ஹான்ஸ் சீடல் என்ற ஜெர்மானிய நிறுவனத்தின் நிதி உதவியுடன் கூட்டாட்சியில் இயங்கும் நாடுகளைப் பற்றி ஓர் ஆய்வு உலகளாவிய நிலையில் நடத்தப்பட்டுள்ளது. அதனை இந்தியாவில் இயங்கும் ஒரு தனியார் பல்கலைக்கழகம் நடத்தி முடித்து இருக்கிறது. அந்த ஆய்வினை நிறைவு செய்ய இந்தியக் கூட்டாட்சி முறையை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க அந்தப் பல்கலைக்கழகம் ஒரு குறிப்பிட்ட சில ஆய்வாளர்களைக் கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் அந்த பல்கலைக்கழகத்துக்கு ஆய்வாளர்கள் ஆய்வு அறிக்கைகளைத் தயார்செய்து சமர்ப்பித்தனர். அந்த அறிஞர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு, அந்த நிகழ்ச்சியை ஒரு வட்டமேஜை மாநாடாக இந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி நடத்தினர். அந்த நிகழ்ச்சி ஒரு நாளில் நடத்தப்பட்டதால், இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டவர்கள் அன்று தங்களுடைய அறிக்கைகளைக் கருத்துத் தாள்களாக சமர்ப்பித்து விவாதம் நடத்தினர். மாலை 4 மணிவரை அதன்பின் வெளிநாட்டிலிருந்து பல அறிஞர்களை காணொளிக் காட்சி மூலம் அழைத்து மாலை 6.00 மணி வரை பேசவைத்தனர். அவர்களில் ஒருவரை அந்த ஆய்வு அறிக்கைகள் அத்தனையையும் பதிப்பிக்கத் தக்க வகையில் நேர்த்தி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டு, அந்த ஆய்வு அறிக்கைகள் இரண்டு தொகுதிகளாக மேற்கத்திய நாட்டு பதிப்பகம் ஒன்றின் மூலம் வெளியிட இருப்பதையும் அந்த நிகழ்ச்சியின் முடிவில் தெரிவித்தனர்.

அந்த நிகழ்ச்சியில் எனக்கு ஒரு வாய்ப்பு தமிழகப் பார்வையில் மைய மாநில உறவுகளைப் பற்றி ஆய்வுக் கட்டுரை தயாரித்துக் கருத்துரையாற்ற வாய்ப்பு தரப்பட்டது. அதனை ஏற்று, மூன்று மாதங்கள் செலவழித்து ஓர் ஆய்வுக் கட்டுரை தயாரித்து சமர்ப்பித்தேன். அந்தக் கட்டுரையில் சந்தைப் பொருளாதாரத்திற்கும் மைய மாநில உள்ளாட்சி அரசாங்க உறவுகளுக்கும் உள்ள தொடர்பு பற்றி விவரித்து இருந்தேன். அது மட்டுமல்ல இன்றைய சந்தைப் பொருளாதாரம் எப்படி அரசியலையும் அரசாங்கத்தையும் தன்வயப்படுத்தி வைத்துள்ளது என்பதை மையப்படுத்தி இருந்தேன்.joining handsஅந்த வட்டமேஜை மாநாட்டில் இந்தியாவிலிருந்து பதினைந்து கருத்தாளர்கள் கருத்துரையாற்றினர். வெளிநாடுகளிலிருந்து காணொளிக்காட்சி மூலம் ஆறுபேர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். அத்தனை ஆய்வு அறிக்கைகளுமே செறிவுடன் எழுதப்பட்டிருந்தது. காரணம், ஆய்வாளர்கள் எவைகளைப் பற்றியெல்லாம் கவனத்தில் கொண்டு தங்கள் ஆய்வு அறிக்கையைத் தயார் செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளைக் கொடுத்துவிட்ட காரணத்தால் அனைவரும் மிகச் சிறந்த ஆய்வேடுகளைக் கொண்டு வந்திருந்தனர். அங்கு பங்குபெற்று கருத்தாளர்களின் கருத்துக்களைக் கேட்ட பங்காளர்கள், ஒரு மையக் கேள்வியினைக் கேட்ட வண்ணம் இருந்தனர். அதாவது, இன்று நாம் கூட்டாட்சியில் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வு என்ன என்பதுதான் அந்த வினா. அந்த ஆய்வரங்கில் கலந்துகொண்டபோது, உலகம் பொருளாதாரத்தில் மேம்பட்டதாகக் தெரிந்தபோதும், உலக நாடுகளில் மக்களாட்சி நடத்துகிறோம் என்று மார்தட்டிக்கூறும் அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள் மக்களை எப்படி குழப்பத்தின் உச்சத்திற்கே தங்கள் கொள்கையற்ற அரசியலால் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள் என்பதை படம்பிடித்துக் காட்டினார்கள் அந்த ஆய்வறிஞர்கள்.

