சுதந்திர இந்தியாவில் நடந்த பல கொடூரமான கலவரங்களில் வெட்டி வீழ்த்தப்பட்ட மனித உடல்களில் இருந்து சதைகளும், ரத்தமும் கலந்து இந்திய வரலாறை அழுகி நாறவைப்பதற்குக் காரணமானது பாபர் மசூதி இடிப்பு. இந்தியாவிற்கு இரண்டு நள்ளிரவுகள் மிக மோசமானதாக, என்றுமே வெளிச்சம் பாய்ச்ச முடியாத இருள் சூழ்ந்ததாக இருந்துள்ளது. ஒன்று ஆகஸ்ட் 15 1947, அன்று வெள்ளை ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து பார்ப்பன பயங்கரவாதிகளின் பிடியில் ஆட்சி அதிகாரம் கைமாற்றித் தரப்பட்டது. மற்றொன்று 22.12.1949 அன்று நள்ளிரவில் பாபர் மசூதிக்குள் அகில இந்திய இந்து மகா சபையைச் சேர்ந்த அபிராம் தாஸ் என்ற பார்ப்பன சாதுவால் வைக்கப்பட்ட ராமர் சிலை. இந்த இரண்டுமே இந்திய வரலாற்றின் ரத்தம் தோய்ந்த வரலாற்றைத் தன்னகத்தே கொண்டது. இரண்டுக்குமே அடிப்படை ஒன்றுதான், அது பார்ப்பன இந்து மதவெறி. அதற்காக சாமானிய மக்கள் கொடுத்த விலை எந்தக் காலத்திலும் அவர்களால் திரும்ப எடுக்க முடியாதது.
ராமன் சிலையை மசூதியில் வைத்து நாட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி காங்கிரசிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற இந்து மகா சபையின் திட்டம் அன்று நிறைவேறாமலேயே போனது. அதை 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதியை இடித்து நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக ரத்த ஆறை ஓடச் செய்ததன் வாயிலாக அவர்கள் அதைச் சாதித்துக் கொண்டார்கள். இன்று இந்தியா முழுவதும் சங்பரிவார கும்பல் பல மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவும், இந்தியாவை ஆட்சி செய்யவும் அடிப்படையாக அமைந்தது அந்த நள்ளிரவில் பாபர் மசூதியில் அபிராம் தாஸால் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட ராமர் சிலைதான். அவர்கள் தங்கள் பார்ப்பன மேலாண்மையை என்றும் அழியாமல் காப்பதற்காக முதலில் வரலாற்றை பொய்யாக உருவாக்குகின்றார்கள். பின் அதையே உண்மையான வரலாறாக கட்டமைக்கின்றார்கள். பிறகு அந்த வரலாறு அவர்களுக்குத் தனது ரத்தக்கறை படிந்த கரங்களால் கேட்டதை எல்லாம் கொடுத்துக்கொண்டே இருக்கின்றது.
ராமர் சிலையை பாபர் மசூதியில் வைத்த பின்னால், அங்கே ராமன் சுயம்புவாக தோன்றியுள்ளதாகவும், ராமன் தனக்கான இடத்தை அவனே தேர்வு செய்துகொண்டதாகவும் ஒரு பெரும் பொய்யை இந்து மகா சபை பார்ப்பன புளுகுக் கூட்டம் திட்டமிட்டுப் பரப்பியது. நாட்டில் உள்ள பல்வேறு பத்திரிக்கைகள் இந்து மகா சபையின் இந்தப் பார்ப்பன புளுகை அம்பலப்படுத்த அன்று தயாராக இருக்கவில்லை. அயோத்தியில் இருந்து வெளியான இந்தி வார இதழான ‘விரக்தா’ மட்டுமே இந்த செய்திகளை வெளியிட்டது. அதுவும் விமர்சன ரீதியாக அல்ல, ராமன் தானே தோன்றினான் என்ற வரலாற்றுப் பொய்யை உண்மையாக்குவதற்காக. இதன் ஆசிரியர் இராம் கோபால் பாண்டே சரத் இந்து மகா சபையின் உறுப்பினர் ஆவார். இவர் எழுதிய ஸ்ரீ இராம ஜன்ம பூமி கா ரக்தா ரஞ்சித் இதிஹாஸ் அதாவது ‘இராமர் பிறந்த இடத்தின் குருதி தோய்ந்த வரலாறு’ என்ற புத்தகத்திலும் இதைக் கடவுள் செயல் என்றே குறிப்பிட்டு எழுதியிருக்கின்றார். அதில் “23-12-1949 ஆம் நாள் இந்தியாவுக்குப் பெருமையான நாள். அன்றுதான் நானூறு ஆண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பின் இராமருடைய பிறப்பிடம் மீட்கப்பட்டது. முந்திய நாள் இரவின் போது நடந்தவை பற்றிக் கூற வேண்டுமானால் அந்த இரவில் இராமர் தனது பிறப்பிடத்தைத் தானே மீட்டுக்கொண்டார் என்பதை மட்டுமே கூற முடியும்” என்று எழுதினார். (அயோத்தி: இருண்ட இரவு, பாபர் மசூதிக்குள் ராமன் தோன்றிய இரகசிய வரலாறு).
