இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் விதமாக நமது பாரத தேசத்தை வன்முறை நாடாக காட்சிப்படுத்தி உலக அரங்கில் தலை குனிய வைத்துக்கொண்டிருக்கும் தேச விரோத இந்துத்துவ பயங்கரவாத சக்திகளின் காட்டுமிராண்டித்தனமான தீவிரவாதப் போக்கும், அதைக் கண்டு அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் நீரோ மன்னனின் புதிய அவதாரமான பிரதமர் மோடியையும் கவனிக்கும்போது மிகவும் வியப்பாக இருக்கிறது. இந்தியாவை தனது ஜனநாயகத்தன்மையில் இருந்து விலக்கி, காட்டுமிராண்டி தேசத்தை நோக்கி அழைத்துச் செல்லும் இந்த தேச விரோத சக்திகளை தேசியவாதிகள் என்று கூறுவது எவ்வளவு நகைமுரண். ஆர்.எஸ்.எஸும் சிவசேனாவும் தேசியவாத இயக்கம் என்றால் லஷ்கர்-இ-தொய்பாவும் இந்தியன் முஜாஹிதீன் இயக்கமும் தேசிய வாத இயக்கம்தான். இரண்டு கும்பல்களுக்குமிடையே என்ன வேற்றுமை இருக்கிறது.

shiv senaதற்பொழுது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் சிவசேனா, பயங்கரவாதிகளின் வன்முறைப் போக்கின் பின்னால் பாரிய நுண் அரசியல் முகிழ்ந்து உள்ளது. இந்தியா பாகிஸ்தான் நல்லுறவை சீர்குலைக்க சியோனிஸ ஏகாதியபத்திய சக்திகள் சிவசேனாவை கைப்பாவையாக பயன்படுத்தி வருவதாகவே தெரிகிறது. பாகிஸ்தான் இந்தியா எப்போதுமே எதிரிகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் திட்டம். அவர்களின் திட்டத்திற்கு சிவசேனாவும் ஆர்.எஸ்.எஸும் பாரிய உதவிகளை செய்து வருகிறது. இரண்டு நாடுகளும் நட்பு கொண்டால் ஆசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய வல்லரசாக இந்தியா மாறக் கூடும். ஆகையால் இந்தியாவை எப்போதும் முதலாளித்துவ நாடுகளின் கார்ப்பரேட் முதலாளிகளின் லாபம் கொழிக்கும் பூமியாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான் அவர்களது திட்டம். இதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சிவசேனாவும் ஆர்.எஸ்.எஸும் செய்து கொண்டிருக்கும்போது அவர்களை தேசியவாதிகளைப் போன்று கையாளுவது எவ்வளவு அருவருப்பானது.

மும்பையில் நடக்க இருந்த பாகிஸ்தானின் பிரபல கஸல் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சி சிவசேனா தீவிரவாதிகள் விடுத்த மிரட்டலால் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் சிவசேனா பயங்கரவாதம் குறித்து மீண்டும் சூடான விவாதத்தை கிளப்பி உள்ளன. இந்தியா பாகிஸ்தான் எப்போதுமே பகைமை நாடாகவே இருக்க வேண்டும் என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தீர்மானம். அவர்களின் சதியால்தான் இந்தியா பாகிஸ்தானின் பகைமை தன்மை நீடித்து கொண்டிருக்கிறது. இதற்கு ஆர்.எஸ்.எஸும் சிவசேனாவும் கொம்பு சீவி கொடுக்கிறது. இதைத் தொடர்ந்துதான் இரு நாடுகளும் பகைமை நாடாகவே சர்வதேச அரசியலில் உற்று நோக்கப்படுகிறது. பகைமையில் மூழ்கியிருக்கின்ற இரு நாடுகளுக்கிடையே அதை நிலை நிறுத்த ஏகாதிபத்திய வல்லரசு நாடுகள் இந்துத்துவ அமைப்புகளை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.

பகைமை நாடுகளிடையே நல்லுறவு ஏற்பட வேண்டும் என்றால் கலைஞர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள், பத்திரிக்கையாளர்களால் தான் முடியும். ஏனென்றால் இவர்கள் எந்த எல்லைப் பரப்பிற்கும் உட்பட்டவர்கள் அல்ல. குலாம் அலியின் நிகழ்ச்சி மூலமாக இந்தியா பாகிஸ்தான் மக்களிடையே கலாச்சார ரீதியான நல்லுறவு ஏற்பட வாய்ப்பிருந்தது. அதைதான் தகர்த்து எறிந்திருக்கிறார்கள் சிவசேனா பயங்கரவாதிகள்.

மும்பை மட்டூங்காவில் உள்ள குலாம் அலியின் இசை நிகழ்ச்சி நடக்க இருந்த சண்முகானந்தா ஹால் நிர்வாகத்திற்கு சிவசேனாவின் திரைப்பட பிரிவான சித்ரபத் சாகா என்ற அமைப்பு நேரடி மிரட்டலே விடுத்திருந்தது. குலாம் அலியின் நிகழ்ச்சியை நடத்தினால் சிவசேனாவின் கோபத்தை சந்திக்க வேண்டியது வரும் என கூறுகிறார்கள். இந்த தீவிரவாதிகளுக்கு இந்த தைரியத்தை கொடுத்தது யார்.................?

