கடந்த 21.3.2015ல் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஹன்சிம்புரா படுகொலையில் தொடர்புடைய பதினாறு குற்றவாளிகள் மீது நீதிமன்றத்தில் போதிய சாட்சியமில்லை என விடுதலை செய்யப்பட்டனர். இக் குற்றவாளிகள் அனைவரும் உத்திரப்பிரதேச மாநில ஆயுதப்படை காவலர்கள். நாற்பது அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை கொலை செய்ததுதான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு.
லாரியில் ஏற்றப்படும் முஸ்லிம்கள்
கடந்த 1987 ஆம் ஆண்டு பாபர் மசூதி தொடர்பான கருத்து வேறுபாட்டின் தொடர்ச்சியாக உத்திரப் பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் இந்து முஸ்லீம் மத மோதல் நடைபெற்றது. குல்மார் திரையரங்கு கொளுத்தப்பட்டு 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கலவரத்தை அடக்க கண்டதும் சுட உத்திரவிடப்பட்டிருந்தது . இந் நிலையில் கலவரத்தை அடக்குவதற்காக வரவழைக்கப்பட்ட மாநில ஆயுதப்படையான (PAC) provincial armed constabulary என்ற படைப்பிரிவானது 22.5.1987 மீரத்தின் ஹன்சிம்புரா என்ற பகுதியிலிருந்த முஸ்லீம் மக்களைக் கைது செய்தது. அதில் வயதானவர்கள் மற்றும் சிறுவர்களை விட்டுவிட்டு நாற்பது முதல் ஐம்பது முஸ்லீம் இளைஞர்களை கைது செய்து ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு போனது காவல்துறையின் ஆயுதப்படை பிரிவு.
காசியாபாத் மாவட்டத்தின் முராத் நகர் என்ற ஊரின் ஒதுக்குப்புறத்தில் மேல் கங்கை வாய்க்கால் என்ற வாய்க்கால் அருகில் லாரியினை நிறுத்தி ஒவ்வொருவராக லாரியிலிருந்தி இறக்கி அவர்களைச் சுட்டு கால்வாயில் வீசியது. இந்தக் கொடூர நிகழ்வில் காயம்பட்ட ஐந்து முஸ்லீம் இளைஞர்கள் செத்தது போல கிடந்து வாய்க்காலில் மூழ்கி நீச்சலடித்து உயிர் பிழைத்தனர் . அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆயுதப்படை வீரர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிகழ்வில் கொல்லப்படாத சில முஸ்லீம் இளைஞர்கள் அடுத்த நாள் மக்கன்பூர் அருகில் ஹின்டோன் ஆற்று வாய்க்கால் அருகில் வைத்து ஆயுதப்படையால் சுட்டு ஆற்றில் வீசப்பட்டனர். அதில் தப்பிய ஒருவர் லிங் ரோடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு பதியப்பட்டது.
உத்திரப்பிரதேச மாநில அரசு 1988 ஆண்டு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்திரவிட்டது. மேலும் மூன்று பேர் கொண்ட அதிகாரிகள் குழு 1994ல் இந்த நிகழ்வு குறித்து அறிக்கை தாக்கல் செய்தது. அரசு இந்த அறிக்கையை வெளியிடாததால் பாதிக்கப்பட்டவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடினர். இறுதியில் 1995ல் அறிக்கை வெளியானது. புலனாய்வில் 37 ஆயுதப்படை வீரர்கள் மற்றும் போலீசார் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். ஆனாலும் பணியின் போது நிகழ்ந்த குற்றம் என்பதால் இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய மாநில அரசின் அனுமதி தேவைப்பட்டது. மாயாவதி முதல்வராக இருந்தபோது 19 இராணுவப்படையினர் மீது வழக்கு தாக்கல் செய்ய அரசு அனுமதித்தது. ஆனாலும் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜாராக மறுத்துவிட்டனர். போலீசும் அவர்களை கைது செய்யவில்லை. செசன்ஸ் நீதிமன்றம் 23 முறை அவர்கள் மீது சாதாரண வாரண்டு பிறப்பித்தது. இறுதியில் 2000 ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜரான குற்றவாளிகள் உடனே ஜாமீன் பெற்று பழைய போலீஸ் பணியினைத் தொடர்ந்தனர்.
ஆரம்பம் முதலே உ.பி. மாநில அரசு இந்த அரச பயங்கரவாதிகளைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்தியது. பல வழக்கு ஆவணங்கள் அழிக்கப்பட்டன. இந் நிலையில் நீதிமன்றத்தின் தலையீட்டால் வழக்கு காசியாபாத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்திலிருந்து டெல்லி மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பல தடைகளைத் தாண்டி நடைபெற்ற விசாரணையின் போது குற்றவாளிகள் 16 பேர் மட்டும் வழக்கை எதிர்கொண்டனர். சாட்சிகள் சாட்சியமளித்த போதும் குற்றவாளிகளைத் தண்டிக்க போதிய ஆதாரமில்லை என 21.3.2015ல் குற்றவாளிகளை நீதிமன்றம் விடுவித்து விட்டது.
நமது சமூகத்தில் நிகழும் அரச வன்முறையின் கோரத்திற்கும், அந்த அரச பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் உள்ள இடர்பாடுகளுக்கும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான நீதியினைப் பெற நீண்ட பயணத்தை மேற்கொள்ளவேண்டிய அவலத்திற்கும், சனநாயக சமூகம் மேலும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைக்கும் இந்த தீர்ப்பு ஒரு நல்ல உதாரணம்.
- ச.பாலமுருகன், மாநிலச் செயலர், மக்கள் சிவில் உரிமைக்கழகம் (PUCL)