திருவள்ளுவருக்குக் காவி பூசிட முற்படுவோர் சாயம் வெளுத்திடும்

தமிழின் செவ்விலக்கியமாக விளங்கும் திருக்குறள் உலகளவில் இனம், மொழி, சமயம், நாடுகளின் எல்லைகள் கடந்த ஒரு பொது அறநெறி நூலாகத்தான், அவை சார்ந்த சான்றோர்கள், இலக்கிய ஆளுமைகள், பொது அறநெறிக் கோட்பாளர்கள் என அனைவராலும் ஒருமித்த தன்மையில் ஒட்டுமொத்த மானுடத்தின் போற்றுதலுக்குரிய, பெருமைக்குரிய அரும்பெரும் நூலாகக் கொள்ளப்பட்டு வருகிறது. அதைப் படைத்தவரான திருவள்ளுவர் பற்றியும் அவரின் மேற்சொன்ன இனம், மொழி, சமயம், நாடு தொடர்பான அவரது அடையாளம் பற்றியும் காலந்தோறும் பலரால் பல்வேறு கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன. இதில் ஒன்றைத்  தவிர அவரை மற்றவற்றின் அதாவது இனம், மொழி, நாடு ஆகியவற்றுடன் தொடர்புபடுத்துவதில் அய்யங்கள் எழ வாய்ப்பில்லை என்ற நிலைப்பாட்டை எடுக்கலாம்.

அவர் திராவிட தமிழ் இனத்தவர் தமிழர், தமிழ் நாட்டவர் என இவையெல்லாம் மண்சார்ந்த, மக்கள் மாண்பு சார்ந்த, பண்புகள் தொடர்பானவை. இவ்வாறு திருவள்ளுவரை அடையாளம் காண்பதில் நெருடல் ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆனால் முதன்மையாக ஒருவரை ஒரு நம்பிக்கை சார்ந்தவர் (சமயம் மறுத்தவர், இறை மறுத்தவர், இவை இரண்டு பற்றியும் கவலை யற்றவர், சிந்தனையற்றவர் என்பவற்றை உள்ளடக் கியது இச்சொல்) ஒரு சமய நம்பிக்கை அல்லது இறை நம்பிக்கை கொண்டவர் என்பது மட்டுமின்றி மேற் சொன்ன அடையாளங்களையெல்லாம் முற்றிலும் ஒதுக்கி வைத்து விட்டுத்தான் அவரால் கூறப்பட்டவற்றைக் கருத்திற் கொள்ள வேண்டும்; ஆய்வுக்குட்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் அவர் கருத்தை ஏற்பது, பொருட்படுத்தாமல் விட்டுவிடுவது அல்லது மறுப்பது என்பதைப் பிறர் தத்தம் அறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்து தெளிந்த முடிவுக்கு வர வேண்டும் என்பதைத்தான் வள்ளுவம் வலியுறுத்துகிறது.

திருவள்ளுவர் மொழிகிறார் :

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு”            (423)

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”            (355)

என அய்யம் திரிபுர அழகுபடி நெறிப்படுத்தி முன்வைத் துள்ளார் திருவள்ளுவர்.

இதேபோன்றுதான் திருவள்ளுவரின் சம காலத்த வராகக் கருதப்படும் உலகின் நிலப்பரப்பில், வேறொரு நிலப் பகுதியில் வரலாற்றின்படி வாழ்ந்தவரான புத்தர் இன்னும் வலிமையுடன் பதிவு செய்திருக்கிறார்.

யார் சொன்னார், அவர் யாராக இருப்பினும், என்ன சொன்னார் என்பதின் மெய்த்தன்மையை அவரவர் தத்தம் செறிவார்ந்த அறிவைக் கொண்டு ஆய்வுக்குட்படுத்தித் தமது அறிவுக்குச் சரி என்று பட்டதை ஏற்றுக் கொள்வதுதான் அறிவு நெறிப்பட்டது என்று மொழிவதுடன், அவ்வாறு சரியானது என்று கருதப்பட்டது நமக்கு நன்மை பயப்பது என்ற தன்மை யிலன்றி வெகுமக்களுக்கும் புரைதீர்த்த நன்மை பயப்பது என்ற கருத்துத் தான் முற்றும் முழுவதும் மெய்யானது, சரியானது என்று கொள்ளப்பட வேண்டும்.

