பான திட்டமாகும். இதை நடைமுறைப்படுத்துவதற்கான நமது செயலுத்தியும் வகுக்கப்பட வேண்டும்.

குறிப்பான திட்டம்

“நமது கட்சியிடம் இந்த பொதுத்திட்டத்தை அடிப்படையாக உடைய குறிப்பான திட்டம் ஒவ்வொரு காலபகுதிக்கும் இருந்தே தீரவேண்டும். நமது புதிய ஜனநாயக பொதுத் திட்டம் முதலாளிய ஜனநாயக புரட்சிக்கட்டம் முழுவதும் அதாவது பலபத்தாண்டுகளாக மாறாமல் இருக்கும். ஆனால் இக்கட்டத்தின் போது ஒவ்வொரு வளர்ச்சிப் படியிலும் (Phase) நிலைமைகள் மாறியுள்ளன அல்லது மாறிக்கொண்டிருக்கின்றன. நாம் அதற்கேற்ப நமது குறிப்பான திட்டத்தை மாற்ற வேண்டியுள்ளது என்பது இயல்பே. எடுத்துக்காட்டாக, நமது புதிய ஜனநாயக பொதுத்திட்டம் வடக்கத்திய படையெடுப்பு, விவசாயப் புரட்சிப்போர், ஜப்பானுக்கு எதிரான எதிர் போர் ஆகிய காலப்பகுதிகளில் முழுவதும் அப்படியே இருந்துள்ளது. ஆனால் நமது குறிப்பான திட்டத்தில் மாறுதல்கள் இருந்து வருகின்றன. ஏனெனில் நமது நண்பர்களும் எதிரிகளும் மூன்று காலப்பகுதிகளிலும் மாறியுள்ளனர்.”-மாவோ

தோழர் மாவோ சீனாவைப் பற்றி குறிப்பிட்டது போலவே தமிழக இந்திய சூழலிலும் குறிப்பான திட்டத்தில் மாறுதல்கள் இருந்துள்ளன. இந்திய-பாகிஸ்தான் போர்களின் போதும், ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க இந்தியப் படைகளை அனுப்பிய போதும், இந்திராகாந்தி அவசரநிலைக் காலத்திலும் குறிப்பான திட்டத்தில் மாறுதல்கள் இருந்துள்ளன.

இன்றைய கட்டத்திலும் உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளினாலும் நவீன பார்ப்பனீய-இந்துத்துவ பாசிச அதிகாரத்தினாலும் குறிப்பான திட்டத்தில் மாறுதல்கள் உருவாகியுள்ளன. அவற்றைப் பார்ப்போம்!

தமிழக மக்கள் பின்வரும் சூழலில் உள்ளனர்.

(1) உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற “ஆக்டோபஸின்” கைகளில் தமிழகம் முழுவதுமாக சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது.

(2) மைய அரசில் நவீன பார்ப்பனீய- இந்துத்துவா பயங்கரவாதம் ஆட்சியில் உள்ளது.

(3) தமிழகத்தில் சாதி பயங்கரவாதம் முக்கிய போக்காக எழுந்துள்ளது.

மேற்கண்ட அம்சங்களுக்கெதிராக ஒன்றுதிரண்டு சனநாயக மாறுதல்களுக்காக போராடுவது அவசரமாக தேவைப்படுகிறது.

இந்தச் சூழ்நிலைகளில் நமது குறிப்பான திட்டம் என்பது அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதெனில் மக்களின் உடனடிக் கோரிக்கைகள் என்ன?

பின்வருவனவற்றை பார்ப்போம்!

*     நவீன பார்ப்பனீய-இந்துத்துவா பாசிசத்தை முறியடிப்போம்!

*     நவீன பார்ப்பனீய-இந்துத்துவா பயங்கரவாதத்தை சமரசமின்றி எதிர்ப்போம்!

*     மதச்சிறுபான்மையினரின் வாழ்க்கையை உத்தரவாதப்படுத்துவோம்!

*     மதச்சார்பின்மையை வலுப்படுத்துவோம்!

*     சமஸ்கிருத, இந்தி திணிப்பை எதிர்ப்போம்!

*     அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழிகளாக்க, குறிப்பாக தமிழை ஆட்சி மொழியாக்கப் போராடுவோம்!

*     பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்ப்போம்!

*     பெரு மூலதனங்களை கட்டுப்படுத்துவோம்!

*     பன்னாட்டு மூலதனங்களை வெளியேற்றுவோம்!

*     சிறப்பு பொருளாதார மண்டலங்களின் சிறப்பு சட்டங்களை இரத்து செய்யப் போராடுவோம்!

*     தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களைப் பாதுகாப்போம்!

*     CAA, NRC, NPR, போன்ற மக்களை பிளவுபடுத்தும் சட்டங்களை எதிர்ப்போம்!

*     அனைவருக்குமான குடியுரிமைக்காகப் போராடுவோம்!

*     வேலையின்மையை இல்லாததாக்குவோம்!

*     தனியார் துறைகளில் இடஒதுக்கீட்டிற்காகப் போராடுவோம்!

*     சிறு, குறு தொழில்களை உத்தரவாதப்படுத்துவோம்!

