prabhakaran_maaveerar_naal_445

இசைஞானி இளையராஜாவைத் தமிழினத் துரோகியாகக் காட்டும் முயற்சியில் இன்று சிலர் ஈடுபட்டுள்ளனர். வரும் நவம்பர் 3ஆம் நாள், கனடாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நவம்பர் 27, மாவீரர் நாள் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி. மாவீரர் நாள் நினைவுகூரப்படும் கார்த்திகை மாதத்திலும், தமிழீழ மக்கள் பல்லாயிரக்கணக்கில் அழிக்கப்பட்ட வைகாசி (மே) மாதத்திலும் உலகெங்கும் உள்ள தமிழர் எவரும் எவ்விதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபடக் கூடாது என்று புதிதாய் ஒரு விதியை தமிழ்நாட்டில் இன்று சிலர் அறிவித்துள்ளனர். அதனையொட்டிக் கனடாவில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் ஒரு சாரார், இளையராஜாவின் இசை நிகழ்ச்சியைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

1982 நவம்பர் 27 அன்று, வீரச்சாவடைந்த போராளி சங்கரின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் அந்நாளை மாவீரர் நாளாக நினைவுகூரும்படி, விடுதலைப்புலிகள் அமைப்பு 1989ஆம் ஆண்டு கேட்டுக் கொண்டது. அப்போதிருந்து ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் அந்நாளில் மாவீரர் நாள் நினைவு எழுச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அந்நிகழ்ச்சி நடைபெறும் மாதம் முழுவதும் எவ்விதமான கொண்டாட்டங்களிலும் யாரும் ஈடுபடக் கூடாது என்று, விடுதலைப் புலிகள் அமைப்போ, அமைப்பின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களோ ஒரு நாளும் எந்த அறிவிப்பையும் வெளியிட்டதில்லை. சென்ற ஆண்டு வரையில் அப்படி எந்த ஒரு ‘கொண்டாட்டத் தடையும்’ நடைமுறையில் இல்லை. அப்படியானால், இப்போது இப்படி ஒரு புதிய சட்டத்தை உருவாக்கும் சட்டாம்பிள்ளைகள் யார், எப்போதிருந்து இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்பன போன்ற வினாக்கள் நம்முள் எழுகின்றன. தலைவர் பிரபாகரனே கூறாத விதிகளைப் புதிதாய்க் கூறி, அவரையும் மிஞ்சிய தலைவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ள முயல்கின்றவர்கள் யார் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

மாவீரர் நாள் என்பது அழுவதற்காக அன்று, மீண்டும் மீண்டும் எழுவதற்காக என்பதைப் புலிகளும், ஈழ மக்களும் நன்கறிவார்கள். ‘மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ என்று மொழியின் பெயரிலும், அடுத்ததாக, வழிகாட்டும் தலைவரின் பெயரிலும், அதற்கடுத்து, விழிமூடித் துயில்கின்ற மாவீரர்கள் பெயரிலும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, மீண்டும் தங்களின் இன விடுதலைக்காகத் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் நாள்தான் மாவீரர் நாள். ஆண்டு முழுவதும் போராளிகளையும், பொதுமக்களையும் அந்த ஈழ மண் இழந்திருந்தாலும், இயக்கத்தின் முதல் பலி நடைபெற்ற நாளை ஓர் அடையாளமாக மட்டுமே புலிகள் இயக்கம் அறிவித்தது. மாவீரர்கள் இறந்த நாளில் எல்லாம் கொண்டாட்டங்கள் கூடாது என்றால், ஆண்டின் எந்த ஒரு நாளிலும் நாம் எந்த மகிழ்வையும் வெளிக்காட்ட இயலாது. அங்கே மாவீரர்கள் சாகாத நாளுமில்லை, மாவீரர்கள் இல்லாத வீடுமில்லை. ஆதலால், அடையாளமாகத்தான் சிலவற்றை நாம் செய்ய முடியும். அதுதான் நடைமுறை இயல்பு. அதனைப் புலிகள் அமைப்பும், தலைமையும் தெளிவாக அறிந்திருந்தனர்.

ஆனால், இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமலோ, புறந்தள்ளியோ இரண்டு மாதங்களுக்கு எந்தக் கொண்டாட்டமும் கூடாது என்று சிலர் இன்று கூறுகின்றனர். மாவீரர் நாளுக்கு முந்தைய நாள், தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள். ஒவ்வோர் ஆண்டும், அந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடி விட்டுத்தான், மறுநாளை மாவீரர் நாளாக நாம் கொள்கிறோம். ‘ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்தபின்னர், வாராது போல் வந்த’ அந்த மாமணியின் பிறந்தநாளையும் இனிமேல் கொண்டாடக்கூடாது என்று கூறிவிடுவார்களோ என்னவோ தெரியவில்லை. இரண்டு மாதங்கள் எந்தத் தமிழர் வீட்டிலும், திருமண நிகழ்வுகளோ, மகிழ்வான விழாக்களோ நடைபெறக் கூடாது என்று சட்டம் கொண்டு வருவார்களா என்றும் தெரியவில்லை.

illaiyaraja_300இவ்வளவு வேண்டாம்... இளையராஜாவின் இசை நிகழ்ச்சி முடிந்து, பத்து நாள்களுக்குப் பிறகு வரவிருக்கும் தீபாவளியைத் தமிழ்நாட்டுத் தமிழர்களோ, தமிழ் ஈழத் தமிழர்களோ கொண்டாடக்கூடாது என்று இவர்களால் அறிவிக்க முடியுமா? பகுத்தறிவின் அடிப்படையில் இல்லாவிட்டாலும், இன உணர்வின் அடிப்படையிலாவது தீபாவளியை இந்தப் புதிய நண்பர்கள் தடுத்து நிறுத்தி விடுவார்களா? இவையெல்லாம் நடைமுறையில் நடைபெறக் கூடியதுதானா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இதில் இன்னொரு வேடிக்கையான சிக்கலும் உள்ளது. நவம்பர் மாதத்தைக் கார்த்திகை மாதம் என்றும், டிசம்பர் மாதத்தை மார்கழி மாதம் என்றும் கணக்கிடுவது புலிகள் இயக்கத்தின் மரபு. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தளவு, நவம்பர் 15ஆம் தேதி அளவில்தான் கார்த்திகை தொடங்கும். டிசம்பர் 15வரை கார்த்திகைதான். எனவே தமிழ்நாட்டுக்காரரான இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்துவது, மாவீரர் நாள் கொண்டாடப்படும் கார்த்திகை மாதத்தில் அன்று, ஐப்பசி மாதத்தில்.

இப்படி எல்லாம் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பதை விட, நடைமுறைக்கு ஏற்ற, லட்சியங்களை உயர்த்திப் பிடிக்கின்ற வழிமுறைகளை மேற்கொள்வதே சரியானது என்பதை நாம் உணரவேண்டும்.

1988ஆம் ஆண்டு, ‘ஈழ மக்களைக் கொல்லாதே, இந்திய ராணுவமே திரும்பி வா’ என்ற கோரிக்கையை முன்வைத்து, ‘ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு’ கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தியது. பல்வேறு துறைகளைச் சார்ந்த புகழ்பெற்ற 300 பேர் அவ்வறிக்கையில் கையொப்பமிட்டனர். நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர், முரசொலி மாறன், சுரதா, வைரமுத்து, மு.மேத்தா, சுந்தரராமசாமி, அசோகமித்திரன், ஞாநி, பாலுமகேந்திரா, கலைப்புலி தாணு உள்ளிட்ட பலர் அன்று கையொப்பமிட்டனர். அந்த வரிசையில் ஒருவராய், இளையராஜாவும் கையெழுத்திட்டிருந்தார் என்பதைப் புதிதாய்ப் புறப்பட்டிருக்கும் ஈழ ஆதரவாளர்கள் அறிவார்களா என்று தெரியவில்லை.

