நாட்டு மக்களுக்கு உறுதியளித்தவாறு ஒரு மெல்லிய திருத்தத்தைக் கூட சேர்க்க முனையாமல் எற்கெனவே தான் நீர்த்துப்போகச் செய்த அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் வாக்களித்தது.

இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கையை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்ற போதிலும் அந்த மன்றத்தில் கூட இலங்கையில் நடந்தது தமிழினப்படுகொலை என்றோ, இப்போதைய தேவை 2008-2009 இறுதிகட்ட போரின் போது நடைபெற்ற மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள் மீது தற் சார்பான பன்னாட்டுப் புலன் விசாரணை என்றோ ஒரு தீர்மானம் நிறைவேற்றப் படவில்லை.

இவ்வாறானதொரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மறுத்தது. காங்கிரசு கட்சி மட்டுமல்ல. பாரதிய சனதா, சமாஜ்வாதி, திரிணமூல், பகுசன் சமாஜ், மார்க்சிஸ்ட், ஐக்கிய சனதா தளம் போன்ற எதிர்க்கட்சிகளும்தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல.

இறையாண்மையுள்ள இலங்கைநாட்டிற்கு பாதகமான எந்தத் தீர்மானத்தையும் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடமாட்டோம் என்றும், ஒரு நட்பு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்றும், தி.மு.க.வோடு ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்துக்கொள்ள எங்களை அழைக்காதீர்கள் என்றும் பலவாறு காரணங்கள் கூறி அனைத்துக் கட்சிகளும் தட்டிக் கழித்தன. நாடாளுமன்ற அவைத்தலைவர் மீராக்குமார் தலைமையில் 20.3.2013 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிவேதும் எடுக்காமல் இவ்வாறு கலைந்தது.

 ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் 21.3.2013 அன்று அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் எதையும் இந்திய அரசு வலியுறுத்தாதையும் இக்கட்சிகள் கண்டுகொள்ளவில்லை.

தமிழினத்திற்கெதிராக வன்மம் பாராட்டுவதில் இந்திய ஆளுங்கட்சியும் அனைத்திந்திய எதிர்க்கட்சிகளும் ஒரே நிலையில்தான் இருக்கின்றன. எனத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சொல்லி வருவது. உண்மை நிலைதான் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதே நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஈழத் தமிழர் சிக்கல் தொடர்பாக சில நாட்களுக்கு முன் விவாதம் நடந்த போது இக்கட்சிகளின் தலைவர்கள் இலங்கைப் படை அப்பாவித் தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்ததையும், தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்றும், அங்கு நடந்த போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை வேண்டுமென்றும், இலங்கையில் நடந்த அட்டூழியங்களுக்கு இந்திய அரசு துணை செய்தது என்றும் பேசியதை தொலைக்காட்சியின் வழியாக மக்கள் பார்த்தார்கள்.

ஆனால் தாங்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு மனதான தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய சூழல் வந்த போது இக்கட்சிகள் தங்களது உண்மை முகத்தை காட்டிவிட்டன.

காங்கிரசுக் கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகி, மன்மோகன் சிங் ஆட்சி பெரும்பான்மையை இழந்து ஆட்டம் கண்ட சூழலில் கூட இந்த ஆட்சிக் கவிழ்ந்து விடாமல் முட்டுக்கொடுத்து நிற்கின்றன.

தமிழர்களின் இனப்பிரச்சினைக் காரணமாக இந்த ஆட்சி கவிழ்ந்துவிடக் கூடாது என்பதில் வடநாட்டுக் கட்சிகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன.

அனைத்திந்திய கட்சிகளின் தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினையில் ஆதரவான கருத்துக் கொண்டிருந்தாலும் அது அக்கட்சிகளின் அனைத்திந்திய முடிவாக வராது. என்பது மீண்டும் வெளிப்பட் டுள்ளது. ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையும், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்திந்திய தலைவர்களும் அக்கறைக்காட்டினாலும் அக்கட்சியின் நாடாளுமன்ற மக்களைவைக் குழு தலைவர், அக்கட்சியின் அனைத்திந்திய தொழிற்சங்கத் தலைவர் குருதாஸ்தாஸ்குப்தா இலங்கைக்கு எதிரான தீர்மானம் எதையும் மக்களவையில் அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

பா.ச.க. தமிழகத் தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன் நாடாளுமன்றத் தீர்மானத்தை கோரிய போதும் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சுஷ்மா சுவராஜ் அவ்வாறான தீர்மானம் வருவதைக் கடுமையாக எதிர்த்தார்.