இது தொடர்பாக அபிராம் தாசும் அவரது கூடாளிகளும் மசூதிக்குள் திருட்டுத்தனமாகப் புகுந்து வழிபாட்டு இடத்தைத் தீட்டுப்படுத்தினார்கள் என 23/12/1949 அன்று காவல்துறையால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பின்னாட்களில் இது தொடர்பாக ஆய்ந்தறிய அரசு நியமித்த விசாரணை ஆணையமும் மசூதியில் ராமன் சிலை திருட்டுத்தனமாக வைக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது. அதில் “நாயர் (பைசாபாத் மாவட்ட நீதிபதி மற்றும் துணை ஆணையர்) மற்றும் குருதாட்சிங் (பைசாபத் நகர நீதிபதி) அறிவுறுத்தியவாறு செயல்பட்டவர்கள், இந்த இருவரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மசூதியின் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரை, குறிப்பிட்ட அந்த நேரத்தில் வேறு பக்கம் திரும்பி நின்று கொள்ளும்படி கூறினார்கள். அந்த நேரத்தில் இராமர் சிலையை ஏந்தியவாறு அபிராம்தாஸ் தனது உதவியாளர்களுடன் திருட்டுத்தனமாக பாபர் மசூதிக்குள் நுழைந்தார்” என்று கூறப்பட்டுள்ளது.(மேற்படி நூல்). பார்ப்பன பயங்கரவாதிகள் அன்றில் இருந்து இன்று வரை தனது அனைத்துக் கலவரங்களையும், படுகொலைகளையும் அதிகார வர்க்கத்தின் துணையுடன் தான் நடத்தி வருகின்றார்கள் என்பதற்கு இந்த அறிக்கையே ஒரு நல்ல சான்று.
பாபர் மசூதியின் மீது அநுபவ உரிமை கோரி கோபால் சிங் விஷாரத் (அகில இந்திய இந்து மகாசபையின் பைசாபாத் கிளையின் பொதுச்செயலாளர் மற்றும் அகில இந்திய இராமாயண சபையின் இணைச் செயலாளர்) வழக்கைத் தொடர்ந்தார். 1950 ஆம் ஆண்டு ஜனவரியில் இராமசந்திர தாஸ் பரமஹன்ஸ் (இந்து மகா சபையின் அயோத்தி கிளைத் தலைவர் மற்றும் அகில இந்திய இராமாயண சபையின் பொதுச் செயலாளர்) ஒரு வழக்கைப் பதிவு செய்தார். அதே போல 1959 இல் சொத்தில் தனக்கும் உரிமை உண்டு என்று நிர்மோகி அகாராவினர் வழக்கு தொடர்ந்தனர். சொத்துக்கான முழு அநுபவ உரிமையும் கோரி 1961 ஆம் ஆண்டில் சன்னி வக்ஃப் வாரியம் ஒரு எதிர் வழக்கைத் தொடர்ந்தது. 1989 ஆம் ஆண்டு அநுபவ உரிமை கோரிய அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரணை நடத்துவதற்காக இந்த வழக்கு அலகாபாத் உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது. ஏறக்குறைய 21 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் 30-09-2010 அன்று வழங்கிய தீர்ப்பில் பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் நிர்மோகி அகாரா ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் பிரித்து வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் எஸ்.யு.கான், நீதிபதி சுதிர் அகர்வால், நீதிபதி தரம்வீர் ஷர்மா ஆகிய மூன்று பேருமே ராமர் சிலை நிறுவப்பட்ட இடம் ராமர் பிறந்த இடம் என்பதை ஒப்புக்கொண்டனர்.
அதில் நீதிபதி அகர்வால் மற்றும் எஸ்.வி.கான் ஆகியோர் சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்றும், நீதிபதி தரம்வீர் ஷர்மா மட்டும் அந்தப்பகுதி முழுவதும் ஹிந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு கொடுத்தனர். சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் இருந்ததாகவும், அதை இடித்துத்தான் அங்கு மசூதி கட்டப்பட்டதாகவும் தொல்லியல் ஆய்வுத்துறை ஆவணங்கள் நிரூபிப்பதாக நீதிபதிகள் கூறினர். மேலும் கோயிலை இடித்துவிட்டு மசூதியைக் கட்டியது இஸ்லாத்திற்கு எதிரானதால் அதை மசூதியாகவே கருத முடியாது என்றும் இரண்டு நீதிபதிகள் கருத்துச் சொன்னார்கள். ராமர் பாலம் மணல்மேடு என்று பல்வேறு அறிவியல் ஆய்வுகள் சொன்னாலும் அதை ஏற்காத காவி பயங்கரவாதிகளும், அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத நீதிமன்றமும் பாபர் மசூதி வழக்கில் மட்டும் அறிவியலை அதுவும் போலியாக தயார் செய்யப்பட்ட ஆய்வறிக்கையை ஏற்றுக்கொண்டது.
