farmer dry land

உலகில் பெரிதும் வஞ்சிக்கப்பட்டது ஈழத்தமிழினம். அதுபோல இன்றைக்கு பெரிதும் வஞ்சிக்கப்பட்டு இருப்பவர்கள் தமிழக விவசாயிகள்.

ஈழத்தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை இயல்பாகவே இந்தியா ஆதரித்து இருக்கவேண்டும். ஈழத்தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள் வாழும் இந்தியா ஆதரிக்கவில்லை என்பதைவிட, அது எதிராக நின்றது.

இந்தியாவின் பகை நாடான பாகிஸ்தானாவது இந்தியாவுக்கு எதிரான நிலை எடுத்ததா என்றால், இல்லை.

இந்தியாவின் எதிரியான சீனாவாவது இந்தியாவின் நிலைக்கு எதிரான முடிவு எடுத்ததா என்றால், அதுவுமில்லை. சீனாவின் எதிரி நாடான அமெரிக்காவாவது தமிழர்களுக்கு ஆதரவாக வந்ததா என்றால் அதுவுமில்லை. ரஷ்யாவாவது அமெரிக்கவுக்கு எதிரான நிலை எடுத்ததா என்றால், அதுவும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவே இருந்தது.

ஆக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து ஈழத்தமிழர்களின் போராட்டத்தை வஞ்சித்தன, நசுக்கின.

அதுபோலவே இன்றைக்குத் தமிழக விவசாயிகளை மத்திய அரசு, மாநில அரசு, அண்டை மாநில அரசுகள், இயற்கை, மழை, இந்திய அரசியல், பொருளாதாரம் என்று அனைத்தும் வஞ்சித்து வருகின்றன.

வரலாற்றுக் காலம் முதல் காவிரி நீரில் தமிழ் நாட்டுக்கு உரிமை இருக்கிறது.

தமிழகத்திற்கு உரிமையுள்ள நீரைத் தராமல் கர்நாடக அரசு வஞ்சித்து வருகிறது.

உரிய காலத்தில் மழை பெய்யாமல் இயற்கையும் வஞ்சிக்கிறது.

காவிரி நீரைத் தமிழகத்திற்கு நியாயமாகப் பெற்றுத்தராமல், மத்திய அரசும் வஞ்சிக்கிறது. இப்படித் தமிழக விவசாயிகள் அனைவராலும், அனைத்து நிலைகளிலும் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்திற்கு உரிமையுள்ள நீரைக் கர்நாடக அரசு தராமல் மறுத்து வந்ததால், 1990இல் தமிழக முதல்வர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று அன்றைய பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் நடுவர் மன்றத்தை நிறுவினார்.

அந்த நடுவர் மன்றம் நீண்ட நெடிய விசாரணைக்குப் பிறகு, காவிரி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கினை நிர்ணயித்துத் தீர்ப்பு வழங்கியது.

கர்நாடக அரசு அத்தீர்ப்பினை மதித்து தமிழகத்திற்கு உரிய பங்கினை வழங்காததால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது.

உச்சநீதி மன்றமும் நியாயப்படியும், சட்டப்படியும் தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நீரைக் கர்நாடக அரசு வழங்கவேண்டும் என்றும் “வாழு, வாழவிடு” என்னும் தத்துவத்தின் படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. அத்தோடு நீர்ப் பங்கினைக் கண்காணிக்க ‘காவிரி மேலாண்மை வாரியத்தை’ அமைக்க மத்திய அரசுக்கு ஆணையிட்டது.

முதலில் அதற்கு ஒத்துக்கொண்டது மத்திய அரசு. பின்னர் சொத்தையான காரணங்களைக் கூறி அதைத் தள்ளிப்போட்டு வருகிறது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசைப் பொறுத்தவரையில், தமிழ் நாட்டில் அவர்கள் தலைகீழாய் நின்றாலும் தேர்தலில் கட்டுத் தொகையைக் கூட பெறமுடியாது என்பது அதற்குத் தெரியும்.

