
அதே நேரத்தில் கொல்லப்பட்ட இளைஞரின் அண்ணன் ஒரு கோடாரியை எடுத்து வேறொரு பக்கமுள்ள கதவை உடைத்துக் கொண்டு தம்பியின் மனைவி கதறும் அறைக்குள் நுழைகிறான். அதே வேகத்தில் பயங்கரவாதிகளின் தலைவனின் தலையில் கோடாரியால் ஓங்கி வெட்டுகிறான். தலை வெளியே வந்து விழுகிறது. தலைவனின் தலை தனியே வந்து விழுந்ததைக் கண்ட பயங்கரவாதிகள் அதிர்ச்சியுடன் அங்கிருந்து ஓடி மறைகிறார்கள்.
இது கடந்த வாரம் காஷ்மீரில் நடந்தது.
பயங்கரவாதிகள், இந்திய போலீஸ் - இராணுவத்துக்கு மாத்திரமல்ல பொது மக்களுக்கும் எதிராகவே இருக்கிறார்கள் என்பதும், காஷ்மீர் மக்கள் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடத் தயங்குவதில்லை என்பதும் இம்மாதிரியான நிகழ்ச்சிகளின் மூலம் நன்றாகவே தெரிகிறது. மக்களே பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடும் போது, ராணுவ நடவடிக்கையும் இருக்கும்போது, பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவது எளிதுதானே?
ஆம், ஆனால் காஷ்மீர் மக்கள் பயங்கரவாதிகளை மாத்திரமல்ல இந்திய ராணுவத்தையும் போலீஸ் படையையும்தான் வெறுக்கிறார்கள். “போலீசும் ராணுவமும் மக்களின் பாதுகாப்புக்காக’’ என்று அரசுகளும் அரசு சார்ந்த அறிவாளிகளும் எத்தனை சத்தியம் பண்ணினாலும் உண்மையைத் தரிசிக்கும் மக்கள் ஒருபோதும் அதை நம்புவதில்லை.
சீருடை, தடி, துப்பாக்கி, யாரையும் மிரட்டும் அதிகாரம், அதோடு சம்பளம் கிடைக்கும்போது, `உத்தரவுக்குக் கீழ்ப்படி’ என்று மாத்திரமே பயிற்றுவிக்கப்பட்ட போலீஸ் - இராணுவ உயிரினங்களால் மனிதராய் நடந்து கொள்ள முடிவதில்லை. போலீசுக்கும் இராணுவத்துக்கும் ஆளெடுக்கும் போது உடல் தகுதிகள் மாத்திரமே கவனிக்கப்படுகின்றன. அவன் யோக்கியனா, மனித இதயம் அவனுக்குள் இருக்கிறதா என்று யாரும் கவலைப்படுவதில்லை.
பெற்றோர் - உறவினர்களின் அன்பைப் பெற முடியாதவர்களும், விரக்தியடைந்தவர்களும், சிந்திக்க முடியாதவர்களும், பாமரர்களும், பிறர் உணர்வை மதிக்காதவர்களுமே பெரும்பாலும் போலீஸ் - இராணுவ வேலைகளுக்குத் தயாராகிறார்கள். தனக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத சக மனிதனை யாரோ ஓர் அதிகாரி `அடி’ என்றால் அடிப்பதும், `சுடு’ என்றால் சுடுவதும் சிந்திக்கத் தெரிந்தவனால் முடிகிற காரியம் இல்லை. இதற்குத் தயாராகிறவன் இது ஒரு சேவை என்பதற்காக இராணுவத்தில் சேருவதில்லை. அது தொழில். சம்பாதிப்பதற்கு ஒரு வழி. அவ்வளவுதான். இம்மாதிரியான உயிரினங்களைக் கொண்ட ஒரு படையால் மக்களை எப்படி நேசிக்க முடியும்?
அடிப்படையில் பயங்கரவாதிக்கும் அரசாங்க அடியாளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. யாரையும் அச்சுறுத்துவதில் இவ்விருவருக்குமே உற்சாகம். பயங்கரவாதத்தை ஒடுக்கவும் ஒழிக்கவும் முடியாமற் போவதற்கு போலீஸ் இராணுவத்தின் குணாம்சங்கள் மாத்திரம்தான் காரணமா? இல்லை! எல்லாவற்றுக்கும் மேலாக அரசின் பயங்கர முகம்தான் காரணம். பயங்கரவாத நடவடிக்கை இல்லாமல் ஓர் அரசால் நீடித்திருக்க முடியாது.
பயங்கரவாதம் நீடிப்பதற்குப் பயங்கரவாதமே மூல காரணம்!
