கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் திருக்குறள் தான் தோன்றிய காலந்தொடங்கி இன்றுவரை தமிழுலகில் நிலைத்து வாழ்ந்தும் தமிழர்களை வாழ்வித்தும் வருவது கண்கூடு.

ஓதற் கெளிதாய் உணர்தற்கு அரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் -தீதற்றோர்
உள்ளுந்தொ றுள்ளுந்தொ றுள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

மாங்குடி மருதனாரின் இப்பாடல் திருக்குறளின் தனிப்பெருஞ் சிறப்பினைத் தெளிவு படுத்துகின்றது. படிப்பதற்கு எளிய சொற்களை உடையதாகவும் அறியப்படுவதற்கு அருமைப்பாடுடைய நுட்பமான பொருளை உடையதாகியும் வடமொழியில் சிறப்பித்துச் சொல்லப்படும் வேதங்களின் பொருளை உள்ளடக்கியும் அந்த வேதங்களை விடவும் சிறப்புபெற்றும் குற்றமற்றவர்கள் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் அவர்களுடைய மனதை உருக்கக் கூடியதாகவும் வள்ளுவர் வகுத்துத்தந்த திருக்குறள் விளங்குகிறது என்பது மாங்குடி மருதனாரின் பாடல் கருத்து.

திருக்குறள் கடந்த பதினெட்டு நூற்றாண்டுகளில் எத்தனையோ சமய, இன, மொழித் தாக்குதல்களை எல்லாம் வென்று காலம் கடந்து இன்றும் நிலைத்து நிற்பதற்குப் பல காரணங்கள் உண்டு, அவற்றுள் தலையாய காரணம் அதன் பொதுமைப்பண்பு. மொழி, இனம், நாடு கடந்த உலகப் பொதுமைநலம் வாய்ந்த அறங்களைப் பேசுவதால் திருக்குறள் உலகப் பொதுமறை என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது. இதன் காரணமாகவே திருவள்ளுவ மாலை,

வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு (திரு.மா.47)

என்று திருக்குறளைப் புகழ்ந்து பேசுகின்றது.

சற்றேறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த பிறகும் கூட திருக்குறளின் மொழிநடை இன்றும் எளிதில் படித்துப் பொருள் விளங்கிக் கொள்ளக் கூடியதாய் இருக்கின்றது. திருக்குறளின் காலத்தை ஒட்டிய சங்க இலக்கியங்களுக்கோ, சங்கம் மருவிய கால இரட்டைக் காப்பியங்களுக்கோ இத்தகு மொழிநடை அமையவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. எனவேதான் மாங்குடி மருதனார் ஓதற்கு எளிதாய் என்றார். இத்தகு எளிய நடையைக் கொண்டிருந்தும் திருக்குறளுக்கு எண்ணிலடங்கா உரைகள் காலந்தோறும் தோன்றிவருவது ஏன்? என்ற வினா எழுதல் இயல்பே, உணர்தற்கு அரிதாகி என்று அதற்கும் விடை சொல்கின்றார் மாங்குடி மருதனார்.

காலந்தோறும் திருக்குறளுக்கு உரைகள் தோன்றிவருவது திருக்குறளின் சிறப்புக்களில் ஒன்று. பரிமேலழகருக்கு முன் திருக்குறளுக்கு ஒன்பது உரைகள் தோன்றின. பத்தாவது உரையாகக் குறளுக்குப் பரிமேலழகரின் சீர்மிகு உரை தோன்றியது. பரிமேலழகரின் நுட்பமான உரைக்குப் பின்னும் கூட இன்று வரைக் கணக்கற்ற உரைகள் குறளுக்குத் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.

பிற தமிழ் இலக்கிய இலக்கண நூல்களுக்கு இல்லாத அளவில் திருக்குறளுக்கு மட்டும் இத்துணை உரைகள் தோன்றியும் தோன்றிக் கொண்டேயும் இருக்கக் காரணங்கள் என்ன?

