காவிரி நடுவர் மன்றம் என்ற ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்று முதன் முதலாகத் தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்தபோதுதான் 17-.2-.1970 அன்றே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டது.

நடுவர் மன்றம் அமைத்திட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தி.மு. கழக ஆட்சியிலேதான் 8-.7.-1971 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

karunanidhi 222தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போதுதான், 27-.7.-1989 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்று, நடுவர் மன்றம் அமைக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. தவிர அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

திரு. வி.பி.சிங் அவர்கள் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, நடுவர் மன்றம் அமைக்கக் கோரி கடிதம் எழுதினேன். பேரவையிலே அதைப்பற்றித் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றி அனுப்புமாறு வி.பி. சிங் அவர்கள் என்னிடம் தெரிவித்ததின் பேரில், 24-.4.-1990 அன்று நடுவர் மன்றம் தேவை என்று பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் விளைவாகத் தான் 2-.6-.1990 அன்று நடுவர் மன்றம் அதுவும் தி.மு. கழக ஆட்சியிலே, நான் முதலமைச்சராக இருந்தபோதுதான் அமைந்தது.

28.-7.-1990இல் கழக ஆட்சியில்தான் இடைக் காலத் தீர்ப்பினைக் கோரி நடுவர் மன்றத்தில் மனு செய்தோம்

5-.1-.1991 அன்று இடைக்காலத் தீர்ப்பு வழங்கிடத் தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நடுவர் மன்றம் கூறியது.

நடுவர் மன்றத்துக்கு அதிகாரம் உண்டா இல்லையா என்று தீர்ப்பளியுங்கள் என்று உச்சநீதிமன்றத்தில் 10-.1-.1991 அன்று தி.மு. கழக ஆட்சியிலே வழக்குத் தொடர்ந்து,

26-.4-.1991 அன்று உச்சநீதிமன்றம் "அதிகாரம் உண்டு" என்று தீர்ப்பு வழங்கியது.

கழக ஆட்சியில் கோரிப் பெற்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாகவே 25.-6.-1991இல் நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பினை அளித்தது.

இதற்கிடையில் தான் 31.-1.-1991 அன்று கழக ஆட்சி கலைக்கப்பட்டு, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவரது ஆட்சிக் காலத்தில் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளிவந்த போதிலும், எந்தவிதமான விளைவுகளும் ஏற்படவில்லை. 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா ஆட்சியில் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற எந்தவிதமான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.

1996ஆம் ஆண்டு மீண்டும் தி.மு. கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, நடுவர் மன்றத்தின் ஆணையைச் செயல்படுத்துவதில் தாமதத்தைத் தவிர்க்கும் வண்ணம், திட்டத்தை இறுதி செய்து அரசிதழில் வெளியிட வேண்டுமென்று 9.-7.-1997, 23.-7-.1997, 29.-9.-1997, 1-.11.-1997, 6-.11.-1997 ஆகிய நாட்களில் பிரதமருக்கு நான் எழுதிய கடிதங்கள் மூலமாகவும், 27.-7.-1997 மற்றும் 29.-9.-1997 ஆகிய நாட்களில் பிரதமரை நேரில் சந்தித்த போதும் கேட்டுக் கொண்டேன். மேலும் 10-.11-.1997 அன்று மத்திய அரசுக்கு அப்படியொரு ஆணை பிறப்பிக்க உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனு ஒன்றும் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது

மீண்டும் 28.-3.-1998, 6-.4-.1998 மற்றும் 31.-5.-1998 ஆகிய நாட்களில் பிரதமருக்குக் கடிதம் மூலமாகவும், 7.-4.-1998 அன்று நேரிலும் சந்தித்து, வரைவுத் திட்டத்தை இறுதி செய்து அரசிதழில் வெளியிடக் கேட்டுக் கொண்டேன்.

21.-7.-1998 அன்று உச்சநீதிமன்றம், "பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்கப் போவதாக மத்திய அரசு உறுதியளித்து, 15 மாதமாகிறது. இன்னமும் இணக்கமான திட்டம் உருவாக்கப்பட வில்லை. இந்த நிலை நீடித்துக் கொண்டே போவதை அனுமதிக்க முடியாது" என்று தெரிவித்தது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், 28-.7.-1998 அன்று பிரதமர் வாஜ்பாய் அவர்கள், 6-.8.-1998 அன்று பிரதமர் அலுவலகத்தில் காவிரிப் பிரச்சினை பற்றிப் பேசுவதற்காக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் என்னைக் கலந்து கொள்ளக் கடிதம் எழுதியிருந்தார்.

