குஜராத் படுகொலைகளுக்குப் பிறகான மிக மோசமான வன்முறைத் தாக்குதல்கள் அஸ்ஸாமில் இஸ்லாமிய மக்களின் மீது நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அஸ்ஸாமில் குடியேறிய பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என்ற போர்வையின் கீழ் இத்தகைய மிகப்பெரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. நான்கு லட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள், போடோ பழங்குடி மக்கள், போடோ அல்லாத பிற இனத்து மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். கொட்டும் மழையில் ஒரு அகதிப் பெண் தனது குடும்பத்திற்கான உணவைத் தயாரிக்கும் புகைப்படங்கள் நம்மை என்னவோ செய்கிறது. இவ்வருடம் ஜூலையில் அஸ்ஸாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் ஆரம்பித்த இக்கலவரங்கள் போடோலாந்து பகுதி முழுவதும் பரவியது. போடோ மக்களுக்கும், போடோ அல்லாத மக்களுக்குமான கலவரம் என சொல்லப்பட்டாலும் போடோ பழங்குடிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில்தான்தான் பிரதான கலவரம் நடைபெற்றது.

அஸ்ஸாமில் நடைபெற்றுள்ள கலவரங்களை ஏதோ இந்தியாவின் ஒரு மூலையில் நடைபெற்ற ஒரு கலவரமாகக் கருதி ஒதுக்கிவிட முடியாது. தாக்கப்பட்ட மக்கள் இஸ்லாமியர்கள், சிறுபான்மை மக்கள் எனும்போது அந்நிகழ்வு இந்தியா முழுமைக்கும் மிகப்பெரும் அதிர்வுகளை உருவாக்குகிறது. மும்பையில் மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அது வன்முறை நிகழ்வாக மாறுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு எத்தகைய அச்சத்தில் மும்பை உறைந்திருந்ததோ அந்நிலைக்கு மீண்டும் மும்பை சென்றது. மும்பை இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் என்பது நமக்குத் தெரியும். மும்பையின் அச்சநிலை இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கவல்லது. அவ்வன்முறைக்கு மறுநாட்களில் மஹாராஷ்டிராவின் இரு வலதுசாரி கட்சிகளும் நடத்திக் காட்டிய பொதுக்கூட்டங்களிலும் பாசிசக் கருத்துகள் உதிர்க்கப்பட்டன. பீகார் மாநில போலீஸ்காரர்கள் மிரட்டப்பட்டனர். பதிலுக்கு பீகார் மாநிலத்தின் அரசியல்வாதிகள் தாக்கரேக்களின் பூர்வீகமே பீகார்தான் என்று தொல்பொருள் ஆராய்ச்சி செய்தனர். மற்றொருபுறம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியாவின் தெற்குப்பகுதியில் வாழும் வட-கிழக்கு மக்கள் மிரட்டப்பட்டனர். அதன் விளைவு அம்மக்களின் பெரும் இடப்பெயர்ச்சி. பிரிவினைக்குப் பிறகான மிகப்பெரும் இடப்பெயர்ச்சி.

assam_riots_600

இந்தியாவில் நடைபெறும் கலவரங்கள் அனைத்தும் மதரீதியான பரிமாணத்தை மிக விரைவில் அடையும் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தும். முதலாவதாக மதம் ஒரு வன்முறை நிகழ்வின் வீரியத்தை அதிகரிக்கவல்லது. வன்மத்தை அதிகரித்து அதைக் கொண்டிருப்பவர்களை பைத்திய நிலைக்கு கிறங்கடிக்கும் ஆற்றல் மதத்துக்கு உண்டு. ஒரு வன்முறை நிகழ்வுக்கு மதத்தை அடிப்படையாக்கினால் அவ்வன்முறைக்குப் பொறுப்பானவர்கள் எளிதில் தங்கள் குற்றங்களிலிருந்து விடுபடலாம். அல்லது மதம் தக்க பாதுகாப்பை அவர்கள் கேட்காமலேயே அளிக்கும். உலகத்து மனிதர்களின் மனங்களைப் பண்படுத்தத் தோன்றியதாக விளக்கப்படும் மதம் இன்றைக்கு உலகின் ரத்த ஆறுகளுக்கு ஊற்றுக் கண்களுமாக அமைந்து போனதை யாரும் மறுக்கமுடியாது.

