குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்ட போது, மக்களவையில் ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மாநிலங்களவையில் 125 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று இம்மசோதா சட்டமாகி உள்ளது.

agitation against cabஇந்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து (இலங்கை இந்தப் பட்டியலில் இல்லை) ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மற்றும் பெளத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். ஆனால், முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்படி உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், குறைந்தது 5 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

இந்தச் சட்டம் மதரீதியான பாகுபாடு பார்ப்பதால், நமது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்பதையும்,  இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக இந்தச் சட்டத்தைப் பயன்படுத்த  வாய்ப்பு இருப்பதையும் மறுப்பதற்கு இல்லை. அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வரும் மதரீதியான ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரின் நலன் காக்கத்தான் இந்த சட்டத்  திருத்தம் என்றால் பாகிஸ்தானில் இருந்து வரும்  அகமதியா மற்றும் ஷியா முஸ்லிம்கள், மியான்மரில் இருந்து வரும் ரோஹிங்கியாக்கள், இலங்கையில் பெரும் பாதிப்பைச் சந்தித்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ள ஈழத் தமிழர்கள் போன்றோருக்குக் குடியுரிமை வழங்க இந்தச் சட்டத்தில் ஏன் வழிவகை செய்யப்படவில்லை எனப் பல்வேறு அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

மேற்கு வங்காளம், கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளன. டெல்லி, வடகிழக்கு மாநிலங்கள், கேரளா, தமிழ்நாடு என நாடெங்கும் இதற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க இளைஞர் அணி சார்பில் சட்டத்தைக் கிழித்து எறிந்தும், தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றதுடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டமும் நடத்தப்பட்டது. அதன் முடிவில் வரும் 23.12.2019 அன்று சென்னையில் "குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணி" நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் வகையில் இச்சட்டத்தைத் தொடர்ந்து, அசாமில் செயல்படுத்தப்பட்ட "தேசிய குடிமக்கள் பதிவேடு" நடைமுறையை நாடு முழுவதும் விரிவுபடுத்த நடுவணரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. தேசியக் குடிமக்கள் பதிவேட்டு நடைமுறை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் போது என்ன நடக்கும் என்று சிந்தித்தால் மிகப் பெரும் ஆபத்துதான் ஏற்படும். அந்நிய நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் அல்லாத அனைவரும் சான்றாதாரங்கள் இல்லையென்றாலும், இந்தியராக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். இஸ்லாமியர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுவார்கள்.

நாட்டைச் சூழ்ந்துள்ள இந்த பேராபத்தில் இருந்து விடுபட கட்சி, மொழி, மதம், சாதி போன்ற வேறுபாடுகளை துறந்து ஓரணியில் திரண்டு இந்தக் கொடும் சட்டங்களை எதிர்த்துப் போராட வேண்டும். இல்லையேல் நமது அரசியலமைப்பின் அடிநாதமான மதச்சார்பின்மை சிதைந்து விடும்.

எழுவோம்! திரள்வோம்! மதச்சார்பின்மை காப்போம்!!

- வழக்கறிஞர் வைரமுத்து

Pin It