திருக்குறளின் கவிதை வடிவம் செறிவானது. அதன் சொற்கட்டமைப்புக்குள் தத்தமக்கான பொருளைக் கற்பவர்கள் பொருத்திக்கொள்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. திருக்குறளின் இத்தகு அமைப்பே அதற்குப் பல விளக்கங்களும் உரைகளும் பெருகுவதற்குக் காரணமாய் அமைந்துள்ளது. திருக்குறள் காட்டும் பொதுப்பொருள், சிறப்புப் பொருள், குறிப்புப்பொருள் என்று அதற்குப் பொருள் காண வழிகள் பல உள்ளன. அறிவியல் சார்ந்தும் அறவியல் சார்ந்தும் பொருளியல் சார்ந்தும் தத்துவம் சார்ந்தும் பண்பாட்டியல் சார்ந்தும் மொழியியல் சார்ந்தும் மரபியல் சார்ந்தும் உளவியல் சார்ந்தும் பல கோணங்களில் திருக்குறளை ஆராய்வதற்கு வழிவகை செய்து வைத்துள்ளார் வள்ளுவர். அவரின் குறுகத் தரித்த குறளே விரிவான பொருள் புரிதலுக்குத் துணைநிற்கிறது. குறளின் மிகச்சிறிய ஏழு சீர்களே கொண்ட யாப்பு வடிவமே உரைகள் பெருகுவதற்கு முதல்காரணம். விரித்துச் சொல்ல வாய்ப்பில்லாமல் பொதுவாகக் குறிப்பிட்டு அறங்களைக் கூறும் போக்கினால் உரையாசிரியர் விரித்துக் கூற முற்படும்போது பொருள் வேறுபாடுகள் தோன்றுவது இயற்கையே. கால வேறுபாடு அல்லது காலத்தின் தேவை சில குறட்பாக்களைப் புதிய நோக்கில் வாசிக்க இடந்தருகிறது. எனவே கால மாற்றங்களும் புத்துரைகளுக்குக் காரணங்களாகின்றன..

புதுவைப் பாவலர் வ.விஜயலட்சுமி அவர்களின் 'திருக்குறளில் உளவியல் கூறுகள்' என்ற இந்நூலும் திருக்குறளுக்குப் புத்துரை வழங்கும் ஒரு முயற்சியே. நூலாசிரியர் திருக்குறளின் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களுக்கும் உளவியல் நோக்கில் ஒரு அழகான புத்துரை வழங்க முயன்றுள்ளார். ஒவ்வொரு அதிகாரத்திலும் தேர்ந்தெடுத்த சில குறட்பாக்களைக் கொண்டு உளவியல் பார்வையோடு விளக்கமளிக்கும் அவரின் முயற்சி பாராட்டத்தக்கது.

பாவலர் வ.விஜயலட்சுமி புதுச்சேரியின் மரபுப் பாவலர்களில் ஒருவர். ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியரான அவர் தொடர்ச்சியாக உளவியல் சார்ந்த நூல்கள் பலவற்றை எழுதி வருபவர். ”நாட்டுப்புறப் பாடல்களில் உளவியல் கூறுகள்” எனும் தலைப்பில் தமது இளமுனைவர் பட்டத்திற்கான ஆய்வினை என்னுடைய வழிகாட்டுதலில் நிகழ்த்திவர். இவர் மொழிபெயர்ப்புத் துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வருவதோடு பல மொழிபெயர்ப்புக் கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார். கல்வியியல், உளவியல், ஆன்மீகம் தொடர்பான அவரின் படைப்புகள் பலரது பாராட்டையும் வாழ்த்தினையும் பெற்ற சிறப்புக்குரியன. சிறுவர் இலக்கியம், மரபுக் கவிதை, புதுக்கவிதை, மொழிபெயர்ப்புக் கவிதைகள் என கவிதைத் துறையிலும் இடையறாது ஈடுபட்டு வருபவர். புதுச்சேரியின் இலக்கிய மேடைகளில் தமது சிறந்த கவிதைப் படைப்புகளால் தனித்த அடையாளம் பெற்றவர். முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கிய அமைப்புகள் அவருக்கு ஔவை விருது, கபிலர் விருது, மரபு மாமணி முதலான விருதுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளன. ஆற்றல் வாய்ந்த ஆளுமையோடு நல்லாசிரியராகயும் இலக்கியப் படைப்பாளியாகவும் சிறந்த ஆய்வாளராகவும் மொழி இலக்கியப் பணிகளை ஆற்றிவரும் பாலவர் வ.விஜயலட்சுமி அவர்களின் பதினைந்தாவது நூல் என்ற பெருமைக்குரியது இந்த 'திருக்குறளில் உளவியல் கூறுகள்' இந்நூல்.

