தெற்காசியாவில் தான் வல்லரசாக அறியப்பட வேண்டும். தனது பலத்தையும் அதிகாரத்தையும் கண்டு பிற தெற்காசிய நாடுகள் அச்சப்பட வேண்டும். தனது ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளாக அவை இருக்க வேண்டும் என்ற பேராசையும் ஆணவமும் இந்திய அரசின் பண்புகளாக, அடையாளங்களாக தங்கிவிட்டன. பிற தெற்காசிய நாடுகள் அமெரிக்காவுக்கு இணையான நாடாக, தம்மை அதட்டி, மிரட்டி அடிபணிய வைக்க வல்லவராக இந்திய அரசினை அடையாளங் காண்கின்றனர். நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சாமான்ய மக்களுங்கூட இந்திய அரசின்பால் வெறுப்பை செலுத்தத் தயங்குவதில்லை. உலக காவலாளிகளாக விளங்கும் அமெரிக்கா சம்பாதித்து வைத்துள்ள வெறுப்புக்கு இணையான ஒன்றை இந்திய அரசு சம்பாதித்துக் கொண்டுள்ளது என்று கூடச் சொல்லாம்.

வல்லரசாக தன்னை அறிவித்துக் கொள்ளும் இவ்வரசின் தன்மை, உள்ளீடு பற்றி நாம் சிந்திக்க வேண்டியது என்பது காலத்தின் தேவையாக உள்ளது. இத்தகைய சிந்தனையை வளர்த்தெடுக்கும் முகமாக சில அனுமானங்களை இக்கட்டுரை முன் வைக்கிறது. தாராளவாத சனநாயக சிந்தனையில் தேசநலம், குறிப்பிட்ட தேசத்தின் இறையாண்மை முதலியன குடிமக்களின் நலம், குடியரசின் திண்மை ஆகியவற்றோடு தொடர்பு படுத்தப்படுவதும் அந்த அடிப்படையில் விளக்கப்படுவதும் வழக்கம். இந்தியா போன்ற சனநாயக நாடுகளின் அரசியல் வாழ்க்கையை மதிப்பிடுவதற்கும் புரிந்து கொள்வதற்கும் இத்தகைய விளக்கங்களும் வரையறைகளும் கையாளப்படுவதும் வழக்கம். இத்தகையவற்றின் அடிப்படையில் இந்திய அரசு பறைசாற்றும் தேசநலம், தேசத்தின் இறையாண்மை குறித்த வாதங்களை பரிசீலிக்க முற்படுவோமேயானால் சாதி நலன்களுக்கு தேசிய முலாம் பூசப்பட்டு அவையே பொது நலன்களாக உருமாற்றப்படுவது என்பது நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்று வருவதை தற்கால நிகழ்வுகள் பல நமக்கு உணர்த்துகின்றன.

முதலாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், சிறப்பு பொருளாதார மன்றங்களை அமைத்தே தீருவோம் என்பதில் உறுதியாக நின்று கோடானு கோடி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கத் துணியும் அரசின் மெத்தனம், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இறந்து போனதற்கு காரணமாக உள்ள நரேந்திர மோடியின் பொருளாதார வளர்ச்சிப் பணிகளை முதலாளிகள் புகழ்ந்துப் பேசுவதற்கு வழிவகுத்துக் கொடுக்கும் அரசின் பொருளாதாரத் திட்டங்கள், வாழ்வாதார உரிமையை தக்கவைத்துக்கொள்வதற்காக ஆதிவாசிகளும், குடியானவர் களும், தலித்துகளும் முன்னெடுத்துள்ள போராட்டங்களை ‘பயங்கரவாத’ செயல்பாடுகளாக அடையாளப்படுத்தும் அரசின் அறமற்ற, பொய்யான அரசியல் தந்திரம்: இவை அனைத்தையும் செய்தாலும் நாட்டு நலம், எல்லைப் பாதுகாப்பு, இந்திய இறையாண்மையை பேணுதல் என்பனவற்றின் பெயரில் தனது செயல்பாடுகளை சாடுபவர்களையும் எதிர்ப்பவர்களையும் ‘தேச துரோகி’களாக முத்திரையிட்டு, சாமான்ய குடிமகனின் உணர்ச்சி மேம்பட்ட தேசியவுணர்வை உசுப்பிவிட்டு, தனது குற்றங் குறைகளை அரசு இருட்டடிப்பு செய்து விடுகிறது.

