பயோனீர் ஆங்கில ஏட்டின் விஷமத்திற்குப் பதில்
டெல்லியிலிருந்து வெளிவரும் ஆங்கில தினசரி தி பயோனீர் ஒரு சங்பரிவார் ஊதுகோலாகும். இதன் ஆசிரியர் சந்தன் மித்ரா என்பவர் பா.ஜ.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். இதன் சிறப்புச் செய்தியாளர் குமார் செல்லப்பன் என்பவர் இந்த தினசரியின் டிசம்பர் 16 இதழில் "ராமேஸ்வரம் கிராமங்களில் இந்துக்கள் நுழைய ஃபத்வா (தடை)" என்ற பெயரில் ஒரு செய்திக் கட்டுரை எழுதியுள்ளார். பொய்களும் புரட்டுகளும் நிறைந்த இந்த கட்டுரைக்கு ஆங்கிலத்தில் நான் எழுதி அனுப்பியுள்ள மறுப்பு கட்டுரையின் தமிழாக்கம் இங்கே தரப்படுகின்றது.
-------------------------------------------------------------------------------------------------------
தி பயோனியர் நாளிதழில் குமார் செல்லப்பன் எழுதியுள்ள ராமேஸ்வரம் கிராமங்களில் இந்துக்கள் நுழைய ஃபத்வா (தடை) என்ற செய்திக் கட்டுரை முற்றிலும் உண்மைக்கு புறம்பாக எழுதப்பட்டுள்ளது. ஒரவஞ்சனையுடன் எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரை சங்பரிவாரத்தின் வெறுப்பைப் பரப்பும் ஊடக கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது.
ராமேஸ்வரத்தின் கிராமங்களுக்குள் வெளியாட்கள் நுழைவதைத் தடைச்செய்யும் பத்வா (இஸ்லாமிய மார்க்க அடிப்படையிலான தீர்ப்பு) வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டுகிறார் கட்டுரையாயளர். ஆனால் நான் முழுமையாக ஆய்வு செய்ததில் இப்படிப்பட்ட பத்வா எதுவும் இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கும் வழங்கப்படவில்லை. மேலும் இக்கட்டுரையில் செல்லப்பனின் குற்றச்சாட்டிற்கு இலக்காகியுள்ள ஊர்களில் பம்பனைத் தவிர மற்றவை அனைத்தும் ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் அமைந்திருக்கவில்லை. இந்த ஊர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளவை என்றாலும் பாம்பனைத் தவிர மற்றவை அனைத்தும் திருவாடனை தொகுதியைச் சேர்ந்தவை ஆகும். திருவாடனைத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த திரு. சுப. தங்கவேலன் ஆவார்.
'உள்ளூர் ஜமாத் குழுக்கள், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் கிராமங்களில், மற்ற யாரும் (அந்த மாவட்டத்து மக்களே) நுழையத் தடை விதித்து ஃபத்வாக்கள் வெளியிட்டிருக்கின்றன" என்று செல்லப்பன் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். மேலும் அத்தியூத்து, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம், சித்தார்கோட்டை போன்ற கிராமங்களில் நுழைவாயில்களில் இது போன்ற பலகைகளை உள்ளூர் ஜமாத் குழுக்கள் நிறுவியிருக்கின்றன. ”வெளியாட்களுக்கு அனுமதி இல்லை” என்ற அறிவிப்புப் பலகைகள் இந்தக் கிராமங்களில் வைக்கப் பட்டிருக்கின்றன என்று தனக்கு வழிகாட்டியாகச் செயல்பட்ட பி. ஆறுமுகம் தெரிவித்தாக செல்லப்பன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
செல்லப்பனின் இந்த கூற்று வடிகட்டிய பொய்யாகும். வெளியாட்டுகளுக்கு அனுமதி இல்லை என்று எந்த ஒரு அறிவிப்பு பலகையும் இந்த ஊர்களில் எங்கும் வைக்கப்படவில்லை. இந்த ஊர்களில் கீழே படத்தில் உள்ளது போன்ற அறிவிப்பு பலகைகள் தான் வைக்கப்பட்டிருக்கின்றன. (இந்தப் படத்தை பயோனீர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது பொட்டகவயலில் எடுக்கப்பட்ட புகைப்படம்)
