சங்கப் புலவர்கள் - ஆசிவகச் சமயம் சார்ந்தவர்கள்:
‘சங்க நூல்களெல்லாம் புத்தச் சமண சமயச் சார்புடையன அவைகளைப் பயிலுதல் கூடாது’ என்று தனது இளமைப்பருவத்தில் சில சிவனடியார்கள் கூறுவதுண்டு, எனச் ‘சங்க இலக்கியம்’ பதிப்பாசிரியர் ம. பாலசுப்ரமணியன் கூறியுள்ளார். சங்க இலக்கியங்களைச் சைவர்கள் படிக்கக் கூடாது என்கிற தடை இருந்தது போலவே திருக்குறளையும் சைவர்கள் படிக்கத் தடை இருந்துள்ளது. வைணவத்தில் அத்தடை வெளிப்படையாகவே இருந்ததை ஆண்டாள் ‘தீக்குறளை சென்றோதோம்’ என்பதால் அறியலாம். திருக்குறளும், நாலடியாரும் தொல்தமிழரான அயோத்திதாசரின் பாட்டனார் கந்தசுவாமி அவர்களால் காப்பாற்றப்பட்டு கையளிக்கப்பட்டவை என்பதால் அத்தடைகள் இருந்ததற்கான வாய்ப்பை உறுதி செய்யலாம். பெரும் பான்மைச் சங்ககாலப் புலவர்கள் வைதீக–சைவ நெறிகளுக்கு மாறான சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் சங்க இலக்கியங்களை சைவர்கள் வெறுத்தனர். பரணரின் பாடல்கள் அவர் வைதீக மறுப்பாளர் என்பதை உறுதி செய்கிறது. நக்கீரர் தனது புறம் 395ஆம் பாடலில் தாம் ஆசிவகத்தைத் தோற்றுவித்த மற்கலி கோசாலார் எனப்படுகிற அறப்பெயர் சாத்தானின் கிளையைச் சேர்ந்தவன் எனக் கூறிக் கொள்கிறார்-(1).
தமிழகத்தில் உள்ளனவும், சங்ககாலத்திற்கு உரியனவுமாகிய கற்படுக்கைகள் இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் சமணர்களுக்கென்று அமைக்கப்படவில்லை. அப்படி அமைக்கப்பட்ட ஓரிரு கற்படுக்கைகளும் ஆசிவர்கட்கு மட்டுமே உரியனவாகத் திட்டமிட்டு அமைக்கப் பட்டுள்ளன. பேராசிரியர் தி.வி. மகாலிங்கம் தமிழகக் கற்படுக்கைகள் ஆசிவர்கட்கு உரியன என ஆய்ந்துரைத்துள்ளார். ஆனால் அவைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை-(2). மேலும் ‘அமணன்’ என்கிற சொல் வைதீக எதிர்ப்புக் கோட்பாட்டினர் அனைவரையும் குறிக்கும். அது பாகத மொழியில் ‘சிரமணன்’ என வழங்கும். ஆதலால் புத்த, சமண, ஆசிவகத் துறவிகள் அனைவரும் அமணன் என்றே அழைக்கப்பட்டனர்-(2). ஆதலால் பலகுழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து இளங்கோவடிகளின் காலமான கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையான சங்ககாலப் புலவர்களில் பெரும்பாலோர் ஆசிவகச் சமயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழர்தம் சிந்தனை மரபின் ஆழத்தையையும், தொன்மையையும், சிறப்பையும், தனித் தன்மையையும் விளக்க நாம் சங்க இலக்கியங்களிலிருந்து ஏதேனும் ஒரு பாடலைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் அப்பாடல் ஆசீவகமெய்யியலைச் சேர்ந்ததாகவே இருக்கும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் பாடல் இதற்குச் சான்று ஆகும்-(3). சங்க காலத்தில் நிலத் தெய்வங்களாகவும் பொருள்முதல் பிரிவைச் சார்ந்த தந்திர வழிபாட்டிற்குரியனவாகவும் விளங்கிய முருக-சிவ-மாலிய வழிபாடுகள் யாவும் வேதவழிப்பட்ட தெய்வங்களாக மாற்றம்பெற்றுள்ளன. அதற்கடையாளம்தான் கடவுள் வாழ்த்தே இடம்பெறாத தொகை நூல்களில் வேதவழிப்பட்ட கடவுள் குறித்தப் பாடல்கள் சேர்க்கப்பட்டது ஆகும்-(4). மேற்கண்ட தரவுகளிருந்து, சங்ககாலப் புலவர்களில் பெரும் பாலானோர் வைதீக மரபிற்கு எதிரான ஆசீவகச் சமயத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், ஆதலால் சைவ-வைணவ அடியார்கள், சங்கப்பாடல்களைப் படிக்கக் கூடாது எனத்தடை விதிக்கப்பட்டிருந்தது எனவும், சங்ககாலக்கல்வெட்டுகள் சமணத்துறவிகளது அல்ல! அவை ஆசிவகத் துறவிகளுக்கானவை எனவும் முடிவு செய்யலாம்.