இவ்வாறு செய்வதன் மூலம் ‘சட்ட ஒழுங்கு’ நடவடிக்கைகள், ‘பாதுகாப்பு’ நடவடிக்கைள் ஆகியவற்றை, தான் பேண விரும்பும் இறை யாண்மைக்கான உத்திரவாதங்களாக இந்திய அரசு ஆக்கியுள்ளது. தனது ‘நியாயத்தை நிறுவுவதன் பொருட்டு மக்கள் மத்தியில் பணிப்புரிந்து வருவோரையும், அவர்களுடைய சனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போரையும் ‘குற்றவாளி’களாக இந்த அரசு அறிவித்து வருகிறது. அரசு என்ன செய்தாலும் அது சட்டத்துக்கு உட்பட்டதாக விளக்கப் படுவதும், அதனை எதிர்ப்பவர்கள் நியாயம், நீதிகோரி போரிட்டாலும் அது சட்ட விரோதமானதாக ஆக்கப்படுவதும் காலத்தின் கோலமாக உள்ளது.

இந்திய அரசின் செயல்பாடுகளை மேன்மேலும் ஊக்குவித்து அவற்றை தொடரச் செய்வதில் பன்னாட்டு மூலதனத்துக்கும் உள்நாட்டு முதலாளிகளுக்கும் பெருத்த அக்கறை உள்ளது போலவே, முதலாளிகள் பெறும் கொள்ளை இலாபத்தில் தம் பங்கைக் கேட்டுப் பெறுவதற்காகக் காத்திருக்கும் நிர்வாகத் துறைக்கும், அரசின் நியாயத்தை ஏற்று அதற்கு மெருகூட்டும் நீதித்துறைக்கும் அக்கறை உண்டு. சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்று வரும் முதலாளித்துவ பகல் கொள்ளைக்கு ஆதரவாக அனைத்து அரசு நிறுவனங்களும் துறைகளும் செயல்பட்டு வருவதை நாம் யாவரும் அறிவோம். இந்தப் பகல் கொள்ளையால் பெரும்பாதிப்பை சந்தித்துள்ள ஆதிவாசிகளை கூறுபோட்டு அவர்களின் சிலரைக் கொண்டே அங்கு நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ளத் துணிந்துள்ள மாநில அரசின் சாதுரியமும் அதனை ஒரு அரசியல் கொள்கையாக ஆக்கத் துடிக்கும் மத்திய அரசின் சாணக்கியத்தனமும் இந்திய அரசினை இயக்கும் பார்ப்பனீயத் தின் வெளிபாடுகளே அன்றி வேறல்ல.

இந்து - இந்தி -இந்தியா குறித்து தமிழ்நாட்டில் நாம் அதிகம் பேச வேண்டியத்தில்லை என்ற போதிலும் பெரியாராலும் அம்பேத்கராலும் ‘பார்ப்பன _ பனியா’ அரசு என அழைக்கப் பட்ட அரசின் தன்மையை குறித்து நாம் தொடர்ந்து பேசுவ தென்பது தவிர்க்க முடியாததாக ஆகியுள்ளது. இதைச் செய்யும் போது இந்த அரசின் ‘சனநாயக’த் தன்மை குறித்தும் யோசிக்க வேண்டியவராகிறோம்.

இந்திய பாராளுமன்றத்தை எடுத்துக் கொள்வோம். காலங்காலமாக அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட கடைநிலை சாதிகளின், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின், தாழ்த்தப் பட்ட சாதிகளின் பிரதிநிதிகள் அதில் இன்று கூடுதலான எண்ணிக்கையில் உள்ளனர். தேர்தல் அரசியலும் அது சாதிக்க விரும்பும் வரம்புக்குட்பட்ட சனநாயகமும் இதை சாத்திப் படுத்தியுள்ள போதிலும், இப்பிரதிநிதிகள் அரசியல் வாழ்க்கை யில் தமக்குரிய இடத்தையும் உரிமையையும் பெறுவதற்காக அவர்களது மூதாதையர்களும், சென்ற தலைமுறையினரும் மேற்கொண்ட போராட்டங்கள்தான். இந்த குறைந்தபட்ச சனநாயகத்துக்கும் கூட ஆதாரமாக விளங்கி வருகின்றன. பார்ப்பனர்களின் மேலாண்மையை முற்றிலும் தகர்க்காது. பிறப்பின் அடிப்படையில் அவர்கள் செலுத்தும் மேலாதிக்கத்தில் பங்கு பெற விழையும் இதர சாதியினரின் அரசியலுங்கூட ஏதோவொரு வகையிலான சனநாயகத்தை சாத்தியப்படுத்த வல்லதுதான்.

