அலகாபாத் உயர் நீதி மன்றம் 14.10.2015 அன்று ஒரு மிக மிக முக்கியமான தீர்ப்பை வழங்கி உள்ளது. உத்தரப் பிரதேச மாநில அரசாங்கம் அனில் யாதவ் என்பவரை அம்மாநில அரசுப் பணித் தேர்வாணையத்தின் தலைவராக நியமித்தது. அனில் யாதவ் நேர்மையானவர் அல்லர் என்றும், அவர் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர்களையே அரசுப் பணியாளர்களாகத் தேர்ந்தெடுப்பார் என்றும், அதனால் திறமையுள்ள மற்ற வகுப்பினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்றும் கூறி, பார்ப்பனர்கள் மற்றும் பார்பபன அடிமைகளின் அமைப்புகள் சேர்ந்து அலகாபாத் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தன. அனில் யாதவ் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்றும், நீதி மன்ற விசாரணைக்குப் பின் அவர் மேல் குற்றம் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டு இருந்தாலும், மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவிக்கு நியமிக்கும் போது, அவரைத் தகுதியானவராகக் கருதக் கூடாது என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இம்மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதி மன்றம் வழக்கு தொடுத்தவர்களின் வாதங்களை ஏற்றுக் கொண்டு, அனில் யாதவ் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று 14.10.2015 அன்று தீர்ப்பளித்தது.

முதலில், ஒரு நீதி மன்றம் குற்றவாளி இல்லை என்று அளித்த தீர்ப்புக்கு எதிராக, அனில் யாதவைக் குற்றவாளியாகக் கருத வேண்டும் என்று வழக்கு கொடுத்தவர்கள் கூறியதை நீதி மன்ற அவமதிப்பாக எடுத்துக் கொள்ளாதது சட்ட ரீதியாகச் சரியானது தானா?

அடுத்ததாக, அனில் யாதவ் மீதான குற்றச்சாட்டு பற்றி ஆராய வேண்டும். அவர் தனது சமூகத்தவர்களை மிகப் பெரும்பான்மையாக அரசுப் பணிகளுக்காகத் தேர்ந்தெடுத்து விடுவார் என்பது இவ்வழக்கின் மையமான குற்றச்சாட்டு. அரசுப் பணித் தேர்வாணையத்தின் விதிமுறைகள் இருக்கையில், அவற்றைப் புறந்தள்ளிவிட்டு, வேண்டியவர்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று நம்பியதால் தான் உயர் நீதி மன்றம் இத்தைகைய தீர்ப்பபை வழங்கி உள்ளது.

அப்படி என்றால் யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்கள் விருப்பப்படி அரசுப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்க முடியும் என்றும், திறமை உள்ளவர்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்ற உறுதி இல்லை என்றும், அரசின் விதி முறைகள் யாவும் வெறும் கண் துடைப்பே என்றும் தெளிவாகிறது.

இதை மனதில் கொண்டு பார்த்தால், இன்றைய தேர்வு முறையில் திறமைசாலிகள் தான் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும், உத்தரவாதமும் இல்லை என்றாகிறது. அவ்வாறு இருக்கையில் இட ஒதுக்கீட்டினால் திறமைசாலிகளின் வாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்று பார்ப்பனர்கள் கூச்சலிடுவது அயோக்கித்தனம் என்றும் தெளிவாகிறது அல்லவா? எப்படி இருந்தாலும் அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பப்படி தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற நிலை இருக்கும் போது பொதுப் போட்டி மூலம் திறமைசாலிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற கருத்தை உருவாக்கி வைத்து இருப்பதும், அதை வலுப்படுத்திக் கொண்டு இருப்பதும் அயோக்கியத்தனம் அல்லவா? இந்நிலையில் திறமையின் அடிப்படையில் தான் தேர்வு இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பொதுப் போட்டிக்கு எதிரான விழிப்புணர்வையும், பொதுக் கருத்தையும் ஏற்படுத்தி, சரியான தீர்வுக்காகப் போராட வேண்டும் அல்லவா?

அத்தகைய ஒரு தீர்வு தான் மார்க்சிய, பெரியாரிய, பொதுவுடைமைக் கட்சி முன் வைக்கும் விகிதாச்சாரப் பங்கீடு முறை. இதன்படி கல்வி, வேலை வாய்ப்பு, அரசுத் தறை, தனியார்த் துறை, பெட்ரோல், எரி வாயு விநியோகத்திற்கான முகைமை (Agency), தொழில்களுக்கான உரிமம் (License) போன்ற சமூக, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும், அனைத்து நிலைகளிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மத சிறுபான்மையினர், முற்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு அவரவர் மக்கள் தொகை விகிதத்தில் பங்கிட்டுக் கொடுக்கப்பட வேண்டும். இதனால் அந்தந்த வகுப்பில் உள்ள திறமைசாலிகள் உயர்நிலை வேலைகளிலும், அந்தந்த வகுப்பில் உள்ள திறமைக் குறைவானவர்கள் கீழ் நிலைகளிலும் வேலை செய்ய முடிகின்ற சூழ்நிலை ஏற்படும். இந்நிலையில் யாரோ ஒருவர் திறமையின் அடிப்படையில் இல்லாமல், தான் சார்ந்துள்ள சமூகத்தினருக்கு அதிக வாய்யப்புகளை முறைகேடாக அளித்து விடுவார் என்ற அச்சத்திற்கு அடிப்படையே இல்லாமல் போய்விடும்.

இவ்வுண்மையை உயர்சாதிக் கும்பலினர் மிக நன்றாகப் புரிந்து கொண்டு உள்ளனர். ஆனால் தங்கள் வகுப்பு மக்கள் திறமை இல்லாவிட்டாலும் உயர்நிலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அயோக்கியத்தனமான ஆசையின் காரணமாக, இக்கருத்து மக்களிடையே பரவாதபடி எச்சரிக்கையாக இருக்கின்றனர்.

ஆனால் விகிதாச்சாரப் பங்கீட்டுக் கருத்தியல் மக்களின் பொதுக் கருத்தாக உருவெடுப்பதில் தான் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் நலன்கள் உள்ளன. இதை ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் என்று தான் உணர்வார்களோ?

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.11.2015 இதழில் வெளி வந்துள்ளது)

Pin It