cauvery- 600“காவிரி இல்லாமல் வாழ்வில்லை, களம் காணாமல் காவிரி இல்லை” என்ற முத்திரை முழக்கத்துடன் காவிரி உரிமை மீட்புக்குழு நடத்திய காவிரி எழுச்சி மாநாடு தஞ்சையில் 2014 மார்ச் 1 அன்று பெருந்திரள் உழவர்கள் பங்கேற்புடன் பேரெழுச்சியாக நடைபெற்றது. 

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை காவேரி திருமண மண்டபத்தில்  அமைக்கப்பட்ட இயற்கை வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் அரங்கத்தில் முழுநாள் மாநாடாகக் காலை 11 மணிக்குத் தொடங்கி  இரவு 8 மணிவரை  நடைபெற்றது.

உழவர் எழுச்சிப் பாடகர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உழவர் உரிமைப் பாடல்கள் உழவர்களையும், தமிழின உணர்வாளர்களையும் அரங்கத்திற்குள் ஈர்த்தது.

மாநாடு சிறப்புற நடைபெறப் பம்பரம் போல் சுற்றிச் சுழன்று பணியாற்றிய  வரவேற்பு குழுத் தலைவர் தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு த. மணிமொழியன்  மாநாட்டின் நோக்கங்களை விளக்கி வரவேற்புரை நிகழ்த்தினார்.

அரங்கத்தின் மேடையில் நிறுவப்பட்டிருந்த உழவர் பெருந்தலைவர் ஐயா நாராயணசாமி, காவிரி காப்புக் குழு தலைவர் கரூர் வழக்குரைஞர் திரு.பூஅர. குப்புசாமி, சூழலியல் போராளி திரு கோ.நம்மாழ்வார் ஆகியோரின் திருவுருவப் படங்களை மூத்த வழக்கறிஞர் தஞ்சையார் (தஞ்சை அ. இராமமூர்த்தி) திறந்து வைத்து வீரவணக்க உரை நிகழ்த்தினார். 

உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு பழ.நெடுமாறன் அவர்கள் காவிரிச் சிக்கலில் ஒவ்வொரு கட்டத்திலும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்திய பிறகே இந்திய அரசு செயல் பட்டிருக்கிறது என்பதை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி  மாநாட்டு தொடக்க உரை நிகழ்த்தினார்.

திராவிடர் விடுதலைக்கழக தலைவர், தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து அண்மையில் சிறை மீண்ட தோழர்  கொளத்தூர் மணி  அவர்கள் அய்யா நாராய ணசாமி அவர்கள் தலைமையில்  மின்சார உரிமைப் போராட்டம் நடைபெற்ற போது  தமது பங்களிப்பை நினைவு கூர்ந்து  தமிழின உரிமைப் போராட்டத்தின் ஒரு பகுதியாகக்  காவிரி உரிமைப் போராட்டம்  நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வாழ்த்துரை வழங்கினார். 

மாநாட்டை வாழ்த்திக்  கவி வீச்சு வழங்கிய  கவிபாஸ்கர்  “ இந்தியாவே! காவிரியில் தண்ணீரை விடு,  இல்லையேல் தமிழ்நாட்டைத் தனியாக விடு’’ என்று முடித்த போது கையொலியில் அரங்கம் அதிர்ந்தது.

இதன் பிறகு வெவ்வேறு பொருள் குறித்துக்  கருத்தரங் கங்கள் நடைபெற்றன.

காவிரி உரிமை மீட்பு  என்ற  முதல் கருத்தரங்கத்திற்குக்  காவிரிப் பாசன விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் மயி லாடுதுறை தலைவர் கவிஞர் இரெ.திருவரசமூர்த்தி தலைமை தாங்கினார்.  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தஞ்சை மாவட்டத் தலைவர்  திரு.என். கணேசன் , கொள்ளிடம்  விவசாயிகள் சங்கத்தலைவர்  பெரியவர்  ஆச்சாள்புரம் அ.சிவப்பிரகாசம்  ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகப் பேராசிரியர் பொறியாளர் இரெ.பரந்தாமன், காவிரிப் படுகை உருவான அறிவியல் வரலாற்றையும், காவிரி உரிமைப் போராட்டத்தில்  இந்திய அரசால்  தமிழ்நாடு எந்தெந்த வகையில் எல்லாம்  வஞ்சிக்கப்பட்டது  என்பதையும் துல்லியமாக விளக்கிச் செரிவான கருத்துரை வழங்கினார்.

அடுத்த கருத்தரங்கம் வேளாண் பொருளியல் என்றத் தலைப்பில்  நடைபெற்றது.  இவ்வரங்கத்திற்குத் காவிரிப் பாசன விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்  காவேரி தனபாலன் தலைமை தாங்கிய ‘இழப்பீடு - ஈட்டுறுதி- மானியம் ‘என்றத் தலைப்பில்  விளக்க உரை நிகழ்த்தினார். திரு. ஜ.கலந்தர், திராவிடர் விடுதலைக்கழக பொறுப்பாளர்  மன்னை இரா.காளி தாசு ஆகியோர் முன்னிலை வகித்துக்  கருத்துரையாற்றினர்.