இலங்கையில் தமிழின அழிப்பு நடந்ததை அவர்களுக்கு நாம் உரியவாறு எடுத்துக் கூறாததால் ஏற்பட்ட நிலை அல்ல இது. ஏனெனில் இதே தலைவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னால் தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்களோடு இணைந்து அங்கு நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் பற்றி உரத்துப் பேசியவர்கள்தாம். தமிழ்நாட்டு உறுப்பினர்களோடு சேர்ந்து வெளிநடப்பு செய்தவர்கள்தாம்.

உண்மையில் இச்சிக்கலில் இவர்களுக்கு அக்கறை இருந்திருக்குமானால் மன்மோகன் ஆட்சி பெரும்பான்மை இழந்ததை சாதகமாகப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிரான வலுவான தீர்மானத்தை வற்புறுத்தியிருக்க முடியும். ஆனால் நேர் மாறாக நடந்துகொண்டார்கள்.

தமிழர்களுக்கு எதிரான இந்தக் கொள்கை ஒரு கட்சி சார்ந்த அல்லது சோனியா என்ற ஒரு தலைவரின் பழிவாங்கல் உணர்ச்சியை மட்டுமே சார்ந்த சிக்கலல்ல என்பது மீண்டும் தெளிவாகி விட்டது. இந்தியா என்ற கட்டமைப்பே தமிழினப்பகைக் கட்டமைப்பு என்பதை இது உறுதி செய்துவிட்டது.

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த இந்திய அரசு தமிழர்களுக்கு எதிரான அரசு என்பதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆரிய இந்தியத்தின் உள்நாட்டுத் தமிழினப்பகைக் கொள்கையின் நீட்சியே. ஈழத்தமிழர்களுக்கெதிரான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையாகும்.

காவிரி, முல்லைப்பெரியாறு, மூன்றுதமிழர் சாவுத்தண்டனை, போன்ற பல சிக்கல் களிலும் அது வெளிப்பட்டாலும் மீனவர்சிக்கலில் அது துல்லியமாகத் தெரிகிறது. கேரளத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கொலை தொடர்பான பிரச்சினையில் இத்தாலியோடு தூதரக உறவைக் கூட துண்டிக்கத் துணிந்துள்ள இந்திய அரசு, இத்தாலித் தூதரை பிணைக்கைதி போல் வைத்துள்ள இந்திய அரசு 600 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைப்படை கொன்ற பிறகும் அசையவில்லை. இலங்கை அரசுக்கு எதிராக “கண்டனம்” என்ற சொல்லைக்கூட உச்சரிக்க முன்வராதவர்தான் இந்தியப் பிரதமர். கேரள மீனவர் சிக்கலில் இத்தாலிக்கு எதிராகக் கூச்சல் எழுப்பிய வட நாட்டுத் தலைவர்கள் தமிழக மீனவர்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பியதே இல்லை.

உள்நாட்டு தமிழர் தொடர்பான பகைப்போக்கே வெளிவுறவிலும், ஈழத்தமிழர் சிக்கலிலும் வெளிப்படுகிறது.

எனவே தமிழின உணர்வாளர்கள் தமிழர் சிக்கல்களை ஒரு கட்சி சார்ந்த அல்லது ஒரு கூட்டணி சார்ந்த சிக்கலாகப் பிறழ்ச்சியாக புரிந்துகொள்ளக்கூடாது. இது ஒட்டுமொத்த இந்தியத்தின் இனக்கொள்கை என்ற உண்மையை உணரவேண்டும். இந்தியத்தின் இந்த தமிழினப்பகைப் போக்கு கட்சிக் கடந்தது.

தமிழ்நாட்டுத் தமிழர்களின் அடிமை நிலைக்கு எதிரான விடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழர்கள் விடுதலை போராட்டமும் ஒரு சேர நடைபெற வேண்டும். என்ற தெளிவு வேண்டும்.