வடஇந்திய - தமிழிய தத்துவமரபில் உள்ள முரண்பாடுகள்:
பூதவாதம் - உலகாயதம்:
வடமரபில் பூதங்கள் நான்காக சொல்லப்படுகிறது. தமிழ் மரபோ ஐம்பெரும்பூதங்களைப் பற்றிப் பேசுகிறது. ஆகாயத்தைக் காணமுடியாது என்பதால் வட மரபில் வெளியைப் பூதமாக ஏற்பதில்லை. அதனால் உலகாயதம் - பூதவாதம் வரும் இடங்களில் வட மரபு நான்கு பூதங்களை மட்டுமே குறிக்கிறது. தமிழ் மரபில் வெளி எனும் ஆகாயம் ஐம்பெரும்பூதங்களில் ஒன்றாக மட்டும் அல்லாமல் முதல்பொருளில் ஒன்றாகவும் பேசப்படும் சிறப்பினைப் பெற்றுள்ளது. தமிழ் மரபில் வெளியை ஒரு பூதமாக ஏற்றுக்கொண்டதும், வெளியையும் காலத்தையும் இணைத்து முதற் பொருளாக வகைப்படுத்தியதும் தமிழ் மெய்யியலின் நுட்பத்தை உணர்த்தும் சான்றுகளாகும். இன்றைய வான் இயற்பியலில் நிலம்-பொழுது இரண்டையும் ‘SPACE AND TIME‘ எனக் குறிப்பர். சார்பியல் கோட்பாடும், பொது-சிறப்பு சார்பியல் கோட்பாடுகளும் வெளி-காலம் பற்றிய ஆய்வுகளேயாகும்-(5). தமிழ்மரபுப்படி வெளி, காலம், நிலம் ஆகியவற்றை முதற்பொருளாக வைத்தத் தொல்காப்பியர் தெய்வத்தைக் கருப்பொருளாக வைத்தார். முதற்பொருளில் இருந்துதான் கருப்பொருள்கள் உருவாக முடியும் என்பது தான் தமிழ் மரபு. அதன்படி தெய்வம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும் என்பதுதான் தொல்காப்பியர் கூறும் கருத்தாகும்.
எண்ணியம் - சாங்கியம்:
ஐம்பூதக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட தமிழ்மரபைப் பூதவாதமாகவும், வெளி நீங்கலான நான்கு பூதங்களைக் குறிக்கும் வடமரபை உலகாயதமாகவும் மணிமேகலை வேறுபடுத்திக் காட்டுகிறது. ஆயினும் இரண்டும் ஒன்றுதான் ஆகும். பூதவாதம்-உலகாயதம் போலவே, எண்ணியம் எனப்படுகிற சாங்கியம், சிறப்பியம் எனப்படுகிற வைசேடிகம் ஆகியவற்றிற்கும் இடையேயும் இப்படிப்பட்ட வட இந்திய, தமிழிய முரண்பாடுகள் உண்டு. வட மரபில் சாங்கியம், வைசேடிகம் என்பன தமிழ் மரபில் முறையே எண்ணியம், சிறப்பியம் எனப்படுகின்றன. எண்ணியம் என்கிற சாங்கியம் தமிழ் மரபில் 24 உறுப்புகளைக் கொண்டதாகவும் - புருடன் பற்றிய எண்ணமற்றதாகவும் உள்ளது.
“ஒன்று புரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒருமுதுநூல்” -புறம்: 166.
எனப் புறநானூறு எண்ணியத்தின் மூலவடிவைப் பதிவு செய்துள்ளது. ஆனால் வடமரபில் 24 உறுப்புகளுடன் புருடன் என்கிற ஒன்று சேர்க்கப்பட்டு 25 உறுப்புகளை உடையதாக எண்ணியம் என்கிற சாங்கியம் உள்ளது. இந்தப் புருடன் இடைச்செருகலாக வடமரபில் இணைக்கப்பட்டதை சாரக சம்கிதை மிகத் தெளிவாக விளக்குகிறது. ‘எண்ணியத்தில் புருடன்’ எனும் தலைப்பில் ஆராய்ந்த தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்கள், புருடன் இடைச் செருகலே என்பதை உறுதி செய்துள்ளார்-(6).