அதிலே கலந்து கொள்வது பற்றி 3-.8.-1998 அன்று தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, பிரதமர் நடத்தவிருந்த கூட்டத்தில் நான் கலந்து கொள்ள லாம் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா அந்தக் கூட்டத்திற்கு நான் செல்லக் கூடாது என்று அறிக்கை விடுத்தார்.

பிரதமர் வாஜ்பாய் அவர்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடத்திய அந்தக் கூட்டத்தின் இறுதியில் தான், 7-.8.-1998இல் தி.மு. கழக ஆட்சியில் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின்படி இடைக்கால ஆணையில் கூறப்பட்ட 205 டி.எம்.சி. தண்ணீர் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், பிரதமர் தலைமையில் காவிரி பாயும் நான்கு மாநில முதல்வர்கள் அடங்கிய காவிரி ஆணையம் அமைக்கப்படும் என்றும் முடிவாயிற்று. அந்த ஒப்பந்தத்தை சி. சுப்பிரமணியம், ஜி.கே. மூப்பனார், சங்கரய்யா, ஆர். நல்லகண்ணு, அப்துல் சமது, எம்.ஏ. லத்தீப், குமரிஅனந்தன், திண்டிவனம் ராமமூர்த்தி, ஆர்.எம். வீரப்பன், ஜி.ஏ. வடிவேலு, இல. கணேசன், எஸ். திருநாவுக்கரசு, பேராயர் எஸ்றா சற்குணம் போன்ற தலைவர்களும் மற்றும் ஏடுகள் இந்து, எக்ஸ்பிரஸ், தினமணி, விடுதலை, தீக்கதிர், தி டைம்ஸ் ஆப் இந்தியா, தி இந்துஸ்தான் டைம்ஸ் ஆகிய நாளேடுகளும் கல்கி, குமுதம், சாவி, துக்ளக், ஆனந்தவிகடன், குங்குமம் ஆகிய கிழமை இதழ்களும் பாராட்டின. இதுதான் உண்மையில் நடந்த வரலாறு.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தத்தை அனைத்துக் கட்சித் தலைவர்களும், ஏடுகளும் பாராட்டிய போது ஜெயலலிதா அதனை வரவேற்றாரா என்றால் இல்லை. மாறாக அந்தத் தீர்வினை நிராகரிக்கிறோம் என்றும், அதனை ஏற்கமாட்டோம் என்றும் கூறினார். அந்த முடிவு காண வழி வகுத்தவர், பா.ஜ.க. பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய். அப்போது அவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்தார். இருந்தாலும், அந்தக் கூட்டணியிலே இல்லாத தி.மு.க.வின் தலைவனான என்னை அழைத்து சுமூக முடிவு கண்டார். ஆனால் மத்திய அரசில் இடம் பெற்ற அ.தி.மு.க. தலைவி அந்த ஒப்பந்தம் பற்றிப் பத்திரிகையாளர்களிடம் என்ன கூறினார் தெரியுமா? "காவிரிப் பிரச்சினையில் வாஜ்பாய், கருணாநிதியின் தந்திரத்திற்கு ஆளாகி விட்டார். இரண்டு பேரும் சேர்ந்து செய்து கொண்டிருக்கின்ற உடன்பாட்டை நாங்கள் நிராகரிக்கிறோம்"என்றார்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தி.மு. கழக ஆட்சியிலேதான் 5-.2.-2007 அன்று வெளியிடப்பட்டது.