அதே சமயம் கர்நாடகத்தில் உரிய கூட்டணி அமைத்துப் போராடினால் ஆட்சியைக் கூட பிடிக்க முடியும் என்ற அரசியல் நோக்கம் கருதி கர்நாடகத்திற்குச் சார்பாக நடந்து வருகிறது.

காவிரி நீர் கிடைக்காவிட்டாலும், வடகிழக்குப் பருவ மழை கைகொடுக்கும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் பெரிதும் நம்பினார்கள்.

ஆனால் இம்முறையும் இயற்கை அவர்களை வஞ்சித்து விட்டது. போதிய மழையின்றிப் பயிர்கள் கருகிவிட்டன. விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததுடன், இந்தச் சம்பா போகத்திற்கு இடுபொருள் செலவுகளுக்காகக் கடன் வாங்கிச் செய்த செலவும் வீணாகியது கண்டு மனம் உடைந்து போயுள்ளனர்.

வருமானத்தை இழந்ததுடன் கடன்காரர்களுக்கு என்ன பதில் சொல்வது என்பதை அறியாமல் மனம் கொதித்து, நெஞ்சதிர்ச்சியாலும், மனம் உடைந்து, நஞ்சு அருந்தியும் மரணத்தைத் தழுவிவருகின்றனர்.

அவ்வாறு மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ நெருங்கிக் கொண்டுள்ளது.

விவசாயிகளின் இத்துயரச் சூழ்நிலையை உணர்ந்து, ஓடோடிச் சென்று அவர்களின் துயரைத் துடைக்க வேண்டிய கடமை தமிழக முதல்வருக்கும், அமைசரவைக்கும் உள்ளது. ஆனால் கடந்த செப்டம்பர் மாதத்தில் அன்றைய முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா உடல்நலமின்றி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரின் மந்திரிப் பிரதானிகள் அனைவரும் மக்களை மறந்து தங்கள் தலைவிக்காக பிராத்தனை, யாகம், வேள்வி, அலகு குத்தல், அங்கப்பிரதட்சணம், தேர் இழுத்தல், மண் பிரியாணி சாப்பிடுதல் என்று காலம் கடத்தினார்களே அன்றி, தமிழக விவசாயிகளை திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

அம்மையார் ஜெயலலிதா காலமானபின்னர் திரு ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றார்.

ஆனால் அவர் பதவி ஏற்றது முதல், திருமதி சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு அவருக்குக் கீழ் பணியாற்றும் அமைச்சர்கள் வலம் வருகின்றனரே அன்றி, விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் சற்றும் இடமளிப்பதாகத் தெரியவில்லை.

காவிரியும் மழையும் பொய்த்ததால்தான் மனம் உடைந்து மரணத்தைத் தழுவிய விவசாயிகளின் எண்ணிக்கை 100ஐக் கடந்து போய்க்கொண்டு இருப்பதைக் கண்டு, விவசாயிகளின் குறை கேட்க அமைச்சர்கள் இப்போது செல்கின்றனர்.

மழை பொய்த்த காரணத்தைக் கூறி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துக் கர்நாடக, கேரள அரசுகள் நிவாரண நிதியைப் பெற்றுக்கொண்டனர். ஆனால் தமிழக அரசும் அமைச்சர்களும் தமிழகத்தில் விவசாயிகள் விவசாயம் பொய்த்ததால் இறந்துள்ளதைப் பதிவு செய்யாததாலும், முறையாகக் கோரிக்கை வைக்காததாலும் நிவாரணத் தொகையைப் பெற விடாமல் வீணடித்து வருகின்றனர்.

 கொள்கை கோட்பாடுகளை, இலக்கியங்களை ஏற்று, பொது நலத்தோடு அரசியலில் பங்கேற்று தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர்களாகி அமைச்சர்களாகியிருந்தால் அவர்களுக்கு மக்களைக் காக்க வேண்டிய எண்ணமும், அக்கறையும் இருந்து இருக்கும்.