இந்த ஆய்வின் நோக்கமே சமூகத்தை அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும், ஒருவரையொருவர் நேசித்து வாழும் ஒரு மதிக்கத்தக்க மானுட வாழ்க்கை வாழ அழைத்துச் செல்ல நடத்தவேண்டிய அரசியல், ஆளுகை மற்றும் நிர்வாகம் மக்களை சிக்கலுக்குள்ளாக்கும் செயல்பாடுகளில் கொண்டு வந்து நிறுத்திவிட்டனர் என்பதற்கான காரண காரியங்களை ஆய்வு செய்வதுதான். உலகத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட அறிவியலும், தொழில் நுட்பமும் சந்தை பயன்படுத்திக்கொண்டது பொருள்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி லாபம் ஈட்டி ஆனால், சமூகம் அவைகளைப் பயன்படுத்த அரசாங்கத்தால் வழிவகை செய்து கொடுக்க முடியவில்லை அல்லது முனையவில்லை என்பதும் படம்பிடித்துக் காட்டப்பட்டது. அந்த வட்டமேஜை மாநாட்டில் நடந்த பெரு விவாதித்தலில் வெளிவந்த முக்கியக் கருத்துக்களில் ஒருசிலவற்றை தொகுத்து இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கூட்டாட்சி என்பது இரண்டாவது உலகப் போருக்குமுன் ஒரு நான்கு நாடுகளில்தான் நடைபெற்று வந்தது. அந்தக் கூட்டாட்சி என்பதே கடைசி அத்தியாயத்தில் இருப்பதாக அரசிலுக்கு இலக்கணம் தந்த ஹெரால்டு லாஸ்கி, 1939ஆம் ஆண்டே தெரிவித்துவிட்டார். கூட்டாட்சியைப் பற்றிய தத்துவார்த்த விளக்கம் தந்த கே.சி.வியர் உலகம் சந்திக்கின்ற பெரும் சவால்கள் தொழில்மயப் பொருளாதாரத்தால் உருவாக்கப்பட்டவைகள் என்பதை தன் புத்தகத்தில் பதிவுசெய்து விளக்கியுள்ளார். அது மட்டுமல்ல சமூகம் சந்திக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு, அதிகாரங்களை மையப்படுத்தி ஆட்சி நடத்துவதன் மூலம்தான் பெறமுடியும் எனக் கருதி மத்தியில் ஆளும் அரசாங்கத்தில் இருக்கும் தலைவர்கள் செயல்படுவதால்தான் என்பதனை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

இன்று உலகில் 50 சதவிகித மக்கள் கூட்டாட்சி முறைக்கு வந்துவிட்டனர். அதேபோல் உலகில் உள்ள கூட்டாட்சி அரசாங்கங்கள் மாநிலங்களின் எண்ணிக்கையை 2-லிருந்து 80-க்கும் மேல் உள்ளது. ஒரு சில நாடுகள் குறைந்த எண்ணிக்கையில் மாநிலங்களை வைத்துள்ளன. பல நாடுகளில் எண்ணிக்கை அதிக அளவிலும் மாநிலங்களை வைத்து ஆட்சி நடத்துகின்றன. இந்த எண்ணிக்கைதான் மைய மாநில உறவுக்கு பிரச்சினையா என்றால், ஆம் என்று கூற இயலாது. குறைந்த எண்ணிக்கையில் மாநிலங்களைக் கொண்ட நாட்டிலும் ஆட்சி என்பது மிகுந்த சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றன. பல நாடுகளில் கூட்டாட்சியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டும், சில நாடுகளில் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டும் செயல்படுகின்றன. எப்படி மக்களாட்சிக்கு மக்கள் மத்தியில் ஒரு பெரும் ஆதரவு இருக்கிறதோ அதேபோல் கூட்டாட்சிக்கும் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வந்துள்ளன. உலகத்தில் கூட்டாட்சியைக் கைக்கொண்டு செயல்படும் நாடுகளில் மக்களும் தலைவர்களும் கூட்டாட்சி பற்றி முழுவதும் புரிந்து செயல்படுத்துகின்றார்களா என்பதும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