மகாபாரதமும், புராணங்களும் சாங்கியத்தின் தொன்மையை மட்டுமின்றி ஆதிகாலத்தில் இத்தத்துவத்துக்கு இருந்த பிரமிக்கத்தக்க செல்வாக்கை, ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பிக்கவும் செய்கின்றன. இதன் தொன்மையும், உபநிடதங்களின் அடிப்படைகளுக்கு எதிரான இதன் தெளிவான பார்வையும் இதன் தொடக்கத்தை வேதகாலத்துக்கு முந்தைய ஆரியம் சாராத சிந்தனைத்தொகுப்பில் தேடவேண்டும் எனத் தற்கால அறிஞரில் சிலரைப்பேச வைக்கிறது. அது சரியே எனவும் கபிலர் சடப்பொருளின் இயல்பு, இயக்கம் ஆகியன குறித்துத் தனக்குக் கிடைத்த விபரங்கள் அரைகுறையானவையே ஆயினும் அவற்றை முன்னிறுத்தி, அதன் இயல்புக்கும், இயங்குநிலைக்கும் வேறெந்த புறக்காரணியும் இருக்க முடியாது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். அதன் நாத்திகம் மிகத் தெளிவான அறிவியல் பார்வையால் அல்லது குறைந்த பட்சம் அறிவியல் கண்ணோட்டத்தின் முன்மாதிரியால் அமையப்பெற்றதாகும்-(7).
தத்துவச் சிந்தனையைத் தொட்டுப் பேசுகிற மகாபாரதம் முதல் மனுவின் சட்டநூல் ஈறாகவுள்ள எந்தவோர் இந்திய இலக்கியமும்- குறிப்பாகப் பழங்கதைகளும், வீர காவியங்களும், புராணங்களும்- சாங்கியக் கோட்பாடுகளின் தாக்கத்தைப் பெருமளவில் கொண்டுள்ளவையே எனக் கார்பே கூறுகிறார்-(8). சட்டோபாத்யாயா அவர்களின் கருத்துப்படி சாங்கியம் தொன்மையானதாகவும், மிகவும் புகழ் பெற்றதாகவும் இருந்தது; தெளிவான அறிவியல் கண்ணோட்டத்தைக் கொண்டதாகவும் இருந்தது; முக்கியமாக ஆரியம் சாராத சிந்தனைத் தொகுப்பைக் கொண்டதாக அது இருந்தது. ஆரியம் சாராத இந்தியச்சிந்தனை என்பது மூலச்சிறப்புடைய தமிழ் சிந்தனையே ஆகும்.
சிறப்பியம் - வைசேடிகம்:
எண்ணியம் எனப்படும் சாங்கியத்தில் போலவே சிறப்பியம் எனப்படும் வைசேடிகத்திலும் முரண்பாடு உண்டு. இன்மையை (NEGATION) ஒரு பொருளாகக் கருதி பொருண்மை ஏழு என்பது தமிழியம்.
“பொருள்குணம் கருமம் பொதுச்சிறப் பொற்றுமை
இன்மையுடன்பொருள் ஏழென மொழிப” -என்கிறது 20 குறட்பாக்களைக் கொண்ட ‘அகத்தியத் தருக்க நூற்பா’ என்கிற தமிழ்த் தத்துவக் குறுநூல். வட மரபில் இன்மை நீங்கலாகப் பொருள்கள் ஆறே என்பர். வடமரபைப் பின்பற்றிய மணிமேகலையும் நீலகேசியும் பொருள்களை ஆறாகவே வகைப் படுத்துகின்றன.
இதற்கான அடிப்படைக்காரணம் தமிழ் மரபு மூலவடிவத்திற்கும், அறிவியல் நோக்கிற்கும் சான்றாக இருப்பதுதான் ஆகும். அதே சமயம் வடமரபோ தமிழிலிருந்து கடன்பெற்றும், தமிழ் மரபின் அறிவியல் நோக்கை மறுக்கின்ற அல்லது திரிக்கின்ற வகையிலும் உள்ளது. இந்த எடுத்துக் காட்டுகள் தமிழர் மெய்யியல்கள் எவ்வாறு அறிவியலோடு தொடர்பு கொண்டுள்ளன என்பதுடன் மூலவடிவங்களாகவும் திகழ்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இவை எண்ணியம், சிறப்பியம் ஆகியவற்றில் உள்ள வடஇந்திய-தமிழ் மரபிற்கிடையுள்ள முரண்பாடுகள் ஆகும்-(9).