இன்னும் சொல்லப்போனால் இவ்வாறு உள்ள படியே ஆட்சியதிகாரத்தில் பங்கு கேட்க விழையும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அரசியல் தலைமைகளின் அரசியல் ஆர்வத்துக்கான நியாயத்தை, மேற்கூறிய போராட்டங்களைப் பற்றிய நினைவும் அந்நினைவு தோற்றுவிக்கும் மனக்கிளர்ச்சி யும்தான் இயற்றியளித்துள்ளன. மேலும், சாதி ஏற்றத் தாழ்வுகள் மலிந்து கிடக்கும் சமுதாயத்தில் சாதி நலன்களை கடந்த, பொதுநலனை, பொதுவுரிமையை ‘அரசு’ என்ற ஒன்றுதான் இதுநாள் வரைக்கும் பிரதிநிதித்துவப்படுத்தி வந்துள்ளது. அத்தகைய பொதுவுரிமைக்கான அடிப்படை ஆதாரங்களையும் அந்த அரசின் இருப்புக்குக் காரணமாக உள்ள அரசியல் சட்டமும், அதன் முக்கியமான பகுதியாக உள்ள அடிப்படை உரிமைகள் சாசனமும் தான் வழங்கி வருகின்றன. இத்தகைய அரசை இயக்கும் சனநாயக உந்து சக்திகளில் ஒன்றான பாராளுமன்றம் கண்டுள்ள சனநாயக மாற்றங்களை இந்தக் கோணத்தலிருந்தும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பொதுவுரிமைக்ககான அரசாக அது இருக்க வேண்டுமானால் சகல சாதியினரும் தமக்குரிய பங்கை கோருவது என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

பிரச்சினை என்னவெனில் நவீன கால இந்திய அரசு தன்னை ஒரு குடியசராக வரையறுத்துக் கொண்டதாலேயே பொது உரிமையை பிரதிநிதித்துவப்படுத்த வல்லதாகி விடுவதில்லை. காரணம், ஒரு குடியரசின் தன்மை அது வகுத்துக் கொண்டுள்ள அற்புதமான சட்டத்திட்டங்களைப் பொருத்து இருப்பதில்லை. அச்சட்டத்திட்டங்கள் அரசியல் வாழ்வுக்கு மட்டுமில்லாது சமுதாய வாழ்வுக்கும் உரியவையாய் அறியப்படுவதும், பொருளாதார வாழ்வில் சமத்துவத்தையும் சமநீதியையும் ஏற்படுத்த வல்லதுமாக இருந்தால்தான் ஒருஅரசானது ‘குடியரசு’ என்ற தகுதியைப் பெறும். அரசியல் சட்டத்தைக் கொண்டு சாதிய தன்மையுடைய இந்திய அரசை குடியரசாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் பணிபுரிந்த அம்பேத்கரும் கூட, பின்னாட்களில் சமுதாய மாற்றம் என்பதை இவ்வாறு சாதிக்க இயலாது; முற்றிலும் வேறுபட்ட அறவியல் வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே சாதி இந்து சமுதாயத்தை எதிர்க்கொள்ள முடியும் என்ற முடிவுக்கு வந்தார். அரசியல் சட்டத்தை வரைந்த அறிவு தம்மத்தில் தன்னை இணைத்துக் கொண்டது.

அம்பேத்கரைப் போல அல்லாது, அரசியல் சட்டம் உருவாக்கும் முயற்சியை பற்றி தொடக்கம் முதலே பெரியாருக்கு நல்லெண்ணமும் நம்பிக்கையும் இருக்கவில்லை. சாதி அமைப்பை கட்டுக்குலையாது காப்பாற்றும் வேலைகளை அரசியல் அமைப்பின் பார்ப்பன-பனியா அங்கத்தினர் செய்து வருவதாக அவர் 1948இலேயே குற்றம் சாற்றினார். பார்ப்பனீய தத்துவமும் பனியாக்களின் பொருளாதாரச் கொள்கைகளும் கைக்கோர்த்துக்கொண்டு பொதுவுரிமை, பொதுவுடைமை ஆகிய இரண்டையும் தவிடுபோடியாக்கி விடும் என்பதை அவர் தொடர்ந்து சுட்டிக்காட்டினார்.