இவ்விரு நிலைபாடுகளையும் தாண்டி, பெரியார் ஈ.வெ.இரா. இன்னும் ஒரு படி மேலே சென்று புத்தரும், வள்ளுவரும் பொது நிலையில் பொழிந்த கருத்துக்களைத் தன்னை முன்னிறுத்தி தான் வெளிப்படுத்தும் கருத்துக்களை எவ்வாறு மெய்யுணர வேண்டுமென்பதைத் திண்மையுடன் உரைக்கின்றார்.

ஈ.வெ.இரா. என்ற நான் என்ன பேசுகிறேன், என்ன கருத்து ரைக்கிறேன் என்பதை இவரே சொல்லிவிட்டார் என்று, என் போன்ற தனிமனிதனை ஏற்றி வைத்துச் சிந்திக்காமல், (அவர் சொற்பொழிவை கேட்போரைப் பார்த்து) சொல்லப்பட்டதைத் தத்தம் அறிவு கொண்டு ஆய்வுக்குட்படுத்தி அதன் அடிப்படை யில் அப்பொருள் மெய்மையை மட்டும் கருத்திற் கொள்ளுங்கள். அன்றேல் அதன் பகுதியையோ முழுவதையுமோ ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லது புறந்தள்ளுங்கள் என்கிறார். இதில் இன்னும் ஒரு படி மேல் சென்று, என் வாழ்நாள் தாண்டி 50 ஆண்டுகள் கழித்து ஈ.வெ.இரா. என்றொருவர் எதை எதையோ அறிவுக்கொவ்வாத கருத்துகளைச் சொல்லிச் சென்றுவிட்டார் என்று அவரவர் அறிவு ஆய்வுத் திறன் கொண்டு உரைப்ப hர்கள் எனில்-என் உயிர்க்கொள் கையான மனிதனின் தடையற்ற சிந்தனைக் கோட்பாடு வெற்றி பெற்றதாகக் கொள்வேன் எனச் சூளுரைத்துச் சென்றார் பெரியார் ஈ.வெ.இரா.

இந்தப் பின்னணியில், பெரியார் ஈ.வெ.இராவைப் புரிந்து கொள்ள முற்படுபவர்களால் மட்டுந்தான் அவர் தற்காலத்துக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னான வள்ளுவத்தின் மீது அவர் தம் பொதுவான கருத்துக்களையும் குறிப்பிட்ட குறள்கள் மீதான கருத்துகளையும் சீர்தூக்கி ஆய்வுக்குட்படுத்த முடியும். அன்றி பொத்தாம் பொதுவாக வள்ளுவத்தைச் சாடிவிட்டார்; கடிந்துள்ளார் என்று மேம்போக்காகப் பேச முற்படுவதை வள்ளு வத்தையும் பெரியாரியத்தையும் முற்றும் புரிதலில்லாமல் வெளிப்படும் அறியாமை எனத்தான் கொள்ளப்படும்.

பெரியார் ஈ.வெ.இரா.வின் மக்கள் பற்று, மக்களின் தன்மான உணர்வையும் தடையற்ற விடுதலை உணர்வு டைய சிந்தனையையும் பெற்று, பேணிக்காத்து, கடைப்பிடித்து வாழவேண்டும் என்பதை உள்ளடக்கியதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இதற்குத் தடையாக எதிர்கொள்ளப்படும்  எப்பொருளையும் கருத்தியலையும் கடுமையான வெளிப்படையான திறனாய்வுக்கு உட்படுத்திப் புறந்தள்ளிவிடுவதற்கு எதற்காகவெனினும் யாருக்காகவெனினும் சற்றும் தயங்காத வராகத்தான் அறியப்பட்டு வருகிறார் பெரியார்.