உலகில் தேசிய அரசு அமைக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை மத்திய அரசின் ஆட்சித்தலைவர்கள் நம்பும் ஒரு கருத்து “மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு, அரசாங்கம் அதிகாரத்தை மையப்படுத்துவதில்தான் உள்ளது” என்பதாகும். உண்மை சற்று வித்தியாசமானது. மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு அதிகாரத்தை மையப்படுத்துவதிலும் இல்லை, அதேபோல் அதிகாரத்தை முழுவதும் பரவலாக்குவதிலும் இல்லை, இந்த இரண்டையும் எந்த அளவில் ஆளுகையிலும் நிர்வாகத்திலும் சரியான நிலையில் வைத்துச் செயல்படுகின்றோமோ அந்த அளவில் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். இந்த அறிவியல்பூர்வ உண்மையைப் புரிந்துகொண்டு, ஆளுகையிலும் நிர்வாகத்திலும் அதிகாரங்களைப் பகிர்ந்துகொண்டு எந்தெந்த நாடுகள் செயல்படுகின்றனவோ, அந்த நாடுகள் அனைத்தும் மக்கள் பிரச்சினைக்கு மிக எளிதாகத் தீர்வுகளைக் கண்டு செயல்படுகின்றன. அந்த நாடுகள் கூட்டாட்சியிலும் சரி மக்களாட்சியிலும் சரி முன்னிலையில் இருக்கின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்களாட்சி செயல்பாட்டில் இருந்தபோதும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர்களும் முதன்மை அமைச்சர்களும் அதிகாரங்களை மையப்படுத்தி செயல்படுவதில்தான் முனைப்புக் காட்டுகின்றனர். இருந்தபோதிலும் பல நாடுகள் எந்த அளவில் அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொள்வது மத்திய, மாநில உள்ளாட்சி அரசாங்கங்களுக்குள் என்பதில்தான் விவாதங்களை நடத்தி வருகின்றன. உலகம் அந்த சமநிலையைக் கண்டுபிடிக்கத்தான் முயல்கிறது. பல நாடுகளில் இந்த அதிகாரப்பரவலையும் அதிகாரத்தை மையப்படுத்துதலையும் ஒரு நிலையில் சீர்செய்து சமப்படுத்த முனைந்தபோதும், அந்த நாடுகளின் அரசியல் கலாச்சாரம் அதற்கு ஒத்துழைப்பதில்லை.

எனவேதான் இன்றுவரை கூட்டாட்சி நடைபெறும் நாடுகளில் மத்திய அரசும் மாநில அரசும் மோதிக்கொள்கின்றன. இந்த மோதல் என்பது ஏதோ இந்தியாவில் மட்டும் இருப்பதாக நாம் நினைத்துக்கொள்ளக் கூடாது. அது அமெரிக்கா, கனடா, ஜெர்மெனி, ஸ்பெயின், ஏன் ஐரோப்பிய கூட்டமைப்பு என அனைத்து நாடுகளிலும் இருக்கின்றது என்பதுதான் பலருக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. ஆனால், கோட்பாட்டு அடிப்படையில் இந்தப் பிரச்சினைகளை அலசிப் பார்த்தால் பல உண்மைகள் நமக்குப் புலப்படும். கூட்டாட்சி வெற்றிபெற பல்வேறு அம்சங்கள் அந்த நாட்டு அரசாங்கத்திடமும், அரசியலிலும், ஏன் மக்களிடமும் இருக்க வேண்டும். அப்படி இல்லையேல் அவைகளை உருவாக்க முயல வேண்டும்.

கூட்டாட்சிக்குத் தேவையான முக்கிய அம்சங்களாவன: ஒன்று, நாட்டில் நிகழும் அரசியலுக்கு ஓர் முதிர்ச்சி, பக்குவம், நல்ல தலைமை மையத்திலும் மாநிலங்களிலும் இருக்கவேண்டும். இதற்கு ஒரு பக்குவமான அரசியல் கலாச்சாரம் தேவைப்படுகிறது. அது உருவாக்கப்பட்டுவிட்டால் அந்த நாட்டின் அரசியல் சாசனம் காட்டும் வழியில் நடந்து மக்கள் பிரச்சினைகளுக்கு இணைந்து தீர்வு கண்டுவிடுவர். எந்தப் பிரச்சினைக்கும் மக்களாட்சியில் விவாதம் முடிவினைக் கொண்டுவரும். ஆனால் காலதாமதம் ஆகும். அடுத்து அதற்கு மிக முக்கியத் தேவை உண்மைத் தரவுகள். அதன்மேல் விவாதம் நடைபெறவேண்டும் என்பதுதான். உண்மைத் தரவுகள் அடிப்படையில் விவாதத்தினை முன்னெடுப்பதுதான் இன்று உலகம் முழுவதும் பிரச்சினையாக இருக்கிறது. இரண்டு, அங்கு ஒருங்கிணைப்பு என்பது கலாச்சாரமாக எல்லா அமைப்புக்களிலும் பணிகளிலும் நடைபெற வேண்டும். அந்த நாட்டில் ஆளுகையும், நிர்வாகமும் ஒத்திசைந்து உணர்வுபூர்வமாக நடைபெறும்போதுதான். ஒரு மக்களாட்சி ஏற்படுத்த வேண்டிய விளைவுகளை ஏற்படுத்தும். இந்த ஒருங்கிணைப்பு என்பது அரசாங்கத்தின் துறைகளுக்குள் நடைபெற வேண்டும், அடுத்து, மத்திய மாநில அரசுத் துறைகளுக்குள் நடைபெற வேண்டும். அதேபோல் உள்ளாட்சி அமைப்புக்களிலும் நடைபெற வேண்டும்.