இவ்வரங்கில்  “மின்சார நெருக்கடி” என்றத்தலைப்பில்  மின்சாரவாரிய முன்னாள் தலைமைப் பொறியாளர் திரு. சா.காந்தி ஆற்றிய உரை  அரங்கில் நிறைந்திருந்த பார்வையாளர்கள் அனைவரையும் ஈர்த்தது. மின்சாரம் உழவர்களின் உரிமை என்பதிலிருந்து வேளாண்மைக் கான தேவை என்று மாற்றப்பட்டதில் உள்ள சூழ்ச்சியை நுணுக்கமாக ஆய்வு செய்து வேளாண்மை திட்டமிட்ட முறையில் புறக்கணிக்கப் படுவதை அடுக்கடுக்கான புள்ளி விவரங்களுடன்  எடுத்துக் கூறினார்.

‘உற்பத்திச் செலவும் விலை நிர்ணயமும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர்  இயற்கை வேளாண்மை முன்னோடி பொறியாளர் கோ.திருநாவுக்கரசு வேளாண்விளை பொருளுக்கு இலாப விலை கிடைக்காத வண்ணம் எவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதை விளக்கினார் .

“வேளாண் சூழலியல் பாதுகாப்பு” என்ற பொருள் குறித்து  மூன்றாவது கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழர்களின் மரபுசார் விதைக ளைத் தேடித் திரட்டிப் பாதுகாத்து உழவர்களிடம் பரப்பிவரும் துடிப்புமிக்க செயல்பாட்டாளர் ‘நெல்’ இரா.செயராமன் தலைமை தாங்கினார். நம்மாழ்வார் விவசாயிகள் இயக்கப் பொறுப்பாளர் பொறியாளர் வே.இராமதாசு  முன்னிலை வகித்தார்.

‘மரபீனி மாற்று விதைத்தடுப்பு’ என்ற தலைப்பில் தமிழக உழவர் முன்னணி ஆலோசகர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர்  திரு.கி.வெங்கட்ராமன் கருத்துரை வழங்கினார். மரபீனி மாற்றுத் தொழில் நுட்பத்தின் அடிப்படையை விளக்கிக் கூறிய அவர்  மரபீனி மாற்று பன்னாட்டு நிறுவனங்களான மான்சாண்டோ, சின்ஜெண்டா, பாயர் போன்றவற்றின் முகவராக இந்திய அரசு செயல்படுவதை எடுத்துக்கூறி  உரையாற்றினார். 

மீத்தேன் திட்ட எதிர்ப்பு என்ற பொருள் குறித்து மீத்தேன் பேரழிப்பு திட்ட  எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.செயராமன் தெளிவுரையாற்றினார். உலக மயத்தோடு இணைந்த  இந்தியத்தின்  தமிழினப்பகைத் திட்டம் இது என்று விளக்கிய முனைவர் த.செயராமன் மீத்தேன் எடுப்பு திட்டத்தின்  பன்முகப் பாதிப்புகளை  எடுத்துக் கூறி உணர்ச்சிகரமான உரை நிகழ்த்தினார்.

உலகமயமும் வேளாண்மை பாதிப்பும் என்ற தலைப்பில் இயற்கை பண்ணைய முன்னோடி திரு.அ.அல்லீசுபாக் உரை நிகழ்த்தினார்.  உலகமயம் நமது மரபான வேளாண் தொழில் நுட்பத்தை அழித்து வருவதை விளக்கிக் கூறி இயற்கை வேளாண்மை உலகு தழுவிய சந்தை வாய்ப்பைப் பெற்றுள்ளது என்பதை எடுத்துக் கூறினார்.

அடுத்து மாநாட்டின் நிறைவரங்கம் மதி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் திரு. துரை.பாலகிருட்டிணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தஞ்சை  திருவாரூர் , நாகை மாவட்ட  விவசாயிகள் சங்கத்தலைவர்  திரு வலிவலம் மு. சேரன் , தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர்  திரு குழ.பால்ராசு, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர்  திரு. ந. துளசி ஐயா  தமிழக உழவர் முன்னணி  கடலூர் மாவட்டச் செயலாளர் திரு சி.ஆறு முகம், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், ம.தி.மு.க. தஞ்சை ஒன்றியச் செயலாளர் திரு ச. பாஸ்கர் தமிழக விவசாயிகள் சங்கத்  தஞ்சை மாவட்டச் செயலாளர், திரு ப.செகதீசன், முள்ளி வாய்க்கால் முற்றப் பொறுப்பாளர் திரு சாமி. கரிகாலன், தமிழர் தேசிய இயக்க மாவட்டச் செயலாளர் திரு.பொன். வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் பேராசிரியர் சின்னசாமி தமிழர் தேசிய இயக்கப் பொதுச்செயலாளர் அய்யனாபுரம்  திரு.சி.முருகேசன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் நிறுவனத் தலைவர் திரு.குடந்தை அரசன், வழக்கறிஞர் த.பானுமதி ஆகியோர் விளக்க உரையாற்றினர்.

