பன்னாட்டு முதலாளியம், தனக்கான உலகத்தைப் படைத்துக் கொள்ள, போரையும் நடத்தும், தேர்தலையும் நடத்தும். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் பாணியில் இந்திய நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தலை மாற்றியிருக்கிறது பா.ச.க.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியரசுத் தலைவர், நாடு முழுவதுமுள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒற்றை அதிகார நடுவம், ஏகபோக முதலாளியத்திற்குத் தேவை.

இந்தியாவில், 343 தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அவை உறுப்பினர்கள், பெரும்பான்மை அடிப்படையில் பிரதமரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வந்த பின்னரே, பிரதமர் பதவிக்குப் போட்டியிடுபவர்யார் என்பது தெரியவரும். இந்த முறையை பா.ச.க. மாற்றியுள்ளது.

தேர்தல் காலத்தில், பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவித்து, அவரை ஒப்பாரும், மிக்காரும் இல்லாத கதாநாயகனாக - அனைத்திந்தியாவிலும் வாக்கு வாங்கும் கவர்ச்சி நாயகனாக சித்தரிக்கிறது.

அதுமட்டுமின்றி, விளம்பர, உத்திகளையும் அமெரிக்க பாணியில் பா.ச.க. செய்கிறது. அமெரிக்க விளம்பர நிறுவனங்களைப் பல கோடி ரூபாய் கொடுத்து இதற்காக அமர்த்தியுள்ளது.

காங்கிரசுக் கட்சியும் இதே பாணியைக்கையாள்கிறது. பா.ச.க.வின் கதாநாயகன் நரேந்திரமோடி; காங்கிரசின் கதாநாயகன் ராகுல் காந்தி.

பகல் உணவை ஆமதாபாத்தில் முடித்துக்கொண்டு, மாலையில் சென்னைக் கூட்டத்தில் பேசிவிட்டு இரவு உணவுக்கு ஆமதாபாத்துக்கு மோடி திரும்பிவிடுகிறார். மறுநாள் இது போல் இந்தியாவில் ஏதாவதொரு தொலைவுக்குப் போய்விட்டு இரவு தில்லிக்கோ, ஆமதாபாத்துக்கோ திரும்பிவிடுவார். இதற்கெனத் தனிவிமானம் அவருக்கு அமர்த்தப் பட்டுள்ளது. இதற்கு ஆகும் செலவு பற்றி அவர்களுக்குக் கவலையில்லை; கொட்டிக் கொடுக்கின்றன பன்னாட்டு, இந்திய நாட்டு முதலாளியக் குழுமங்கள்.

மூலப் பரம்பொருள் தன்னிலிருந்து பல வடிவங்களைப் படைத்தது என்று அத்வைதம் கூறும். அனைத்திந்தியக் கட்சிகளின் மாநில வடிவங்களாக மாநிலக் கட்சிகள் இருக்கின்றன. அன்றாடம் சென்னையிலிருந்து புறப்பட்டு, தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளுக்குச் சென்று பேசிவிட்டு இரவு சென்னை வீட்டிற்குத் திரும்பிவிடுகிறார் செயலலிதா. இதற்குத் தனிவிமானம்; விமான நிலையத்திலிருந்து மேடை அருகே செல்ல எலிகாப்டர்! கட்சியில் நிதி திரட்டி இந்தச் செலவுகளைச் செய்துவிட முடியுமா?

நரேந்திரமோடி, சோனியகாந்தி, ராகுல்காந்தி, செயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் பேசும் கூட்டங்களுக்குப் பெருங்கூட்டம் கூட்ட எவ்வளவு செலவு செய்கிறார்கள்! ஊர்தி, உணவு, உற்சாக பானம், ஊக்கத் தொகை என ஓர் ஆளுக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கிறது!

இறுதியாக வாக்குச் சாவடிக்குப் போவதற்கு முன், ஓசையில்லாமல் ஊடுருவும் உறுதித் தொகை.

தேர்தல் என்றால் இதெல்லாம் நடந்தே தீர வேண்டும்; இத்தனைக்கும் ஈடு கொடுக்க முடியாதவர்கள் தேர்தல் திருவிழாவைப் பார்த்துக் களிக்கலாம்; களத்தில் போட்டியிட்டுப் பயனில்லை. ஆசைக்கு வேட்புமனு தாக்கல் செய்யலாம். அப்போது ஏடுகளில் பெயர் வரும். தோற்றபின்னரும் ஏடுகளில் பெயர் வரும்! இந்திய சனநாயகம் அளித்த இந்த வாய்ப்பை எண்ணிப் பூரித்துப் போகலாம், அவ்வளவே!

சட்ட மன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், வெற்றிபெறலாம் என்றுள்ள உரிமை வெறும் ஏட்டுச் சுரைக்காய் உரிமைதான்! கோடிகோடியாய் பணத்தைக் கொட்டிச் செலவு செய்யும் ஆற்றல் உள்ளவர்களே, வெற்றி பெறும் வாய்ப்புள்ளவர்கள். கோடிகோடியாய் கொட்டி செலவு செய்யும் வசதி படைத்தவர்களிடையேதான் உண்மையான போட்டி!

கட்சிக்கு உழைத்தேன்; மக்களுக்காகப் போராடினேன்; எனவே எனக்கு வாக்களியுங்கள் என்று ஒருவர் கேட்டால், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராகத்தான் இருப்பார்.