இந்த அறிவிப்புப் பலகையில் வெளியாட்களுக்கு அனுமதி இல்லை என்று எந்த ஒரு வாசகமும் இல்லை. ஆனால் செல்லப்பன் தனது கட்டுரையில் இல்லாத ஒன்றைத் தான் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்புப் பலகையில் கூறப்பட்டுள்ளதும் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தமிழ்நாடு பொது இடங்களை (அசிங்கப்படுத்துதலைத் தடுக்கும்) சட்டம் 1959ல் உள்ள விதிமுறைகள் தான். இந்த ஒழுங்குமுறைகள் கட்சி மதம் மற்றும் சாதிக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது. மேலும் வாகனங்களிலிருந்து ஒலி எழுப்புவது குறித்தும் தமிழ்நாடு மோட்டர் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் தான் இந்த அறிவிப்புப் பலகையில் கூறப்பட்டுள்ளது. அழகன்குளம் கிராமத்தில் முஸ்லிம் மற்றும் இந்து சமுதாய தலைவர்கள் ஒன்று சேர்ந்து தான் இந்து முஸ்லிம் ஐக்கிய சபை என்ற பெயரில் இப்படிப்பட்ட அறிவிப்புப் பலகையை சில ஆண்டுகளுக்கு முன்பு வைத்தார்கள். பயோனீயர் வெளியிடாத அந்த அறிவிப்புப் பலகையின் படம் கீழே தரப்பட்டுள்ளது.
அன்னிய செலவாணி வியாபாரி என்று அறிமுகப்படுத்தி செந்தில்வேல் என்ற அழகன்குளத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் தன்னிடம் பின்வருமாறு தெரிவித்தாக செல்லப்பன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் :
"முனீஸ்வரன் கோயில் வாசலில் சில இஸ்லாமிய இளைஞர்கள் ஒரு பசுவை வெட்டியது கிராமத்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ‘முஸ்லிம் இளைஞர்கள் தாங்கள் கூறுவதைக் கேட்க மாட்டார்கள், அதனால் தங்களால் ஏதும் செய்ய முடியாத நிலை இருக்கிறது என்று ஜமாத் குழுத் தலைவரும், செயலாளரும் எங்களிடம் சொன்னார்’" இதுவும் ஒரு வடிகட்டிய பொய்யாகும். கோயிலுக்கு முன்பு எந்த ஒரு பசுவும் அறுக்கப்படவில்லை. கடந்த காலங்களில் செய்தது போல் இந்த ஆண்டும் பக்ரீத் என்னும் ஹஜ் பெருநாள் அன்று நூருல்லா என்ற ஜமாஅத் நிர்வாகி கோயிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள தனக்கு சொந்தமான சுற்றுச் சுவர் கட்டப்பட்ட இடத்தில் காளை மாடுகளை அறுத்தார். ஆனால் செந்தில்நாதனும் அவரது கட்சிக்காரர்களும் இதனைக் கண்டித்து சாலைமறியல் செய்தனர். இவர்களில் 12 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்குமிடையில் நல்லுறவு நிலவி வரும் கிராமமாக அழகன்குளம் விளங்குகின்றது. இரு சமூகங்களுக்கும் இடையில் நிலவும் நல்லுறவின் வெளிப்பாடாக ஊராட்சி மன்றத் தேர்தலில் ஒரு முறை இந்து என்றால் மறுமுறை முஸ்லிம் என்ற அடிப்படையில் தலைவர்கள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்து முஸ்லிம் ஐக்கிய சங்கம் என்ற பெயரில் விளம்பரங்களுக்கு தடைவிதித்து இரு சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து அறிவிப்பு பலகை வைத்திருப்பதே இந்த ஊரில் நிலவும் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இது போன்ற அறிவிப்புப் பலகைகள் இந்த கிராமங்களில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்துள்ளன. இந்த அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்குமுறைகள் காரணமாக இந்த கிராமங்களில் அமைதி நிலவுகின்றது. பதட்டம் நிறைந்த இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த கிராமங்களில் எப்போதுமே சமூகங்களுக்கிடையில் அமைதி நிலவி நிற்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த கிராமங்களில் முஸ்லிம் வீடுகளில் நடைபெறும் திருமணங்களுக்கு இந்துக்கள் வருகை தருகின்றனர். அவர்களை வரவேற்று முஸ்லிம்கள் விருந்தும் அளிக்கின்றனர். இந்த கிராமங்களில் இந்த கட்டுப்பாடுகள் கூட கண்டிப்புடன் பின்பற்றப்படுவதில்லை. செல்லப்பன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கிராமங்களில் ஒன்றான பனைகுளத்தில் 15 நாட்களுக்கு முன்பு பேருந்து நிறுத்த கட்டிடத்தில் சில இந்து அமைப்புகள் சுவரொட்டிகளின் புகைப்படக் காட்சிகளை இங்கே அளிக்கிறேன்.
விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் மாநில தலைவராகவும் இராமநாதபுரம் மாவட்ட ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த போதினும் அந்த பொறுப்புகளை மறைத்து விட்டு அவரை ஒரு வழக்குரைஞர் என்று தனது கட்டுரையில் செல்லபன் அறிமுகப்படுத்தும் குப்புராம்: "பாம்பன் கிராமத்து பஞ்சாயத்து ரோட்டுக்கு வெளியாட்கள் யாரும் வரக் கூடாது என்று தடை விதித்து, ”இது பொதுவழி அல்ல” என்று எழுதப்பட்ட அறிவிப்பு பலகை இஸ்லாமிய தீவிரவாதிகளால் வைக்கப்பட்டுள்ளது. அன்பு, கருணை, நேசம், சமத்துவம் ஆகியவற்றைப் போதித்த பாம்பன் ஸ்வாமிகள் (1848-1929), தான் பிறந்த இடத்தை, அவருக்குப் பின் வந்த சந்ததியினர் இப்படி மாற்றி வைத்திருக்கிறார்கள் என்பதை அறிய நேர்ந்தால், எவ்வளவு வருத்தப்படுவார்" என்று தன்னிடம் தெரிவித்தாகக் குறிப்பிடுகிறார்.
குப்புராம் தெரிவிக்கும் பாம்பனில் உள்ள அறிவிப்பின் புகைப்படத்தை பயோனீர் வெளியிடவில்லை. அந்த படம் இது தான்:
இந்த அறிவிப்பு பாம்பனில் உள்ள எந்த பொதுவிடத்திலும் எழுதப்படவில்லை. பாம்பனில் முஸ்லிம்கள் மட்டுமே வாழும் பகுதியில் உள்ள மிகச் சிறிய சந்துகளில் உள்ள ஒரு வீட்டின் சுவரில் எழுதப்பட்டுள்ளது. இது போல் 4 இடங்களில் மட்டுமே உள்ளுர் ஜமாஅத்தினரால் எழுதப்பட்டுள்ளதே தவிர "முஸ்லிம் தீவிரவாதிகளால்" எழுதப்பட்டவை அல்ல இந்த அறிவிப்பு. இந்தப் பகுதியில் பெண்களை கேலி செய்யும் சம்பவம் 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதைத் தொடர்நது இந்த அறிவிப்பு எழுதப்பட்டது. பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் இந்த சிறிய சந்துகளில் முஸ்லிம் ஆண்கள் செல்வதும் கூட வரையறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நமது தமிழகத்தில் மகளிருக்கென தனி பேருந்துகள், பேருந்துகளில் தனி இருக்கைகள், உள்ளுர் ரயில்களில் தனி பொட்டிகள் இருக்கும் போது அதனைக் குறை சொல்லாதவர்கள் பெண்களின் பாதுகாப்பிற்காக செய்யப்பட்டுள்ள இந்த அறிவிப்பை குறை கூறுவது அவர்களின் ஒரவஞ்சனையின் வெளிப்பாடுதான்.