நிறைவில் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் திரு.பெ.மணியரசன் மாநாட்டு நிறைவுப் பேருரையாற்றினார். 

காவிரிச் சிக்கலில் இந்திய அரசு திட்டமிட்டுத் தமிழ் நாட்டை வஞ்சிப்பதையும் , நீதிமன்றம் கூடத் தமிழ் நாட்டுக்கு எதிராகச் செயல்படுவதையும் எடுத்துக்கூறிக் காவிரிஉரிமை மீட்பு போராட்டக்களத்தில்  நாம் அனைவரும் உழவர்களாய் தமிழர்களாய் ஓரணியில் நிற்க வேண்டிய தேவையை எடுத்துக்கூறினார். தமிழ் நாட்டு மக்களின் காவிரி உரிமை மீட்புப் போராட்டம் இந்திய அரசு நிறுவனங்கள் தமிழ் நாட்டில் செயல்பட முடியாமல் முடக்கிவைக்கும் வகையில் பெருந்திரள் பங்கேற்போடு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். சிறைக்கு அஞ்சாத கடும் போராட்டங்களை நடத்தாமல் காவிரி உரிமையை மீட்டுவிட முடியாது, களம் காணாமல் காவிரி இல்லை  என எடுத்துக்கூறினார்.

தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டப் பொருளாளர் இல.செங்கொடிச்செல்வன்  நன்றியுரை நிகழ்த்தினார்.

முழு நாள் மாநாட்டையும் காலையிலிருந்து இரவு வரை  ஒருங்கிணைத்து நடத்தும் பணியைத்  த.தே.பொ.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு நா.வைகறை , ம.தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளர் திரு.வி.விடுதலை வேந்தன் ஆகிய இருவரும்  சிறப்பாகச் செய்தனர்.

மாநாட்டின் முதன்மைத் தீர்மானமாகக் காவிரி உரிமை மீட்புப் போராட்டத் தீர்மானத்தைத் திரு அ.மணிமொழியன் முன் மொழிந்தார். காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு வரும் 2014  சூன் 5 ஆம் நாளுக்குள் நிறுவ வேண்டும்  அவ்வாறு நிறுவத்தவறினால்  வரும் 2014 சூன் 27 அன்று காவிரிப் பாசன மாவட்டங்களில் இந்திய அரசு அலுவல கங்கள் அன்று காலை முதல்  மாலை வரை  முற்றுகையிடப்படும்  என்று அறிவித்த தீர்மானம்,  சூன் 27-ல் திருச்சி, தஞ்சாவூர், நாகை , திருவாரூர், சிதம்பரம் ஆகிய ஊர்களில்  நடை பெறும் இந்திய அரசு அலுவலக முற்றுகைப் போராட் டத்தில் உழவர்களும் தமிழின உணர்வாளர்களும் அணி அணியாகக் கலந்துகொள்ள வேண்டுமென அழைத்தது.

இப்போராட்டத் தீர்மானத்தைக் கையொலியெழுப்பி அரங் கத்தில் நிறைந்திருந்த அனைவரும்  வழிமொழிந்தனர்.

மீத்தேன்  எரிவாயுத்திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டும் என்ற தீர்மானத்தைத்  திருவாரூர்  திரு. கோ.வரத ராசன் அவர்களும்  நெல்லுக்குக் குவிண்டால் ஒன்றுக்கு  ரூபாய் 2500, கரும்பு டன் ஒன்றுக்கு 3500 ரூபாய்,  பிற வேளாண் விளைபொருள்களுக்கு இலாபவிலை வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானத்தைத் திரு. தியாக சுந்தர மூர்த்தி அவர்களும் முன்மொழிந்தனர்.

மரபீனி மாற்ற விதைகளை அனுமதிக்கும் முடிவை இந்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தைத் திருச்சி பொறியாளர் ச. முத்துக் குமாரசாமி முன் மொழிந்தார்.  குடகு மலையில்  இலட்சக்கணக்கான மழை தரும் மரங்களை வெட்டி  அழிக்கும்  மைசூர் -  கோழிக்கோடு  மின் பாதை திட்டத்தைச் செயல்படுத்தும் இந்திய அரசைக்கண்டித்தும்  மாற்றுப்பாதையில் நிறை வேற்றிக்கொள்ளலாம்  என வலியுறுத்தியும்  திரு. க. நலங்கிள்ளி தீர்மானத்தை முன் மொழிந்தார்.  தமிழக நீர் நிலைகளைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மா னத்தை திரு பொ. கோவிந்தராசு முன் மொழிந்தார்.