இன்றைய பொது நிர்வாக அமைப்பில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், ஒருங்கிணைப்புச் செய்வது. இது அரசாங்கத்தில் மட்டுமல்ல, அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவன அமைப்புகள் வரை இந்தச் சவால் நீடிக்கின்றது. ஆனால் சந்தையில், தொழிலில் இந்த ஒருங்கிணைப்பு மிகவும் சரியாக நடந்துவிடுகிறது. மூன்று அரசாங்கங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிக்கும் ஒரு ஆளுகை மற்றும் நிர்வாகக் கலாச்சாரத்தை உருவாக்கிட வேண்டும். இந்தக் கலாச்சாரம் பெரும்பாலான நாடுகளில் பார்க்க முடிவதில்லை. காரணம், அரசு தன்னை பலம் பொருந்தியதாகக் கருதுவதால் மக்களின் பிரச்சினைகளுக்காகத்தான் அரசு செயல்படுகின்றது என்ற பார்வை குறைந்து, மக்கள் அரசாங்கத்திற்காக இருப்பது போன்ற சிந்தனை அரசுக்கு வந்து விட்டது. பெருந்தொற்று காலத்தில் அமெரிக்காவில் இரண்டு மாநிலங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாது எனவும், முகக்கவசம் அணிய முடியாது எனவும் அறிவித்ததை நாம் பார்த்தோம். நான்கு, இவைகளுக்கும் மேலாக மக்களிடம் ஒரு கூட்டாட்சி மனோபாவம் கலாச்சாரமாக உருவாக்கப்பட்டு செயல்படும்போது மட்டும்தான் நல்ல விளைவுகளை அரசாங்கம் உருவாக்கும்.

கூட்டாட்சி சிறப்புடன் செயல்பட கூட்டுறவு மனப்பான்மை மக்கள் மத்தியில் எங்கும் கலாச்சாரமாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஐந்து, கூட்டாட்சி நடைபெறும் நாட்டில் மக்களை உணர்வுகளைத் தாண்டி அரசியலில் கட்சி அரசியல், தேர்தல் அரசியல் என்பதை மையப்படுத்தாமல் மேம்பாட்டு அரசியலை மையப்படுத்தி செயல்படும்போது கூட்டாட்சி மகத்தான பணிகளைச் செய்யும். ஆறு, மத்திய மாநில அரசுகள் ஒன்றையொன்று நம்பிக்கையிழந்த நிலையில் செயல்படாமல் ஒன்றின்மேல் ஒன்று நம்பிக்கையுடன் செயல்படும்போது மட்டும்தான் கூட்டாட்சி நற்பலனைத் தந்திடும். பெரும்பாலான நாடுகளில் மத்திய அரசு மாநில அரசுகளை நம்புவது இல்லை, மாநில அரசுகள் உள்ளாட்சி அரசாங்கத்தை நம்புவது கிடையாது. அது மட்டுமல்ல ஒன்றையொன்று குறை கூறியும் மோதியும் கொள்ளுகின்றன. ஏழு, எந்த நாட்டில் சமூகம் தன்னை மக்களாட்சிப்படுத்தி வைத்துக்கொண்டுள்ளதோ அந்த நாட்டில்தான் கூட்டாட்சி என்பது ஒரு பக்குவமான நிலையில் செயல்பட்டு அரசாங்கம் மக்களுக்கு பெரும் சேவை செய்திடும்.

மேற்கூறிய கருத்துக்கள் அனைத்தும் கோட்பாட்டாளர்கள் உலகில் செயல்படும் கூட்டாட்சி அரசாங்கங்களை ஆய்வு செய்து உருவாக்கிய கருத்தாக்கங்கள். இந்தக் கருத்துக்களைப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போது, அமெரிக்காவில்கூட அப்படிப்பட்ட கூட்டாட்சிக் கலாச்சாரம் உருவாகவில்லை. கருப்பின மக்களின் பிரச்சினை இன்றுவரை அங்குத் தொடரத்தானே செய்கிறது. அது மட்டுமல்ல பெருந்தொற்றுக் காலத்தில் இரண்டு மாநிலங்கள் தடுப்பூசி போடுவதை ஏற்க மாட்டோம் என்று அமெரிக்க ஒன்றிய அரசை எதிர்த்து அரசியல் செய்ததைப் பார்க்க முடிந்ததே. இந்திய நாட்டில் அப்படி ஒரு சூழல் பெரும்தொற்றுக் காலத்தில் இல்லை என்பதையும் உலகம் காணத் தவறவில்லை.