இவர்கள் காலஞ்சென்ற அம்மாவின் விசுவாசிகளாக, அடிமைகளாக, நல்ல நேரம், நல்ல காலம், ஜாதகப் பலன்களைப் பார்த்து, காசு பணத்தைக் காட்டி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர்களானவர்களிடம் சுய நலத்தைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

இவர்களுக்கு “சொன்னாலும் புரியாது மண்ணாளும் வித்தை”.

காவிரி நீர் முழுவதையும் தானே வைத்துக் கொண்ட கர்நாடக அரசு, மழை பெய்ய வில்லை என்று கூறி, வறட்சி மாநிலமாக அறிவித்து மத்திய அரசிடம் ரூபாய் 1200 கோடி நிவாரணத் தொகை வாங்குகிறது.

தண்ணீர் பெற முடியாமல், மாநிலத்தில் வறட்சி என்று மத்திய அரசிடம் அறிவிக்காமல், நிவாரணங்களைப் பெற்று விவசாயிகளுக்கு உதவத் திராணியற்றதாகத் தமிழக அரசு விளங்குகிறது.

இதைவிடக் கொடுமை, விவசாயிகளைப் பார்த்துக் குறைகேட்கச்சென்ற அ.தி.மு.க. அமைச்சர்கள் இறந்து போன விவசாயிகள் எல்லாம் முதுமையால் இறந்ததாகவும், குடும்பப் பிரச்சனைகளால் இறந்துபோனதாகவும் சொல்லி வெந்த புண்ணில் வேல்பாய்ச்சி வருகின்றனர்.

தி-.மு.கழகத்தின் செயல் தலைவரும், தமிழகச் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கவுரவம் பார்க்காமல் முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம் அவர்களைச் சந்தித்து உடனடியாகத் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கவும், சட்டமன்றத்தைக் கூட்டித் தீர்மானங்கள் நிறைவேற்றி மத்திய அரசை நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தவும், அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு வலியுறுத்த தி.மு.கழகத்திற்கு முழுத் தகுதி இருக்கிறது.

விவசாயிகள் தங்கள் விளை பொருள்களுக்குத் தாங்களே விலை நிர்ணயிக்கவும், கடைக்கோடிக் கிராமங்களில் இருந்து சுமைகூலியின்றிக் காய்கறிகளை நகர்புறங்களில் கொண்டு வந்து விற்பனை செய்யவும் உழவர் சந்தைத் திட்டத்தை கொண்டு வந்தது தி.மு.கழக அரசு.

இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய முதல் மாநிலம் தமிழகம் என்ற பெருமையைத்தக்கது தி.மு.கழக ஆட்சி.

விவசாயிகளின் கழுத்தை நெரித்த கடன் தொகை ரூபாய் 7000 கோடியைத் தள்ளுபடி செய்தது கலைஞர் அரசு.

அந்த அனுபவங்களின் அடிப்படையின் எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையினை ஏற்றுத் தமிழக அரசு &

* உடனடியாகச் சட்டமன்றத்தைக் கூட்டி விவாதித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நிவாரணத் தொகை பெற வேண்டும்.

* மரணமடைந்த விவசாயிகளின் குடும்பங்களுக்குக் கணிசமான இழப்பீடு வழங்கவேண்டும்.

* விவசாயம் பொய்த்துக் காய்ந்துபோன பயிர்களுக்கு உரிய இழப்பீட்டினை வழங்க வேண்டும்.

* தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்.

* வேலையின்றித் தவிக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்குக் குளம், குட்டைகள், ஏரிகள், கண்மாய்கள், பாசன வாய்க்கால்களைத் தூர்வாரி, ஆழப்படுத்தி சீர்படுத்தும் வேலைகளைத் தர வேண்டும். இதனால் அவர்களுக்கு ஓரளவு வருமானம் கிடைப்பதுடன் அடுத்து மழை பொழியும் போது, மழையைச் சேகரிக்கவும் முடியும்.

ஆவன செய்யுமா அ.தி.மு.க அரசு?

Pin It