இந்தியாவிற்குள் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளும் இஸ்லாமிய மக்களின் பரவலைப் பற்றி அறிய இந்திய வரலாற்றை நாம் கூர்ந்து நோக்கவேண்டும். இந்தியப் பிரிவினை நடத்திய ஊழிக்கூத்தை நாம் நினைவில் கொள்ளவேண்டும். முதலாவது ஆங்கிலேய-பர்மியப் போரில் ஆங்கிலேயர்கள் வென்றதன் அடிப்படையில் 1826-ல் ஆங்கிலேயர்கள் பர்மாவுடன் செய்துகொண்ட‌ 'யாண்டாபூ' ஒப்பந்தத்தின்படி அஸ்ஸாம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அதன்பிறகு அஸ்ஸாமின் சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன. காலனியாதிக்கவாதிகளின் லாபவெறி அஸ்ஸாமையும் விடவில்லை. அஸ்ஸாமில் தேயிலைத் தோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. தேயிலைத் தோட்ட முதலாளிகள் ஆங்கிலேயர்களாக இருந்தார்கள். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு மிகப் பெரும் எண்ணிக்கையில் வேலையாட்கள் தேவைப்பட்டார்கள். இந்நேரத்தில் தமிழகத்திலிருந்து பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய இலங்கை அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பதையும், இலங்கை சுதந்திரம் அடைந்தபின்பு அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு நிராதரவாக விடப்பட்டார்கள் என்பதையும் அவர்களில் ஒரு பகுதியினர் தமிழகத்திற்கு திருப்பியனுப்பப்பட்டனர் என்பதையும் மிக்க வேதனையோடு நாம் நினைவு கூர வேண்டும்.

1905-ல் வங்காளப் பிரிவினைக்கு முன்னர் அஸ்ஸாமும், கிழக்கு வங்காளமும் ஒரே மாநில அலகில் இடம் பெற்றிருந்தபோது முஸ்லீம்களின் அஸ்ஸாமியக் குடியேற்றங்கள் தீவிரமடையவில்லை. அதன் பிறகு கிழக்கு வங்காள மக்களை (இஸ்லாமியர்களை) அஸ்ஸாமில் குடியமர்த்தும் வேகம் அதிகரித்தது. 1905-க்குப் பிறகான காலத்தில் ஏறத்தாழ 10 லட்சத்திலிருந்து 15 லட்சம் கிழக்கு வங்க இஸ்லாமிய மக்கள் அஸ்ஸாமில் குடியேறினர் என்றும் இது அன்றைக்கு அஸ்ஸாமின் மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கிலிருந்து ஆறில் ஒரு பங்கு அளவு வரை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சமீந்தாரி ஆட்சி முறையும், பர்மனென்ட் செட்டில்மெண்ட் முறையும் வங்காளத்தை பஞ்சம், பஞ்சமாக சிதைத்துப் போட்டிருந்த காலம் அது. வங்காளக் குடியானவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் என்பதும், நிலம் தேடி, பிழைப்பு தேடி இந்தியாவின் எப்பகுதிக்கும் செல்ல அவர்கள் அணியமாகவிருந்தார்கள் என்பதும் வரலாறு.

