admk sasikala banner

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்பதை பற்றித்தான் ஒரே பேச்சாக உள்ளது. சிலர் சசிகலா என்கின்றனர்; இன்னும் சிலரோ ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா என்கின்றனர். தீபாவை ஆதரிக்கும் அதிமுகவின் ஒரு பிரிவினர் ‘சின்னஅம்மா’ என்ற பெயருடன் வைக்கப்பட்ட சசிகலாவின் பேனர்களைக் கிழித்தும், சாணி அடித்தும், தார் பூசியும் தங்களது ஆத்திரத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர். அதே போல சசிகலா தான் கட்சிக்குத் தலைமை தாங்க வேண்டும் என விருப்பம் கொண்டிருக்கும் நபர்கள் ஜெயலலிதாவுடன் தீபா இருக்கும் பேனர்களைக் கிழித்து சேதப்படுத்தி வருகின்றனர். இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் ஏன் சசிகலாவையோ, இல்லை தீபாவையோ தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது பற்றி சில கருத்துக்களை வைத்திருக்கின்றார்கள். அதில் சசிகலாவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்பவர்கள் ‘சசிகலா ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகள் இருந்து அனைத்து செயல்களையும் அருகில் நின்று பார்த்தவர், அவருக்காகவே தனது வாழ்க்கையே தியாகம் செய்தவர், அவரது சொந்த கணவர் நடராஜனையே  நட்புக்காக ஒதுக்கி வைத்தவர், அப்படிப்பட்ட தியாகச் செம்மலாய் காட்சியளிக்கும் அவர்தான் ஜெயலலிதாவின் அடுத்த வாரிசு’ என உறுதியாகச் சொல்கின்றனர்.

அடுத்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரிப்பவர்கள் ‘தீபா பார்ப்பதற்கு ஜெயலலிதாவைப் போன்றே இருக்கின்றார் அவரைப் போன்றே பேசுகின்றார், சசிகலாதான் திட்டமிட்டே அம்மாவை சுலோ பாய்சன் வைத்துக் கொன்றுவிட்டார் (அப்படித்தான் மக்கள் பேசிக் கொள்கின்றார்கள்), எனவே தீபாதான் ஜெயலலிதாவின் அடுத்த அரசியல்வாரிசு’ என அவர்கள் அடித்துச் சொல்கின்றார்கள்.

     சசிகலாவை ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக என்ற கட்சியின் ஊடாக தங்களை வளப்படுத்திக் கொள்ள துடித்துக் கொண்டிருக்கும் அதன் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் குட்டி அதிகார வர்க்கத்தினர், அதிமுக என்ற கட்சியால் தனிப்பட்ட வகையில் பலன் அடைந்த  பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த குறிப்பாக தா.பாண்டியன், முத்தரசன், வைகோ, சீமான் போன்ற அரசியல்வாதிகள், அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்களைச் சேர்ந்த மாமா பயல்கள், பணம் கொடுத்து துணைவேந்தர் பதவியை விலைக்கு வாங்கிய விளக்கமாறுகள் உட்பட பல்வேறு நபர்கள் உள்ளனர். அதேபோல தீபாவை ஆதரிப்பவர்களில் பெரும்பாலான நபர்கள் அதிமுகவின் கடைமட்டத் தொண்டர்களாகவும் அந்தக் கட்சியால் எந்தவித பயனையும் அடையாத சாமானியத் தொண்டர்களாகவும் உள்ளனர். இவர்கள் ஜெயலலலிதா என்ற பிம்பத்துக்காக மட்டுமே தனது வாக்குகளை இதுநாள்வரை அளித்து வந்தவர்கள். இப்போது ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர்கள் ஜெயலலிதா போன்றே தோற்றம் கொண்ட தீபாவை விரும்புகின்றனர். அவர்களுக்குக் கொள்கை எல்லாம் தேவையில்லை. தம்மைக் கொள்ளையடிப்பதற்கு அதே போன்று தோற்றம் கொண்ட ஒரு முகம் மட்டுமே போதுமானதாக உள்ளது.