இதை இறை நம்பிக்கை, சமய நம்பிக்கை, இவை சார்ந்த வழிபாடு முறைகள், சமூக விழுமியங்கள் எனப் பல காலங்களாக பின்பற்றிவரப்படும் பண்பாடு பழக்கவழக்கங்கள் போன்ற எவையும் அவருடைய திறனாய்வுக்கு விதிவிலக்கல்ல. குறிப்பாக மனிதனின் தன்மானத்திற்கு, சமூக சம விடு தலைக்கு எதிரானவற்றை எள்ளி நகையாடுவார். என்புரிதலில், உலக வரலாற்றில், கண்ணில் கண்ட விதிவிலக்கற்று எப்பொருள் பற்றியும் பெரியார் போல் நம் கருத்தைப் பதிய வைத்திட ஒரு போதும் தவறாதவர் எவரும் இலர். அதே போன்று அதற்கான மாற்றுக் கருத்தையும் எதிர்கொள்ளவும் சற்றும் தயங்காதவர்.

அத்தன்மைத்தே மொழியாயினும், தமிழாயினும், அதன் செவ்விலக்கியங்கள், உலகளாவிய இலக்கணங்களுள் ஒப்பற்ற உயர் இலக்கணமான தொல் காப்பியம் என எவற்றின் மீதும் அவற்றைப் படிக்க நேரிடும் போதெல்லாம் அவரின் திறனாய்வுக் கருத்தைச் சொல்லிச் சென்றுள்ளார். அவ்வகையில் தமிழ்மொழி பற்றியும், தமிழ் எழுத்துக்கள் பற்றியும், தமிழ்க் காப்பியங்கள் பற்றியும் குறிப் பாகத் திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்றவை பற்றியும் பெரியார் பேசியுள்ளார். எனவே அவரது திறனாய்வுத் திறனை எந்த அடிப்படையில், பொருளில் பின்னணியில் எதற்காக என்பதையெல்லாம் கருத்துத்தளத்தில் எதிர்கொள்ளக் கையாலாகாதவர்கள் தான், மேலோட்டமாக பெரியாரைக் கொச்சைப்படுத்த முற்படுகின்றனர் எனக் கருதி இங்கு அவற்றைப் புறந்தள்ளிடுவோம்.

திருவள்ளுவர் அறிவு, அறன், அன்பு என்கிற முதன்மை யான பொது அடித்தளத்தில் நின்றுதான் அரசு, சமூகம், இவற்றின் கூறுகள், தனிமனிதப் பண்புகள், நெறிகள் என்பன போன்ற எல்லாப் பொருள்கள் பற்றியும், சமூக மேம்பாட்டுக் கான உழவு, கல்வி ஆகியவற்றின் மேன்மை குறித்தும் ஆழமாகவும் விரிவாகவும் ஆய்ந்துரைத்துள்ளார் என்பதை உணரமுடியும். இதை விடுத்து அவரைச் சமயம், சமய நம்பிக்கை, இறை நம்பிக்கை என்பவற்றுள் சுருக்கிப் பார்க்க முற்படுவதைச் சிந்தனைப் பிறழ்வாகத்தான் கருதமுடியும்.

மன்னுயிர்க்கெல்லாம் மனிதகுலம் தோன்றி மற்ற உயிரினங்கள் எல்லாம் பெற்றிருந்திராத பகுத்துணரும் பகுத்தறிவான ஆறாம் அறிவைப் பெற்ற மனிதனாகி அவ் வறிவின் வளர்ச்சிப் போக்கின் ஊடே மனித அறிவு குறித்த இலக்கணத்தை பகுத்துப் படைக்கிறான் குறள்களாக வள்ளுவன் இவ்வாறு. (கூறியது கூறலை மீறுவதாகினும் அவை கீழே).