எப்போதும் ஈழவிடுதலை போன்ற நியாயமான கோரிக்கைகளை நோக்கி, வெவ்வேறு துறைகளிலும் உள்ள பலரையும் நாம் ஈர்க்க வேண்டும். அதுதான் அக்கோரிக்கைக்கு நாம் உண்மையாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம். எல்லோரையும் அடித்துத் துரத்துவதும், துரோகிகளாகக் காட்ட முயல்வதும், நாம் முன்னெடுக்கும் கோரிக்கையின் வலிமையைக் குறைக்கும்.

தாங்கள் மட்டுமே ஈழ ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொள்ள முயலும் சிலரின் மலிவான உத்திதான் இது. ஈழ ஆதரவு என்பது எவர் ஒருவருக்கும் ‘மொத்தக் குத்தகைக்கு’ விடப்படவில்லை என்பதைப் புதிய சட்டாம்பிள்ளைகள் புரிந்துகொள்ள வேண்டும்.

- சுப.வீரபாண்டியன்

Comments

25 comments

25
மாமூலன்
எதற்கு மூடி மறைக்கிறார் சுபவீரபாண்டியனார். நேரடியாகச் சொல்வதுதானே! சீமனின் கோஸ்டியினர்தான் என்பதை. புலமபெயரந்;த மக்கள் இதை அறிவிக்கவில்லை. சீமானின் நாம் தமிழர் கட்சிதான் அறிவித்தது. இது ஈழத்தமிழரில் ஒருசாரார் என்று ஏன் சுப வீரபாண்டியன் புரட்டுகிறார். அது தமிழகத் தமிழரில் ஒரு சாரார் என்பதாகத்தான் இருக்கலாம். சீமானைக் கூப்பிட்டு நேரடியாகக் கேளுங்கள். இப்படிச் சப்பைக் கட்டு கட்டத்தேவையில்லை.
Aaron
Please undastand that no one is against Illayaraja's musical progaramme. But the message is clear that is "Kaarthikai maathatthai punithamaaga penungal" thats all. Before we had our "Pillaigal" we never had any problem. Now we have to be cautious about every thing. Enemy wants us to forget about the past. November 27 is in our SOUL. He wants to erase everything from our hearts and mind. If we say yes to this Nov 3 programme. Next year it will be November 13. after that year it will be November 23. If I teel you the truth that I'm afraid of this. SO THE MESSAGE IS CLEAR THAT IS AVOID NOVEMBER. THATS ALL. That dosen't mean that we are against Illayaraja's musical programme. If someone got more power that means he have to more responsible to where he belongs.
Raj Kumar
சுப விரபன்ட்யன் - திபாவழி - First of all this is not a Tamil festival. However this event has been organized by Sri Lankan government, and this government has paid already 2 million dollars in advance, and Ilayarajah has already got his portion of this money.
Now, you need to realize, why this has been organized in November? And why over 100 musicians need to participate on this program? Why progarm like this never happned in the past? If you're a honest Tamil you can find the answer easily. I do not want to write further about your article...Are you a Tamil? Then please respect the Tamil nation.
Siva ponniah
Please read this...link
http://www.canadatyo.org/tyo/?page=press&type=viewArticle&id=6
sabari sri
தமிழர்கள் நமக்குள் அடிதுக்கொள்வதை விட்டு விட்டு இனியவது ஒன்று சேர்ந்து எதயும் செய்ய முயலுவோம்...

இணையத்தில் ஈழதமிழர் பிரச்சனையில் ஒவ்வொரு இயக்கமும் மற்றவரை இணைத்து செல்வதைவிட்டு குறை கூறி புறந்தல்லுவதன் மூலம் போராட்டம் திசை திரும்புவதை உணரவேண்டும்...
இனியன
மிக நல்ல அளவில் விழிப்புணர்வை யதார்த்தநிலையை சாத்தியக்கூறுகளை விளக்கி நம்மை நமது இலக்கினை நோக்கி அணியப்படுத்த வல்ல கட்டுரை. நமக்கு இளையராசாவின் நடவடிக்கைகளில் சிலவற்றில் மாற்றுக்கருத்து இருந்தாலும்