அது மட்டுமா? மக்களாட்சிக்கும் கூட்டாட்சிக்கும் உலகுக்கு வழிகாட்டும் நாடு என்று மார்தட்டி தங்களை விளம்பரப்படுத்திய நாட்டில்தான் அமெரிக்க அதிபராக இருந்த டொனாட் ட்ரம்ப் அமெரிக்கா வெள்ளைக் கிருத்துவர்களுக்கான நாடு என்று பிரகடனப்படுத்தி வாக்குச் சேகரித்து வெற்றிபெற்றார். கனடாவில் இன்றுவரை க்யூபெக் பிரச்சினையாக இருந்து வருவதை நாம் பார்த்து வருகிறோமே. அந்த மாநிலத்தைத் தங்களுடன் வைத்துக்கொள்வதற்காகவே அந்த மாநிலத்திற்கு பல சலுகைகளை அந்த நாட்டின் ஒன்றிய அரசு வழங்கி மற்ற பிராந்தியங்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறது. அந்த கீயூபெக் மாநிலத்தில்தான் வெளிப்படையாக பிரெஞ்ச் மொழி பேசினால் இந்த மாநிலத்தில் இருங்கள், இல்லையேல் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிடுங்கள் என்று அரசியல் நடத்தும் கட்சி ஆட்சிக்கு வந்து ஆட்சி நடத்தியது. ஆகையால்தான் ஹெரால்டு லாஸ்கியும் கே.சி.வியரும் உலக நாடுகள் மையப்படுத்துவதை கலாச்சாரமாகக் கொண்டு இயங்கும் வரை இந்தச் சிக்கல் நீடிக்கப் போகிறது என்று 1940-களிலேயே அனுமானித்தார்கள். அதுதான் இன்றுவரை உலகத்திலும் நம் நாட்டிலும் நடக்கின்றது.

மேற்கூறிய கோட்பாட்டுப் பின்னணியில் இந்திய கூட்டாட்சியைப் பார்க்கும்போது 75 ஆண்டுகால வரலாறு கூறும் உண்மை இந்தியா என்ற நாடு உருவான காலத்திலிருந்து இன்றுவரை மத்திய அரசு மாநில அரசுகளை நம்புவதும், மதித்து நடத்துவதும் கிடையாது. எப்பொழுதுமே மத்திய அரசு பெரிய அண்ணன் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருவதைத்தான் கலாச்சாரமாகப் பார்க்க முடிந்தது, மத்திய அரசு நாட்டுப் பற்றை வளர்ப்பதாகவும், மாநில அரசுகள் பிராந்தியப் பற்றை வளர்ப்பதாகவும் கருத்தாக்கத்தை உருவாக்கி நம் அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. உண்மை அதுவல்ல. எப்பொழுதெல்லாம் நாடு சிக்கலைச் சந்திக்கிறதோ அந்த நேரத்தில் மாநிலக் கட்சிகளும், மாநிலக் கட்சிகள் ஆளும் மாநிலங்களும்தான் நாட்டின் ஒற்றுமைக்கு மத்திய அரசோடு தோளோடு தோள் கொடுத்து செயல்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. இந்த உண்மை பெரும்பாலும் பொது விவாதங்களில் கொண்டுவரப்படுவதில்லை.

இந்தியா என்ற நாட்டை உடைபடாமல் பாதுகாப்பது என்பதே மிகப்பெரிய சவால், அதை செய்ய வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு உள்ளது என்பதைக் கூறியே மாநில அரசுகளை உதாசீனப்படுத்தும் ஒரு கலாச்சாரம் வளர்த்தெடுக்கப்பட்டு விட்டது. இந்தியா உருவான காலத்திலிருந்து. அதேபோல் தேசிய நலனில்தான் மாநில நலன் அடங்கியுள்ளது என்ற பொதுப்புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தி செயல்படுவதிலிருந்து மாநில நலன்கள் என்பதற்குப் பதில் அடையாள அரசியலுக்குள் மக்களைத் தயார்செய்து செயல்பட்டதன் விளைவு, நம்பிக்கையின்மேல் மத்திய அரசு மாநில அரசுகளை நடத்தவில்லை.

இந்தியா என்பது எல்லையில்லா வித்தியாசங்களையும் வேறுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் கொண்டிருந்தாலும் மக்களாட்சியாகச் செயல்படுவது என்பது ஒரு விசித்திரம் அல்லது புதிர் என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தியா என்ற நாட்டை கட்டமைக்கும்போது, உலகமே இது ஒரு சாகசம் என்று விமர்சித்தபோது, ஒரே ஒரு வரலாற்று ஆசிரியர் மட்டும் “அது அதிசயம்: அதுதான் இந்தியா” என்ற புத்தகத்தில் மிக ஆழமாக ஒரு கருத்தைப் பதிவுசெய்தார். இந்தியா என்பதை எவராலும் உடைக்க இயலாது, அதற்குக் காரணம் அந்த நாட்டின் நாகரீகத்தின் விழுமியங்களில் இணைக்கப்பட்டுள்ளது" என்று விளக்கினார்.

வெள்ளைய அறிஞர்கள் இந்தியா பற்றி கொண்டிருந்த கருத்துக்கள் அனைத்தும் காலப்போக்கில் தவிடுபொடியானது. வெள்ளைய அறிஞர்களும், இந்திய நிர்வாகத்தில் பணியாற்றிய அதிகாரிகளும் இந்தியா என்று உருவாக்கப்படும் நாடு ஒன்றாக இருக்கப்போவது கிடையாது, அது மட்டுமல்ல அது மக்களாட்சியாகவும் செயல்படப் போவது கிடையாது என்ற கருத்தை ஆழமாகத் தங்களுடைய புத்தகங்களில் பதிவுசெய்து வைத்தனர். ஆனால், அவைகள் அனைத்தும் இந்திய நாட்டின் 75 ஆண்டுகால வரலாறு உடைக்கப்பட்டு விட்டது. ஆனால், இந்தியா யாருக்காக உருவாக்கப்பட்டதோ அவர்களில் பெரும்பான்மை மக்களுக்கு இந்த நாடு செயல்படவில்லை.

