மனிதர்கள் ஒவ்வொருவரும் எதற்குப் பயப்படுகின்றார்களோ இல்லையோ நிச்சயமாக மரணத்திற்குப் பயப்படுவார்கள். அந்த மரணபயம்தான் பல வீரர்களை கோழைகளாகவும், நேர்மையானவர்களை அயோக்கியர்களாகவும், கொள்கையாளர்களைப் பிழைப்புவாதிகளாகவும் மாற்றியிருக்கின்றது. ஆனால் மரணத்தைப் பற்றி பயமற்றவர்கள் வரலாற்றில் தனக்கான இடத்தை உறுதியாக பிடித்துக் கொள்கின்றார்கள். மாவீரன் திப்புசுல்தான் வீரனோடு வீரனாக களத்திலே போராடி இறந்துகிடந்தான். அவனது மரணம் ஏகாதிபத்திய கும்பினி அரசுக்கு அடிமையாக இருந்த இந்திய மன்னர்களின் முகத்தில் காறித் துப்பியது. வீர பாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, தீரன் சின்னமலை, பகத்சிங் என்று நம்மால் நிறைய மனிதர்களை வரலாற்றில் இருந்து எடுத்துக்காட்ட முடியும். இவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்கள். அந்த மக்களின் உயிரைவிட தன்னுடைய உயிர் பெரிதல்ல என்று துச்சமாக நினைத்து அதை ஏகாதிபத்திய எதிர்ப்பில் பணயம் வைத்தார்கள். இறுதியில் வீரமரணம் அடைந்தார்கள். அப்படி இல்லை என்றால் அவர்களைப் பற்றி இன்று பேசவேண்டிய எந்த அவசியமும் நமக்குக் கிடையாது.
வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்வது இதைத்தான். ஒரு சாதாரண பிழைப்புவாதியாக வாழ்ந்து, பிழைப்புவாதியாகவே செத்துப்போன பல மனிதர்களின் மரணம் அவர்களின் புதைகுழியோடு முடிந்துவிடுகின்றது. ஆனால் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி புரட்சி ஒன்றையே தனது கொள்கையாக கொண்டு இந்தியாவில் வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராகவும், ரஷ்யாவில் ஜாரின் சர்வாதிகாரத்துக்கு எதிராகவும், சீனாவில் நிலப்பிரபுத்துவ கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகவும் போரிட்டு மாண்ட இலட்சோப லட்ச மக்கள் இன்றும் வரலாற்றில் நினைவு கூரப்படுகின்றார்கள்.
அப்படி நினைவு கூர்வதால் நாம் நம்மை மக்களின் தோழனாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளனாகவும், குறைந்த பட்சம் தன்னைச் சுற்றி நடக்கும் அநீதிகளுக்கு எதிராகப் போராடும் சுரணையுள்ள ஒரு மனிதனாகவேணும் நம்மை மாற்றிக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் இந்த வீர மனிதர்களின் வரலாறு நமக்கு வெறும் கதைதான். வெட்டிக் கதைகள் ஒரு போதும் வரலாற்றை உருவாக்குவது கிடையாது.
ஆனால் சில அரசியல் தலைவர்கள் வெட்டிக்கதைகளைப் பேசியே தமக்கான வரலாற்றை உருவாக்கப் பார்க்கின்றர்கள். அதிலும் குறிப்பாக வைகோ அவர்கள். நான் சிறுவயதாக இருந்தபோது வைகோ அவர்களின் பேச்சை திறந்தவாய் மூடாமல் கேட்டிருக்கின்றேன். அப்போதெல்லாம் இந்திய சமூகத்தில் புரட்சியை ஏற்படுத்தும் திறமையுள்ள ஒரே மனிதர் வைகோ தான் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். என்ன ஒரு பேச்சு. மைக்கே கிழிந்து, ஐயோ ஆள விடுடா சாமி என்று கத்திவிடும். மைக்கைப் பிடித்து தொண்டையை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தார் என்றால் அடை மழைதான். இரண்டுமணி நேரம் வேறு எதைப்பற்றியும் நாம் யோசிக்க மாட்டோம். இப்படி ஒரு அதிமேதாவியை தமிழகமக்கள் புறக்கணித்துவிட்டார்களே என்று தமிழக மக்களுக்கு சாபம் விடத்தோன்றும். அப்படி ஒரு பிம்பத்தை எனக்குள் வைகோ உருவாக்கி வைத்திருந்தார். அதுவும் ஜெயலலிதா அவரை பொடாவில் தூக்கி உள்ளே போட்டபோது ரட்சகன் பட நகார்ஜூனா போல நரம்புகள் எல்லாம் புடைத்துக்கொண்டு வந்தது.
ஆனால் காலம் அனைத்து உண்மைகளையும் எனக்குப் புரியவைத்தது. அடுத்துவந்த தேர்தலில் வைகோ, சகோதரி என்று ஜெயலலிதாவைப் புகழ்ந்தார். பொடாவிலே தூக்கிப்போட்ட ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வாசலில் சீட்டுகளுக்காக காத்துக்கிடந்தார். எனக்கு சுளீர் என்று இருந்தது. இவரையா புரட்சிக்காரன் என்று நினைத்துக்கொண்டு இருந்தோம் என்று எனக்கு நானே காறித் துப்பிக் கொண்டேன். பின்னாட்களில் வைகோ கொள்கையே இல்லாத பேர்வழி என்று நன்றாகத் தெரிந்துகொண்டேன். நல்லவேளையாக கட்சி உறுப்பினராக நான் எப்போதும் சேரவில்லை.