உளவியல் (Psychology) என்பது மனதின் இயல்பு, செயல்பாடுகள் மற்றும் நடத்தைகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். இத்துறை மனிதனுடைய மனதையும், நடத்தையையும் ஆராய்கிறது.. இத்துறையின் விற்பன்னர்கள் உளவியலாளர்கள் என்றழைக்கப் படுகின்றனர். இவர்கள் தனிமனிதனின் புலன் உணர்வு, அறிவாற்றல், செயல்திறன், மன அழுத்தம், ஆளுமை, நடத்தை ஆகிய அனைத்தையும் ஆராய்ந்து உரிய தீர்வு அளிக்கின்றனர். உளவியல் சார்ந்த அறிவானது அன்றாட வாழ்வில் மனிதர்கள் எதிர்கொள்ளும் கல்வி, குடும்பம், தொழில், சமூகம் உள்ளிட்டவைகளைப் பற்றி முழுவதும் ஆராய்ச்சி செய்கிறது. மேலும் அவற்றால் ஏற்படும் நன்மைகள், தீமைகள், அதற்கான தீர்வுகள் என அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துகின்றது.

திருவள்ளுவரின் குறட்பாக்களை ஆழ்ந்து கற்போருக்கு அவர் ஓர் உளவியல் வல்லுநராகவே தெரிகின்றார். தனிமனித உளவியல் மட்டுமல்லாது சமூகத்தின் கூட்டுமன உளவியல் குறித்தும் திருக்குறள் பேசுகிறது. அறத்துப்பால், காமத்துப்பால் இரண்டிலும் தனிமனித உளவியல் பெரிதும் பேசப்படுகிறது என்றால்,. பொருட்பால் மனித சமூகத்தின் கூட்டுமனம் மற்றும் அதன் செயற்பாடுகளை விவரிக்கிறது. நூலாசிரியர் உளவியல் துறையில் ஆழங்கால் பட்டவர் என்ற அடிப்படையில் ஒவ்வொரு அதிகாரத்தையும் உளவியல் கண்கொண்டு பார்க்கிறார். அதிகாரப் பொருண்மைகளை உளவியல் நோக்கில் விரித்துரைக்க முற்படுகிறார். சில குறட்பாக்களுக்கு உளவியல் விளக்கங்களை வழங்குகிறார். நூலாசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது. விரிவான வருங்கால ஆய்வுகளுக்கு வழிகாட்டத் தக்கது.

அறிவுடைமை அதிகாரத்தின் கருத்துகளை உளவியல் பார்வையில் விவரிக்கும் நூலாசிரியரின் பின்வரும் பகுதியினை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வெல்ஸ் என்ற அறிஞரின் கூற்றுப்படி, அறிவுடைமை என்பது நமது நடத்தைக் கூறுகளை ஒழுங்குபடுத்தி, முற்றிலும் புதியதொரு சூழலில் அதற்கேற்ப மிகச் சிறப்பாகச் செயல்படுவது என்பதாகும். வில்லியம் ஸ்டெர்ன் கருத்துப்படி, அறிவுடைமை என்பது ஒரு புதிய சூழலில் அதற்குத் தகுந்தாற்போல் தன்னைத் தகவமைத்துக் கொள்வதாகும்.

இக்கருத்துகளோடு வள்ளுவரின்

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவது அறிவு (குறள்-426)

என்ற குறள் ஒப்பு நோக்கத் தக்கதாகும்.

நுண்ணறிவு என்பது பல்வேறு சக்திகளின் கூட்டமைப்பாகும். வெச்லர் என்பாரின் கருத்துப்படி நுண்ணறிவு என்பது ஒருவன் தன் சூழ்நிலைக்குத் தக்கவாறு நோக்கத்துடன் செயல்படவும், பகுத்தறிவோடு சிந்திக்கவும் திறமையோடு கையாளவும் தெரிந்திருக்கும் ஒரு திறனாகும்.