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு”                     (423)

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு”                     (355)

இவ்விரு குறள்களுள் ‘யார்யார் வாய்க்கேட்பினும்’ என்பதும் ‘எத்தன்மைத்தாயினும்’ என இவ்விரு சொற்றொடர்கள் மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளனவேயன்றி இவற்றிலுள்ள பிற சொற்றொடர்கள் மொழி மாறாமல் அப்படியே கூறியவை கூறல் என்ற தன்மையில் அமைத்துள்ளார் வள்ளுவர் எனில் ‘கூறியது கூறல்’ என்கிற வாக்கிய அமைவு இலக்கணத்தை மீறி-எவர் சொல்லினும், எதைச் சொல்லினும் அதுபற்றிய மெய்ப்பொருளை உணர முற்படுவதுதான் ‘அறிவு’ என்பதின் முதன்மை மேன்மை என வலியுறுத்தி அவ்விலக்கணப் பிழையையும் கொண்டே இச்செய்யுள்களை இயற்றிவிட்டார்.

ஆனால் இறை, இறை நம்பிக்கை, சமயம், சமய நம்பிக்கை இவையெல்லாம் அவை சொல்லும் எவற்றையும் ‘அறிவு’ கொண்டு கேள்விக்கே உட்படுத்தாது அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற கோட்பாட்டைக் கொண்ட சொற்கள். எனவே அச்சொற்கள் வள்ளுவர் ‘அறிவு’க்கு வகுத்தளித்த இலக்கண, வரம்புக்குள்ளேயோ, விளிம்பையோ வரவோ தொட்டிடவும் முடியாது விரட்டியடிக்கப்படுவதை எவராலும் உணர முடியும். இது ஒன்றே திருவள்ளுவர் இச்சொற்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பதை உணர்த்தவில்லையா? பின் எப்படி இக்கயவர்கள் அவருக்குச் சமயச் சாயம் பூச முற்பட முயற்சிக்கின்றனர். முன்பே சொன்னது போல் இது இவர்களின் அறிவுப் பிறழ்வை வெளிப்படுத்துகின்றது.

பசிப்பிணி போக்கி உயிர்வாழப் பிச்சையெடுக்கும் நிலையில் உலகில் ஒரு தனிமனிதன் வைக்கப்பட்டுள்ளானெனில், அந்த உலகைப் படைத்தவன் அழிந்தொழிக என்கிறார் வள்ளுவர்.

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்  பரந்து

கெடுக உலகியற்றி யான்”                    (1062)

வேறெவருக்கும் இக்குறள் பொருத்தப்பாடுடையதோ இல்லையோ-2019இல் உலகின் 117 நாடுகளில் பசிப்பிணியால் வாடும் மக்களை அளவீடு செய்து தரவரிசைப்படுத்திய ஓர் உலக நிறுவனம் இந்தியா 102-ஆம் இடத்தில் உள்ளது என்கிற புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இந்துத்துவப் பார்ப்பனியச் சனாதனக் காவிக்கும்பல் சொல்லும் இந்தியா விலுள்ள கோடிக்கணக்கான கடவுள்கள் அழிந்தொழிவார்கள் என்ற வள்ளுவரின் கூற்றுப்படி, அவரை இந்து என இப்போது உயர்த்திப் பிடிக்கும்  இக்கும்பல் அப்படிப்பட்ட கடவுள்கள் வேண்டாம் என்று ஒழிக்க முற்படுவார்களா? எனவே வள்ளுவர் ‘இறை, நம்பிக்கை’ என்ற வளையத்திற்கு வராதவர் என்றுணர வேண்டும். அதன் அடிப்படையில் குறளின்  முதல் அதிகாரமான இறை வாழ்த்து இடைச்செருகல் என்றாகும்.

இந்தப் பகுத்தறிவு கொண்டு ‘அறன்’ நிலையைத் தான் உயர்த்திப் பிடித்து

“அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று”                       (49)

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற”                                            (34)

“அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல”                                  (39)

“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்து ஒழித்து விடின்”                          (280)

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது”                                             (45)

என இக்குறள்களில், வள்ளுவர் அறத்திற்கு இலக்கணம் வகுத்து வழங்கியதுடன் அன்புடன் அறத்தையும் இணைத்துக் கடைப் பிடித்து வாழ்வதுதான் உயர் பண்புடனான பயன் பெற்ற தாகும் என வரையறுக்கின்றார். பொதுமைக் கோட்பாட்டைக் கடைப்பிடிப்பதின் சிறப்பியல்பை 2000 ஆண்டுக்கு முன் அவர் வாழ்ந்த காலத்திலேயே எடுத்துரைக்கின்றார்.