தத்துவரீதியாகவும் வர்க்கரீதியாகவும் குடியரசாக விளங்காது இந்து-இந்தி-இந்தியாவாக அவதாரம் எடுத்துள்ள இந்திய அரசானது தொடர்ந்து தன்னை ஒரு சனநாயக அரசாக இனங்காட்டிக் கொண்டு வருவதன் சூட்சமத்தை மேலும் ஆராய்வோம்.

குறிப்பிட்ட சாதி, வர்க்க நலன்களை முன்னிட்டே அரசின் திட்டங்களும் செயல்பாடுகளும் அமைந்துள்ள போதிலும், அரசு தன்னை அனைவருக்குமான அரசாகக் காட்டிக் கொள்ளவும் விழைகிறது. சுதந்திரம் பெற்ற நாளிலிருந்தே தனது ‘சனநாயக’த் தன்மையின் மேன்மையையும் பாகிஸ்தானின் ‘ஏதேச்சதிகார’ அரசியலையும் ஒப்பிட்டுக்காட்டி முற்போக்கான அரசாக தன்னை காட்டிக் கொண்டது. மேலும், தாராளவாத சனநாயகம் என்பதில் முழு நம்பிக்கையுடைய அரசியல் தலைமைகள் அக்காலக் கூட்டத்தில் அரசியல் வாழ்க்கையிலும் சுதந்திர இந்தியாவின் அரசியலதிகாரத்திலும் பங்கு வகித்து வந்தனர். தங்களது வர்க்கசாதி நலன் அச்சுறுத்தலுக்கு ஆளானபோது இவர்கள் வெகுண்டு செயல்பட்டனர் என்பதை மறுப்பதற்கில்லை.

தெலுங்கானா போராட்டத்தை நேரு அரசு முடிவுக்குக் கொண்டு வந்தவிதம், தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யுனிச அரசை (கேரள அரசை) கலைத்த தோரணை போன்ற சம்பவங்கள் சுதந்திர இந்திய அரசின் பண்புகளை சுட்டுவனவாக அமைந்தன. 1950களில் பெரியாரின் கொடி எரிப்புப் போராட்டத்தையும் சட்ட எரிப்புப் போராட்டத்தையும் ஒடுக்கியதிலும் நேரு பேணிய சனநாயகத்தின் வரம்புகள் வெளிபட்டன என்றாலும் தாராளவாத அரசியல் சிந்தனையுடைய சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தவும் சுதந்திர இந்திய அரசு ஆவல் கொண்டிருந்தது. நீதித்துறை சுயாதீனமாக செயல்படுவதை அது எல்லா நேரங்களிலும் கட்டுப்படுத்தவில்லை. அரசாங்கம், கட்சி, நிர்வாகம், ஆகியன தம்மளவில் சுதந்திரமாக இயங்குவதையும் ஓரளவுக்கு அனுமதித் தது. பாராளுமன்ற செயல்பாடுகளும் சனநாயகத்தை விரிவுப்படுத் துபவையாக அமைந்தன. நேரு அரசு தொடர்ந்து எதிர்க்கட்சி களின் விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது.