//எப்போதும் ஈழவிடுதலை போன்ற நியாயமான கோரிக்கைகளை நோக்கி, வெவ்வேறு துறைகளிலும் உள்ள பலரையும் நாம் ஈர்க்க வேண்டும். அதுதான் அக்கோரிக்கைக்கு நாம் உண்மையாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம். எல்லோரையும் அடித்துத் துரத்துவதும், துரோகிகளாகக் காட்ட முயல்வதும், நாம் முன்னெடுக்கும் கோரிக்கையின் வலிமையைக் குறைக்கும்.//எனவே ஒப்புக்கொள்கிறோம்.
m.k.murugan
சீமான் தமிழர்களின் ஆறாவது விரல்! தேவையில்லை! ஒட்டிக்கொண்டு இருந்துவிட்டுப் போகட்டும்! சட்டை செய்யாதீர்! விரல் மீறி நகமாய் வளரட்டும்! என்ன செய்ய வேண்டுமென சொல்லத்தேவையில்லை!
kamalan
எங்கள் முன்னாள் சட்டாம்பிள்ளை
உயர்திரு ,சுபவீ அவர்களே உங்கள் கூற்றை,- கொஞ்சம் கூட - ஏற்க மறுக்குதே மனம்
என்று எழுதினால், பொருத்தமாகத்தானே இருக்கும் சுபவீ .?
தலைவன் வழியில்தான் தமிழ் ஈழத்தின்மீது பற்றுக் கொண்டவர்கள் இருக்கிறார்கள் .இழந்தவர்களுக்காக ,எங்கள் இதயத்தில் இருப்பவர்களுக்காக
நாம் மேற்கொள்ளும் நடவடிக்கை ஒன்றும் நகைப்புக்கு உரியதல்ல .எங்களுக்காக,
தமிழ் ஈழத்துக்காக,தலைவன் சொன்னதை எல்லாம் ஈழ மக்களும்,மா வீரர்களும்
செய்தார்கள் .முள்ளிவாய்க்காலுக்குப்பின்னும் ;முடிவுறாமல், ஈர வலிகளோடும்,
இதயம் கனக்கும் பொழுதுகளோடும் நகருதே நாட்கள்.. நினைத்துப் பார்பீர்களா நீங்கள் !
கூட்டைக் கலைத்தார்கள் கொடியவர்கள் .கொண்ட கொள்கை கொண்டோரைக் கொன்றார்கள்
எல்லாவற்றையும் இழந்தல்லவா நாங்கள் .... தலைவன் சொன்னால்தான் எல்லாவற்றையும்
செய்ய வேண்டும் என்றும் இல்லை சட்டாம்பி திரு சுபவீ அவர்களே ..! சொல்லாததையும் செய்து
தலைவனிடத்தில் பெயர் வாங்கிய தருணங்களும் எவ்வளவோ உண்டு ... அது உங்களைப்
போன்றோருக்கு தெரியாததில் வியப்பொன்றும் இல்லைதான் .. இல்லாது போனவர்களின் பெறுமதி
இழந்து நிற்கும் எமக்கல்லவா தெரியும் ..அவர்கள் எம்மீது செலுத்திய பங்குக்கு என்ன கைமாற்று ..???
அவர்கள் எம்மைக் காத்த காலத்தை யார் தருவார் ..? அவர்கள் உடன்படும் அல்லது என்றும் ஏற்றுக்கொள்ளும்
எதனையும் இழந்த நம் ஈழ மக்கள் செய்து கொண்டு தான் இருப்பார்கள் . கார்த்திகை மாத புது விளக்கம் சிறுபிள்ளைத்தனமானது.
உங்களைப் போன்ற பாதி தமிழர்களுக்கு ஒப்பானது .. இந்திய இராணுவத்தை திரும்ப பெறு என கையொப்பம் இட்ட ஒரு சிலரைப் பார்க்கிறேன் .. வேண்டுமானால் இவர்களுக்கு ஏதும் சொல்லிக் கொடுங்கள் .எம்மை வைத்து எல்லா வழிகளிலும்
பிழைப்பு நடத்தும் தமிழக தலைவர்களுக்கும் ,ஏன் ; தலைவர்கள் என சொல்லிக் கொள்பவர்களுக்கும் ஏதும் சொல்லிக்கொடுங்கள்
எமக்கு வேண்டாம் ! இளையராசாவின் இசையை தலையில் வைத்து கொண்டாடியவன் ஈழத்தமிழனே ..அவரின் இசையில்
எங்களுக்கோர் மயக்கம் உண்டு ..... என்றும் ஈழத்துக்காக, நம் மக்களுக்காக அவர் இசைக்காததிலும் ,இசையாததிலும் வியப்பு !
வியப்பு !! வியப்பே !!!!!
naan tamizhanalla
அய்யா சுபவீ நானும் ரெளடிதான் கனக்காய் ...இனம் இனத்திற்க்கு ஆதரவாய் குரல் கொடுக்கிறார். அப்துல் கலாம் முன் தயாரிப்போடு அணூ உலை பற்றீ பேசியதுபோல தலைவரின் அம்மாவின் சுவரொட்டி ஒட்டியவர்தானே...அந்த தாயையும், இரண்டு லட்சத்திற்கும் மேற்ப்பட்ட எம் உறவுகள் ஈழத்தில் கொல்லப்பட காரணமான எட்டப்பனின்(கருணா நிதியின்) கூட்டாளீயிடம்(அ ய்யா சுபவீ) மேற்க்கண்ட புலம்பலைதானே எதிர்பார்க்க முடியும். அய்யா சுபவீ அவர்களே! 1988 ம் ஆண்டு நிகழ்வை சுட்டிகாட்டும் தங்களீன் கூற்றூபடி பார்த்தால் ஈழத்து கருணா கூட துரோகியாய் மாறூம் வரை போராளீதான்....அ ந்த வரிசையில் கருணா நிதி+சுபவீ+.....
அமைதி விரும்பி.
புலம்பெயர்ந்த தஈழத்தமிழர்கள், அயல் தேசங்களில் மிகவும் சுபிட்சமாக சந்தோஷமாக கவலை இல்லாமல் வாழ்கின்றனர். அவர்கள் உண்மையில் தமிழ் பற்று உள்ளவர்களாக இருந்தால்! திரும்பி தாயகம் வர வேண்டியது தானே?

தாயகம் வந்து மற்ற தமிழர்கூட சேர்ந்து வாழவேண்டியதுதானே?

ஏன் அப்படி இல்லை, புலம்பெயர்ந்த அத்தனைபேரும் தமிழ் பற்று உள்ளவர்களா?

அயல் தேசத்தில் பிறக்கும் ஈழத்தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது, இது எப்படி இருக்கு?
ஜெகன் கோவை
அய்யா தி.ரு சுப.வீ. உங்கள் மீது அளவுகடந்த மறியாதை வைத்திருக்கும் ஈழத்தமிழர்கள் மிது இப்படி சேற்றை வாரித்தூற்றியது போல் உள்ளதய்யா உங்கள் வாதம், மணம் வ்லிக்கிறது.
kuru
கனடாவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இளையராஜாவின் இன்னிசை நிகழ்வு ! மாவீரர் மாதத்தில் தான் நடத்தப்படவேண்டுமா ? என்று ஈழத் தமிழர்கள் கேள்விகேட்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனை அடுத்து உணர்வாளர் சீமான் அவர்கள், இந் நிகழ்வை புறக்கணியுங்கள் என்று அறிவித்தல் விட்டார். ஆனால் இதனையே அரசியலாக்கி சில அதிமேதாவிகள், இதனை ஏன் புறக்கணிக்கவேண்டும் ? உண்மையில் இது மாவீரர் மாதத்தில் நடக்கவில்லை என்கிறார்கள் ! இது என்ன வேடிக்கை என்று நினைக்கவேண்டாம். விடுதலைப் புலிகள் நவம்பர் மாதத்தை கார்த்திகை என்றும், டிசம்பர் மாதத்தை மார்கழி என்றும் அழைக்கிறார்களாம். ஆனால் தமிழ் நாட்டில் உள்ளவர்கள், நவம்பர் 15ம் திகதிக்கு பின்னர் தான் கார்த்திகை என்று அழைக்கிறார்களாம், என்று இதற்கு புது விளக்கம் வேறு சொல்லப்படுகிறது.

எனவே தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு அது கார்த்திகை மாதம்(நவம்பர் மாதம்) இல்லை என்கிறார்கள். அதனால் இளையராஜா அவர்கள் தாராளமாகப் பாடலாம் என்கிறார்கள் சிலர். தமிழ் நாட்டில் உள்ள கட்சிகள், அதில் உள்ள சில முக்கிய பிரமுகர்கள் தமக்குள் இருக்கும் காழ்ப்புணர்வுகளை ஈழத் தமிழர் விடையத்திலும் வெளிப்படுத்துவது பெரும் வேதனைக்குரிய விடையமாக இருக்கிறது. அதாவது சீமான் ஒரு விடையம் தொடர்பாக ஒரு அறிவித்தலை வெளியிட்டால், அவரைப் பிடிக்காத பிறிதொரு தலைவர், அது ஈழப் பிரச்சனை என்று கூடப்பாராமல், அதனை எதிர்த்து அறிக்கை விடுவார். இந்தச் சாக்கடை அரசியலை, தமிழ் நாட்டில் மட்டுமல்லாது, தற்போது புலம்பெயர் நாடுகளுக்கும் ஏற்றுமதிசெய்கிறார்கள் சில அரசியல்வாதிகள். நவம்பரில் இளையராஜா ஏன் இன்னிசை மழைபொழியக்கூடாது என்று ஒரு பட்டிமன்றம் வைக்கும் இவர்களுக்கு சில தகவல்களைக் கூற ஈழத் தமிழன் என்ற முறையில் நான் கடமைப்பட்டுள்ளேன்.

