இந்தியா என்கிற தேசம், பல்வேறு மதங்கள், மொழிகள் நிறைந்த பன்மைச்சமூகம் என்பதனாலே, துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிற பெருமை வாய்ந்தது. இந்திய சுதந்திரப்போராட்டம் என்பது இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள்,
கிறிஸ்தவர்கள் என எல்லோரின் தியாகத்தினாலும் மலர்ந்தது. அதனால் தான், மதச்சார்பின்மை என்கிற மகத்தான தத்துவத்தை, சட்டமாக்கினார் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.
பாக்கிஸ்தான் பிரிவினையை கடுமையாக எதிர்த்துப் போராடினார் கான் அப்துல் கபார்கான். பின்னாளில், அவர் எல்லைக் காந்தி என்று அழைக்கப் பட்டார். இது இன்றளவும் மறைக்கப்பட்ட வரலாற்றின் தொடர்ச்சியாகவே உள்ளது.1957 இல் நடைபெற்ற முதல் சுதந்திரப்போரில், அமைக்கப்பட்ட முதல் தேசிய அரசு, பகதூர் ஷா தலைமையில் அமைந்தது. திண்டுக்கல் விருட்பாட்சி போருக்கு, ராணி வேலுநாச்சியாருக்கு, தன் படைகளை அனுப்பி உதவினார் திப்பு சுல்தான். மண்ணின் மைந்தர்களான இஸ்லாமியர்களை அந்நியர்களாக காட்ட நினைக்கும், பார்ப்பன ஆதிக்க சக்திகள், மருத நாயகம் உள்ளிட்ட மகத்தான வீரர்களின் வரலாற்றை, இருட்டடிப்பு செய்து விட்டது.
விடுதலை இந்தியாவில் நடைபெற்ற முதல் பயங்கரவாத செயல், அண்ணல் காந்தியின் படுகொலையே எனலாம். அதை செய்த நாதுராம் கோட்சே, இஸ்மாயில் என்று தன் கையில் பச்சைக் குத்திக்கொண்டே, இப்பாதகத்தைச் செய்தான். அதன் வழியாக இந்து முஸ்லிம் கலவரம் வெடித்தது. தந்தை பெரியார் இதை மக்கள் மன்றத்தில் அம்பலப் படுத்தினார். சமூக அமைதியை நிலை நாட்டினார்.
பெரும்பான்மை மக்கள் வன்முறையில் ஈடுபட்டால், அதை தேசபக்தியாகப் பார்ப்பதும், அதற்கு, எதிர்வினையாக சிறுபான்மை மக்கள் திருப்பித் தாக்கினால், அதை தீவிரவாதமாகப் பார்ப்பதும், மிகவும் ஆபத்தான மனநிலை என்றார் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. காந்தியின் கொலை வழக்கைக்கூட நேர்மையாக நடத்த முடியாத படி, அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் இந்துத்துவ மனோபாவம் அதிகார மையத்தில் இயங்குவதைக் குறித்து வருந்திய குறிப்புகளை, வரலாற்றில் வாசிக்க முடிகிறது.
பயங்கரவாதம் என்பது எந்த ஒரு மதத்திற்கும் சொந்தமான தனிச்சொத்து அல்ல. அது எல்லா மதத்திலும் தொன்று தொட்டு இயங்கி வருகிறது. 1980-களில் சீக்கியர்கள், தனிநாடு கோரிக்கையான காலிஸ்தான் கேட்டு, போராடினர். இந்திரா காந்தி தலைமையிலான அரசு, இராணுவ நடவடிக்கையில் இறங்கியது. பொற்கோயில் வரை நீண்ட இராணுவ நடவடிக்கையால், அவமதிக்கப் பட்டதாக உணர்ந்தனர் சீக்கிய குருக்கள். அதன் விளைவாகவே, இந்திரா காந்தியின் படுகொலை நிகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக, சீக்கியர்கள் வேட்டையாடப்பட்டனர். மிக மோசமான முறையில், அப்பாவிகள் பலரும் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கான நீதி வழங்கப்படவில்லை. கால வெள்ளம் கடந்து செல்கிறது. ஆனாலும், இன்று பஞ்சாப் அமைதிப் பூங்காவாகவே திகழ்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1980-களில் மண்டைக்காடுப் பகுதியில் கிறிஸ்தவ மக்களுக்கும், இந்துக்களுக்குமான மத கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தினர் சில தீய சக்திகள். ஆனால், அம்முயற்சி தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்ற ஆன்மீகப் பெரியவர்களின் நல்லிணக்க செயல்பாட்டால் முறியடிக்கப்பட்டது. தமிழகம் பெரியார் மண் என்பது, மீண்டும் நிரூபிக்கப்பட்டது. அதே போல, பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, அதை கண்டித்து, மதுரையில் தவத்திரு.குன்றக்குடி அடிகளார் தலைமையில், இந்துக்கள் தலைமையில் கண்டன ஊர்வலம் நடந்தது.