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

இதில் மானுடர்க்கான பொதுமையுடன் உயிரினங்கள் அனைத்துக்குமான பொதுமையை வலியுறுத்துகின்றார் வள்ளுவர். இதில் மண்ணுயிர்கள் அனைத்தின் நலம் பேணும் அறிவு, அறன், அன்பு இவையாவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அன்றைய சமூகச் சூழலில் உயிரினங்களிடையே குறிப்பாக மனிதர்களிடையே வேறுபாடுகள், இல்லாமை, சிலரிடம் செல்வக் குவிப்பு என்றெல்லாம் இருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. அதனைக் கருத்திற்கொண்டுதான் வள்ளுவர் பொதுவாக உயிர்களுக்கு அடிப்படைத் தேவையான இயல்பாக, இயற்கையாகக் கிடைக்கும் வளி, வெளி, நீர், நிலம், நெருப்பு தவிர்த்து முதன்மையான அடிப்படைத் தேவை உணவு. அனைத்து உயிர்களுக்கும் கிடைக்கும் வகையில் பகிர்ந்து உண்ணப்பட வேண்டும் என்பதுடன் அவையாவும் பேணப்பட nண்டும் என்கிறார். இச்செயல் பேணப்பட்டால்தான் அது தொடர்ந்து நிலைத்து நீடித்திருக்கும் என்பதை ‘ஓம்புதல்’ என்ற ஒரு சொல்லின் ஊடாக உணர்த்துகிறார். மேலும் இச்செயல் - அறன்சார் சான்றோர்கள் சொன்னவை எல்லாம் என்று சொல்லாமல், அவற்றுள் சிறப்பியல்பானவற்றைத் தான் தொகுக்கப்படும் என்ற தன்மையில், அதற்கெல்லாம் தலையானது முதன்மையானது என்றுரைக்கிறார்.

இதில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டியவை, வள்ளுவர் தம் கருத்துக்களை, மக்கள் சமூகத்தின் முன் வைத்துச் செயல்பட வேண்டுமென்று வலியுறுத்துகின்றாரே அன்றி, மண்ணுயிர்க்கப்பாற்பட்ட எதனிடமும் இறைஞ்ச முற்பட்டார் இல்லை. இறைக்கோட்பாட்டைச் சொல்லும் உலகிலுள்ள எல்லாச் சமயங்களுக்கும் அவர் விடுகின்ற அறைகூவல் எனத்தான் கொள்ளமுடியும். இதில் குறிப்பாக மனித சமூகத்தைக் குறுக்கும் நெடுக்குமாக கூறுபோட்டு அவற்றுள் ஏற்றத்தாழ்வை ஏற்றி வெகுமக்களை வஞ்சித்து உறிஞ்சிக் கொழுக்கும் ஒரு சிறு கூட்டத்தின் நலனையே உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனச் சனாதன இந்து சமயத்திற்கு இது ஒரு சம்மட்டி அடி, மரண அடி-இந்திய ஒன்றியத்தில் 20 கோடி மக்களுக்கும் மேலாக பசிப்பிணியில் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் மக்களைப் பரிதவிக்கவிட்டு விட்டு, இந்துச் சமயத்தின் பேரால் காவிக்கும்பல் அரசின் அலகுகளான சட்டமன்றம், நிருவாகம், அறத்துறை என்று சொல்லப்படுவதும், நான்காம்  அலகான ஊடகங்களும், பல இலக்கம் ஆண்டுகளுக்கு முன் காப்பிய இராமன் மாந்தன் என்பவனை அவன் தாய் மசூதி இருந்த இடத்தில்தான் பெற்றெடுத்தாள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவனுக்கு அந்த இடத்தில் தான் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவில் கட்டுவோம் என்று வெறிபிடித்து அலைகின்றனர். இவர்களுக்கு அடிவருடிகளாக உள்ள பா.ச.க.வின் தமிழ் நாட்டுக் கிளை திருவள்ளுவருக்குச் சமய வண்ணம் பூச முனைவது அறிவுக்கு எட்டக்கூடியதாக எவருக்கேனும் தோன்றுமா? இது அறச்செயலா என்ற வினாவை இவர் களுக்கு முன் வைக்கத்தக்க தகுதி அறவே அற்றவர்கள் இவர்கள் என்பதாகத்தான் அவர்களின் செயல்பாடுகளால் நிறுவி வருகின்றனர்.