அடுத்து மக்களாட்சியாலும், கூட்டாட்சியாலும் எல்லாத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கவேண்டிய பலன்கள் கிடைக்கவில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கான முழுக் காரணமும் இந்த நாட்டில் நடைபெற்று வரும் அரசியல் சாசனத்திற்கு எதிரான சாதி, மத அரசியல் என்பதும் ஒரு கசப்பான உண்மை மற்றும் சோக வரலாறு. பல நேரங்களில் நம் அரசியல் அரசியல் சாசனத்தைப் பின்பற்றாமல் புறந்தள்ளியதின் விளைவு, அரசியல் சாசனத்தைப் புறந்தள்ளி மத்திய அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கலைத்தது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல. மத்திய அரசு ஒரு தலைமையமைச்சரின் ஆட்சியில் 50 முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்ட நிகழ்வு கூட்டாட்சி வரலாற்றில் ஒரு சோக நிகழ்வு என்று வர்ணிக்கப்பட்டது. இதைக் கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால், நம் மக்களாட்சி அரசியல் கட்டப்பட்ட விதம் அதற்கு காரணமாக இருக்கின்றது என்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடியும்.

நம் அரசியல் கட்சிகள் மக்களாட்சியைக் கலாச்சார விழுமியங்களாகக் கொண்டு செயல்படுவதற்குப் பதில், ஆட்சியைப் பிடிப்பதற்கு தேர்தல் என்பது ஒருவழி என்பதைத் தாண்டி செயல்படுவதில்லை. அதன் விளைவு, நம் அரசியல் என்பது கட்சி அரசியலாகவும், தேர்தல் அரசியலாகவும் இருக்கின்றதே தவிர, அது மேம்பாட்டு அரசியலாகவும், மக்கள் அரசியலாகவும் கட்டமைக்கப்படவில்லை என்பதை மிக எளிதாக புரிந்துகொள்ள முடியும். அடுத்து, இந்திய நாட்டில் அரசியலமைப்பு என்பதைப் புனித சாசனமாக பேசுவதுண்டு. ஆனால், அவைகளை சாதாரணமாக தூக்கி எரிந்து செயல்படும் அவல நிலைகளைக் கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவில் நாம் பார்த்து வருகின்றோம். மாநில ஆட்சிக் கலைப்புகளின் வரலாற்றைப் புரட்டினால் மக்களாட்சியில் மத்திய அரசின் ஆதிக்கச் செயல்பாடுகள்தான் வெளிப்படுகிறது. இந்தச் சூழல் என்பது இந்தியா சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இன்றுவரை தொடர்கிறது.

அது மட்டுமேயல்ல எப்படி மத்திய அரசு மாநில அரசுகளை நடத்தியதோ அதைவிட மோசமாக உள்ளாட்சிகளை மாநில அரசுகள் நடத்தியதும் இன்று வைரலாகிவருகிறது. அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்ட உள்ளாட்சியை மாநில அரசுகள், மாநில அரசின் அதிகாரிகளின் கீழ் கொண்டு வந்து செயல்படுவது எந்தவித கூட்டுறவுக் கோட்பாடு என்பதும் ஒரு விவாதப் பொருளே. இந்திய நாட்டில் மைய மாநில உறவு பற்றி நடைபெறும் பொது விவாதங்கள்போல் மாநில உள்ளாட்சி உறவுகள் விவாதிக்கப்படுவதில்லை. இன்றுவரை கூட்டாட்சியில் பரிணாம வளர்ச்சியில் உருவான மூன்றாவது அரசாங்கம் பற்றி ஒரு புரிதல் பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கும் இல்லை. அதேபோல் பொது மக்களிடமும் உருவாக்கப்படவில்லை. அதற்கான எந்த முன்னெடுப்பும் இல்லாமல் இருப்பதுதான் நாம் எதிர்கொள்ளும் ஒரு சோக நிகழ்வு இந்திய மக்களாட்சி வரலாற்றில்.

