ஜனநாயகம் என்பது தனி நபர் உரிமைகளுக்கு இடையூறு இல்லாமல், பெரும்பான்மை மக்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்ற ஒப்பந்த அடிப்படையில் நடைபெறும் மக்களாட்சி... குடிமக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு, தம்மை ஆள்பரை தேர்ந்தெடுக்கும் உரிமையும், தனக்கான அரசினை ஒட்டு [வாக்கின்] மூலம் தீர்மானிக்கும் பொறுப்பையும் குடி மக்களுக்கு வழங்கும் ஒரு அரசாங்கம் ஜனநாயகத் தன்மை உடையதாக கருதப்படும்.

குடிமக்களின் பாதுகாப்பு இங்கு சட்டம், காவல்துறை மற்றும் இராணுவம் மூலம் உறுதிசெய்யப் படுகிறது.

dalit 370இந்தியா என்ற நாட்டைப் பற்றி கூறும் போது அதன் பன்முகத்தன்மை மொழி, இன வரைகளோடு மட்டும் நிறுத்திக் கொள்ளக் கூடாது... இந்திய சமூகம் என்பதே சாதியால் ஆனது... இங்கு வர்க்கத்திக்கும், சாதிக்கும் இடையே பிரிக்க இயலாத தொடர்பும் உண்டு... மேல் தட்டு, கீழ்த்தட்டு என்று வர்க்கம் தொழில் சார்ந்த வருமானத்தால் உண்டாக, இங்கு நெடும் காலமாக தொழிலை தீர்மானிப்பதே சாதியாக இருந்திருக்கின்றது... இன்னமும் இருந்து வருகிறது...

சமூக ஏற்றத்தாழ்வுகள் [சாதிய படி நிலைகள்] எப்படியோ, அப்படியே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்கவும் வாய்ப்புகள் அதிகம்...

ஒரு நியாயமான அரசு, அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக அமைந்தால் மட்டுமே அதன் ஜனநாயகத் தன்மையை நம்ப முடியும்.

தன் நாட்டு மக்களை எல்லா விதங்களிலும் மறைமுகமாக அடக்கி ஆளும் அரசு, அரசின் உரிமைகளை மேல் தட்டு வர்க்கத்திற்கும், கடமைகளை கீழ்த்தட்டு வர்க்கம் செய்யுமாறும் வற்புறுத்துகிறது.

அரசிற்கும், மக்களுக்குமான நேரடி தொடர்பு வாக்கு மட்டுமே! மக்களின் அபிமானத்தை கட்சிகள், வேண்டி நிற்கும் காலமும் தேர்தல் நெருங்கும் நேரம் மட்டுமே! அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லாத குடி மக்களே இங்கு அதிகம். குடிமக்களுக்கு அரசியல் புரியாத மந்தைகளாக வைத்து இருப்பதே, அரசியல்வாதிகளின் வெற்றிக்கு காரணம்.

சாமானிய குடிமகனின் மனதை கவரும் வண்ணம் இலவச அறிவிப்புகள் தந்து , தேர்தல் அறிக்கை தயாரித்து, பணத்தை வீசி எறிந்து பெரும் வாக்குகளே இங்கு அரசை தீர்மானிக்கின்றன...

கட்சி கூட்டங்களும் பிரியாணி, மது, பணம் இவைகள் தானமாக கிடைக்கும் இடமாகிறது... மக்களை சுரண்டுவதை தவிர, எந்த கட்சிக்கும் கொள்கை இல்லை... கொள்கை அறிந்து வாக்களிக்கும் சூழலில் மக்களின் மன நிலையும் இல்லை... குடி மக்களின் உரிமையும், ஒட்டு என்ற அளவிலேயே முடிந்து விடுகிறது .

அதிகாரிகளோ, அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகள்... நீதி மன்றம், சட்டம் தன் கடமையை சாதாரண குடிமக்களிடம் மிக தீவிரமாக செய்கிறது... பணம், அதிகாரம் முன்பு சட்டம் பணிந்து விடுகிறது... சட்டவரைகள் வெறும் எழுத்துக்களாய் மட்டுமே உள்ளது... அதை செயல்படுத்துவதிலும் தீவிரமின்மை...

இங்கு இருக்கும் சமூக சட்டம் இன்னும் கொடுமையானது... சாதிக்கு ஒரு நீதியே உள்ளது... இந்த சமூக சட்டம் தான் பல நேரங்களில் நீதி மன்றங்களிலும் செயல்படுத்த படுகிறது...