அஸ்ஸாமின் பிரம்மபுத்திரா நதிக்கரையில் செழிப்பான வனங்களும், மேய்ச்சல் நிலங்களும் அபரிதமாக இருந்தன. அவ்வனப்பகுதிகளிலும், மேய்ச்சல் நிலங்களிலும் பாரம்பரியமாக வசித்து வந்த போடோ இனப் பழங்குடிகளினால் எவ்வித லாபமும் ஆங்கிலேய முதலாளிகளுக்குக் கிடைக்கவில்லை. காரணம் போடோ மக்கள் பழங்குடிகளுக்கே உரித்தான பயிரிடு முறையை (shifting cultivation) பின்பற்றி வந்தனர். அது அம்மக்களின் உணவுத் தேவைகளை நிறைவேற்றியதே தவிர உபரி உற்பத்தியை அவர்கள் மூலம் பெற வாய்ப்பில்லை என உணர்ந்த ஆங்கிலேய முதலாளிகள் உபரி மக்கள்தொகையைக் கொண்ட வங்காள மக்களைக் குடியேற்றத் தொடங்கினர். ஆங்கிலேயர்களின் லாபவெறிதான் பிரதான காரணம் என்றாலும் அன்றைக்கு இருந்த வங்காளத்தின் சமூகப் பொருளாதாரச் சூழ்நிலையும் இக்குடியேற்றத்திற்குப் பெரும் உதவி செய்தது. போடோ பழங்குடிகளின் மற்றுமொரு பண்பையும் நாம் காணவேண்டும். காலம் காலமாக தாங்கள் பயன்படுத்தி வந்த விளைநிலங்களை, மேய்ச்சல் நிலங்களை தங்களுடையது என்று அவர்கள் என்றும் உரிமை பாராட்டியது கிடையாது. வனங்கள் முழுவதையுமே தங்கள் பயன்பாட்டில் வைத்திருந்தாலும் வனம் என்றைக்கும் அழிந்தது கிடையாது. இந்தியா முழுவதும் இன்று பழங்குடி மக்களினங்கள்தான் இருக்கும் சொற்ப வனங்களைக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். இன்னமும் காப்பாற்றி வருகிறார்கள். அவ்வனங்களுக்குக் கீழே இருக்கும் கனிம வளங்களைக் கொள்ளைக் கொண்டு போவதற்கு வசதியாக அரசு அப்பழங்குடிகளின்மீது பச்சைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அஸ்ஸாமில் குடியேறிய இஸ்லாமியர்களை தொடக்கத்தில் அஸ்ஸாமியர்கள் வரவேற்றனர். அஸ்ஸாமின் வளர்ச்சியில் அவர்கள் பங்கு செலுத்தினர். கிழக்கு வங்காள முஸ்லீம்களின் குடியேற்றத்தை ஒரு கட்டத்தில் அச்சத்தோடு நோக்கிய அஸ்ஸாமியர்கள் குடியேற்றப் பகுதிகளில் ஒரு எல்லை வரை மட்டுமே அவர்கள் குடியமர்த்தப்படவேண்டும் என்ற Line System முறையைக் கொண்டுவந்தனர். 1920களில் Line System அமுல்படுத்தப்பட்டது. இம்முறையினால் இஸ்லாமியர்களின் குடியேற்றங்கள் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. 1939-ல் காங்கிரஸின் பர்டோலோய் அமைச்சரவையின் ராஜினாமாவையடுத்து முஸ்லீம் லீக் உதவியுடன் பதவியேற்ற சையத் முகம்மது சதுல்லா Line System முறையை ஒன்றுமில்லாமல் ஆக்கினார். கிழக்கு வங்க இஸ்லாமியர்களைத் தொடர்ச்சியாகக் குடியேற்றம் செய்தார். 1942-ல் மீண்டும் பதவிக்கு வந்த சதுல்லா, "போருக்கு உதவ அதிகமான உணவை விளைவிக்கவேண்டும்" என்றத் திட்டத்தின்கீழ் நவ்காங், டார்ரங், காம்ரூப் மாவட்டங்களின் வனப்பகுதிகளையும், மேய்ச்சல் நிலங்களையும் குடியேற்றங்களுக்காகத் திறந்துவிட்டார். சதுல்லாவின் இத்திட்டத்தை "Grow More Muslims" என்று வேவல் பிரபு அழைத்தார். 1940 வாக்கில் கீழ் அஸ்ஸாமின் பார்பீட்டா கோட்டத்தின் இஸ்லாமியர்களின் தொகை 49 சதவீதமாக மாறியது. 1911-ல் இது 0.1 சதவீதம் மட்டுமே. சுதந்திரத்திற்குப்பின்பு ஆட்சி செய்த காங்கிரஸ் அரசிலும், அஸ்ஸாம் இயக்கத்திற்குப் பின்னர் ஆட்சியைப் பிடித்த அசாம் கனபரிசத் அரசிலும் போடோ பழங்குடிகளின் வாழ்வுரிமைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