2014 ஆண்டுக்குப் பின் உருவாக்கப்பட்ட நிதி அயோக் என்பது ஒரு திட்டக்குழு அல்ல. இந்தியாவின் மாற்றத்திற்குச் செயல்படும் அமைப்பு என்ற தலைப்பிட்டு அந்த நிறுவனத்தை செயல்பட வைத்துள்ளனர். அந்த நிறுவனம் இந்த கூட்டுறவுக் கூட்டாட்சி என்பது ஒத்துழைப்போடும் போட்டியோடும் வேறுபாடுகளை வித்தியாசங்களைக் களைந்து செயல்படும் அமைப்பாக மாநிலங்கள் செயல்படவேண்டும் என்று குறிப்பிடுகின்றது. இந்தக் கருத்தாக்கத்தை விமர்சனத்திற்கு உள்ளாக்கிய அரசியல் கட்சிகள் ஒன்றை மறந்துவிட்டன. தேசத்தை மேம்படுத்துவதற்கு மத்திய திட்டக்குழு உருவாக்கப்பட்டுள்ளது என ஒரு விவாதத்தை அன்றைய மத்திய அரசு வைத்தபோது, இந்த மத்தியத் திட்டக்குழு என்ற அமைப்பு அரசியல் சாசனத்திற்குப் புறம்பாக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு, என்ற விவாதத்தை முன் வைத்தனர். இந்த அமைப்பு மாநில அரசுகளுக்குத் தரவேண்டிய நிதியைத் தன்வயப்படுத்தி, மாநிலங்களை நிதிக்காக மத்திய அரசிடம் கையேந்தி நிற்க வைத்துவிட்டது என்ற வாதத்தை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாநில அரசுகளின் தலைவர்களே முன் வைத்தனர் என்பதனையும் நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

இன்று, ஜி.எஸ்.டி என்று மாநில அரசின் ஆளுகை அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பறித்து, மத்திய அரசிடம் மாநில அரசுகளை மண்டி­யிட வைத்துள்ளது. இதற்கு விலைபோனது மாநில அரசுகள் என்பதையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது. மாநில அரசின் ஒத்துழைப்புடன் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டதுதான் ஒரு பெரும் முரண்பாடான அரசியல் செயல்பாடு. இன்றைய அரசு

ஜி.எஸ்.டி-ஐ எதற்காகக் கொண்டுவந்தது என்றால் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துவதற்காக என்றுதான் விளக்கமளிக்கப்பட்டது. இந்த பொருளாதார வளர்ச்சி என்ற மயக்கத்தில்தான் பல மாநிலக் கட்சிகள் இந்த அதிகாரப் பறிப்புக்கு உடன்பட்டு செயல்பட்டன. இன்று அதை பெரும் விவாதமாக்குகின்றன. இதற்கு விடைதேடக்கூட முடியாமல் மாநில அரசுகள் நிலை தடுமாறி நிற்கின்றன. இதற்கு ஒரு வாய்ப்பை நீதிமன்றமே உருவாக்கித் தந்தபோதும் மாநில அரசுகள் அதை எடுத்து ஒரு அரசியலை கட்ட இயலாமல் இருக்கின்றன.

ஒரு காலத்தில், இந்திய நாட்டை கட்டியமைத்து உருவாக்க முயல்கின்றோம் என்று கூறி மாநில கட்டுமானங்களை எடுத்துச் செய்யவிடாமல் மத்திய அரசு பார்த்துக் கொண்டது. மாநில மேம்பாடு, மாநில அரசின் அதிகாரம் என்று பேசுவதை தேச விரோதச் செயலாகப் பார்க்கப்பட்டது. இன்று அதேபோல் இந்தியாவின் வல்லரசுச் செயல்பாடுக்காக பொருளாதார வளர்ச்சியைப் பயன்படுத்துகின்றோம் என்று கூறி, மாநில அரசின் அதிகாரம், மக்கள் மேம்பாடு என்று விவாதித்தால், இவைகள் அனைத்தும் தேச விரோத செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இன்றுவரை இந்திய மைய மாநில உறவுகள் விரிசல் அடைந்துதான் வருகிறது. இதை சீரமைக்க முதலில் ஆய்வு நடத்தி அறிக்கை தந்த மாநிலம் தமிழகம். மாநில சுய ஆட்சிச் சிந்தனையை முதலில் உருவாக்கியது தமிழ்நாடுதான். அதுவும் இந்தச் சிந்தனையை உருவாக்கியதும் தேசிய உணர்வு கொண்ட தமிழ் அறிஞர்களும் உணர்வாளர்களும்தான். அதில் பெரும் தலைவர் காமராஜரும் ஜீவாவும் அடக்கம் என்பதும் ஒரு வரலாறு. அதனைத் தொடர்ந்து மாநில அரசின் முன்னெடுப்பில் ராஜமன்னார் குழு அறிக்கையும், மத்திய அரசின் முன்னெடுப்பில் சர்க்காரிய குழு அறிக்கையும் வெளிவந்தன. அடுத்து மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம் அறிக்கை ஒன்றைத் தந்தது. அதனைத் தொடர்ந்து வீரப்ப மொய்லி தலைமையில் இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் உருவாக்கப்பட்டு, அந்தக் குழுவும் ஓர் அறிக்கையினைத் தந்தது. அடுத்து, மைய மாநில உறவை அலசி ஆராய பூஞ்ச் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவும் அறிக்கை சமர்ப்பித்து விட்டது. இவ்வளவு ஆய்வு அறிக்கைகளும் அரசாங்கத்தின் குடோன்களிலும், நூலகங்களிலும் உள்ளதே தவிர செயலாக்கத்தில் இல்லை என்பது அடுத்த சோக நிகழ்வு.