*     கூட்டுறவுகளை முதன்மைப்படுத்துவோம்!

*     தொழில்துறை உற்பத்தியை முதன்மைப்படுத்துவோம்!

*     பங்குச்சந்தை பொருளாதாரத்தை அடியோடு வீழ்த்துவோம்!

*     பன்னாட்டு, பெருமுதலாளிகளுக்கான சலுகைகளை எதிர்த்துப் போராடுவோம்!

*     விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்றவைகளுக்கான மானியங் களுக்குப் போராடுவோம்!

*     மைய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கையை எதிர்ப்போம்!

*     கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர போராடுவோம்!

*     கல்வியை வணிகமயமாக்கலை எதிர்ப்போம்!

*     அனைவருக்கும் ஆரம்பக் கல்விமுதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசக்கல்வி, தாய்மொழிக் கல்விக்காகப் போராடுவோம்!

*     அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் எதிர்ப்போம்! நீட்தேர்வையும் எதிர்ப்போம்!

*     மருத்துவத்தை அரசே ஏற்று நடத்தப் போராடுவோம்!

*     அனைவருக்கும் இலவச சுகாதாரத்தை வழங்குவோம்!

*     கல்பாக்கம், கூடங்குளம், நியூட்ரினோ நாசகார திட்டங்களை எதிர்ப்போம்!

*     அய்ட்ரோகார்பன் போன்ற பாலைவனமாக்கும் திட்டங்களை எதிர்ப்போம்!

*     வேகமான நகரமயமாக்கலை தடுத்து நிறுத்துவோம்!

*     சாலை விரிவாக்கம் என்ற பெயரில் விவசாய நிலங்களை அபகரிப்பதை எதிர்ப்போம்!

*     விவசாய நிலங்களைப் பாதுகாப்போம்! நிலப்பறிப்பு மசோதாவை முறியடிப்போம்!

*     விளைப்பொருள்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்வோம்!

*     விவசாய கடன்களை இரத்து செய்யக் கோருவோம்! கோவில், மடத்து நிலங்களை குத்தகை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுப்போம்!

*     கூட்டுப் பண்ணைகளை முதன்மையாக்குவோம்!

*     இயற்கை வளங்களின் மீதான தனியார் ஆதிக்கத்தை முறியடிப்போம்!

*     மணல் கொள்ளையை எதிர்ப்போம்! கல்குவாரியை பாதுகாப்போம்!

*     காட்டுவளங்களை பாதுகாப்போம்! பழங்குடிகளை மீள் குடியமர்த்துவோம்!

*     கடல்வளத்தைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதை எதிர்ப்போம்!

*     மீனவர்களுக்கான தனிப்பட்டியல் இடஒதுக்கீட்டிற்காகப் போராடுவோம்!

*     மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம்!

*     பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு கல்வி, வேலைவாய்ப்பில் கிடைக்கப் போராடுவோம்!

*     பெண்கள் மீதான வன்கொடுமைகளை கடுமையாக எதிர்போம்!

*     சாதி ஆணவக் கொலைகளை எதிர்ப்போம்! சாதிக்கலப்புத் திருமணங்களைப் பாதுகாப்போம்! வளர்த்தெடுப்போம்!

*     தலித்துகள் மீதான சாதி வன்கொடுமைகளை எதிர்ப்போம்!

*     தலித்துகள் மீதான சாதி தீண்டாமைகளை எதிர்ப்போம்!

*     சாதி பயங்கரவாதத்தை சமரசமின்றி எதிர்ப்போம்!

*     ஒன்றிய (மைய) அரசின் அதிகார மையப்படுத்துதலை எதிர்ப்போம்!

*     வாட்வரி, G.S.T போன்ற வரிவிதிப்புகளை எதிர்ப்போம்!

*     “அனைத்து அதிகாரங்களும் தேசிய குடியரசுகளுக்கே” (மாநிலங்களுக்கே) என்று முழங்குவோம்!

*     சுதந்திர குடியரசுகளின் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவோம்!

*     காவிரி ஆணையத்தை அமைக்கக் கோரிப் போராடுவோம்!

*     சர்வதேச நதிநீர் சட்டத்தின்படி அனைத்து நதிநீர் சிக்கலையும் தீர்ப்போம்!

*     முல்லைப் பெரியாறு ஆற்று உரிமையைப் பாதுகாப்போம்!

*     அனைத்து விதமான கருப்புச் சட்டங்களையும் திரும்பப் பெற போராடுவோம்!

*     அரசு பாசிசமயமாவதை எதிர்ப்போம்!

*     அரசு பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

*     மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரிப் போராடுவோம்!

*     ஊழல் நிர்வாகத்தை எதிர்ப்போம்!

*     விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை எதிர்த்துப் போராடுவோம்!

 மேலே கோடிட்டுள்ள தமிழக மக்களின் உடனடிக் கோரிக்கைகள் அல்லது குறிப்பான திட்டம் பற்றி மேலும் சில முக்கிய சிக்கல்களுக்கான விளக்கத்தைப் பார்ப்போம்!

(அடுத்த பகுதி)

Pin It