Manmohan singh and Jayalalithaகாவிரியில் தமிழகத்தின் பங்கும் உரிமையும் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. வழக்குத் தொடுத்தோம் நியாமும் கிடைக்க வில்லை, நீரும் கிடைக்கவில்லை. விலக்கிப் பார்த்தோம் ஏமாளியானோம். உண்ணாவிரதமிருந்தோம் பட்டினி கிடந்ததுதான் மிச்சம். போராட்டம் நடத்தினோம் போலீஸ் அடித்தது! காலில் விழுந்தோம் ஆணையம் வந்தது. ஆணையம் கூடித் தீர்ப்பு அளித்தது. செய்தி வந்தது; தண்ணீர் வரவில்லை. கலைஞர் மீது குற்றம் சாற்றினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்குக் கண்டனம் தெரிவித்தன எதிர்க்கட்சிகள்.

ஜெயலலிதாவின் அலட்சியப் போக்குதான் காவிரி நீரைக் கிடைக்க விடாமல் செய்து விட்டது என்கின்றன எதிர்க்கட்சிகள். தமிழக முதல்வர் கர்னாடகம் சென்று காலில் விழுந்து தொழுது அழுதால் காவிரி வந்துவிடுமா? ஜெயலலிதா ஒரு கட்சியின் தலைவர் மாத்திரமல்ல அவர் தமிழக முதல்வர். அவர் உரிமைக்காகப் போராடலாமே தவிர, கெஞ்ச வேண்டும் பணிந்து மன்றாட வேண்டும் என்பது கர்னாடகத்தின் அராஜகத்தை உற்சாகப்படுத்தும் நடவடிக்கையே!

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தி.மு.க. கூட்டணி ஒரு நாளிலும், முதல்வர் மறுநாளிலும் கோரிக்கை வைக்கிறார்கள். பிரதமர் உடனே கர்னாடக முதல்வருடன் பேசுகிறேன் என்கிறார். ஆய்வுக்குழு அனுப்பப்படுகிறது. அறிக்கை தயாரித்து அளிக்கப்படுகிறது. விறுவிறுப்பான நாடகம்தான். காவிரியில் தமிழகத்துக்கு உரிமை உண்டா இல்லையா? முடிவே தெரியவில்லை. கடைசியில் அடைமழை கொட்டுகிறது. தனது அணைகளைக் காப்பதற்காக வேறு வழியில்லாமல் தண்ணீரைத் திறந்து விடுகிறது கர்னாடகம். காவிரிப் பிரச்னை மறந்து விடுகிறது.

இது என்ன பித்தலாட்டம்?

காவிரியில் தமிழகத்தின் உரிமை - பங்கு பற்றி நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். ஒன்று. எல்லைகள் மறு சீரமைக்கப்பட வேண்டும். குடகு தமிழ் நாட்டுடன் சேர்க்கப் படவேண்டும். கேரள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு எல்லைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இரண்டு, இந்தியாவிலிருந்து கர்னாடகம் விலக்கப்படவேண்டும் அல்லது தமிழ்நாடு தனியே பிரிந்து விடவேண்டும்.

பாகிஸ்தானுக்கோ, வங்கத்துக்கோ தண்ணீர் விடமுடியாது என்று இந்தியா மறுக்க முடியாது. ஈராணும் ஈராக்கும் தனி நாடுகளாக இருப்பதால்தான் தண்ணீர் குறித்து தாவா எதுவும் இல்லை. மாநில எல்லை மறுசீரமைப்பு; அல்லது இந்தியக் கட்டமைப்பில் மறுசீரமைப்பு. இரண்டில் ஒன்றுதான் காவிரிப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். நதிகளை ஒருங்கிணைப்பது என்பது ஏமாற்றுவதற்கும், தமிழகத்தை மேலும் வஞ்சிப்பதற்கும் பயன்படும்.

- ஆனாரூனா

(தமிழ்ச் சான்றோர் பேரவை செய்திமடல் - ஆகஸ்ட் இதழிலிருந்து)

Pin It