தேசிய தலைவரது பிறந்த நாள், நவம்பர் 26ம் திகதி தமிழீழத்தில் கொண்டாடப்படுகிறது. அதனைக் கொண்டாடிவிட்டு மறுநாள் மாவீரர் தின நாளை துக்கநாளா அனுஷ்டிப்பது இல்லையா ? என்று கேட்கிறார்களே ! எப்போது ஐயா தேசிய தலைவரது பிறந்த நாள் வெகு விமர்சையாக நடந்துள்ளது ? வட கிழக்கில் உள்ள மக்களும் போராளிகளும் தமக்கு பிடித்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்பை வழங்குவார்கள். அது தான் அவரது பிறந்தநாள் அடையாளம். இது ஈழத்தில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும். மாவீரர் நாளுக்கு முதல் வாரமே ஈழத்தில் உள்ள தெருவெங்கும் சோக கீதங்கள் இசைக்கப்பட்டு, மாவீரரின் குடும்பங்கள் கெளரவிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக இம் மாதத்தில் ஈழத்தில் பெரிய நிகழ்வுகள் நடத்தபடுவது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு வந்துள்ளது.

இப்படி இருக்கையில், நவம்பர் 3ம் திகதி தானே நாம் இன்னிசை நிகழ்வை நடத்துகிறோம் என்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள். சரி இம் முறை ஓம் நடத்துங்கள் என்று விட்டுவிட்டால், அடுத்த வருடம் அதை நவம்பர் 10ம் திகதியாக மாற்றி பின்னர், அதனை நவம்பர் 20 ஆக்கி அதற்கு பின்னர் நவம்பர் 27 ஆகவும் மாற்மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் ? அப்போது எங்கே போய் முறையிடுவது. சிங்களவன் மோடையன் என்று சொல்லிச் சொல்லியே, தமிழர்கள் புத்தி இழந்ததால் தான் இன்று இவ்வளவு பின்னடைவையும் நாம் எதிர்கொண்டு நிற்கிறோம். புலம் பெயர் நாடுகளில், கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில், தமிழர்கள் மிகவும் பலமாக உள்ளார்கள். இவர்களின் தேசிய அடையாளங்கள் என்ன என்று கேட்டால் அது மாவீரர் தினம் தான். அதன் பின்னர் முள்ளிவாய்க்கால் தினமும் அடங்குகிறது. இவ்விரு நிகழ்வுகளையும் உடைத்தால் போதும், சிங்களம் 100% வீத வெற்றியை அடைந்துவிடும். இந்த ஏக்கத்தில் தான் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதனை ஏன் இவர்கள், இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை ?

ஒரு வருடத்தில், இருக்கும் 12 மாதங்களில், நவம்பர் மாதம் மட்டும் தான் கிடைத்ததா இவர்களுக்கு ? வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல தமிழர்கள் நெஞ்சில் மெல்ல மெல்ல நஞ்சைக் கலக்க முயல்வது யார் ? இன்னிசை நிகழ்வுகள் என்று பாடகர்களை இலங்கைக்கு அழைத்தது யார் ? பின்னர் அவர்கள் ஏன் பாடாமல் ஓடிவந்தார்கள் ? இதை எல்லாம் நாம் நினைத்துப் பார்க்கவேண்டாமா ? சரி எல்லாம் போகட்டும்.. யார் இந்த இளையராஜா ? நல்ல ஒரு இசையமைப்பாளர் அவ்வளவுதான் ! ... ஈழத்துச் சோகங்களை சுமந்துவரும் ஒரு பாடலுக்கு மெட்டுப்போட்டாரா ? இல்லை ஈழத் தமிழர்கள் இன்னலுற்றவேளை தமிழ் நாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தி நிதிசேகரித்தாரா ? இல்லை கோடிக்கணக்கில் சேர்த்துவைத்திருக்கும் பணத்தில் கொஞ்சத்தை எடுத்து மண்டபம் முகாமில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு கொடுத்தாரா ? கேட்டால் நான் இசையமைப்பாளர், அரசியலில் ஈடுபடுவது இல்லை என்று நழுவி விழுவார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் குழிரிலும் மழையில் உறையும் காலநிலையிலும், வேலைசெய்து உழைத்த பணத்தை பிடுங்க இசை நிகழ்ச்சிகளை நடத்தமட்டும் வரிந்துகட்டிக்கொண்டு முன் நிற்கிறார்களே ! இது எந்த வகையில் நியாயம் ?.

அது சரி இவ்வளவு பிரச்சனை ஓடுகிறதே, ஏற்பாட்டாளர்களோ இல்லை இளையராஜாவோ எனது இசைநிகழ்வில் சேரும் பணத்தில் ஒரு சிறிய தொகையை நான் ஈழத் தமிழ் அகதிகளுக்கு கொடுக்கிறேன் என்று இப்போதாவது ஒரு வார்த்தையை விட்டார்களா ? அதுவும் இல்லையே ! அதாவது ஈழத் தமிழரின் உழைப்பை சுரண்டவேணும், ஆனால் உனக்கு ஏதாவது கஷ்டம் வந்தால் என்னைக் கேட்க்காதே நான், அதுக்கு உதவமாட்டேன் என்று சொல்வதைப் போல உள்ளது இவர்கள் நடவடிக்கை ! இந்தியக் கலைஞர்களை ஈழத் தமிழர்கள் மதிக்கிறார்கள். ஏன் ஒரு படி மேலேபோய் அவர்களால் எங்களுக்கு ஏதாவது விடிவு கிடைக்காதா என்று நினைத்து ஏங்குகிறார்கள். தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் மட்டும்தானா ஈழத் தமிழர்களுக்கு உதவவேண்டும் ? சினிமா துறையில் உள்ளவர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், தொழிலதிபர்கள், எவரும் உதவக்கூடாதா ? அப்படி என்ன சட்டமா போட்டுள்ளார்கள் ? ஈழத் தமிழர்கள் இந்தியக் கலைஞர்களை மதிப்பதுபோல , எங்கள் உணர்வுகளையும் நீங்கள் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

நான் ஒரு கவிஞன், நான் கவிதை மட்டும் தான் எழுதுவேன் என்று சொல்லிவிட்டு மகாகவி பாரதி இருந்துவிட்டான ஏன்ன ? காலத்தின் தேவை கருதி, ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்க்க தனது கவிப் புலமையை அவன் பயன்படுத்தவில்லையா ? எனக்கு அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கிச் சென்றுவிட்டானா ? தன்னாலான உதவியை, இந்திய விடுதலைக்கு அவன் செய்திருக்கிறான். இதுகூடவா புரியவில்லை ? இன்று ஈழத் தமிழர்கள் எனது நண்பர்கள் என்று பேட்டி கொடுக்கும் இளையராஜா அவர்கள், நேற்று எங்கே இருந்தார் ? 2009ம் ஆண்டு எங்கே இருந்தார் ? நிலவிலா இல்லை செவ்வாய் கிரகத்திலா ?

கனடாவில் வாழும் மானமுள்ள எந்தத் தமிழனும் இந் நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டான். இதனையும் மீறி மாவீரர் மாதத்தில் தான், நாம் இன் நிகழ்வை வைப்போம் என்று அவர்கள் அடம்பிடித்தால், இவர்கள் எந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக வேலைசெய்கிறார்கள் என்பதனை ஈழத் தமிழர்கள் அறிந்துகொள்வார்கள். இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது எமக்கு புரியாத புதிரா என்ன ?
kuru
’’எங்களின் தொப்புள் கொடி உறவான கலைஞர்களே!

தயவுகூர்ந்து ஈழத் தமிழர்களின் வெந்த புண்ணிலே வேலைப் பாச்சாதீர்கள். நாங்கள் இழந்தது ஒன்று இரண்டல்ல. 40,000-க்கும் மேற்பட்ட மாவீரர்களையும், பல இலட்சக்கணக்கான எங்களின் சொந்தங்களையும், மண்ணையும் இழந்து உலகப்பந்தெங்கும் ஏதிலிகளாக அலைகின்றோம்.