காலப்போக்கில், பாராளுமன்ற உறுப்பினர்களின் அடை யாளங்களும் மாறின. 1970 ஆதிக்கசாதிகளையும் வாக்கங்களை யும் சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல், நாம் ஏற்கனவே கூறியதுபோல, பல்வேறு சமூக வகுப்புகளின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகத் துறையில் இந்த வகுப்பினருக்குப் போதுமான பிரதிநிதித்துவம் வாய்த்திருக்கவில்லை என்றாலும், பாராளுமன்ற அரங்கில் வகுப்புரிமைக்கான விவாதத்தையும் அதற்கான தேவையையும் முன்னெடுத்துச் செல்ல இவர்களால் முடிந்தது. பல்வேறு சமூக, சாதி நலன்களுக்கிடையே நிலவிய முரண்கள், போட்டா போட்டிகள் முதலியவற்றுக்கு பாராளுமன்ற சனநாயகம் ஈடுகொடுக்க வேண்டியிருந்தது. மண்டல் பரிந்துரைகள் தொடர்பாக நிகழ்ந்த நிகழ்வுகளும், சமுதாய களத்தில் இப்பரிந்துரைகளின் விளைவாக உண்டாகிய சலன்களும் இந்திய சனநாயகத்தின் எல்லைகளை விரிவுப்படுத்தின. இந்திய அரசு தனது உள்ளார்ந்த வர்க்க, சாதி நலன்களை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாத போதிலும் இவற்றுக்கு சவாலாக தோன்றியிருந்த எதிர்ப்புக் குரல்களுக்கும் எதிர்வினைகளுக்கும் செவி மடுக்க வேண்டியிருந்தது. ஏன், அவற்றுடன் சமரசம் செய்து கொள்ளவும் தள்ளப்பட்டது.

பாராளுமன்றத்தின் செயல்பாடுகள் இவ்வாறிருக்க, மாறி வரும் சமூகச் சூழலின் எதிரொலிகள் வேறு தளங்களிலும் ஒலிக்கத் தொடங்கின. 1975க்குப் பிறகு, அதாவது அவசர சட்டக்காலத்துக்குப் பிறகு, இந்தியாவின் அரசியல், சமுதாய வாழ்வில் சிவில் உரிமை அமைப்புகளும் இயக்கங்களும் முக்கிய பங்காற்றி வந்தன. அடிப்படை உரிமைகள் என்பனவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த வரையறைகளுக்கு புரட்சிகரமான விளக்கங் களை அளித்து அவற்றின் வீச்சை சிவில் உரிமைகளை வழக்காட வந்த வழக்கறிஞர்கள் விரிவுப்படுத்தினார்கள். எடுத்துக்காட்டாக உயிர் வாழ்வதற்கான உரிமை என்பது மிக விரிவான பொருள் பெற்று, சாமான்ய இந்திய குடிமக்களின் உரிமைப் போராட்டங் களுக்கு ஆதாரமாக அமைந்தது. அரசியல், சமுதாய களங்களில் தீர்க்கமுடியாதப் பிரச்சினைகள் நீதிமன்றங்களில் அடைக்கலம் கண்டன. நிர்வாகமும் அரசாங்கமும், பாராமுகமாக இருந்தா லும் நீதிமன்றம் கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையை வளர்க்க, மக்கள் சார்பாக வழக்காட வந்தவர்களின் நேர்மையும் திறமையும் காரணமாக அமைந்தன.

இவ்வாறாக மக்களின் செயல்பாடுகளும் அரசியல் பங்கேற்பும் இந்திய அரசை சனநாயகப்படுத்த, அதாவது, சற்றே சனநாயகப் படுத்த உதவின. அரசின் வர்க்க-சாதி பண்புகள் நேரடியாக மேலாதிக்கம் செலுத்தும் நிலை மாறியமைந்தது. இப்பண்புகளை உருட்டிப்போட்டு, பதம்பார்த்து, தரம்பிரித்து பிரத்யேக வடிவங்களில் அவற்றை செதுக்க பல சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் முட்டி மோதுவதென்பது தவிர்க்க முடியாத தாகியது.

அதேசமயம் இந்தியஅரசு தொடர்ந்து தனது உள்ளார்ந்த சாதி-வர்க்க நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும் அவற்றை பொது நலன்களாக விளக்கி, பரந்துப்பட்ட மக்களின் ஒப்புதலைப் பெறவும் முக்கியமான கருத்தியல் பணிகளை மேற்கொள்ள தவறவில்லை. தேசியம் என்ற கருத்தாக்கத்தை சமயத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் ஏற்ற வகையில் கையாண்டது. இந்தியா, சீனா எல்லைப் போரின்போதும், வங்கதேச விடுதலைப் போரின்போதும். தேசபக்தியாக அவதரித்த தேசியமானது, அவசர சட்டக் காலத்தில் கண்டிப்பான கொள்கையாகவும் நாட் டின் எதிரிகளாக அரசால் அடையாளங் காணப்பட்டவர்களை தண்டிக்கவும், அத்தகைய தண்டனையை நியாயப்படுத்தவும் உதவக்கூடிய பாசிச சாயலுடைய சூத்திரமாகவும் உருவெடுத்தது. இந்திய அரசின் மேலாண்மை காஷ்மீரத்திலும் நாகலாந்திலும் எதிர் வினைகளை சந்தித்தப்போது இத்தேசியம் வன்மத்தை உமிழ்ந்தது. தீர்க்க இயலாத வர்க்க சாதி முரண்பாடுகளை களையெடுக்க வகுப்பவுவாதத்தை ஊக்குவித்து ‘இந்து’க்களை அணித்திரட்டும் தேசியமாக (1980களில்) பரிணமித்தது.