குடியேறிய இஸ்லாமியர்களில் பெரும் பகுதியினர் அஸ்ஸாமிய மொழியைக் கற்று, அஸ்ஸாமிய இஸ்லாமியர்களாயினர். இந்நிகழ்வுதான் இயல்பாகவும் இருக்கமுடியும். மொழியால் அவர்கள் அஸ்ஸாமியராயினர். தமிழகத்திலும் கூட மராட்டிய, நாயக்கர் ஆட்சிக் காலங்களில் பல்லாயிரக்கணக்கான கன்னடர்களும், தெலுங்கர்களும், மராட்டியர்களும் குடியேறினர். தமிழ் பயின்ற அவர்கள் இன்று அயலவர்கள் என்று பிரித்தறியப்பட முடியாதவர்களாக உள்ளனர். ஒரு தேச உருவாக்கத்திலும் சரி, ஒரு சமூக உருவாக்கத்திலும் சரி மொழி வகிக்கும் பங்கை நாம் நிராகரித்துவிட முடியாது. அதுபோல மதம் என்ற ஒன்று ஒரு தேச உருவாக்கத்திற்கோ, ஒரு சமூக உருவாக்கத்திற்கோ உதவி செய்துவிட முடியாது. மதம் என்பது தேச, சமூக உருவாக்கங்களுக்கு அடிப்படையாக இருக்குமானால் பாகிஸ்தானும், பங்களாதேஷும் பிளவு பட்டிருக்காது. ஐரோப்பாவின் பல தேசங்கள் ஒரே நாடாகத் தான் இருந்திருக்கும். எனவே தான் அஸ்ஸாம் மாநிலத்தில், அஸ்ஸாம் சமூகத்தில் இஸ்லாமியர்களும் என்றைக்குமே பிரிக்கமுடியாத ஒரு அங்கம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. போடோ இன‌த்தவர்களின் நிலமும், வனமும், அவற்றில் அவர்களுக்குரிய உரிமையும் எவ்வளவு நிதர்சனமான உண்மையோ, அந்த அளவுக்கு அஸ்ஸாம் மாநிலத்தில் நீண்ட காலத்துக்கு முன்னரே குடியேறிய இஸ்லாமியர்களுக்குமான உரிமையும் உண்மை.

assam_riot_570

தங்களின் ஒரே வாழ்வாதாரமான வனங்களும், மேய்ச்சல் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டே வருவதை உணர்ந்த போடோ மக்கள் தனி மாநிலம் கேட்டுப் போராட்டம் தொடங்கினர். தொடக்கத்தில் மத்திய, மேற்கு அஸ்ஸாம் நிலப்பகுதிகளை ஒருங்கிணைத்து அங்கு வசிக்கும் அனைத்துப் பழங்குடி மக்களுக்குமான ஒரு தனி மாநிலம் வேண்டும் எனத் தொடங்கப்பட்ட இப்போராட்டம், நாளடைவில் மிஷிங் மற்றும் ராஃபா இன மக்களின் எதிர்ப்பையடுத்து போடோ இனத்துக்கான தனி மாநிலக் கோரிக்கையாக மாறியது. தாங்கள் கோரிய தனி மாநில நிலப்பரப்பில் போடோ இனமக்கள் மிகப் பெரும் பழங்குடி இனத்தவராக இருந்தபோதிலும் அவர்கள் பெரும்பான்மையினராக இல்லை. தனிமாநில இயக்கம் வன்முறையில் இறங்கியது. அன்றைய அஸாம் கனபரிசத் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய காங்கிரஸ் அரசு போடோ பிரிவினையை ஊக்குவித்தது. மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தபிறகு போடோ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஒப்பந்தத்தின்படி அரசியல் சட்டத்தின் ஆறாம் பிரிவு திருத்தப்பட்டு போடோ தன்னாட்சிப் பிரதேசம் உருவாக்கப்பட்டது. இக்கவுன்சிலின் மொத்தமுள்ள 46 இடங்களில் 30 இடங்கள் போடோ இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆட்சிப்பிரதேசத்தில் போடோ அல்லாத மீதம் 70 சதவீத மக்களுக்கு மீதம் 16 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டன. பழங்குடி அல்லாத மக்களின் நில உரிமைகளைப் பாதுகாக்க ஒப்பந்தத்தில் ஷரத்துகள் இருந்தாலும் அந்த ஷரத்துகள் தங்களுக்கு எதிரானவை என போடோக்களும், அந்த ஷரத்துகள் நடைமுறையில் மதித்து செயல்படுத்தப்படவில்லை என போடோ அல்லாத மக்களும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளனர்.