ஐந்திரம்:
தொல்காப்பியப் பாயிரத்தில் தொல்காப்பியரை, ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனப் பனம்பாரனார் போற்றுகிறார்; ‘அவதான சாதகத்தில்’ புத்தனின் முதன்மைச்சீடன் சாரிபுத்தன் தென்னாட்டில் ஐந்திரம் கற்றான் எனக் கூறப்பட்டுள்ளது; அநுமன் ஐந்திரக் கல்வியில் தேர்ந்தவன் எனக் கம்பர் சுட்டிக் காட்டுகிறார். ‘ஆன்வீக்சி’ என்பதைச் சாணக்கியர் அவர்கள் எண்ணியம், யோகம், உலகாயதம் ஆகிய மூன்று கோட்பாடுகளின் பொதுப்பெயராகவே கருதுகிறார். ஆன்வீக்சியை வேதங்களைவிட மேலான கல்வி முறையாகக் குறிக்கும் சாணக்கியரைப் போலவே கம்பரும் ஐந்திரத்தை வேதங்களைவிட மேலானதாகச் சுட்டிக் காட்டுகிறார்.
எண்ணியம், யோகம், உலகாயதம் ஆகிய மூன்று கோட்பாடுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. அதன் காரணமாகவே அவை ஒரே பொதுப்பெயரால் வழங்கப்பட்டுள்ளன. தொல்காப்பியர் ஐந்திரம் நிறைந்தவர் எனப் போற்றப்படுவதாலும், ஆன்வீக்சிக்குச் சொல்லப்படும் அனைத்து வகையான விளக்கங்களும் (எண்ணியம், யோகம், உலகாயதம் ஆகிய மூன்று கோட்பாடுகளும்), தருக்கவியல் கூறுகள்-தந்திர உத்தி முதலான அனைத்துச் செய்திகளும் தொல்காப்பியத்தில் மட்டுமே முழுமையாக இடம் பெற்றிருப்பதாலும் ஐந்திரம் என்பதன் நேரடி மொழிபெயர்ப்புதான் ஆன்வீக்சி என்பது தெளிவாகிறது-(10).
வேதங்களைவிட மேலான கல்வி முறையாக ஆன்வீக்சியை சாணக்கியரும், அதுபோன்றே வேதக் கல்வியைவிட மேலானதாக ஐந்திரத்தைக் கம்பரும் சுட்டிக்காட்டியுள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலானதாக வேதங்களைக் கருதும் நிலையில் சாணக்கியனும், கம்பனும் வேதங்களைவிட மேலானதாக ஒன்றைச் சொல்லியுள்ளனர். ஆதலால் அவர்கள் இருவரும் குறிப்பிட்டது வெவ்வேறானதல்ல ஒன்றேதான் என முடிவுகட்டலாம். அதன் அடிப்படையிலும் தமிழியத்தின் ஐந்திரம் என்பதன் வடமொழி வடிவம்தான் ஆன்வீக்சி என உறுதி செய்யலாம்.
ஓகம்-யோகம்:
சாரக சம்கிதை யோகம் எனக்குறிப்பது ஐந்திரம் அல்லது ஆன்வீக்சியில் உள்ள சாங்கியம், யோகம், உலகாயதம் எனும் கோட்பாடுகளில் இருக்கும் யோகம் ஆகும். அதனை இன்றைய யோகம் பற்றிய கருத்தில் எடுத்துக்கொள்ளமுடியாது. பண்டைய யோகம் என்பது உடற்பயிற்சி, தவநிலையில் நின்று மூச்சுப்பயிற்சி மேற்கொண்டு மனதை ஒருமுகப்படுத்துதல் ஆகிய இன்றைய கருத்திலான பயிற்சி முறை அல்ல. பண்டைய யோகம் என்பது ஒரு மெய்யியல் பள்ளி எனவும், வைசேடிகம் எனப்படும் சிறப்பியலும், நியாயவியல் எனப்படும் அளவையியலும் பிரிந்து தனித்தனி மெய்யியல் கிளைகளாக ஆவதற்கு முன் இரண்டும் ஒன்றாக இருந்த நிலையில் வழங்கப்பட்ட பெயரே யோகம் எனவும் கூறுகிறார் சட்டோபாத்யாயா அவர்கள். ஆகவே ஐந்திரம் அல்லது ஆன்வீக்சியில் குறிப்பிடப்படும் யோகம் என்பது சிறப்பியலும், அளவையியலும் இணந்த ஒரு மெய்யியல் பள்ளியாகும்-(11). ஆகவே ஐந்திரம் என்பது எண்ணியம், யோகம், சிறப்பியம், அளவையியல், உலகாயதம் ஆகியவற்றைக் கொண்டதாகும்.
ஐந்திரம் - தொல்காப்பியம்:
பகுத்தறிவையும், காரணகாரியக் கோட்பாட்டையும், தருக்கவியலையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் அறிவுப்பள்ளியாகவே ஐந்திரம் திகழ்ந்துள்ளது. இவ்வறிவு மரபின் சுவடுகள் தொlல்காப்பியத்திலும், வடமொழியில் மருத்துவத்துறை சார்ந்த சாரக சம்கிதையிலும் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு நூல்களுக்கும் இடையே இந்த அடிப்படையில் காணப்படும் ஒற்றுமை மிக முக்கியமானதாகும். சாரக சம்கிதை, கி.மு. 6ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டு, கி.பி. முதல் நூற்றாண்டில் சமற்கிருத நூலாக வடிவம் பெற்றுள்ளது. இதன் மூலநூலின் மொழி தெரியவில்லை.