ஒரு போலீஸ்காரனின் குறிப்பேட்டிலிருந்து
தொழிலாளர்களின் போராட்டமென்றால் அது வெறும் கூலிப் போராட்டமாகத்தான் இருக்கும் என்று ஆத்மா எண்ணிக் கொண்டிருந்தான். அது தவறு என்று இப்போது புரிந்தது. தொழிலாளர்கள் தங்களது கூலிக்காகவும் சில சலுகைகளுக்காகவும் மட்டுமே போராடவில்லை. அவர்கள் நடத்துவது கொள்கைப் போராட்டம். கொடுமைகளுக்கு எதிரான அரசியல் போராட்டம். எங்கே விலங்குகளும் வேதனையும் ஒலிக்கிறதோ, எங்கே வாழ்க்கை மிதியுண்டு மடிகிறதோ, எங்கே மானுடம் மதிப்பற்றுப் போகிறதோ அங்கெல்லாம் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்யும் போராட்டம். விடுதலையின் பூரணத்துவத்தை நோக்கி மனித குலத்தை வழி நடத்தும் போராட்டம்.
ஆத்மா அதைக் கண்ணெதிரே கண்டான். தொழிலாளியின் கரங்கள் விடுதலை பெறும்போது பூமியின் முகமே அழகு பெற்றுத் திகழும் என்று தோன்றியது. திடீரென்று ஓர் உணர்வு. ஒரு போலீஸ்காரன் இப்படியெல்லாம் சிந்திக்கலாமா? ஆத்மாவுக்குத் தனது தொழில் நினைவுக்கு வந்தது. அவனது தொழில் தர்மம் சொன்னது:
``சிந்திக்காதே!’’
உருகாதே!
மூளையும் இதயமும் உனக்குத் தேவையற்றவை.
நீ மனிதனல்ல;
போலீஸ்காரன்!
பயிற்சியளிக்கப்பட்ட மிருகம்.
சீருடையணிந்த அடிமை.
அரசாங்க ரௌடி.
உனக்கு எதிரிலிருப்பவனும் மனிதனல்ல; குற்றவாளி.
மனித உணர்வுகளையும் உறவுகளையும் மறந்துவிடு.
உன் நினைவில் இருக்க வேண்டியது உனது பெயர் கூட அல்ல; போலீஸ் எண்!

உத்தரவுக்குக் கீழ்ப்படி!
காதைக் கவனமாக வைத்திரு.
ஒரு விசில் சத்தம், அல்லது உத்தரவு.
கேட்டதும் குதறு, கடி, பாய்ந்து கிழி!
சுடு; சூறையாடு!
மலர், குழந்தை
இசை, தத்துவம்,
தாய், தந்தை என்று உனக்கு எதுவும் கிடையாது.
அனைத்தையும் தரை மட்டமாக்கு.
இப்போது,
சட்டம் ஒழுங்கைப் பராமரித்தவன் என்கிற தகுதியைப் பெறுகிறாய்!
எத்தனை தலைகளைக் கொய்தாய் என்பதைப் பொறுத்து உனது தகுதி தீர்மானிக்கப்படும்.
இந்த வீரத்துக்காக உனக்குச் சில சலுகைகளும் உண்டு.
உனது இச்சைகளையும் வக்கிரங்களையும் தீர்த்துக் கொள்ளலாம்.
தலைகாய்த்தவனிடம் தட்டிப் பறிக்கலாம்.
அகப்பட்ட ஆடு கோழிகளைத் தின்று குடிக்கலாம்.
கேளிக்கை விடுதிகளில் திரியாதே. உன்னிடம் அதிகாரம் இல்லையா?
விரும்பிய பெண் உன்னைப்போலவே சீருடை அணிந்த இன்னொருவனின் மனைவியா?
கவலைப்படாதே!
ஏ சாமர்த்தியமுள்ள நாயே, அரசாங்கத்துக்கு நீ செய்த சேவையை அது மறந்துவிடுமா?
இந்த அற்ப விஷயங்களை அது மூடி மறைத்துவிடும்.
ஒரு வேளை உன்னால் பாதிக்கப்பட்ட போலீஸ்காரனே உன்னை முச்சந்தியில் போட்டு மிதித்தால்...?
மடையா, செத்துப்போன அடிமைகள் இனி அரசாங்கத்துச் சேவை செய்ய முடியுமா?
அரசாங்கம் உனது இடத்தில் உன்னைக் கொன்றவனைப் போடும். வேண்டுமென்றால்
தீவிரவாதிகள் மீது பழியைப் போட்டுவிட்ட உன்னை மரியாதையுடன் அடக்கம் செய்யும்...’’
தனது தொழில் தர்மத்தை நினைக்க நினைக்க அவனுக்கு அசிங்கமாகவும் அருவெறுப்பாகவும் இருந்தது. சீ, இதுவும் ஒரு தொழிலா? இதுதான் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கப் போகிறதா? என்று யோசித்தான்.
"ஆத்மா என்றொரு தெருப்பாடகன்’’ என்னும் நூலிலிருந்து
- ஆனாரூனா
(தமிழ்ச் சான்றோர் பேரவை செய்திமடல் - ஆகஸ்ட் இதழிலிருந்து)