இத் தீர்மானங்கள் அனைத்தும் அரங்கில் நிறைந்தோர் கையொலியுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

உழவர்களிடமிருந்தும், வணிகர்களிடமிருந்தும் நன் கொடையாகத் திரட்டப்பட்ட அரிசி, மளிகை, காய்கறி ஆகிய வற்றைக்கொண்டு அணியப்படுத்தப்பட்ட சுவைமிகு மதிய உணவு வந்திருந்த பல்லாயிரம் பங்கேற்பாளர்களுக்கும் வழங்கப்பட்டது. மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த உழவர் பெருமக்கள் ஊர்வாரியாக அணிவகுத்து மேடைக்குச் சென்று  பொறுப்பாளர்களிடம்  நிதியளித்தது  இது உண்மையான மக்கள் மாநாடு என்பதை எடுத்துக்காட்டியது.

இம் மாநாட்டில் வெளிப்பட்டுள்ள ஒற்றுமை இன்னும் வளர வேண்டும்.  ஒவ்வொரு கிராமத்திலும் காவிரி உரிமை மீட்புக் குழு கிளைகள் நிறுவப்படவேண்டும் என்ற உறுதியேற்போடு  கலந்துகொண்ட அனைவரும் இரவு 8 அளவில் மாநாட்டை முடித்துக்கொண்டுத் திரும்பினர். 

மாநாட்டில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம்:1

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடுவண் அரசு அலுலகங்கள் முற்றுகை.

மிக நீண்ட நெடிய நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு காவிரித் தீர்ப்பாயம் அறிவித்த இறுதித் தீர்ப்பு நடுவண் அரசிதழில் 19.2.2013 அன்று வெளியாகி ஓராண்டு ஆகியும் அது செயலுக்கு வரவில்லை. ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கிறது. கர்நாடகத்தின் அடாவடிக்கு இந்திய அரசும் துணை போவதால் தமிழகத்திற்குத் தொடர்ந்து அநீதி இழைக் கப்படுகிறது. இன்னும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இந்திய அரசு இழுத்தடித்து வருகிறது.

வெள்ளைக்கார ஆட்சியில் 1924 ஒப்பந்தப்படி 489 டி.எம்.சி. காவிரி நீர் உறுதி செய்யப்பட்ட தமிழ்நாடு 1974 ஆம் ஆண்டு வரை சராசரியாக ஆண்டுக்கு 361.3 டி.எம்.சி தண்ணீரைப் பெற்று வந்தது. இந்த உரிமைப் பங்கை காவிரித் தீர்ப்பாயம் தனது இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சியாகக் குறைத்தது. 2007 பிப்ரவரி 5 ஆம் நாள் அறிவித்த தனது இறுதித் தீர்ப்பில் இதை இன்னும் குறைத்து தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. என்று அறிவித்தது.

இந்த மிகக் குறைந்த காவிரி நீரையும் திறந்து விட கர்நாடகம் மறுக்கிறது. ”காவிரியில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீரும் தரமாட்டோம்.” என்று கட்சி வேறுபாடின்றி கர்நாடகம் கொக்கரிக்கிறது. நீதி மன்றத்தில் எவ்வளவு குறைவாக அறிவிக்கப்பட்டாலும் தமிழ்நாட்டிற்கு அதைத் தரமாட்டோம் என்ற இன வெறிக் கூச்சல் இது.

காவிரியில், தமிழ்நாட்டிற்கு உரிமை ஏதும் இல்லை என்று அறிவிக்கிற இன ஆதிக்கச் சித்தாந்தம், இதில் அடங்கியிருக் கிறது.

காவிரியில் தமிழகத்திற்கு இருப்பது இயற்கை உரிமை ஆகும். காவிரியில் ஒரு சொட்டு நீர் இருந்தாலும் தமிழகத் திற்கு அதில் அரை சொட்டு உரிமை உண்டு. ஒரு லிட்டர் தண்ணீர் இருந்தாலும் அதில் அரை லிட்டர் தண்ணீர் தமிழகத் தின் இயற்கை உரிமையாகும்.

ஆனால் இந்த இயற்கை நீதிக்கு எதிராகக் கர்நாடகத்தின் அடாவடித்தனம் தொடர்வதற்கு அடிப்படைக் காரணம் இந்திய அரசு அதற்கு அளிக்கும் ஆதரவேயாகும்.

இதனைக் காவிரித் தீர்ப்பாயமே உணர்ந்து கொண்டது. அதனால்தான் இத்தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் கீழ்வருமாறு கூறியது.