இந்திய மெய்யியல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை எண்ணியம், யோகம், உலகாயதம் ஆகிய மூன்றும் பொதுவான அளவை முறைகளைக்கொண்டிருந்தன. அம்மூன்றையும் சேர்த்து ‘அறிவு ஆராய்ச்சியியல்’ எனும் பொருளில் ஆன்வீக்சி என வடமொழியில் வழங்கினர். தமிழ் ஐந்திரத்தின் வடமொழி வடிவம்தான் ஆன்வீக்சி ஆகும். சாரக சம்கிதை எண்ணியத்தின் பெயரைச்சுட்டியும், சுட்டாமலும் எண்ணியக் கோட்பாட்டை விரிவாகக் கூறிச்செல்கிறது.
. தொல்காப்பியமோ ஓரிடத்தில்கூட எண்ணியத்தையோ, அல்லது யோக-உலகாயதத்தையோ பெயர்சொல்லிச் சுட்டவில்லை. ஆனால் இந்திய மெய்யியல் ஆராய்ச்சி அறிஞர்கள், குறிப்பாகப் பொருள்முதல்வாதச் சிந்தனையாளர்கள் மூலச்சாங்கியத்திற்கும், தொடக்க காலச்சிறப்பியத்திற்கும், யோக, உலகாயத மெய்யியல்களுக்கும் சேர்ந்தவை எனக் கருதுகிற
படிமுறைக்கோட்பாடு(THEORY OF EVOLUTION)
அண்டவியல்(ஐம்பூதக்) கோட்பாடு(THEORY OF UNIVERSE)
அளவை இயல் கோபாடு(THEORY OF REASONING & LOGIC)
காரண – காரியக் கோட்பாடு(THEORY OF CAUSE & EFFECT)
இன்பவியல் கோட்பாடு(THEORY OF HEDONISM)
ஆகிய அறிவியல் துறைகளைத் தொல்காப்பியம் விரிவாகவும் செறிவாகவும் கூறிச்செல்கிறது-(12). இவைகளின் காரணமாகத்தான் பனம்பாரனார் தொல்காப்பியரை, ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ எனக் கூறினார் எனலாம். எண்ணியம், யோகம், உலகாயதம் ஆகிய மூன்றையும் கொண்ட ஐந்திரம் என்கிற தமிழ் ஆராய்ச்சியியல் கல்வி முறையைக் கற்றுத் தேர்ந்தவர் தொல்காப்பியர் என்பதால்தான் அவர் ஐந்திரம் நிறைந்தவராகக் கருதப்பட்டார்.
தமிழ் அகத்திணை மரபு:
தொல்காப்பியத்தில் சொல்லப்படும் படிமுறைக்கோட்பாடு முதல், இன்பவியல் கோட்பாடு வரையுள்ள மெய்யியல் கூறுகளே சங்க இலக்கியத்தின் மெய்யியல் ஆகும். அளவையியல் எனப்படும் தருக்கவியலை அடிப்படையாகக் கொண்டு மெய்யியல்கள் கூறுகள் நிலை நாட்டப்பட்டன. அளவையியல் முறைகள் காட்சி அளவையில் தொடங்கின. தமிழ் அகத்திணை மரபுகளை – அளவையியலின் இலக்கிய வடிவமாகத் தமிழர்கள் அமைத்தனர். அகத்திணை மரபு என்பது,
எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான மர்ந்து வரூஉம் மேவற் றாகும் -தொல்.பொருளதிகாரம்-219.
என்கிற தொல்காப்பிய இலக்கணப்படி அமைந்த இன்பியற் கோட்பாடாகும். இவ்வின்பியற் கோட்பாடு, அடிப்படையில் கடவுள் மறுப்பையும் ஓர் அங்கமாகக் கொண்டதாகும். வள்ளுவரின்
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணா னுலகு -காமத்துப்பால், 1103.