பாம்பன் இன்று இந்துக்களும், முஸ்லிம்களும் கிறிஸ்த்தவர்களும் முழு நல்லிணக்கத்துடன் வாழும் அமைதியான கிராமம் ஆகும். குப்புராமு போன்றவர்கள் நடத்தும் பாசிச அமைப்புகளுக்கு பாம்பன் இடம் கொடுக்கவில்லை. பாம்பன் கிராமத்திற்குள் ஒரு பகுதியில் அமைந்துள்ளது தான் குந்துகால். சுவாமி விவேகானந்தர் தனது புகழ்பெற்ற சிகாகோ உரையை முடித்துவிட்டு ஜனவரி 26 1897ல் முதலில் வந்திறங்கிய இடம் தான் குந்துகால். இராமநாதபுரத்தின் மன்னர் அவரை அங்கு வைத்து வரவேற்றார். அந்த இடத்தில் விவேகானந்தரின் நினைவாக ஒரு மண்டபம் கட்ட இராமகிருஷ்ண மடம் விரும்பியது. அந்த நிலத்தின் உரிமையாளர்களான மண்டபம் மரைக்காயர் என்ற முஸ்லிம் குடும்பத்தினரை அணுகினர். விலை கொடுத்து அந்த நிலத்தை வாங்க மடம் தயாராக இருந்தது. ஆனால் மண்டபம் மரைக்காயர் குடும்பத்தினர் ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த இடத்தை இலவசமாகவே வழங்கினர். அந்த இடத்தில் இராமகிருஷ்ண மடத்தின் சார்பில் விவேகானந்தர் இல்லம் கட்டப்பட்டு கடந்த 2009ல் திறந்து வைக்கப்பட்டது. எனவே ஏராளமான முஸ்லிம் நண்பர்களின் அன்பைப் பெற்று அரவணைப்பில் வாழ்ந்த பாம்பன் சாமிகள் இன்று பாம்பனில் நிலவும் இந்து - முஸ்லிம் ஒற்றுமை நிலையைக் கண்டு குப்புராமு சொல்வது போல் வருத்தத்திற்கு பதிலாக மகிழ்ச்சியை அடைந்திருப்பார்.
"2008ல் திமுக ஆட்சியின் போது வேதாளை கிராமத்தில் சில முஸ்லிம் இளைஞர்கள் காலணிகளுடன் சேர்த்து தேசியக் கொடியை ஏற்றினர். அப்போதைய காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஹசன் அலி இந்த வழக்கை நீர்த்துப் போக வைத்தார்" என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் குப்புராமுவை மேற்கோள் காட்டி செல்லப்பன் கூறுகிறார். மேலும் ".....புதுமடத்திலும் இதே போன்று தேசியக் கொடியுடன் காலணிகளையும் சேர்த்து ஏற்றப்பட்டது. இதனையும் ஹசன் அலி நீர்த்துப் போக வைத்தார்" என்றும் செல்லப்பன் குறிப்பிடுகிறார். வேதாளை கிராமத்தில் தேசியக் கொடியை அவமதிக்கும் இது போன்ற எந்தவொரு செயலும் நடைபெறவில்லை. புதுமடத்தில் 5வது மற்றும் 6வது படிக்கும் 5 மாணவர்கள் விளையாட்டுத்தனமாக காலணிகளை கொடிக் கம்பத்தில் ஏற்றினர். இதற்காக இந்த மாணவர்கள் மீது காவல்துறை வழக்கு தொடுத்து அவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்தியது. இந்த மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் அன்றைய எம்எல்ஏ ஹஸன் அலி தலையீட்டு நீர்த்துப் போக வைத்தார் என்ற பேச்சுக்கே இடமில்லை.
தனது கட்டுரையில் மீண்டும் குப்புராமை மேற்கொள்காட்டி "இராமநாதபுரத்தில் இருக்கும் சுமார் 50 விழுக்காடு வர்த்தக நிறுவனங்கள், முஸ்லிம் சமுதாயத்தினருக்கு சொந்தமானது. முஸ்லிம் சமுதாயத்தினரின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே ஒரு இந்துவால் இங்கே வியாபாரத்தைத் துவக்க முடியும். இது தான் இந்த மாவட்டத்தின் எழுதப்படாத சட்டம்" என்று செல்லப்பன் ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை தொடுக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒரு பொய்யாகும்.