“1991 இல் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பின்படி தண்ணீர் பெற ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டி யிருந்தது என்பதை ஆவணங்களிலிருந்து அறிய முடிகிறது. ஒவ்வொரு முறை யும் பற்றாக்குறை என்று காரணம் சொல்லிக் கர்நாடகம் தட்டிக் கழித்தது என்ப தையும் அறிய முடிகிறது. எனவே இப்போது அளிக்கும் தீர்ப்பைச் செயல்படுத்த உருப்படியான பொறியமைவு கள் உருவாக்கப்படாவிட்டால் இத்தீர்ப்பும் துண்டுக் காகிதமாகவே இருக்கும்.” (இறுதித் தீர்ப்பு , தொகுதி : 5 பக்கம் : 216)

இந்த அடிப்படையில்தான் தீர்ப்பைச் செயல்படுத்த நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், ஏமாவதி, ஏரங்கி, கபினி, ஆகிய நான்கு அணைகள், தமிழ்நாட்டின் மேட்டூர், பவானி சாகர், அமராவதி, ஆகிய மூன்று அணைகள், கேரளத்தின் பாணாசுர சாகர் அணை ஆகிய 8 காவிரி அணைகளின் நீர் மேலாண் மையை கொண்டு வர வேண்டும் என்றும் ஆணையிட்டது. காவிரி மேலாண்மை வாரியத்தின் கீழ் அதன் பணிகளை நிறைவேற்ற காவிரி ஒழுங்கு முறைக் குழு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆணையிட்டது.

இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகி ஓராண்டு ஆகியும், நடுவண் அரசால் மேலாண்மை வாரியம் அமைக்கப்படா மையால் மேலும் துணிச்சல் பெற்ற கர்நாடகம் 600 கோடி ரூபாய் செலவில் பில்லிக்குண்டுலுக்கு மேற்கே 35 கிலோ மீட்டர் தொலைவில்  மொத்தம் 50 டி.எம்.சி கொள்ளளவு உள்ள மூன்று புதிய அணைகள் கட்டப் போவதாக அறிவித் துள்ளது. இதற்கான திட்ட வரைவு கர்நாடக அமைச்சரவை யின் ஒப்புதல் பெற்றுள்ளது.

இந்த அணைகள் கட்டப்பட்டால் வெள்ளக் காலங்களில் கர்நாடக அணைகளில் தேக்க முடியாமல் உபரியாக தமிழகத்திற்கு ஓடிவரும் தண்ணீர் முழுவதுமாக முடக்கப் படும். ஒரு சொட்டுத் தண்ணீரும் காவிரில் தரமாட்டோம் என்ற கர்நாடகத்தின் கொக்கரிப்பு நிரந்தரமாக செயலுக்கு வந்து விடும்.

ஏற்கெனவே தலைமுறை தலைமுறையாக 28 இலட்சம் ஏக்கரில் இரு போக சாகுபடி செய்த தமிழ்நாட்டுக் காவிரி உழ வர்கள். குறுவையை இழந்து சாகுபடிப் பரப்பு குறுகிப் போய் தத்தளித்துக் கொண்டுள்ள நிலை மேலும் தீவிரம டையும் ஆபத்து நெருங்கி விட்டது.

தமிழகத்தின் முக்கால் பகுதி மாவட்டங்களுக்கு முதன்மை யான குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி முடக்கப்பட்டு விட்டால் அதனால் ஏற்படும் பேரழிவைக் கற்பனை கூட செய்ய முடியாது.

காவிரி மாவட்ட உழவர்கள் பல்லாண்டு காலமாக தாங்கள் வாழ்ந்த மண்ணை விட்டு வாழ்வுரிமை இழந்த ஏதிலிகளாக புலம் பெயரும் ஆபத்து கண்ணுக்கு முன்னால் இருப்பதை இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

கர்நாடகத்தின் இந்த அடாவடிக்கும், நடுவண் அரசின் இந்த அநீதிப் போக்குக்கும்  தமிழ்நாட்டு மக்களின் செயலின் மையே துணிச்சல் கொடுக்கிறது. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் விவசாயிகள் அமைப்பு களும் ஒருங்கிணைந்து போராடாமல் போனதால் ஏற்பட்ட கொடிய விளைவு இது.

இந்த நிலை இனியும் தொடரக் கூடாது என்று உணர்ந்து கொண்டு பல்வேறு அரசியல் இயக்கங்களும், உழவர் அமைப்புகளும் ஒன்றிணைந்து 2012 செப்டம்பரில் காவிரி உரிமை மீட்புக் குழு அமைக்கப்பட்டு அதன் சார்பில் காவிரி மாவட்டங்களில் தொடர்வண்டி மறியல், நடுவண் அரசு அலுவலக மறியல், தமிழக அரசின் பொதுப்பணித்துறை அலுவலக மறியல், பேரணி, உச்சநீதிமன்றத்தின் அலட்சியத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் எனத் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறோம். இன்று மாபெரும் காவிரி எழுச்சி மாநாடு நடந்துகொண்டிருக்கிறது.