கட்சியில் சேர்ந்து கோடீவரர்கள் ஆனவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்களைப் போல் நீயும் கோடீஸ்வரன் - கோடிஸ்வரி ஆக வேண்டியதுதானே என்று “விவரம்” தெரிந்தவர்கள் விளக்கம் கூறுவார்கள். கட்சியில் சேர்ந்து, கொல்லைப் புறக் கொள்ளைகளில் ஈடுபட்டு பலர் அரசியல் முதலாளிகள் ஆகியிருக்கிறார்கள். கட்சிகள், அரசியல் முதலாளிகளின் குழுமங்களாக (கார்ப்பரேட்டுகளாக) மாறிவிட்டன.

இந்த அரசியல் குழுமங்களின் தலைவர்கள்தாம் மிகஅதிகமாக சட்டத்தை ஏமாற்றுபவர்கள்; மக்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு கொள்ளையடிப்பவர்கள்; இவர்களுக்குக் கீழே செயல்படுபவர்கள் இவர்களைப் போலவே தங்கள் அளவில் ஊழல் செய்கின்றார்கள். ஊழல் தொகையில் ஒரு பங்கைக் கட்சித் தலைவர்க்கு கொடுக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களில் கணிசமானோர் கையூட்டுப் பெறுவதை - தவறான வழியில் பொருள் ஈட்டுவதை அருவருப்பாகப் பார்ப்பதில்லை: வாய்ப்புக் கிடைத்தால் தாங்களே அவற்றையெல்லாம் செய்கிறார்கள்.

இவ்வாறாகப் பன்னாட்டு முதலாளியமும் இந்திய முதலாளியமும் சனநாயகத்தை விற்றுவாங்கும் சந்தையாகவே மாற்றிவிட்டன. தேர்தலில் போட்டியிடுவதைக் கோடீசுவரர்கள் வாங்கும் ஆடம்பரப் பொருளாக மாற்றி விட்டன.

பெருமுதலாளிய நிறுவனங்களை மட்டுமே இதற்குப் பொறுப்பாக்கிவிட முடியாது. அவை மூலகாரணங்கள்; பதவி, பணம், விளம்பரம் ஆகியவற்றிற்குப் பேராசைப்படும் அரசியல் புள்ளிகளின் ஒழுக்கக்கேடுகளும் இந்தச் சீரழிவில் முகாமையான பங்கு வகிக்கின்றன.

அதிகாரத்தில் இல்லாத கட்சிகளில் பொறுப்புகள் வகிப்போர்க்கு - கோடிகளைத் திரட்டிக் கொள்ள வாய்ப்புகள் அரிது. அவர்கள் சொந்த சொத்துகளை விற்றுத் தேர்தலில் செலவு செய்வர்; வெற்றி பெற்றால், பலமடங்காக மீட்டுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கும்.

ஊழலை ஒழிப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுவதாகச் சிலர் கூறுகின்றர். ஊழல் செய்யாமல் உருப்படியான போட்டியாளராய்த் தேர்தலில் நிற்கவே முடியாது என்பதே நடைமுறை உண்மை.

சாக்கடையில் இறங்கித்தானே அதைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்கின்றனர் சிலர். சாக்கடை நீரோட்டத்தில் நடைபெறும் நீச்சல் போட்டியில் கலந்து கொள்பவர் சாக்கடையைத் தூய்மைப்படுத்த இறங்கினேன் என்றால் அது பொய்க் கூற்றல்லவா!

சமூகத்தில் நிலவும் ஊழலுக்கான மூல ஊற்றுக்களை அடைப்பதல்ல; ஊழல் ஊற்றெடுக்காத சமூக அமைப்பை - உற்பத்தி முறையை - நுகர்வு முறையை - சமூக உளவியலை உருவாக்குவதே இன்றையத் தேவை!

மையப்படுத்தப்பட்ட பெருவீத உற்பத்தி முறையைக் கைவிட்டு அந்தந்த வட்டாரத்திற் கேற்ற சிறுவீத உற்பத்தி முறையைக் கொணர்தல், உள்ளாட்சி மற்றும் மண்டல ஆட்சிகளுக்குத் திட்டமிடல், உற்பத்தி - வழங்கல் முதலியவற்றில் அதிகாரம் அளித்தல், மிகை நுகர்வையும் நுகர்வு வெறியையும் மக்களிடமிருந்து நீக்குதல், சூழலியல் பாதுகாப்பு உணர்வை வளர்த்தல், அறம், ஒழுக்கம் சார்ந்த அரசியல் அனைத்துக் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் பொதுவிதியாதல் போன்ற செயல்பாடுகள் மூலம் புதிய சமூக ஒழுங்கமைப்பை உண்டாக்குவதே, ஊழல் ஒழிப்பின் முதல் தேவை. இதை முன்னெடுக்கக் கூடிய ஒழுங்கும் அறமும் உள்ள அரசியல் சமூக இயக்கம் தேவை.

இவ்வாறான இயக்கம் அனைத்திந்திய அளவில் செயல்பட முடியாது. ஒவ்வொரு தேசிய இனத்தாயகத்திலும் (மாநிலத்திலும்) இவ்வாறான இயக்கம் தேவை. நமது களம் தமிழ்த் தேசம்.

தமிழ்த் தேசியப் புரட்சியின் வழியாக, ஊழல் ஒழிப்பு, உண்மையான மக்கள் சனநாயகம், மக்கள் சமத்துவம், ஆகியவை மலரும்.

இன்றையத் தேவை வாக்குச் சாவடிக்குப் போவதன்று; மாற்றுத் திட்டத்துடன் வீதிக்குப் போவது!

Pin It