தேசியம் கண்ட பல்வேறு அவதாரங்களுக்கு சிகரம் வைத்தாற் போல இந்துத்துவம் என்ற தத்துவம் எழும்பி, அப்பட்டமான சனநாயக விரோத வடிவங்களை மேற்கொண்டு, சிறுபான்மை யினரை வதைத்தது. வருணதருமத்தை நிலைநிறுத்தப் பார்த்தது.

1990களின் இறுதி ஆண்டுகளில் உருதிரட்சி பெற்று வளர்த்த இந்துத்துவம் இந்திய அரசின் வர்க்க-சாதி நலன்களுக்குரிய பிரத் யேக அடையாளமாக அமைந்தது. இந்நலன்களை ஊடறுக்க வல்ல சமூக பின்புலத்தையும் கருத்தியல் செறிவையும் பெற்றிருந்த அரசியல் மரபுவழி வந்த மாயாவதி போன்றவர்கள் கூட, இந்தஅடையாளத்துடன் சமரசம் செய்ய துணிந்தனர் என்றால், இந்துத்துவம் சாதித்த அரசியல் வெற்றியை என்னவென்று சொல்வது? பெரியார் பலமுறை சொன்னதுபோல, ‘பலித்தவரை என்பதுதான் பார்ப்பனீயம்’ என்பதற்க்கு இதைவிடச் சிறந்த சான்று இருக்குமா என்று தெரியவில்லை.

இந்துத்துவம் வேறொன்றையும் அம்பலப்படுத்தியது. தாராளவாத சனநாயக அரசுக்குரிய பண்புகளை ஏற்று இயங்கிய அரசானது, உண்மையில், யாருக்கானதாக, யாருடைய உரிமையைக் காக்க வல்லதாக இருந்து வந்துள்ளது என்பதை அரசு அமைத்த சச்சார் குழு வெளிப்படுத்தியது. இக்குழு, இஸ்லாமியர்களின் வாழ்நிலைமைகளை ஆராய்ந்தது. அவர்களின் முன்னேற்றத்துக்கென சில பரிந்துரைகளை செய்தது. இந்துத் துவத்தின் கொடூர முகத்தை வெளிப்படுத்தவும், தனது ‘மரச்சார் பற்ற’ அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்த குழுவை அமைத்திருந்தாலும், அக்குழுவின் பரிந்துரைகளினு டாக இந்துத்துவத்தின் பாரபட்சங்கள் சாதித்தவை மட்டும் வெளிபடவில்லை. சுதந்திர இந்தியாவில் நெடுநாள் ஆட்சி நடத்திய ‘மதச்சார்ப்பற்ற’ காங்கிரஸ் அரசுகள் யாவும் செய்ய தவறியவையும் செய்ய மறுத்தவையும் வெளிபட்டன.

குறிப்பிட்ட வர்க்கசாதிகளின் பிரதிநிதியாக, காப்பாளனாக, விளங்கும் இந்திய அரசின் உள்ளார்ந்த தன்மைக்கும் குறிப்பிட்ட வரலாற்று சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப மாறியமையும் அதன் செயல்பாடுகளுக்கும் இடையிலான இடைவெளியும் முரண்பாடுகளும் தான் எதிர்வினைகளுக்கும் போராட்டங் களுக்கும் தளம் அமைத்து தருகின்றன. இத்தகைய போராட்டங்கள் அரசின் உள்ளார்ந்த தன்மையை மாற்ற முனையலாம். அல்லது உள்ளதைப் பங்குப் போட்டுக் கொள்வதற்கான போராட்டமாக இருக்கலாம். முதலாம் வகைப்போராட்டத்துக்குக்கு இரண்டு முக்கிய கருத்தியல் மரபுகள் ஆதாரமாக அமையலாம்: இந்து-இந்தி-இந்தியாவை எதிர்த்து குறிப்பிட்ட தேசிய இன அடையாளத்தை முன்நிறுத்திய மரபு, அரசின் வர்க்க பண்பை எதிர்த்து அதற்கு எதிராக ஆயுதங்தாங்க துணிந்த இடதுசாரி மரபு.

