உயிர் திமிர்ந்தெழும்
ஏகாந்த மாதம்
நடுகற்கள்
செங்காந்தள் கேசரங்களை
மெல்ல மெல்ல விரிக்க,

பச்சை வாடை அடிக்கும்
புள்ளி வரை மின்னுடுக்கள்
ஈர மண்ணிடை
சில்லென முளைத்த
தாய்மரச் செம்மேனிச்சோலை

ஆகாயத்தரையின்
அலைப்பிறழ்வில் மீதமிருந்த
பாதிப்பிறையில்
வேற்றின மின்மினிகள்
விழிகளில் பறந்துதிர்த்த
ஒளிப்பாய்ச்சல் சிறகால்
கண்திரவத்தில்
கடும்புப் பாலின் கனம்

இருள்கவியும் தலைகீழ் வானம்
ரத்தப் பறவைகளின்
சுவாசத்தை நாசி நிறைக்கிறது

புத்தன் சிறகுரித்து
விருந்துக் கறி சமைத்த
குட்டிமணியின் கண்களும்
தங்கத்துரையின் கரங்களும்
காந்தளுக்கு இதழ்களையும்
விரல்களையும் பொருத்தின

தீட்டுப்பட்ட தீர்ப்புக்கள்
மொழி பேசும் கருமேகங்களை
வலைபின்னி
செடிகளைப் படர்த்தின
யார் தட்டினாலும்
திறக்காத பூமி
திரட்டிய முள்ளெலும்புச்
சீசாவிற்குள் குருதிப்பானம்
கொண்டு திறக்கிறது

ஆம்
இது சூரியன்கள் விரியும்
ஏகாந்த மாதம்
பிறிதொரு நாளில்
விடுதலைக் கணமொன்றில்
நாங்கள் அடிமை என்றே
தனித்தனியாக கையெழுத்திட்டோம்.

- தமிழ் உதயா

Pin It