ஐ.நா. விவாதமும், இந்திய நாடாளுமன்றத்தின் நிலைப்பாடும் உணர்த்தும் உண்மை இதுதான்.

Comments

4 comments

4
ஷாலி
//கேரள மீனவர் சிக்கலில் இத்தாலிக்கு எதிராகக் கூச்சல் எழுப்பிய வட நாட்டுத் தலைவர்கள் தமிழக மீனவர்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பியதே இல்லை.// இதற்க்கு அடிப்படை காரணம் மலையாள ஆரிய பார்ப்பன அதிகாரிகளின் ஆதிக்கம் அயல் உறவுக்கொள்கையை தீர்மானிக்கிறது. சமூக கருத்தை உருவாக்குவதும்,ஒழித்துக்கட்டுவதும் அவர்களுக்கு கை வந்த கலை.”டேம் 999” படம் எடுத்து படம் காட்டியவர்களுக்கு இதெல்லாம் சாதாரணம். இந்திய ஆரியத்தின் இலங்கை ஏஜென்ட்டாக ராஜபக்சே இருப்பதால்தான் வடநாட்டு ஆரியத்தலைவர்கள் வாய்திறப்பதில்லை.மகா விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான புத்தனின் சீடர் ராஜபக்சே புத்த பெருமாளை சேவிக்க திருப்பதி வந்து திருப்தியாக போகிறார்.சுஷ்மா சுவராஜ்,சு.சாமி வகையறாக்கள் வாழ்த்துப்பா பாடுவதன் மர்மம் இதுதான். பச்சை தமிழர்கள் ப.சிதம்பரம்,வாசன் போன்றவர்கள் பதவிக்காக பல்லிளிக்கும்போது ஆரிய அரசியல்வாதிகளிடம் ஆதரவு எதிர்ப்பார்ப்பது அறிவீனம்.தமிழன் தன்னை நம்பாமல் பிறரை நம்பி ஏமாறுவது என்று மாறுமோ?
RRaj
இது உண்மை தான்... எபோது மக்கள் உணர்கிறார்கள் என்று பார்போம்.... முதலில் தமிழ் நாட்டில் ஒரு பச்சை தமிழனை அழ வைக்க வேண்டும், வந்த பண்ணிகள் எல்லாம் அண்டாது போதும்.... திராவிடம் வேண்டாம்... தமிழன் போதும்... முதலில் தமிழ் நாட்டில் உள்ள அடிமை தனைதை தீர்த்தால் தான், இந்தியாவிடம் சரியான நேர்கடி கொடுக்க முடியும்... இல்லை என்றால் 2009 நில்லாமை, 2013 மாணவர்களின் குரலுக்கு அரசாங்கத்தின் ஒரு பதில் இல்லை, ஒரு படத்துக்கு குடுத்த மரியாதையை கூட, மாணவர்களின் குரலுக்கு இல்லை என்பதுதான் உண்மை...
kusumban
கன்னடியர் பெரியார் மற்றும் தெலுஙகர் பெரியார் ( சிலர் இவர் கன்ன்டியர், என்றும் சிலர் தெலுஙர் என்றும் கூறுவதால் நான் குழம்பி, இப்படி கூறியுள்ளேன்) தவிர் இப்போது தமிழருக்காக போராடி இருக்கக்கூடிய தலைவர் யார்?
muthuraj
கொலை செய்தவர்களீடம் நீதி எப்படி கிடைக்கும்
தண்டனை கொடுக்க என்ன வழி உண்டு யோசிக்கவும் ,
இரண்டு கேரள மீனவர்க்கு நடவடிக்கை நடக்கிற போது நம் மீனவர்கள் எத்துனை பேர் , நம் மக்கள் இலங்கையில் எத்துனை பேர் , இன்றூ மாணவர்களூக்கு வந்த உணர்ச்சிமயமாண இன உணர்வு நமக்கு இதுவரை வராததே அத்துனைக்கும் காரணம் ,இனியாவது நடக்கிற வேலையாக மாற்ற முயற்சிக்கவும் மக்களே மன்னர்கள் ,ஆதிக்க சமூகமும் ஆதரவு தரும் பொருட்டு நாம் முயற்சிக்க வேண்டும்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.