இந்தத் தீர்ப்பினை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த எம். கிருஷ்ணசாமி, திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் ரெங்கநாதன், உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில் கே.எஸ். நடராசன் ஆகியோர் அப்போது வரவேற்று அறிக்கை கொடுத்தனர். ஏற்க முடியாது என்ற ஜெ. அ.தி.மு.க.வின் சார்பில் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் இறுதித் தீர்ப்பை "ஏற்க முடியாத தீர்ப்பு" என்றும், "கருணாநிதியால் காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றத்தின் மூலம் தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தீர்ப்பை முழுமையாகப் பெற்றுத் தர முடியவில்லை. இந்த இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்குப் பாதகமாக வந்துள்ளது. இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று தி.மு.க. அரசு ராஜினாமா செய்ய வேண்டும்" என்றும் எப்போதும் போல எனது ராஜினாமாவை வலியுறுத்தி அறிக்கை விடுத்தார்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்தபோது கூட, தி.மு.கழக அரசு அந்த நிலையிலும், இந்த இறுதித் தீர்ப்பு குறித்து ஜெயலலிதாவைப் போலத் தன்னிச்சையாக முடிவெடுக்க விரும்பாமல், 19.-2-.2007 அன்றும் 15-.4.-2007 அன்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டித்தான் முடிவெடுத்தது.

காவிரி நதி நீர் ஆணையம் ( அமைக்கப்பட்டு, 11-.8.-1998 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2-.4.-2002 அன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா, ""செயல்படாத ஆணையம் காவேரி ஆணையம்", "பல் இல்லாத ஆணையம்"", அந்த ஆணையத்தை ஏற்காமல் நாங்கள் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறினோம்"" என்று சொன்னார்.

21-.6-.2002 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் "எவ்வித அதிகாரமும் இல்லாமல், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைத் திறம்படச் செயல்படுத்த இயலாத நிலையில் காவிரி நதி நீர் ஆணையம் உள்ளது. எனவே இந்த ஆணையத்தின் கூட்டங்களில் இனிமேல் தமிழ்நாடு கலந்து கொள்ளாது" என்று விளைவுகளைப் பற்றி விரிவாக எண்ணிப் பார்க்காமல் கொண்டதே கோலம் என்ற பாணியில் முடிவெடுத்து அறிவித்தார். அ.தி.மு.க. அரசின் இந்த அமைச்சரவை முடிவினைப் பற்றி என்னிடம் கருத்துக் கேட்ட போது, "ஆணையத்தைப் புறக்கணிக்க ஜெயலலிதா அரசு எடுத்த முடிவு, விவேகமானதல்ல. குறுவை நெல் பயிரிடுவதற்குத் தேவையான தண்ணீரைப் பெறுவதற்கு மத்திய அரசின் தலையீட்டையும் உதவியையும் பெற அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும். தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளை எல்லாம் மாற்றும் போக்குதான் அ.தி.மு.க. அரசில் மேலோங்கி நிற்கிறது. காவிரிப் பாசனப் பகுதிக்கு, உரிய நேரத்தில் நீர் கிடைக்க முயற்சி மேற்கொண் டது தி.மு.க. ஆட்சிக் காலம். ஆணையக் கூட்டத்துக்குச் செல்ல மாட்டேன் என்பது அ.தி.மு.க. ஆட்சிக் காலம்" என்று நான் கூறினேன்.

காவிரி ஆணையத்தைப் புறக்கணிப்புச் செய்தார் ஜெயலலிதா. 2-.7.-2002 அன்று காவிரி டெல்டா விவசாயிகள், ஜெயலலிதாவின் புறக் கணிப்புக்காகக் கண்டனம் தெரிவித்து 17-.7.-2002 அன்று உண்ணாநோன்பு என அறிவித்திருந்தனர். அதற்கு முன்பே 10.-7.-2002 அன்று கர்நாடக முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, "காவிரியில் தண்ணீர் திறந்துவிட என்னிடம் ஜெயலலிதா கூறவில்லை. பிரதமர் வாஜ்பாய்தான் 3 டி.எம்.சி. நீர் திறந்து விடச் சொன்னார்" என்று தெரிவித்தார்.

காவிரி ஆணையத்தைப் புறக்கணிப்போம் என்று 2002ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் தெரிவித்தவர்தான் ஜெயலலிதா. அதற்கடுத்த நாள் "அழைத்தால் பார்க்கலாம்" என்றார். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நான் ஆட்சியிலே இல்லாத நேரத்திலேகூட, 5-.7-.2002 அன்று பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்குக் காவிரி நதி நீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டுமென்று கோரிக் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில், "தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்ற காவிரி நடுவர் மன்ற உத்தரவைக் கண்காணிப்பதற்காகவே தங்களது (பிரதமரது) தலைமையில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல் அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டு காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது.