2009 ஆம் ஆண்டு மே 17 அன்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நந்திக்கடல் முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவத்தால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சில இணையதளங்கள் அதற்கான வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டு இருந்தன. பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மைதான் என சிங்கள அரசும் ஒத்துக்கொண்டது. போரை வழிநடத்திய இந்திய அரசும் ஒத்துக்கொண்டது. ஆனால் பிரபாகரனை தம்பி என்றும், அண்ணன் என்றும் சொல்லி தமிழகத்தில் அரசியல் நடத்திக் கொண்டிருந்த சீமான், பழ.நெடுமாறன், வைகோ போன்றவர்கள் 'அவர் உயிரோடுதான் இருக்கின்றார். விரைவில் திரும்பிவந்து போரைத் தொடங்குவார்' என்று சோதிடம் சொன்னார்கள். சரி பிரபாகரன் மீது இருந்த பாசத்தால் இப்படி உளறுகின்றார்கள் என்று முதலில் நினைத்தோம். ஆனால் இவர்களது நோக்கம் பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்று சொல்லி தனக்கு தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இருந்த ஈழ ஆதரவு ஓட்டுவங்கியைக் காப்பாற்றிக் கொள்ளவே, இவர்கள் செத்துப்போன பிரபாகரனை இன்னும் உயிரோடு வைத்திருக்கின்றார்கள் என்று உறுதியாகத் தெரிந்தது.
அதிலும் வைகோ அவர்கள் போன இடமெல்லாம் தம்பி வருவார், தம்பி வருவார் என்று நம்பிக்கையோடு சொல்லிக்கொண்டே இருந்தார். பின்னாட்களில் இலங்கையில் தேர்தல் நடைபெற்று அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்தவுடன், தனது சுருதியை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டார். விக்னேஸ்வரன் தமிழக ஈழ ஆதரவாளர்களை வாயை மூடிக்கொண்டு சும்மா இருங்கள் என்று சொல்லும் நிலைக்கு அவரை வைகோவும், சீமானும் தள்ளினார்கள்.
ஈழத்தில் இறுதிகட்டப் போர் நடந்தபோது, பாஜக ஆட்சிக்கு வந்தால் நிலை மாறும் என்று பிரபாகரனுக்குத் தப்பான வழிகாட்டுதல் கொடுத்து லட்சக்கணக்கான தமிழ்மக்களின் சாவுக்குக் காரணமான பழநெடுமாறன், வைகோ போன்றவர்கள் தான் இன்றும் வெட்கமே இல்லாமால் பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்று அரசியல் செய்து வருகின்றார்கள்.
இப்போது பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்று சொன்னால் ஈழத்தமிழ் மக்களே வைகோவை சும்மா விடமாட்டார்கள் என்பதால் பிரபாகரனை விட்டுவிட்டு நேதாஜியை கையில் எடுத்திருக்கின்றார்.
நேதாஜி இன்னும் உயிரோடு இருப்பதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அந்த ஆதாரங்களை விரைவில் வெளியிட்டு அனைவரின் முகத்திரையையும் கிழிக்கப் போவதாகவும் மதுரை ஓபுளாபடித்துறையில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியிருக்கின்றார். கொஞ்ச நாளுக்கு முன்னால் லால்பகதூர் சாஸ்திரி பற்றி ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்களே சொல்லுங்க.. ஜனவரி 23, 1897-ல் பிறந்த நேதாஜி இன்னும் உயிரோடு இருக்கின்றார் என்று சொன்னால் என்னை என்ன என்று நீங்கள் சொல்வீர்கள். கணக்குப்படி பார்த்தால் இன்று நேதாஜிக்கு 118 வயதாகி இருக்க வேண்டும்!. நேதாஜின் மரணம் பற்றிய ஆவணங்களைக் கேட்டால் கூட அதில் ஒரு நியாயம் இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால் நேதாஜி உயிரோடு இருக்கின்றார் என்று சொல்லி அதுவும் மதுரையில் போய் சொல்லி இருக்கின்றார் என்றால் அவரின் அரசியல் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளலாம்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பான்மையாக உள்ள தேவர் சாதி ஓட்டுக்களைப் பெறுவதற்காகவே வைகோ இந்த புதுக்கரடியைத் தேர்தல் சமயத்தில் விட்டிருக்கின்றார். வைகோவுக்கு எல்லாமே தேர்தல்தான். அவர் பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்று சொன்னாலும், தேர்தலை புறக்கணிக்கின்றேன் என்று சொன்னாலும், மதுவிலக்கு என்று சொன்னாலும், நேதாஜி உயிரோடு இருக்கின்றார் என்று சொன்னாலும் எல்லாமே தேர்தலை மனதில் வைத்துத்தான். இந்த ஓட்டு சீட்டு ஒரு மனிதனை என்ன என்னவெல்லாம் செய்யச் சொல்கின்றது என்று பாருங்கள். உயிரோடு இருப்பவனை சாகடிக்கின்றது. செத்துப்போனவனை உயிர்ப்பிழைக்க வைக்கின்றது. இன்னும் என்ன என்னவெல்லாம் செய்யப் போகின்றதோ. பொறுத்திருந்து பார்ப்போம்.
- செ.கார்கி