எமக்கு இன்னும் நீதியோ, அரசியல் உரிமையோ கிடைக்கவில்லை. நாங்கள் அழுது புரண்டு ஆற்றுவதற்காக எங்களின் தேசிய அதி மேதகு தலைவன் பிரபாகரனால் குறிக்கப்பட்ட மாதந்தான் இந்த நவம்பர் மாதம். இந்த மாதத்திலாவது அழுவதற்குக்கூட சிங்களவன் விடுவதாயில்லை.

ஈழத்திலே இருக்கும் அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களையெல்லாம் இருக்கும் இடந்தெரியாமல் அழித்து விட்டான். ஈழத் தமிழனுக்கு இன்று இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் புலம்பெயர் தமிழர்கள்தான்.

இவர்களின் பலத்தைச் சிதைப்பதற்காக பல மில்லியன் கணக்கில் பணத்தை இனத் துரோகிகளின் கையில் வாரி இறைத்து மாவீரர்களின் விழாவைக் குழப்புவதற்காக சென்ற ஆண்டிலிருந்து மிகவும் வேகமாகச் செயற்பட்டுக் கொண்டு வருகின்றான்.

எங்களுக்கு இசைஞானி இளையராசா மேல் எந்தவொரு வெறுப்புமில்லை. மாவீரர்களுக்குரிய நவம்பரில் மாத்திரம் எந்தவெரு ஆடம்பரமும் வேண்டாமென்பதுதான் கனடியத் தமிழர்களின் வேண்டுகோள்.

கனடாவிலுள்ள தமிழ் மக்களின் எதிர்ப்பினால் இவர்கள் எதிர்பார்த்த மாதிரி நுளைவுச் சீட்டுகள் விற்பனையாகாமையினால், ஆங்காங்கே சிறிய நிகழ்வுகளை வைத்து நுழைவுச் சீட்டுகளை இலவசமாக விநியோகிக்கின்றார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகின்றது. இவர்களுக்கு பணத்தைப் பற்றிக் கவலையில்லை. எல்லாவற்றிற்கும் பின்னால் சிங்கள அரசின் ஆதரவு இருக்கின்றது.

எனவே, எங்களின் அன்பான கலைஞர்களே இழந்து போன எங்களின் மாவீரர் பேரிலும், இசைப் பிரியா போன்ற ஈழக் கலைஞர்களின் பேரிலும் உங்களிடம் மன்றாட்டமாகக் கேட்கின்றோம், நவம்பர் 3-ல் கனடாவில் நடைபெறும் இளையராசாவின் இசை விழாவைப் புறக்கணிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்’’என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷாலி
திரு.சுப.வீ. அவர்கள் கருணாநிதியின் ****தான். ஆனாலும் அவர் எடுத்துவைக்கும் எதார்த்தமான வாதங்களில் நியாயம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

தலைவர் பிரபாகரன் களத்தில் இல்லாததால், தடிஎடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்றபடி ஆளாளுக்கு நாட்டாமை செய்கிறார்கள். தலைவர் சொல்லாததை, செய்யாததை செய்பவன் தொண்டன் அல்ல ****.

தமிழகத்தில் காலம் காலமாய் ஒரு நாள் மட்டும் நடந்த பிள்ளையார் சதுர்த்தியை ஒரு மாசத்திற்கு இழுத்துப்போட்டு அரசியல் பண்ணும் கூட்டங்கள் புலம் பெயர் தமிழர்களிடமும் ஊடுருவி விட்டது.தமிழினத்தை மீண்டும் மதசேற்றில் புதைக்கவே சோக மாதத்தை சொருகி விட்டார்கள்.

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதுபோல் இவர்களுக்கு இன்று இளையராஜா கிடைத்துவிட்டார்.கச்சேரிக்கு களை கட்டுகிறது.
கொலைத்தலைவன் ராஜ பக்சேவை எளிதில் இனம் காண முடியும் ஆனால் தலைவர் பெயரைச் சொல்லி சோகத்தில் சுரம்பிரிக்கும் தம்பி எனும் அம்பிகளை அடையாளம் காண்பது கடினம்.

இந்துத்துவா சதியில் இந்தியா சிக்கியதுபோல், சைவத்துவா “சதீ’ க்கு தமிழீழ மக்கள் உடன்கட்டை ஆகிவிடக்கூடாது.
Prem
புலிகளின் மரபுபற்றிக் குறிப்பிடம் சுப. வீரபாண்டியன் பேராசிரியர் ஐயா தெரியாத விடயம் பற்றி கூறுவதை விடுத்துத் தனக்கு உறுதியாகத் தெரிந்த விடயங்களை விளிப்பிற்க எடுத்துக் கொள்வது சிறந்தது என எண்ணுகின்றேன். தமிழீழ விடுதலைப்புலிகள் நவம்பர் மாதத்தினை கார்த்திகை என்றோ அன்றி டிசம்பர் மாதத்தினை மார்கழி மாதம் எனக் கணக்கெடுத்துக் கொள்வதில்லை என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன். விடுதலைப்புலிகள் ‌க்ரே‌ேஜார்ஜியன் மாதங்களை அப்படியே தமிழ் உச்சரிப்போடு பயன்படுத்தும் வழக்கத்தினைக் கொண்டிருந்தார்கள். அவ்வழக்கத்தினையே பெருவாரியான ஈழத்தமிழ் மக்களும் கொண்டுள்ளார்கள் என்பதனையும் இங்கே கூறிக்கொள்ள விரும்புகின்றேன். பொய்யான அல்லது பிழையான தகவல்களை ஆதாரமாகச் சேர்க்கும் போது உங்களின் வாதம் அடிபட்டுப்போய்விடும் அல்லது ஏற்றுக்கொள்ளத் தக்கதாக மாறிவிடும் என்பது பேராசிரியரிற்கத் தெரியாதிருக்க வாய்ப்பில்லை என எண்ணுகின்றேன்.
Sivaa
அய்யா - சுப வீ - கட்டுரை நிதானமாக நன்கு எழுதப் பட்டுள்ளது...அவரது கேள்விகளில் பல நியாங்கள் உள்ளது....
விழா நடக்க இருப்பது கனடாவில் ஈழ தமிழர்கள் வாழும் பகுதியில்....அங்கு ஆயிரகானக்காண டிக்கெட்டுக்கள் முன்னரே விற்று தீர்ந்து விட்டது!!!! இதனை முதன் முதலே விழா ஏற்பாடார்களிடம் சொல்லி இருக்க வேண்டும்!!!!

எது எப்படியோ - அய்யா சுப வீ கருத்துகளோடு எண்ணற்ற தமிழர்கள் ஒத்து போகிறார்கள்....(கலைஞர் ஆதரவாளர் என்பது அவருக்கு பெருமைதானே ஒழிய, இழிவு அல்ல!)