எனும் குறள் அதற்குச் சான்றாகிறது. “தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் தூக்கத்திற்குத் தாமரைக்கண்ணனான திருமாலின் உலகம் ஈடாகுமா?” எனக் கடவுளின் உலகத்தை அடைவதைவிட காதலியின் மெல்லிய தோள்களில் தூங்கும் இன்பம் உயர்ந்தது எனக் கூறுவதன் மூலம் கடவுள் மறுப்பைக் கொண்டுள்ளது. சங்க இலக்கிய மெய்யியல் என்பது பகுத்தறிவு சான்றதும், மனித நேயம் மிக்கதும், அறிவியல் கோட்பாடுகள் நிறைந்ததும், மனித வாழ்வின் இன்ப நுகர்விற்குச் சிறப்பிடம் அளிப்பதும், அறம், பொருள், இன்பம் என்னும் வாழ்வியற் கோட்பாடுகளை வற்புறுத்துவதுமான ஓர் உன்னத நெறியாகும்-(13).
ஆசிவகத் தரவுகள்:
வைதீக எதிர்ப்பும் கடவுள் மறுப்பும் உள்ளீடாக அமைந்த தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் ஆகியவற்றில் உள்ள பல பாடல்கள் ஒரு குறிப்பிட்ட காலம்வரை ஐந்திரம் மரபைச் சார்ந்தனவாக உளளன. கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்குப்பின்னர் பாடப்பட்ட சங்க இலக்கியப்பாடல்கள் பெரும்பான்மை ஐந்திர மரபின் வழிவந்த ஆசீவக நெறியைச் சார்ந்த புலவர்களால் பாடப்பட்டனவாக உள்ளன. சிலப்பதிகாரம் ஆசிவகத்தின் இயல்பு-தற்செயல்-ஊழ் ஆகிய மூன்று கோட்பாடுகளுக்கும் முறையே கோவலன்-மாதவி-கண்ணகி ஆகியோரைக் குறியீடாகக் கொண்டு அமைந்த ஆசிவகக் காப்பியம் ஆகும். கி.மு. 6ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தோன்றிய ஆசிவகம் சமய வடிவம் பெற்றிருந்த போதிலும் அதன் உள்ளீடு அறிவியல் கோட்பாடுகளையும், வைதீக எதிர்ப்பையும் கொண்டிருந்தது.
பௌத்தத்தைத் தழுவிய மௌரிய அரசன் அசோகன் ஆசிவகத் துறவிகளுக்குக் கற்படுக்கைகள் அமைத்துக் கொடுத்தான். அசோகனின் பெயரன் ஆசிவகச் சமயத்தைத் தழுவினான். தமிழக மூவேந்தர்களில் பலர் ஆசிவகச் சமயத்தைத் தழுவியவர்களாகவும், புரந்தோர்களாகவும் திகழ்ந்துள்ளனர். ஏ.எல். பாசம் என்கிற ஆசுத்துரேலியர் பாலி-பாகத-சமற்கிருத-மாகதி ஆகிய நூல்களிலுள்ள பௌத்த சைன இலக்கியங்களில் இருந்து பரபக்கமாக-மாற்றார் கூற்றாகக் காணப்படும் ஆசிவகம் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். அவர்தம் ஆய்வில் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் இறுதிக்குப்பின்னர் குறிப்பாக மௌரிய ஆட்சிக்குப்பின்னர் வட நாட்டில் ஆசிவகம் தனது செல்வாக்கை இழந்து விட்டது. ஆயினும் தமிழகத்தைப் பொறுத்த மட்டில் கி.பி. 14ஆம் நூற்றாண்டுவரை செல்வாக்கோடு இருந்துள்ளது எனவும் தென்னக ஆசிவகத்தில் பக்குடுக்கை நன் கணியாரின் பங்கு மகத்தானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிவகக்கோட்பாடு குறித்துச் சிம்மர் அவர்கள் “ஆரியருக்கு முற்பட்ட ஒரு சிந்தனை மரபின் இயற்கை அறிவியல்-உளவியல் ஆகியவற்றின் தொடர்ச்சியில் கிளைத்ததாகும். நமக்குக் கிடைத்துள்ள சான்றுகளைக் கொண்டு மதிப்பிடுகின்ற போது, இயற்கையை - இயற்கை உலகைப்பற்றி - மிக உன்னதமாகவும், மிகமிக உயர்ந்த வகையிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் தொகுப்பாக இக்கோட்பாடு அமைந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது-(14). ஆசிவகத்தில் பல பூதவாதக் கூறுகள் உள்ளன எனவும் ஆயினும் முற்றிலும் இதனைப் பூதவாதமாகக் கருதுவதற்கில்லை எனவும் வானமாமலை அவர்கள் கூறுவதை முன்பே குறிப்பிட்டோம்.