தற்போது இந்த மேல் முறையீட்டு வழக்கில்தான் உச்சநீதி மன்றம் பிரச்சினையை நீதிமன்றத்திற்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளும் படி அறிவுரை வழங்கி உள்ளது. இதைக் காவி பயங்கரவாதிகளும் மகிழ்ச்சியோடு வரவேற்று இருக்கின்றார்கள். மத்தியிலும், உ.பியிலும் இப்போது அமைந்திருக்கும் தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ராமர் கோயிலை கட்டுவதற்காக காவி பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளார்கள். அதனால் கருநாக்குப் பேர்வழி பார்ப்பன சு.சாமியை வைத்து உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து நீதிபதிகளிடம் இருந்து இந்தக் கருத்தை திட்டமிட்டு வாங்கியிருக்கின்றார்கள். நிச்சயமாக தீர்ப்பு காவிபயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே வரும் என்ற நிலையில் அதற்கு முன்னதாக அதை வெளியே பேசி பங்கு பிரித்துக் கொள்ள, நீதிபதிகள் திட்டமிட்டு இந்த யோசனையைக் கொடுத்துள்ளார்கள். இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்குமென்றால் நாளை இந்தியாவில் இருக்கும் சமணர்களோ, இல்லை பெளத்தர்களோ இந்துக் கோயில்கள் மடங்களையோ, இல்லை புத்தவிகாரையை இடித்துதான் கட்டப்பட்டது, எனவே அதை எங்களுக்குத் தாருங்கள் என்றோ, இல்லை கிருஸ்தவர்கள் தேவாலயங்களை இடித்துக் கட்டப்பட்ட இந்து கோயில்களை எங்களுக்குக் கொடுங்கள் என்றோ கேட்கமாட்டர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது என்பது நீதிபதிகளுக்குத் தெரியாதது அல்ல. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை கொடுத்த தீர்ப்பை உறுதி செய்யும் பட்சத்தில் உச்சநீதி மன்றம் பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரம் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்துவிடும். எனவே தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பிரச்சினையை வெளியே பேசி தீர்த்துக் கொள்ள மானங்கெட்டத்தனமாய் சொல்லியிருக்கின்றது.
ஆட்சியில் இல்லாத போதே ராமன் சிலையை மசூதியில் வைத்ததில் இருந்து மசூதியை இடித்து தரைமட்டம் ஆக்கி ரத்த ஆறை ஓடச்செய்த இந்த பார்ப்பன பயங்கரவாதிகள் தற்போது ஆட்சியில் இருக்கும்போது எந்த அயோக்கியத்தனங்களையும் செய்வார்கள் என்பது இந்த நீதிபதிகளுக்குத் தெரியாது என்று நாம் நினைக்க முடியாது. நீதிமன்றத்திற்கு வெளியே இஸ்லாமியர்களை மிரட்டி பணிய வைக்கவே நீதிமன்றம் இந்த வாய்ப்பை பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு வழங்கியுள்ளது. நாளை காவிபயங்கரவாதிகள் சம்மந்தப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீதிமன்றத்திற்கு வெளியே பேசி சுமூகமாக போவதற்கு உச்சநீதி மன்றம் வழிகாட்டலாம். ஆர்.எஸ்.எஸ். சாகாவில் மனுநீதியை சட்டமாகப் பயின்றுவந்த பார்ப்பன நீதிபதிகளுக்கு ஆதாரங்கள் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. அப்படி ஒரு நிலை இருப்பதால்தான் மோடியில் இருந்து அசீமானந்தா வரை அனைத்து ஆதாரங்களும் இருந்தும் மிக மோசடியான முறையில் விடுவிக்கப்பட்டார்கள். நாடு முழுவதுமாக பார்ப்பன காவி பயங்கரவாதிகளின் பிடியில் போய்க்கொண்டு இருப்பதைத்தான் இது காட்டுகின்றது. நாடு முழுவதும் காவியின் நிழல் பரவிக்கொண்டே இருக்கின்றது. முற்போக்கு அமைப்புகள் தங்களது முழு பலத்தையும் ஒன்று குவித்துக் களப்பணி ஆற்ற வேண்டிய கொடிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
- செ.கார்கி