வரும் சூன் 12, 2014 அன்று குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறந்தாக வேண்டும். அதற்குமுன் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும்.  எனவே, நடுவண் அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் வரும் 2014 ஜூன் 5 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அதன் கட்டுப்பாட்டில்  காவிரி அணைகளின் நீர் நிர்வாகத்தைக் கொண்டு வரவும், காவிரி ஒழுங்கு முறைக் குழு அமைக்கவும், ஆணை இட  வேண்டும் என இம்மாநாடு நடுவண் அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

அவ்வாறு 5.6.2014க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறினால் வரும் 2014 ஜூன் 27 வெள்ளி அன்று தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, சிதம்பரம், ஆகிய இடங்களில் நடுவண் அரசு அலுவலகங்களை முற்றுகை யிட்டுப் போராட்டம் நடத்துவது என இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் :2

வேளாண் விளை பொருள்களுக்கு இலாப விலை நிர்ணயிக்க வேண்டும்.

இந்திய அரசின் வேளாண் விலைக் கொள்கை வேளாண் மையை இலாபகரமான தொழிலாக வளர விடாமல் நசுக்கு கிறது. இந்திய அரசு நியமித்த எம். எஸ். சாமிநாதன் தலைமையிலான தேசிய வேளாண் ஆணையம். இலாபகரமானவிலை நிர்ணையிக்கப் பரிந்துரைத்து 9 ஆண்டுகள் ஆன பின்னும் நடுவண் அரசு தனது போக்கிலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறது. வேளாண்விளை பொருள் களுக்குக் கட்டுப்படியான விலைகூட  நிர்ணயிக்கப்படுவதில்லை.

இது போதாதென்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவ சாயிகள் படும் பாடு கொஞ்ச நஞ்சமன்று. நெல் தரத்தில் குறையிருப்பதாகக் கூறி 40 கிலோ மூட்டை ஒன்றுக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை எந்தக் கணக்கும் இல்லாமல் பிடித்தம் செய்து கொள்கிறார்கள். இதனை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்நாட்டு உழவர்களின் வேளாண்மைச் சந்தையை பாதுகாப்பதற்கும், இலாப விலையை உறுதி செய்வதற்கும், கீழ் வரும் கோரிக்கைகளை இம்மாநாடு முன் வைக்கிறது.

* தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக அறிவித்து தமிழ்நாட்டு அரிசிச் சந்தையில், கர்நாடகா, ஆந்திரா, மற்றும் பிற மாநில அரிசி படையெடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டு உழவர்கள் விளைவித்த நெல் முழுவதையும் கொள்முதல் செய்த பிறகு அதற்கு மேல் தேவைப்பட்டால் மட்டுமே வெளி மாநில அரிசியை அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு நியாய விலை கடைகளுக்கும், மருத்துவமனை, மாணவர் விடுதி போன்றவற்றிற்கும் மானிய விலை அரிசி வழங்க இந்திய அரசிடம் பெறும் உணவு மானியத்தை அரிசியாகப் பெறாமல், பணமாகப் பெற்று அத்தொகையைக் கொண்டு தமிழ்நாட்டு நெல்லை முழுவதுமாக கொள்முதல் செய்ய வேண்டும்.

* நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500/- விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இது அடிப்படை விலையாக அமைய வேண்டும். நெல்லிருந்து அரிசி மட்டுமின்றி தவிடு, தவிட்டு எண்ணெய், கால்நடைத் தீவனம் முதலியவை கிடைக்கின்றன. இவை அனைத்துக்கும் அடிப்படை விலைக்கு மேல்  “மதிப்புக் கூட்டுவிலை” வழங்க வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  20% வரை ஈரப்பதம் அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கு மேல் உள்ள ஈரப்பதத்திற்கு முறையான பிடித்தம் செய்து அதற்கு ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.

*கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 3500/- விலை வழங்க வேண்டும். வெட்டுக்கூலி, மற்றும் கரும்பை ஆலைக்குக் கொண்டு செல்லும் செலவு ஆகியவற்றை ஆலை நிர்வாகங்களே ஏற்க வேண்டும். கொள்முதல் செய்த 15 நாட்களுக்குள் கரும்பு விலைத் தொகையை உழவர்களுக்கு வழங்கிவிட வேண்டும்.

சர்க்கரைச் சத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக் கப்படும் மேற்கண்ட அடிப்படை விலைக்கு மேல் கரும்பிலிருந்து கிடைக்கும் பாகுக் கழிவு (மொலாசஸ்), எத்தனால், இயற்கை உரம் உள்ளிட்ட பிற அனைத்துப்  பொருள்களுக்கும் சேர்த்து “மதிப்புக் கூட்டு விலை” வழங்கப்பட வேண் டும்.

* தேசிய வேளாண்மை ஆணையம் அறிவித்ததற்கு இணங்க சாகுபடி செலவோடு குறைந்தது 50% தொகை சேர்த்து நெல், கரும்பு, பருத்தி, வாழை உள்ளிட்ட அனைத்து வேளாண்மை விளைபொருள்களுக்கும் அடிப்படை விலை நிர்ணயமும் மதிப்புக்கூட்டு விலை நிர்ணயமும் செய்யப்பட வேண்டும்.