விழுக்காடு அளவில் தமிழகத்தில் அதிக முஸ்லிம்கள் வாழும் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் முஸ்லிம்களின் மக்கட் தொகை இந்த மாவட்டத்தில் 15 விழுக்காட்டை தாண்டவில்லை. 2001 மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி மாவட்டத்தின் மக்கட் தொகையில் 80.41 இந்துக்கள், 14.4 முஸ்லிம்கள், 5.08 கிறிஸ்த்தவர்கள் 0.11 மற்றவர்கள் என்ற விகிதாச்சாரத்தில் உள்ளனர். வர்த்தகர் சமூகத்தினரான முஸ்லிம்களுக்கு இராமநாதபுரத்தில் நல்ல எண்ணிக்கையில் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன என்பது உண்மை தான். இருப்பினும் இராமநாதபுரம் நகரத்தில் உள்ள மொத்த வர்த்தக நிறுவனங்களில் முஸ்லிம்கள் நடத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை 20 விழுக்காட்டிற்கு மேல் இருக்காது. மாவட்ட அளவில் 12-15 விழுக்காட்டைத் தாண்டாது. மேலும் வெளிநாட்டில் வாழும் முஸ்லிம்களும், வளைகுடாவிற்கு வேலைக்குச் சென்று விட்டு திரும்பியவர்களும் தாங்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை இராமநாதபுரம் மாவட்டத்தில் முதலீடு செய்துள்ளதின் பலனாக அது இராமநாதபுரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக அமைந்து அனைத்து தரப்பினருக்கும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. இந்த நிலை அனைத்து சமூகத்தினருக்கும் நன்மையைத் தான் பெற்றுத் தந்துள்ளது. முஸ்லிம்கள் உட்பட யாருடைய அனுமதியும் பெறாமல் எந்தவொரு இந்துவும் வியாபாரத்தைத் தொடங்கலாம். குப்புராமின் கூற்று ஒரு அம்மணமான பொய்யாகும். கோயபல்ஸின் சீடர்கள் இவ்வாறு பொய்யுரைப்பதற்கு என்றும் வெட்கப்பட மாட்டார்கள்.
"மதமாற்றமும் கள்ளக்கடத்தலும் மிக அதிகமாக மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன. வேலூரில் ஜீலை 2013ல் இந்துத் தலைவர் வெள்ளையப்பனைக் கொன்ற பன்னா இஸ்மாயிலும் பிலால் முஹம்மதும் (மாலிக்கும்) கீழக்கரைக்கு வந்தனர். அவர்களது கீழக்கரை வருகை குறித்து காவல்துறை விசாரிக்க வேண்டும்" என்று இராமநாதபுரத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சுப.நாகராஜன் குறிப்பிடுவதாக செல்லப்பன் எழுதியுள்ளார். இராமநாதபுரத்தில் நிலவுவதாக நாகராஜன் கருதும் இது போன்ற நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்திருக்க வேண்டும். இது போன்ற புகார்கள் எதுவும் அளிக்கப்படவில்லை என்பதே இந்த அதிரடியான கருத்து கற்பனையானது என்பதற்கு அடையாளமாக இருக்கின்றது. காவல்துறையினரால் தேடப்பட்டு பிடித்துக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் உண்டு என்று அரசு அறிவித்திருந்த நிலையில் அந்த இருவரும் உண்மையிலேயே கீழக்கரைக்கு வந்திருப்பதாக நாகராஜனுக்குத் தெரிந்திருந்தால் உடனடியாக அவர் தகவல் அளித்து காவல்துறை அவர்களை கைதுச் செய்வதற்கும் காவல்துறை குற்றஞ்சாட்டியுள்ளது போல் மேலும் கொலைச் செயல்களில் அவர்கள் இருவரும் ஈடுபடாமல் இருப்பதற்கும் அவர் வழிவகுத்திருக்க வேண்டியது தானே?