இந்த அறிக்கைகளை நடைமுறைப்படுத்த ஒரு குறைந்தபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால்கூட பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கலாம். இந்த அறிக்கைகளை வைத்தே ஒரு பெரும் பொது விவாதத்தை மாநில கட்சிகள் இந்தியாவில் உருவாக்கியிருக்க முடியும். அந்த அளவுக்கு நம் மாநில கட்சிகளுக்கு கருத்துப் பின்புலம் இல்லை என்பதுதான் நாம் பார்க்கும் எதார்த்தம். அதேபோல் உள்ளாட்சியை வலுப்படுத்தி அரசாங்கத்தின் திட்டங்களை மிகச் சிறப்பாகச் செயல்பட குழுக்கள் அமைக்கப்பட்டன. கடைசியாக மணிசங்கர் குழு ஓர் அறிக்கையைத் தயாரித்துத் தந்தது. அந்த அறிக்கையை அந்த அரசாங்கமே நடைமுறைப்படுத்தவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூகத்தின் மேம்பாட்டிற்கும் மூன்று நிலை அரசாங்கங்களும் ஒரே நேர்கோட்டில் செயல்பட வேண்டும். அதற்கு தேசத்தின் மீது பற்று, ஊழலில்லாத ஆளுகை மற்றும் நிர்வாகம் இன்றியமையாதவைகள். ஆனால் சிக்கல் இங்குதான் ஏற்பட்டுள்ளன.

கட்டுக்கடங்காத ஊழல் ஆளுகையிலும், நிர்வாகத்திலும் ஏற்பட்டுள்ளதை எவரும் மறுப்பதில்லை. அடுத்து, அரசியல் ஒற்றுமைப்படுத்துவதற்குப் பதில் சாதிமத அரசியல் மக்களை பிரித்து வைத்துக்கொண்டுள்ளது. இதற்கான தீர்வு மேம்பாட்டுக்கான ஓர் அரசியல் கட்டமைப்பதிலும், மாற்றங்களைக் கொண்டுவர தன்னலமற்ற நாட்டுப்பற்று கொண்ட தியாகத் தலைமையும், சுயநலம் பேணும் பயனாளிப் பார்வை துறந்து பொதுநலம் பேணும் நாட்டுச் சிந்தனையும் நியாயச் சிந்தனையும் கொண்ட குடிமக்கள் உருவாக்கலும்தான் ஒரு கூட்டுறவுச் கூட்டாட்சியை உருவாக்கத் தேவையான செயல்பாடு என்று விவாதிக்கப்பட்டது அந்த மாநாட்டில். இவற்றை முன்னெடுப்பதற்காக ஒரு பொது விவாதம் உருவாக்கப்படல் வேண்டும் என்று கூறி அந்த வட்டமேஜை மாநாடு நிறைவுப் பகுதிக்கு வந்தது. அந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் இரண்டு தொகுதிகளாக ஆங்கிலத்தில் வெளிவர இருக்கின்றன என்ற செய்தியோடு அந்த வட்டமேஜை மாநாடு நிறைவு பெற்றது. இந்த மாநாடு தமிழகத்திற்கு பல செய்திகளைத் தந்தது. ஒன்று, இன்றைய சந்தைச் சூழலுக்கு பழைய விவாதங்களை நம்மால் முன்னெடுத்து வெற்றி பெற இயலாது. அனைத்தும் அடிபட்டுப் போகும். மாநில சுயாட்சி என்பதை நம் அரசியல் கட்சிகள் வலுவான சந்தைப் பின்புலத்தில் வைத்தே முன்னெடுத்து விவாதிக்கும்போது மட்டுமே வெற்றி பெற முடியும். இந்த விவாதத்தை முன்னெடுக்க சந்தைச் செயல்பாடுகளை நன்கறிந்த கருத்தாளர்களின் கருத்துப் பின்புலம்தான் உதவிடும். வெற்று அரசியல் முழக்கங்கள் எதுவும் வெற்றியைக் கொண்டுவராது. அடுத்து, மாநில அரசுகளை மைய அரசு ஊழல்வாதிகளாகச் சித்திரித்து சிக்க வைத்து இந்த விவாதத்தை முன்னெடுக்க விடாமல் பார்த்துக் கொண்டுள்ளது. எனவே, இந்த விவாதத்தை அறிவுத் தளத்தில் முன்னெடுக்க பொதுக்கருத்தாளர்களை இந்தியா முழுவதும் ஒருங்கிணைத்துச் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இதற்கான புதுக் கருத்தாடலை முன்னெடுக்க அறிவு ஜீவிகளை ஒன்றிணைக்க வேண்டும். இதுதான் நமக்குக் கிடைத்த செய்தி இந்த மாநாட்டில்.

- க.பழனித்துரை, காந்திகிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)

Pin It