தீர்மானம்: 3

மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை கைவிடுக!

காவிரி மாவட்டங்களையே பாலைவனமாக்கி, மக்களுக் குப் புற்று நோய், மூளை நரம்பு நோய், தோல் நோய், கண் பார்வை இழப்பு, ஈரல் நோய், மரபணு மாற்றக் கோளாறுகள் உள்ளிட்ட கொடிய நோய்களை உருவாக்கும் மீத்தேன்  எரிவாயுத் திட்டம் மிகப் பெரும் தமிழின அழிப்புத் திட்டமாகும்.

‘நீரியல் விரிசல்’ என்ற ஆபத்தான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி 2000 அடிவரை துளையிட்டு, கொடிய நச்சு வேதிப்பொருள்களைச் செலுத்தி பேராபத்துமிக்க கழிவு நீரை வாய்க்கால்களில் கொட்டி, விளைநிலத்தை மீட்க முடியாத உப்பு நிலமாக மாற்றும் இத்திட்டம் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுவை உள்ளிட்ட மிக நீண்ட பரப்பில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையே சீரழித்து நிலை குலையச் செய்து விடும் பேரழிப்புத் திட்டமாகும்.

மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை எதிர்த்து அய்யா நம்மாழ்வார் முன்முயற்சியால் மக்கள் தொடங்கிய போராட்டங்களை இம்மாநாடு வரவேற்கிறது.

காவிரி பாயும் மாவட்டங்களைப் பாலைவனமாக்கும் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

அதேபோல் தமிழகக் கடற்கரை நெடுகிலும் நிறுவப்பட்டு வரும் அனல் மின் நிலையங்கள் அனைத்தும்  சுற்றுச் சூழலை நாசப்படுத்தி மீனவர்களுக்கும், உழவர்களுக்கும் பேரிழப்பை ஏற்படுத்தும் நிறுவனங்கள் ஆகும். மின்சாரத் தேவைக்கு சுற்றுச் சூழலுக்கு இசைவான மாற்று வழிகளை கைக்கொள்ள வேண்டுமே தவிர மக்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்துவிடும் திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது.

எனவே காவிரி பாயும் மாவட்டக் கடலோரங்களில்  நிறுவப் பட்டுள்ள அனல் மின் நிலையங்களை மூட வேண்டும் என்றும் இப்பகுதிகளில் புதிய அனல் மின் நிலையங்கள் நிறுவக் கூடாது என்றும் இம் மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறது.

தீர்மானம்: 4

மரபீனி மாற்றப் பயிர்களை அனுமதிக்கக் கூடாது!

நாடாளுமன்ற நிலைக் குழு  பி.ட்டி கத்தரி உள்ளிட்ட மர பீனி மாற்ற விதைகளை அனுமதிக்கக் கூடாது என்று அரசுக்கு அறிக்கை அளித்த பின்னும், மரபீனி மாற்ற விதை களை அனுமதிக்கப் போவதாக கடந்த 3.2.2014 அன்று ஜம்முவில் நடந்த தேசிய அறிவியல் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருப்பதும் அதனடிப்படையில் இன்று (1.3.2014)  சுற்றுச் சூழல் அமைச்சகம் இதற்கு இசைவு அளித் திருப்பதும் சட்ட நெறிமுறை களுக்கும் மக்கள் வாழ்வுரிமைக் கும் எதிரானது.

அணுக்கதிர் இயக்கத்தை விட தலைமுறை தலைமுறையாக சுற்றுச் சூழலுக்கும் உடல் நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மரபீனி மாற்றப் பயிர்கள் உழவர்களின் விதை உரிமையைப் பறித்து நாட்டின் தற்சார்பைச் சீர்குலைக்கக் கூடியது என்பதை அரசு நியமித்த பல்வேறு குழுக்களே அறிவித்துள்ளன. நாட்டையும், உழவர்களையும்  நிரந்தரமாக பன்னாட்டு விதை நிறுவனங்களின் காலடியில் அடிமைப் படுத்தும் மரபீனி மாற்றப் பயிர்களுக்கு ஆதரவாக நாட்டின் பிரதமரே பேசுவது வன்மையாகக் கண்டிக் கத்தக்கது.

எக்காரணம் கொண்டும் மரபீனி மாற்ற விதைகளை, பயிர் களை, அனுமதிக்கக் கூடாது என இம்மாநாடு இந்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 5

நீர் நிலைகளைப் பாதுகாக்க போர்க்கால நட வடிக்கைகளை மேற்கொள்க!

மன்னராட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட நீர் நிலைகள் கூட மக்கள் ஆட்சியில் பாதுகாக்கப்படாமல் அழிந்து வருவது கவலை அளிக்கக் கூடிய ஒன்றாகும்.

ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், அவற்றை ஆழப்படுத்தியும், கரைகளை உயர்த்தி யும் இந்நீர் நிலைகளுக்கு இடையே ஏற்கெனவே இருந்த சங்கிலித் தொடர் போன்ற இணைப்பை மீட்டெடுத்தும் அவற் றில் மழை நீர் சேகரித்தும், நீர் நிலைகளை பாதுகாக்க போர்க் கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென்று தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

அதே போல் கிடப்பில் போடப்பட்டுள்ள  தடுப்பணைத் திட்டங்களை விரைந்து முடித்து ஆறுகளில் நீர் ஆதாரத்தை மேம்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6

காவிரி உருவாகும் குடகுக் காடுகளை அழிக்கும்  மைசூர் - கோழிக்கோடு மின்பாதைத் திட்டத்தைக் கைவிடுக. மாற்றுப் பாதையில் மின்சாரம் கொண்டு செல்க

மைசூர் முதல் கோழிக்கோடு வரை மின்சாரம் எடுத்துச் செல்ல இந்திய அரசின் “மின்சாரத் தொகுப்புக் கழகம்” (பவர் கிரிட் கார்ப்பரேஷன்) குடகு மலையில் இலட்சக்கணக்கான மரங்களை வெட்டி அழிக்கும் வேலையில் இறங்கியுள்ளது.  காவிரி உருவாகக் காரணமாக உள்ள மழைப் பொழிவிற்கும் ஊற்றுப் பெருக்கிற்கும் ஆபத்தை உண்டாக்கும் திட்டம் இது. 

கர்நாடகத்தின் கைக்கா மின்நிலையத்திலிருந்து 740 கிலோமீட்டர் தொலைவுக்கு மின்பாதை அமைக்கும் இத் திட்டத் தால் குடகுப் பகுதியிலுள்ள செழித்து அடர்ந்த மழை தரும் இலட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படும். இதனால்  மிகப் பெரும் அளவுக்கு மழை குறையும்; ஊகிக்க முடியாத சூழல் பாதிப்புகள் ஏற்படும்.

காவிரி ஆற்றின் முக்கியக்கிளைஆறான இலட்சுமண தீர்த்தா வறண்டு போகும். 

தேவமாச்சி காடுகளையும் நாகரஹோல் தேசியப் பூங்காவையும் ஒட்டிய பகுதிகளில் இவ்வாறு பெரும் எண்ணிக்கையில் மரங்கள் வெட்டப்படுவதால் யானை வாழிடங்கள் பாதிக்கப்பட்டு, ஏற்கெனவே நிகழ்ந்து வரும் யானை - மனிதர்கள் மோதல் அதிகரிக்கும்.

மழைக்காட்டை அழித்து அமைக்கப்படும் இந்த மின் பாதைக்கு மாற்றாகக் குறைந்த தொலைவுக்கும், காட்டை அழிக்காமலும் மாற்றுப் பாதையில் மின்சாரத்தைக் கொண்டு செல்லும் திட்டங்களை முன்வைத்துக் குடகு உழவர்களும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களும் போராடி வருகின்ற னர்.  அவர்கள் காவிரிப் பாதுகாப்புக் குழு (Cauvery Protection Committee) என்ற குடை அமைப்பின் கீழ் இப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இப்போராட்டத்தில் தமிழ்நாட்டு உழவர்கள் சார்பில் பேராளர்கள் அங்கு சென்று பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.  

இப்போராட்டங்களை இம்மாநாடு ஆதரிக்கிறது.  இதன் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகிறது. 

காடுகளை அழிக்கும் இப்போதைய பாதைக்கு மாற்றாக நடப்பிலுள்ள மைசூர் - கோழிக்கோடு 220 கிலோவாட் மின் பாதையை வலுப்படுத்தியோ அல்லது நிலத்தடி மின்பாதை அமைத்தோ மின்சாரம் எடுத்துச் செல்லலாம்.  இது இப்போது திட்டமிடப்பட்டுள்ள 740 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பதிலாக 560 கிலோமீட்டர் தொலைவில் எடுத்துச் செல்லக்கூடிய எளிய மாற்றுப் பாதையாகும். 

எனவே இந்திய அரசு குடகுக் காடுகளை அழிக்கும் மைசூர் - கோழிக்கோடு மின்பாதைத் திட்டத்தைக் கைவிட்டு, மைசூர் - எச்.டி. கோட்டே - டி.பி. குப்பே - கோழிக்கோடு மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும் என்று இம்மாநாடு கோருகிறது.  

தமிழக முதலமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு, காவிரி உருவாகும் குடகுமலைக் காடுகளை அழிக்கும் மைசூர் - கோழிக்கோடு மின்பாதைத் திட்டத்தைக் கைவிடச் செய்ய இந்திய அரசை வலியுறுத்து மாறும் அதற்குரிய எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொள்ளுமாறும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.  

Pin It