"1981லிருந்தே இந்த மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் இந்துக்களுடன் யுத்தப் பாதையில் இருந்து வருகின்றனர்" என்று நாகராஜன் தெரிவிப்பதாக செல்லப்பன் குறிப்பிடுகிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான கூற்றாகும். பெரும்பாலும் இம்மாவட்டத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் நல்லிணக்கத்துடனும் பரஸ்பரம் ஒத்துழைப்புடனும் தான் வாழ்ந்து வருகின்றனர். செல்லப்பன் தனது கட்டுரையில் குறிப்பிடும் கிராமங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் அனைத்து மக்களும் பயனடையும் அரசு பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு பொது சேவைக்கு முஸ்லிம்கள் பெருமளவு பொருளதவி செய்து வருகின்றனர்.
"கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் தொகுதியிலிருந்து முஸ்லிம்கள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்கள் மட்டுமே இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட முடியும்" என்று பா.ஜ.கவின் ராமநாதபுரம் நகரத் தலைவர் என். சூரியபிரகாஷ் தெரிவித்தாக செல்பப்பன் குறிப்பிடுகிறார். 1996 முதல் பல்வேறு மதசார்பற்ற கட்சியைச் சேர்ந்த முஸ்லிம்களே சட்டமன்ற உறுப்பினர்களாக இராமநாதபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பது உண்மை தான். ஜனநாயக ரீதியாக நடைபெறும் தேர்தலில் அவ்வாறு முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில் என்ன தவறு இருக்கின்றது? இருப்பினும் ஒரு உண்மையை மறந்து விடக் கூடாது. 1996க்கு முன்பு 44 ஆண்டுக்காலமாக ("1981 முதல் முஸ்லிம்கள் இந்துக்களுடன் யுத்தக் களத்தில் உள்ளனர்" என்று நாகராஜன் குறிப்பிடும் காலக்கட்டம் உட்பட) இராமநாதபுரம் தொகுதியிலிருந்து பல்வேறு மதசார்பற்ற கட்சிகளைச் சேர்ந்த இந்துக்களே எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் சட்டமன்றத்தில் நான் ஆற்றியுள்ள உரைகள், எழுப்பியுள்ள பிரச்னைகள் பற்றிய பதிவுகளை படித்துப் பார்க்குமாறு குமார் செல்லப்பனைக் கேட்டுக் கொள்கிறேன். அவர் வியந்து போகும் வகையில் ராமேஸ்வரம், திருஉத்தரகோசமங்கை மற்றும் திருப்புல்லானிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவது, நல்ல சுகாதார நிலையை இந்த ஊர்களில் பராமரிப்பது பற்றி நான் சட்டமன்றத்தில் பேசியுள்ளேன். இந்த ஊர்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்த்து வைத்துள்ளேன். ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண குடிலைச் சேர்ந்த சுவாமி பிரவாணந்தா போன்ற உண்மையான இந்து தலைவர்கள் என் தொகுதியைச் சேர்ந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் மாச்சரியமின்றி நான் ஆற்றி வரும் சேவைகளுக்கு சான்று பகர்வார்கள்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்துவதில் வெற்றி பெற இயலவில்லை என்பதால் குப்புராமும் அவரது சங்க பரிவாரமும் முஸ்லிம்கள் மீதும் இந்துக்கள் மீதும் வெறுப்புணர்வு கொண்டிருக்கிறார்கள். அவர்களது விரக்தியின் வெளிப்பாடகவே பயோனீர் ஏட்டின் இந்த செய்திக் கட்டுரை அமைந்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் வாழும் இந்துக்களும் முஸ்லிம்களும் கிறிஸ்த்தவர்களும் அவர்களது விஷம் தோய்ந்த சதித்திட்டத்திற்கு பலி ஆகாமல் தொடர்ந்து நல்லிணக்கத்துடனும், அமைதியுடனும். பரஸ்பர ஒத்துழைப்புடனும் தொடர்ந்து வாழ்வார்கள் என்பதுவே இராமநாதபுரம் மாவாட்டத்தின் உண்மை நிலை.
- முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், , மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்றக் குழுத் தலைவர் (