முதலாம் மரபு தமிழகத்தில் உயிர்ப்புடன் செயல்பட்ட காலகட்டத்தில், இந்தியா என்பதற்கு எதிராக தமிழ், திராவிட அடையாளங்களை முன்நிறுத்திய அதே வேளையில், இந்தியாவின் சாதி வர்க்கப் பண்புகளை விமர்சித்தும் கண்டித் தும், பார்ப்பனீயத்தை எதிர்த்தும் செயல்பட்டது. இன்று இம்மரபுக்கு எதிர்வினையாற்ற வல்ல ஆற்றல் இருக்கிறதா என்று தெரியவில்லை. திராவிட இயக்கம் கண்ட கட்சிகள் யாவும் இந்திய அரசின் பங்காளிகளாக உள்ளதுடன், அவ்வரசுக்கு ஆதாரமாக உள்ள வர்க்கப் பிரிவுகளுடனும் சாதிகளுடனும் தம்மை இணைத்துக் கொண்டுள்ளன. தொடர்ந்து ‘தமிழ் தேசிய நலம்’ குறித்து பேசுவோரில் பலர் தமிழ் அடையாளத்தை முன்நிறுத்தி போராடுகிறார்களேயன்றி, இந்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் வர்க்க சாதியினரையோ அவர்கள் போற்றும் ‘இந்து’ தேசியத்தையோ போதுமான அளவுக்கு எதிர்ப்பதில்லை. அவ்வாறு எதிர்ப்பதன் தேவையை வலியுறுத்து வதில்லை. தமிழுக்குள் அனைத்து முரண்பாடுகளையும் முடக்கிவிட முடியும் என்ற நினைப்பில் இவர்களில் பலர் செயல்படுகின்றனர்.

ஆயுதங்களை கையிலெடுத்து களம் இறங்கியுள்ள இடது சாரிகள் அரசுக்கு எதிராகவும், ஆளும் வர்க்க சாதியினருக்கு எதிராகவும் வர்க்கப் போரை முன்னெடுத்துச் செல்ல மேற்கொண்டுள்ள செயல்பாடுகள் அரசால் மூர்க்கத்தனமாக ஒடுக்கப்பட்டு வருகின்றன. அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்குபவர்கள் அரசின் வன்மத்தை அதிகரிக்கச் செய்கிறார்கள் என்பது கண்கூடு, இவ்வன்மத்துக்கு ஆளாகும் எளிய மக்களின் கதிக்கும் அவர்கள் உருவாக்கி வைத்துள்ள அமைதியான புரட்சி செயல்பாடுகளுக்கும் யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?

இந்திய அரசை உள்ளவாறே சனநாயகப்படுத்த முடியுமா? உண்மையான இறையாண்மையை வரையறுத்து பாதுகாப்பதென்பது சாத்தியமா? தாராளவாத சனநாயகத்தின் வரம்புகளை குலைக்காமல் இந்திய அரசினை எதிர்கொள்ள இயலுமா? அவ்வாறு அவ்வரம்புகளை மீற முனைபவர்கள், தாராளவாத சனநாயகம் சாதித்தளிக்கக்கூடிய சிற்சில வெற்றிகளை இழக்கவும் கைவிடவும் தயாராக உள்ளனரா?

இந்திய அரசு குறித்த விமர்சனங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

- வ.கீதா

(கட்டுரையாளர், சுயமரியாதை இயக்கம் மற்றும் பெண்ணியம் குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்களை வெளியிட்டுள்ளார். எஸ்.வி.ராஜதுரை அவர்களோடு இணைந்து பல நூல்களை எழுதியுள்ளார். முழுநேர ஆய்வாளர்)

(மாற்றுவெளி ஆய்விதழ் ஆகஸ்ட் 2009ல் வெளிவந்த கட்டுரை)

Pin It