சிவா.....
lakshmi narayanan
சுப.வீ அவர்களின் கருத்துக்கு யாரும் மதிப்புக்கொடுக்காத நிலையில் அவரின் முந்தைய நிலையை எண்ணி, விமர்சன கருத்து தெரிவித்திருப்பது ஓரளவு சரியே. நீரா ராடியாவுடன் கனிமொழி மற்றும் ராசாத்தியம்மாள் பற்றி பேசியதைப்பற்றிக் கேட்டதற்கு, இரண்டு பெண்கள் பேசிக்கொண்டாற்கள் உங்களுக்கு என்ன என்று பத்திரிக்கையாளர்களை வினவியர் இவருடைய தலைவர். அப்படிப்பட்ட கனிமொழிக்காக அரங்கக்கூட்டங்கள் நடத்தி கனிமொழி குற்றமற்றவர் என்று வாதிட்டவர். கருணாநிதி தனிமனித ஒழுக்கமற்ற இனத்துரோகி என்பது சுப.வீக்கு ந்ன்றாகவே தெரியும். மூன்று மனைவிகளின் பிள்ளைகள், பேரன்கள் கொள்ளையடித்து பணம் சேர்த்தது தெரியும். காங்கிரசை எதிர்த்தால் வழக்கு போடுவார்கள் சிறையில் வைப்பார்கள் எனபதால் சிங்களவோனடு சேர்ந்து தமிழர்களை கொன்ற காங்கிரசோடு சேர்ந்து ஈழ மக்களுக்கு துரோகம் செயதவன் என்பதும் தெரியும். ஈழப்போரின்போது நடந்த போராட்டத்தை ஒடுக்கியவன். கருணாநிதியை விமர்சனம் செய்தபோது, ஒரு முதலமைச்சராக என்ன செய்ய முடியும் என்று வருத்தப்பட்ட தமிழ்ப்போராளி சுப.வீ. எனவே இனத்துரோகியை நினைத்து வருத்தப்படும் இந்தப்போராளியை புறந்தள்ளுவோம்.
viyasan
சீமானுக்குப் பிர‌ம்படி கொடுப்ப‌தற்காக‌வே சில‌ ச‌ட்டாம்பிள்ளைக‌ள் அம‌ர்த்த்ப்ப‌ட்டிருக்கிறார்கள் அவ‌ர்க‌ள் சீமானின் க‌ருத்துக்க‌ள் எல்லாவ‌ற்றையும் எதிர்க்க‌ வேண்டுமென‌ நினைத்தோ என்னமோ, அப‌த்த‌மான‌ க‌ருத்துக்க‌ளைத் தெரிவித்து தமக்குத் தாமே பிர‌ம்ப‌டி ப‌ட்டுக் கொள்கிறார்க‌ள் போல் தெரிகிற‌து. இளைராஜா த‌மிழின‌த்துரோகி என்ப‌தை விட‌ அவ‌ரும் அவ‌ர‌து இசை நிக‌ழ்ச்சியை மாவீர‌ர் நினைவு மாத‌த்தில் ந‌ட‌த்த ஒழுங்கு செய்த‌ புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ள் சில‌ரும் ஈழ‌த்தமிழ‌ர்களின் உண‌ர்வுக‌ளைப் புரிந்து கொள்ள‌வில்லை என்ப‌து தான் உண்மை. அதை நியாயப்ப‌டுத்த‌ முனையும் திரு, சுப‌. வீ அவர்க‌ளுக்கும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின், அதாவ‌து த‌ம‌து மகனை, மக‌ளை, ச‌கோத‌ர‌னை அல்ல‌து ச‌கோதரியை ஈழ‌விடுத‌லைக்காக‌ அர்ப்ப‌ணித்த மாவீர‌ர் குடும்ப‌ங்க‌ளினதும், அந்த‌ மாவீர‌ர்க‌ளின் தியாக்த்தை ம‌திக்கும் பெரும்பான்மையான‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் உண‌ர்வுகளுட‌னும் ப‌ரிச்சய‌ம் கிடையாது என்ப‌தைத் தான் காட்டுகிற‌து. புல‌ம்பெய‌ர்ந்த‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளில் சில‌ர் இல‌ங்கை அர‌சால் விலைக்கு வாங்க‌ப்ப‌ட்டிருக்கிறார்க‌ள். புனித‌மான‌ மாவீர‌ர் நினைவு மாத‌த்தில் இசைவிழா ந‌ட‌த்தி, த‌மிழ‌ர்க‌ளின் விடுத‌லை உண‌ர்வை ம‌ழுங்க‌டித்து, இந்த‌ மாதத்தில் ஒரு கேளிக்கை விழா ந‌ட‌த்தும் பின்ன‌ணியில் இல‌ங்கை அர‌சின் அடிவ‌ருடிக‌ள் யாராவ‌து இருக்கிறார்க‌ள் என்ற‌ கோண‌த்தில் சிந்திக்க‌ வேண்டுமென்ப‌து திரு. சுப‌வீக்கு தெரியாது விட்டாலும் அது ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்குத் தெரியும். த‌மிழ்நாட்டுக் கூத்தாடிக‌ள் ப‌ல‌ர் இர‌ட்டை நாக்கால் பேசுவதும் ப‌ணம் பண்ண‌ முடியுமென்றால் சிங்க‌ள‌வ‌ர்க‌ளின் காலில் விழுவ‌தும், சில‌ தருண‌ங்க‌ளில் தம‌து இலாப‌ நோக்க‌த்துக்காக‌ புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளைப் ப‌கைத்துக் கொள்ள‌ விரும்பாம‌ல், ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்குச் சார்பாக‌க் காட்டிக் கொள்வதும், ல‌ண்ட‌னில் புலம்பெய‌ர்ந்த‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் ம‌த்தியில் த‌ம‌து முத‌ல‌டையாள‌ம் த‌மிழ‌னாக‌வும், நாடு திரும்பிய‌தும் தாங்க‌ள் முத‌லில் இந்தியர்க‌ள் என்று பெருமைய‌டித்துக் கொள்வ‌தும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள‌னைவ‌ரும் அறிந்த‌ விட‌ய‌ம் தான். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் சினிமா மோக‌ம் தான் க‌ஸ்ட‌ப்ப‌ட்டு உழைத்த‌ ப‌ண‌த்தை த‌மிழுண‌ர்வ‌ற்ற, த‌மிழ‌ர்க‌ள‌ல்லாத த‌மிழ்நாட்டுக் கூத்தாடிக‌ளின் கால்க‌ளில் கூடக் கொட்டச் செய்கிற‌து. மாவீர‌ர் நினைவு மாத‌த்தில் எந்த‌ விழாக்க‌ளும் ந‌ட‌த்த‌ப்ப‌ட‌க் கூடாதென்று பிர‌பாக‌ர‌ன் அறிவிக்காது விட்டால் கூட‌ அந்த‌ மாத‌த்தில் கேளிக்கை விழாக்க‌ளை நட‌த்தும் வழ‌க்க‌ம் இதுவ‌ரை ஈழ‌த்தமிழ‌ர்க‌ளிட‌ம் இருந்த‌தில்லை. தூரத்துச் சொந்த‌க்காரார் இற‌ந்தால் கூட‌ துட‌க்கு(தீட்டு) என்று கூறி குறிப்பிட்ட‌ கால‌ம் வ‌ரை கோயிலுக்குப் போகாம‌லும், ந‌ல்ல‌ காரிய‌ங்களில் க‌ல‌ந்து கொள்ளாம‌லும் துக்க‌ம் கொண்டாடுப‌வ‌ர்க‌ள் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள், அப்ப‌டியான‌வ‌ர்க‌ளுக்கு மாவீர‌ர் நினைவு மாத‌த்தில் கேளிக்கை நிக‌ழ்ச்சிக‌ள் ந‌ட‌த்தாதீர்க‌ள் என்று அறிவுறுத்த‌ வேண்டிய‌ தேவை கிடையாது என்று பிர‌பாக‌ர‌னுக்கும் நிச்ச‌ய‌மாக‌த் தெரியும், அத‌னால் தான் அப்ப‌டியயொரு அறிவிப்பை வெளியிட‌வில்லை என்ப‌து பிர‌பாக‌ர‌னின் த‌ம்பி சீமானுக்கும் புரியும் ஆனால் சுப‌வீ அவ‌ர்களுக்குத் தான் புரிய‌வில்லைப் போல் தெரிகிறது. வித‌ண்டாவாத‌த்தில் வீர‌பாண்டியருக்கு நிக‌ர் வீர‌பாண்டிய‌ர் தான் . ஆண்டு முழுவ‌திலும் மாவீர‌ர்க‌ள் இற‌ந்தார்க‌ள் ஆனால் ஆண்டு முழுவ‌திலும் துக்க‌ம் கொண்டாடுவ‌தில் க‌ழிக்க‌ முடியாதென்ப‌தால் தான் ஒருமாத‌த்தை ம‌ட்டும் நினைவு மாதமாக‌ க‌டைப்பிடிக்கும் வழ‌க்க‌ம் ஏற்ப‌ட்ட‌து,எல்லா நாட்டிலும் போர்த்தியாகிகளின் நினைவுகூரும் நாளை அந்த‌ வ‌ழியிலேயே க‌டைப்பிடிக்கிற‌ர்க‌ள். பிராபாகர‌ன் உயிரோடிருந்த‌ போது மாவீர‌ர் நாளுக்கு முத‌ல் நாள் பிற‌ந்த‌ நாளைக் கொண்டாடினார் என்ப‌த‌ற்காக‌, அவ‌ரும் அவ‌ர‌து அப்பாவி ம‌னைவியும், குழ‌ந்தைக‌ளும் எப்படியான‌ கொடூர‌மான‌ முடிவைய‌னுப‌வித்தார்கள் என்று எண்ணிப்பார்க்க‌வே துணியாத‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளைப் பார்த்து, அவ‌ர் அப்போது பிற‌ந்த‌ நாள் கொண்டாடினார், இப்போது இளைய‌ராஜா ம‌ட்டும் இசை நிக்ழ்ச்சி ந‌ட‌த்தினால் என்ன‌ என்று கேட்கும் சுபவீக்கு என்ன‌ ப‌தில் சொல்வ‌தென்று தெரிய‌வில்லை. த‌மிழ்நாட்டைப் போல் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் ம‌த்தியில் தீபாவ‌ளி ஒரு பெரிய‌ கொண்டாட்ட‌ம் அல்ல‌. த‌மிழீழ‌ விடுத‌லைப் போராட்ட‌த்துக்கு முன்பான ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் பார‌ம்பரிய‌ கொண்டாட்ட‌ங்களையோ அல்ல‌து ச‌ட‌ங்குக‌ளையோ மாற்றும் வ‌ழக்க‌ம் ஈழ‌த்த‌மிழ‌ர்களிட‌ம் கிடையாது, அதனால் தீபாவ‌ளியையும் த‌டுப்பார்க‌ளோ என்ப‌தும் வெறும் விதண்டாவாத‌ம் தான். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வு என்ற‌ கோச‌த்தை ப‌தவியில் இல்லாத போதெல்லாம் த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல்வாதிக‌ளும், உல‌க‌நாடுக‌ளிலுள்ள் த‌மிழ‌ர்க‌ளிட‌ம் ப‌ண‌ம் ப‌ண்ணுவ‌த‌ற்காக‌ த‌மிழ்நாட்டுக் கூத்தாடிக‌ள் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தும் புதித‌ல்ல‌. ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் த‌ம‌து பிர‌ச்ச‌னையை முத‌லில் குத்த‌கைக்கு எடுத்திருந்த‌ த‌மிழ்நாட்டுத் த‌லைவர்க‌ள் த‌மிழின‌ப்ப‌ற்றுட‌ன், சுய‌ந‌ல‌ம‌ற்று அக்க‌றையுட‌ன் குர‌ல் கொடுத்திருந்தால் இந்த‌ள‌வுக்கு அழிவு ஏற்ப‌ட்டிருக்காது என்ற உண்மை இந்த‌க் க‌ட்டுரையாசிரிய‌ருக்கும் தெரியும். இப்பொழுது சீமானும் ஈழ‌த்த‌மிழ‌ர் பிர‌ச்ச‌னையைக் குத்த‌கைக்கு எடுத்திருக்கிறார், அவ‌ரும் ப‌த‌விக்கு வ‌ந்த‌தும் ம‌ற்ற‌வ‌ர்கள் போல் ந‌ட‌ந்து கொள்வாரா என்பத‌ற்கு கால‌ம் ப‌தில் கூறும். ஆனால் த‌மிழ‌ன் என்ற‌ வ‌கையில் ஈழ‌த்த‌மிழ‌ர் பிர‌ச்ச‌னையைக் குத்த‌கை எடுக்கும் உரிமை அவ‌ருக்கும் உண்டென்ப‌தை எந்த‌ வீர‌ சூர பாண்டிய‌னாலும் ம‌றுக்க‌ முடியாது.
ஈழம்
Pls read this