ஒரிசாவில் தொழுநோயாளிகளுக்கு சேவை செய்வதன் வழியாக, கிறிஸ்தவ மதத்திற்கு அழைப்புப் பணியில் ஈடுபட்ட பாதிரியார் உயிரோடு கொளுத்தப்பட்டார். அதை மனிதாபிமானம் கொண்ட பெரும்பான்மை இந்துக்கள் யாரும் ஏற்கவில்லை. அஜ்மீர் தர்காவிலும், நாகூர் தர்காவில் கூடும் கூட்டம், பெரும்பாலும் இந்துக்களே என்பது, அங்கு சென்று வந்தவர்களுக்கு தெரியும். மனிதர்களிடத்தில் பாகுபாடுகள் காட்டுபவன் இறைவனாக இருக்க முடியாது. தான் நம்பும் கடவுளிடம், வேறுபாட்டை எதிர்பார்ப்பவன், உண்மையான பக்தனாக இருக்க முடியாது.
செல்வராஜ் என்கிற போக்குவரத்து காவலர் படுகொலையை இந்து முஸ்லிம் கலவரத்துக்கு கோவையில் பயன்படுத்திக்கொண்டனர் மதவெறியர்கள். இஸ்லாமியர்களின் வணிக நிறுவனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பலர் கொலை செய்யப்பட்டனர். அதற்கு எதிர்வன்முறையாக, விரும்பத்தகாத குண்டுவெடிப்புகளும் நிகழ்ந்தன. இதன் விளைவாக ஏற்பட்ட கலவரம் திருப்பூர் வரை பரவியது. ஆனால், கோத்ரா இரயில் எரிப்புச் சம்பவம், குஜராத் என்கிற மாநிலம் தழுவிய கலவரமாக மாறியது. மற்ற வட மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழகம் அமைதிப்பூங்காவாகவே திகழ்கிறது.
எங்கெல்லாம் குண்டு வெடிக்கிறதோ, அங்கெல்லாம் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுகிறது. இதன் பின்புலத்தை ஆராய்ந்தால், அதிர்ச்சிகரமான உண்மைகள் பல வெளிவருகிறது. மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடையவராக கைது செய்யப்பட்டார் அசிமானந்தா என்கிற பெண் சாமியார். இந்த உண்மைகளைக் கண்டறிய காரணமாக இருந்த ஹேமந்த் கர்கரே படுகொலை செய்யப்பட்டார். இஸ்லாமிய தீவிரவாதத்தை தூண்டுவதன் வழியாக மட்டுமே, இந்து ராஜ்ய கனவை, ஆதிக்கவாதிகள் நிறைவேற்ற இயலும்.
இடதுசாரிகள், தமிழ்த்தேசியவாதிகள், பெரியாரியவாதிகள், ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களான அம்பேத்கர் வழிநடப்பவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் வழியாக மட்டுமே, மதச்சார்பின்மை என்கிற சமூக நல்லிணக்க கோட்பாட்டை நம்மால் காப்பற்ற இயலும். இந்தியா ஒரு போதும் குஜராத்தாக மாறி விடக்கூடாது. காந்தி தேசம், கோட்சேக்களின் கூடாரமாக மாறி விடக்கூடாது. அதுவே, விடுதலைப்போராட்டத்தின் தங்களின் இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு, நாம் செய்யும் உண்மையான வீர வணக்கமாகும்.
- மானாமதுரை சீ.தீனதயாளன்