கபிலர்(சாங்கியம்):
இந்நூலின் முதல் தொகுதியில் கபிலர் தமிழர் தான் என்பதற்கு கார்பே அவர்களின் கூற்றுக்கள் கொண்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பௌதாயண தரும சூத்திரம் எனும் சமற்கிருத நூல் இவரை அசுரர் என்கிறது. 24 எண்ணிக்கைகளைக்கொண்ட ஓர் அறிவு மரபை இவர் உருவாக்கினார். தமிழர் அதனை எண்ணியம் என்றனர். எண்களை அடிப்படையாகக் கொண்ட இதன் வடமொழி வடிவம்தான் சாங்கியம் ஆகும். 166ஆம் புறநானூற்றுப்பாடல் இவரை முதுமுதல்வன் என்கிறது(வரி: 1-9).
‘நன்று ஆய்ந்த நீள்நிமிர்சடை முதுமுதல்வன் வாய்போகாது
ஒன்றுபுரிந்த ஈரிரண்டின், ஆறுணர்ந்த ஒருமுதுநூல்........
மூவேழ் துறையும் முட்டின்று போகிய உரைசால் சிறப்பி னுரவோர் மருக”
இப்பாடலில் உள்ள “ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒரு முதுநூல்” என்பதற்கு இந்நூல் 24 கூறுகளை விளக்கும் ஒரு மிகத் தொன்மையான நூல் எனப் பொருளாகும். இப்பாடலில் இடம்பெற்றுள்ள ‘மூவேழ்துறை’ என்பதற்கு 21 கூறுபட்ட தருக்க நூலெனப் பழைய உரை குறிக்கிறது. எண்ணிய மெய்யியல் முழுமையான ஒரு அறிவியல் கோட்பாடு என்பதால், அம்மெய்யியலில் தருக்கவியல்கோட்பாடுகளும் இணைந்து நின்றன. காட்சி, உய்த்தறிவு, மேற்கோள் ஆகிய மூன்றும் இதன் மெய்ப்பொருளை நிலைநாட்டி உறுதிசெய்யும் அளவையியல் கூறுகளாக இருந்தன. தமிழ்நாட்டுக் கொற்றவைத் திருவிழாக்களில் ‘சாங்கியம் காட்டுதல்’ என்பது இன்றும் ஒரு கடவுள் மறுப்புச்சடங்காகவே நடந்து வருகிறது. நற்றிணைப் புலவரான தொல்கபிலர்தான் எண்ணியக் கோட்பாட்டின் மூலவர் ஆவார்-(15). திரு. வி. கிரபிவின் அவர்கள் ‘இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?’ என்கிற தனது இரசிய நூலில், “கபிலரால் தோற்றுவிக்கப்பட்ட சாங்கியத் தத்துவஞானக் கோட்பாடு உலகத்தைப் பொருளாயதத் தோற்றுவாயைக் கொண்டு விளக்கமளித்தது. அதன் பிரதிநிதிகள் உலகத்தை ஒரு பருப்பொருளாக, ஒரு ஆதாரப்பொருளிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றதாகக் கருதினார்கள். இயக்கம், வெளி எனும் விசும்பு, காலம் ஆகியவை பருப்பொருளின் கூறுகள், பருப்பொருளிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை என்ற கருத்தைச் சாங்கியச்சிந்தனை மரபு மொழிந்தது.
வி.கிரபிவின் அவர்கள், “இக்கருத்து புராதன இந்தியத் தத்துவஞானத்தின் ஒரு மூலச்சிறப்புள்ள சாதனையாகும். ......நியாயம் & வைசேடிகம் ஆகியவற்றின் தத்துவஞானச் சிந்தனை மரபு, அணு நிரந்தரமானது; உற்பத்தி செய்யவும் அழிக்கவும் முடியாதது; அனால் அணுக்களால் உருவாகின்ற பொருட்கள் மாற்றப்படக் கூடியவை, நிரந்தரமில்லாதவை, அழியக்கூடியவை என்று கூறின”-(16) என்கிறார். சாங்கிய மூலவரான தொல்கபிலரின் வழி வந்தவர்கள்தான் எண்ணியத்தையும், அணுவியலையும் வளர்த்தெடுத்த பக்குடுக்கை நன்கணியாரும், கணாதரும் ஆவர். இவர்கள் தமிழ்ச்சிந்தனை மரபின் வழிவந்தவர்கள். ஆகவே இவை மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபின் சாதனைகளாகும்.