 சசிகலாவை ஆதரிப்பதற்குப் பிழைப்புவாதம் காரணம் என்றால், தீபாவை ஆதரிப்பதற்கு கவர்ச்சிவாதம், முட்டாள்தனமும் காரணமாக உள்ளது. எந்தவித மக்கள் போராட்டங்களிலும் பங்கெடுக்காத, அரசியல் அறிவற்ற, தமிழ்நாட்டு மக்களைக் கொள்ளையடித்து ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக மாறியிருக்கும் சசிகலாவை அவரது அடிமைகள் ஆதரிப்பதில் இருந்தே இவர்கள் அனைவரும் கூட்டுக் களவாணிகள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். திராவிட இயக்க சித்தாந்தத்திற்கும் சசிகலாவிற்கும் எள்ளவு சம்பந்தமும் இல்லாத போதும் கி. வீரமணி போன்றவர்கள் பி.ஜே.பியைக் காரணம் காட்டி சசிகலாவை ஆதரிப்பது என்பது கி.வீரமணி பெரியாரின் கொள்கைகளைத் துறந்து கொள்கை நிர்வாணியாய் இருப்பதையே காட்டுகின்றது. சசிகலா போன்ற கொள்ளைக்காரிகளை ஆதரிக்காமல் போனால், தமிழ்நாட்டில் பி.ஜே.பி வளர்ந்துவிடும் என்றால் கி.வீரமணி தி.கவை கலைத்துவிடலாமே! பிறகு அவருக்கு என்ன வேலை என்று தெரியவில்லை. ஒருவேளை தனக்கு சொத்துக்களை வளர்ப்பது, அதைக் காப்பாற்றுவது போன்ற முக்கிய கடமைகள் இருப்பதால் பி.ஜே.பியுடன் சண்டை போடவெல்லாம் தனக்கு நேரமில்லை என்று நினைத்து மிகச் சுலபமாக சசிகலாவை ஆதரிப்பதால் பிரச்சினை முடிந்துவிடும் என்று நினைத்திருக்கலாம்.

admk deepa poster

சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதைப் பற்றியோ, இல்லை வாய்ப்பு இருந்தால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவதைப் பற்றியோ தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல் கட்சிக்கும் பெரிய எதிர்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அதிமுக, திமுக என்ற இரண்டு கட்சிகளை மட்டுமே சுற்றி தமிழ்நாட்டு அரசியல் சுழன்று வருகின்றது. மற்ற கட்சிகள் அனைத்தும் அவற்றின் தொங்குசதைகளாகவே உள்ளன. அதிமுக என்ற கட்சி இல்லாமல் போகும் பட்சத்தில் இந்தத் தொங்குசதைகளுக்குத் தமிழ்நாட்டில் வேலையே இல்லாமல் போய்விடும். அந்தப் பயம்தான் இவர்களை சசிகலாவை ஆதரிக்க வைப்பது. அதுமட்டும் அல்லாமல் ஊழலிலும், கொள்ளையடிப்பதிலும், கொள்கையே இல்லாமல் கட்சி நடத்துவதிலும் இவர்கள் எந்த வகையிலும் அதிமுகவிற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.

 அதிமுகவை சசிகலாவின் தலைமையில் தக்க வைப்பதற்கு ஆதரிப்பதன் மூலம் அதை தேர்தல் நேரத்தில் அறுவடை செய்ய முடியும் என அவர்கள் நினைக்கின்றார்கள். சீமான் போன்ற முருக அடிமைகள் கொஞ்சம்கூட சூடு சுரணையே இல்லாமல் சசிகலாவை ஆர்.கே.நகர் தொகுதியில் நின்று வெற்றி பெற யோசனை சொல்கின்றார். அப்படி என்றால் அண்ணன் ஆர்.கே. நகர் தொகுதியில் நின்றால் மண்ணைக் கவ்விவிடுவோம் என்று முன்கூட்டியே முடிவு செய்துவிட்டது தெரிகின்றது. சீமானின் தம்பிகள் இதை நன்றாக கவனிக்க வேண்டும். அவர் பின்னால் போனால் உங்களையும் சசிகலாவிற்கு சொம்பு தூக்க வைத்துவிடுவார் பார்த்துக் கொள்ளுங்கள்.