போடோ பழங்குடி மக்களுக்கும், குடி பெயர்ந்த இஸ்லாமியர்களுக்கும் இடையிலான மோதல்கள் கடந்த பல்லாண்டுகளாக தொடர்ந்து வந்திருக்கிறது. அஸ்ஸாம் கிளர்ச்சியின்போது தற்போதைய மாரிகோவான் மாவட்டத்தின் நெல்லீ என்னுமிடத்தில் 1983, பிப்ரவரி 18ல் ஒரே நாளில் வங்காள இஸ்லாமிய குடியேற்ற மக்கள் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக 1800 பேர் பழங்குடி மக்களால் கொல்லப்பட்டனர். 1993 அக்டோபரில் நடைபெற்ற கலவரத்தினால் இடம்பெயர்ந்த 4000 இஸ்லாமியக் குடும்பங்கள் இன்னமும் உதவி முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். 1994ல் பார்பீடா மாவட்டத்தில் நடைபெற்ற கலவரத்தில் போடோக்களும், இஸ்லாமியர்களுமாக 113 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்திருக்கிறார்கள். 2008 அக்டோபரில் டார்ரங், உடல்குரி மாவட்டங்களில் நடைபெற்ற கலவரங்களில் இரு தரப்பிலும் 64 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இரண்டு லட்சத்திற்கும் பேற்பட்ட மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தார்கள். இப்படியான ஒரு தொடர்ச்சிதான் சமீபத்தியக் கலவரங்களும்.

போடோக்களின் நியாயமான உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் வேறுபட்ட கருத்துகள் இருக்கமுடியாது. அதேபோல் போடோ தன்னாட்சிப் பிரதேசத்துக்கு அரசியல் சாசனத்தின் ஆறாவது பிரிவு (இந்தியப் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் ஆட்சித் திறம் பற்றியது) அதிகாரத்தை வழங்கியது பற்றியும், அக்கவுன்சிலில் போடோக்களுக்கு உள்ள மிக அதிகப்படியான உரிமையை ம‌றுப‌ரிசீல‌னை செய்வ‌து ப‌ற்றியும் மத்திய‌ அர‌சும், மாநில‌ அர‌சும் ந‌ட‌வ‌டிக்கை எடுப்ப‌து அவ‌சிய‌ம். அதோடு மார்ச், 25, 1971 (பாகிஸ்தான் அர‌சு டாக்காவில் ந‌ட‌வ‌டிக்கை தொட‌ங்கிய‌ நாள்)‍க்குப் பிற‌கு ப‌ங்க‌ளாதேஷிலிருந்து அஸ்ஸாமில் குடியேறிய‌ ம‌க்க‌ளை அடையாள‌ம் க‌ண்டு அவ‌ர்க‌ள் மீது ச‌ட்ட‌பூர்வ‌ ந‌ட‌வ‌டிக்கை எடுப்ப‌தும் மிக‌ மிக‌ அவ‌சிய‌ம். இத்த‌கைய‌ இரு முனை ந‌ட‌வ‌டிக்கைக‌ள் போடோக்க‌ளுக்கும், க‌ட‌ந்த‌ 100 ஆண்டுக‌ளுக்கும் மேலாக‌ வாழ்ந்துவ‌ரும் இஸ்லாமிய‌ மக்களுக்கும் இண‌க்க‌த்தை ஏற்ப‌டுத்தும். போடோ ம‌க்க‌ளுக்கும், இஸ்லாமிய‌ ம‌க்க‌ளுக்குமான‌ இக்க‌ல‌வ‌ர‌ம் ஒரு இந்து முஸ்லீம் க‌ல‌வ‌ர‌மாக‌ எவ‌ரும் க‌ருதிவிட‌வும் கூடாது.

போடோக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே நடைபெறும் கலவரங்களில் போடோ அல்லாத அஸ்ஸாமியர்கள் ஒருபோதும் இஸ்லாமியர்களை கைவிட்டுவிடக்கூடாது என்பதை மிகவும் அழுத்தமாகக் குறிப்பிடவேண்டும்.

- செ.சண்முகசுந்தரம், தஞ்சாவூர்.

Pin It