வி. கிரபிவின், “இந்தியாவின் மிகப் புராதனமான பொருள்முதல்வாதத் தத்துவஞானப் போக்கு உலகாயதம் அல்லது சார்வாகர்களின் சிந்தனை மரபு ஆகும்....... சார்வாகர்களது பொருள்முதல்வாதம் அவர்களது நாத்திக வாதத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது...... சார்வாகர்கள் துன்பந்துயரங்களை முழுமையாக அகற்றமுடியாது, மகிச்சிகரமான வாழ்க்கையை முடிந்தவரை அதிகரித்துத் துன்பதுயரங்களை அதிகபட்சமாகக் குறைத்துவிடலாம் எனக்கருதினர். அவர்களது அறநெறிக்கோட்பாடு புலனின்ப மகிழ்ச்சியைத்தேடுவதைத் தூண்டவில்லை; அனைவருக்கும் இன்பம் நிறைந்த வாழ்க்கையே விவேகமானதென்று வலியுறுத்தியது” என்கிறார்-(17). இக்கருத்துக்கள் பக்குடுக்கை நன்கணியாரின் புறம் 194ஆம் பாடலில் உள்ளவைதான் ஆகும். இப்பாடல் சாங்கியக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. ஆதலால் சார்வாகர்கள் சாங்கியக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் தங்களது தத்துவார்த்தக் கருத்தை வடிவமைத்துக் கொண்டார்கள் எனலாம்.
புறம் 166ஆம் பாடலைப்பாடியவர் ஆவூர் மூலங்கிழார் ஆவார். இவர் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டாகும். இவர் ஒரு பார்ப்பனனைப் பாடியுள்ளார். அந்தப்பார்ப்பனன் க. நெடுஞ்செழியன் அவர்கள் தரும் தரவுகளின்படி சாங்கியப் பற்றாளனாக இருந்துள்ளான். எண்ணியத்தின் 24 கூறுகளையும், தருக்கவியலின் 21 துறைகளையும் உடைய ஒரு முதுநூல் எனச் சொல்லப்படும் தொல்கபிலனின் நூலைக் கற்றுத்தேர்ந்த புகழ்மிக்க அறிவு மரபின் வழிவந்தவன் இந்தப் பார்ப்பான் என்கிறார் புலவர். இந்த விண்ணந்தாயன் மட்டுமல்ல இவனது மரபைச் சார்ந்த முன்னோர்களும் சாங்கியப் பற்றாளர்களாகவே இருந்துள்ளனர் என்கிறார் புலவர்.
பார்ப்பனனைப் பற்றி இந்த ஒரே ஒரு தனிப்பாடல் மட்டுமே புறநானூற்றில் உள்ளது. அந்தப் பார்ப்பனனும் அவனது முன்னோர்களும் வைதீக மரபுக்கு முற்றிலும் எதிரான பொருள்முதல்வாத அறிவியல் மரபான தமிழியச் சாங்கிய மரபைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். ஆதலால் சங்ககாலப் பார்ப்பனன் என்பவன் தமிழ் மரபைச் சேர்ந்தவன் என்றே கருத இயலும். இவனது பெயரான கௌணியன் விண்ணந்தாயன் என்பதில் உள்ள கௌணியன் என்பது உண்மையானது தானா? என ஆய்வது அவசியம். கணியன் என்பது கௌணியன் என திருத்தப் பட்டிருக்கலாம். அது உண்மையாயின் பல குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். நியாய சூத்திரத்தின் ஆசிரியர் கோதமர், கவுதமர், கௌதமர் எனப்பலவாறாகச் சொல்லப்படுகிறார். அதுபோன்றே இங்கு பார்ப்பனன் என்பதால் கணியன் என்பது கௌணியன் என்கிற பிராமணியக் கோத்திரப் பெயராக மாற்றப்பட்டிருக்கலாம்.
- தொடரும்.
- கணியன் பாலன், ஈரோடு
பார்வை:
1.க. நெடுஞ்செழியன்,சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும், மனிதம் பதிப்பகம், 2.10.2009, பக்:8-12.
2. “ “ பக்:17.
3. “ “ பக்:22.
4. “ “ பக்:7.
5. “ “ பக்: 24, 25, 29.
6. Devi Prasad Chattobadhyaya, Lokayata, p.51.
7. தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, இந்திய நாத்திகம், தமிழில் சாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர் 2013, பக்: 79, 87.
8. “ “ பக்: 78.
9. “ “ பக்: 26-29.
10. “ “ பக்: 31-32.
11.தமிழர் இயங்கியல்-தொல்காப்பியமும், சரகசம்கிதையும், நெடுஞ்செழியன், 2009, பாலம் பதிப்பகம், பக்:18.
12. “ “ பக்: 33, 34.
13. “ “ பக்: 34-36.
14.க. நெடுஞ்செழியன், ஆசிவகம் என்னும் தமிழர் அணுவியம், மனிதம் பதிப்பகம், டிசம்பர்-2002, பக்: 1.
15.க. நெடுஞ்செழியன், சங்க இலக்கியக் கோட்பாடுகளும், சமய வடிவங்களும், பதிப்பாசிரியர்-இரா. சக்குபாய், மனிதம் பதிப்பகம், 2-10-2009, பக்:67-69.
16.வி. கிரபிவின், இரசிய நூல், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, பக்:45,46.
17. “ “ பக்: 44, 45.