தன் பழைய அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு எதிர்காலச் செயல்களைத் திட்டமிடுதல் அறிவுடைமை.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர் (குறள்-427)

இவ்வாறு ஒவ்வொரு திருக்குறள் அதிகாரங்களிலும் அதன் பொருண்மையோடு தொடர்புடைய உளவியல் செய்திகளை மேற்கத்திய உளவியலாளர் கருத்துக்களோடு தொடர்புபடுத்தி மேற்கோள் காட்டி, குறட்பாக்களை விளக்கிச் செல்லும் நூலாசிரியரின் அணுகுமுறை சிறப்பானது. ஆயினும் விவரித்துச் சொல்ல வேண்டிய இடங்களில் கூட விவரித்துச் சொல்லாமல் சுருக்கமான முன்னுரையோடு குறட்பாக்களைச் சுட்டிச்செல்வது நமக்கு முழுநிறைவைத் தரவில்லை.

      திருவள்ளுவர் அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் ”மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்” (குறள்-34) என்று அறத்திற்கு ஓர் எளிமையான விளக்கத்தினைச் சொல்லிச் செல்கின்றார். மனதில் குற்றமில்லாமல் இருப்பது எவ்வாறு முழுமைபெற்ற அறமாகும் என்ற வினா அனைவர் மனதிலும் எழலாம், நூலாசிரியர் இக்குறட்பாவிற்கு சிறப்பான விளக்கமொன்றனை வழங்கி புத்துரை தருகின்றார். அவர் தரும் புத்துரை பின்வருமாறு,

ஒவ்வொருவர் உள்ளத்திலும் நல்ல உணர்வுகளும் இருக்கும் தீய உணர்வுகளும் இருக்கும். நல்ல எண்ணங்கள் சிலர் மனதில் மேலோங்கி இருக்கும், தீய எண்ணங்கள் சிலரிடம் மேலோங்கி ஆதிக்கம் செலுத்தும். அத்தீய எண்ணங்களே மனதில் மிதக்கும் மாசுகள். உடலில் துர்நாற்றம் வீசுவதை மறைக்க நறுமணப் பொருட்களைப் பூசிக் கொள்வதைப் போல, சுவரின் விரிசலை மறைக்க அழகிய வண்ணப் படங்களை அதன்மீது ஒட்டுவதைப் போல சிலர் தங்கள் மனமாசுகளை மறைக்க ஆடம்பரமாக அன்னதானம், ஆடைதானம், பொருள்தானம் செய்வார்கள், இவை உண்மையில் அறமாகவே கொள்ளப்படா. எதையும் எவர்க்கும் தா இயலா ஏழையாக இருந்தாலும் மனத்துக்கண் மாசிலன் ஆதலே அறமெனக் கருதப்படும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற (குறள்-34)

நூலாசிரியர் வ.விஜயலட்சுமி இந்தக் குறட்பாவுக்குத் தரும் புத்துரை சிறப்பானது. நூலின் பக்கங்கள் தோறும் இவ்வாறு பல குறட்பாக்களுக்கு எளிய புதிய விளக்கங்களையும் சில புத்துரைகளையும் நூலாசிரியர் சுட்டிச் செல்வது பாராட்டத் தக்கது.

      திருக்குறள் ஓர் ஆழ்கடல். அதன் ஆழம் அளவிட முடியாதது. அதனை மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டடி போல் காட்டி நம்மை ஏமாற்றும். அந்த ஆழ்கடலில் மூழ்கி முத்துக் குளித்தவர்களுக்கே அதன் ஆழம் புரியும். நூலாசிரியர் வ.விஜயலட்சுமி அவர்களும் திருக்குறள் என்ற ஆழ்கடலில் மூழ்கி முத்துக் குளித்துள்ளார். அவருக்கு நமது வாழ்த்தும் பாராட்டும். இனி வாய்ப்பு கிடைக்கும் பொழுதிலெல்லாம் அவர் திருக்குறள் கடலில் மூழ்கி மூச்சடக்கி முத்துக் குளிப்பார். திரட்டிய முத்துகளை எல்லாம் கோர்த்து அழகான மாலையாக்கித் தமிழுலகிற்குப் பரிசளிப்பார் என்று நம்புவோம்.

முனைவர் நா.இளங்கோ, தமிழ்ப் பேராசிரியர், புதுச்சேரி

Pin It