வள்ளுவர் உளம் மிகு தோய்ந்து அறிவு, அறம், அன்பு மூன்றையும் ஒரு சேர அவற்றின் சிறப்பியல்புகளையும், ஒன்றுக்கொன்று உறுதொடர்பான பண்புகளையும் மனித சமூகத்திற்கு உணர்த்துவதற்குப் பல்வேறு குறள்களைப் படைத்துள்ளார். அவற்றுள் கீழேயுள்ள குறளின் மேன்மை குறித்து குறிப்பாக அதன் மானுடவியல், சமூகவியல், அறிவியல், பொருளியல், பொருத்தப்பாடுகள் பற்றியும் இத்துறை சார்ந்த வல்லுநர்கள், அறிஞர்கள் பல காலக்கட்டங்களில் ஆழமாக வும், விரிவாகவும் ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர். இக்கட்டுரை யின் நிறைவாக அந்தக் குறள் குறித்து சில கருத்துக்களை முன்வைக்க முனைகிறேன்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழின் வேற்றுமை யான்”      (972)

இதற்கு, மண்ணுயிர்கள் எல்லாம் உயிருடையவை என்ற தன்மையில் அனைத்தும் ஒப்பானவையே. ஆனால் இவ் உயிரினங்கள் புரியும் தனித்தனித் தன்மையுடைய வெவ்வேறு செயல்களால் இவை யாவும் ஒப்பாகா எனப் பொதுவாகப் பொருள்கொள்ளப்படுகின்றது. இதில் ஒவ்வொரு வரும் மேற்கொள்ளும் பணிகள் வெவ்வேறு வகையானவை என்பதால் ஒரு உயிர் என்ற அளவில் அனைத்தும் ஒப்பான வை என்றாகினும் செயலளவில் வேறானவை. இந்தச் செயல் வேறுபாடு ஒவ்வொரு உயிருக்கும் வேறானது என்பதைத் தான் குறிப்பிடப்படுகிறது. ஆனால் பார்ப்பனச் சனாதனக் கூட்டம் தனிப்பட்ட உயிர்களின் வேறுபாட்டை ஒன்றிணைத்து, குழுக்களின் செயல் வேறுபாடுகள் என உள்நோக்குடன் திரித்து அத்தன்மையிலே இந்துத்துவக் கீதை சொல்லும் நால்வருணப் பிரிவுகளைத்தான் இக்குறள் குறிக்கிறது என்கின்றது.

இந்துச் சமய, இந்துத்துவக் கோட்பாட்டை இழிவானது என்ற கருத்துடைய அம்பேத்கர், கீதையைக் கிறுக்கனின், முட்டாளின் உளறல் என்றுதான் சொல்வார். ஆனால் இந்துச் சமயத்தை ஏற்றிப் பிடிக்கும் விவேகானந் தரும், அம்பேத்கர் கருத்தான கீதை முட்டாள்களின் உளறல் என்பதை ஓங்கி உரைக்கிறார். எனவே சமூகத்தைக் குறுக்கு நெடுக்காகக் கூறுபோட்டு குழுக்களாக வருணத்  தொகுப்பாக்கி பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் கொலைக் கருவியான கீதையுடன் திருக்குறளை ஒப்பிடுவது வக்கிரத்தின்-வஞ்சத்தின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும். பெரி யாரியல் அறிஞர் தோழர் வே. ஆனைமுத்து இக்குறளுக்கு மிக நுட்பமான ஆய்வுக்குரிய கருத்தைத் தருகிறார்.