இதே போன்று பாகிஸ்தானை சேர்ந்த மிக சிறந்த எழுத்தாளரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான குர்ஷித் மஹ்மூத் கசூரியின் "நெய்தர் எ ஹாக் நார் எ டவ்" என்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவ சேனா தீவிரவாத கும்பல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த வலது சாரி சிந்தனையாளரும் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசனின் தலைவருமான குல்கர்னி மீது மை ஊற்றி இதுதான் ஜனநாய போராட்டம் என்று நமக்கு ஜனநாயகத்தை கற்றுத்தருகிறார்கள். கடந்த 19ம் தேதி இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் புகுந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் பயிற்சியாளர்களை இந்தியாவில் அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கி உள்ளனர். இந்தியா ஜனநாயக நாடா அல்லது காவி ஐ.எஸ் களின் கையில் ஒப்படைத்து விட்டார்களா என்று புரியாமல் ஜனநாயக வாதிகள் விழி பிதுங்கி நோக்குகிறார்கள்.

இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமையை சீர்குலைப்பதில் முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளை விட சிவசேனா கடும் வேகம் காட்டிவருவதின் பின்னணியில் உள்ள அரசியல் குறித்து ஆழமான விசாரணை செய்ய வேண்டும்.1966ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி இந்திய ஜனநாயக தன்மையையும் மதசார்பின்மையையும் கேலி செய்துப் சித்திரமாக வரைந்து கொண்டிருந்த பால்தாக்கரே என்ற மராத்திய வெறியனால் ஆரம்பிக்கப்பட்ட சிவசேனாவின் செயல்பாடுகள் மற்றும் தொடர்புகள் கமுக்கமாகவே தொடர்ந்து வருகிறது. மகாராஷ்ட்டிரம் மராத்தியர்களுக்குத்தான் சொந்தம் என்ற இனவாத கோஷத்துடன் 1966ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி சிவாஜி பார்க்கில் நடந்த தசரா விழாவில் மும்பையில் உள்ள மதராஸிகளை அடித்து விரட்டுங்கள் என்று சிவசேனா பயங்கரவாதிகளுக்கு பால்தாக்கரே உத்தரவிட்டான். இதை தொடர்ந்து தமிழர்கள் சிவ சேனா பயங்கரவாதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டனர். இந்த தமிழின விரோத இயக்கத்தை தமிழகத்தில் செயல்பட தமிழர்கள் அனுமதித்தது மிகவும் வியப்பாக இருக்கிறது.

சிவசேனா இயக்கத்தை துவக்கிய நாள் முதற்கொண்டே பால்தாக்கரே தனது உறுப்பினர்களை வெறியூட்டி பல்வேறு கலவரங்களை உருவாக்கியிருக்கிறான். 1960ம் ஆண்டில் முற்போக்கு எழுத்தாளரான ஆச்சார்யா ஆத்ரே தாக்கப்பட்டார். 1970ம் ஆண்டு சிறந்த சிந்தனைவாதியும் சி.பி.ஐ கட்சியின் மூத்த நிர்வாகியுமான கிருஷ்ணன் தேசாய் சிவசேனா பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்ல பட்டார். 1967 மற்றும் 1970ம் ஆண்டுகளில் மும்பையின் புறநகர் பகுதியான பிவாண்டியில் மராட்டிய மன்னன் சிவாஜியின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தை கலவரமாக மாற்றி முசுலீம்கள், தமிழர்கள் உட்பட தென் இந்தியர்கள் 250 பேரை சிவ சேனா பயங்கரவாதிகள் வெட்டி கொன்றனர். பாபர் மசூதி இடிப்பை யொட்டி 1992 டிசம்பர் மற்றும் 1993 ஜனவரியில் மும்பையில் முசுலீம்களை குறிவைத்து கொன்று குவித்தனர் சிவ சேனா பயங்கரவாதிகள்.இதில் 900 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். மும்பை கலவரத்தில் சிவசேனாவின் பங்கு குறித்து ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் தெளிவாக குற்றம் சாட்டிய பின்பும் பால்த்தாக்கரேயை உள்ளே தூக்கி போட மத்திய அரசு தயங்கியது.

இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக சிவசேனா வெளிப்படையாக சில வேலைகளையும் சில உள்ளடி வேலைகளை கமுக்கமாகவும் செய்து வருகிறது. விளையாட்டு ரீதியாகவும் கலாச்சார பண்பாடு ரீதியாகவும் இரு நாட்டு மக்களும் ஒன்றிணைந்து விட கூடாது என்பதில் சிவசேனா அதீத கவனம் செலுத்தி வருகிறது. 1991ம் ஆண்டு முதற்கொண்டு இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டுகளை சீர்குலைத்து வருகிறது. 2010ம் ஆண்டு பாகிஸ்தானின் சினிமா கலைஞர்கள் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியை அத்துமீறி தொலைக்காட்சி நிலையத்துக்குள் நுழைந்து சிவ சேனா பயங்கரவாதிகள் தாக்கினர். இதே போன்று 2009ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி ஐ.பி.என்.7 தொலைக்காட்சி நிலையத்துக்குள்ளும் புகுந்து தாக்குதல் தொடுத்தனர். 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இரு நாடுகளிடையே நடக்க இருந்த கபடி போட்டிகள் சிவ சேனா மிரட்டலால் நிறுத்தப்பட்டது. 2014ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த சூஃபி ஒருவரின் பத்திரிக்கையாளர் சந்திப்பை முடக்கினர். இந்த ஆண்டு புனேயில் நடக்க இருந்த பாகிஸ்தான் பாடகர் ஆதிப் அஸ்லத்தின் இசை நிகழ்ச்சி சிவ சேனா பயங்கரவாதிகளால் முடக்கப்பட்டது.

பால்தாக்கரேயின் பயங்கரவாத செயலை கண்டிக்கும் விதமாக இந்திய தேர்தல் ஆணையம் அவன் தேர்தலில் போட்டியிட 6 வருடம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கரவாதி செத்த போது இந்தியாவின் தேச பிதா மரணித்ததை போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டது. பால்தாக்கரேயின் மரணத்திற்கு பின்பு அவனது மகன் உத்தவ் தாக்கரே 2012ம் ஆண்டு நவம்பர் 17 முதல் சிவ சேனாவின் பிரமுக்காக இருந்து வருகிறான். இவனுக்கு பிறகு இவனது மகன் ஆதித்யா தாக்கரே இந்த இயக்கத்தின் தலைமை பொறுப்புக்கு வருவதற்கான அனைத்து வேலைகளும் நடந்து வருகிறது. பால்தாக்கரே முதற்கொண்டு தங்களது குடும்ப லாபத்துக்காக மராட்டிய மக்களை பயன்படுத்தி வருவது தெளிவாகிறது. பால்தாக்கரேயின் குடும்ப அரசியலை எதிர்த்துதான் மஹாராஷ்ட்டிராவின் முன்னாள் முதல்வரும் சிவசேனாவின் மூத்த நிர்வாகியுமாக இருந்த நாராயண ரானே மற்றும் பால்தாக்கரேயின் மருமகன் ராஜ்தாக்கரே ஆகியோரால் ஜூலை 2005ல் மகாராஸ்ட்டிரா நவ நிர்மான் சேனா உருவாக்கப்பட்டது.

தற்பொழுது சிவ சேனா மிகவும் பலகீனமான நிலையை அடைந்து கொண்டிருக்கிறது. இதனால் மீண்டும் சிவ சேனா உறுப்பினர்களை பலப்படுத்தவும் மராட்டிய மக்களை மிரட்டவும் இத்தகய வன்முறைகளை கையாள வேண்டிய நிலையில் சிவ சேனாவினர் உள்ளதாக மும்பையை சேர்ந்த எனக்கு தெரிந்த பத்திரிக்கை நண்பர் ஒருவர் கூறுகிறார்.

தொடர்ந்து இந்தியாவின் மதசார்பின்மைக்கும் ஜனநாயகத்திற்கும் சவால்விட்டு கொண்டு இருக்கு இந்த தேச விரோத பயங்கரவாத இயக்கத்தை இந்திய அரசு தடை செய்து பயங்கரவாத சட்டத்தின் கீழ் இந்த இயக்கத்தின் நிர்வாகிகளை கைது செய்து உள்ளே தள்ளுவதுதான் இதற்காக தீர்வு.....................தீகார் ஜெயில் களி தின்ன வேண்டியவர்கள் மீடியாக்களின் முன்னால் பல் இழித்து பேட்டி கொடுப்பது எவ்வளவு குரூரமானது.

தமிழின மக்களின் விரோதியான சிவ சேனாவில் தமிழர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றால் இவர்களை விட சிறந்த அடிமைகள் யாராக இருக்க முடியும். கடந்த 20ம் தேதி புதிய தலைமுறை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவ சேனாவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் பிரபல பத்திரிக்கையாளரான ஞானியின் மீது மை ஊற்றுவோம் என அவருக்கு நேராகவே தொலைக்காட்சியில் பேசுகிறான் என்றால் இந்த பயங்கரவாதம் தமிழகத்தில் எவ்வளவு தூரம் வேரூன்றியிருக்க வேண்டும். தமிழர்கள் சிங்கள பேரின வாதத்தை எதிர்த்து போராடும் இந்த கணத்தில் தமிழர்களை மும்பையில் படுகொலை செய்த இந்த பயங்கரவாத இயக்கத்தை தமிழகத்தில் இருந்து துடைத்தெறிய வீரியமான போராட்டத்திற்கு துவக்கம் குறிக்க வேண்டும்.

- ஷாகுல் ஹமீது