https://www.facebook.com/photo.php?fbid=357894677637540&set=a.306445902782418.71848.306439796116362&type=1&relevant_count=1
ஆறுமுகம்
நவம்பார் மாதம் பிரச்சினையல்ல நிகழ்ச்சி அங்கு வாழும் தமிழர்களின் பணத்தை குறிவைத்து தான் நடத்த படுகிறது. ஈழத்தமிர்களுக்காக ஒரு கையெழுத்து போடுவதுதான் ஒரு உலகறிந்த கலைஞனின் பங்கெடுப்பு என கொண்டால் மற்ற கையெழுத்திட்ட முகம் தெரியாத நபர்களுக்கும் இவருக்கும் என்ன வேறுபாடு வந்தது அவர்கள் தங்கள் கையெழுத்தை பெரிதாக காட்டிக் கொள்ள வில்லை தங்கள் கடமையை ஒரு கையெழுத்திடுவதாக செய்யதனர். ஆஸ்கர் கிடைத்தபோது மததை காட்டி தான் தன் அடையாளத்தை ஏ.ஆர். ரகுமான் காட்டிக்கொண்டார் தன்னை தமிழனாக அடையாளம் காட்ட தவறினால் ஆனால் கேரளா அரசுக்காக அணை உடைவாதாக காட்டி உலக அளவில் அதை சிறந்த படைப்பாக மட்டுமல்லாது மக்களின் வாழ்க்கை பிரச்சினையாக உலகுக்கு காட்டினான் கேரளாவை சேர்ந்தவர் அவருக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்றுதான் ஏ.ஆர். ரகுமான ‌பிராத்தனை செய்தார். தாய்மண்னே வணக்கம் பாடலை மட்டும் ஆல்பத்தில் தமிழல் வெளியிட்டு பின்னர் அதை இந்தியிலும் வெளியிட்டு தமிழை மறக்கடித்தார். உலக அரங்கில் இசையை பரப்பும் பிற தமிழர்கள் தொடர்ந்து தங்கள் பணியை இன விடுதலைக்காவும் செய்துள்ளனர் அதில குறிப்பிடதக்கவர் மாய அருள் பிரகாசம் போன்றவர்கள் ஆவர். சில பத்திரிக்கையாளர்கள் தங்கள் இன்னுயிரை இன விடுதலைக்காக தந்துள்ளனர். ஆனால் இசையை தமிழர்களிடம் விற்று காசக்கும் பணியை மட்டும் செய்து இனத்திற்க்கு எதுவும் பங்களிப்பை தராதவர்கள் கட்டாயம் விமர்சிக்கப்படவே செய்வார்கள். இளையராச இசையை தாங்கள் அங்கு இசை கொண்டாட்டங்களை தவிர்க்க விரும்பும் மாதத்தில் நடத்தாது வேறுஒரு மாதத்தில் நடத்தவேண்டும் என்றே கேட்கின்றனர் இசையை கேட்கப்போவது அவர்கள் அவர்கள் உணர்வை மதிக்க வேண்டியது இளையராசவின் கடமை நவம்பர் மாத்தில் தான் தீபாவளி கொண்டாப்படுகிறது இங்கு யாரும் எதையும் தடுக்கவில்லை என்பதையும் கவணிக்க வேண்டும். நிகழ்ச்சி நடத்த கூடாது என்பதல்ல தங்கள் தவிர்க்க விரும்பும் மாதத்தில் வேண்டாம் என்றே வேண்டு கின்றனர் அப்படி நடந்தால் அதனால் பயன்படபோவது அவர்களே சுப.வீ. இளையராசவுக்கு எந்த வாய்ப்பும் வாங்கிதரப்பொவதில்லை. தமிழன் செத்தபோது கூட செம்மொழி மாநாடு நடத்தி துரோகத்தை திரைபோட்டு மறைக்க துணைபோனவரிடம் நாம் வேறெதையும் எதிர்பார்க்க முடியாது.
R Chandrasekaran
///இளையராஜாவின் இசை நிகழ்ச்சி முடிந்து, பத்து நாள்களுக்குப் பிறகு வரவிருக்கும் தீபாவளியைத் தமிழ்நாட்டுத் தமிழர்களோ, தமிழ் ஈழத் தமிழர்களோ கொண்டாடக்கூடாது என்று இவர்களால் அறிவிக்க முடியுமா? ...... இன உணர்வின் அடிப்படையிலாவது தீபாவளியை இந்தப் புதிய நண்பர்கள் தடுத்து நிறுத்தி விடுவார்களா?////அய்யா பேராசிரிய பெருந்தகையே... தீபாவளியை முதலில் சன் டிவி கலைஞர் டிவி கொண்டாடக்கூடாது என்று உங்கள் வேண்டுகோள்கூட விடுக்க முடியாதே...
த.முத்துகிருஷ்ணன்
பிரித்தானியப் பாராளுமன்றினுள் நடைபெறும் ஈழத் தமிழர் மாநாட்டிற்கு ரத்தக்கறை படிந்த சோனியாவுடன் கைகோர்த்து துரோக சகதியில் புரளும் திமுகவையே அழைத்து இருக்கிறார்கள். இதில் நாம் இளையராஜாவை எதிர்த்து என்ன பண்ண போகிறோம்.
மனோகரன்
சுப்ரமண்யன் சாமி கூட ஒரு காலத்தில் டெசோ மேடைகளில் தோன்றியவர்தான். அதற்காக அவரது வாதங்களை ஏற்று கொள்ள முடியுமா?
தமிழ்மாறன்
மாவீரர் நாள் அல்ல, அது மாவீரர் மாதம்.கார்த்திகை மாதம் என்பதே தமிழர்களுக்கு ஒரு புனிதமான மாதம்.தேசத்திற்காக தமிழ்தேசியத்திற்காக தம் இன்னுயிரை கொடுத்த புனிதர்களின் மாதம்.வஞ்சகர்களின் கயமையால் தம் இனத்தின் ஒரு பகுதியே அழிக்கப்பட்டு கையறு நிலையில் அல்லாடித்தவிக்கும் எம் இனத்தின் இன உணர்வுகளையும் மழுங்கடிக்கும் நோக்கத்திலான இப்படிப்பட்ட மறைமுகமான சதிகளை முறியடிக்கும் எதிர் நடவடிக்கைகள் அவசியம் தேவை.இதை இனவுணர்வுள்ள எந்த தமிழனும் முன்னெடுக்கலாம்.இது யாராய் இருக்கனும் என்பது கேள்விக்கு அப்பாற்பட்ட ஒரு விடயம்.
தானாடாவிட்டாலும் சதிராடும் என்று சொல்வார்கள்.இனப்படுகொலையின் உச்சக்கட்டமாய் 2009ல் முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் கொத்துக்கொத்தாய் செத்துமடிந்த போது மொத்த தமிழினமே சோகத்தில் ஆழ்ந்து கிடக்கும்போது மானாட மயிலாட நிகழ்ச்சியில் உட்கார்ந்து கொண்டு நடிகைகளின் அங்க அசைவுகளின் அசிங்கத்தை ரசித்தவர் அல்லவா உங்கள் தலைவர் கருணாநிதி.
தானும் ஆடவில்லை தன் சதிரமும் ஆடவில்லை.காரணம் அவர் திராவிட முகமூடிக்குள் ஒளிந்துகொண்டுள்ள தெலுங்கர்.
தமிழினப்படுகொலைக்கு மறைமுகமான உதவி ஒத்தாசை புரிந்தவர் என்ற ரீதியில் தொடரும் ஈழத்தமிழரின் துன்பத்துக்கு கருணாநிதிக்கும் முக்கிய பங்குண்டு.தமிழரின் வீட்டில் எப்படிப்பட்ட இழவு விழுந்தாலும் இவர்களுக்கு என்ன. மாவீரர் வாரத்தை கார்த்திகை மாதத்தில் விடுதலைப்புலிகள் கொண்டாடியபோது ஒரு சப்பாணி சிங்களவனை வீரனாக சித்தரித்து அதை சிங்கள மக்கள் கொண்டாட செய்தவன் போர்க்குற்றவாளியான ராசபக்சே.
இது எதை காட்டுகிறது என்றால் தமிழர்களின் மாவீரர் வாரத்தை மறுப்பதும் தமிழர்களின் இன உணர்வுகளை கொச்சைப்படுத்துவதுமே என்பது கண்கூடு.
இந்த மறைமுக நிகழ்ச்சியின் ஒரு அங்கம் தான் கார்த்திகை மாதத்தில் கனடாவில் ஏற்பாடு செய்துள்ள இளையராசாவின் இசை நிகழ்ச்சி.
இரண்டு மில்லியன் டாலர் செலவில் இதை ஏற்பாடு செய்தது இலங்கையரசின் ராசபக்சே கும்பலும் சில தமிழின துரோகிகளும் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கருணாநிதியின் கைத்தடியான பேராசியர் இந்த இசை நிகழ்ச்சி நடத்துவதை எதிர்ப்பவர்களை தூற்றுவது ஏன்? இசை நிகழ்ச்சிக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்.இது தமிழின துரோகிகளின் இன்னொரு கூட்டுச்சதி என்பதை இன உணர்வுள்ள தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று தமிழர்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்கப்பார்க்கும் எதிரிகளின் சதி வலையில் புலம்பெயர் தமிழர்கள் வீழ்ந்து விடக்கூடாது
கம்பன்
துரோகி அரசியல் காலாவதியாகி விட்டது.புலிகளின் முக்கிய உறுப்பினர்களே இன்று துரோகிகளாக உள்ளனனர்,தமிழா வாழ்வு என்பது பிரபாகரனையும் ,புலிகளையும் தாண்டியது,புலி வியாபார அரசியலை வைத்து காசு பண்ணும் கூட்டம் அங்கே வாடும் புலி உறுப்பினர்களுக்கு ஒன்றுமே செய்ததில்லை.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.