வள்ளுவர், மண்ணுயிர்கள் எல்லாம் பிறப்பால் உலகளவில் உணர்த்திடாத உயர் ஒப்பானவையே என்ற கருத்தை உலகிற்கு உரைக்கின்றார். அதாவது, ஓர் அறிவு, ஈரறிவு என ஆறு அறிவுடை புல், பூண்டு, புழு, புள், விலங்கு, மனிதன் என உயிரினங்கள் யாவும் ‘உயிர்’ என்ற ஒற்றை அலகில் மட்டும் ஒத்தவையே. வேறுபாடற்றவையே என்கிறார். ஆனால் ஏனைய உயிரினங்கள் எவையும் அவற்றிற்குள்ள அறிவு ஆற்றலைக் கொண்டு, எப்பொருளையும் செய்யவோ, படைக்கவோ இயலாதவை என்பதைச் ‘செய்தொழில்’ என்ற சொற்றொடரால் குறித்துவிட்டு, ஆனால் மனித உயிரினம் மட்டுமே பொருள்களைச் செய்யவும் படைக்கவும் அறிவும் ஆற்றலும் கொண்டது.

அவ்வகையில் மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபட்டுச் சிறப்பியல்பைக் கொண்டுள்ளது என்பதைக் குறிப்பிடுவதற் காகவும், அவை மனித இனத்திற்கு ஒப்பானவை அல்ல என்பதை வலியுறுத்துவதற்கும் அனைத்து உயிரினங்களும் ‘உயிர்’ என்ற ஓர் அலகில் ஒப்பும் என்றாலும், மனித இனம் சிறப்பான தன்மையுடைய ‘செய்தொழில்’ என்ற அறிவு ஆற்றல் கொண்டவன் என்பதால் அனைத்து உயிரினங்களையும் ஒரு நிரையில் வைத்திட முடியாது என அவற்றினிடையே ‘சிறப்பொவ்வா’ என்ற சொல்லை ஆளுகிறார் திருவள்ளுவர்.

எனவே, இச்சீரிய கருத்தின் படியும் சனாதனக் கும்பல், உயர் அறிவு, அறன், அன்புசார் குறளை எந்நிலையிலும் கொலையைத் தருமம் என்றும் மானுடத்தைப் பிளவுபடுத்தி அவற்றுள் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் இழிநூலான கீதையை எவ்வகையிலும் ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ள முற்படுவது அறியாமை, அறிவீனம் என்று மட்டும் ஒதுக்கிவிட முடியாது. தமிழகம், கேரள மாநிலங்கள் தவிர இந்திய ஒன்றியத்தின் பிற மாநிலங்களிலெல்லாம் வகுப்புவாத சமய வெறியை ஊட்டி பொய்மை வளர்ச்சி பெற்றிருந்த போதிலும், இங்கு அது காலூன்ற நயவஞ்சகத்துடனும் கயமையுனும் உள்நோக் கத்தினுடனானது தமிழக பா.ச.க. திருவள்ளுவரைக் கையிலெ டுத்துக் கொண்டது என உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில், கேரளத்திலும் கூட வள்ளுவம் வெகுமக்கள் உள்ளத்தில் உள்வாங்கிக் கொள்ளப்பட்ட அறிவுப் பெட்டகம், அறத்தின் விழுமியங்கள்-அன்பின் ஊற்று எனும் பொதுமறை நூல். அதன் எந்தப் பக்கமும் எந்தக் குறளும் வாழ்க்கைக் கான சமூக மேன்மைக்கான, மேம்பாட்டுக்கான கோட்பாடு களையும் கொள்கைகளையும் கருத்துகளையும் வாரி வாரி வழங்கிடும் தன்மை கொண்ட வழிகாட்டு நூல். எனவே கருத்தியல் தளத்திலிருந்து திருவள்ளுவரை எதிர்கொள்ளவிய லாத கயவர்கள், அவர் உருவின் மேல் எந்த வண்ணத் தையும் பூசினும், சேறை இறைப்பினும் அவரின் உள மாண்பை ஒரு நூலிழைகூட, எள் முனை அளவுகூட குறையவிடாது, அவரின் வள்ளுவம் அரணாகக் காத்து நிற்கும்.