எந்த அதிகாரிக்கும், விளிம்புநிலை மனிதனின் வலி புரிவதில்லை... அவனிடம் மிச்சம் இருக்கும் அனைத்தையும் சுரண்டுவதே அதிகாரிகள் தான்... பலம் படைத்தோனுக்கு பல்வலி என்றால் கூட அலறும் அதிகாரம், உயிர் போனால் கூட, ஒன்றும் இல்லாதவனுக்கு உதவுவதில்லை...

மக்களின் பாதுகாவலர்கள் என்றைக்குமே மக்களுக்காக வேலை புரிந்தது இல்லை... முதலாளிகள், ஆளும் வர்க்கங்கள், அதிகாரிகள் தேவை தீர்ப்பதே இவர்களின் சேவை ஆகிறது.....

அனைத்து மக்களும் வாழ சம உரிமை வழங்கி உள்ள இந்த அரசில் தான், சாமானியனின் குரல் சட்டசபையில் ஒழிப்பதே இல்லை... அந்த அந்த பகுதி பிரச்சனைகளை அங்கேயே தீர்த்துக் கொள்ளும் வழியும் இல்லை... ஏனென்றால், ஊராட்சி மன்றங்களுக்கு போதிய அதிகாரம் இல்லை... அதை தாண்டி மாநில ஆட்சிக்கோ, வரம்பிற்கு உட்பட்ட அதிகாரம் மட்டுமே உள்ளது... ஒவ்வொரு குடிமகனின் தலை எழுத்தை தீர்மானிப்பதே மத்திய ஆட்சி தான்...

மலை முகட்டிற்கும், மலை அடிவாரத்திற்கும் உள்ள இடைவெளி, குடிமகனுக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் உள்ள தூரம்... அடிமட்டத்தில் இருந்து எழுப்பும் குரல் மலை முகட்டை அடைவதே இல்லை...

சட்ட சபை பொது மேடையாக இருப்பதும் இல்லை... ஆளும் தரப்பும், எதிர் தரப்பும் ஆலோசிக்கும் இடமும் இல்லை... வறியவர்களை அமுக்கும் திட்டமும், வலியவன் மேலும் திழைக்க சட்டமும் ஒரு மனதாக நிறைவேற்றப் படும் இடம் தான் சட்ட சபை...

சாதாரண குடிமகனுக்கு அதிகாரங்களில் பகிர்வு என்பதை விட, உரிமைகள் கூட முடக்கப் படுகிறது... அதிகாரம் பரவல் என்றால், எந்த கட்சியும் தன் வேட்பாளர்களாக ஏழை குடிமகனை தேர்ந்தெடுப்பது இல்லை...

இருப்பவனுக்கு மலர்பாதையும், இல்லாதவனுக்கு தடைக் கல்லும் தான் உள்ளது. .

ஜனநாயக உணர்வு அன்றி, மக்களை ஒன்றிணைக்க ஒரு உணர்வு தேவையாகிறது... அது, சாதி உணர்வு அல்லது மத உணர்வு ... இந்த உணர்வு கொண்ட மந்தைகள் ஒரு அரசாங்கத்திற்கு எப்போதும் தேவைப்படுகிறார்கள்... அந்த உணர்வுகளை மக்களிடம் தக்க வைத்து கொள்ளவும் அரசாங்கம் துடிக்கிறது...

தன் அளவில் திருப்தி அடையும் நடுத்தர வர்க்கங்கள் இங்கு அதிகம். மத உணர்வும், சாதி உணர்வும், அதை சார்ந்த போலி கவுரவமும் கொட்டி கிடப்பதும் இவர்களிடம் தான். இவர்களுக்கு அடித்தட்டு மக்களின் போராட்டம் பற்றியோ, சமூகம் தனக்கு தராத உரிமைகள் பற்றியோ, மேல் தட்டு மக்களின் வளர்ச்சிக்கான சூட்சமம் பற்றியோ ஒன்றும் புரிவதில்லை...

இங்கு வறியவன் தன் வயிற்றுப் பாட்டுக்கும், வாழ்வாதாரதிற்கும் மட்டுமே போராடும் நிலை...

நடுத்தர வர்கதிற்கோ போலி கவுரவம் காக்க போராடும் நிலை...

மேல் தட்டு வர்க்கத்திற்கு மட்டும் மேலான வாழ்வு. .

பொருளாதாரமும், சாதியையும் பிரிக்க முடியாமல் இருக்க...

உண்மையான ஜனநாயகம், சாதியும், வர்க்க ஏற்றத்தாழ்வுகளும் இருக்கும் வரை இந்தியாவில் சாத்தியமே இல்லை...

- கவுதமி தமிழரசன்

Pin It