ஆனால், நடுவர் மன்ற ஆணையின்படி தண்ணீர் திறந்து விடப்படாததால், காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மிகுந்த துயருக்குள்ளாகியுள்ளனர். காவிரிப் பாசன விவசாயிகளின் இந்தத் துயரத்தை உணர்ந்து, பிரச்சினை ஓரளவேனும் குறைக்கப்பட தமிழகத்திற்கு 3 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்து விடும்படி கர்நாடக முதலமைச்சரை தாங்கள் கேட்டுக் கொண்டதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், தாங்கள் விடுத்த அந்தக் கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்க மறுத்துள்ளது. எனவே, காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தை விரைவில் கூட்டி நடுவர் மன்ற உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தங்களை வேண்டுகிறேன்"" என்று எழுதியிருந்தேன். 5.-7.-2002 அன்று பிரதமருக்கு காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டுமென்று நான் எழுதிய கடிதத்திற்கு, 10-.7-.2002 அன்று பிரதமர் எழுதிய பதில் கடிதத்தில், அதைப் பற்றிக் கவனிப்பதாகக் கூறியிருந்தார். அவ்வாறே காவிரி நதி நீர் ஆணையம் கூட்டப்பட்டது.

டெல்லியில் பிரதமர் கலந்து கொண்ட காவிரி ஆணையக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்ட போதே 27.-8.-2002 அன்று அங்கே சுமூகமாகப் பேசித் தண்ணீரைப் பெறுவதற்கான வழிவகை காணாமல், அவருக்கே உள்ள முன் கோபம் காரணமாகப் பிரச்சினையின் அவசர முக்கியத்துவத்தை மறந்து, இடையிலே வெளி நடப்புச் செய்வதாகக் கூறிவிட்டு, வெளியே வந்து விட்டார். 29-.11-.2002 அன்று மீண்டும் காவிரி ஆணையக் கூட்டம்.

கர்நாடக முதல் அமைச்சர் முதல் நாளே சென்று விட்டார். ஆனால் நம்முடைய முதல் அமைச்சர் ஜெயலலிதா கடைசி நிமிடம் வரை வருவதாகச் சொல்லி விட்டு, பிறகு டெல்லிப் பயணத்தையே ரத்து செய்து விட்டார். யாருக்கு இழப்பு? தமிழ்நாட்டு விவசாயிகளுக்குத்தான்!

இதற்கிடையில் "பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதியது, கடுமையான ஆட்சேபத்துக்குரியது; அந்த அவதூறுக் கடிதத்தை நான்கு நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும்" என்று தமிழக அரசு வழக்கறிஞரிடம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக அரசின் வழக்கறிஞரான திரு. கே.கே.வேணுகோபால், நீதிபதிகளிடம், "பிரதமர் மீதும், அவரது தலைமையில் செயல்படும் காவிரி நதிநீர் ஆணையத்தின் மீதும் தமிழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. காவிரி நதி நீர் ஆணையத்தின் மீது நம்பிக்கை தெரிவித்தும், பிரதமர் வாஜ்பாய்க்கு இது தொடர்பாக எழுதிய கடிதத்தைத் திரும்பப் பெறுவதற்காகவும் மீண்டும் ஒரு கடிதத்தை வெகு விரைவில் பிரதமர் வாஜ்பாய்க்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதி அனுப்புவார்"" என்றும் தெரிவித்தார்.

அதற்கிணங்க, 16-.11-.2002 அன்று பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், "பிரதமர் மீது தனிப்பட்ட முறையில் தான் மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாகவும், ஏற்கனவே தான் சொன்ன அத்தனையையும் மறந்து விட்டு காவிரி ஆணையத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருப்பதாகவும்" எழுதியிருந்தார். 29.-11-.2002 அன்று காவிரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், ரத்து செய்தவர் ஜெயலலிதா. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது புரிகிறதா? காவிரிப் பிரச்சினையில் துரோகம் செய்தது யார் என்று?

நன்றி: மா.உமாபதி

Pin It