மேலும் ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற அவரின் கோட்பாட்டுத் தளத்திலிருந்து அவர்தம் அறிவு நெறி, அறநெறி, அன்பு நெறி காலமும் கடந்து நின்று நிலைத் திருக்கும். இதில் இந்த அற்பப் புல்லர்களான மேற்சொன்ன நெறிகளுக்கெல்லாம் எதிராக புன்மையான-கீழ்மையான தருமம் எனும் இழி கொலை நூலைத் தாங்கிப் பிடிக்கும் பாசிச இந்துத்துவ பார்ப்பனச் சனாதன அடிவருடிகளாக உள்ள பாரதியச் சனதாக் கட்சியின் சுவடு கூடத் தமிழ் மண்ணில் படமுடியாது என்பது திண்ணம்.

இருப்பினும் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் காணப் படும் சில சொற்களைக் கொண்டு அவற்றின் பின்புலம், உள்ளார்ந்த பொருள்களையெல்லாம் உணர்ந்திட வக்கற்ற இந்தக் கூட்டம், சமயச் சாயம் பூசிடவும் முனைவது அறிவீனத் தின் உச்சம் என்பதை வள்ளுவம் உணர்த்தும். பெரியாரின் மெய்யறிவுசார் ஆய்வின் அடிப்படையிலான திருவள்ளுவரின் காலக்கட்டத்திற்கான பெண்ணியம்-பார்வை, ஊழ் போன்ற வற்றின் மீதான மாறுபட்ட கருத்தைக் கருத்துத் தளத்தில் எதிர்கொள்ளத் திராணி அற்ற இந்தக் காவிக் கூட்டம், தம் கொச்சைச் சொற்களால் அவர்களின் சிறுமையை வெளிப்படுத்து கின்றன.

மேற்சொன்னவை விடுத்து வள்ளுவத்தின் உயர்வைப் பரப்பிட அவர் குறட்பாக்களைப் பகுதி பகுதியாகப் பகுத்துப் பள்ளிக் கல்வியில், உயர்கல்வியில் அவர்களுக்கேற்ற தர அளவில் பாடங்களில் சேர்க்கப்பட்டு அனைத்துச் சமூக மக்கள் வாழ் நெறியை மேம்படுத்திடவும் வழிகாண வேண்டுமென வலியுறுத்திய வேலைத்திட்டம் அறியா மூடர்கள் இந்த காவிக் கும்பல் கூட்டம்.

திருவள்ளுவரின் உருக்குறித்து இதுகாறும் சற்றும் எண்ணிப் பார்க்காத இக்கயமைக் கூட்டம், இதுவரை பொது வெளியில், ஏன் ஊடகங்களிலெல்லாம் திரைக்காட்சி ஊடகங் களிலெல்லாம் காண்பிக்கப்பட்டிருந்ததையெல்லாம் அறியாதது போல் திடீரென செப்டம்பர் 2019-இல் இருந்து ஏன் தலை விரித்தாடுகிறது? இவர்களின் வாக்கரசியலுக்கு வேறு வழியே இல்லாததை உணர்ந்து கொண்டு, திருவள்ளுவரையும் கையில் எடுத்துள்ளது தமிழக பா.ச.க. பாசிசக் கூட்டம். திருவள்ளுவரின் வள்ளுவத்தின் உள்ளீடான அறிவு, அறம், அறன்சார் நெறிகள் இவர்களைத் தோலுரித்துக் காட்டிடும். இவர்கள் சாயம் வெளுத்திடும்.

எனவே மொழி, இனம், சமயம், இறைநம்பிக்கை கடந்து நிற்கும் திருவள்ளுவரை இவற்றுள் நிறுத்திட முனைபவர் படுதோல்வியுறுவர் என்பது உறுதி.

Pin It