  இப்படி அரசியல் கட்சித் தலைவர்களும், ஊடக விலைமாந்தர்களும், கருமம்பிடித்த கல்வியாளர்களும் யார் எப்படி நினைத்தால் என்ன தாங்கள் பொறுக்கித் தின்பதற்கு எந்த எல்லைக்கும் செல்வோம் என பகிரங்கமாகவே சசிகலாவை ஆதரிக்கின்றனர். ஜெயலலிதா என்ற பார்ப்பன பாசிஸ்ட்டை எந்தவித அரசியல் புரிதலும் இல்லாமல் ஆதரிக்கும் அதன் அடிமைகள் தீபாவையும் ஆதரிக்கின்றனர். யார் இந்த தீபா? இவருக்கும் தமிழக மக்களுக்கும் என்ன சம்பந்தம்? தமிழக மக்களின் நலன் சார்ந்த எத்தனை போராட்டங்களில் இவர் பங்கெடுத்து இருக்கின்றார்? குறைந்த பட்சம் அறிக்கையாவது வெளியிட்டு இருக்கின்றாரா? ஜெயலலிதா போன்றே தோற்றத்தில் இருக்கின்றார், மேலும் அவர் அவரது அண்ணன் மகளாக வேறு இருக்கின்றார் என்ற ஒரே காரணத்திற்காக ஆதரிப்பது என்பது எவ்வளவு பெரிய மானங்கெட்டதனம். தீபாவும் கொஞ்சம் கூட சூடு சுரணையே இல்லாமல் “மக்கள் ஆதரித்தால் அரசியலுக்கு வருவேன்” என்கின்றார். அதிமுகவில் இருப்பவர்களின் அரசியல் அறிவு என்பது இவ்வளவுதான். ஏற்கெனவே ஒரு புரட்சித் தலைவியை, பார்ப்பன பாசிஸ்ட்டை முதலமைச்சராக தேர்தெடுத்து நாசமாய்ப் போனது போதாது என்று இப்போது இன்னொரு பாப்பாத்தியை தேர்தெடுக்கப் பார்க்கின்றார்கள்.

 என்னைக் கேட்டால் அதிமுக என்ற கழிசடைக் கட்சி இருப்பதைவிட அழிந்து போவதே நல்லது என்பேன். அந்தக் கொள்ளைக்கூட்டத்தை இனியும் தமிழ்நாட்டில் வளர்த்து விட்டீர்கள் என்றால் சேகர்ரெட்டிகளும், ராமமோகன்ராவ்களும் அவர்களுக்குத் துணையாக இருந்த ஓ.பன்னீர்செல்வம்  உட்பட ஒட்டுமொத்த கொள்ளைக் கூட்டத்தையும் வளர்த்து விட்டதாகவே அர்த்தம். ஒரு தலைவன் என்பவன் மக்கள் போராட்டங்களின் ஊடாகவே உருவாக வேண்டுமே ஒழிய ஊழல் செய்வதாலும், கொள்ளையடிப்பதாலும், பொறுக்கித் தின்பதாலும், கூஜா தூக்குவதாலும், இதுபோன்ற கழிசடைகளுக்கு சொந்தங்களாகப் பிறப்பதாலும் உருவாக முடியாது. அதுபோன்றவர்களை எல்லாம் கூமுட்டைத்தனமாக தலைவன் என்று ஏற்றுக்கொண்டு, ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்ததால்தான் இன்று தமிழ் நாட்டு மக்கள் இவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகி இருக்கின்றார்கள். தமிழகத்தின் ஒட்டுமொத்த வளங்களையும் சூறையாடிய கொள்ளைக் கூட்டத்திற்கு யார் தலைமை தாங்குவது என்ற போட்டியில் சசிகலா வென்றாலும், தீபா வென்றாலும் அழிந்து போகப் போவது நாம்தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

- செ.கார்கி

Pin It